‘Daiva Sneham Varnichidan’ – K. J. Yesudas
*
Thanks to songs of love & Sabu
தொடர்புடைய பதிவு :
23/12/2009 இல் 11:51 (நிஜாமி)
ஈஸா நபியும் இறந்த நாயும்
நிஜாமியின் கவிதை
(ஆர்.பி.எம்.கனி அவர்களின் ‘பாரஸீகப் பெருங்கவிஞர்கள்’ நூலிலிருந்து…)
ஒருநாள் மாலை ஈஸா நபி (அலை) கடைவீதியில் நின்றார்கள்,
மக்களுக்கு நீதிபோதனை புரிந்துகொண்டு.
அங்கொரு மூலையிலே ஒரு கூட்டம் கூடிற்று;
விகாரமான கூச்சல்கள் அங்கிருந்து எழுந்தன.
ஈஸாவும் அவர்கள் சீடர்களும்
கூச்சலுக்குக் காரணம் காணச் சென்றனர்.
அங்கே சாக்கடையின் அருகே ஒரு செத்த நாய்;
காணச் சகியாத காட்சி அது.
ஒருவன் மூக்கைப் பிடித்து நின்றான்;
கண்ணைமூடி நின்றான் இன்னொருவன்;
ஒருவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
கூட்டத்தினர் இரைந்தனர்:
‘என்ன அசிங்கமான மிருகம்!
பூமியையும் காற்றையுமே நாற்றமாக்கிவிட்டதே!
கண்கள் அழுகிவிட்டன;
அதன் காதிலிருந்தும் துர்வாடையடிக்கிறது.
விலா எலும்புகளோ வெளியே தெரிகின்றன.
அதன் கிழிந்த தோலிலே ஊசி குத்தவும் இடமில்லை.
இந்தக் கேடு கெட்ட நாய்
எங்கேயோ திருடிவிட்டு அடிபட்டிருக்கிறது.’
பின்னர் ஈஸா (அலை) சொன்னார்கள்;
‘அதன் பற்களின் வெண்மையின் முன்னே
வெண் முத்தும் இருண்டுவிடும்’ என்று.
கூடிநின்ற கூட்டம் மௌனமாயிற்று;
தலை கவிழ்ந்தது –
தம்மைவிட உயர் ஞானமுள்ளோரின்
பார்வையில் இகழ்ச்சியடைந்தவர்கள் போல.
அவர்களில் ஒருவன் சொன்னான்:
‘இத்தகைய இழிந்த பிராணியிலும்
ஏதாவது நல்லதைக் காணும் சக்தி
அன்புடையோர் கண்களுக்கே உண்டு’ என்று.
*
26/03/2009 இல் 09:14 (நிஜாமி, பாரஸீகக் கவிஞர்கள்)
‘Khusraw and the Lion’ painting : The twelfth-century poet Nizami’s romantic epic describing the love of king Khusraw for the princess Shirin is one of the most popular works in the Persian language. This illustration, from a manuscript of 1632, depicts Khusraw defending Shirin by killing a lion bare-handed. Since this took place at night, the artist – Riza ‘Abbasi, the greatest painter at the court of Shah Abbas I (r. 1587-1629) – has shown Khusraw in his night-clothes.
***
ஆர்.பி.எம் கனி அவர்கள் எழுதிய ‘பாரஸீகப் பெருங்கவிஞர்கள்’ (1955ல் வெளியானது) என்ற அருமையான புத்தகத்தை E.M. அலி மாமா அவர்களிடம் ஒருநாள் இரவல் (படிப்பதற்குத்தான்!) கேட்டபோது ‘நல்ல புத்தகத்த காசு கொடுத்து வாங்காம ‘ஓசி’ கேட்குறவன்ற ஒரு கையை வெட்டனும்’டு ஒரு பாரசீக பழமொழி இக்கிதுங்குனி, தெரியுமா ?’ என்று கேட்டார்கள். அல்லாஹ்வே.. ஆனால் கொடுத்தார்கள். என் வாப்பாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அவருடைய நானா E. M நெய்னா மாமாவும்தான். வாப்பாவின் நண்பர்கள் எல்லாம் இலக்கியம் தெரிந்தவர்கள். மகன்தான் இப்படி ஆகிப்போனேன்!. போகட்டும், அலிமாமா, நெய்னா மாமாவும் , ‘லால்கௌஹர்’ நாடகம் தந்த பெரும்புலவர் நெய்னா முஹம்மது அவர்களின் பேரர்கள் ( உமர்கய்யாமின் ‘ருபாயியத்’ஐ நேரடியாக ·பார்ஸியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் நெய்னா மாமா என்று ‘சொல்லரசு’ ஜாபர் மெய்தீன் மாமா சொல்வார்கள்). எத்தனை மாமாக்கள்! பழமொழி தந்த பயத்துடன் ஒரே நாளில் படித்துமுடித்து திருப்பிக் கொடுத்தேன். ஏதோ முட்டாளைப் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்துக் கொண்டு அலிமாமா சொன்னார்கள்: ‘ஓய்..நான் சொன்ன பழமொழி பாதிதான்’.
‘மீதி என்னா மாமா?’
‘இரவல் வாங்குன புத்தகம் அருமையானதுண்டு தெரிஞ்சும் அத திருப்பிக் கொடுப்பவன்ற ரெண்டு கையையும் வெட்டனும்’
ஒரு பாய் பாய்ந்து ஓடி வந்து விட்டேன்.
‘பாரஸீகக் கவிதை – ஒரு அறிமுகம்’ என்ற இந்த சிறு கட்டுரை ஆர்.பி.எம். கனி பி.ஏ.பி.எல் அவர்களின் புத்தகத்திலிருந்து எழுதப்பட்டதாம். ‘சுருக்’கித் தொகுத்தது சத்தியமாக நான் அல்ல. திரு. லெனாகுமார் (யாதுமாகி – மார்ச் 2001 இதழ்)]. நிஜாமியின் ஒரு கவிதையையும் மொழி பெயர்த்திருக்கிறார். அவருக்கு நன்றி. கூகிளுக்கும் விக்கிபீடியாவுக்கும்தான்.
***
பாரஸீகக் கவிதை – ஒரு அறிமுகம்
லெனாகுமார்
அரபிகள் பாரஸீகத்தை வென்றதும் பாரஸீகத்தவரில் மிகவும் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாத்தை தழுவினர். இவர்களுடைய உள்ளங்களில் இஸ்லாமிய வேத நூலான திருக்குர்ஆன் மிகுந்த ஆதிக்கம் பெற்றது. அரபிய மொழியும், பாரஸீக மொழியும் இரட்டைக் குழந்தைகள் போல் ஆகிவிட்டன. பழைய பாரஸீகத்தில் ஜொராஸ்தியர்களின் வேதமான ‘ஜெண்ட் அவஸ்தா’ தவிர குறிப்பிடத்தக்க இலக்கிய சிருஸ்டி எதுவும் வெளியாகவில்லை. கி.பி. 420-436ல் வேட்டை நிபுணனான மன்னன் பஷ்ராம் கோரும் அவனுடைய காதலி கிலாராமுந்தான் முதன்முதலில் சந்தத்தைக் கண்டுபிடித்ததாகவும் , கிபி 590-628ல் வாழ்ந்த ஷிரினின் சுவரில் எழுதப்பட்டிருந்த ஒரு பாட்டுதான் முதன்முதலில் எழுதப்பட்டது என்பாரும் உண்டு. ‘வாமிக் அஸ்ராவின் காதல் கதை’ என்ற நூல்தான் பாரஸீக மொழியின் முதல் நூல் என்றும் அது அழிந்துவிட்டது என்றும் சொல்வார்கள்.
இஸ்லாமிய பாரஸீகத்தில் முதன்முதலில் பாட்டெழுதியவர் அப்பாஸ் என்னும் கவியாவார். மன்னன் கலிபாமானின் வெற்றியைப் போற்றுவதற்காக எழுதியது என்பர். ஆனால் கி.பி 875-876ல் ஸஃபாரி வம்சத்தினரை எதிர்த்து கலகம் செய்யுமாறு தூண்டி எழுதப்பட்ட பாடலே முதன்முதலில் பாடப்பெற்றது. கவிஞர் அஹ்மந் என்பவர்தான் அவர் என்றும் கூறுவர்.
முதன்முதலில் அரபி ‘தோபைத்தி’ பாவினமும் ‘ருபாயத்’ பாவினமும்தான் பாரஸீக மொழியில் பாடல்கள் இயற்ற கையாளப்பட்டது. அடுத்த ‘மஸ்னவி‘ வந்தது. இதில் ஒவ்வொரு அடியிலும் எதுகை மாறும். இப்பாவினம் வரலாறுகளை கூறவோ, கதை சொல்லவோ மிகவும் ஏற்றதாக இருந்தது. இதை இயற்றியவர் தாகீது என்பவராவார். இதன்பின்னர் கஸீதாக்களும் கஜல்களும் கிஸ்ஸாக்களும் உண்டாயின. பாரஸீகக் கவிஞர்களில் மிகவும் முக்கியமானவர்களாகக் கருதப்படுபவர்கள் பலர். ஒன்பதாம் நூற்றாண்டின் முடிவில் வாழ்ந்த பெண்கவி ‘ராபியா பஸ்ரி’. இவள் பேரழகியாகவும் அறிவுத் திறன் கொண்டவாளகவும் போற்றப்பட்டவள். இவள் தன்னுடைய அடிமையும் துருக்கி இளைஞனுமான யக்தாஷ் என்பவனை காதலித்தார். இவள் சுற்றத்தார் இவளை கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தினர். நிறைவேறாத தன் காதலுக்கு கவிதைகளால் உருக்கொடுக்கலானாள். இவளுடைய பாடல்களில் உணர்ச்சி வேகம் பொங்கி வழிந்தது. இவளுடைய பாடல் சமய நம்பிக்கைக்கு முரணானது என்று கருதியதால் இவளது உறவினர்களே இவளைக் கொலை செய்து விட்டனர். தமிழில் ஆண்டாளுடைய பாசுரங்கள் போலவும், ஹிந்தியில் மீராவுடையது போலவும் இவளுடைய கவிதைகள் பாடல்கள் திருப்தியடையமுடியாத ஆத்மா தெய்வீகத்தை நோக்கி தவித்தது. இவ்விதம் தெய்வீகக் காதலை பெறும் தாகந்தான் சூ·பித் தத்துவத்தின் அடிப்படை. பாரஸீகத்தின் முதல் சூ·பி கவிஞர் ‘ராபியா பஸ்ரி’ ஆவார்.
பாரஸீக இலக்கியத்தில் பெருங்காப்பியங்களை இயற்றியவர் ஃபிர்தௌஸி இவரைத் தொடர்ந்து ஆன்மிக் காப்பியங்களையும் பாடல்களையும் எழுதியவர் அபுல் கைர். இவர்களைத் தொடர்ந்து உமர்கையாம் அன்வாரி போன்ற எண்ணற்ற கவிஞர்கள் தோன்றினர். அபுல்கைர் என்பவரே (ஒன்பதாம் நூற்றாண்டின் முடிவில்) பாரஸீக மொழியில் ஒரு கலைகளஞ்சியத்தை உருவாக்கினார். இதன்மூலம் சகல ஞானங்களுக்கும் பாரஸீக இலக்கியத்தை இவர் உறைவிடமாக்கினார்.
இந்தியாவில் முஸ்லீம் அரசர்களுடைய ஆட்சியில் பாரஸீக மொழி முக்கியத்துவம் பெற்றிருந்தது. இந்த அழகிய பாஷை அரசாங்க மொழியாகவும் இருந்ததால் இந்திய சுல்தான்களின் அவையிலே பாரஸீக புலவர்கள் பலர் இருந்தனர். இந்தியாவில் உலாவிய உருது மொழிக்கு ‘ரெக்தா’ என்று பெயர். இம்மொழியோடு பாரஸீகத்தை கலந்து கவிதைகள் எழுதியவர் பலருண்டு. பதாயுனி, முல்லா, கைஷீரி, சுர்ஷிஸி, அமிர்குஸ்ரு, ஷைருபைஸி போன்ற இந்திய பாரஸீக கவிஞர்கள் நிறைய உண்டு.
ஆயிரமாண்டுகளாய் இலக்கிய விருதுகளை தந்த பாரஸீக மொழி ஜாமியின் காலத்துக்கு பின்னர் புதுமை இலக்கியம் வெளிப்படாமல் நலிவடைந்தது. கடைசியாக சொல்லும்படியாக இலக்கியம் வளர பாடுபட்டவர் கவிஞர் அல்லாமா இக்பால். இவரைப்போன்று கவிஞர் கடந்த இருநூறு ஆண்டுகளில் பாரஸீகத்தில் தோன்றாமல் போனது வருந்தத்தக்கது.
***
பாரஸீகக் கவிஞர்களில் மிகவும் முக்கியமானவராக போற்றப்படுபவர் நிஜாமி. இவர் கிபி 1140-41ல் பிறந்தவர். அரசர்களை நாடி வாழும் அக்காலத்தில் எந்த அரச குலத்தின் ஆதரவையும் நாடாமல் அப்பழுக்கற்ற வாழ்க்கையை வாழ்ந்தவர். பாரஸீகத்தில் மிகவும் முக்கிய இலக்கியமாக ‘பஞ்ச காவியம்’ என்று போற்றப்படும் ‘கம்ஸா’வை எழுதியவர் ((1) மக்ஸானுல் அஸ்ரார் (2) குஸ்ரூ வ ஷிரீன் (3) லைலா வ மஜ்னு (4) சிக்கந்தர் நாமா (5) ஹப்தே பைகார். இவைகளை பஞ்ச காவியங்கள் ஆகும்). ‘மக்ஸானுல் அஸ்ரார்’ (இரகசியங்களின் பொக்கிஷம்) அவருடைய முதல் நூல். அதிலிருந்து ஒரு கவிதை :
புல்புலும் ராஜாளியும்
ஒரு பூங்காவிலே ரோஜா பூத்தது
அப்போது ஒரு புல்புல் ராஜாளியிடம் சொல்லிற்று :
‘மௌனமாக இருக்கும் நீ
சகல பறவைகளையும்விட எப்படி உயர்ந்தவன்?
உன் மூடிய உதடுகளாலே மூச்சை யிழுக்கிறாய்;
யாரிடமும் நீ இன்பமொழி பகர்வதுமில்லை;
எனினும், நீ துயில்வதோ மெத்தென்ற இடத்திலே;
உன் உணவோ இன்பமான நாராயின் இளம் நெஞ்சு.
நானோ, கண்மூடி விளிக்கும் நேரத்தில்
கண்கட்டி வித்தையைப் போல்
நூற்றுக் கணக்கான ரத்னங்களை
என் பையிலிருந்து வெளியாக்கிவிடுகிறேன்.
எனினும், நானும் ஏன்
பூச்சி புழுக்களுக்கும் வகையின்றித் தவிக்கிறேன்?
ஏன் முட்களின் முனையில் துயில்கிறேன்?’
ராஜாளி பதிலிறுத்தது:
‘சற்றே கவனமாய்க் கேள்!
என் தனிமையைத் கவனித்து மௌனமாகு!
தொழில் நன்கு தெரிந்த நான்,
நூறு செயல்களை ஆற்றுகிறேன்;
ஆனால், எதையும் வெளியில் சொல்வதில்லை.
நீ அதிர்ஷ்டத்தால் ஏமாற்றப்பட்டவன்;
நீ ஒரு செயலும் ஆற்றவில்லை;
ஆனால், ஆயிரம் செயல்களைப் பற்றிப் பேசுகிறாய்,
வேட்டைக் களத்திலே நான் சாதுரியமாக நடக்கிறேன்,
எனவே எனக்கு நாரையின் நடுத் துண்டமும்,
மெத்தென்ற துயிலணையும் கிடைக்கின்றன.
நீயோ நாவைச் சதா ஆட்டிக் கொண்டிருப்பதால்
புழுக்களை உண்டு முட்களின்மீது தூங்க நேர்கிறது.’
**
நன்றி : லெனாகுமார் , ‘யாதுமாகி’
***
நாகூர் ரூமியின் ‘சூ·பி வழி – ஒரு எளிய அறிமுகம்’ நூலிலிருந்து… (நண்பன் ரஃபி எனக்கு தனிப்பட அனுப்பிய Text. நூலிலும் இருக்கும் என்று நம்புகிறேன்).
ராபியா பஸ்ரியா (கி.பி.801) :
மிகவும் புகழ் பெற்ற பெண் சூ·பி. பஸராவில் பிறந்து சூ·பிக் கருத்துக்களை தனது பேச்சின் மூலமும் பாடல்களின் மூலமும் பரப்பியவர். இறைக்காதல் கொண்டவர். ஆரம்பத்தில் ஒரு விபச்சார விடுதியொன்றில் பணியாற்றிக்கொண்டே வருபவர்களையெல்லாம் மனமாற்றம் செய்து அனுப்பிக்கொண்டிருந்தார். இவர் சூ·பியானதும், இவரது அழகைக் கண்டு பலர் இவரை மணமுடிக்க விரும்பினர். ஆனால், நான் இறைவனுக்குச் சொந்தமானவள். எனது திருமணம் பற்றி அவனிடம் தான் அனுமதி கேட்கவேண்டும்” என்று கூறிய இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை. இவர் வெளிப்படுத்திய சூ·பிக் கருத்துக்கள் மிகவும் புரட்சிகரமானவை. பிரபலமானவை. இந்திய சூ·பி பக்த மீராவோடு இவரை ஒருவகையில் ஒப்பிடலாம்.
“இறைவா, நரகத்துக்கு பயந்து நான் உன்னை வணங்கினால், என்னை நரகத்தில் போட்டுப் பொசுக்கிவிடு. சுவர்க்கத்துக்கு ஆசைப்பட்டு நான் உன்னை வணங்கினால் என்னை சுவர்க்கம் தராமல் வெளியேற்றிவிடு. உனக்காக மட்டுமே நான் உன்னை வணங்கினால், எனக்கு உன் பேரழகைக் காட்டு” என்று சொன்னவர் இவரே.
***
நிஜாமி :
“ஒரு காலம் வரும். அப்போது எங்கள் அச்சு புதிய நாணயத்தில் பதியப்படும். அறியப்பட்ட எந்த மொழியிலும் சூஃபியின் பேச்சு இருப்பதில்லை. பொக்கிஷத்தின் சாவி, சூஃபியின் நாக்கில் இருக்கிறது. இறைத்தூதரும் சூஃபிக் கவிஞனும்தான் உள்ளிருக்கும் பருப்பு. மற்றவரெல்லாம் வெளியிலிருக்கும் ஓடு” (ரகசியங்களின் பொக்கிஷம்)
***
நன்றி : நாகூர் ருமி
***
சில சுட்டிகள் :
Biograpbhy of Nizami : http://www.ics.uci.edu/~javid/azerbaijan/nizami.html
Nizami the Poet : http://www.bestirantravel.com/culture/poetry/nizami.html
Rabia Basri : http://www.rumi.org.uk/sufism/rabia.htm
Allama Iqbal : http://en.wikipedia.org/wiki/Muhammad_Iqbal
Firdowsi : http://en.wikipedia.org/wiki/Ferdowsi
Omar Khaiyyam : http://en.wikipedia.org/wiki/Omar_Khayyam
Jami : http://en.wikipedia.org/wiki/Jami
Rumi : http://en.wikipedia.org/wiki/Rumi | http://www.khamush.com/
***
‘Miserable is a heart that has no beloved.
It is difficult to be without a friend or a beloved.
These few moments which you can never find again,
If you have a heart, do not be without a beloved.’ – Nizami
(translated by Reza Saberi, “A Thousand Years of Persian Rubaiyat”)