‘நெஞ்சமெலாம் பதறுதடி மகளே’

சுவர்க்கத்தில் உனைக்காண ஆசை!
——————————————————
அஷ்ரஃப் சிஹாப்தீன்

நெஞ்சமெலாம் பதறுதடி மகளே
நெடு துயிலுக் குனையாக்கி விட்டார்
அஞ்சாமல் நொந்தோர்க்கு உதவும்
அருமந்த மகளுன்னைக் கொன்றார்
வஞ்சகர்க்குத் தர்மமிலை என்னும்
வார்த்தையினை மீளெழுதிச் செல்வோர்
எஞ்சார்கள் என்பதனை மட்டும்
எதிர்கால வரலாறு பேசும்!

ஆயுதத்தில் அதிகாரம் வைத்து
ஆடியவர் கதைகளினை அறிவாய்
பேயுலவும் காடுகளைப் போலிப்
பெரு நிலத்தை ஆளவந்தோர் அழிந்தார்
தாயுமென ஆனமகள் உன்னைத்
தரையினிவே வீழ்த்தி மகிழ்ந்திட்ட
நாயுமென அலைகின்ற கூட்டம்
நாசமுறும் நாளொன்றைக் காண்போம்

என்நெஞ்சு தீய்கிறது மகளே
எத்தனை நாள் துயரிலே துவள்வோம்
பொன் பொருளை விடப் பெரிய செல்வப்
பிள்ளைகளை இழப்பதுவே விதியா
உன்னைப்போல் ஆயிரம்பேர் எழுவர்
உள்ளதொரு ஆறுதல்தான் மீதம்
முன்னாலே முகங்காணா போதும்
சுவர்க்கத்தில் உனைக்காண ஆசை!

Razan al Najar -1

(காஸா எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்ட மருத்துவத் தாதி ரஸான் நஜ்ஜாருக்கு..)

*

Thanks to : Ashroff Shihabdeen (fb)

வேறு என்னதான் செய்ய…? – தாஜ்

ARPITA CHAKRABORTYயிடமிருந்து நண்பர் சாதிக் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்த இமேஜ் இது. கீழேயுள்ள பத்தி நண்பர் தாஜ், அவருடைய ஃபேஸ்புக்கில் (20th Nov 2012) போட்ட ஸ்டேட்டஸ். அல்லாஹ்விடம் அவர் துஆ கேட்கும் ஸ்டேட்டஸும் இதுதான். ஆன்மீகவாதிகளிடம் கேட்டால் அழிவு நடப்பதற்கு ஓர் அர்த்தமிருக்கும் என்பார்கள். ஹூம்ம்ம்.. – ஆபிதீன்

***

பாலஸ்தீன் போர் ஓயவேண்டும் , சமாதானம் தழைக்க வேண்டும்
தாஜ்

பாலஸ்தீன் பிரச்சனைக் குறித்து நான் பதிவு ஏதும் போடாததில் என் நண்பர்கள் சிலருக்கு மனத்தாங்கள் உண்டு. உலக அரசியலில் நான் வெகுகாலமாக கூர்ந்து கவனிக்கும் பிரச்சனைகளில் இந்த பாலஸ்தீன் பிரச்சனையும் ஒன்று. தவிர அந்தப் பிரச்சனையின் முன் தொடர்புகள் குறித்து மூத்த பெரிசுகளிடம் நிறைய தெரிந்ததும் உண்டு. அது குறித்த வாசிப்பும் செய்திருக்கிறேன். நான் சௌதியில் இருந்த போது இப்பிரச்சனையில் அதிகம் கவனம் செய்த எகிப்து  நாட்டினரிடம் வலியப் பேசி உள்ளார்ந்த சங்கதிகளை கேட்டும் அறிந்திருக்கிறேன்.

மதத்தை முன் வைத்தும் பகைமை முன்வைத்தும் உலக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நீண்ட ஆண்டுகளை கொண்ட போர் ஒன்று உண்டென்றேல் அது இதுவாகத்தான் இருக்கும்.

இஸ்லாம் தொடங்கிய காலத்தில் இருந்தே  யூதர்களை எதிரிகளாக நிறம் காட்டப்படுகிறது. அந்த அளவுக்கு அந்த மக்களும் கொடூர சிந்தை கொண்டவர்களாக இருந்தும் இருக்கிறார்கள். இஸ்லாத்திற்கு மட்டுமல்ல, கிருஸ்துவத்திற்கும் அவர்கள் எதிரிகள்தான். ஏசுவை காட்டித்தந்ததே யூதர்கள்தான் என்று கிருஸ்துவின் சரித்திரம் சொல்கிறது. எல்லோரிடமும் பகைமை பாராட்டும் அளவில் அவர்களை அலைக்கழித்தது அவர்களது அதிமிஞ்சிய அறிவுதான் என்றொரு பேச்சு உண்டு.

முதல் இரண்டாம் உலக போர்களின் போது, அமெரிக்காவின் ஸ்நேகிதராகி ஹிட்லருக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்ததினால்
அந்த மக்கள் பெரிய இழப்பை எதிர் கொண்டார்கள் என்பது எல்லோரும் அறிந்த சரித்திர உண்மை. இன்னொரு பக்கம் அன்று தொட்டு அவர்கள் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகியும் போனார்கள் என்பது இன்னொரு சரித்திர உண்மை. இன்றைக்கும் அமெரிக்காவின் முதன்மை நேச நாடு அது.

எகிப்தில்  நாசர் ஆண்ட போது, பாலஸ்தீன் மக்களுக்காக அவரது நாடும் மக்களும் கிளர்த்தெழுந்து யூதர்கள் மீது படையெடுத்து, கடையில் யூதர்களிடம் சமாதானம் பேச வேண்டிய நிலை. அந்த அளவுக்கு எகிப்து படை போரில் பெரிய இழப்பை சந்தித்தது. இன்றைக்கு அவர்கள் இஸ்ரேலுடன் வலிய நட்பு பாராட்டுபவர்களாக இருக்கிறார்கள். ஒரு  பெரிய இஸ்லாமிய நாட்டின் இந்த நிலை, பிற அரபு நாடுகளுக்கு ஓர் பாடமாகவும், மௌனிக்கவும் செய்துவிட்டது. அங்கே அமைதி நிலவ அமெரிக்காவையே அரபு நாடுகள் அன்ணாந்து பார்க்கும் படிதான் இருக்கிறது.

இத்தனைக்கும் இஸ்ரேல் கையகல நாடு. இது இஸ்லாமியர்களுக்கும் யூதர்களுக்கும் சொந்தமான பூமி. ஆதி கணக்குப் படி இருவர்களுமே ஒருதாய் வயிற்று மக்கள். மத எழுச்சிகளுக்குப் பிறகு அவர்களுக்குள் பகைமை தானாகவே வளர்ந்துவிட்டது. இந்தப் பிரச்சனை உட்கார்ந்து பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை. மாட்டேன் என்கிறார்கள். பலதரம் பேசி சமாதானம் ஆன போதும் கூட எழுத்தில் அதனை அழித்து விடுகிறார்கள். உலகப் பொருளாதார அரசியல் பொருட்டு சில வல்லரசுகளும் கூட இந்த இரு மக்களின் சமாதான வாழ்வோடு விளையாடுபவர்களாக இருக்கிறார்கள்.

என் வயதில், இந்த இரு மக்களுக்கிடையே ஆன சச்சரவு இது எத்தனையாவது தடவை என்று எண்ண முடியாத நிலை.

இத்தனைக் காலமாய் மாறி மாறி, விட்டு விட்டு நடந்தேறிய போரினால் ஆன இழப்புகள்இந்த இருதரப்பு மக்களுக்கும் உறைக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். மதம் அவர்களது கண்களையும், மூளையையும் கட்டிவிடுகிறது!

மானுட நாகரீகம் பொருட்டேனும் இந்த மக்கள் சமாதானமாக போக வேண்டும். இனியேனும், வல்லரசுகள் இவர்கள் இடையே அரசியல் நிகழ்த்தக் கூடாது.

இப்போது நடைப்பெற்று கொண்டிருக்கும் சச்சரவில் மாண்டு போகிறவர்கள் குறித்து அனுதாபம் அதிகம்.

இன்றைக்கு இந்த இரு மக்களுக்கிடையே எகிப்தில் நடைப் பெற்றுக் கொண்டிருக்கும் சமாதான பேச்சு வார்த்தை வெற்றிபெற வேண்டும்.

‘பாலஸ்தீன் போர் ஓயவேண்டும்
சமாதானம் தழைக்க வேண்டும்.’

நானும், இதற்காக வேண்டி ‘அல்லாவிடம்’ துவா செய்கிறேன்.

வேறு என்னதான் செய்ய…?

***

நன்றி : தாஜ்

***

தொடர்புடைய கவிதை :

மூன்றாவது வழிபாட்டுப் பாடல் – மஹ்மூத் தர்வீஷ்

பாலஸ்தீன மக்களை யாராலும் தோற்கடிக்க முடியாது – அ. முத்துக்கிருஷ்ணன் நேர்காணல்

’சமநிலைச் சமுதாயம்’ இதழில் (May 2011) வெளிவந்திருந்த நேர்காணல் ’பழனிபாபா’  தளத்தில்  ஜூலை2011-ல் வெளிவந்துள்ளது. சுட்டி : http://www.palanibaba.in/2011/07/blog-post_4158.html . ’பாலஸ்தீனப் பயண அனுபவங்கள்’ என்ற தலைப்பில் நண்பர்அருள்மொழியின் தளத்திலும் இருக்கிறது.  கீழே பதிவிட்டிருப்பது ‘சமநிலைச்சமுதாயம்’ இதழில் வெளிவந்த நேர்காணலின் இமேஜ் கோப்புகள். ‘ஆபிதீன் பக்கங்களில் அவசியம் ஏற்று’ என்று அனுப்பிவைத்த ஹனீபாக்காவுக்கு  நன்றிகள்.

***


 

***

நன்றி : ’சமநிலைச் சமுதாயம்’ , அ.முத்துக்கிருஷ்ணன், எஸ்.எல்.எம். ஹனிபா காக்கா

***

தொடர்புடையவை :

கார்ட்டூனிஸ்ட் நஜி-அல்-அலி : கனன்றெரியும் கோடுகள்

மூன்றாவது வழிபாட்டுப் பாடல் – மஹ்மூத் தர்வீஷ்

மூன்றாவது வழிபாட்டுப் பாடல் – மஹ்மூத் தர்வீஷ்

 mahmoud-darwish

புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2008 இதழிலிருந்து, நன்றிகளுடன்.
ஆங்கிலம் வழி தமிழில் : புதூர் இராசவேல்

*

 மூன்றாவது வழிபாட்டுப் பாடல் –  மஹ்மூத் தர்வீஷ்

எனது சொற்கள்
மண்ணாய் மணத்த நாளில்
கோதுமைத் தாள்களின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
கொதித்துச் சீறிய நாளில்
இரும்புத் தளைகளின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
கற்களாய் உறைந்த நாளில்
தழுவிச் செல்லும் ஓடையின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
கலகமாய்க் கிளர்ந்த நாளில்
நடுங்கும் நிலத்தின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
புளித்த ஆப்பிளாய் சுருங்கிய நாளில்
நம்பிக்கை தளரா உள்ளங்களின்
நண்பனாயிருந்தேன்.

ஆனால்
சொற்கள் தேனாய்ச் சுரந்த தருணத்தில்…
ஈக்கள் மொய்த்தன
என் உதடுகளில்!

**

மஹ்மூட் தர்வீஷ் கவிதைகள் – தமிழாக்கம்: எம்.ஏ.நுஃமான்

« Older entries