பெருங்கவிஞர் ஜாமியின் நகைச்சுவை நறுக்குகள்

‘மனம் ஒரு கண்ணாடி; கவலை அதில் படியும் அழுக்கு; நகைச்சுவை அந்த அழுக்கைப் போக்கும் திரவம்’  எனும் ஜாமி-இன் இயற்பெயர் நூருதீன் அப்துர் ரஹ்மான் .  ஜாம் என்ற ஊரில் பிறந்ததால் ஜாமி, ‘ரூம்’-இல் வாழ்ந்ததால் ‘ரூமி‘யான மாதிரி! ஜாமியைப் பற்றி மேலும் அறிய விக்கிபீடியாவின் இந்தப் பகுதிக்கு போகலாம். கவிஞர் சாஅதியின் நகைச்சுவையும் மிகவும் போற்றப்படுபவைதான். அது பிறகு, இன்ஷா அல்லாஹ். ‘பரீதுத்தீன் அத்தார், நிஜாமி, சாஅதி, ஹா·பிஸ் – இத்தனை பேர்களும் ஒரே அறிஞர் உருவில் தோன்றியிருக்க முடியுமானால் அந்த அறிஞர் ஜாமியாகத்தான் இருக்க முடியும்’ என்கிற அறிஞர் ஆர்.பி.எம். கனி பி.ஏ.,பி.எல்.,அவர்களின் ‘பாரஸீகப் பெருங்கவிஞர்கள்’ நூலிருந்து (முதற்பதிப்பு 1955-ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. தனது பேராசிரியர் அ.சீனிவாசராகவனுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்) சில பகுதிகள் – கவலையாக இருக்கும் ஒரு நண்பருக்காக, உங்களுக்கு அல்ல!

*

ஜாமியுடைய காலத்தில் வாழ்ந்த ஸாகரி என்ற கவிஞர், மற்றக் கவிஞர்கள் தன்னுடைய கருத்துக்களைத் திருடுகின்றனர் என்று குறை கூறினார். உடனே ஜாமி எழுதினார்:

ஸாகரீ சொன்னார் :
‘ என் பாட்டில் எங்கே ஒரு நல்ல கருத்து இருப்பினும்
கருத்துத் திருடுவோர் அதைத் திருடிவிடுகின்றனர்’ என்று.
அவர் பாட்டுக்களை நான் பார்த்தேன்;
அவற்றில் கருத்துக்களே இல்லை;
எனவே, அவற்றிலிருந்து கருத்துக்கள்
திருட்டுப் போயிருப்பது உண்மைதான் போலும்!

*

ஒரு தடவை ஜாமி சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவர் இறைவனை நோக்கிக் கூறும் பாவனையில் சொன்னார், ‘என் எண்ணமெல்லாம் நீயே நிரம்பியிருக்கிறாய். அதனால் என் பார்வைக்கு வருவதெல்லாம் நீயாகவே எனக்குத் தோன்றுகிறது’ என்று.

உடனே அங்கிருந்த ஒரு விஷமி ஜாமியை நோக்கி ‘உங்கள் முன்னால் ஒரு கழுதை வந்தால்?’ என்று வினவினான்.

ஜாமி அவனை நோக்கிச் சொன்னார், ‘அது எனக்கு நீயாகவே தெரியும்!’

*

ஒரு புலவர் ஜாமியிடம் வந்தார். அவர் தான் எழுதியிருக்கும் ஒரு பாட்டைப்பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டார். தான் எழுதியுள்ள அப்பாட்டில் ‘அலீ·ப்’ (அரபியின் முதல் எழுத்து) முற்றும் வராமல் ஒதுக்கியிருப்பதாகக் கூறினார்.

ஜாமி சொன்னார்: ‘அது போதாதே! மற்றுமுள்ள எழுத்துக்கள் அத்தனையையுமே நீர் ஒதுக்கியிருந்தால் எவ்வளவோ நன்றாய் இருந்திருக்குமே!’

*

ஜாமியினுடைய ‘பஹாரிஸ்தா’னில் அவர் நகைச்சுவைக்காகவே ஓர் அத்தியாயம் செலவிடுகிறார். அதில் ஓர் இளங்கவிஞனைப் பற்றி வரும் ஒரு கதை :

ஓர் இளங்கவிஞர் ஒரு வைத்தியரிடம் வந்தான். ‘என் நெஞ்சில் ஏதோ அடைத்துக்கொண்டு கஷ்டப்படுத்துகிறது; அதனால் என் அவயவங்கள் மரத்துப் போகின்றன; என் மயிர் சிலிர்க்கிறது; என்று அவன் தெரிவித்தான். கூர்மையான புத்தி படைத்த வைத்தியர் கேட்டார், ‘நீர் கடைசியில் எழுதிய பாட்டை இன்னும் யாரிடமும் படித்துக் காட்டவில்லையா?’ என்று.

‘இல்லை’ என்றான் இளங்கவி. அதை மீண்டும் மீண்டும் பலரிடம் படித்துக் காட்டிவிட்டு வரும்படி கூறி வைத்தியர் அவனை அனுப்பினார். அவன் அவ்விதம் செய்து திரும்பினான். இப்போது வைத்தியர் சொன்னார்,’ இனி உனக்குப் பயமில்லை. அப்பாட்டுத்தான் உன் நெஞ்சில் அடைத்துக்கொண்டு தொந்தரவு கொடுத்து வந்தது. அதன் வரண்ட தன்மை உன் அவயவங்களிலும் சங்கடத்தை உண்டாக்கியிருக்கிறது. இப்போது அப்பாட்டு வெளியாகிவிட்டதால் இனிச் சங்கடமில்லை’ என்று.

*

ஜாமியின் சில கதைகள் :

ஒரு மௌலவியிடம் ஒரு நெசவாளி சில சாமான்களை ஒப்படைத்திருந்தான். சில நாட்களுக்குப் பிறகு அவன் அவற்றை வாங்கிச் செல்ல அவனிடம் வந்தான். மௌலவி சாஹிப் தன் வீட்டுத் திண்ணையில் தனது மாணவரகள் முன் இருந்தார். அவன்,’ மௌலானா, நான் கொடுத்த பொருள்களைத் தாருங்கள்’ என்று கேட்டான். தான் மாணவர்கள் பாடம் ஒப்புவிப்பதைக் கேட்டுவிட்டு வரும்வரை காத்திருக்குமாறு மௌலானா அவனைக் கேட்டுக்கொண்டார். அவ்விதமே அவன் ஓரிடத்தில் அமர்ந்தான். மௌலானா மாணவர்கள் பாடம் சொல்லும்போது அதைக் கேட்கும் தோரணையில் அடிக்கடி தலையை முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டிருந்தார். இதைக்கண்ட அவன் பாடம் கேட்பதென்றால் தலையை ஆட்டுவதுதான் என்று முடிவுகட்டினான். அவரிடம் சொன்னான், ‘எனக்குச் சற்று அவசரம். நீங்கள் எழுந்து சென்று என் சாமான்களை எடுத்து வாருங்கள். அதுவரை நான் உங்களிடத்தில் உட்கார்ந்து தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறேன்’ என்று.

… ….

ஒரு முதியவர் தனது தொழுகைக்குப்பின் ஆண்டவனிடம் பிரார்த்திக் கொண்டிருந்தார். தன்னை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிச் சுவர்க்கத்தில் சேர்க்குமாறு அவர் வேண்டினார். அவர் அருகில் இருந்த கிழவியொருத்தி, ‘இறைவா, இவர் வேண்டுவதில் நானும் பங்குபெறும்படி செய்’ என்று வேண்டினாள். அதைக் கேட்ட கிழவர், ‘இறைவா, நான் தூக்குமேடையில் தொங்கி நெருப்பில் பொசுக்கும்படி செய்’ என்று வேண்டினார். உடனே கிழவி இவ்விதம் வேண்டினாள்: ‘இறைவா, என்னை மன்னித்து விடு ; இவர் கேட்பதிலிருந்து என்னைக் காப்பாற்று!’ என்று. இதைக் கேட்ட அக்கிழவர் அவள் பக்கந் திருப்பிச் சொன்னார்: ‘நல்ல பங்காளி இவள்! இன்பந் தருவதிலெல்லாம் இவள் என்னோடு பங்குகொள்ள விரும்புகிறாள். ஆனால், என் துன்பங்களிலோ பங்கு பெற மறுக்கிறாள்!’

*

நௌஷேர்வான் சக்ரவர்த்தி வசந்த விருந்து கொடுத்தார். அப்போது விருந்தினருள் இருந்த அவருடைய ஏழை உறவினன் ஒருவன் ஒரு தங்கக் கோப்பையை எடுத்துத் தன் சட்டைக்குள் மறைத்து வைத்துக்கொண்டான். அதைச் சக்கரவர்த்தி கண்டும் காணாதவர்போல் இருந்து விட்டார். விருந்து முடிந்து யாவரும் கலையும் சமயம், வேலைக்காரம் ஒருவன் ஒரு தங்கக் கோப்பையைக் காணோமென்றும், யாவரையும் சோதனையிட வேண்டுமென்றும் கூறினான். ‘அதனால் பாதகமில்லை, எடுத்தவன் தரமாட்டான், கண்டவன் சொல்லமாட்டான்’ என்று கூறிவிட்டார் சக்ரவர்த்தி. சில நாட்களுக்குப் பிறகு தங்கக் கோப்பைத் திருடியவன் உயர்ந்த உடையோடு வந்தான். அவன் உடையைச் சக்ரவர்த்தி நோக்கிய மாதிரியில், ‘இதை எப்படி வாங்கினாய் என்பது எனக்குத் தெரியும்’ என்று சொல்வது போலிருந்தது. அவனும் அதற்கேற்பத் தன் புதிய காலணிகளையும் அவர் கண்களில் படுமாறு செய்து, ‘இதுவும் கூடத்தான்’ என்று கூறும் தோரணையில் அவரை நோக்கினான். அவன் கோப்பையைத் திருடியதற்கு வறுமையே காரணம் என்பதுணர்ந்த சக்ரவர்த்தி அவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுத்தார்.

உன் குற்றம் கருணையுள்ள அரசனுக்குத் தெரியுமாயின் அதை மன்னிக்குமாறு வேண்டு. அதைச் செய்யவில்லை என்று சாதிக்காதே! அப்படிப் பொய் புகன்றால் உன் முதல் குற்றத்தைவிடப் பெரியதொரு குற்றத்தைச் செய்தவனாகிறாய்.

*

சுட்டிகள் :
பாரஸீகக் கவிதை – ஒரு அறிமுகம்

ஜாமி – விக்கிபீடியா