‘மௌனி’, ‘மல்லாக்கொட்டை’ என்று தட்டச்சு செய்து அனுப்பிவைத்த கவிஞர் தாஜை கடுப்படித்தது நல்லதாகப் போயிற்று. ஒரு முத்து கிடைத்தது. வேறென்ன, அவசியமான கட்டுரைகள்தான், இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அவைகள் ஏற்கனவே இணையத்தில் இருக்கின்றனவே… வேர்க்கடலை இங்கே இருக்கிறது. செம்மங்குடி மௌனி 10 வருடம் முன்பே செம்மையாக திண்ணையில் உட்கார்ந்துவிட்டார். இப்படித்தான் நண்பர் உமா வரதராஜனின் அற்புதமான சிறுகதையான ‘அரசனின் வருகை’யைப் பதியலாம் என்று நினைத்தேன். அவரிடம் அனுமதியும் வாங்கினேன். ஆனால் அவருக்கென்று தனியாக தளம் இருப்பது அப்புறம்தான் தெரிகிறது. அதே கதை நண்பர் ‘அழியாச்சுடர்கள்‘ ராமின் வலைப்பதிவிலும் இருக்கிறது. திருப்பித்திருப்பி பதிவிட்டு என்னங்க பிரயோசனம்? ‘யோவ்.. அவசியமான செய்திய்யா… நம்ம பையங்க தெரிஞ்சிக்கனும்’ என்று தாஜ் சொன்னதை நான் காதில் போட்டுக்கொள்ளவேயில்லை. நண்பர் சாதிக் மூலமும் தூதுவிட்டார் ஆள். மசியவில்லை. ரொம்ப கோபமாகிப்போய் , உடனே ‘நாங்கள்’ அனுப்பிவிட்டார்! ஆ, இதுதான் வேணும் தலைவரே!
தாஜின் ‘மேடும் பள்ளமும்’ சிறுகதையைப் படித்துவிட்டு அப்துல் ரஹீம் என்ற சகோதரர் , ‘Dear Sir, I READ YOUR STORY IN ABDHEEN.COM. ITS VERY INTERESTING. TODAY`S MUSLIM POSITION IS THE SAME WHAT IN 1987. THEY WERE SEPERATED THEIR FAMILY, RELATION AND FREINDSHIP. THEY EARN MONEY, BUT THEY SPEND MORE PRICE FOR THAT. BIG ONE IS THEIR YOUNGER AGE. THE STORY MEDU PALLAM IS VERY NICE. YOUR EDHARTHA NADAI IS VERY NICE. ‘ என்று அழகான தமிழில் பாராட்டியிருந்தார். ‘நாங்கள்’ படித்தால் அவர் மட்டுமல்ல நீங்களும் தாஜின் வலியை உணரலாம் என்று நம்புகிறேன். வசதியான இடங்களில் உட்கார்ந்துகொண்டு ‘வாழும்’ தத்துவங்களைப் பொழியும் நண்பர்கள் அவசியம் தாஜை படிக்கவேண்டும். அப்போதுதான் அடிக்கடி நான் கோபிக்கலாம்!
நன்றி கவிதாசா!
ஆபிதீன்
***
தாஜின் குறிப்புகள்:
மார்ச்-1983, ‘தமிழ்ப்பூக்கள்’ இதழில் வெளிவந்த கதை இது.
‘அல்ஹோட்டி எஸ்டாபிளிஸ்மெண்ட்’ (அல்கோபர்-சௌதி அரேபியா) என்கிற ‘க்ளீனிங் மெயின்டனன்ஸ்’ கம்பெனியில் நான் முதன் முதலில் வேலைக்குச் சென்றபோது, வேலை தெஹ்ரானில் [Dhahran (Arabic الظهران aẓ-Ẓahrān) ] உள்ள ‘ARAMCO‘ (Arbian-American Oil Company) ஹெட்-ஆபீஸில்! பணியெடுப்பவர்களைக் கண்காணிக்கும் கங்காணி வேலை. சூப்பர்வைஸர் என்றும் சொல்லிக்கொள்ளலாம்! எங்களது கம்பெனியின் அறுபது வேலையாட்கள் பணிபுரிந்த அந்த இடத்தில் இரண்டு சூப்பர்வைசர்கள். அதில் ஒன்று நான்.
அல்கோபருக்கும்-தெஹ்ரானுக்கும் இடைப்பட்ட இடத்தில் உள்ள துக்பாவில் எங்களுக்கான தங்குமிடம் இருந்தது. மூன்று தளம் கொண்ட பெரிய வீடு அது. ஏகப்பட்ட ரூம்கள்! என்னையும் சேர்க்க தமிழ் பேசிய ஏழுபேர்களோடு, அரைகுறை தமிழ் பேசிய ஒரு ‘கோவா’னியுமாக எட்டு பேர்கள். முதல் தள ரூம் ஒன்றில் தங்கி இருந்தோம். அந்த எட்டு பேர்களும் தனித்தனி குணாதிசயம் மிக்கவர்கள். அவர்களது அந்த வித்தியாசப்போக்கு எனக்குப் பிடித்திருந்தது. மறக்க முடியாத நண்பர்கள் அவர்கள்.
அடுத்த வருடம் எனக்கு பிரமோசன் கொடுத்து, ‘ரஸ்தனூரா’ என்கிற இடத்திற்கு அனுப்பினார்கள்.
தெஹ்ரானில் இருந்து அறுபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அந்த ஊர்! சௌதியின் மிகப் பெரிய பெட்ரோல் ஃபீல்ட் அங்கேதான் உள்ளது. ‘ஷியா முஸ்லிம்கள்’ அதிகத்திற்கு அதிகமாக வாழும் பிரதேச எல்லைக்குள் அந்த ஊர் இருப்பது குறிப்பிடத் தகுந்தது. சௌதியின் மொத்த ஜனத் தொகையில் ‘சுன்னி முஸ்லிம்’களே அதிகம். அரசும் அவர்கள் சார்ந்த அரசுதான். ஆனால் பாருங்கள் , அவர்களது இறைவன் அந்நாட்டின் பெட்ரோல் செல்வத்தை, ஷியா முஸ்லிம்களுக்குட்பட்ட பிரதேசக் கடலில் என்று ஆசீர்வதித்து இருக்கிறான்!
ரஸ்தனூரா என்கிற டவுன், அரசால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட டவுன். ஜித்தாவிலிருந்து சுன்னி முஸ்லிம்களைக் கொண்டுவந்து இங்கே குடியமர்த்தி, வேலையும் தந்திருக்கிறது அரசு! அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த ஷியாக்களுக்கு அஞ்சிய அரசு, பெட்ரோல் ஃபீல்டுக்கான பாதுகாப்பு பொருட்டு புதிய நகர நிர்மாணத்தையும் சுன்னி முஸ்லிம்களைக் கொண்டு குடியமர்த்தலையும் செய்திருக்கிறது. இதனூடே இன்னும் சொல்ல ஏக செய்திகள் உண்டு. என்றாலும், வேண்டாம். அது சௌதியின் அரசியல் சார்ந்த சங்கதிகளாக நீளும்!
ஷியாக்களின் கேந்திர நாடான இரானை அழிக்க சௌதி அரசு அமெரிக்காவுடன் சமீபகாலமாகப் பேசிக்கொண்டு இருக்கும் அந்த ரகசித் தகவல்களை ‘விக்கிலீக்ஸ்‘ இணைய தளம் சமீபத்தில் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதை, என் குறிப்புகளோடு பிணைத்தால்… உங்களுக்கு பல அனுமானங்கள் கிட்டும்.
ARAMCO- நிர்வாகத்திற்கு உட்பட்ட ஒரு ‘பாலிடெக்னிக்’ ரஸ்தனூராவில் உள்ளது. அந்தக் கட்டிட மெயின்டனன்ஸிற்காக முப்பது வேலையாட்களோடு, தனி சூப்பர்வைஸர் என்கிற கோதாவில்தான் நான் அங்கே போனேன். ரஸ்தனூராவில் எனக்கு வேலை என்பது வெறும் அதிகார அலட்டலோடு சரி! பொழுது போக எதையாவது செய்யணுமே என நினைத்தபோதுதான் தமிழ்ப்பூக்கள் (கையெழுத்து + ஜெராக்ஸ்) செய்தேன்.
ரஸ்தனூராவில் காலம் தள்ளிய நேரத்தில், முதலில் தங்கியிருந்த இடமும், நண்பர்களும் ஞாபத்தில் கிளைத்துக் கொண்டே இருக்க, எழுதினேன்! தமிழ்ப்பூக்களில் அதைப் பிரசுரிக்கவும் செய்தேன். அதுதான் ‘நாங்கள்’
நேரடி அனுபவங்களை அப்படியே, அசல் யதார்த்தமாக பதிவில் இறக்கும்போது வாசிப்பின் சுவை குன்றிப்போகும் அபாயம் உண்டு. வலுவாக எழுதக்கூடிய சிலருக்குத்தான் அப்படி சுவை குன்றாமல் எழுத இயலும். ஆபிதீன் அதில் கெட்டி! ஆரம்பம் தொட்டே அப்படி எழுத அவர் பழகிவிட்டார்! நண்பர்களையும் அவர்களுடான சம்பவங்களையும் சொல்லியே ஆகணும் என்றான போது, இப்படியான பரிசோதனையில் நானும் இறங்கும்படி ஆனது. ஆனால், என் எதிர்பார்ப்பிற்கு மாறாக இந்த யதார்த்தக் கதை சுவைகூடியே வந்தது.
ஆவணமான இந்தக் கதையை இன்றைக்கு மறுவாசிப்பு செய்த போது இதில் இன்னும் சில சங்கதிகளை சேர்க்கலாம் என்று தோன்ற, தப்பாது சேர்த்தேன். அது மாதிரியே , தோன்றிய கழிவுகளையும் தாராளமாக நீக்கிக் கழித்தேன்.
இப்போது… ‘நாங்கள்’, உங்கள் பார்வையில்!
– தாஜ்
***
நாங்கள்
கவிதாசன் (தாஜ்)
வியாழக் கிழமை…
ஆறு நாட்களின் ஆமை ஓட்டத்திற்குப் பின்னால் வரும் ஓர் இனிமை வந்திருக்கிறது. வேலையில்லை. விடுமுறை இன்று. மெல்ல விழிக்கிறேன்.
மணி பதினொன்று. நண்பர்கள் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏ.சி. கத்துகிறது. எழுந்திருக்க மனம் வரவில்லை.
அரபிக்காரன் அடித்தொண்டையால் கட்டளையிடும் ‘ஹாமி… ஹாமி…’ வேலை நாட்களுக்குப் பின் – இதோ விடிந்து – அதோ போகப் போகிற இந்த வியாழனை அப்படியே நிறுத்திவைக்க முடியுமென்றால்…. ஆசை இனிக்கிறது.
தலையணைக்கு அடியில் கைபோகிறது. தட்டுப்படும் அட்டைக் கொப்பியை எடுத்து திறந்து ஒரு ‘டன்ஹில்’லை உறுவி, தலையுயர்த்தி சாய்ந்துகொண்டு பற்றவைத்துக் கொள்கிறேன்.
புகையிலை கருகி மணக்கிறது. ‘நிக்கோடின் மெல்லக் கொள்ளும் வஞ்சகன்.’ தெரியும். கிசுகிசுக்கும் மன பட்க்ஷியே, தெரியுமா உனக்கு? என்னமாய் மணக்கிறது அது!.
அப்படியே, அந்த நிலையில் இருந்தே, சௌதியில் இருந்து தமிழ் மண்ணுக்கு வந்துவிட்டேன்!
விமானமில்லை; டிக்கட் இல்லை ; அரபியைப் பிடித்து ரீயெண்ட்ரி விசா வாங்கவேண்டிய தொல்லை இல்லை…. இப்படி சிரமமேயில்லாமல் நினைத்த மாத்திரத்தில் ஊர் போய்வர கண்களை சற்றே மூடினால் போதும்!
இதோ, தம்பியிடம் அன்பு வழியப் பேசுகிறேன் , பெற்றோரை வணங்கி புத்தி கேட்கிறேன் , பாட்டியின் முன் ஒரு பூவாகி, உச்சி குளிர முத்தத்தை/ ஆசிகளைப் பெறுகிறேன். மறைந்து வெளிப்படும் மனைவியிடம் நகர்ந்து, அவள் தலை நிறைய பொதிந்திருக்கும் மல்லிகையின் வாசனையில் மயங்குகிறேன்.
அப்புறம், நெருக்கமான நண்பர்களுடன் அளவளாவல். அங்கே தெறிக்கும் ஜோக்குகளுக்கு சிரிக்கிறேன். ‘நல்ல குறத்தி… இரண்டு லைஃபாய் கூட செலவழியும்!’
அவ்வளவுதான். ஒரே ஓர் நாழிதான்! வெற்றிகரமான விஜயம்! இதோ திரும்பி விட்டேன்.
தலையணைக்கு அடியில் மீண்டும் கை போகிறது. நேற்று முந்தினம் வந்த மனையின் கடிதம்! மீண்டும் படிக்க ஆவல் கொள்கிறேன். இப்போதைக்கும் சேர்க்க இருபத்தி மூன்றாம் தடவை! மனனம் கூட ஆகிவிட்டது! என்றாலும், வார்த்தை வார்தையாக சுவைத்துப் படிக்கிறேன். சில வரிகள் நிஜமாகவே என்னவோ செய்கிறது.
‘சென்ற முறை நீங்கள் வாங்கி வைத்துவிட்டு போன ரோஜா செடி, வளர்ந்து தினைக்கும் மொட்டும் பூவும்! தாங்கவில்லை அதன் கொண்டாட்டம்! பனிச் சொட்டச் சொட்ட விடியற்காலையிலேயே இதழ் விரித்து, என்னைக்கண்டு சிரிக்கவுமல்லவா சிரிக்கிறது!’
அவள் கடிதத்திற்கு கொஞ்சம் மழுப்பி , கூடுதலாக சமாதானம் பூசி , இதமாய்ச் சிணுங்கி , இத்தினோண்டுக்கு வெகுண்டு , பின் அடங்கி எழுதி , பதிலாக இன்றைக்கே தபாலில் சேர்த்துவிட வேண்டும்.
வாழ்வை இப்படி தபாலில் நடத்துவது மனதை உறுத்த, பற்றவைத்துப் புகைத்த சிகரெட்டின் கங்கு கையைச் சுட்டது. கவனிப்பு இல்லையெனில் சுடாதா பின்னே?!
சிகரெட்டின் அடிக்கட்டையை ஆஸ்ட்ரேயில் அணைத்துவிட்டு, மீண்டும் புகையுடன் நினைவுகளோடு கைகோர்க்க முனைந்த நாழியில், நிகோடின்…. மெல்லக் கொல்லும் வஞ்சகன்…. சரி, எப்படி இதைத் தலைமுழுகித் தொலைக்க? வருஷா வருஷம் ஜனவரி முதல் நாளில் ‘இனிக் கூடாது’ என்றுதான் சபதம் எடுக்கிறேன். பிறகு… சபதமும் அல்லவா சேர்ந்து புகைகிறது!
என் மீது அன்பு கொண்ட ஓர் ஆன்மீகவாதி, சிகரெட் புகைப்பதிலிருந்து தப்ப எனக்கோர் மார்க்கம் சொன்னார், ‘சிகரெட் பிடிக்கக் கூடாது என்கிற நிய்யத்தோடு, எப்பவும் ‘ஒது’வில் இருந்து வாருங்கள். சிகரெட் புகைக்கணும் என்கிற எண்ணமெழும் போதெல்லாம், இரண்டு ரக்காயத் சுன்னத் தொழுது வாருங்கள். அல்லாவின் உதவியால் சிகரெட் புகைப்பதிலிருந்து நீங்கள் தப்பித்துவிடலாம்’ என்றார்.
இந்த மார்க்கம் ரொம்பப் பிடித்திருந்தது. நல்ல வழியெனவும் உணர்ந்தேன். முயற்சிக்கலாம். புகைப்பதை விட்டுத் தொலைக்கவும், சொர்க்கத்தை நெருங்கவுமான இரட்டை முகாந்திரங்கள் கொண்ட இந்த வழி லாபகரமாகவே பட்டது. யோசிக்கிற போது, நான் விழித்திருக்கும் நேரமெல்லாம் தொழவேண்டியிருக்கும்! அது கூட பரவாயில்லை. நேரம் காலமில்லாமல் அப்படி விழுந்து எழுந்து கொண்டிருந்தால் சிலருக்கேனும் நான் புதிராகப் போகக்கூடும். ஏற்கனவே என்னை எல்லோரும் ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள்! இதனையும் கண்டார்கள் என்றால் தீர்மானத்திற்கே வந்து விடுவார்கள்! என்ன செய்ய?
ரூமிற்கு வெளியே ‘கசகச’வென்று மலையாளிகளின் குரல்கள். எதிர் ரூம் விழித்துவிட்டது. அவர்கள் என்றைக்குமே முன்னதாக விழித்துக் கொள்ளக் கூடியவர்கள்.
தலையைத் தூக்கி , ரூமின் இதர பெட்டுகளை பார்க்கிறேன். எல்லோருமே தூக்கத்தில்.
ஹாஜா – ஹாஜா குத்புதீன் – ஹபீப் – முகம்பது பாரி – ஹலீம் – இஸ்மத் பாட்ஷா – விக்டர் பிண்டோ. அப்புறம் நான். மேலும் கீழும் படுக்கைகள் கொண்ட நாலு கட்டில்கள், எட்டுப் படுக்கைகள். என் ரூமில் எல்லோருமே பாவங்கள்! சௌதி அரேபியாவுக்கு நாங்களும் சம்பாதிக்க வந்திருக்கின்றோம் என்கிற பாவங்கள்! தூங்கட்டும். விழித்துவிட்டால், கம்பெனியை சபிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
தமிழ் வார இதழ் ஒன்று விளம்பரித்திருந்த ‘அக்கரைச் சிறப்பிதழ்’ அறிவிப்பு மெல்ல ஞாபகத்திற்கு வருகிறது.
எழுத வேண்டும். சௌதி என்கிற கானல் நீரைத் தேடி, தாய் நாட்டில் வசிக்கும் நல்ல உத்தியோகத்தையும் இரவெல்லாம் இனிக்கும் மனைவியையும் விட்டு , வீட்டையும் நிலத்தையும் விற்றுவிட்டு , மிதிப்பட்ட கோலமாய் இங்கே வந்து விழுந்து சிதைந்துக் கொண்டிருக்கும் ஜீவன்களைப் பற்றி எழுத்தில் படுசுத்தமாய் – நெருக்கத்தில் – படம் பிடித்துக் காட்ட வேண்டும்.
முடியுமா? பார்க்கலாம். ஆசை விஸ்வரூபம் எடுக்கிறது.
இன்றே எழுத வேண்டும். விட்டால், அடுத்த வியாழன் வரை ஆசையை மூட்டை கட்டிவிடவேண்டும்.
சரி, எழுதலாம். டீ குடித்துவிட்டு சிகரெட் பாக்கெட்டுடன் உட்கார்ந்து விட வேண்டியதுதான். பெண்டாட்டிக்கு ஒரு கடிதம். அக்கரைச் சிறப்பிதழுக்கு ஒரு கதை. கதைக்கான தலைப்பு சிந்தையில் இப்பவே, ‘நாங்கள்’ என்று நர்த்தனம்!
எதிர்ப் படுக்கையின் மேல்தட்டு அசைகிறது. ஹலீம் டேப் ரிக்காடரை உயிர்ப்பித்து, நாகூர் ஹனிபாவுக்கு அனுமதி கொடுக்கிறார். மெல்லவரும் சப்தத்திலும், ‘அல்லா பாட்டு’ தெறிக்கிறது.
வியாழன் காலையில் விழித்ததும் ஹனிபாவை பாடவிடும் இனாம் சேவையை ஹலீம் மறந்தும் தவறவிடுவது கிடையாது.
சற்றைய நாழிக்கெல்லாம், ரூமின் அடக்கமான ஏ.சி.யின் குளிர் பிரதேசத்தில், பூ விழிப்பதைப் போன்று இதர படுக்கைகளில் நண்பர்கள் கண் விழித்திறக்கிறார்கள்.
“டீ போடேண்டா….” – என் அடுத்த படுக்கை, அதற்கு அடுத்த படுக்கையிடம். “இன்னைக்கி நீதான் போடேன்.” சற்றைய நாழிக்கெல்லாம் இருவரிடம் இருந்தும் வழக்கமான – திட்டல்கள்! அவர்கள் இருவரும் ஒரே ஊர்க்காரர்கள். ஒத்த வயதுக்காரர்கள். நண்பர்கள் வேறு! தினைக்கும் அப்பப்ப அவர்களிடையே இதே கூத்துதான்! அவர்கள் திட்டிக்கொள்வதால் பிறருக்குப் பிரச்சனையேதுமில்லை. ஆனால் அவர்கள் சிரித்துப் பேசிக் கொண்டால்தான் ஆபத்து! அவர்களது அந்தச் சிரிப்பில், ரூமில் உள்ள எவனோ ஒருவன் தயவு தாட்சண்யமற்ற சிக்கி கந்தலாகிக் கொண்டல்லவா இருப்பான்!
வழக்கம் போல ஹாஜா எழுந்து டீ போட புறப்பட்டார். அவர் டீ போட்டால், அவரையும் மீறிதான் டீ, டீயாக மாறவேண்டும்! இப்போதைக்கு அவர் போடப் போகிற டீ எந்த ருசியில் இருக்கும்? முதலில் டீ வரட்டும்!
இப்படித்தான் சென்ற மாதத்தில் ஒரு நாள், டீ போடுகிறேன் என்று போய், கெட்டிலை ஸ்டவ்வில் வைத்துவிட்டு ரூமிற்கு வந்து எங்கள் எல்லோருடனும் பேச ஆரம்பித்துவிட்டார் ஹாஜா! இந்தியா தனது பிரஜைகளுக்கு வழங்கியுள்ள பேச்சு சுதந்திரம் முழுமையையும் இவர் ஒருவரே பேசித்தீர்ப்பதாக எனக்கோர் எண்ணமும் உண்டு! பட்டதாரி!. அற்புதமான ஆங்கில இலக்கியங்களைத் தேடிப் படிப்பவர். அன்றைக்குப் பார்த்து அசலான ‘ஊர்பலா’! நேரில் பார்த்த சாட்சியாய் பேசிக்கொண்டு இருந்தார். இடையில் விடுபடும் அதையெட்டிய செய்திகளை ஹாஜா குத்புதீன் எடுத்து கொடுக்க, பேச்சு களைகட்டியது.
அவர் ஊரில், முஸ்லீம் பணக்காரவீட்டு மருமகள் ஒருத்தி, வீட்டில் எடுபிடி வேலைசெய்த வேற்று ஜாதிக்காரன் ஒருவனோடு ஓடிப்போனாள். செய்தி கேள்விப்பட்டு, சிங்கப்பூரில் இருந்த அவள் கணவன் அடுத்த வாரமே ஊர் வந்து, ஆள் பலத்தைத் திரட்டி, பணத்தை வாரி இறைத்து, ஆங்காங்கே துப்பும் வைத்து, ஒரு மாதத்திற்கும் கூடுதலாக ஜில்லா பூராவும் அலைந்து திரிந்து, சல்லடை போட்டு தேடி, கடைசியாக பக்கத்து டவுனில் உள்ள பிரபலமான சினிமா கொட்டகைக்கு சமீபத்துச் சந்தில், ஓர் குடிசையில் கண்டுபிடித்து அழைத்து வந்தார்கள்.
அவளிடம் அவளது கணவன், ‘நான் கேள்விப் பட்டதெல்லாம் வாஸ்தவமா?’ என ஆரம்பித்து ஒன்றுவிடாமல் கேட்டறிந்தப் பிறகுதான் ஆசுவாவம் கொண்டான்! சொந்தபந்தங்கள் வலியுறுத்தலின் பேரில், அவளை விட்டு விடுவதாகச் சொல்லி, பள்ளிவாசல் நாட்டாண்மைப் பஞ்சாயத்தைக் கூட்டுகிறான்! பள்ளிவாசலில் முழங்கிய ‘நகரா’ சப்த அதிர்வால் பள்ளிவாசலின் முன் ஊரே திரண்டு ஆர்ப்பரித்தது!
நாட்டாண்மை பஞ்சாயத்தார்கள், தங்களது பங்கிற்கு அவளை தனியே ஒரு வீட்டில் வைத்து தோண்டி துருவி ஒன்றுவிடாமல் விசாரிக்க, எதையும் மறைக்காமல் பதில் சொன்ன அவள், கடைசியாக அழுத்தம் திருத்தமாக… தான் இழுத்துக் கொண்டு ஓடியவனோடுதான் வாழ்வேன் என்றுவிட்டாள்! நாட்டாண்மையும் பஞ்சாயத்துக்காரகள் செய்தியை சபையில் எதிரெலித்தார்கள். எல்லோரிடத்திலும் நிசப்தம். சபையில் அமர்ந்திருந்த ஜமாத்தார்களில் ஒருவர், அருகில் அமர்ந்திருந்த தன் சக நண்பனிடம் சத்தமாக கைசேதப்பட்டாராம். ‘தெரியாத்தனமா நாமல்லாம் ‘சுன்னத்’ பண்ணிகிட்டோம்டா!’
எல்லாற்றையும் மறந்து, எங்க ரூமே சிரித்தது. அங்கே சமையற்கட்டில்… கெட்டிலில் நீர் கொதித்து, வற்றித்தீர்ந்து, அது பிளந்து, வெடித்து… மலையாளிகள் ஓடிவந்து ரூமைத் திறந்து கத்த, ஏக தடபுடல்!
வெளியே மலையாளக் குரல்களின் வசவுகள். அருவருப்பான வார்த்தைகளினாலான சுத்தமான வசவுகள். கம்பெனியையும், முதலாளியின் மூன்று பொண்டாடிகளையும் ஒரு சேர தாராளமாக வசவுகிறார்கள். பைப்பில் தண்ணீர் வரவில்லையாம்! தெரிந்த சங்கதிதானே! இது எங்கேயும் எப்பவும் சகஜமான ஒன்று! முதலாளி அரபிக்கு அந்தக் கஷ்டம் இல்லையாயென்ன? சும்மாவா அவன் அப்பப்ப கெய்ரோ போகிறான்? சரி பண்ணத்தானே! யாருக்கில்லை கஷ்டம்?
எழுந்து முகம் அலம்ப வேண்டுமென்ற எண்ணம் தள்ளிப் போய்விட்டது. ‘டீ’க்காக எழுந்து உட்கார்கிறேன். சமையற்கட்டிலிருந்து ஹாஜா ‘டீ’யுடன் வருகிறார். முதல் கிளாஸ் எனக்குதான். அத்தனைக்குப் பிரியம் நான்! அவர் படிக்கும் ஆங்கில நாவல்களின் ரசனையான பகுதிகளை, வலியக் கேட்டுச் சிலாகிப்பவனல்லவா நான்! “ஆப்ரிக்க காட்டில் அழிந்துக் கொண்டிருக்கும் ஓர் இனத்தின் கடைசி மனிதனை, ‘ரூட்’ என்ற இந்த நாவலை எழுதி இருக்கும் எழுத்தாளன், அவனைப் பின்தொடர்ந்தறிந்து என்னமாய் எழுதியிருக்கிறான்?” “முழுசா படிச்சு முடித்தப் பிறகு சொல்லு ஹாஜா, தமிழில் அப்படி ஒண்ணெ எழுதிவிடுகிறேன்!”
டீ சூடாக இருந்தது. மிடறு மிடறாகக் குடிக்கிறேன். டீ குடிக்கிறோம் என்கிற நம்பிக்கையால், இப்போது குடிப்பது டீ-யாக இருக்கிறது. டீ குடித்த கையோடு சிகரெட்டை எடுத்துக் கொண்டாகிவிட்டது.
‘நிகோடின் மெல்ல……’ – பட்க்ஷி இப்போது தணிந்த குரலில்.
எல்லோருக்கும் டீ போட்டு தந்த வெற்றிமிதப்பில் நண்பர் ஹாஜா, என்னுடன் பேச உட்கார்ந்துவிடுகிறார். ‘ஊர்பலா’ நெடிவீசத் தொடங்குகிறது. “இதோ இருக்கானே… ஹாஜா குத்புதீன், இவன் ஊர்ல கம்யூனிஸ்டுங்க… அதைப்பற்றி இவனுக்கு என்ன மயிரெ தெரியும்? வால்யூம் வால்யூமா படிச்சாலே புரியாது! அரிவாள்.. சுத்தி… செங்கொடி… தெரிஞ்சா கம்யூனிஸ்ட் பற்றி தெரிஞ்சதா ஆயிடுமா? எங்க தொகுதி எம்.எல்.ஏ. கம்யூனிஸ்ட் தெரியுமுல்ல உங்களுக்கு? அவனோடு இவன் சைக்கிளில சுத்துவான்! அப்புறம் என்னடான்னா, படுவா, கருணாநிதிதான் என் தலைவன்கிறான்!”
நான் காதுகொடுக்கவில்லை. அது அவருக்கு புரிந்துவிட்டது. கவலைப்படாமல், மூலை பெட்டில் துணி மறைப்புக்குள் அசைந்துக் கொண்டிருக்கும் இஸ்மத் பாட்ஷாவிடம், போனார். “ஏன் இவ்வளவு பேசுறே நீ, பேசாம படு” ன்னு அதட்டல் கேட்டது. உடனே ஹாஜா படுத்து ஐக்கியமாகிவிட்டார்! அப்புறம் என்ன? தெரியாது. குசுகுசு பேச்சுதான் காதில் விழும்!
நாகூர் ஹனீஃபாவை அடுத்து சரளா! இஸ்லாமியப் பாடல்களுக்கென்றே வழமையாகிப் போன பிடிப்படாத இசை சங்கதிகளோடு தமிழைக் குழைகிறார் அவர். குரலோ…. குழந்தை!
சரளா பாடி முடித்துக்கொண்ட பிறகு, தமிழகத்தின் அரசியல் கட்சியின் முன்னணி பேச்சாளர் ஒருவர் எதிர் கட்சிகளை இடித்து, நக்கல் அடித்து, குதர்க்கமாய் பேசிக்கொண்டிருக்கிறார்.
தன் முதுகைப் பார்க்க முடியாத சௌகரியம் இருப்பதினாலோ என்னமோ இப்படியெல்லாம் பேசுகிறார்கள்!
கையைத் திருப்புகிறேன். ‘கேஸியோ’ கண்ணைச் சிமிட்டுகிறது. மணி ஒண்ணு பதினைந்து.
ரூம் களைகட்டிவிட்டது! வெகுதூரத்தில் வசிக்கும் முகம் தெரியாத தமிழ் இதயங்கள் இந்த விடுமுறை தினங்களில் இந்த கேம்புக்கு வந்து, சக தமிழர்களை கண்டு பேசி ஆறுதல்பட்டுச் செல்வது வாடிக்கை. காலண்டரில் வியாழக்கிழமையே தவறினாலும், அவர்களது வருகை தவறாது!
சமையற்கட்டில் கறி வேகும் வாசனை. ஹாஜா குத்புதீன்தான் எங்களது சமையல் நாயகன்! சிகரெட் பிடித்தபடி சமையல் கட்டிற்குப் போனேன். ‘எங்கேயா கத்துக்கிட்டே இதே?’ ‘இதுக்கு முன்னாடி நான், லாவோஸில அஞ்சு வருஷம் இருந்தேன்ல!.’
‘கறி குழம்பு வைக்கக் கத்து கொடுய்யா.’ ‘அட, அது ஒண்ணுமில்லிங்க. சட்டியெ ஸ்டவ்வுல வையுங்க. எண்ணையெ கொஞ்சம் விடுங்க. வெங்காயம் இஞ்சி இருந்தா வெட்டிப் போடுங்க. ஆச்சா? அப்புறம் எவ்வளவு குழம்பு தேவையோ அவ்வளவுக்கு தண்ணியை கொதிக்க விடுங்க. மசாலா போட தயக்கமோ குழம்பவோ கூடாது. எல்லாத்துக்கும் ஒரே கலவைதான். மனம் போல அள்ளிப் போடுங்க. உப்ப மறந்திடாதிங்க. மசாலா கலவைத் தண்ணி சூடானதும் கறியெப்போட்டா கறிக்குழம்பு! கோழியைப் போட்டா கோழிக் குழம்பு! அவ்வளவுதான்! வெரி சிம்பிள்! இப்போ கூட பாருங்க , அப்படித்தான் கோழிக் குழம்பு வைத்திருக்கேன். எவனாவது இது கோழி குழம்பு இல்லைன்னு சொல்லச் சொல்லுங்க? சொல்ல முடியாது. ஏன்னா குழம்புல கோழிக்கறி போட்டு இருக்குல!’
‘பாவம்யா இது!’ ‘ஏங்க, வீடா இது? பார்த்துப் பார்த்து பதமா சமைக்கிறதுக்கு? கண்டுக்காம விடுவிங்களா.’
அவரை விட்டு வந்துவிட்டேன்.
‘சாப்பிடலாம்’ என்று பரபரத்தான் விக்டர் பிண்டோ. மூணு மணிக்கெல்லாம் அவன், சீட்டாட நண்பர்களைத்தேடி தூரத்தே போகவேண்டும். இவனிடம் தோற்பதற்காகவே அந்த நண்பர்களும் வாரம் தவறாமல் வா வான்னு இவனைக் கூடுகிறார்கள். இன்னேரம் அவர்கள் இவனைத் தேடிக்கொண்டிருக்கக் கூடும். தோற்பதும்தான் சிலருக்கு எத்தனை சுகம்!
சீட்டுக் கச்சேரி நடைபெறும்போது, சுற்றி அமர்ந்திருக்கும் சக சீட்டாட்டக்காரர்கள், எத்தனைக்கு ரகசியமாக தங்களது கார்டுகளை இறுகப்பிடித்திருந்தாலும், அத்தனை பேர் கைகளிலும் உள்ள அத்தனை சீட்டையும் மிகத் துல்லியமாகச் சொல்வான் எங்கள் விக்டர் பிண்டோ! அதையொரு கலையாகவே கற்றும் தேர்ந்திருக்கிறான்! கோவாக்காரனாச்சே!
கம்பெனியையோ வேலையையோ நம்பி அவன் சௌதியில் இல்லை! வாரம் ஒரு நாள் சீட்டாடினால் போதும் அவனுக்கு! கட்டாயம் மறுநாள் காலையில் பேங்கில் அவனைப் பார்த்துக் கொள்ளலாம். மாதத்திற்கு நான்கு வியாழன். நான்கு டிராஃப்ட்!
எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். ‘பாரியைக் கூப்பிடு’ என்கிற வழக்கமான கூப்பாடு எழுந்தது. பாரி அதே ரூம்தான்! எதிரே… அதோ உட்காந்தும் இருக்கிறார். ஆனால் பாருங்கள் காலையில் இருந்து ரூமில் நடக்கும் நடப்பேதும் அவர் அறியமாட்டார். விழித்ததிலிருந்து எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை எதிரே வைத்து ஏக்கம் கூடி, மெய்மறந்து பார்த்துக் கொண்டே இருக்கிறார்!
இப்போது என்றுதான் இல்லை, இந்த ரூமிற்கு அவர் வந்த நாள் தொட்டு இப்படிதான். டூட்டி முடிந்து வந்து, கைகால் அலம்பிவிட்டு, பெட்டில் அமர்ந்தாரோ இல்லையோ.. எம்.ஜி.ஆர். எதிரில் வந்துவிடுவார்! ரூமே கிடுகிடுத்து சரிந்தாலும், அந்தப் பணியில்தான் இருப்பார்! வேலைக்கு லீவு போட்டுவிட்டுக்கூட எம்.ஜி.ஆரோடு அவர் ஆழ்ந்து விடுவது உண்டு!
எம்.ஜி.ஆர். மீது இவருக்கு இருக்கும் அன்பை எடைபோட, இன்னும் மெஷின் ஏதும் கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை! ‘மெகா மெஷின்’ இதுவென்று ஏதொவொன்றை கொண்டுவந்து எடைபோட முயன்றாலும் அது நொறுங்கிப் போவது நிச்சயம்!
நான் பாய் விரித்து பேப்பர் போட, விடிகாலையில் போய் மூன்று வீட்டுகளில் பார்ட் டைம் ஜாப் முடித்துவிட்டு வந்திருக்கும் ஹபீப் சமைத்த உணவு வகைகளை கொண்டுவந்து வைக்க, வெளி நண்பர்களும் ரூம் நபர்களும் உட்கார இடம் கொள்ளவில்லை! ஹலீம் சாப்பாடு பரிமாறினான். அளவோடு அலுக்காமல் பரிமாறுவதில் அவன்தான் கெட்டி! ஒரு வழியாய் சாப்பாடு ஆனது! சாப்பிட்ட கையோடு, அத்தனை பேர்களும் சொன்ன ஒரே வார்த்தை, ‘கோழி குழம்பு பிரமாதம்!’
ரூம் புகை மயம்! எல்லோர் கைகளிலும் ‘ரோத்மன்ஸ்’ புகைகிறது. பேச்சில் தமிழ் நாட்டு அரசியல் அமக்களப்படுகிறது. சைபீரியாவுக்கே போனாலும் நம் நிறத்தை மாற விடமாட்டோம். வந்திருந்த நண்பர்களின் பேச்சு, சற்றைய நேரத்திற்கெல்லாம் திசை மாறி, புலம்பலாக வெளிப்பட்டது!
“என் கம்பெனியில் சம்பள உயர்வே தரமாட்டேன்கிறான்பா!” “எனக்கு பம்பாயில அக்ரிமெண்ட் செய்யும் போது, ஆயிரத்தி இரநூறுக்கு செய்தானுங்க.. இங்கே வந்ததிலிருந்து ஐநூறு ரியால்தான் கொடுக்கிறானுங்க!” “அட போங்கப்பா, உங்களுக்கெல்லாம் சம்பளமாவது கிடைக்குது. என் கம்பெனியில் சம்பளமே தரலே, மூணுமாசமாச்சு! கஃபிலை பார்த்து கேட்கலாமுண்னா, அவன் நாலாவது கல்யாணம் செய்துக்க ஹைதராபாத் போயிட்டான். கடனவுடன பட்டு ‘குப்ஸ்’ சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம்.”
“நீங்களெல்லாம் சம்பளத்த பேசுறீங்க. இதோ பாருங்க என் கையை! கேபிள் போட தினைக்கும் பள்ளம் வெட்டி… ச்சை,. நாலு பேரை பார்க்கக்கூட வெட்கமா இருக்கு.” “இதில என்ன வெட்கம் வேண்டியிருக்கு? வேலை செய்யத்தானே வந்திருக்கோம்! ‘அல்-ஸாகிரியில போய் பாரு…. நம்ம பக்கத்து பணக்கார வீட்டுப் பசங்கள்ல எத்தனை பேர் தெருக் கூட்ட வந்திருக்காங்கன்னு!” “அப்படியா!?” “என்ன அப்படியா… போய் பாரு… பி.ஏ., பி.காம்லாம் அங்கே சர்வ சாதாரணம்!” “வக்கீலுக்கு படிச்ச நம்ம பக்கத்து பையன் ஒருத்தன் சீயத் கோழிப் பண்ணைக்கு வந்து, முட்டை பொறுக்குறான்பா!”
எல்லோரும் ‘உச்சு’ கொட்டுகிறார்கள். அதற்கு அனுதாபம் என்று அர்த்தம்!
நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒருத்தர் மாற்றி ஒருத்தர் இப்படியே. பொறுத்துப் பொறுத்து பார்க்கிறேன். பொறுக்க முடியவில்லை…
“எல்லாவற்றையும் தெரிஞ்சி, எல்லாத்திற்கும் உட்பட்டுதானே காசு… காசுன்னு இங்கே இன்னும் இருக்கோம். அப்புறம் என்ன ஒப்பாரி? இன்னிக்காவது சந்தோஷமா விடுமுறையை கழித்தால் என்ன?” – நான் கத்துகிறேன். எல்லோரும் என்னை கேள்விக் குறியோடு பார்க்கிறார்கள்.
கோபப்பட்டிருக்கக்கூடாது. சொந்த தகிப்பை ஆற்றிக் கொள்ளத்தானே இங்கே வருகிறார்கள்.. நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. வருத்தமாக இருந்தது. அவர்களது பாஷையில் அவர்களோடு இழைந்து பேசி, என் பங்கிற்கு நானும் அவர்களின் கஃபில்களை ஏகதாளத்தில் திட்ட, அவர்களுக்கு மகிழ்ச்சி இப்போது.
எழுதவேண்டும் என்ற நினைப்பைக் கழற்றி, மன ஹாங்கரில் மாட்டிவிட்டு, ரூமை விட்டு புறப்பட்டேன்.
வெளியே இரவின் இளம் முகம். கையில் புகையும் சிகரெட்.
எங்கே புறப்படுகிறேன்? அடுத்த வியாழனைத் தேடியா? பிடிபடவில்லை.
*
(தமிழ்ப் பூக்கள்/ மார்ச்-1983)
*

தவிர்க்க முடியாத கூடுதல் திருத்தங்களோடு, தட்டச்சும் – தாஜ் | E-Mail : satajdeen@gmail.com
11:38 AM 6/12/2010