எது ஹதீஸ்? – ’புதிய’ நினைவூட்டல்

நாளை மறுநாள் – அருட்கொடையாளர் வரிசையில் ஒன்பதாவதாக – வானவியலாளரும், கணிதமேதையுமான அல்-பத்தானி பற்றிய பதிவு வரும் , ஹமீதுஜாஃபரின் எழுத்தில், இன்ஷா அல்லாஹ். அதற்கு முன்,  எதைக்கெடுத்தாலும் – மன்னிக்கவும்-  எதற்கெடுத்தாலும் ஹதீஸ் சொல்பவர்களுக்கு இந்தப் பதிவு. 

’ஹதீஸ்கள் வேண்டுமா?’ என்று நிறைய விவாதங்கள் நடக்கின்றன..  ’நபி(ஸல்) அவர்கள் தெளிவாகவே தனது இறுதிப் பேருரையில் குறிப்பிட்டுள்ளார்கள்:: “நான் இரண்டை விட்டுச்செல்கிறேன், அவற்றைப் பற்றிக்கொள்ளும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறமாட்டீர்கள், ஒன்று இறைமறை குர்ஆன். மற்றது என் வழிமுறை” என்று நினைவுபடுத்துகிறார் சகோதரர் இப்னுஹம்துன். நல்லது, முந்தாநாள் சாப்பிட்ட சாப்பாடே சரியாக நினைவுவராதபோது நபி(ஸல்) அவர்கள் இறந்து 200 வருடங்களுக்குப் பிறகு தொகுக்கப்பட்ட ஹதீஸ்களில் எது சரியானது என்ற குழப்பம் சில பேருக்கும் வரலாம். ‘ஆபிதீன் ஒரு முட்டாள்’ என்ற உண்மையை ஒருவரிடம் சொன்னால் அது அப்படியே மாறிமாறிப் போய் பத்தாவது ஆளிடம் செல்லும்போது ‘ஆபிதீன் ஒரு புத்திசாலி’ என்று பயங்கரமான பொய்யாகப் போகிறது, இல்லையா? இந்தலெட்சணத்தில் , ‘நான் சொல்வதுதான் சரி’ என்று ஒவ்வொருகுழுவும் முரண்டுபிடித்துக்கொண்டு அடித்துக்கொண்டால் எப்படி சரி? சண்டை வேண்டாம் சகோதரர்களே, ஆபிதீன் முட்டாள்தான்! திருப்தியா?

ஆமா…, தனக்கு அருளப்பட்டது மட்டுமே உண்மை என்று நினைத்துக்கொண்டு பிற மதத்தைச் சார்ந்த சகோதரர்களுக்கு புத்தி சொல்லப் புறப்பட்டுவிடுவது நியாயம்தானா? நேற்று ஷார்ஜா வந்து இறங்கிய நண்பன் ஹமீது , திட்டச்சேரி-கொந்தையில் நடந்து தகவலைச் சொன்னான். ’ஆஹா பக்கங்கள்’ நண்பர் காதர் ‘ஏஹே பக்கங்கள்’ என்று ஆரம்பித்து எகிற வேண்டிய செய்தி.  ஐயப்ப பக்தர்களுக்கு ’அட்வைஸ்’ செய்தார்களாம் ’ஜாக்’  சகோதரர்கள் அங்கே. இன்னும் நோட்டீஸ் கிடைக்கவில்லை.  சுட்டி மட்டும் கிடைத்தது.  இதெல்லாம் என்ன மாதிரி மனநிலை? ’நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா ; அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா ; அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா’  என்பான் கண்ணதாசன் (கண்ணதாசன் பற்றிய பதிவு அடுத்து வருகிறதாம்!).

இருக்கிற குழுக்கள் போதாதென்று இன்னொரு விசேசமான பிரிவு. இவர்களுக்கு குர்ஆன் மட்டுமே போதும்!

C.S. ரஃபியுத்தீன் ஆசிரியராக இருந்த ’புதிய நினைவூட்டல்’ மாத இதழிலிருந்து (டிசம்பர் 2000) பதிவிடுகிறேன். குர்ஆன் மட்டுமே பின்பற்றவேண்டிய ஒரே ஹதீஸ் என்று சொல்லும் பிரிவைச் சார்ந்தவர் ஆசிரியர் என்று தெரிகிறது. ஒரு பெண்ணின் ஒரு விரல் வெட்டப்பட்டல் 10 ஒட்டகங்கள்; இரு விரல்கள் வெட்டப்பட்டால் 20 ஒட்டகங்கள்; மூன்று விரல்கள் வெட்டப்பட்டால் 30 ஒட்டகங்கள்; ஆனால் நான்கு விரல்கள் வெட்டப்பட்டால் 20 ஒட்டகங்கள் மட்டும் கொடுத்தால் போதும் போன்ற ’கணித அற்புதத்தை’ (இமாம் மாலிக் எழுதிய முஅத்தாவிலும் (43/11) இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் எழுதிய முஸ்னதிலும் ( 2/182) இந்த அற்புதம் இருக்கிறதாம்) கிண்டலடிக்கிறார் ஆசிரியர். இப்போது இந்த பத்திரிக்கை வருகிறதா என்று தெரியவில்லை. ஆசிரியர் இருக்கிறாரா என்றும். நினைவூட்டுங்கள்.

**

’நீங்கள் இறையச்சமுடையவர்களா? படியுங்கள்! சிந்தியுங்கள்!’ என்று ஹதீஸ்களின் உண்மை நிலையை விளக்குகிறார் ஆசிரியர். அவர்தான் கட்டுரை எழுதியிருக்க வேண்டும். நபி இறந்த பின் 200 வருடங்கள் கழித்து ஹதீஸ்களின் ஆசிரியரான புகாரியின் வாழ்வில் ஒரு நாளாம்.. ’உங்களுக்கு ஏதேனும் ஹதீஸ்கள் தெரியுமா?’ என்ற (புகாரியின்) கேள்விக்கு ஒருவரிடமிருந்து வந்த ஒப்புயர்வற்ற பதில் இது

’ஆம்! என் தந்தை கூற நான் கேட்டிருக்கிறேன், இறைவன் அவருக்கு அருள் செய்வாராக. அவர் தன்  பெரிய அண்ணனிடம் கேட்டதாகக் கூறினார், இறைவன் அவருக்கு அருள் செய்வாராக. அவர் தன் பாட்டியாருடன் அமர்ந்திருந்தபோது பாட்டியார் கூறினார், இறைவன் அவருக்கு அருள் செய்வாராக. அவர் தன் பெரிய மாமாவுடன் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருக்கையில் அவர் கூறினார். அவருடைய தாய்வழிப் பாட்டனாருக்கு இமாம் அஹ்மத் பின் முஹம்மத் அல்யமானியைத் தெரியும் என்றும் , இறைவன் அவருக்கு அருள் செய்வாராக,  அவர் தன் மூத்த மாமா , இறைவன் அவருக்கு அருள் செய்வாராக , நபித்தோழர் உமர் இப்னு காலித் அல்யமானியைச் சந்திக்கும்போது , இறைவன் அவருக்கு அருள் செய்யட்டும், அவர் கூறினார். முஹம்மத் நபி மீது சாந்தி நிலவட்டும், என்னிடம் கூறினார்…..’

அவ்வளவுதான் கிண்டல். இதற்கு உத்மான் பின் அலி என்பவரின் கார்ட்டூன் வேறு.

நல்லவேளையாக, ‘ஆனால் அவர்களின் பெரும்பாலோர் யூகங்களேயன்றி பின்பற்றவில்லை. மேலும் யூகங்கள், உண்மைக்கு மாற்றாக இருக்க இயலாது. நிச்சயமாக இறைவன் அவர்கள் செய்பவற்றையெல்லாம் முற்றிலும் அறிந்தவராக இருக்கிறார்’ என்ற குர்ஆன் வசனத்துடன் (10:36) முடித்திருக்கிறார்கள். (அல்லாஹ்) ‘இருக்கிறார்’ என்று சொல்வது ரஷாத் கலீபா வின் குர்-ஆன் மொழிபெயர்ப்பு போலும். (அல்லாஹ்) இருக்கிறான் என்று மரியாதையாக – அளவற்ற பிரியம்தான் காரணம் – சொல்வதே இஸ்லாமியர்களின் இயல்பு. வீட்டில் ஏதேனும் கெடுதல் நிகழ்ந்தால் ‘ஒரு கழிச்சல்ல போற அல்லாஹ்வுக்கு கண் இல்லையா? பாக்க மாட்டேங்குறானே…’ என்று கத்தும் உம்மாக்கள் , ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லத்தின் பெயரைக் கேட்டால் அவ்வளவுதான். நெகிழ்ந்து கண்ணீர் விடுவார்கள்.

போதும்.  என் மேல் கோபம் வேண்டாம்.  இதழைக் கொடுத்த ஜபருல்லாநானாதான் ’நினைவூட்டலை’ப் போட்டியுமாங்னி?’ என்று நினைவூட்டினார். நினைவூட்டுகிறேன்; இறைவன் அவருக்கு அருள் செய்வாராக!

ஜீ, இது ராஜாஜியின் பாகிஸ்தான்ஜீ…

ஏற்கனவே எனக்கு ரொம்ப நல்ல பெயர்!  தினமணி வைரவிழா மலர் 1994-லிருந்து  ஒரு பகுதியை  ( 18/5/1942-ல் வெளியான செய்தி) ஸ்கேன் செய்து அனுப்பி , இங்கே போடச் சொன்னால் நான் என்ன செய்வேன் தாஜ்? நடக்கட்டும் உங்களின் அரசியல்!

குறிப்பு : தடிமனான வாக்கியங்கள் தினமணியின் கைங்கர்யம்.  என்னுடையதல்ல. எனக்குத் தெரியவேண்டியது ‘அக்ராசனம்’ என்றால் என்ன என்பதுதான் 😉

*

தமது பாகிஸ்தான் பற்றி ராஜாஜி விளக்குகிறார்

தினமணி

முஸ்லிம்களுக்கென்று தனிநாடு (பாகிஸ்தான்) உருவாவதைத் தடுக்க முடியாது, ஒரே நாடாக இருப்போமென்று அவர்களை வற்புறுத்த முடியாது என்ற தனது கருத்தை தெள்ளத்தெளிவாக ராஜாஜி விளக்குகிறார். சென்னையில் நடந்த பொதுக்கூட்டமொன்றில் அவர் ஆற்றிய உரை இது:

சென்னை , மே 18  (1942)

நேற்று மாலை தேனாம்பேட்டையிலுள்ள புது காங்கிரஸ் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜாஜி பாகிஸ்தான் சம்பந்தமாக தமது யோசனையை விளக்கிப் பேசினார்.

அப்போது அவர் கூறிய சில விஷயங்களாவன:-

“பாகிஸ்தான் என்ற பேச்சு கிளம்பியதும், அது பலருக்கு அருவருப்பாயிருந்தது. அதை ஒப்புக்கொள்ளவில்லையென்ற காரணத்தால், நம்மில் பலர் பாகிஸ்தான் என்றால் என்ன என்பதைக்கூட தெரிந்துகொள்ள சிரத்தை காட்டவில்லை. போகாத ஊருக்கு வழி கேட்பானேன் என்ற எண்ணந்தான்!

ஆனால் பாகிஸ்தான் என்பதுதான் என்ன? இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள இடங்களில் அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் தனி மத்ய சர்க்காரின் கீழ் இருக்க வேண்டும் என இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த ஒரு கட்சியர் அல்லது சமூகத்தார் கேட்கின்றார்கள். இதுதான் பாகிஸ்தான்.

இந்த யோசனை இந்திய ஒற்றுமைக்கு நல்லதல்ல என்று காங்கிரஸ் சொல்லிவந்தது. ஆனால் முஸ்லிம் லீக் இதை நம்பவில்லை. தனி மத்ய சர்க்கார் அளிக்க உடன்பட்டால்தான் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என்று வற்புறுத்துகிறது.

பிரிட்டிஷ் ஆட்சி உள்ளவரை ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமை சாத்தியமில்லையென்று காந்திஜி சொல்கிறார். இந்தியாவில் ஒற்றுமை ஏற்படாவிடில் பிரிட்டிஷார் போகமாட்டார்கள் என்று நான் சொல்லுகிறேன். காந்திஜியும் இதே மாதிரி சொல்லியிருக்கிறார். ஒற்றுமை ஏற்பட்டால்தான் பிரிட்டிஷார் போவார்கள். பிரிட்டிஷார் போனால்தான் ஒற்றுமை ஏற்படும். இப்படியிருக்கிறது விஷயம். பைத்தியம் தெளிந்தால்தான் கல்யாணம் ஆகும். கல்யாணம் ஆனால்தான் பைத்தியம் தெளியும் என்ற மாதிரி இருக்கிறது இந்நிலைமை!

ஆகவே இதற்கு ஒரு வழிதான் உண்டு. நான் காரியவாதியாகையால் பொதுவாக ஒப்புக்கொள்ளப்படும் இந்த தத்துவத்துக்கு ஒரு யோசனை கூறுகிறேன். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பது வடமேற்கிலும் வடகிழக்கிலும்தான். இப்போது நம்முடன் சேர்ந்து ஜப்பான்காரனோடு சண்டை பிடித்து ஜெயித்த பிறகு தனியாக அவர்களுக்கு ஒரு மத்ய சர்க்கார் வேண்டுமென்று கேட்டால் கொடுக்கிறோம் என்று சொல்லுவதில் என்ன ஆட்சேபணை. ஒரு குடும்பத்தில் சகோதரர்களுக்குள் பிரிகிறவர்களை எப்படி கட்டாயப்படுத்த முடியும்! கூடி இருக்கத்தான் வேண்டுமென்று கட்டாயப்படுத்தினால் அது முடியாது. பிரிந்துவிடவே முற்படுவார்கள். இதற்கு பதிலாக இஷ்டப்பட்டால் பிரிந்து போகலாமென்று சொல்லிவிடுங்கள் – இன்னும் 10 நாட்கள் தங்கிவிட்டுப் போவார்கள். ஆகையால் பாகிஸ்தான் உரிமையை நாம் தடுக்க முடியாது.

5 கிராமங்கள் தர துரியோதனாதிகள் மறுத்தனர்; பாரதப்போர் நடந்தது. முடிவு என்ன? இந்த உதாரணத்தில் கேட்டதை கொடுக்க மறுத்தோர் துரியோதனாதிகளாக இருப்பதை கவனியுங்கள்.

இதை நான் சொல்லுவதற்காக என்னைச் சிலர் கலகக்காரன் என்கிறார்கள். பிறருடைய சுதந்திரத்தை எவன் பறிக்க விரும்புகிறானோ அவன்தான் கலகக்காரன். ஒரு கூட்டத்துக்கே பலாத்காரமாக சுதந்திர உரிமை அளிக்க விரும்பாதவர்கள்தான் பெரும் கலகக்காரர்கள்’

– ஸ்ரீ. எஸ். ராமநாதன் பிரேரிக்க, டாக்டர் பி. சுப்பராயன் ஆமோதிக்க, சென்னை சட்டசபைத் தலைவர் ஸ்ரீ. புலுக சாம்பமூர்த்தி கூட்டத்திற்கு அக்ராசனம் வகித்தார்.

**

நன்றி : தினமணி,  தாஜ்

**

இதையும் வாசிக்கலாம், குண்டுகளைத் தூக்கியெறிந்து விட்டு :

ஜின்னாவும் விடுதலையும் – ஏ.ஹெச். ஹத்தீப்