மூன்றாவது வழிபாட்டுப் பாடல் – மஹ்மூத் தர்வீஷ்

 mahmoud-darwish

புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2008 இதழிலிருந்து, நன்றிகளுடன்.
ஆங்கிலம் வழி தமிழில் : புதூர் இராசவேல்

*

 மூன்றாவது வழிபாட்டுப் பாடல் –  மஹ்மூத் தர்வீஷ்

எனது சொற்கள்
மண்ணாய் மணத்த நாளில்
கோதுமைத் தாள்களின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
கொதித்துச் சீறிய நாளில்
இரும்புத் தளைகளின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
கற்களாய் உறைந்த நாளில்
தழுவிச் செல்லும் ஓடையின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
கலகமாய்க் கிளர்ந்த நாளில்
நடுங்கும் நிலத்தின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
புளித்த ஆப்பிளாய் சுருங்கிய நாளில்
நம்பிக்கை தளரா உள்ளங்களின்
நண்பனாயிருந்தேன்.

ஆனால்
சொற்கள் தேனாய்ச் சுரந்த தருணத்தில்…
ஈக்கள் மொய்த்தன
என் உதடுகளில்!

**

மஹ்மூட் தர்வீஷ் கவிதைகள் – தமிழாக்கம்: எம்.ஏ.நுஃமான்