உமர் கய்யாமின் ருபாயியத்திலிருந்து… – ஆசை

‘எவ்வளவு பெரிய இழப்பு!‘ என்று சொன்ன நண்பர் ஆசையிடமிருந்து முதல் புத்தாண்டு வாழ்த்து வந்தது. நன்றிகளுடன் பதிவிடுகிறேன். அடுத்த வாழ்த்து நம் ஹனீபாக்காவிடமிருந்து – ‘சுரபி’ எழுதிய கவிதையுடன்.  அதை  நாளை பதிவிடலாம் என்று ஆசை…
***

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,

புத்தாண்டை முன்னிட்டு ஒமர் கய்யாமின் ருபாயியத்திலிருந்து உங்களுக்காகச் சில கவிதைகள்:

 

மகிழ்ச்சி என்ற பெயர் மட்டுமே எஞ்சியிருக்கும் இத்தருணத்தில்,
எஞ்சியதெல்லாம் முதிர்ந்த தோழர்கள் அல்ல, காட்டமான மது மட்டுமே,
மகிழ்ச்சியான கரம் மதுக் குடுவையைப் பற்றியபடியே இருக்கட்டும்-
இந்தக் கரத்துக்கு மதுக் குடுவை மட்டுமே எஞ்சியிருக்கும் இன்று.

 
இன்றிரவு ஒரு பெருங்குடுவை மதுவை ஏற்பாடு செய்துகொள்வேன்,
கோப்பைகள் இரண்டு நிரப்பி அமர்ந்துகொள்வேன் தயாராய்;
காரணஅறிவையும் மதத்தையும் ‌முற்றிலும் விலக்கிவைப்பேன் முதலில்
பிறகு மனைவியாக்கிக்கொள்வேன் திராட்சையின் மகளை.

—–

இமைப்பொழுதில் கடக்கிறது வருடத்தின் வண்டித் தொடர்,
சட்டென்று பற்றிக்கொள் குதூகலமான தருணத்தை:
தம்பி, நண்பர்களுக்கு நாளை வரும் துயரை எண்ணி ஏன் வருந்துகிறாய்?
கோப்பையைக் கொண்டுவா- கடந்துகொண்டிருக்கிறது இரவு.

—–

வசந்தத்தின் வருகையும் குளிர்காலத்தின் புறப்பாடும்
புரட்டுகின்றன நம் வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்களை:
மதுவை அருந்து, கண்ணீரையல்ல- அந்த மகான் சொல்லியிருக்கிறார்,
‘துயரத்தின் விஷத்துக்கு மதுதான் விஷமுறி’ என்று.

அன்புடன்,

ஆசை (Asaithambi Desigamani) | E-Mail :  asaidp@gmail.com

எவ்வளவு பெரிய இழப்பு! – ஆசை

மவுலானா ரூமி (ரஹ்) அவர்களின் ருபாயியாத் பாரசீக கவிதைகளை,  “ரகசிய ரோஜா” என்ற பெயரில் பேரா. ரமீஸ் பிலாலி  தமிழில் தந்திருப்பதாக சகோதரர் நூருல்அமீனின் வலைப்பதிவிலிருந்து   அறிந்தேன். ஆசை வந்துவிட்டது, ஆசை பற்றி எழுத!

உமர்கய்யாமின் ‘ருபாயியத்’ஐ ஆங்கிலத்திலிருந்து நேரடியாக மொழிபெயர்த்துவருகிறார் கவிஞர் ‘ஆசை’. ருபாய் என்பதன் பன்மை ருபாயியாத் (நமக்கு ரூபாய்தான் தெரியும்! – தாஜ்).  ‘தமிழில் வெண்பா, விருத்தம், சிந்து என்று இருப்பதுபோல ருபாயும் பாரஸீகப் பாவினங்களுள் ஒன்று. பல பாரஸீகக் கவிஞர்களும், உர்து கவிஞர்களும் ருபாயியாத்துப் பாடியிருக்கின்றனர். நாலடிகளான ருபாயில் முதல் இரண்டடிகளினுடையவும் கடைசி அடியினுடையவுமான கடை எதுகை ஒன்றுபோல் இணையவேண்டும். மூன்றாம் அடி சாதாரணமாகவும் இருக்கலாம்; மற்ற அடிகளின் கடை எதுகைபோலவும் இருக்கலாம்’ – ஆர்.பி.எம். கனி ( நூல் : பாரஸீகப் பெருங்கவிஞர்கள்).

இந்த ‘ஆசை’க்கு ஒரு ஆசை. இதென்ன ‘மேகத்துக்கு தாகம்’ என்பதுபோல என்கிறீர்களா? நான் என்ன செய்வது, ஆசைத்தம்பி என்கிற அழகான பெயரை ‘ஆசை’ என்று சுருக்கியிருக்கிறார் மனுசன். ஆசையை சுருக்கலாமோ? அரபியும் பார்ஸியும் கற்றுக்கொள்ள வேண்டுமென்று இப்போது பேராசை வந்துவிட்டது. ஆள் மன்னார்குடிக்காரர் (உமர்கய்யாம் அல்ல!). தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்குள் ‘மேற்கண்ட மொழி இலக்கியங்களில் புலமையுள்ளவர்கள் யாராவது இருந்தால் எனக்குத் தகவல் கொடுத்து உதவுங்கள்’ என்று ஆசையோடு என்னைக் கேட்கிறார். அலாதியான பெயர்கள் தாங்கிய அரபி மத்றஸாக்களை பரிந்துரைக்கலாம். ஆனால், சகோதர மதத்தவரை அங்கே சேர்த்துக்கொள்வார்களா?  அவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று ஹதீஸே இருக்கிறதாம். எண் தெரியவில்லை, ஆனால் நல்ல விஷயங்களை நம் ரசூல் (ஸல்) சொல்லாமலிருந்ததில்லை.

ஒரு கவிதை :

‘நம் தலைவர்கள்
தொண்டர்களுக்கு ‘ரசூல்’ஐ காட்டுகிறார்கள்
தான் மட்டும்
வசூலில் வாழ்கிறார்கள்!’

வேறு யார் , நம் ஜபருல்லா நானா எழுதியதுதான். அது இருக்கட்டும், விஷயத்திற்கு வருகிறேன். ‘ஆசை’யை மதறஸாக்களில் சேர்த்துக் கொள்வார்களோ? சந்தேகம்தான். அரபிமொழியை பாடமாக சொல்லிக்கொடுக்கும் கல்லூரிகளில் சேரச்சொல்லலாமா?ஆசைக்கோ வயசு அதிகமாயிற்றே… என்ன செய்யலாம்? தெரியவில்லை. விபரமறிந்தவர்கள் ஆசையை தொடர்புகொள்ளுங்கள். ‘அத்தனைக்கும் ஆசைப்படும்’ ஆசையின் மின்னஞ்சல் முகவரி : asaidp@gmail.com

உமர்கய்யாமின் ‘ருபாயியத்’ மொழிபெயர்ப்பு பற்றி நான் முன்பு எழுதியதை எப்படியோ கண்டுபிடித்து, அந்த நேரடியான மொழிபெயர்ப்பு கிடைக்குமா என்று ஆவலுடன் விசாரித்து , ‘அது கிடைக்க வாய்ப்பில்லையே..’ என்று நான் சொன்னதும் ‘எவ்வளவு பெரிய இழப்பு!’ என்று ஆசை அதிர்ந்தது என்னையும் அதிரவைத்துவிட்டது. நண்பர் நாகூர்ரூமியை தொடர்புகொள்ளச் சொன்னேன். ”உங்களுக்குத் தெரிந்த விபரங்கள்கூட எனக்குத் தெரியாது என்பதுதான் உண்மை!’ என்று சொல்லிவிட்டாராம் பேராசிரியர்.

எவ்வளவு நாம் இழந்திருக்கிறோம்!

ஒரு விஷயம், தஞ்சை பெரியகோயில் சம்பந்தமான நண்பர் ஜாகீர்ராஜாவின் கட்டுரையில் (நன்றி : கீற்று) ஒரு பறவையைப் பற்றி இப்படி வருகிறது : ‘பெரிய கோயிலில் வரையப்பட்டுள்ள அபூர்வமான ஓவியங்கள் குறித்தும் பேச வேண்டியிருக்கிறது. 1930ஆம் ஆண்டுவரை உட்பிரகாரம் சுவர் வைத்து மூடப்பட்டிருந்த கோவில் இது. அந்த இருண்ட வழிகளுக்குள் யாரும் பயணித்துப் பார்க்க நினைத்த தில்லை. 1931ஆம் ஆண்டு பெரியகோவிலுக்கு யாத்திரை வந்த பேராசிரியர் எஸ்.கே.கோவிந்தசாமி என்பவர் உட்பிரகாரச்சுவரின் ஓட்டையிலிருந்து பறவை ஒன்று பறந்து சென்றதைக் கவனிக்கிறார். அந்தப்பேராசிரியரின் ஆய்வுமனம் அந்த க்ஷணத்தில் சிறகடித்துக் கிளம்புகிறது. பறவையின் வழிகாட்டுதலுடன் அவர் உட்பிரகாரத்தினுள் பிரவேசிக்க ஆயிரமாண்டு காலத்தொன்மை வாய்ந்த அரிய ஓவியங்கள் குறித்து உலகத்துக்குத் தெரிய வருகிறது. இன்றைக்கும் ஒப்பற்ற கலை வெளிப்பாடுகளை உலகுக்கு வெளிப்படுத்திய அந்தப் பெயர் தெரியாத சிறு பறவைக்குத்தான் காலம் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது’

இஸ்லாமிய இலக்கியங்கள் அத்தனையும் பெற்று நாம் பரவசப்பட இன்னொரு பறவை வரவேண்டும்! எங்கே இருக்கிறாய் சிட்டே?

‘தையல்சிட்டின் கனம்தான்
இருக்கும்
இந்தக் கணம்

அதிர்ந்துகொண்டிருக்கிறது
அது
தையல்சிட்டு பறந்து சென்ற பின்
அதிரும்
இலைக்காம்புபோல’ – ஆசை

**

கவிஞர் ‘ஆசை’யின் மின்மடல்களிலிருந்து…

அன்புள்ள ஆபிதீன் அவர்களுக்கு,

வணக்கம். என்னைப் பற்றிய சிறு அறிமுகத்துக்குப் பின் விஷயத்துக்கு வருகிறேன். என் பெயர் ஆசை (ஆசைத்தம்பி). ‘சித்து’, ‘கொண்டலாத்தி’ என்ற எனது இரண்டு கவிதைத் தொகுப்புகளும் க்ரியா வெளியீடாக‌ வ‌ந்திருக்கின்றன. நான் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பில் (2008) துணை ஆசிரியராகப் பணிபுரிந்தேன். என்னுடைய‌ பேராசிரிய‌ருட‌ன் சேர்ந்து நான் உம‌ர்க‌ய்யாமின் ருப‌யிய‌த்தை ஆங்கிலத்திலிருந்து மொழிபெய‌ர்த்துவ‌ருகிறேன் . இந்த மொழிபெயர்ப்பு க்ரியா வெளியீடாக வரவுள்ளது. ருபாயியத் குறித்து இணையத்தில் தமிழில் தேடிப்பார்த்தபோது உங்களுடைய வலைப்பூவையும் காண நேரிட்டது. அதில் உமர்கய்யாமின் ‘ருபாயியத்’ஐ நேரடியாக ·பார்ஸியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் நெய்னா மாமா என்று ‘சொல்லரசு’ ஜாபர் மெய்தீன் மாமா சொல்வார்கள் என்ற குறிப்பைக் கண்டேன். இது எனக்குப் புதிய தகவலாக இருந்தது. பாரசீக மொழியிலிருந்து தமிழில் ருபாயியத்தை யாரும் மொழிபெயர்க்கவில்லை என்றே நான் எண்ணியிருந்தேன். இந்த மொழிபெயர்ப்பு எங்கே கிடைக்கும் என்ற தகவலை நீங்கள் தெரிவித்தால் எனக்கு இந்த மொழிபெயர்ப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும். பாரசீக மொழி எனக்குத் தெரியாவிட்டாலும் மூலத்துக்கு அருகில் இந்த மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும் என்ற பேராசையில் நம்பகமான ஆறேழு ஆங்கில மொழிபெயர்ப்புகளுடன் ஒப்பிட்டே இந்த மொழிபெயர்ப்பை நான் உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். அதனால் தமிழில் வந்துள்ள மொழிபெயர்ப்புகளை குறித்த தகவல்களையோ அல்லது இந்தத் தகவல்கள் யாரிடம் கிடைக்கும் என்ற தகவலையோ நீங்கள் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.கூடவே, பாரசீகமும் தமிழும் இலக்கியமும் நன்றாகத் தெரிந்த யாராவது ஒருவரைத் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்…

அதுமட்டுமல்லாமல் எனக்கு அரபி, பாரசீகம் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆவல் எழுந்திருக்கிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்குள் மேற்கண்ட மொழி இலக்கியங்களில் புலமையுள்ளவர்கள் யாராவது இருந்தாலும் எனக்குத் தகவல் கொடுத்து உதவுங்கள்.

அன்புடன்   

ஆசை

*

ஆசைக்கு உதவுங்கள் தயவுசெய்து , வேறு மாவட்டக்காரர்களாக இருந்தாலும் . ஆள் ஓடிவந்துவிடுவார். (சேர்ந்ததும் ஓடிவிடுவார், அதுவேறு!) – ஆபிதீன்

***

மேலும் பார்க்க :

நானும் என் கொண்டலாத்தியும் – ஆசை |

கொண்டலாத்திகளும் குக்குறுவான்களும் – ஆசை

விசிறிக்கொண்டை ஒய்யாரி  –  ஆபிதீன் பக்கங்கள்

உமர் கய்யாமும் நாகூர்க்காரர்களும் –  அப்துல் கய்யூம்

**

Read : 

ச்சீஸ் படீஹை மஸ்த் மஸ்த்

உஸ்தாத் நுஸ்ரத் ஃபதே அலிகான் உயிரைவிட்டு பாடிய ஒரு கவாலி ##, விஜூஷா போன்ற ‘மொஹ்ர’கட்டைகளால் (‘மொஹ்ரா’ ஒரு ஜாலியான படம், அது வேறு விசயம்) எப்படியெல்லாம் – கொஞ்சம் கூட ‘க்ரெடிட்’ கொடுக்காமல் – திரையில்  பயன்படுத்தப்பட்டது என்பது பற்றியல்ல இந்தப் பதிவு. அந்த துரோகங்களைச் சொல்ல ஆரம்பித்தால் முடிவேயிராது. ‘ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல?’ . இது அறிவியல் தமிழறிஞரும் புகழ்பெற்ற ‘யுனெஸ்கோ கூரியர் / தமிழ்’ன் (என் சீதேவி வாப்பா சந்தா கட்டி வரவழைத்த ஒரே பத்திரிக்கை.) ஆசிரியராக பணியாற்றியவரும் பல விருதுகளைப் பெற்றவருமான மணவை முஸ்தபா அவர்களின் நூலிலிருந்து ஒரு பத்தி. அதற்கு அவர் கொடுத்த தலைப்பு : ‘மஸ்து’ தந்த மயக்கம். அவ்வளவுதான். ‘மஸ்த்’ போச்சா? ‘மஸ்த்’ என்றால் வெறும் மயக்கம் மட்டுமல்ல என்று விளக்குகிறார் அவர். எனக்கு ‘பொட்டி சோறு’ சாப்பிட்டாலே ‘மஸ்த்’ வந்துவிடும்; நாகூர் – தனி மாநிலம் என்று அறிவிப்பு கண்டாலும் ‘மஸ்து’தான்!

1998ல் துபாய் வந்திருந்த மணவை முஸ்தபா ஆற்றிய சொற்பொழிவுகளின் சுருக்கம், ‘இஸ்லாம் ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா?’ என்ற தலைப்பில் நூலாக வெளியாயிற்று (ஜூன் 2000). காணோம் காணோம் என்று அதைத் தேடிக் கொண்டிருந்த ஜாஃபர் நானா கண்டெடுத்தார் நேற்று. என் மேலுள்ள சந்தேகப் பார்வை போகும் இன்று!

இஸ்லாமிய இலக்கியத்திற்கான மற்றும் கலைச்சொல் அகராதிகளுக்கான மணவை முஸ்தபாவின் கடும் உழைப்பையும் பங்களிப்பையும் மிகவும் மதிக்கிறேன். ஆனால் மதம் , தமிழ் சம்பந்தமான அவருடைய ‘அறிவியல்’ பார்வைகளில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. பின்னே, முதல் மனிதர்/நபியான ஆதம் அலைஹிஸ்ஸலாமுக்கு அல்லாஹ் அனுப்பிய ‘செய்தி’ தமிழில்தான் இருந்தது என்று உளறினால் எப்படி ஜனாப் உடன்பட முடியும்? ரசூல்(சல்) அவர்களிடம் அரபியில் பேசினான் அல்லாஹ் என்று சொல்வதே முதலில் ‘குஃப்ர்’ (நிராகரிப்பு) என்று சொல்வார்கள் எங்கள் ஹஜ்ரத். ஹலோ, அந்த விவாதத்தை அப்புறம் வைத்துக் கொள்ளலாம்!

இந்த நூலில் , சாக்ரடீஸ் தர்ஹாவில் (ஏதென்ஸ்) அவர் ‘ஜியாரத்’ செய்தது, சூஃபிகளுக்கு – முக்கியமாக தென்காசி ரசூல் பீவி, இளையான்குடி கச்சிப்பிள்ளை அம்மாள், கீழக்கரை செய்யது ஆசியா உம்மா (மேல் வீட்டம்மா) போன்ற பெண் சூஃபிகளுக்கு (சூஃபிகளில் பெண்ணென்ன ஆணென்ன என்கிறீர்களா? நீங்க ஒரு சூஃபிங்க!) – அவர் கொடுக்கும் முக்கியத்துவம், கைக்கூலி என்ற பெருநோயைக் கண்டிக்கும் விதம் (இங்கே ஆலிப்புலவரின் ‘மெஹ்ராஜ் மாலை’யிலிருந்து ஒரு பாடலை – ‘பேசு நரகிற் சிலர்…’ – பொருத்தமாக குறிப்பிடுகிறார்), பிற சமயங்களை சகோதர சமயங்கள் என்றே குறிப்பிடவேண்டும் என்று சொல்வதெல்லாம் எனக்குப் பிடித்தது. அதைவிட, ஐந்தாம் வகுப்பு முடிக்குமுன் ‘அபிதாபி ‘ வந்துவிடுகிறார்களே என்று அவர் வேதனைப் படுவதுதான் அதிகம் பிடித்தது! (அபுதாபியில் பேசினால் அப்படித்தான் பேச வேண்டும் என்கிறார்கள் துளிர்விடும் முன்பே துபாய் வந்தவர்களும் பாலகனாகும் முன்பே பஹ்ரைன் வந்தவர்களும்).

‘மஸ்த்’துக்குப் பிறகு , கல்விக்கு இஸ்லாமிய இளைஞர்கள் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் பற்றி மணவை முஸ்தபா பேசியதையும் பிறகு ‘ஆயிரம் மசலா’விலிருந்து அவர் எடுத்தாண்ட ஒரு பாடலையும் பதிந்திருக்கிறேன். கடைசியாக , ‘மஸ்த்’ வரவழைக்கும் உமர்கையாம் பாடல்கள் கொஞ்சம் – அறிஞர் ஆர்.பி.எம்.கனி அவர்களின் மொழிபெயர்ப்பில், 1955ல் வெளியான ‘பாரஸீகப் பெருங்கவிஞர்கள்’ நூலிலிருந்து. இது தற்போது நேஷனல் பப்ளிஷர்ஸ் மூலம் வெளியாகியிருப்பதாக கூகுள் சொல்கிறது. முகவரி தெரிந்தவர்கள் எனக்கு தெரியப்படுத்துங்கள்.

‘எத்தனை நாட்கள், எத்தனை நாட்கள்,
நீ கிரேக்கரின் தத்துவங்களைப்பற்றியே பேசுவாய்!
உனது மார்க்கத்தினரின் தத்துவத்தைப் படியப்பா!’
– என்று ரூமியால் கிண்டல் செய்யப்பட்டாராம் உமர்கையாம். அதனாலென்ன? அதையும் படித்து, பயன்பெற்று, உடனே சஃபர் செய்யுங்கள் உற்சாகத்துடன், ‘வேட்டை பெரிதென்றே வெறிநாயைக் கைக்கொண்டு காட்டிற் புகலாமோ கண்மணியே ரகுமானே’ எனும் குணங்குடியப்பா பாட்டுடன்!

**

‘மஸ்து’ தந்த மயக்கம்

மணவை முஸ்தபா

மஸ்து’ பெயரால் உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் விபரீதத்தை உங்களிடம் கூறலாம் என எண்ணுகிறேன். குணங்குடி மஸ்தானைப் போன்ற ஒரு மாபெரும் பாரசீகச் சூஃபிக் கவிஞர் உமர்கையாம். அவர் உருவாக்கிய ஞான இலக்கியம் ‘ரூபய்யாத்’. பாரசீக மொழியின் மாபெரும் ஞானக் களஞ்சியமாகப் பாராட்டப்படும் படைப்பு. அதிலே ‘மஸ்து’ எனும் சொல்லைப் பல இடங்களில் உமர்கையாம் பயன்படுத்தியுள்ளார். இறைவனைப் பற்றி, இறையுணர்வைப் பற்ரி பல அரிய கருத்துக்களைத் திறம்படக் கூறியுள்ள அந்நூலை ஆங்கிலப் புலமைமிக்க, பாரசீக மொழியும் ஓரளவு அறிந்த ஃபிட்ஜெரால்ட் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். மொழிபெயர்ப்பின் போது ‘மஸ்து’ எனும் பெர்ஷியச் சொல்லுக்கு மரபு முறையிலான பொருள் விளங்காததால் , வெறுமனே மயக்கம் எனப் பொருள் கொண்டதோடு , மயக்கம் ஒரு மனிதனுக்கு எதனால் வரும் என எண்ணிய மாத்திரத்தில் மதுவால், மங்கையால், கவிதையால் வரும் என அவரளவில் அனுமானித்தவராக மது, மாது, கவிதை என மொழிபெயர்த்து விட்டார். இம் மொழிபெயர்ப்பைப் படித்த தேசிய விநாயகம் பிள்ளை , ‘கையிலே கம்பன் கவியுண்டு, மதுக் கலயமுண்டு, மங்கை மடியுண்டு’ என்று கருத்துப்பட பாடலானார். அதைப் படித்த கண்ணதாசன் கோப்பையிலே அவன் (என்) குடியிருப்பு என உமர்கையாமை மதுக்கோப்பைக்குள் தூக்கிப் போட்டுப் பாடினார். மொழிபெயர்ப்பில் எங்கோ ஏற்பட்ட ஒரு சிறு தவறு தொடர்ந்து பெருக்கமடைந்து நேர்மாறான போக்கையே உருவாக்கி விட்டது. மதுவைத் தொட்டறியாத, அன்னிய மங்கையரை ஏறெடுத்தும் பாராத, ஒரு மாபெரும் சூஃபிக் கவிஞரை, மெய்ஞ்ஞானப் போதகரை மாபெரும் குடியராக, பெண் பித்தராகச் சித்தரிக்கும் இழிநிலை ஒரு சிறு மொழிபெயர்ப்புப் பிழையால் உருவாயிற்று.

ஐந்தாம் வகுப்பு முடிக்குமுன் அபுதாபி

‘எந்தக் கல்வி (முஸ்லிம் இளைஞர்களின்) வளர்ச்சிக்கு வளமான வாழ்வுக்கு ஏணியாக அமைகிறதோ அந்த ஏணியில் ஓரிரு படிகள்கூட ஏற முற்படுவதில்லை. ஐந்தாம் வகுப்பைத் தாண்டாமலே அபுதாபிக்குப் பிழைப்புத் தேடி ஓட முற்பட்டு விடுகிறார்கள். சிலர், பள்ளிக்கூடத்தின் படியைக்கூட மிதிக்க முற்படாமல் தன் உடல் வலுவை மட்டுமே நம்பி, துபாய்க்கும் அரபுநாடுகளுக்கும் பயணப்பட்டு விடுகிறார்கள். இங்கு கொளுத்தும் வெயிலிலும் தகிக்கும் தணலிலும் புழுவெனத் துடித்து பொருளீட்ட முற்படுகிறார்கள். அவன் மட்டுமல்ல, அக்குடும்பத்தில் உள்ள யாராவது ஒருவர் படித்து மேல்நிலை பெற எண்ணுவதுமில்லை. ஊரிலே முன்னூறு ரூபாய் பெற வருமானம் பெற முடியாத நிலையில், துபாயில் முன்னூறு திர்ஹம் அதாவது மூவாயிரம் ரூபாய் கிடைக்கிறதே என்று மட்டுமே எண்ண முடிகிறதே தவிர… கல்வியறிவு பெற்றிருந்தால் மாதம் மூவாயிரம் திர்ஹம் அதாவது முப்பதினாயிரம் ரூபாய் வருமானம் பெறக் கூடிய நிலை பெற்றிருக்கலாமே என்று எண்ணுவதே இல்லை.

ஆண் மக்களின் நிலையே இதுவென்றால் நம் பெண் மக்களின் நிலையைப் பற்றி சொல்லவே வேண்டாம். கல்வி ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது என் இஸ்லாம் போதிக்கிறது. இன்னும் சொல்லப் போனால் கல்வியை இருவருக்கும் கட்டாயமாக்கியுள்ளது. நம் சமுதாயத்தில் இன்னும் பெண் கல்வி பின் தங்கியதாகவே உள்ளது. ஒரு ஆணை விட , பெண் படித்தால் விரும்பத்தக்க மாற்றங்கள் விரைந்து ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். ஒரு பெண் படித்தவளாக இருந்துவிட்டால் அவள் சந்ததி முழுவதும் கல்வி எனும் ராஜபாட்டையிலிருந்து ஒரு அங்குலம் கூட விலக இயலாது. குடும்பத்தின் அனைத்து அம்சங்களிலும் மாற்றங்களும், திருத்தங்களும் ஏற்படுவது எளிதாகி விடும். குடும்பத் தலைவியாகிய ஆணும் பெண்ணும் கல்வி கற்றவர்களாக அமைந்து விட்டால் அக்குடும்பத்தின் அகவாழ்விலும் புறவாழ்விலும் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட, வெற்றியின் உச்சத்தை நோக்கி அக்குடும்பம் செல்வதை யாரும் தடுக்கவியலாது.

மணவை முஸ்தபா (16th Jul’98 / AbuDhabi)

**

வண்ணக் களஞ்சியப் புலவரின் (சையது இபுறாஹிம் புலவர்) ‘ஆயிரம் மசலா’விலிருந்து. யூத அறிஞரான இபுனுசலாம் , நாயகம் (சல்) அவர்களிடம் கேட்கிறாராம்.

‘மண் தரைக்குள் ஏறாது
வானிலிருந்து ஓடாது
அந்தரத்தில் ஓராறுண்டது
எமக்குக் கூறுமென
சுந்தரத்தோள் இபுனு சலாம்
சுருதி வழியே கேட்க…’ என்று நீளும் பாடல்.

அந்தரத்தில் ஓடும் ஆறா, அதென்ன? நூலை என்னைப்போல் ஓசியில் வாங்கிப் படியுங்கள்!  நூல் ( ‘இஸ்லாம் ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா?’) கிடைக்குமிடம் :

சௌதா பப்ளிகேஷன்
AE-103 , அண்ணா நகர்
சென்னை – 600 040

**

இனி , உமர்கையாம் பாடல்களில் ‘மஸ்த்’ ! (மொழிபெயர்ப்பு : ஆர்.பி.எம்.கனி அவர்கள்).  இவர் (உமர்கையாம்) ‘மது’வைத் தொட்டாரா இல்லையா என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்!. இதற்கு நீங்கள் ‘ஹலாலான’ Non-Alcoholic Beer பயப்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் 🙂

உதய காலக் கதிர்கள்
பிரியும் இரவைப்
கட்டித் தழுவுவது போல
பளபளக்கும் சாராயக் கிண்ணத்தை
உன் கைகள் அணைத்துப் பிடிக்கட்டும்!
சத்தியத்தைப் போல
மதுவும் வாயில் கசக்கிறது.
எனவே, இத்திராட்சை ரஸத்தை
நாம் சத்தியம் என்றழைப்போம்.

புதிதானாலும் பழையதானாலும்
நாம் மது வாங்குகிறோம்.
சில துளிகளுக்கு
உடைமையை விற்றுவிடுகிறோம்.
மரணத்துக்குப் பின்
எங்கு செல்வீர் என்றா கேட்கிறீர்?
முதலில் மது கொண்டு வாரும்,
(பிறகு) எங்கு விருப்பமோ அங்குப் போம்.

பக்திமானாகவே மரணிப்பவன் இறுதிநாளில்
அவ்விதமே எழுவான் என்கிறார்கள்
அதற்காகவே நாம் காதலோடும் மதுவோடும்
திளைக்க விரும்புகிறேன்;
அதன்மூலம் நான் (இறுதிநாளில்) எழும்போது
அதுபோலவே எழலாமல்லவா?

சுவர்க்கத்திலே இனிமையும் வனப்புமிக்க
ஹூரிப் பெண்களும் அமுதும் உண்டு என்கின்றனர்.
அப்படியாயின், இங்கே, இம்மண்ணுலகில்
அவற்றை நான் அனுபவிக்கப் பயமென்ன?
வாழ்வின் லட்சியமே அதுதானே?

சொல்கிறார்கள்:
சுவர்க்கலோக மங்கையர் இனியர் என்று
ஆனால், இன்று கிடைக்கும் திராட்சை ரஸம்
அதனினும் இனிது.
வா, இந்த ரொக்கத்தை எடுத்துக்கொள்,
வரப்போகிற லாபம் போகட்டுமே!
முரசொலி தொலைவிலிருந்து ஒலித்தாலே இனியதாகும்

என்னிடம் சொன்னார்கள்:
குடிப்பவனுக்கு நரகம் நிச்சயம் என்று.
இதை நான் ஏற்க முடியாது.
காதலிலும் மதுவிலும் திளைப்போர்க்கே நரகமாயின்,
என் உள்ளைங்கையைப் போலச்
சுவர்க்கம் காலியாகவே இருக்கும்.

இந்த மதுக்கிண்ணம்
என்னைப் போல் ஒரு காதலனாயிருந்தது;
இதன் வளைந்த கைப்பிடி
ஒரு காலத்தில்
ஓர் அழகிய சிற்றிடையைச்
சுற்றி வளைந்திருந்த கையாகும்.

இன்று இன்பம் பெறு;
வானிலே உன் சாவுக் குறி கண்ட பின்னோ
எல்லையற்ற துயரில் அமிழ்வாய்
(அதன் பின்) உன் களிமண்ணால்
செங்கற்கள் செய்வர்; வீடோ சத்திரமோ கட்டிவிடுவர்.

இன்னும் ஒரு நூற்றாண்டு
நான் பாவத்திலேயே வாழ்வேன்; (அதன் மூலம்)
இறைவன் கருணையை விட
என் பாவங்கள் அதிகமாகின்றவா
என்று பார்ப்பேன்.

பூமியில் யார்தான் பாவஞ் செய்யவில்லை?
சொல்லேன் பார்ப்போம்
பாவஞ் செய்யாதவன் எப்படி வாழ்கிறான்?
சொல்லேன் பார்ப்போம்.
இறைவா,
என் தீய செயல்களுக்காக
நீ தண்டனை யளிப்பாயாயின்
உனக்கும் எனக்கும் என்னப்பா வேற்றுமை?
சொல்லேன் பார்ப்போம்.

இறைவா,
நீ கவைக்குதவாக் கயவரிடம் மட்டுமே
கருணை காட்டுபவனாயின்
என்னிடம் அன்பு காட்டு!
நானும் ஒரு கவைக்குதவாக் கயவனே.

கடப்பாட்டோடு நான் மஸ்ஜித் சென்றேன்
ஆனால் , இறைவன் பெயரால் (சொல்கிறேன்,)
அது தொழுகைக்காக அன்று;
ஒரு நாள் அங்கிருந்த
தொழுகைப் பாயைத் திருடினேன்;
இப்போதும் அங்குப் போய்வருகிறேன் –
இன்னும் ஒரு பாய் அகப்படாதா என்று தேடி!
இறைவா,
நீயே என்னைச் சிருஷ்டித்தாய்,
நான் என்ன செய்வேன்?
நீயே வாழ்க்கையின்
பட்டையும் கம்பளியையும் நெய்தாய்;
நான் என்ன செய்வேன்?
நான், நன்மையோ தீமையோ,
எது செய்யினும் அதை
நீயேதான் முன்னமேயே விதித்துவிட்டாயே!
நான் என்ன செய்வேன்?

பாவத்துக்கு அடிமையாவோரையும்
படைப்பவன் நீதானே!
(அப்படியிருக்க) உன் படைப்புகள் மீது
குற்றம் ஏன் சேரவேண்டும்?

***

நன்றி : மணவை முஸ்தபா / சௌதா பப்ளிகேஷன் &  ஆர்.பி.எம்.கனி / நேஷனல் பப்ளிஷர்ஸ்

சுட்டி : தமிழறிஞர் மணவை முஸ்தபாவின் பேட்டி – தீராநதி

**

குறிப்பு : #  நுஸ்ரத்தின் ‘தம் மஸ்த் கலந்தர் மஸ்த் மஸ்த் ‘துதான் ‘மொஹ்ரா’வில், ‘து ச்சீஸ் படீஹை மஸ்த் மஸ்த்‘தென்று மாறியது. என் பாகிஸ்தானி மானேஜருக்கு ஒரிஜினலை விட இதுதான் பிடிக்குமாம். காரணம் ரவீணா டண்டன் என்கிறார் !