யாருக்குத் தெரியாது? – ஏ.ஹெச்.ஹத்தீப்

லிபரான் அறிக்கை
ஏ.ஹெச்.ஹத்தீப்

யாருக்குத் தெரியாது? 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதிக்குமுன்பே ‘பாபர் மஸ்ஜித் இடிபடப் போகிறது’ என்று யாருக்குத்தான் தெரியாது?

உத்தரப்பிரதேச அரசுக்குத் தெரியும். மாநில ஆளுனருக்குத் தெரியும்.அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்குத் தெரியும்.உச்ச நீதிமன்றத்துக்குத் தெரியும். தேசிய ஒருமைப்பாட்டுப் பேரவைக்குத் தெரியும். மக்களவைக்குத் தெரியும். ஏன் உலகத்துக்கே தெரியும். “ பெருமைமிகு இந்தியத் திருநாடு எனது புனித இடங்களைப் பாதுகாக்கும்”என்ற நம்பிக்கையோடு இருந்த 20 கோடி முஸ்லிம்களுக்கு வேண்டுமானால் ஒருவேளை தெரியாது போயிருக்கலாம். 6ஆம் நாள் நடந்ததெல்லாம் ‘ராமபக்தர்கள் என்ற போர்வையில் கூலிப்படைகளால் ஒரு வழிப்பாட்டுத்தளம் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது’என்பதற்கான உறுதியான ஆதாரங்களையும் ஆவனங்களையும் தேசத்துக்கு வாரி வழங்கிய ‘சடங்குகள்’ மட்டுமே. இன்னும் அப்பட்டமாகச் சொல்ல வேண்டுமானால், தேசத்தின்மீதும் சட்டத்தின் ஆட்சியின்மீதும் அளவற்ற நம்பிக்கையும் மதிப்பும் கொண்டிருந்த கோடானுகோடி மக்களின் முகத்தில் காறி உமிழ்ந்த இந்துத்துவக் கலாச்சார நிகழ்வு.

‘அவற்றைப் படித்து முடிப்பதற்கு நீதிபதி லிபரானுக்கு ஏன் 17 ஆண்டுகள் தேவைப்பட்டன?’ என்பதே மில்லியன் டாலர் கொஷ்டின். அதனாலேயே பிரகாஷ் காரத் போன்ற இடதுசாரித் தலைவர்கள், “ஆணையம் இவ்வளவு காலம் தாழ்த்தி அறிக்கை அளித்திருப்பதிலேயே ஊழல் நடந்திருக்கிறது” என்று குமுறுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சிக்குள் பல்வேறு சோகக்காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கிற இந்தச் சமயத்தில், குறிப்பாக இந்துத்துவ நெருப்பு நீர்த்துப் போயிருக்கிற இந்தக் காலகட்டத்தில், திடீரென்று ‘இந்தப் பூதம்’ புறப்பட வேண்டிய அவசியமென்ன என்ற வினா எல்லோர் உள்ளத்திலும் முளைத்திருப்பது என்னவோ உண்மை. “இந்த அறிக்கையையே எங்கள் ஆட்சி உத்தரப்பிரதேசத்தில் மலர்வதற்குப் பயன்படுத்தப் போகிறோம்”என்று கல்யாண் சிங் உள்ளிட்ட தலைவர்கள் முழங்குவதை வைத்துப் பார்க்கையில், சவப்பெட்டி வாங்குவதிலேயே லஞ்சம் புரிந்த ‘மாமனிதர்கள்’ வாழும் பாரதத்தில் எதுவும் நடக்கலாம் என்று மட்டுமே எண்ணத் தோன்றுகிறது. இங்கே மிக முக்கியமாக இந்திய நீதிதேவதைக்கு ஒரு ‘சபாஷ்’ போட வேண்டும்.

பொதுவாகவே இதுபோன்ற ஆணயங்கள் அமைக்கும்போதெல்லாம் எதிர்க்கட்சிகள் “ஏமாற்று வேலை” என்று வர்ணிப்பதுண்டு. பாதிக்கப்பட்டவர்களின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கு மட்டுமின்றி, உணர்ச்சிக் கொந்தளிப்பைச் சமன் செய்வதற்கும் அவை பயன்பட்டிருக்கின்றன. அவற்றிற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை வைத்துக்கொண்டு தனது வீட்டுக் குழந்தையைச் செல்லமாகக் கன்னத்தில் கிள்ளுவதைப்போல் கண்டிக்கலாம்; தண்டிக்க முடியாது. தேசத்துக்குத் தலைக்குனிவை ஏற்படுத்திய உயர்குலத்து உத்தமர்களை வெறுமனே ‘குற்றவாளிகள்’ என்று தூரத்தில் நின்று சுட்டிக்காட்டலாம். ஆனால் அவர்களுக்கு ஒரு மணிநேரச் சிறைத் தண்டனைகூட வழங்க முடியாது.

பற்கள் பிடுங்கப்பட்ட பாம்பு மாதிரி என்ன ஆணையமடா இது? பாம்பென்றால் விஷம் வேண்டும். இல்லையெனில் அது நைந்துபோன கயிற்றுக்குச் சமம். காலால் உதைப்பதற்குக்கூடத் தகுதிவுடையதன்று. அதனால்தான் ‘குற்றவாளி’என்று சுட்டிக்காட்டப்பட்ட கல்யாண் சிங், “ இந்த நாட்டிலே என்ன மாதிரி அரசியல் நடக்க வேண்டுமென்று அறிவுரை கூறுவதற்கு யார் இந்த லிபரான்?” என்று இடித்துரைக்கிறார். குற்றவாளிகள் நீதிபதிகளுக்குத் தண்டனை வழங்குகிற ஆணைய அமைப்புச் சட்டங்கள், மனிதர்களின் உழைப்பைக் கபளீகரம் செய்கிற முதலைகள். பொன்னான நேரத்தைச் சுரண்டுகிற பெருச்சாளிகள். பொதுநிதியை அரிக்கின்ற கரையான்கள்.

“குற்றமிழைத்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்” என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், இந்திய வெகுஜனத்தின் நாடி நரம்புகளெல்லாம் முறுக்கேறும் விதத்தில் வீரவசனம் பேசிய அதேநாள், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் கூறுகிறார்- “பாபரி மஸ்ஜித் ஓர் அவமானச்சின்னம். அது இடிக்கப்பட்டதற்காக நான் ஒன்றும் வெட்கப்படவில்லை” என்று. லிபரான் அறிக்கையில் ‘குற்றவாளி’என்று சுட்டிக்காட்டப்பட்டவர் அவர். “இந்திய அரசியல் சாஸனம் விதித்தபடி செயலாற்றுவேன்” என்று ராமர் பெயரால் சத்தியப் பிரமாணம் செய்த கர்மவீரர் அவர். “மஸ்ஜிதைக் காப்பாற்றுவேன்”என்று உச்ச நீதிமன்றத்துக்கும் தேசிய ஒருமைப்பாட்டுப் பேரவைக்கும் வாக்குறுதி அளித்த உத்தமர் அவர். அவரே முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபின்னரும் தேசத்தில் சர்வ சுதந்திரமாக உலா வருகிறார் என்றால் நிஜமாகவே என்ன ஆணையம் இது? என்ன சட்டத்தின் ஆட்சி இது?

மஸ்ஜித் இடிக்கப்பட்டு விழுந்து பத்து நாள்களுக்குப்பின்னர் சாவகாசமாக பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நீதிபதி மன்மோகன் சிங் லிபரானைத் தேடிக் கண்டுபிடித்து 1992 டிசம்பர் 16ஆம் நாள் விசாரணை ஆணையம் அமைக்கிறது நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு. சாவு வீட்டில்கூட எது சாதகம் என்பதைத் தேடும் கைதேர்ந்த அரசியல் விற்பன்னர் நமது பிரதமர். முதலில் ஆணைய அலுவலகம் செயல்பட்ட இடம் ஹரியானா. அதன் முக்கியத்துவம் உணர்ந்து அதற்கென்று புதுடெல்லியில் ஓர் இடம் ஒதுக்கக்கூட மனமில்லாத மத்திய அரசு. “அறிக்கைக்கு ஏன் இத்தனை காலதாமதம் நீதிபதி அவர்களே?”என்ற கேள்விக்கு “ஆணாயத்திற்குப் போதுமான சுருக்கெழுத்தாளர்கள்கூட இல்லை. ஊழியர்களுக்கிடையே ஒத்துழைப்புக் கிடையாது. ஆணையத்தின் வழக்கறிஞர் அனுபம் குப்தா பாதியிலேயே எழுந்து ஓடிவிட்டார். சாட்சியமளிக்கக் கூப்பிட்டால் யாரும் வருவதில்லை. சம்பந்தப்பட்ட மத்திய மாநில அரசு அதிகாரிகள், காவல்துறை ஜம்பவான்கள் ஆணையத்தை மதிப்பதே இல்லை. எப்படிச் செயல்பட முடியும்?” என்று திருப்பிக் கேட்கிறார் நீதிபதி லிபரான். சுதந்திர இந்தியாவின் நெடிய வரலாற்றில் இடம் பிடிக்கக்கூடிய மாபெரும் காரியத்தைக் கையிலெடுத்திருக்கிறோம் என்ற பொறுப்புணர்வோ நீதி சார்ந்த மனோபாவமோ அவரது நடவடிக்கைகளில் இடம் பெறவில்லை. தொடர் விசாரணையோ 1995ஆம் ஆண்டுதான் துவங்கிற்று.

“பிரதமர் நரசிம்மராவ் ஓர் அப்பாவி” என்று ஆணையம் கூறியிருப்பதை மக்கள் ஏற்கவில்லை.அயோத்தியில் மஸ்ஜிதுக்கு ஆபத்து. அதைப் பாதுகாப்பதற்கு அனுப்பப்பட்ட ராணுவம் ஃபைஸாபாத்திலேயே நிற்கிறது. 16 கிலோமீட்டர் இடைவெளி. கடமைவுணர்வுமிக்க இந்திய ராணுவத்தையே கற்சிலைகளாக மாற்றிய பெருமை நரசிம்மராவைச் சார்ந்தது. ஒரு தேர்ந்த பஜ்ரங் தலைவரைவிட இந்த விஷயத்தில் அற்புதமாகக் கடமையாற்றியிருக்கிறார் அவர். “ மஸ்ஜிதைக் காப்பாற்றுவதற்கு ஏன் ராணுவத்தைப் பயன்படுத்தவில்லை?” என்ற கேள்விக்கு, “படைகளை அனுப்புவது மட்டும்தான் மத்திய அரசின் வேலை” என்று மிகப் பொறுப்பாகப் பதிலளிக்கிறார் புன்னகை மன்னன். ஜவஹர்லால் நேருவும் லால் பஹதூர் சாஸ்திரியும் விஸ்வதாத் பிரதாப் சிங்கும் அலங்கரித்த ஆசனத்தில் ஓநாய்கள் படுத்துறங்குவது தேசத்தின் துரதிருஷ்டம். இதற்கெல்லாம் சென்ற தேர்தல்களில் காங்கிரஸ் விலை கொடுத்திருக்கிறது.

“கல்யாண்சிங்ஜி, 1990ஆம் ஆண்டு முலாயம் சிங் யாதவ் செய்ததைப்போல் நீங்களாவது மாநில காவல்துறையைப் பயன்படுத்தி மசூதியைக் கட்டிக் காத்திருக்கலாமே?” என்ற வினாவுக்கு “கரசேவகர்களைக் காப்பாற்றுவது மட்டும்தான் என் வேலை”என்று பெருமையுடன் புன்னகைக்கிறார் அவர். உத்தரப்பிரதேசத்தில் கல்யாண்சிங்கும், மத்தியில் நரசிம்மராவும் சேர்ந்து செய்த கூட்டுச் சதி என்று அறிவிப்பதற்கு நீதிபதி லிபரானை என்ன தடுத்தது என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

கரசேவையை ஆதரித்துப் பல பொதுக்கூட்டங்களில், குறிப்பாக டிசம்பர் 5ஆம் தேதி அடல் பிஹாரி வாஜ்பாய் அனல் கக்கியிருக்கிறார் என்ற ஆதாரங்களை சி.பி.ஐ. திரட்டியிருக்கிறது. ஏனோ தெரியவில்லை அது பற்றித் தனது கவனத்துக்கு வரவேயில்லை என்று கூறுகிறார் நீதிபதி. ஆணைய வழக்கறிஞர் அனுபம் குப்தாவோ நீதிபதி லிபரானை குறை கூறுகிறார். “ எல்.கே.அத்வானியைக்கூடக் குற்றம் சாட்டுவதற்கு நீதிபதி வெகுவாகத் தயக்கம் காட்டினார்” என்கிறார் குப்தா. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் தங்களுக்கென்று தனிக்கருத்துக் கொண்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தது. முக்கியமான ஆவனங்கள் ஏன் ஒளிக்கப்பட்டன என்பதற்கு அறிக்கை தெளிவாக விடையளிக்கவில்லை. பி.ஜே.பி. தலைவர் கோவிந்தாசார்யா வாஜ்பாயை ‘முகமூடி’ என்று வர்ணிக்க, பிரதமர் நாற்காலியில் வீற்றிருந்ததால், நீதிபதி லிபரான் வாஜ்பாயைக் ‘கடவுள் அவதாரம்’என்று நினைத்தாரோ என்னவோ அவருக்குச் சம்மன் அனுப்பக்கூட மறுத்துவிட்டார். “வாஜ்பாயிக்கு எதிரான உறுதியான ஆதாரங்கள் எதுவுமில்லை” எனக்கூறி அவரது அறிக்கையையே அசிங்கப்படுத்தியிருப்பது நீதியரசரின் நேர்மைமீது சந்தேகக் கருமை படர்வதற்குக் காரணமாக இருக்கிறது.

இறுதியில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, செல்வி உமா பாரதி, அசோக் சிங்கால், சுதர்சனம், வினாய் கட்டியார் உள்ளிட்ட 67  தர்மாத்மாக்களை ‘குற்றவாளிகள்’ என்று கண்டுபிடிக்கிறார். 1992 டிசம்பர் மாதம் 6ஆம் தேதியே வீதிகளில் கோலி விளையாடிக் கொண்டிருந்த பசங்களுக்கெல்லாம் தெரிந்த பகிரங்க விஷயம் 1000 பக்க அறிக்கையாக உருவெடுத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த பலர், “மஸ்ஜித் இடிப்புக்குத் திட்டம் எதுவும் வகுக்கவில்லை. நாங்கள் தடுப்பதற்காகவே அயோத்தி சென்றோம். கரசேவகர்களின் எழுச்சி எங்கள் கைகளைக் கட்டிப்போட்டுவிட்டது” என்று முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். அவர்களுக்குத் தேர்தல் சமயத்தில் முஸ்லிம் சமுதாயத்திடம் ஏதோ காரியம் ஆக வேண்டியிருக்கிறது. என்ன சித்து வேலை செய்தாவது அதிகாரத்தைக் கை பற்றியாக வேண்டும். அவர்கள் எப்போதெல்லாம் வெற்றியைக் குவித்தார்களோ அப்போதெல்லாம் முஸ்லிம்களின் வோட்டு வங்கி அவர்களுக்குப் பேருதவி புரிந்திருக்கிறது. இந்துத்துவா பேசிக்கொண்டே ஜின்னாவை உச்சி முகர்வது அவர்களுக்கு மட்டுமே கை வந்த கலை. இப்படி இரட்டை வேஷமிடுவதில் அவர்களது திறமை அலாதியானது.

முக்கியமான, ஆனால் மிக மோசமான ஒரு விஷயம் பற்றி அறிக்கை மௌனம் சாதிக்கிறது: இந்தச் சூழ்ச்சியில் அரசு மற்றும் காவல்துறை அத்காரிகளின் பங்கு கணிசமானது. அவர்களில் சிலர் துணிந்து கரசேவைக்குத் துணை போயிருக்கின்றனர். ‘யார் அவர்கள்?’ என்று அடையாளம் காட்டப்படவில்லை. மதவெறி பிடித்த அரசு அதிகாரிகள் இன்னும் பாதுகாப்பாக இருப்பதற்கு யார் காரணம்? என்ன காரணம்? அவர்களையெல்லாம் தோலுரித்துக் காட்டாமல் என்ன அறிக்கை வேண்டியிருக்கிறது?

‘அகண்ட பாரதம்’ என்ற நிறைவேறாக் கனவுக்குச் சொந்தக்கார ஆர்.எஸ்.எஸ்., ‘முஸ்லிம்கள் எல்லாம் பாகிஸ்தானுக்குக் குடியேறிவிட வேண்டும்’ என்று தன்னிலை மறந்து அடம் பிடிக்கிற விஷ்வ ஹிந்து பரிஷத், சிறுபான்மையினருக்கு எதிராகச் சூலாயுதம் தரிக்கிற பஜ்ரங் தளம் ஆகிய மதவெறிக் கும்பலுக்கு மத்தியில் நாடு சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. “நாட்டில் நீங்கள் என்ன அட்டூழியம் வேண்டுமானாலும் செய்யலாம். சட்டம் உங்களைத் தண்டிக்காது. அரசு உங்களுக்குத் துணை நிற்கும்”என்று கரசேவகர்கள் உறுதியளிக்கப்பட்டிருக்கிறார்கள்; ஊக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் கொலைவெறி பிடித்தவர்கள் மாதிரி அவர்கள் கட்டுக்கடங்காமல் இந்த இழிசெயலில் குதிக்க முடிந்தது என்று நீதிபதி தெளிவுபடுத்துகிறார். “நீ எத்தனை முஸ்லிம்களை வேண்டுமானாலும் கொன்று குவிக்கலாம். தண்டனை கிடையாது. சன்மானம் உண்டு” என்று ஊக்கினால் என்ன நடக்குமோ அதுதான் அயோத்தியிலும் பின்னர் குஜராத்திலும் நிகழ்ந்திருக்கிறது.

இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது?

‘ஆனால் கரசேவகர்களை அப்படி ஊக்கப்படுத்தியவர்களையேனும் தண்டித்தே தீர வேண்டும்’ என்ற உறுதி அறிக்கையிலேயோ அல்லது அரசு நடவடிக்கைக் குறிப்பேட்டிலோ தெளிவாக இடம் பெறவில்லை. ‘அரசியலுக்கு மதத்தைப் பயன்படுத்துபவர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். தேர்தல்களில் கிரிமினல்கள் பங்கேற்பதைத் தடை செய்ய வேண்டும்’ என்பன போன்ற பொதுவான சிபாரிசுகளுக்கு 17 ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை. பாதிக்கப்பட்ட தரப்புக்கு ஆறுதலோ தேறுதலோ தருகின்ற அம்சங்கள் எதுவுமின்றி வெறுங்கையை விரிக்கிறது அறிக்கை. சிறுபான்மையினர் சம்பந்தப்பட்ட அத்தனை ஆணையமும் வெறும் கண்துடைப்பு என்பதை இந்த அறிக்கையும் ஆமோதிக்கிறது.

இத்தகைய கயவர்களை விசாரிப்பதற்கு ஓர் ஆணையம். அதற்கு 48 முறை கால அவகாசம் நீடிப்பு. மக்கள் பணத்தில் ரூபாய் 8 கோடி செலவு. அப்படியும் 399 முறை ஆணையம் உட்கார்ந்து விசாரித்திருக்கிறது. 100 கோடி பொதுமக்களில் சுமார் 100 பேர் மட்டுமே சாட்சியம் அளித்தனர்.

அதனால் என்ன நியாயம் கிடைத்துவிடப் போகிறது?

ஆயிரம் பக்கத்து ஆணைய அறிக்கை இறுதியில் சுண்டல் மடிப்பதற்குத்தான் பயன்படப் போகிறது.

**

நன்றி : ஏ.ஹெச்.ஹத்தீப் | E- Mail : hatheeb@gmail.com
**

Excerpts from the Liberhan Commission report : hindustantimes

On Vajpayee and other BJP leaders

* LK Advani, M.M. Joshi and A.B. Vajpayee were icons of the movement.
* It cannot be assumed even for a moment that Vajpyee, Advani and Joshi did not know of the designs of the ‘Sangh Parivar’.
* Vajpayee, Advani and Joshi were the ‘mukhota’ (mask) of the ‘Sangh Parivar’. Without these leaders, the RSS might not have been able tolegitimise its hold on the Indian system.
* “Pseudo moderates” (Vajpayee, Advani and Joshi) cannot be given the benefit of the doubt and exonerated of culpability. The ‘pseudo moderate’ leadership of the BJP was a tool in the hands of the RSS. These leaders stood to inherit the political successes engineered by the RSS.
* The BJP was and remains an appendage of the RSS, which had the purpose only of providing an acceptable veneer and a façade for the brash members of the ‘Sangh Parivar’.
* The ‘pseudo moderates’ violated the trust of the people and allowed their actions to be dictated by a small group of individuals who used them to implement agendas unsanctioned by the will of the common person.

On Kalyan Singh

* Kalyan Singh, his ministers and handpicked bureaucrats created manmade and cataclysmic circumstances, which could result in no consequence other than the demolition of the disputed structure.
* Chief Minister Kalyan Singh and his coterie supported the destruction of the mosque with tacit, open, active and material support at every step.
* Kalyan Singh stood on guard against the possibility of any pre-emptive or preventive action against by the central government, Supreme Court or any other instituti Kalyan Singh transferred officials who were unwilling to take his line.
* Kalyan Singh and his trusted lieutenants spared no lie before the highest authoritiesto befool them and tie their hands with the niceties of our constitutional democracy.
* Hands that wielded batons and carried guns were friendly to ‘kar sevaks’.

On Role of Sangh Parivar and Muslim Organisations

* The Sangh Parivar spent long years and mobilised the immense media clout to numb the sensibilities of the masses, and at the very least to ensure the complete absence of resistance to its designs.
* As the inner core of the ‘Sangh Parivar’, the top leadership of the RSS, VHP, Shiv Sena, Bajrang Dal and the BJP bear primary responsibility (for the demolition).
* The Ayodhya campaign demonstrated that the ‘Sangh Parivar’ is a highly successful and corporatised model of a political party, with a highly efficient organisational structure.
* Selective Muslim leaders, obsessed with building personal or individual influience, were merely bystanders during the entire period.
* The Muslim leadership provided the rabid Hindu ideologues sufficient cause to instill fear amongst common citizens.
* The Muslim leadership failed the community and its electorate by being unable to put forth a logical, cohesive and consistent point of view.
* The Muslim leadership also failed to protect the life and property of innocent masses who got caught up in communal riots.

On Role of Civil Servants

* Police and bureaucrats turned a blind eye to misadventures of polity and actively connived and curried favor with the Chief Minister and ‘Sangh Parivar’ by systematically paralysing the state machinery.
* State government leaked information that police had been told not to retaliate against ‘kar sevaks’.
* Police, district magistracy,
local administration and state machinery openly supported the RSS and its agenda.
* Police and administrators were the executors of the designs of the RSS, VHP, BJP, Bajrang Dal, and Shiv Sena etc.
* Those in-charge of the state executive aided and abetted the dismantling of the security apparatus.
* The administrative officers failed to discharge their solemn duties as a counterbalance to the political executive.
* The police, which was supposed to protect and preserve the life and property of the common man, was negligent to its sworn duties.
* Civil servants and police could have attempted to stem the tide of communalism and the rape of democracy. But they chose to remain deaf, dumb and blind throughout.

**

Courtesy : hindustantimes

***

Refer : Liberhan Commission – wikipedia

‘புதிய’ பார்வை : கமல்ஹாசன் Vs இராம கோபாலன்

‘புதிய பார்வை’ இதழில் வெளியான கமல்ஹாசனின் பேட்டியை பிறகு பதிவேன். இப்போது அந்தப் பேட்டி சம்பந்தமாக இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் இராம கோபாலனின் ‘அதிரடி’க் கருத்துக்கள். புதியபார்வை / நவம்பர் 16-30 , 2009ல் வெளியானது. மாற்றுக் கருத்துக்களை தனது திறந்த வெளி மேடையில் இடம் பெற முடிவு செய்திருக்கிறதாம் ‘புதிய பார்வை’. ‘கூர்மையான இடங்களிலே உட்கார்ந்துகொண்டு பஜனை பாட முடியாது, சமன்படுத்துங்கள்’ என்ற வாஜ்பாய்க்கும் விரைவில் இடம் கொடுக்கட்டும். சரி, இராம கோபாலனை சந்தித்தவர் பெயர் : வசீரன். முஸ்லிம் நிருபரா? தெரியவில்லை. ‘ஆயிரம் வாலா சரவெடி போன்று வெடித்துத் தள்ளிவிட்டார் மனுஷன்!’ என்று வியக்கிறார். ‘கலைஞரைப் போன்றே கமல்ஹாசனும் ஒரு இந்து விரோதி’ என்பது ‘புதிய பார்வை’ தந்த தலைப்பு. அப்படியா உலக நாயகா?

**

புதிய பார்வை : கமல் படங்கள், நடிப்புப் பற்றி உங்கள் கருத்து?

இராம கோபாலன் : கமல்ஹாசன் அவருடைய துறையில் அவர் நன்றாகவே விளங்குகிறார். ஆனால் அவரை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுகிற ஜால்ரா கும்பலின் நடவடிக்கைகள் முகம் சுளிக்க வைக்கின்றன. அதை அவரும் ரசிப்பதுதான் வேடிக்கை.

சினிமா பார்ப்பீர்களா? எந்த மாதிரியான படங்கள் பார்ப்பீர்கள்?

எப்பொழுதாவது பார்ப்பேன். கடைசியாக பார்த்தது கமல்ஹாசன் நடித்த ‘உன்னைப்போல் ஒருவன்’ படம். ரஜினிகாந்த், விஜயகாந்த், அர்ஜூன் போன்றோர் நடித்த, தேசபக்தியை தூக்கலாக காண்பிக்கிற படங்கள், ராணுவம், காவல்துறையை உயர்வாக போற்றுகின்ற படங்களை நேரம் கிடைத்தால் பார்ப்பேன். எந்நேரமும் வாய்ப்பும் கிடைப்பது மிகவும் அரிது.

முகலாய மன்னர்கள் நம் நாட்டை வளப்படுத்தினார்கள் என்று கமல்ஹாசன் கூறியுள்ளாரே?

கலப்படமில்லாத கம்யூனிஸ்ட் பொய். கோவிலை உடைத்து, மக்களை மதம் மாற்றி, பசுக்களை வெட்டி, பெண்களை தூக்கிக் கொண்டு போய் கற்பழித்து, மதம் மாற மறுத்தவர்களை துண்டு துண்டாக வெட்டி நம் நாட்டை வளப்படுத்தினார்கள் மொகலாய மன்னர்கள். யதுநாத் சர்க்கார், ஆர்.சி. மஜூம்தார், கே.எம்.முன்சி போன்றவர்கள் எழுதிய புத்தகங்களில் இஸ்லாமியர்களின் கொடூர ஆட்சி அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் உடைக்கப்பட்ட கோவில்கள், இவர்கள் செய்த கொடுமைகளை மேலும் தெரிந்துகொள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ‘தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்’ – கே. கே. பிள்ளை என்ற புத்தகமும், எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் போன்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் நூல்களுமே சான்று. மேலும் தகவல்களுக்கு ‘சௌத் இந்தியா அண்ட் இட்ஸ் முஸ்லிம் இன்வேடர்ஸ்’ என்ற புத்தகத்திலும் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கோவில் சிற்பங்கள் உடைக்கப்பட்டிருக்கின்றனவோ, அவை எல்லாம் யாருடைய கை வரிசை என்பது குழந்தைக்கு கூட தெரியும்.

மதுரை மீனாட்சிய்யம்மன் கோவில் மாலிக்கபூர் படையெடுப்பின்போது உடைக்கப்பட்டதே. ஸ்ரீரங்கம் கோவில் 42 ஆண்டுகள் மூடிக் கிடந்ததே. இவை எல்லாம் கமலுக்குத் தெரியாதா?

கர்நாடகத்தில் ஹளபேடு, கோவாவில் உள்ள அபூர்வ சிற்பங்களை நாசப்படுத்தியது யார்? என்பதை கமல் மட்டும்தான் அறியமாட்டார்.

மேற்சொன்ன விசயங்களில் சிலதான் கமலின் பார்வையில் முகலாய மன்னர்கள் நம் நாட்டை வளப்படுத்தியதோ!

‘இராமர் பிறந்தது ஆப்கானிஸ்தானில்தான்.. இராமருக்கு ஆபாகானிஸ்தானில் கோவில் கட்ட வேண்டும் என்ற முதல்வர் கலைஞரின் நிலைப்பாடுதான் எனது நிலைப்பாடும்’ என்று கமல் சொல்லியிருக்கிறாரே?

சுத்த பேத்தல். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார். நடக்காத சம்பவத்தை நடந்ததாகக் கூறுவதைக் கேட்டு பைத்தியக்காரன் கூட வாய்விட்டுச் சிரித்து விடுவான்.

ராமாயணத்துக்கும் காந்தாரிக்கும் என்ன சம்பந்தம்? காந்தாரி (மஹாபாரதம்) பிறந்ததுதான் காந்தாரத்தில். ஸ்ரீராமர் பிறப்புக்கும் இந்த இடத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

கோசல நாட்டின் தலைநகரம் தான் அயோத்தி. இங்குதான் ஸ்ரீமார் பிறந்தார். பெண்கள் பிரசவத்திற்கு பிறந்த வீட்டிற்கு போவது என்பது ராஜஸ்தானில் பழக்கமே இல்லை.

கமலுக்கு வரலாறும் தெரியாது. புவியியலும் தெரியாது. நல்ல குரு, நல்ல வழிகாட்டி..

கமல்ஹாசன் இம்சை அரசன் ’25’ஆம் புலிகேசியாக மாறி வரலாற்றை திரித்துக்கூற முயற்சிக்கிறார். அது எக்காலத்திலும் முடியாது.

முதல்வர் கலைஞருக்கு எப்போதுமே குழப்பம்தான். கமல் கலைஞர் கருத்தை ஆமோதிக்கிறார்!

பயங்கரவாத சம்பவங்களை மதத்தோடு சம்பந்தப்படுத்துவது தவறு என்ற கமலின் கருத்துக்கு உங்கள் பதில்?

எல்லா முஸ்லீம்களும் பயங்கரவாதிகள் அல்ல. ஆனால் பயங்கரவாதிகள் எல்லோரும் முஸ்லீம்களாக இருக்கிறார்கள் என்பதை நடுநிலைவாதிகள் எல்லோரும் உணர்ந்து கொள்கிறார்கள். 18/09/2008 நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் பொருளாதார நிபுணரும் , பிரபல எழுத்தாளருமான எஸ். குருமூர்த்தி ‘மதநூலும் பயங்கரவாதமும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில் பயங்கரவாதிகள் தங்களுடைய செயல்களுக்கு அல்லாவின் கட்டளைதான் காரணம் என்று குறிப்பிட்டிருப்பதை ஆதாரத்துடன் எவரும் மறுக்கவில்லை.

டெல்லி, அயோத்யா, மதுரை, மும்பை, அகமதாபாத்..போன்ற பல இடங்களில் குண்டு வைத்தவர்கள் ஊடகங்களுக்கு மின் அஞ்சல் மூலம் முன் அறிவிப்பு செய்துள்ளார்கள். குரானின் 9 : 123, 9:14 வசனங்கள் ஆகியவற்றை ஆதாரமாக காட்டியிருப்பதை இஸ்லாமிய மத அறிஞர்கள் கூட இதை கண்டும் காணாமல் இருப்பது ஏன்? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.

‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் மூலம் முஸ்லீம்கள் காயப்படுத்துவது என் நோக்கம் அல்ல, அதே நேரத்தில் முஸ்லிம்களை காப்பாற்ற வேண்டும் என்பதும் என் நோக்கம் அல்ல என்று கமல் கூறியுள்ளாரே..?

கமல் கூறுவது வேறு. ஆனால் முஸ்லிம்களை காப்பாற்றுவதுதான் அவருடைய உள்நோக்கம் என்பது நடுநிலையாளர்களுக்கு புரியும்.

அவரே ‘ஹே ராம்’ இந்து தீவிரவாதத்தை எடுத்துக்காட்டிய படம் என்று கூறியிருக்கிறாரே! எனவே அவரும் தி.மு.க தலைவரை போல இந்து விரோதிதான்.

‘ஹே ராம்’ திரைப்படம் இந்துத் தீவிரவாதத்தை எடுத்துக்காட்டிய படம் என்று இப்போது கமல் கூறியிருப்பது ஏன்?

ஹே ராம்! அவருக்கே வெளிச்சம்.

மத வெறியின் காரணமாகவே பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தவறான முன்னுதாரணம். இதற்காக வருத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளாரே?

சிதம்பரத்திற்கு பொருளாதாரம் தெரியும், வரலாறு தெரியாது. பாபர் அயோத்யா, மதுரா, காசி ஆகிய கோவில்களைத் தவிர ஏறத்தாழ 3000 கோவில்களை இடித்தார்.

அந்த இடங்களில் எல்லாம் மசூதிகளைக் கட்டினார். இன்றைக்கும் காசிக்கும், மதுராவிற்கும் போய் வருகிறவர்கள் இடிபாடுகளையும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களையும் பார்த்து ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

அயோத்தியில் பாபர் , ராமர்கோவிலை உடைத்து ஒரு கட்டிடம் கட்டினான். அது மசூதியே அல்ல. மசூதி தூண்களில் தெய்வ சிற்பம் இருக்காது.

முகம், , கை கழுவ ஒரு குளம் இருக்கும். வலம் வருவதற்கான ஏற்பாடு இருக்கது.

நீதிமன்ற உத்தரவுப்படி அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட போது விக்ரமாதித்யன் கட்டிய கோவிலின் மண்டபங்கள் காணக் கிடைத்தன.

ராமர்கோவிலை காப்பாற்ற 43 போர்கள் நடந்தன, ஏறத்தாழ 3 லட்சம் பேர் பலியானார்கள். இதில் ராஜஸ்தானை சேர்ந்த 3 ஆயிரம் பெண்களும் அடங்குவர்.

இந்த ஆதாரங்கள் எல்லாம் அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டன. புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்களும் ஆய்வாளர்களும் இதனை வெளியிட்டிருக்கிறார்கள்.

பாவம், ப. சிதம்பரத்திற்கு அரசியல் பண்ணவே நேரம் சரியாக இருக்கிறது. வரலாற்றை எங்கு படிக்கப் போகிறார்?

எனவே வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பசை இல்லாத வாதங்களை வெளியிட்டு யாரையோ திருப்திப்படுத்துகிறார்.

மத வெறியின் காரணமாகவே ராமர்கோவில் இடிக்கப்பட்டது. இதற்காக முஸ்லிம்கள் மன்னிப்பு கோரவேண்டும் என்று இன்று கேட்கவில்லை. நாடு முழுவதும் அமைதியாக இருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் சில முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பரித்து ராமர் கோவிலை நினைவுபடுத்தி வருகிறார்கள். நன்றி. டிசம்பர் 6ஐ மறக்க வேண்டாம்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஆன்மிகத் தலைவர்களையும் அழைக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கையை முதல்வர் கண்டுகொள்ளாவிட்டால் என்ன செய்வீர்கள்?

உரிய காலத்தில் உரிய நடவடிக்கையை எடுப்போம்.

பகவத் கீதையுடன் கோபாலபுரத்துக்கு திடீர்ப் பிரவேசம், கலைஞருடன் அதிரடி சந்திப்பு, திரும்பி வரும்போது உங்கள் கையில் கலைஞர் அளித்த கி. வீரமணி எழுதிய ‘கீதையின் மறுபக்கம்’ என்ற புத்தகம்… மறக்க முடியாத சம்பவம் இது. நம்முடைய கேள்வி, அந்த கீதையின் மறுபக்கம் நூலை நீங்கள் படித்துவிட்டீர்களா? பகிர்ந்து கொள்ள அதில் விஷயங்கள் எதுவும் இருக்கிறதா?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகும் இன்றும் கூட மக்கள் பக்தி சிரத்தையோடு பகவத்கீதையை படிக்கிறார்கள். விளக்கவுரையும் கேட்கிறார்கள். கி. வீரமணி புத்தகத்தை கலைஞராவது படித்திருப்பார் என்பது கூட சந்தேகம்தான்.

தினமும் ஐந்துவேளை தொழுகை, இது இஸ்லாமியர்களின் வழக்கம். ஞாயிறு அன்று தவறாமல் சர்ச்சுக்கு விசிட், பிரேயர்..இது கிறித்துவர்கள். ஆனால் இந்துக்கள் இப்படி இல்லையே? அவர்களிடம் பக்தி குறைந்து விட்டதா?

குறிப்பிட்ட நேரத்தில்தான் குறிப்பிட்ட முறையில்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இந்து தர்மம் கட்டாயப்படுத்தவில்லை.

வழிபாட்டு விசயத்தில் பூரண சுதந்திரம் அளித்திருப்பது இந்து மதத்தில் மட்டும்தான்.

திருவண்ணாமலை கிரிவலத்தில் கூடுகிற கூட்டம்; புதிய புதிய கோவில் கும்பாபிஷேகத்தில் கூடுகிற கூட்டம், பிரதோஷ வேளையில் சிவன் கோவில்களில் கூடுகிற கூட்டம், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் கூடுகிற கூட்டம், சபரிமலை, பழனிமலை, திருப்பதிமலை போன்ற புனிதத் தலங்களில் கூடுகிற கூட்டம்… பக்தி அதிகரித்துள்ளது என்பதை காட்டவில்லையா?

***

நன்றி : புதிய பார்வை, வசீரன், தாஜ்

தேசத் துரோகம்

பாபர் மசூதி இடிக்கப்பட்ட அடுத்தநாள் வெளியான தினமணியின் தலையங்கம் இது. ‘மதச்சார்பற்ற நாடு’ என்ற தனிச் சிறப்புடன் தலைநிமிர்ந்து நின்ற இந்தியாவை தலைகுனிய வைத்த தினம் ‘டிசம்பர் 6′. அன்றுதான் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. எதிர்க்கட்சியின் மிருக வெறியும் ஆளுங்கட்சியின் கோழைத்தனமுமே அதற்குக் காரணம் என்பதைச் சுட்டிக் காட்டும் தலையங்கம்’ என்கிறது தினமணி. தினமணி வைரவிழா மலர் 1994லிருந்து..

***

தேசத் துரோகம்

தினமணி ( (7/12/1992)

ஞாயிறன்று அயோத்தியில் நடந்த அட்டூழியம் நமது தேசத்தின் கவுரத்துக்கே இழுக்காகும். ஒரு மதத் தொடர்பான இலக்கை அடைவதற்கு ஏமாற்று வேலை, மிருக வெறிச் செயல்கள் ஆகியவற்றில் இறங்கக்கூடிய, தயாரான நிலையில் இந்தியாவில் முக்கிய எதிர்க்கட்சி இருக்கிறது என்பதை நாட்டுக்கு அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் ஆளுங்கட்சியோ முதுகெலும்பு இல்லாமல் செயல்படுவதில் புதிய சாதனை நிகழ்த்தியிருக்கிறது. தன்னுடைய கையாலாகாத்தனத்தை செயலற்ற, கையைக் கட்டிக் கொண்டிருக்கும் உத்தியாக காங்கிரஸ் கட்சி மாற்றிக் கொண்டிருக்காவிட்டால், மதில்மேல் பூனையாக நடந்து கொள்ளுதல், நாச வேலை இவற்றின் மூலம் அரசியல் லாபம் பெறலாம் என்று பாரதீய ஜனதா கட்சி நம்பியிராவிட்டால் கடந்த சில வருஷங்களாக மசூதி, கோவில் என்ற பெயரில் நீடித்து வந்த பிரச்சினை இந்த அளவுக்கு பூதாகரமாக உருப்பெற்றிருக்காது. ஞாயிறன்று நடந்த அறிவுக்கு ஒத்துவராத, ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்களால் ஏற்கனவே வகுப்புவாத, தீவிரவாதப் போக்கால், நலிந்த நிலையில் உள்ள நமது சகோதரத்துவ உணர்வு இன்னும் பாதிப்புக்குள்ளாகும் என்பதில் கொஞ்சம்கூட சந்தேகமில்லை.

அயோத்தியில் நடந்த சம்பவங்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பா.ஜ.க. தலைவர்கள் கையை விரிக்கலாம். ஆனால், அவர்கள் சொல்வது உண்மை என்று நம்பும் அளவுக்கு யாரும் அறிவில்லாதவர்கள் அல்ல. அயோத்தியில் நடந்த அட்டூழியங்களும், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகியவற்றின் தலைவர்களின் சொல்படி நடப்பதற்கு அவர்கள் தயாராகிவிட்டார்கள் என்பதை கடைசி நாள்களில் நடந்த சம்பவங்களும் உறுதிசெய்கின்றன. தங்களது சிந்தனையைக் கட்டுப் படுத்தும் பொறுப்பை தீவிரவாதிகளிடம் விட்டுவிட்டார்கள் என்பதை அதற்கடுத்து அவர்கள் வெளியிட்ட அறிவிப்புகள் உறுதிசெய்கின்றன.

உச்ச நீதிமன்ற ஆணை மீறப்படாது என்று உ.பி. முதல்வர் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த உறுதி மீறப்பட்டுவிட்டது. அரசியல் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பும் வெட்கமில்லாமல் கைகழுவி விடப்பட்டது. அதற்குப் பிறகு, முதல்வர் பதவியிலிருந்து விலகுவதைத் தவிர கல்யாண் சிங்கிற்கு வேறு வழியில்லை. சங்கிலித் தொடர்போல் நடந்த சம்பவங்கள் அவர்கள் கையைமீறி நடந்ததாக கூறும் கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உச்ச நீதிமன்றம் கோரியபடி பிரமாண வாக்குமூலங்களை தாக்கல் செய்துவிட்டு இத்தைகைய எதிர்பாராத சம்பவத்தை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் கூறினால் அதையும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மிகவும் அச்சம் தருவது என்னவென்றால் இந்த நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு மாநில முதல்வரும், அவரது கட்சியும் ஏமாற்றுவதையே தங்களுடைய நடைமுறை உத்தியாகக் கொண்டிருப்பதும், தாங்கள் நிச்சயமாக அமல்படுத்த விரும்பாத நீதிமன்ற ஆணையை அமல்படுத்துவோம் என்று உறுதியளிக்கும் ஆணவப்போக்கும்தான்.

ஞாயிறன்று நடந்த சம்பவங்கள் பிரதமர் நரசிம்ம ராவின் அரசியல் அறிவுக் கூர்மைக்கு பெரும் பாராட்டு என எடுத்துக் கொள்ளமுடியாது. முடிவு எடுக்காமல் இழுத்துப் போகும் போக்கை அவர் புதிய நிர்வாக கலாசாரமாக உயர்த்தியிருக்கிறார். ஆனால், தேசத்துக்கு ஏற்படும் பேரழிவைத் தடுக்க பிரதமர் ஒருவர் உறுதியாகச் செயல்பட வேண்டிய நேரத்தில் தவறிவிட்டார் என்பதுதான் அவருக்கு இறுதியாகக் கிடைத்த லாபம். இந்த முதுகெலும்பில்லாத கோழைத்தனம் இந்தியாவால் தாங்கிக்கொள்ளமுடியாத அளவுக்கு பெரும் பளுவைத் தந்திருக்கிறது.

அரசியல் லாபத்திற்காக ஆசைப்படுகிறவர்கள் கொள்கைப் பிடிப்பற்ற கும்பலினால் வழிநடத்தப்படுகிற தலைவர்கள் ராவும், டாக்டர் ஜோஷியும் என்பதை உலகுக்கு உணர்த்திவிட்டார்கள். இத்தைகையவர்களை சரித்திரம் மன்னிக்காது. நிலைகுலைந்து போயிருக்கிற இந்த நாட்டின் நம்பிக்கை மீண்டும் நிலைப்படுத்தப்பட வேண்டும். இதனை ‘புதிய கரசேவை’ – ஆக்கபூர்வமான கரசேவை ஒன்றினால்தான் சாதிக்க முடியும். இந்தக் கரசேவைக்கு குடியரசுத் தலைவர் தலைமை தாங்க வேண்டும். தவறுகளைச் சீர்செய்யும் நடவடிக்கையாக தேசிய ஒற்றுமை, அயோத்தியில் சமரசத்தைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். துரோகம் இழைக்கப்பட்ட இந்த நாட்டுக்கு ராவ்களும், ஜோஷிகளும் , கல்யாண் சிங்குகளும் இதனை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

**

நன்றி : தினமணி, தாஜ்

**

பார்க்க : பாபர் மசூதி – விக்கிபீடியா &  ஒரு 9324 வருஷத்துக் கதை! – பா. ராகவன்