வாசகர் பார்வை : ‘தங்ஙள் அமீர்’

மறைந்த உயிர் நண்பர் தாஜ் (எழுதும்போதே கண்ணீர் வருகிறது எனக்கு) எழுதிய குறுநாவல்களின் தொகுப்பான ‘தங்ஙள் அமீர்’ பற்றி சகோதரர் முஹம்மது சுஹைப் முகநூலில் எழுதியதைப் பகிர்ந்து கொள்கிறேன். இப்படி ஒரு இஸ்லாமிய எழுத்தாளரா என்று ஆச்சரியப்படும் சுஹைப், யாரென்றே தெரியாமற் போனாரே தாஜ் என்று உருகுகிறார்.

பதிவில் கண்ட மறுமொழிகளையும் கீழே இணைத்திருக்கிறேன். – AB
*

தமிழில் இப்படி ஒரு இஸ்லாமிய எழுத்தாளர் இருந்தார் என்றே ரொம்ப நாட்களுக்குப் பிறகு… எனக்கு இந்தப் புத்தகம் பார்த்துதான் தெரியும்.

சீர்காழியைச் சேர்ந்த தாஜ் அவர்கள் இப்போது நம்மிடையே இல்லை .மிகச்சமீபமாகத்தான் இவர் நம்மை விட்டும் மறைந்தார் என்ற தகவல் கூட அருமை நண்பர் நிஷா மன்சூர் சொல்லித்தான் தெரியும்.

இப்படித்தான் சிலர் குடத்திலிட்ட விளக்காக வாழ்ந்து மறைந்து போகின்றனர்.

அவரது அடர்த்தியான எழுத்துக்களைக் கொண்ட ’தங்ஙள்அமீர்’ என்ற இந்த சிறுகதைத் தொகுப்பை ..வாசிக்கும் போது இவர் இருக்கும் போது இவரை அறியாமற் போனோமே என்ற வருத்தமே மேலோங்கியது.

சிறுகதை என்ற இலக்கணத்தையும் மீறிய சற்றே பெரிய சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது…நாலோ…ஐந்தோ கதைகள்தான் உள்ளன.

பொதுவாக… தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் சார்ந்து எங்கள் பக்கம்…அல்லது குமரி மாவட்டத்தைச் சேர்ந்ததான கதைகளையே நான் பெரிதும் வாசித்துள்ளேன். ஆனால்…முஸ்லிம்கள் தமிழகமெங்கும் பரவி வாழ்கிறார்களே…இல்லையா…?

கீழ்த் தஞ்சை மாவட்ட இஸ்லாமிய சமூகத்தின் வாழ்வியலை…மிக நேர்த்தியாக .எனதுமுதல்திருமணம்… பெருநாள்காலை..போன்ற கதைகளில் மிக விரிவாக சித்தரிக்கிறார்….

தொகுப்பின் தலைப்புக் கதையான ’தங்ஙள் அமீர்’ கதை முழுக்க சவூதி அரேபியா தம்மாம் மற்றும் ரியாத் நகர்களில் நடக்கிறது…இந்த இரண்டு ஊர்களிலுமே நான் பணி செய்தவன் என்பதால் இக்கதையும் மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது…

இந்தியாவிலிருந்து மாந்ரீகம் செய்யும் ஒரு கேரளத் தங்ஙள் மும்பை வந்த ஒரு அரபியின் அழைப்பை ஏற்று அவன் காதலிக்கும் ஒரு பெண்னை மாந்த்ரீக சக்தியால் அவனோடு சேர்த்து வைக்கும் பொருட்டு அவனோடு ரியாத் சென்று… அது முடியாத காரணத்தால் எங்கே அந்த அரபி தன்னை நாடு திரும்ப அனுமதிக்க மாட்டானோ…?என்ற அச்சத்தில் கேரள முஸ்லிம்களிடம் தஞ்சமடைய…அவர்கள் தங்களது செல்வாக்கை பய்படுத்தி தங்ஙளை இந்தியாவுக்கு ரகசியமாக அனுப்பி வைக்கும் செயலை…மிக அற்புதமாக சித்தரிக்கிறது கதை.

சவூதிக்கு ஒரு முதலாளியிடம் வேலை செய்ய வந்து அந்த முதலாளியின் அராஜகம்…பிடிக்காததால்…அவனை விட்டும் தப்பி…வேறு எங்கோ சென்று தலைமறைவாக வாழ்ந்து…நாலைந்து ஆண்டுகள் உழைத்த பொருளோடு ..இறுதியாக இந்தியத் தூதுவரகத்தில் தஞ்சமடைந்து பிறகு தூதுவரகம் வழங்கும் தற்காலிக பாஸ்போர்ட்டில் தாய்நாடு திரும்பிய பலரது கதைகளை நான் அங்கிருக்கும் போது நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.

தங்ஙள் கதையும் அம்மாதிரியானதுதான். என்ன வழக்கமான கூலித் தொழிலாளியாக இல்லாமல் சற்று மேல் மட்ட கதையாக இது சொல்லப்படுகிறது

“எனது முதல் திருமணம் “கதை தாஜ் சிறுவயதாக இருந்த போது… விளைச்சல் இல்லாத தென்னை மரத்துக்கு திருமணம் செய்து வைத்தால்…விளைச்சல் பெருகும்..என்ற பாரம்பர்ய கீழ்த்தஞ்சை மாவட்ட விவசாயிகளின் நம்பிக்கையையொட்டி….அந்த தென்னை மரத்துக்கு தாஜையே திருமணம் செய்து வைத்த கலகலப்பான நிகழ்வை… அங்குள்ள முஸ்லிம்களின் பேச்சு நடையில் சித்தரித்துள்ளார்..

பெருநாள் காலை’யும் அதே மாதிரியான ஒரு முஸ்லிம்கள் வாழ்வியல் சித்தரிப்புதான்.

இறந்தவன் குறிப்புக்கள்’ மிகவும் அடர்த்தியான இலக்கியச் சொல்லாடல்கள் மிகுந்த கதை.இப்படியான எழுத்துக்களை எழுதும் முஸ்லிம் எழுத்தாளர்கள் கூட…இருந்திருக்கிறார்களா..? என்று என்னை வியக்க வைத்த ஒரு நிரூபணம் .

தாஜ் பத்திரிக்கைகளில் எழுதியவரா…? என்று தெரியவில்லை.

எனக்குத்தான் தனிப்பட தெரியாமல் போனாரா…? அல்லது இஸ்லாமிய சமூகமே அவரைக் கண்டு கொள்ளவில்லையா….? என்பதும் தெரியவில்லை.

கொண்டாடப்பட்டிருக்க வேண்டியவர். யாரென்றே தெரியாமற் போனது ஒரு இலக்கிய சோகம்.

*

Thanks to : K S Mohammed Shuaib

*

மறுமொழிகள் :

Firthouse Rajakumaaren Nazeer : ஒரு சிறந்த இலக்கிய வாசகர் கவிஞர் ,எழுத்தாளர் தாஜ் அவர்களைத் தெரியாமல் இருந்தது ஆச்சிரியமாக இருக்கு ஜி !

நிஷா மன்சூர் : பெரும் சோகம் இது. தமிழ்ச் சூழலில் படைப்புகளை விட படைப்பாளிகளின் பாலிடிக்ஸ் முக்கியத்துவம் பெறுகிறது

Slm Hanifa : எனக்கு பத்துவருடங்களுக்கு முன்னரே அறிமுகமானார்.. ஆபிதீன் பக்கங்களை அவர் எழுத்துக்கள் அலங்கரித்தன.. தளம் சிற்றிதழ் அவரின் படைப்புகளை பிரசுரித்தது.. தமிழ்சினிமாவின் பின்னணியில் அசோகமித்திரன் எழுதியதைவிடவும் இவரின் எழுத்து உன்னதமானது.. ஆனாலும் இவரைப்பலரும்கண்டுகொள்ளவில்லை… மரணத்திற்கு முதல் நாளும் இவரோடு பேசினேன் … அனாரின் கவிதைகள் பற்றிய இவரின் பார்வை எத்துணை சிறப்பானது தம்பி..

Mohamed Sabry : இவர் அறிமுகமானவர்தான். கட்டாயம் வரவேண்டும் என்று அடிக்கடி சொல்வார். புத்தகம் இருந்தும் வாசிக்கவில்லை. அவர் மரணச் செய்தி கேட்டதும் மிகவும் கவலையாக இருந்தது. அண்மையில்தான் தங்ஙள் அமீர் வாசித்தேன்.

Meeran Mitheen : நல்ல நேசமுள்ள அன்பாளராக இருந்தார்.

Kannan Sundaram : சுரா நடத்திய காலத்திலிருந்தே காலச்சுவடில் பங்களித்துள்ளார். அதிகம் எழுதுபவர் அல்ல.

நசிஹா நேசன் : முகநூல் நண்பராக இருந்தவர்…முன்னர் சில நேரங்களில் முகநூல் உள்டப்பி மூலம் பேசியதுண்டு காகா….

Moulasha Moulasha (பிறைநதிபுரத்தான்)  : 2002-3 களில் திண்ணை இணைய தளத்தில் அடிக்கடி கட்டுரை கவிதை எழுதுவார். அவ்வப்போது நானும் எழுதும்போது நன்பரானோம். அடிக்கடி மெயில் மூலம் ஊக்கம் தருவார். சென்னை புத்தகக்கண்காட்சிக்கு இரண்டு முறை வந்தபோது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இடையில் போன் மூலம் தொடர்பு கொள்வதுண்டு எழுத நிறைய விஷயங்கள் இருந்தன அவரிடம். எதிர்பாரா மரணம் – ஒரு படைப்பாளியை பறித்துக் கொண்டது.

Rasool Mohideen ; ஐம்பது லட்சம் முஸ்லிம்கள் வாழும் தமிழகம். இன்று ஐயாயிரம் முஸ்லிம் எழுத்தாளர்கள் உயிர் வாழக் கூடும். மாவட்டம், சாதி, இஸம், முற்போக்கு லாபி, குழு மனோபாவம் அழுத்துகிறது.இப்போதைக்கு முகநூல் இணைக்கிறது.

தாஜ்  குறுநாவல்கள் – காலச்சுவடு

காலச்சுவடு பதிப்பகம் வெளியீடாக, பிரியத்திற்குரிய நண்பர் தாஜ்  எழுதிய ஐந்து குறுநாவல்களின் தொகுப்பு ‘தங்ஙள் அமீர்’ , 2019 சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளிவருகிறது.

பிறப்புக்கும் முன்னாலேயே நம் மேல்தோல்களிலும் இருதயத்திற்குள்ளேயும் ‘இறக்கியருளப்படும்’ அநாமதேயச் சுவடுகள் ஒவ்வொருவரையும் எப்படி வளைத்து நெளித்து உருளவிடுகிறது என்பதை நயமாகவும் நகைச்சுவையோடும் சற்றே அதிர்ச்சி மதிப்பீட்டோடும் சொல்லும் குறுநாவல்கள் இவை என்று சரியாகவே சொல்லியிருக்கிறார்கள்.

வாழ்த்துகள் தாஜ்!

அட்டை வடிவமைப்பு : ரஷ்மி.

*
தாஜ் முன்னுரை :

இந்தத் தொகுப்பைப் பற்றி, வாசிக்கும் நீங்கள் சொல்லும் தருணம் இது. மேலாக நான் ஏதேனும் சொல்லனுமென்றால்…

முதலில், என் மூத்த படைப்பாளிகள் அத்தனைப் பேர்களுக்கும் இந்த முயற்சியை முன்னிறுத்தி நெகிழ்வோடு நன்றி சொல்லனும். நன்றி! குறிப்பாய் பெரியவர் தி.ஜாவுக்கும், என் மீது அன்பு பாராட்டிய சு.ரா. அவர்களுக்கும்! அந்தக் கீர்த்திகள் செப்பனிட்டப் பாதையில்தான் இப்படி ‘எழுதுகிற பேர்வழி’யென வலியில்லாமல் நடந்து இருக்கிறேன்.

இதில் காணும் ஐந்து குறுநாவல்கள் ஒவ்வொன்றும் ஓவ்வொரு திக்கைப் பிடித்து பயணித்து இருப்பவை. இவற்றில் ஓரிரண்டில் எங்கள் மண்ணின்- ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட – கீழத்தஞ்சை வட்டார – இஸ்லாமிய ராவுத்தர் குடும்பங்களில் பேசுகிற – என் மனமொன்றிய வட்டார மொழியை மகிழ்ச்சியோடு பிணைத்திருக்கிறேன். இதற்கு முன் இன்னொருவர் காணாத ரசனை இதுவெனவும் கருதுகிறேன்! மற்றப்படிக்கு நான் எதிர்கொண்ட கதாபாத்திரங்களின் நிறைவின்மை அல்லது நிறைவை நீங்கள்தான் சொல்லனும்.

நவீன இலக்கியத்தினை ஒருவிதக் காதலோடு நான் ஒன்றுவதற்கு காரணமான மறைந்த என் நண்பர் கூத்தாநல்லூர் ஹாஜா அலி, நண்பர்கள் ஆபிதீன், நாகூர் ரூமி, முகம்மது சாதிக் மற்றும் என் அன்பிற்குரிய திரு. கண்ணன், அண்ணன் களந்தை பீர்முகம்மது அவர்களுக்கும் என் நன்றிகள்.

80 – களில்பஞ்சம் பிழைக்கப் போன சௌதியில், நவீன இலக்கியத்தின் மேல் காதலானேன். என் மூத்தப் படைபாளிகள் பலரின் ஆக்கங்களை அங்கே வைத்துதான் வாசித்தேன். அப்படி வாசிக்கவும், உள்வாங்கிக் கொள்ளவும் உறுதுணையாக இருந்த ‘ரஸ்தனூரா- அராம்கோ கேம்’பிற்கும் நன்றிகள்! இன்னும் நான் நன்றி சொல்லனும் என்றால் அது என் மனைவி குழந்தைகளுக்கென்றே இருக்கும். அவர்கள் எனக்கு அவ்வப்போது சுதந்திரமான ஓர் இருப்பை வழங்கியிராவிடில் இந்தத் தொகுப்பே எனக்கு சாத்தியமாகி இருக்காது.

*

நன்றி : தாஜ் (https://www.facebook.com/tajdeen.sa)

‘உயிர்த்தலம்’ – மேலும் சில விளம்பரங்கள்

‘புத்தகங்கள் ரசிப்பதற்கு அல்ல, சிந்திப்பதற்கு’ என்று News7-ல் இன்று காலை சொன்னார் இயக்குனர் தங்கர்பச்சான்‌. என் ‘உயிர்த்தல’த்திற்கு பயங்கர எதிர்ப்பா இருக்கே…! என்று தோன்றியதில் கூகுள் ப்ளஸ்ஸில் நான் பகிர்ந்த மேலும் சில விளம்பரங்களைப் பகிர்கிறேன். நன்றி. – AB
***

Jun 10, 2016

uyirthtlam - vazhaippazam1
அல்-கோஸ் அல்-மதீனா சூப்பர் மார்க்கெட் வாழைப்பழம். ‘சிரிக்காதீர்கள். எனக்கு கோபம் வருகிறது. வாழைப்பழம் என்றால் சிரிப்பு மட்டுமா? ஒரு குடும்பத்தையே சிதறிப் போக வைக்கும் அது.‌..’

—————————

Jun 8, 2016
எனக்கு குத்துச்சண்டை பிடிக்காது என்று சொன்னதற்கு ஏன்டா பிடிக்காது என்று குத்தினால் என்னங்க அர்த்தம்? ‘In any world which is sane, boxing would be a crime’ என்பார் ஓஷோ. சரி, குத்துங்கள் – ‘ருக்உ’வில் வரும் இந்த தமாஷைப் படித்துவிட்டு!

குத்துச்சண்டை வீரர் குல் முஹம்மதுவின் வீட்டில் நுழைய எந்தத் திருடனும் பயப்படுவான். குல் முஹம்மது, வாசலில் ஒரு போர்டு மாட்டி வைத்திருக்கிறார். ‘இது குத்துச் சண்டை வீரர் குல் முஹம்மது வீடு. இவரை இதுவரை குத்துச் சண்டையில் ஜெயித்தவர் யாருமில்லை’ என்று. எவன் நுழைய முடியும் ? ஆனால் ஒருவன் நுழைந்து திருடியும் விட்டான். அவனைப் பிடிக்கலாம் என்று பாய்ந்தால் திருடன் எழுதி வைத்து விட்டுப் போன ஒரு தாள் பட படக்கிறது. ‘ இதை திருடியவர் ஓட்டப் பந்தய வீரர் ஒலி முஹம்மது. இவரை இதுவரை ஓட்டப் பந்தயத்தில் ஜெயித்தவர் யாருமில்லை.’!
—————————

Jun 7, 2016
கவிஞர் தாஜ் : காலச்சுவடு கண்ணனோடு (உயிர்த்தலம் பற்றி) நான் பேசுவதை கேட்ட சிலர் ஆபிதீனின் புத்தகத்தை தேடினார்கள். ஸ்டாலுக்குள் ஆபிதீனின் உயிர்த்தலம் புதிதாக நாலுவரிசை உயரத்துக்கு உயிர்த்தெழுந்தது! ஓரிரண்டு பேர் உயிர்த்தலத்தை வாங்கவும் வாங்கினார்கள்!

பெரிதாக்கிப் பார்க்க : https://www.facebook.com/photo.php?fbid=1060605434009199&set=a.1060605417342534.1073745566.100001792565524&type=3&theater

—————————

Jun 5, 2016

நாகூர்க்காரங்க வைக்கிற தலைப்பெல்லாம் ஒரு மாதிரியாத்தான் இருக்கு. அவரு உயிர்த்தலம்.. இவரு (நாகூர் ரூமி) மாற்றுச்சாவி!

—————————

Jun 2, 2016
bonding – Meghdut Sen

bonding - Meghdut Sen

—————————

Apr 26, 2016
உயிர்த்தலம் புத்தகத்தில் எதாவது எழுதி ஒரு கையெழுத்து போட்டுக் கொடுங்க அண்ணி என்று யாழினி கேட்டதற்கு, ‘அண்ணனின் இலக்கியம் ஒழிக!’ என்று எழுதியிருக்கிறாள் அஸ்மா.

—————————
Jun 1, 2016

காலச்சுவடு அரங்கில் ஒருவர் : உயிர்த்தலத்தை வுட்டுட்டு மீதி எல்லாத்தையும் காட்டுங்க சார் !
—————————
Apr 17, 2016
ஆபிதீனின் உயிர்த்தலத்தை முகர்ந்தேன், நல்ல வாசனை என்று முகநூலில் சொல்லியிருக்கிறார் நண்பர் தாஜ் . நன்றி!
—————————

Apr 17, 2016
இன்று துபாய் வந்த ஜாஃபர்நானா , என் உயிர்த்தலத்தைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பதை இங்கே காணலாம் (இவர் வாசிப்பதை ஊரில் பார்த்த பேத்தி, ‘ஹை, சிரிப்பு‌‌ புத்தஹம்!’ எனறு சொல்லுமாம்!)
—————————

Dec 1, 2015

காலச்சுவடு வெளியீடாக எனது ‘ உயிர்த்தலம்’ தொகுதி (இரண்டாம் பதிப்பு) வந்திருப்பதில் மகிழ்ச்சி. ‘நகுலனுக்கு ஒரு சுசீலா போல ஆபிதீனுக்கு ஒரு அஸ்மா! அனைத்துக் கதைகளிலும் அஸ்மா எழுத்தின் மகிழ்ச்சியாகி ஒளிர்கிறாள். நம்மிடமிருந்து என்றோ விடைபெற்றுக்கொண்ட நகைச்சுவை உணர்வுகள் எள்ளலும் கிண்டலும் கேலியுமாக இந்தப் பக்கங்களில் குதூகலிக்கின்றன’ என்கிறார் மதிப்பிற்குரிய ஹனீபாக்கா. ஒத்துழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
https://abedheen.wordpress.com/2015/12/01/uyirththalam-kalachuvadu/

————-
Oct 12, 2014
ஃபேஸ்புக்கில் போகன் சங்கர்

ஆபிதீன் அவர்கள் எழுதிய உயிர்த்தலம் புத்தகத்தை மதுரையில் ஒளிந்திருந்த ஒரு புத்தகக் கடையில் ஒரே ஒரு பிரதி கிடைத்து வாங்கினேன்.இதற்கு முன்பு சில இஸ்லாமிய எழுத்துகளை தமிழில் படித்திருக்கிறேன் .கீரனூர் ஜாகிர் ராஜா ,தோப்பில் தவிர மற்றவை எல்லாம் உரலுக்குள் தலையை விட்டது போலவே இருக்கும்.அதுவும் நல்ல அரபி உரல்.நல்ல அரபி இடி.என் நண்பர் ஒருவருக்கு தோப்பிலே அப்படித்தான் தோன்றிற்று.அவர் கூடுதலாய் மலையாள உரலில் மலையாள இடியும் வேறு சேர்த்து தருவார்.

ஆபிதீன் கதைகள் முற்றிலும் வேறு தளம்.இணைவைத்தலுக்கு மறுமை நாளில் வானகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் பற்றி காபிர்களுக்கு கவலை இல்லை என்பதால் நான் தைரியமாகவே அவரை பஷீருடன் ஒப்பிடுவேன்.மலையாளத்தின் இக்காமாருக்கே உரிய பகடி.சுய எள்ளல் .அதே சமயம் சாரமற்ற வெற்று வெடிச் சிரிப்பும் அல்ல.தமிழ் முஸ்லிம்கள் எப்போதும் கைக்கு புத்தூர் மாவுக் கட்டு போட்டது போலவே எழுதுகிறார்கள் என்பது என் கருத்து.ஆபிதீன் அப்படி அல்ல. தொகுப்பில் உள்ள வாழைப்பழம் கதை ஒன்றே அவரது மேதமையைக் காட்டி விடுகிறது.ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி யின் அனாயாசத்தோடுஒரே வீச்சில் நம் தலையையும் வாங்கி விடுகிறார்

நான் இந்தப் புத்தகத்தை வஹாபிகள்,சங்க காரியதரிசிகள் வாழைப்பழத்தை தோல் சீவி வெட்டி சாப்பிடுகிறவர்கள் தவிர மற்ற எல்லோருக்கும் பரிந்துரைப்பேன்

—————————

Friday, December 2, 2011
ஆபிதீன் கதைகள் – அஷ்ரஃப் சிஹாப்தீன்

—————————

Monday, July 28, 2008
ஆபிதீனின் உயிர்த்தலம் / அங்கதத்தின் பிரமாண்டம்! – தாஜ்
*

ஆபிதீன் பற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி . பேசாதவர்களுக்கு என் ஸலாம்!

‘உயிர்த்தலம்’ விளம்பரம் – 1

‘உண்மையான வாசகன், வாசிப்பதை விடுவதே இல்லை!’ என்று ஆஸ்கார் வைல்ட் கூறியதாக பபாஸி மூலம் அறிந்தேன். எந்த வழியாக என்று சொன்னால் தேவலை. அது போகட்டும், எனது இரண்டாம் சிறுகதைத் தொகுதியான ‘உயிர்த்தலம்’ (ஆபிதீன், அஸ்மா மற்றும் பலர் நடித்தது) சென்னை புத்தகக் காட்சி –  காலச்சுவடு அரங்கில் கிடைக்கும். அவசியம் வாங்கி விடவும். நன்றி!

abed-uyirthalam-kalachuvadu-for-wp1

« Older entries