வெற்றியும் விஷாலி கண்ணதாசனும்

”If you don’t see yourself as a winner, then you cannot perform as a winner'”  என்று எஸ்.எம்.எஸ் வந்தது ஜபருல்லாநானாவிடமிருந்து. நானா இப்பொ தமிழ்சீரியல் வசனங்களைக் குறிப்பெடுப்பதை விட்டுட்டாஹா போல! தேடினால் Ziglar சொன்னதாக கூகுள் சொல்கிறது. என்னதான் அது சொல்லாது? ’வெற்றி’ என்று டைப் செய்தால்  4,990,000 பக்கங்கள் தருகிறது; ’Success’ என்று டைப் செய்தாலோ ’1,120,000,000’ பக்கங்கள் தருகிறது. மொழி வேறுபடும்போது வெற்றியும் வேறுபடுகிறது போலும். இந்த வெற்றியைப் பற்றி நினைத்ததும் ‘வெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலி இல்லை’ என்ற கண்ணதாசன் வரிகள் ஞாபகம் வந்து அதன் தொடர்ச்சியாக கண்ணதாசன் மகன்களில் ஒருவர் சொன்ன காமெடியும் ஞாபகத்திற்கு வந்தது. சில நாட்களுக்கு முன்பு நண்பர் தளவாய் சுந்தரத்தின் வலைப்பதிவில்  காந்தி கண்ணதாசன் தனது தந்தையைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தபோது பார்த்திருந்தேன். காமெடி பண்ணியது அவரல்ல; அவருடைய தம்பிகளில் ஒருவர். பெயர் கமல். படித்ததும் விழுந்து விழுந்து சிரித்தேன். நீங்களும் ஏற்கனவே விழுந்திருக்கலாம். இருந்தாலும் மீண்டும் விழுவதில் தப்பே இல்லை. விழுந்தால் வெற்றி பெறலாம் என்பதால் சொல்கிறேன். அது ஒரு கின்னஸ் ரிகார்டாகப் போகும் இல்லையா?

காந்தி கண்ணதாசன் சொல்கிறார் இப்படி:

’சில நாட்களில், வேலை காரணமாக இரவு நேரமாகி அப்பா வீட்டுக்கு வர நேரும் பொழுது, வந்தவுடன், “எந்திரிங்கப்பா, வாங்க உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம்” என்று எல்லோரையும் எழுப்புவார். அப்புறம் இரவு ஒரு மணி வரை உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வோம். ஒருநாள் இரவு பேசிக்கொண்டிருக்கும்போது, “சீக்கிரம் நான் செத்துருவேன் போல் இருக்குப்பா” என்று அப்பா சொன்னார். அதற்கு கமல், “அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. எனவே, நீங்க கவலைப்படாதீங்கப்பா” என்றான். “ஏம்பா அப்படிச் சொல்றே” என்றார் அப்பா. கமல் சொன்னான்: “நல்லவங்கதான் அப்பா சீக்கிரம் சாவாங்க. அதனால உங்களுக்கு வாய்ப்பு குறைவு.” நாங்கள் எல்லோரும் பயங்கரமாகச் சிரித்துவிட்டோம். அப்பாவும் விழுந்து விழுந்து சிரித்தார்’.

கலகலப்பான அப்பா, கலகலப்பான பிள்ளைகள்.

அவருடைய பிள்ளைகளில் கவிதாயினி விஷாலி கண்ணதாசனை எனக்குப் பிடிக்கும். களையான முகமும் கம்பீரமான தமிழுமாக அசத்துவார். அழகாகப் பாடுவார். தொலைக்காட்சி சேனல்களில் ஆரம்பத்தில் அவர் நுழைந்தபோது அலட்டினார் என்றும் கல்யாணமானதும் அடக்கமாக மாறினார் என்றும் நண்பர்கள் சொல்வார்கள். அஸ்மா, கல்யாணமானால் ஆண்தானே அடங்கிப் போவான்? அதை விடுங்கள். சென்றவாரம் வெள்ளிக்கிழமை காலை எதேச்சையாக ராஜ் டி.வியைப் பார்த்தபோது ‘புதியதோர் கவிஞன் செய்வோம்’ என்ற நிகழ்ச்சியைப் பார்த்தேன். மறு ஒளிபரப்பாக இருக்கலாம்; தெரியவில்லை. நிகழ்ச்சி பிடித்திருந்தது. ‘பட்டாம்பூச்சிக்கு பல்வலி’ என்றெல்லாம் புதிய கவிஞர்கள் தன் புலமையைக் காட்டியபோது பல் நிஜமாகவே சுளுக்கிக் கொண்டது – எனக்கும் விஷாலிக்கும். ’யதார்த்தமா சொல்லனும்னா… தேறும்’ என்று சில கவிஞர்களை விஷாலி  தேற்றினார்.

புதுக்கோட்டை ராமச்சந்திரன் என்பவர் பாடியதை மட்டும் விஷாலி மிகவும் ரசித்தார், என்னைப்போலவே. தேர்வும் செய்தார். அவசரமாக அப்போது ’லபக்’கென்று Zen-ல் பிடித்ததை இங்கே பதிவிடுகிறேன். ஜெனிஃபராக விஷாலி மாறியது வெற்றியா தோல்வியா என்று வெறியோடு வினவ வேண்டாம். இந்த டானிக்-ஐ குடியுங்கள். இப்போதெல்லாம், நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்வது ரொம்ப அவசியம். அவ்வளவு கஷ்டம்!

***

நன்றி :  விஷாலி கண்ணதாசன் , ராஜ் டி.வி

எனர்ஜி டானிக்

இந்தவார குங்குமம் இதழிலிருந்து, நன்றிகளுடன்… உரையின் ஆங்கில மூலம் இங்கே இருக்கிறது.  சில பகுதிகளை 2005-லேயே அருணா தந்திருக்கிறார் தமிழில். இப்போது காவிரிமைந்தனும்.  சகோதரர் வெங்கட்ரமணனின் அஞ்சலியை முதலில் பார்த்துவிட்டு உரையை வாசியுங்கள். உரையின் ஒலிக்கோப்பு அல்லது காணொளியின் சுட்டி கிடைத்தால் சொல்லுங்கள். இணைக்கிறேன். நன்றி.

**

பசித்திரு

கடந்த 2005ம் ஆண்டு, ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஸ்டீவ் ஜாப்ஸ் நிகழ்த்திய உரை, சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் எனர்ஜி டானிக். அந்த உரையின் சுருக்கம் இங்கே..

*

கல்லூரிப் படிப்பை பாதியில் தலைமுழுகியவன் நான். நான் பிறப்பதற்குமுன்பே இது தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. திருமணமாகாத ஒரு கல்லூரி மாணவி என் அம்மா. வளர்க்க முடியாமல் தத்துக்கொடுக்க தீர்மானித்தார். தத்தெடுக்க வந்தவர்கள் ஆசைப்பட்டது பெண் குழந்தையை. அவர்கள் காத்திருந்த ஒரு நள்ளிரவில் நான் ஆண்குழந்தையாகப் பிறந்துவிட்டேன். ஆனாலும் என்னை ஏற்றார்கள். அதிகம் படிக்காத அந்தத் தம்பதி, என்னை நன்றாகப் படிக்க வைப்பதாக உறுதி தந்தபிறகே என்னைப் பெற்ற அம்மா தத்து கொடுத்தார்.

என் பெற்றோர், தாங்கள் வாழ்நாள் சேமிப்பை செலவழித்து என்னை கல்லூரியில் சேர்த்தனர். ஆறுமாதம் போனபிறகே தெரிந்தது, ‘இந்தப் படிப்பு அவ்வளவு மதிப்பு வாய்ந்தது இலை’ என்று! வாழ்க்கையில் என்னவாகப் போகிறேன் என்ற தீர்மானம் என்னிடம் இல்லை; அதற்கு உதவுவதாகவும் படிப்பு இல்லை. இதற்கு ஏன் இத்தனை செலவு என யோசித்த கணமே நான் படிப்பை நிறுத்திவிட்டேன். ஆர்வமில்லாமல் வகுப்புக்குப் போவதைவிட, அதை நிறுத்தியது ஆனந்தம் தந்தது. தங்க இடமில்லாமல் தரையில் தூங்கினேன். ஏழு மைல் நடந்து ஹரே கிருஷ்ணா கோயிலில் சாப்பிட்டு பசியைத் தணித்தேன். ஆனாலும் என் உள்ளுணர்வும் ஆர்வமும் எந்த திசையில் போகிறதோ அதில் பயணித்தேன்.

நான் படித்த கல்லூரியில் கையெழுத்து வகுப்புகள் தனியாக ந்டக்கும். விதம்விதமான எழுத்துகள், ஒவ்வொரு எழுத்துக்கும் அழகான இடைவெளி..என் அது என்னைக் கவர்ந்தது. போனேன். இது வாழ்க்கைக்கு உதவுமா என்று தெரியாவிட்டாலும் ஆர்வத்தில் கற்றேன். 10 வருடங்கள் கழித்து ‘மேக்’ கம்ப்யூட்டரை உருவாக்கும்போது நான் விதம்விதமான எழுத்துருக்களை வடிவமைக்க இந்தப் பயிற்சிதான் காரணமாக இருந்தது.  இன்று உலகமெங்கும் கம்ப்யூட்டரில் உதவும் ‘ஃபாண்ட்கள்’ நான் படிப்பை விட்டதால் கிடைத்தவை.

வாழ்க்கையில் துண்டுதுண்டாக நடக்கும் சம்பவங்கள் ஏதோ ஒரு புள்ளியில் எதிர்காலத்தில் உதவும் என்று நம்புங்கள். ஏதோ ஒன்றில் நம்பிக்கை வையுங்கள் – உங்கள் தைரியம், விதி, வாழ்க்கை, கர்மவினை எதிலாவது! இந்தப் பாதையில் எங்குமே இடறிவிழ மாட்டீர்கள். என் வாழ்க்கையில் எல்லா மாற்றங்களும் இப்படித்தான் நிகழ்ந்தது.

என் 20 வயதில் ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கினோம். 2 பேர் தொடங்கிய நிறுவனம், பத்தே ஆண்டுகளில் 4 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் அளவு வளர்ந்தது.அப்போது நான் தூக்கியடிக்கப்பட்டேன். நான் ஆரம்பித்த நிறுவனத்திலிருந்து என்னை எப்படி வெளியேற்ற முடியும்? நிறுவனத்தை நிர்வகிக்க ஒரு திறமைசாலியை அமர்த்தினோம். அவருக்கும் எனக்கும் முரண்பட நிறுவன இயக்குனர்கள் அவர் பக்கம் சாய, நான் தூக்கி வீசப்பட்டேன்.

10 வருஷ உழைப்பு போனது.என்ன செய்வது என புரியாமல் பல மாதங்கள் திரிந்தேன். ஊரைவிட்டே ஓடிப்போகவும் தோணியது. ஆனால் ஒரு விஷயம் புரிந்தது.. நான் விரக்தியில் இருந்தாலும், செய்த வேலைமீது காதல் குறையாமல் இருந்தேன். எனவே திரும்பவும் அதே வேலையைச் செய்ய முடிவெடுத்தேன். வெற்றிகரமான சாதனையாளர் என்ற அடையாளத்தை இழந்துவிட்டு, திரும்பவும் அரிச்சுவடியிலிருந்து ஆரம்பிக்கும் எளிய வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது. ‘நெக்ஸ்ட்;, ‘பிக்ஸர்’ என்ற இரண்டு நிறுவனங்களை ஆரம்பித்தேன். கிரியேட்டிவாக நிறைய செய்ய முடிந்தது. உலகின் முதல் (கம்ப்யூட்டர்) அனிமேஷன் படமான ‘டாய் ஸ்டோரி’யை என் நிறுவனம் உருவாக்கியது. இன்றைக்கும் உலகின் தலைசிறந்த அனிமேஷன் ஸ்டூடியோ  என்னுடையதுதான். என் மனைவி அப்போதுதான் கிடைத்தார். நல்ல குடும்ப வாழ்க்கை கிடைத்தது. கொஞ்சநாளில் என் ‘நெக்ஸ்ட்’ நிறுவனத்தை ஆப்பிள் வாங்க, மறுபடியும் ஆப்பிளுக்கு வந்தேன்.

ஆனால், ’ஆப்பிளை விட்டு நீக்கப்பட்டதுதான் என் வாழ்நாளில் நடந்த நல்ல விஷயம்’ என் இன்றும் நினைக்கிறேன். சிலசமயம் வாழ்க்கை உங்கள் உச்சந்தலையில் செங்கல்லால் அடிக்கும். நம்பிக்கை இழக்காதீர்கள். நீங்கள் செய்யும் வேலைமீது காதல் கொள்ளுங்கள். வேலைதான் உங்கள் வாழ்வின் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமிக்கிறது. ரசித்து வேலையைச் செய்யுங்கள்.; அதைக் காதலியுங்கள்; காதலில் வெறுப்பு ஏது?

கடந்த 33 வருடங்களாக தினமும் காலையில் கண்ணாடிமுன் நிற்பேன். ‘இன்றுதான் என் வாழ்வின் கடைசி தினம் என்று தீர்மானமானால், இன்று நான் செய்யும் அதே வேலைகளைத்தான் அப்போதும் செய்வேனா?” என்று கேட்டுக்கொள்வேன். தொடர்ச்சியாக பல நாட்கள் ‘இல்லை’ என்கிற பதில் வந்தால், நான் மாற வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதாக உணர்வேன். மரணம் நெருங்கியதை உணர்ந்த கணத்தில் , என் வாழ்வின் மிகப்பெரிய முடிவுகளை என்னால் எடுக்க முடிந்தது.

யாரும் மரணிக்க விரும்புவதில்லை; சொர்க்கத்துக்குப் போக விரும்புகிறவர்கள்கூட மரணத்தை விரும்புவதில்லை. ஆனாலும் நம் எல்லோர் பாதையும் முடிகிற இடம் மரணம்தான் இருக்கிறது. யாரும் அதிலிருந்து மீண்டதில்லை. வாழ்க்கையின் மிக உன்னதமான ஒற்றைக் கண்டுபிடிப்பு மரணம்தான்!

உங்கள் வாழ்க்கை குறுகியது. எனவே வேறொருவரின் வாழ்க்கையை வாழ்ந்து நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்கள் உள்ளுணர்வின் குரலை, மற்றவர்களின் கருத்துக்கள் அடக்கிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் உள்ளுணர்வும் மனசும் என்ன நினைக்கிறதோ, அதை தைரியமாகப் பின் தொடருங்கள். ஏனென்றால், நீங்கள் என்னவாக விரும்பினீர்கள் என்பது அவற்றுக்கு மட்டும்தான் தெரியும்; மற்ற எல்லாமே இரண்டாம்பட்சம்.

பசித்திருங்கள். கற்றுக்கொள்ள ஆர்வமாய் இருங்கள்.

*

நன்றி : குங்குமம்

இன்னும் ஒரு தடவை – ‘மரபின்மைந்தன்’

‘நமது நம்பிக்கை’ ஆகஸ்ட் 2008 இதழிலிருந்து…இதழை அனுப்பிய ‘அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை (சீர்காழி)’ நிறுவனர் ஜனாப். அப்துல் மாலிக் B.E அவர்களுக்கும் இதழாசிரியர் , கவிஞர் மரபின்மைந்தன் ம. முத்தையாவுக்கும் நன்றிகள். களைத்துத் தூங்கும் மனைவியை எழுப்பி இந்தக் கவிதை பாடிடவேண்டாம் என்று வலைப்பதிவர்களைத் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன்! ‘உங்களுடன் இருப்பவர்களை நம்புகிறீர்களா?’ என்னும் முத்தையாவின் முத்தான கட்டுரையை விரைவில் பதிகிறேன். நன்றி!

***

இன்னும் ஒரு தடவை
மரபின்மைந்தன் ம. முத்தையா

 முன்னே ஒரு தடவை – உங்கள்
முயற்சிகள் தோற்றிருந்தால்
இன்னும் ஒரு தடவை – உங்கள்
இயக்கம் தொடர்ந்திடட்டும்
என்றோ விழுந்தவிதை – அதை
எண்ணிக் கிடந்திருந்தால்
இன்னொரு தாவரமாய் – அது
எப்படி எழுந்திருக்கும்?

முன்னே ஒரு தடவை – உங்கள்
மனம் கொஞ்சம் சோர்ந்திருந்தால்
இன்னும் ஒரு தடவை – உங்கள்
இதயம் மலர்ந்திடட்டும்
என்றோ மறைந்த கதிர் – அதை
எண்ணிக் கிடந்திருந்தால்
இன்றைய கிழக்கினிலே – அது
எப்படி உதித்திருக்கும்?

முன்னே ஒரு தடவை – சிலர்
மூர்க்கம் புரிந்திருந்தால்
இன்னும் ஒரு தடவை – உங்கள்
இதயம் மறந்திடட்டும்!
என்றோ உழுத வலி – நிலம்
எண்ணிக் கிடந்திருந்தால்
இன்று விளைந்தவற்றை – அது
எப்படி வளர்ந்திருக்கும்?

முன்னே ஒரு தடவை – உங்கள்
முனைப்பு குறைந்திருந்தால்
இன்னும் ஒரு தடவை – உங்கள்
எண்ணம் குவிந்திடட்டும்!
என்றோ கலைந்ததெல்லாம் – முகில்
எண்ணிக் கிடந்திருந்தால்
இன்று மழைத்துளிகள் – மண்ணை
எப்படி முத்தமிடும்?

***

நன்றி : மரபின்மைந்தன் ம. முத்தையா (ஆசிரியர் : ‘நமது நம்பிக்கை‘)

***

‘நமது நம்பிக்கை’ முகவரி:

நமது நம்பிக்கை
92c, முதல் தளம், B.K. ரங்கநாதன் வீதி
புது சித்தாபுதூர், கோவை – 641 044
தொலைபேசி : 0422 – 4379502
மின்னஞ்சல் : namadhu_nambikkai@yahoo.co.in