ஆபிதீனின் ‘இடம்’ பதிப்பாளர் : ஸ்நேகா / சென்னை
Sneha Publishers , 348, T.T.K. Road ,Royappettah , Chennai 14 , India – Pin : 600 0014 , Tel : 0091 44 2811 1997 email : snehapublishers@hotmail.com
***
Abedeen’s e-Mail : abedheen@gmail.com
***
பிளிறும் களிறு முதல் பிப்பீலிகை வரையுள்ள அனைத்து ஜந்துக்களுக்கும் இருக்க இடத்தையும் உண்ண உணவையும் அளிக்கும் இந்த வையகம் சிலரை அவற்றுக்காக ஓடவும் விரட்டி விரட்டி தக்க வைத்துக் கொள்ளவும் பணித்து விடுகிறது. ஆபிதீன் எழுதிய ‘இடம்’ [கதை] மிக அருமையாகச் சொல்லப் பட்டிருக்கிறது.
வெளிப்பாடுகளை வைத்து உணர்ச்சிகளைச் சொல்வது அரியதொரு விஷயம்.
வெளிப்பாடுகளில் வரும் ,ததும்பிவழியும் , இதயப் பிரவாகங்கள் வார்த்தைகளில் அடங்காதவை. அவை எதையோ சொல்ல ,வெறெதையோ புரியவிடுபவை. வெண்ணைத்திரள் போல உருண்டு விழுந்து திடீரென்று காணாமல் போகிறவை. எத்தனையோ சாதாரணக் கண்களுக்குப் புரியாமலே மறைகிறவை. ஆபிதீன் சொல்கிற ‘இடம்’ எங்கெங்கோ என்னை இழுத்துப் போயிற்று. காற்றடிக்கும் வெட்டவெளியுடன் கூடிய, உயரக் கூரை கொண்ட வாட்ச்மேன் அறை. மூட்டைப்பூச்சி பண்ணையிலிருந்து தப்பி அதற்குள் வந்து சேரும் தமிழ் முஸ்லிம். ‘நான் என்ன வாட்ச் மேனா? ஸாப்ட்வேர் ப்ரோக்ராமராக்கும். வாட்ச்மேன் இடதுமூலையில் இருக்கிறான். அவனைக்கேட்டால் வலது மூலையில் இருப்பதாகச் சொல்லக்கூடும்.’ என்று சொல்லும் அரபு நாட்டு விருந்தாளி. எந்த இடத்திலும் உயர்வு நவிற்சி இல்லாமல் பெரிய சிரமத்தைக்கூட வலி கூட்டிச் சொல்லாமல் இயல்பாகப் பிழிந்து தரும் சோகம் இருக்கிறதே ! அது செய்தி.
பேய்க்கு ஐந்து திர்ஹம் கொடுப்பவரின் பாஷை முழுக்க வைரமும் ரத்னமும். இடையில் மலைப்பாதை நதி போல மிளிர்ந்து கம்பீரம் காட்டும் நகைச்சுவை வேறு.
‘சேகரித்து வைத்திருந்த சண்டை எல்லாவற்றையும் போட்டுத்தீர்த்த மனைவி ‘பற்றி வேறெந்த விடுமுறை நாயகரும் சொல்லியிருக்க மாட்டார்.
மார்க்கத்து நையாண்டி நிந்தனைகள் எல்லா மார்க்கங்களுக்கும் பொருந்துவதே.
கெட்ட வார்த்தைகளும் வில்லங்கமான ஹாஸ்யங்களும் ,எழுதினவர் பண்பை உயர்த்தி வைக்கிற அதிசயம் ,ஆபிதீன் எழுத்தினால் மட்டுமே விளையும்.
இந்த எழுத்துக்கு நான் இது வரை சம்பாதித்த சொத்து முழுக்கத் தந்து விடுகிறேன் என்றேன். ‘பன்முக’த்துக்கு சந்தாவை முதலில் அனுப்பிவிடுங்கள் என்றார் எம்.ஜி.சுரேஷ்.
சதாரா மாலதி (‘பன்முகம்’ கடிதம்)