பா.ம.க. தொண்டரின் 2011 கனவு!! – தாஜ்

 Ramadoss_Taj

‘மருத்துவர் அய்யாவின் ஆட்சி!’
பா.ம.க. தொண்டரின் 2011 கனவு!!

தாஜ்
அன்புடன்
ஆபிதீன்…

இந்த மடலின் கடைசித் தொங்கலில்
பா.ம.க.தொண்டர் ஒருவர்
தலைமைக்கு எழுதிய
கடிதமொன்றை
இணைத்திருக்கிறேன்.
கவனம்!

நடந்து முடிந்த
பாராளுமன்ற தேர்தலில்
தனது கட்சிக்கு ஏற்பட்ட
தோல்வி குறித்த ஆதங்கத்துடன்
எதிர் வரும்
சட்டசபைத் தேர்தலில் திட்டமிட்டு வென்று
தமிழகத்தில்
பா.ம.க. ஆட்சி அமைய
விவேகமான சில கருத்துக்களை
முன்வைத்து பேசுகிறது
அந்தக் கடிதம்!

யோசிக்கிறபோது…
அந்தக் கடிதம்
உங்களுடைய பார்வையில்
எந்தச் சலனத்தையும்
நிகழ்த்தப் போவதில்லைதான்.
உங்களுக்கு இதெல்லாம்
ஒட்டுறவு இல்லாத சங்கதி!
கிட்டத்தட்ட எனக்கும் அப்படித்தான்!
ஏன் அப்படி?
நாம் திருகிக் கொண்டிருக்கிறோமா?
விளங்கவில்லை!
சரி… குறைந்த பட்சம்
என்ன ஜென்மம் நாம்?
வேற்றுக் கிரகத்து வாசிகளா?

இந்தப் பாராளுமன்றத் தேர்தலின்
முடிவுகள் வெளியான தருணம்….
மொத்த இந்தியாவும்
காங்கிரஸ் / பாரதிய ஜனதாவின்
வெற்றி தோல்விகள் மீது
கவனம் கொண்ட நேரம்
தமிழகப் பார்வையாளர்களின்
ஒட்டு மொத்த அழுத்தமும்
வேறு திக்கில் குத்திட்டிருந்தது.
மகிழ்ச்சி கொண்டு….
என்றும் சொல்லலாம்.

இரக்கம் கொண்ட
ஓரிரண்டு நெஞ்சங்களைத் தவிர
அந்தப் பார்வையாளர்களில் 
அத்தனை பேர்களும்
பா.ம.க.வின் தோல்விக்கு
விழா எடுக்காத குறையாய்
‘லோட்டா’ கணக்கில் பாயாசத்தை
செய்திகள் காதில் விழுந்த தருணத்திலேயே
குடிக்காமல் குடித்தார்கள்!

தேர்தலையொட்டிய
அரசியல் கணக்கில்
பா.ம.க.
பலவித குளறுபடிகளை
நிகழ்த்தி இருந்தாலும்….
தமிழக அரசியலுக்கோ
இந்திய அரசியலுக்கோ
அதெல்லாம் புதிதல்ல.
பாட்டாளி மக்கள் கட்சி
தேர்தல் தோறும்
அணி மாறுவதையே
மீடியாக்களும், மக்களும்
மிகைப்படுத்தி குறையாகப் பேசுகிறார்கள்.
எல்லா அரசியல் கட்சிகளின்
அங்கீகரிக்கப்பட்ட
பாடதிட்டத்தில் அது ஏற்கப்பட்டுள்ளது!

வேண்டுமானால்…
அதன் தோல்விக்கு
அந்தக் கட்சியின்
‘விசேச குதி’களை
குறிப்பிட்டு சொல்லலாம்.
வாக்காளர்களை அது
முகம் சுழிக்கவே வைத்தது நிஜம்.
சிகரெட் புகைக்காதே…
சாராயம் குடிக்காதே…
மரம் நடு…
என்ன வேண்டிக் கிடக்கிறது
இந்தவகை புத்திமதிகள்?
கோடி கோடியாய் மக்கள் பணத்தை
சுரண்டும் அரசியல்வாதிகள் எவர்க்கும்
ஏது அந்த தார்மீக உரிமை?

இந்தக் கோரிக்கைகளை முன் வைத்து
தெரு முனைப் பிரச்சாரம்வரை
இறங்கிவந்து
மருத்துவர் அய்யாவும்
அவரது மகனும்
எத்தனை கத்து கத்தினாலும்
இவர்களை
இன்றைய காந்தியாகப் பார்க்க
பொதுமக்கள் தயாராக இல்லை!

அவர்களது மேலுமான….
“அய்யய்யோ தமிழீழம் பற்றி எரிகிறது….!”
கோஷத்திற்கு
புரட்சித் தலைவியை கூட்டாக அழைக்க…
முன் அனுபவம் இல்லாத
அவரது பின்பாட்டு
கொஞ்சமும் சேரவில்லை.
தேர்தல்கால மேடை வசனமாகவே
அந்தக் கோஷம் முடிந்தது!
ஓட்டு தர மக்களும் மறுத்துவிட்டார்கள்.

இன்றைக்கும்…
மருத்துவர் அய்யா
தனது தோல்வியை
ஒப்புக் கொண்டார் இல்லை.
ஓட்டுப் போடும் இயந்திரத்தையும்
ஓட்டுக்கு எதிரிகள் பணம் தந்ததையும்
காரணமாக்கிக் கொண்டிருக்கிறார்.

சில நேரம்…
“பாட்டாளிக் கட்சியை
தோற்கடிக்க வேண்டுமென
கங்கணம் கட்டி
தோற்கடித்துவிட்டார்கள்!” என்றும்
பொருமுகிறார்.

அரசியல் பயிற்றுவிப்பில்
உலகப் புகழ் பெற்ற
தைலாபுரம் சர்வகலாசாலையில்
இது குறித்தெல்லாம்
முன்கூட்டியே யோசித்து
அலசி ஆய்வு செய்திருக்க வேண்டாமா?
தைலாபுரம் சர்வகலாசாலைக்கு வேறு
பங்கம்!

அந்த சர்வகலாசாலையின்
பயிற்றுவிப்பு
போதவில்லை என்பதாலோ என்னவோ
அந்தக் கட்சியின் தொண்டர் ஒருவர்
தலைமைக்கு கடிதமெழுதியிருக்கிறார்.
அசாத்தியமான சில கருத்துகளுடன்!
கடிதத்தில் அது
பளிச்சிடவும் பளிச்சிடுகிறது.

அந்தத் தொண்டரின் கடிதத்தில்…
‘எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில்
எந்த அரசியல் கட்சிகளோடும்
கூட்டணி வேண்டாம்’ என்பது
முக்கியமான செய்திகளில் ஒன்று.

அந்தக் கடிதம்
எனக்கு தெரிந்து
கூரியரில் அனுப்பப்பட்டு
தலைமைக்கு கிடைத்த
ஒரு சில நாட்களுக்கெல்லாம்…
‘எதிர் வரும் தேர்தலில்
பா.ம.க. எந்த அரசியல் கட்சிகளோடும்
கூட்டணி வைக்காது!’ யென
மருத்துவர் அய்யா அறிக்கைவிட,
எனக்கு அதிர்ச்சி கலந்த சந்தோசம்.
சாதாரண தொண்டர் ஒருவரின் கடிதம்
ஒரு கட்சியின் தலைமையை
அல்லது
தைலாபுரம் சர்வகலாசாலையின் மூலவரை
பாதித்திருக்கிறதென்பது
சாதாரணமானது அல்லதான்!

இன்றைக்கு வாராந்தரிகளும்
அந்தச் செய்தியை ஒட்டி
சர்ச்சிக்கத் தொடங்கி இருக்கிறது.
கீழே அந்தப் பிரசித்திபெற்ற கடிதம்!

சரி….
அந்தக் கடிதம்
உங்களது கைக்கு எப்படி?
நீங்கள் கேட்கலாம்.
வெரி சிம்பிள் ஆபிதீன்…
எனக்குள் இருக்கும் நிரூபரின்
குயுக்தியான பக்கமொன்று
திடுமென
விழித்துக் கொண்டதுவே காரணம்!

***

கடிதம் :

From:
M.S. அன்சாரி
நாகை மாவட்ட சிறுபான்மைத் தலைவர்.
பா.ம.க. / சீர்காழி.

*
உயிரினும் மேலான
அய்யா அவர்களுக்கு…..

அய்யா…
நான் சீர்காழியைச் சேர்ந்தவன்.
என் பெயர் முகம்மது அன்சாரி.
உங்களின் உயர்ந்த சமூக நோக்கும்
அரசியல் நேர்மையும் ஈர்க்க
கட்சியில்
இணைத்துக் கொண்டவன்!
நான்கு வருட காலமும் ஆகிவிட்டது!

இணைந்தது முதலே…
ஆர்வமாய் களப்பணியில்
செயல்படுபவனாக
என்னை நான்
முன் நிறுத்திக் கொண்டேன்.
எனது சமூகம் சார்ந்த மக்களிடம்
நம் கட்சியின் மாட்சிமைகளை
எடுத்துச் சொல்லி…
நம் பக்கம் அவர்களை
திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறேன்
வைத்துக் கொண்டும் இருக்கிறேன்.
 

இந்தப் பாராளுமன்றத் தேர்தலில்
நாம் எதிர் கொண்ட தோல்வி
யாரும் எதிர்பாராதது!
நமது கட்சித் தோழர்கள்
மனமுடைந்தவர்களாக
கைசேதப்படுபவர்களாக
ஆறா மனத்துயர் பீடிக்க
இன்னும் மீண்டார்கள் இல்லை!
என் நிலையும் அப்படிதான்.

தேர்தல் முடிவு
வெளியான வாரம் முழுக்க
உணவு / உறக்கம்
பிடிக்காது போய்
நண்பர்களைச் சந்திக்க
வெட்கப்பட்டவனாய்….
வீட்டிலேயே முடங்கி
கிட்டத்தட்ட…
சித்தப் பிரமைக் கொண்ட நிலை!

இந்தத் தோல்வி
அலைக்கழிக்கும் கணமெல்லாம்…
உங்களை யோசித்தவனாகவும் இருக்கிறேன்.
உங்களுக்கும்தான்
எத்தனை எத்தனை
மனத்துயர் கிளர்ந்திருக்கும்?

இந்த மண்ணின்
தாழ்த்தப்பட்ட/ ஒடுக்கப்பட்ட/
சிறுபான்மை மக்களுக்காக…
ஈழச் சகோதரர்களுக்காக…
உரிமைக் குரல் எழுப்பி
தமிழ்ப் போராளியாக
வலம் வந்த உங்களை
இந்த மக்கள்…
புரிந்துக் கொள்ளத் தவறிவிட்டார்களே!
அடிப்படை
நன்றியுமற்று
தோல்வியை அல்லவா
கைமாறு செய்திருக்கிறார்கள்!!
உங்களை அவர்கள் நிஜமாகவே
புரிந்துக் கொள்ளவில்லையா?
யோசிக்கும் தோறும்
மகா உறுத்தல்!
கண்ணில்…. கசிகிறது இரத்தம்!

இன்னொரு யோசிப்பில்…
நம் மக்கள்
இந்த அளவில்
நன்றி மறந்தவர்களாக…
இருக்கவே முடியாது.
அவர்களின்
அடிப்படை குணத்தை முன் வைத்து
இதை நிச்சயமாக சொல்லலாம்!

இந்தத் தேர்தலில்…
அரசியல் சூழ்ச்சிதான்
நம்மை வெற்றிக் கொண்டிருக்கிறது.  
அதை அரங்கேற்றத்
தேவையான
பணபலம்/ படைபலம்/ அதிகார பலம்
என்று எல்லாமும்
நம் எதிரிகளிடம்
அநியாயத்திற்கு தாராளம்!

தோல்விதான்…
வெற்றியின் படிக்கட்டுகள் என்பார்கள்!
இந்த முழுத் தோல்விதான்…
நமக்கு முழு வெற்றியைத் தேடித்தரப் போகிறது.
எனக்கு சிறிதும் அய்யமில்லை!

2011-ல் நமது ஆட்சியென்று
என்றோ…
நாம் சொல்லி இருக்கிறோம்!
அதுதான் நடக்கவும் போகிறது!

மன்னிக்கனும்…
அய்யாவின் பார்வைக்கு
எனது சிறிய விண்ணப்பம்.

வரும் சட்டசபைத்தேர்தலில்
நமது தேர்தல் அனுகுமுறையை
மாயாவதியின் ‘ஃபார்முலா’வை யொட்டி
மாற்றி அமைக்கலாம்!
அது அர்த்தமுடையதாகவும் அமையும்!

அரசியல் கட்சிகளின்
கூட்டணிகளை நம்புவதை விட
தலித் + இஸ்லாமிய + கிருஸ்துவ + பிராமண +
கொங்கு வேளாளர் + தேவர் + நாடார் என்கிற
சமூதாயங்களின் ஒருங்கிணைப்பில்…
‘மகா கூட்டணி’ காண்போம்.
இரண்டு திராவிடக் கட்சிகளையும்
புறந்தள்ளுவோம்.
தேர்தல் காலங்களில்
கூட்டணி பேசிக் கொண்டு
வரும் / போகும்
தரவுக்காரர்களைத் தவிர்ப்போம்

நேற்று முளைத்தக் கட்சிகள் எல்லாம்
தனித்து நிற்கிற போது….
நம்மால் முடியாதா என்ன?

நம் தலைமையில்
நாம் அமைக்கும் மகா கூட்டணியில்
அந்தந்தக் இனத்திற்குரிய
பிரதிநிதித்துவத்துவ அடிப்படையில்
M.L.A. சீட்டுகளை
கணிசமாக முன் கூட்டியே வழங்கி…
அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்
உறுதி மொழிகளையும் தந்து
தேர்தலில் வெல்லும் தருணம்
அவர்களுக்குத் தக்க மந்திரி பதவிகளை 
நாம் வழங்குவோம்…

அப்படியொரு கட்டமைப்பு
சரிவருமென தாங்களும் யோசிக்கும் பட்சம்
அதை நோக்கிய நம் செயல்பாடுகளை
தீர்க்கமாக/ செயல் திறனோடு
இன்று தொட்டே
துரிதப் படுத்துவோம்.
சந்தேகம் வேண்டாம்
கோட்டையில் நாளை…
பறக்கும் நமது கொடி!

நிச்சயமாக
சத்தியமாக…
2011 நமக்குதான்!

பணிவுடன்…
அன்சாரி / சீர்காழி

***

நன்றி : தாஜ் / தமிழ்ப்பூக்கள்
Web : http://tamilpukkal.blogspot.com/
E- Mail : satajdeen@gmail.com