ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த தம்பி ஆசிப்மீரானின் ‘மலையாளத் திரையோரம்’ புத்தக வெளியீடு வரும் 4ஆம் தேதி ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் நடக்கிறது. கையில் மறைத்து வைத்திருப்பதை கவிஞர் யுகபாரதி வெளியிடுகிறார். உடனே இங்கே PDF கிடைக்க சென்ஷி உதவுவாராக, ஆமீன்.
ஆசிப் எவ்வளவோ மறுத்தும் , அழுது போராடியும், பிடிவாதமாக நான் எழுதிய – புத்தகத்திலும் இடம்பெற்ற – சிறு வாழ்த்துரை இது. அவருடைய கட்டுரைகளிலிருந்தே வார்த்தை, வாக்கியங்களை உரிமையோடு உருவி (நாகூர்க்காரனல்லவா, இது நல்லா வரும்) ஒருமாதிரிக் கோர்த்தேன். வாசியுங்கள், அவரை வாழ்த்துங்கள். நன்றி. AB
*
‘கடவுளின் சொந்த நாட்டு’ப் படங்களை அவர் காணாமல் ஓடிப்போன (மறைந்திருக்கிறாராம்) மறுபூமியில் பார்த்துவிட்டு தம்பி ஆசிஃப் எழுதிய சிறப்பான மல்லுக் கட்டுரைகள் நூலாக வெளிவருவதில் பெருமகிழ்ச்சி. ஆனால்,’சிறுகதைத் தொகுதியண்ணே’ என்று சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாம்.
ஆசிஃபின் தேர்ந்த ரசனையும் கூரிய பார்வையும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏதோ ஒரு பெங்காலி சினிமா நான் பார்த்துக்கொண்டிருந்தபோது அது மலையாளப்படம்தான் என்று அடித்துச் சொன்னவர் அவர். லேட்டஸ்ட் ‘Article 15’ வரை, நல்ல சினிமா என்றால் அமீரக நண்பர்களை தன் சொந்தச் செலவில் தியேட்டருக்கு அழைத்துக்கொண்டுபோய் அப்படியே தூங்கிக்கொண்டிருப்பதும் அவர் வழக்கம்தான்.
சும்மா தமாஷ் செய்கிறேனே தவிர கட்டுரைகளின் ஊடே கரன் தாப்பர் – அருந்ததிராய் நேர்முகத்தை அவர் சேர்க்கும் விதம் , மம்மூக்கா வாங்கிய விருதை முன்வைத்து ‘ஆட்சியாளர்களைச் சொறியும் நடிகர்களுக்கு மட்டும் விருதென்ற வழக்கம் கேரளாவில் இல்லை’ என்று அடித்துத்துவைப்பது, ‘மூசா நபி காலத்துக் குறியீடுகளை இன்னும் முன்னிறுத்தும் அடூர் கோபாலகிருஷ்ணன், ‘நாலு பெண்ணுங்கள்’ படத்தில் படுத்திருந்தார்’ என்று எழுதும் குறும்பு (எடுத்துக் காட்டியதும், படுத்தியிருந்தார் என்று மாற்றினார்), அன்வர் ரஷீதின் அற்புதமான குறும்படமான ‘ப்ரிட்ஜ்’ (பாலம்) கதையில் அவர் நெகிழ்ந்துபோவது என்று நிறைய இருக்கிறது இதில். இயக்குநர் ப்ளெஸ்ஸியின் ‘இல்லாதவர்களின் சோசலிசம் யாரும் யாருக்கும் சொல்லித் தராமலே வரும்’ எனும் கொய்யாப்பழ வசனத்தை ஒரு கட்டுரையில் பாராட்டுவதோடு நிறுத்திகொள்வதில்லை ஆசிஃப். அடுத்த கட்டுரையில், கமல்ஹாசனின் ‘மகாநதி’யில் வந்து உலுக்கிய சோனாகஞ்ச் காட்சிகளோடு ஒப்பீடு செய்து ப்ளெஸ்ஸியை குப்புறப்போட்டும் விடுகிறார்.
எனக்கு ரொம்பவும் பிடித்த கட்டுரை அலிஃப். ‘ஞானத்தின் முதலெழுத்து’ என்ற தமிழாக்கத்தில் மயங்கிப்போனேன். தவிர, ஆலிம்ஷாக்கள் சமாச்சாரம் வேறு வருகிறது. ‘இஸ்லாத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளைக் குறித்து வாய் கிழியப் பேசுகிறார்கள் மார்க்க அறிஞர்கள். ஆனால் இஸ்லாத்தில் பெண்களுக்கு நடைமுறையில் உண்மையாக வழங்கப்படும் உரிமைகளின் நிலை என்ன என்பதை, அவர்களின் அவலத்தை பிரச்சார நெடியில்லாமல் தொடர் கேள்விகளின் மூலம் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் படத்தின் இயக்குனர் முகம்மது கோயா.என்று அதில் ஆசிஃப் சொல்லியிருந்தார். ‘சுயபரிசோதனை செய்துகொள்வோமாக’ என்று என் வலைத்தளத்திலும் வெளியிட்டேன். ஒரேயொரு ஆலிம்ஷா மட்டும் வாசித்தார். ‘அடிக்கலாம்னு பார்த்தா ‘ஹக்’கா (உண்மையாக) வேறு இருக்கே’ என்று அலுத்துக்கொண்டார். அதைச் செய்பவர்கள் கேரள முஸ்லீம்கள்தான். கேள்வி கேட்கும் படங்களைக் கண்டுகொள்வதே இல்லை. போராட்டங்களை முன்னெடுப்பதும் இல்லை. திரைப்படம் வேறு மார்க்கம் வேறு என்கிற குறைந்த பட்ச அடிப்படை புரிதல். அதாவது, ‘வோ அலக் ஹை, யே அலக் ஹை’ பாணி. வாழ்க.
ப்ரித்விராஜூம் பார்வதியும் நடித்த ஒரு காதல் படம் பற்றிய கட்டுரை உண்டு. அதில் ‘செய்நேர்த்தி’ என்றொரு வார்த்தை அருமை.
‘கம்மட்டிப்பாடம்’ சினிமாவில் இடம்பெறும் – ஒடுக்கப்பட்ட இனத்தின் அவலத்தைச் சொல்லும் – வரிகளைத் தமிழில் சரியாகச் சொல்லவும், ‘சூடானி ஃப்ரம் நைஜீரியா’ படத்தில் கராச்சிக்கு பாஸ்போர்ட் இல்லாமல் வந்துவந்து போய்க்கொண்டிருந்த கணவரைப் பற்றிச் சொல்லும் கிழவியை இனம்காட்டிச் சிரிக்கவும் , மலபார் பிரதேசத்தில் பெரும்பான்மையாக இருக்கிற முஸ்லிம்கள் பிற மதத்தவரோடு ஒற்றுமையாக இருப்பதை இயல்பாக எடுத்துச் சொல்லவும் ஆசிஃப் போன்ற பாதி மலையாளிகள் நிறைய வேண்டும்.
ஸௌபின், ஃபஹத் போன்ற புது ராட்சசர்களைப் பாராட்டும் ஆசிஃப், ‘இது சிரிக்க வேண்டிய இடம்’ என்று அவர்கள் நடித்த சில காட்சிகளைச் சொல்லி நம்மை சிந்திக்கவும் வைக்கிறார். கவனமாகப் படிக்கவும்.
ஒன்று தெரியுமா, அப்பட்டமான அங்கத சினிமாவான ‘பஞ்சவடிப் பாலம்’ பற்றி இணையத்தில் ஆசிஃப் எழுதியபிறகுதான் கே,ஜி. ஜார்ஜ் என்ற ஆளுமையையே அறிந்தேன். எண்பதுகளில் ‘ஜோர்ஜ்ஜ்’ பற்றி நண்பர் தாஜ் சௌதியில் சொல்லியிருந்தும் ஏனோ பார்க்காமலிருந்தேன். அவர் சொன்னதாலும் இருக்கலாம். அங்கேயிருந்த கஷ்டம் அப்படி.
அரசியல் கொலைகளின் பின்னணியைச் சொல்ல முயலும் ‘ஈடா’வையும் , பக்கத்தில் சகோதரன் உட்காரும்போது, என்ன, என்னோட கிட்னி வேணுமா? என்று ‘அன்போடு’ கேட்கும் ‘கும்பளாங்கி நைட்ஸ்’ஐயும் அருமையாக இந்தச்சிறுநூலில் விவரித்திருக்கிறார் ஆசிஃப்.
விமர்சனத்தோடு இவர் நிறுத்திக்கொள்ளவேண்டும். சினிமா எடுத்தாலோ ஹார்மோனியத்துடன் ஒரு நிமிசம் பாடி நடித்தாலோ நேர்மாறாகத்தான் வரும் என்று படுகிறது.
ஆந்த்ரே தார்க்கோவஸ்கி மேற்கோள் ஒன்றை இறுதியாகப் போடவா? வேண்டாம்.
மீண்டும் இந்தக் கட்டுரைகளைப் படித்தது சந்தோசம்.
ஆஸம்ஷகள் மாஷே…
திட்டிவிட்டேன்!
ஆபிதீன்
துபாய் , 12/07/2019
*
நன்றி: ஆசிப்மீரான்
*
தொடர்புடைய பதிவுகள் :