கனவுக்குள் கனவு – ஆபிபாய் விமர்சனம்

ஃபேஸ்புக்கில் முந்தாநாள் எழுதியது. பகிர்கிறேன். கனவிலாவது வாசியுங்கள். நன்றி. –  AB
**
 
’.. என்னுடைய ’கனவுக்குள் கனவு’ சூஃபிஸ நாவலை இதுவரை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன், ஏன் அதுபற்றி முகநூலில் நீங்கள் எழுதவில்லை?’ – மெஸ்ஸெஞ்சரில் மிரட்டியிருந்தார் பிரியத்திற்குரிய நூருல் அமீன் ஃபைஜி.
 
படித்ததால்தான் என்று சொல்லமுடியவில்லை!
 
உயிர் நண்பரான மர்ஹூம் தாஜ் எழுதிய ‘தங்ஙல் அமீர்’ புத்தகம் உள்பட எதற்குமே விமர்சனம் நான் எழுதியதில்லை. எழுத்தாளனா நான்? அப்படியெல்லாம் எழுதவும் வராது. ஏன் அனுப்பிவைத்தார்? தெரியவில்லை. ‘சூப் விரும்பிகளின் புனைபெயர்தான் சூஃபி’ என்று ஏதோ ஒரு கதையில் எழுதியதாலா? இருக்கலாம். அதெல்லாம் என் கிறுக்கல்கள் அமீன். சூஃபிஸத்தைக் கரைத்து ஊற்றும் பேராசிரியர்கள் நாகூர் ரூமி ரமீஸ் பிலாலி , கவிஞர் ஹைமா ஹாத்துன், மன்னிக்கவும், நிஷா மன்சூர் போன்றவர்களே இந்த நூலைப் பாராட்டிய பிறகு நானும் எதற்கு?
 
இருந்தாலும் கொஞ்சம் சொல்ல முயற்சிக்கிறேன் தயவுசெய்து அமீன்பாய் கோபிக்கக் கூடாது. நாவல் நன்றாக வந்திருக்கிறது!
 
தமிழின் நல்ல நாவல்கள் எதையுமே படிக்காமல், ‘இது பின்நவீனத்துவ முறையில்’ வந்திருக்கிறதென்று ஒருவர் சொன்னபோது சிரிப்பாக இருந்தது. எந்த முறையோ, இந்த நாவல் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது எனக்கு – ’லா இலாஹா இல்லல்லாஹ்’வுக்கு விளக்கம் என்று உலூஹிய்யத், உஜூது, சிஃபாத், அஃஆல், ஆஸார் என்று விரியும் பக்கங்களையும், தக்வா – தவக்கல் – கியால் – தஜல்லி என்று விளக்கும் பக்கங்களையும் தவிர. ‘அஃப்யானே தாபிதா’வும் அப்படித்தான். ஆழ்ந்து சிந்தித்தல் என்று பொருள்படும் முராக்கபாவையும் அகவிழிப்பு எனும் முஷாஹதாவும் இங்கே சேர்த்துக்கொள்ளலாம் (இதில் ஐம்பது பக்கங்கள் போய்விடும்!)
 
தெரியாமல் கேட்கிறேன், இது நாவலா அல்லது ’ஏகத்துவ இறைஞானம்’ இரண்டாம் பாகமா?
 
படிக்கிற முஸ்லிம்கள் பரவசப்படலாம். மற்றவர்கள் பயந்து ஓடிவிடுவார்களே…
 
இவர் நேரில் கண்ட ஹஜ்ரத்தை விட தான் காண விரும்பிய ஹஜ்ரத்தை காட்டியிருக்கிறார் என்பதும் என் அபிப்ராயம்.. William Chittic – Annemarie Schimmel – ஜே. கிருஷ்ணமூர்த்தி – விவேகானந்தர் ஓஷோ நூல்கள் , கிரேக்க ஞானி Epictetus சொல்வது , மேக்ஸ்வெல் மால்ட்ஸ்-ன் Self Image Pshychology , எமிலி கூ பிரபலப்படுத்திய Auto Suggestion பயிற்சி , குர்ஆனை ஜப்பான் மொழியில் மொழிபெயர்த்த Toshihiko Izutsu எழுதிய Sufism and Taoism புத்தகம், Ontology எனும் கடலில் கால் வைத்தல் , பிரம்மத்தின் தரிசனம் பற்றி சுஜாதா எழுதிய வாசகங்கள் , இப்னு அரபி பற்றி பேசும் Claude Addas , Inception படம் பார்த்த Oludamini Ogunnaike, ‘இல்முல் கியால்’ பற்றி விளக்கும் Hendry Corbins, அல்லாமா இக்பாலின் கவிதை என்று சகலமும் தெரிந்த – பிறர் மனதில் உள்ளதை விளங்கிக் கொள்ளும் கஷ்ஃபுடைய – ஹஜ்ரத்…
 
துபாய் மால்-ல் உள்ள Kinokuniya புத்தகக் கடலை மொய்க்கும் அமீன்தான் இது – பார்ப்பதற்கு இவர் பாலகுமாரன் போல இல்லாவிட்டாலும்.
 
நூர் (ஒளி) பற்றி விளக்கும் பாடத்தில், பிரபஞ்சம் என்பதே அவன் பேரழகை வெளிப்படுத்தும் சினிமாதான் என்று அற்புதமாகச் சொல்கிறார்கள் ஹஜ்ரத்.
 
இடையிடையே மெய்ஞானியர்களின் மேன்மையான மேற்கோள்கள் , அவர்கள் சொல்லும் அருமையான கதைகள்… நிதானமாக வாசிக்க நமக்கு வருடங்கள் வேண்டும். ஆனால், இவ்வளவு தகவல்கள் ஒரு நாவலுக்குத் தேவையா?
 
சில விசயங்கள் தேவைதான். கழுத்துக்குக் கீழே டை போல – பெண்களின் சடை பின்னல் போல – அமீரக அரபிகள் அணியும் தர்பூஷுக்கு காரணம் இவர் சொல்லித்தான் தெரிந்தது . அந்தக் காலத்தில் அரபிகள் முத்துக்குளிப்புக்கு சென்றால் திரும்பிவர பல மாதங்கள் ஆகுமாம். அதற்காக, தர்பூஷை அத்தர் பாட்டிலில் நனைத்து இவர்களின் மனைவிமார்கள் கொடுப்பார்களாம். நினைப்பு வந்தால் மோந்துக்கோ. நான் ஏதோ இழுத்து நாலு சாத்து சாத்துவதற்கு என்று நினைத்துக்கொண்டிருந்தேன்!
 
அரேபிய நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஜூஹா என்ற நகைச்சுவைப் பாத்திரம்தான் செர்வாண்டஸின் டான் குயிக்ஸோட்டுக்கு Inspiration என்பதும் அமீன் தரும் அபூர்வ தகவல்தான்.
 
என்னடா இது, வசதியானவர்களின் ஆன்மிகச் சிந்தனைகளை அறியவிரும்புபவர்கள் வாசிக்க வேண்டிய நாவல் போல இருக்கிறதே.. பாவப்பட்ட லட்சக்கணக்கானவர்கள் பற்றி இவர் லட்சியமே செய்யலையே என்று யோசித்துக்கொண்டே படிக்கும்போது ஹஜ்ரத்தின் முரீதுகள் (சீடர்கள்) ஜலாலும் பஷீரும் வந்தார்கள். வெறும் 600 திர்ஹம் சம்பளம் வாங்கிக்கொண்டு, கடும் வெயிலில் கட்டிடப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள். தங்குமிடத்தில் ஏசியும் கிடையாது. ஆனால் முகங்களில் வாட்டமில்லை. வேலை கஷ்டமா இருக்கா என்று கேட்டால் ஊரில் வேலை இல்லாமல் எவ்வளவோ பேர் இருக்காங்களே.. இந்த வேலையாச்சும் கொடுத்த இறைவனுக்கு நன்றி ஹஜ்ரத் என்று சொல்கிறார்கள். என்ன ஆச்சரியம், இப்போது சௌதியில் மாதம் 5000 ரியாலுக்கு மேல் சூப்பர்வைசர்களாக இருக்கிறார்கள். இதற்காகவே மூதேவிகள் நாமும் மூரிதுகளாக மாறலாம்!
 
”மாப்புள, ரெண்டு வருசத்துக்கு ஒரு தடவை ஊர். மீதி நாளெல்லாம் துபாய்லன்னு வாழ்க்கை பத்து வருசமாப் போவுது. இப்பவே எனக்கு 40 ஆவுதுடா. இன்னும் பத்து இளமையான வருசம் கழிச்சி ஊருக்கு கொஞ்சம் காசோட போயி என்னாத்த கிழிக்கப் போறேன்னு தெரியலே’ என்று சொல்லும் ஆசிக்கும் இருக்கிறான். நம்ம ஆள். ஒன்னு தெரியுமா ஆசிக், நான் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக இருக்கிறேன். கையில் ஒரு பைசா கிடையாது. இருப்பதெல்லாம் அவமானங்களும் துயரங்களும்தான். அல்லாஹ்வின் நாட்டம் போலும். Accept the inevitable!
 
இப்படியே போனா எப்படிங்னி என்று என்மேல் அக்கறை கொண்ட நண்பர் நாகூர் ரூமி கவலையோடு ஊரில் கேட்டார். அப்டியே போயிடவேண்டியதுதான் என்றேன்.
 
‘ஏதேது செய்திடுவோ பாவி விதி ஏதேது செய்திடுமோ
ஏதேது செய்து எனை மோசஞ் செய்யுமோ’
– குணங்குடி மஸ்தான்
 
மனைவி ஷஹீதாவை ஊருக்கு அனுப்பிவிட்டு தன் ‘தேவையை’ தலவாணியில் தீர்த்துக்கொள்ளும் ஆஷிக், தேவை பற்றி ஹஜ்ரத் சொன்னதாக வரும் அழகிய பகுதி இது :
 
“எப்ப நம்ம தேவை நிறைவேறும் போது அல்லா தான் நெறைவேத்துறான்னு பாக்கலயோ,அப்ப நாம தேவையுடையவர்கள். அல்லாஹ் தேவையை நிறைவேத்துறவங்கிற உணர்வு அந்த நேரத்துல நம்மல வுட்டு போயிடுச்சு. எப்பவாச்சும், ஏதாச்சும் கிடைக்கும் போது அல்லாஹ் தந்தான்னு நன்றி சொல்றவங்களுக்கு நாகூர் ஹனிஃபா பாடுவாஹல்ல “தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன் தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்”னு, அப்புடி தேட மனிதருக்கு அல்லாட கருணைல கிடைக்கிதுல்ல, அந்தளவு பங்கு தான் கிடைக்கும். ஒவ்வொரு தேவையிலும் ஹக்கை முன்னோக்கி கேட்பவர்களுக்கு அல்லாஹ் தன் நேசர்கள் எனும் அவுலியாக்கு கொடுக்கிற மாதிரி விசேஷ கருணயோடு வழங்குவான். ‘ரிஜ்குன் கறீம்’னு சொல்ற சங்கை மிகுந்த வாழ்வாதாரங்கள கொடுத்து கண்ணியப் படுத்துவான். அவனுடைய வாழ்க்கையே ‘ஹயாத்தன் தய்யிபா’வான மணமிக்க வாழ்க்கையாகிடும்”னு சொல்லி, “இது ஷெய்கு எனக்குச் சொல்லிக் கொடுத்தது. அத நான் புடிச்சுகிட்டேன் அதுல வந்தது தான் இந்த செல்வச் செழிப்பான வாழ்க்கை. நீங்களும் இத புடிச்சுக்கங்க. இது தான் அடிப்படை. மத்த பாடம்லாம் அப்படி தேவைய நிறைவேத்துற ஹக்கை நீங்க உங்க கூட இருக்கிறவனா இன்னும் எல்லா சிருஷ்டிகள் கூடவும் இருக்கிறவனா விளங்கனுங்கிறதுக்காகத் தான், விதவிதமா சொல்றேன்”
 
தேவை பற்றி அன்பில் முஹம்மதுவின் கேள்வியோ இப்படி இருக்கிறது : எந்த யானை எல்கேஜியில் ஆரம்பித்து இருபது வருடங்கள் புத்தகங்களை தூக்கி சுமந்துச்சு? எந்த எறும்பு எம்பிளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சில் கால்கடுக்க நிண்டுச்சு?
 
அதானே?
 
இப்னுல் அரபி (ரலி) அவர்களின் கவிதை வரிகளை இங்கே சேர்ப்போம்:
 
இன்னமுல் கௌனு கியாலுன்
ஃபஹூவ ஹக்குன் ஃபில் ஹகீக்கா
குல்லுமய் யஃப்ஹமு ஹாதா
ஹாஸ அஸ்ராறத் தரீக்கா
 
எதாவது புரிகிறதா? புத்தகம் வாங்கிப் படியுங்கள். அழகான தமிழ் மொழிபெயர்ப்பு உண்டு.
திடீரென்று, கிருத்துவப் பள்ளியில் ஒரு பையன் பாடும்
 
‘என் திரு யாழிசை இறைவா
உன் பண் தரு மருந்துண்டேன்
என்னையும் ஓர் சிறு நரம்பெனவே
நீர் இசைத்திட வேண்டும் இசையரசே’
பாட்டு நாவலுக்கு பெருமை சேர்க்கிறது.
 
நியாஸின் சபராளி வாப்பாதான் நிஜமாகவே என்னைக் கலங்க வைத்தார். ’ஏன் புள்ளைய அடிச்சி வளர்க்க மாட்டேங்குறீங்க?’ என்று உம்மா கேட்கும்போது ‘நானே சீசனுக்கு சீசன் வரும் பொன்னாந்தட்டான் பறவை மாதிரி வருசத்துக்கு ஒரு தரம் ஒரு மாசம் வர்றேன். இதுல என்ன கண்டிக்கிறது? அவன் சிறப்பாக்கி வைன்னு அல்லாஹ்ட்ட அழுது கேக்குறேன்மா’ என்கிறார். நாலைந்து வருடங்களுக்கொரு முறை மலேயாவிலிருந்து வந்த என் சீதேவி வாப்பாவின் குரல்…
 
நாவலின் தலைப்பான ‘கனவுக்குள் கனவு’ மிகவும் பிடித்தது (யாரோ ஒருவன் விழித்திருக்கும்போது கண்ட கனவு நான் என்று கௌஸி ஷாஹ் (ரலி) சொன்ன மேற்கோளுடன் அத்தியாயம் நான்கு தொடங்குகிறது.). தலைப்பு பிடித்திருப்பதற்கு காரணம். என் மகன் நதீம். சோறு உண்ணும்போது கறியை தனியே சாப்பிடாமல் சோற்றின் உள்ளேயே வைத்து அமுக்கி சாப்பிடுவான். கேட்டால் ‘உணவுக்குள் உணவு வாப்பா’ என்பான். இதற்காகவே என் நினைவில் என்றும் இந்த நூல் இருக்கும்.
 
ஆதவனின் அங்கத எழுத்தை ரசிக்கும் அமீன், தன் ஹஜ்ரத் பற்றி ஒரு வரி கூட எதிர்மறையாக எழுதாதற்குக் காரணம் அவருடைய அளப்பரிய அன்பாகத்தான் இருக்க வேண்டும்.
 
ரொம்ப சீரியஸாக நான் எழுதியது போலத் தெரிகிறதே… நூருல் அமீனுக்கு சுலபமாகக் கைவசப்படும் (ஆனால், போட மாட்டார்) நகைச்சுவையோடு முடிக்கிறேன்.
 
பார்த்து… உங்க கூட்டாளி ஆஷிக் சொல்றதைக் கேட்டு தொழுகை, ஹஜ்ரத்துன்னு அலைஞ்சா அப்புறம் அல்லாஹ் பயித்தியமா மாறிடுவீங்க என்று எச்சரிக்கை விடுக்கிறாள் நஜீரின் மனைவி. மனைவிக்கு கொஞ்சமும் பயப்படாதவன். நஜீர், என்னைப் போல. அன்றிலிருந்து ஹஜ்ரத் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை! என்னப்பா, தொழுகையிலே உன்னோட ஹால் (மனநிலை) மாறிடுச்சா என்று கேட்கும் ஆஷிக்கிடம், ‘ஆமா மாப்புளே. அனுஷ்கா நெனப்பு இப்பல்லாம் ஒரு தடவை கூட வர்றதில்லே’ என்று பதில் சொல்கிறான். இங்கே அமீன் எழுதுகிறார் : அனுஷ்காவுக்குப் பதில் ஹன்ஷிகாவின் முகம்தான் மனதில் வருகிறது என்பதை அப்பாவி ஆஷிக்கிடம் சொல்ல நஜீருக்கு ஏனோ மனமில்லை!
 
அப்பாவி முஸ்லிம்களுக்கு என் குறிப்பு: அனுஷ்கா, ஹன்ஷிகா இருவரும் விண்வெளி வீராங்கனைகள்.
 
அன்பையும் இறையருள் பற்றிய நினைப்பையும் பெருக்க உதவும் நூல்கள் பல நூருல் அமீன் ஃபைஜி ஆக்கத்தில் மேலும் வெளிவரட்டுமாக.
 
பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்.
ஆபிதீன், துபாய்
12.12.2020