கழக நிலைப்பாடு படும் பாடு – ‘துக்ளக்’ சத்யா

நன்றாக இருக்கும் எங்கள் நாகூர் வித்வானை முந்தாநாள் முகநூலில் ’தெரியாமல்’ மவுத்தாக்கிய நண்பர் தாஜை திட்டுவதற்காக ஃபோன் செய்தேன் நேற்று. ‘இந்தபாருடி,  ஆபிதீன் இன்னும் ஹயாத்தோடு இருக்கார்..!’ என்று மனைவியிடம் பயந்து அலறுகிறார்! காதர் ஒலி சார், என்ன செய்வது இவரை?  துக்ளக் சத்யா பற்றி , ’யார் யார் எழுத்திலோ… எழுத்தின் சிறப்பு பல தினுசுகளில் வெளிப்பட்டிருக்கிறது. இங்கே, சத்யாவின் எழுத்து காட்டும் தரம் தனிரகம். இதனை வாசிக்கும் அன்பர்கள், கட்டுரை என்கிற கணக்கில் மட்டும் வாசிக்கும் பட்சம், கட்டுரை மட்டும்தான் கிடைக்கும். நடந்தேறிய அரசியல் சம்பவங்களை மனதில் கொண்டு வந்து நிறுத்தி, பின் வாசிக்க வாசிக்க மனதால் அசைபோடும் பட்சம், அடக்க முடியாத சிரிப்பலையோடு ஓர் ஆனந்தத்தில் முழுகலாம்’ என்கிறார் தாஜ். நம்பி வாசியுங்கள். நன்றி. –  ஆபிதீன்

***

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொள்வது என்று முடிவெடுக்க, தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் முடிவை அறிவிக்கும் வரை நாம் ஏன் சஸ்பென்ஸில் காத்திருக்க வேண்டும்? தி.மு.க.வினரின் மனநிலையை இப்போதே ஸ்கேன் செய்து பார்க்கலாமே! – சத்யா

*

karunanidhi-2hindu

கலைஞர்:
எல்லோரும் வந்தாச்சா? விவாதத்தை ஆரம்பிக்கலாமா? கழகம் எப்போதுமே ஜனநாயக ரீதியிலே நடக்கிற இயக்கம். நாடாளுமன்றத் தேர்தல்லே எந்தக் கட்சியோடு கூட்டு வெச்சுக்கலாமுன்னு உங்க கருத்துக்களை மனம் திறந்து சொல்லலாம். அப்புறம், குடும்ப உடன்பிறப்புகளோட கலந்தாலோசித்து இறுதி முடிவெடுக்கிறேன்.

மாவட்டச் செயலாளர்:
காங்கிரஸோட கூட்டு வெச்சுத்தான் தலைவரே நம்ம நிலைமை இப்படி ஆயிடுச்சு. சட்ட சபைத் தேர்தலிலே, நாம கொடுக்காமலேயே 63 இடங்களை எடுத்துக்கிட்டு, நம்மை மைனாரிட்டி எதிர்க் கட்சியா ஆக்கினதே காங்கிரஸ்தான். மறுபடியும் காங்கிரஸோட கூட்டு வெச்சா, 28 எம்.பி. ஸீட் எடுத்துக்கிட்டு ஒண்ணோ ரெண்டோதான் ஜெய்ப்பாங்க. காங்கிரஸை நாம் ஏற்கனவே கழட்டி விடாம இருந்தா, இப்ப கழட்டி விட்டுடறது நல்லதுங்க.

துரைமுருகன்:
கழட்டி விட்டா என்ன ஆகும்னு யோசிக்கணும். 2ஜி கேஸ்லே ஸி.பி.ஐ.க்கு சுதந்திரம் கிடைச்சுடாதா? தலைவர் நிம்மதியா கட்சி நடத்த வேண்டாமா? கனிமொழியைக் காப்பத்தறது முக்கியமா? கழகத்தைக் காப்பாத்தறது முக்கியமா? எனக்கென்னவோ, காங்கிரஸோட கூட்டு சேர்ந்தா வர்ற கெடுதலை விட, கூட்டு சேரலைன்னா வர்ற கெடுதல்தான் அதிகம்னு தோணுது.

மா.செ:
அதில்லைங்க, எப்படியாவது விஜயகாந்தை இழுத்துட்டா நல்லது. கழகம் வலுவோட இருந்தாத்தான் 2016-லே மறுபடியும் ஆட்சியைப் பிடிச்சு, எவ்வளவோ செய்யலாம். முன்னாள் மந்திரிகளை சொத்துக் குவிப்பு வழக்கிலேர்ந்து காப்பாத்த முடியும். கலைஞருக்கு பாராட்டு விழா நடத்தி எவ்வளவு நாளாச்சு!

ஸ்டாலின்:
விஜயகாந்தை நாம கூப்பிட்டா அவர் கேக்கிற ஸீட் குடுக்கணும். அவரே வர்ற வரைக்கும் வெயிட் பண்ணலாம். இன்னும் டைம் இருக்குது. வேணும்னா கடைசி நேரத்திலே முயற்சி செஞ்சு பாக்கலாம்.

தயாநிதி மாறன்:
நம்ம கெட்ட நேரம் திடீர்னு விஜயகாந்தும் அம்மையாரும் சேர்ந்துட்டா, அந்தக் கூட்டணி பலமாயிடும். அதனாலே விஜயகாந்தையும் விட்டுடாம காங்கிரஸையும் சேர்த்துக்கிட்டு கூட்டணி அமைக்கலாம். அவங்களுக்கு ஒதுக்கினது போக மீதி ஏதாவது தொகுதி இருந்தா அதுலே போட்டி போடலாம். 2ஜி கேஸ் இதே மாதிரி நல்லபடியா போகும், நீரா_ராடியா டேப்பை ஸி.பி.ஐ. ஆராயாது. இவ்வளவு நன்மை இருக்குது.

கலைஞர்:
அதுக்காக? சுயமரியாதையை இழக்க நான் தயாராக இல்லை. இந்த மத்திய அரசாலே இலங்கைத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. மீனவர்கள் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. கழகத்தின் உணர்வுகளை மதிக்காம, காமன்வெல்த் மாநாட்டுலே கலந்துக்க பிரதமரே இலங்கை போறார். இதையெல்லாம் வேடிக்கைப் பார்க்க என்னாலே முடியாது. நாளைக்கே டெஸோ கூட்டம் கூட்டறேன்.

தயாநிதி மாறன்:
(செல்ஃபோனை நீட்டியபடி) தாத்தா… டெல்லியிலேர்ந்து பேசறாங்க. ஏர்செல்-மாக்ஸிஸ் விவகாரத்திலே ஸி.பி.ஐ. குற்றப் பத்திரிகை ரெடி பண்ணியிருக்குதாம். மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் என்ன முடிவு பண்ணியிருக்கீங்கன்னு கேக்கறாங்க.

கலைஞர்:
வெளிநாட்டுக் கொள்கையைப் பொறுத்த வரையிலே இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரா நான் எப்பவும் செயல்படமாட்டேன். நாம காங்கிரஸுக்கு எதிரா முடிவெடுத்தா மட்டும் இலங்கைப் பிரச்சனை தீர்ந்துடுமா? தனி ஈழம் கிடைச்சுடுமா? மீனவர்களை யாரும் கடத்த மாட்டாங்களா?

தயாநிதி மாறன்:
ஹலோ… கலைஞர் சொன்னதைக் கேட்டுகிட்டீங்களா? அதாங்க கழக நிலைப்பாடு. ஆவேசமா விவாதிச்சாலும், கடைசியிலே ஃபார்முக்கு வந்திடுவோம்.

மா.செ:
காங்கிரஸுக்கு எப்பவும் விஜயகாந்த் மேலே அக்கறை அதிகம். அவங்க ஒண்ணா சேர்ந்துகிட்டு, கழகத்தை தனிமைப்படுத்திட்டா, கழகம் மூணாவது இடத்துக்குப் போனாலும் போயிடும். அதைத் தடுக்கணும். விஜயகாந்த் கேக்கிற ஸீட்டைக் குடுத்து அவரை நம்ம பக்கம் இழுத்துடுவோம். அப்பதான் காங்கிரஸுக்கு புத்தி வரும்.

ஸ்டாலின்:
விஜயகாந்துக்கு அதிக ஸீட் குடுத்தா, எதிர்காலத்திலே எனக்கு அவரே போட்டியா வந்துடுவாரு. எப்படியும் அம்மையார் அணியிலே இடம் கிடைக்காம கம்யூனிஸ்ட்கள் நம்மைத் தேடி வருவாங்க. அப்புறம் கம்யூனிஸ்ட் தலைவர்கள் விஜயகாந்தை நம்ம பக்கம் கூட்டிட்டு வந்துடுவாங்க. 12 ஸீட்டை ஒத்துமையா பிரிச்சுக்குங்கன்னு சொல்லிடலாம்.

மா.செ:
சமயத்திலே அ.தி.மு.க.வும் காங்கிரஸும் கூட கூட்டு சேர்ந்துடலாம். அதிகார பலத்திலே அவங்க ஜெயிக்க முடியும். மத்தியிலே காங்கிரஸுக்கு மாற்று பா.ஜ.க.தான். தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்டு வெச்சா, பா.ஜ.க. தலைவர்கள் விஜயகாந்தையும் நம்ம பக்கம் இழுத்துட்டு வந்துருவாங்க. அப்ப நம்ம அணிதான் ஸ்டிராங்கா இருக்கும்.

கலைஞர்:
கூட்டணி தொடர்பான என்னுடைய பல கருத்துகளிலே அதுவும் ஒன்று. கலைஞர் இருக்கிற இடத்திலே மதவாதம் இருக்காதுன்னு ஸி.எஸ்.ஸே. சொல்லியிருக்கார். மோடிக்கு எதிரா அமெரிக்காவுக்கு எம்.பி.க்கள் கடிதம் எழுதியதைக் கண்டிச்சவனே நான்தான். நமது தொப்புள்கொடி தமிழினத்தை திட்டமிட்டு அழித்த ரத்த வெறி ராஜபக்‌‌ஷேவுக்கு துணை போன காங்கிரஸுக்கு, இன்னும் எத்தனை காலத்துக்கு நாம லாலி பாடிக்கொண்டிருக்க முடியும்? நான் காரணமில்லாம டெஸோவை ரெண்டாவது தடவை உருவாக்கலை….

துரைமுருகன்:
(செல்ஃபோனில்) ஹலோ… அமலாக்கப் பிரிவிலேர்ந்து பேசறீங்களா?… அப்படியா? ஐயையோ! ஒரு நிமிஷம்… தலைவர் கிடே குடுக்கிறேன். கலைஞரே! டெல்லியிலியிலேர்ந்து ஃபோன், கனிமொழிக்கு எதிரா அமலாக்கப் பிரிவு ஏதோ புதுசா வழக்கு போடப் போகுதாம். கூட்டணி விஷயமா என்ன முடிவெடுத்தீங்கன்னு கேக்கிறாங்க.

கலைஞர்:
நான் அவசரப்பட்டு எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எந்த முடிவும் எடுக்கத் தயாராயில்லை. மதவாத ஆக்டோபஸ் ஆட்சி இந்தியாவில் எந்த விதத்திலும் நுழைய அனுமதிக்க மாட்டோம்னு மசூதி இடிக்கப்பட்டபோதே சபதம் எடுத்திருக்கோம். மதவாத பா.ஜ.க.வை விரட்டியடிக்க காங்கிரஸை விட்டால் வேறு என்ன இருக்கிறது?

துரைமுருகன்:
அப்ப சரிங்க… அப்படியே சொல்லிடறேன். ஹலோ… ஒண்ணும் பிரச்னை இல்லைங்க. கூட்டணி தர்மப்படியே நடக்கலாம். முகுல்வாஸ்னிக்கை அனுப்புங்க. பேசித் தீர்த்துக்கலாம்.

மா.செ:
காங்கிரஸோட சேர்ந்தாலே நமக்கு ரொம்ப கெட்ட பேருங்க. மறுபடியும் காங்கிரஸோட கூட்டு வெச்சா, தமிழ் உணர்வாளர்கள் ஓட்டெல்லாம் அம்மையார் பக்கம் போயிடும். மீனவர் கடத்தல் நடக்கும் போதெல்லாம் நம்மைத்தான் திட்டுவாங்க. ராஜபக்‌‌ஷே பண்ற கொடுமைக்கெல்லாம் நாமதான் பதில் சொல்லணும்.

மா.செ:ஆமாங்க. இலங்கைப் பிரச்னையிலே நாம வீரமா கேக்கறதுக்கு ஆயிரம் கேள்விகள் இருக்குது. காங்கிரஸோட சேர்ந்துட்டா, சொல்றதுக்கு ஒரு பதில் கூட இல்லை.

மா.செ: அப்படியும், காங்கிரஸோட கூட்டு சேர்றதா இருந்தா, ‘அடுத்த சட்டசபைத் தேர்தல்லே கழகத்தை கழட்டி விட்டுடணும்’னு இப்பவே ஒப்பந்தம் போட்டுக்கறது நல்லதுங்க. காலாகாலத்திலே நமக்கு காங்கிரஸ் கிட்டேயிருந்து விடுதலை கிடைச்சா, சுதந்திரமா கழகத்தை வளர்க்கலாம்.

துரைமுருகன்:
கழகத்தை வளர்க்க இப்ப என்ன அவசரம்? மாநிலத்திலே அம்மையாரை விரோதிச்சுட்டு, மத்தியிலே காங்கிரஸையும் பகைச்சுக்கிட்டா நிம்மதியா வாழ விட்டுருவாங்களா? சுவர் இருந்தாதான் சித்திரம். தலைவர் குடும்பத்திலே பிரச்னை இல்லாம இருந்தாத்தான் எதிர்காலத்திலேயாவது அவராலே கழகத்தைக் காப்பாத்த முடியும்.

ஸ்டாலின்:
ஊழல்களால் காங்கிரஸ் பேர் ரொம்பக் கெட்டுப் போயிருக்குது. அவங்களோட சேர்ந்து தேர்தலை சந்திச்சா, ஊழல் கட்சிகள் ஒண்ணா சேர்ந்துட்டதா கிண்டல் பண்ணுவாங்க. காங்கிரஸை எதிர்த்தா, ஊழலை எதிர்க்கிறோம்ன்ற பேர் நமக்கே கிடைக்கும். காங்கிரஸ் கூட்டு வேண்டவே வேண்டாம். கலைஞர் முடிவை ஏத்துக்கறேன்.

கலைஞர்:
தம்பி ஸ்டாலின் கருத்துதான் என் கருத்தும். சோனியாவின் மருமகனும் உதவியாளரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படறாங்க. அவுங்களுக்கு ஒரு நீதி. கழகத்துக்கு ஒரு நீதியா? அதனால்தான் இலங்கைப் பிரச்னையிலேயும், சேது திட்டத்துக்காகவும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய கட்டாயத்திலே இருக்கோம்.

தயாநிதி மாறன்:
மறுபடியும் டெல்லியிலேந்து ஃபோன்.

கலைஞர்:
அதுக்குள்ளே ஏன் அவசரப்படறாங்க? நாமதான் இன்னும் எந்த முடிவும் எடுக்கலையே….

தயாநிதி மாறன்:
அழகிரியின் உரத்துறையிலே ஊழல்ன்னு பா.ஜ.க. பிரச்னை கிளப்புதாம். ஸி.பி.ஐ. விசாரணை வெக்கணுமுன்னு கேக்கறாங்களாம். கூட்டணி விசயமா இன்னுமா முடிவெடுக்கலைன்னு கேக்கிறாங்க. என்ன பதில் சொல்றது?

கலைஞர்:
காங்கிரஸ் உடனான உறவில், கழகத்தின் தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இல்லைன்னு சொல்லிடுவோம். அப்பத்தான் நாம காங்கிரஸை ஆதரிக்கிறோமா எதிர்க்கிறோமான்னு யாருக்கும் புரியாது.

***

thuklaksathya
நன்றி: சத்யா / துக்ளக் (14.8.2013) , தட்டச்சு நிபுணர் : தாஜ்

***

தொடர்புடைய கட்டுரை :  தி.மு.க.வும் ஐ.நா. சபையும்… – ‘துக்ளக்’ சத்யா

அன்னை முகம் காண வாருங்கள் – ஆதரிக்க மறுப்பதே இல்லை!

ஒரு குடும்பம் போனால் இன்னொரு குடும்பம்; தெரியாமல்தான் கேட்கிறேன், இதில் சந்தோஷம் என்ன வேண்டியிருக்கிறது? சரி, வலையுலகம் சார்பாக ஒரு ஸ்பெஷல் ‘அம்மா’ பாட்டை பகிர்வதற்குமுன் என் குடும்பப் பெருமையையும் சொல்லிவிடுகிறேன். ‘எல்லா வூட்டுக்கும் பணம் கொடுத்தாஹலாமே.. வாங்குனீங்களா?’ என்று எலக்சன் டயத்தில் உம்மாவிடம் கேட்டதற்கு, ‘ வோட்டுபோடுறதுக்கு முன்னால கொடுக்க வந்தாஹாதான். நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு அந்திஸு (அந்தஸ்து) இக்கிதே.. வாங்குவோமா வாப்பா? ச்சீ’ என்றார்கள்.

‘வெரிகுட்மா. அப்படித்தான் இக்கினும்’

‘வோட்டு போட்டபொறவு வாங்கிக்கிட்டோம்!’

இப்போதுதான் தெரிகிறது, போடாத கட்சிக்கு வாங்கியிருக்கிறார்கள் என்று. என் உம்மாவின் சாமர்த்தியம் வாழ்க. நம் ’அம்மா’வின் சாதனையும் வாழ்க.

’அம்மா’ முதல்வராக இருந்தபோது வெளிவந்த அதிமுக பாடலை இப்போது பார்க்கலாமா? அசனா கொடுத்தார் – ’போடுங்க’ என்று. கோவை இஷாக் என்பவர் பாடியதாம். இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. அநேகமாக இந்த இருவருமே இப்போது ’ம.ம.க’வில் இருக்கலாம். விசாரிக்க வேண்டும். கிளியனூர் அப்துல் ஸலாம் அவர்கள் இயற்றி எல்லா சகோதர மதங்களைச் சேர்ந்த அன்பர்களின் உள்ளத்தையும் கொள்ளைகொண்ட ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடலின் மெட்டு இது. அண்ணன் ஈ.எம். ஹனிபா இதை கேட்டால் என்ன நிலைக்கு ஆளாவார் என்ற பதட்டத்துடன் பகிர்கிறேன்.  பாடலின் வரிகளையும் சேர்த்திருக்கிறேன். அட்டகாசமான ரிகார்டிங். அவசியம் கேட்டு, படித்து, ’அம்மா’வை வாழ்த்துங்கள். நன்றி!

கேட்க :

Download

’பாட்டு’ :

அன்னை முகம் காண வாருங்கள் – நம்மை
ஆதரிக்க மறுப்பதே இல்லை
நெஞ்சமதை திறந்து பேசுவார் – அவர்
வஞ்சகமாய் வாழ்ந்ததே இல்லை

(அன்னை முகம்)

கபட மனம் எள்ளளவும் இல்லாதவர்
கண்ணியத்தை விட்டுப் பிரிந்து செல்லாதவர்
உள்ளபடி புரட்சித்தலைவர் உயிரானவர் – இந்த
உலகத்திலே புதுமைப்பெண்ணாய் பிறந்தார் அவர்

(அன்னை முகம்)

பாசமுடன் கழகத்தொண்டன் வீட்டைக் காப்பவர்
பெருமையோடு பாரதத் திருநாட்டைப் பார்ப்பவர்
ஆசையோடு அனைவரையும் அணைத்துச் செல்பவர்
பெரியார் அண்ணாவை நினைத்து வாழ்பவர்
துன்பப்படும் ஏழைகளே துவளாதீர்கள் – தூய
அண்ணா திமுகவை நீங்கள நாடி வாருங்கள்
இன்பமான வாழ்வு பெற எண்ணிப் பாருங்கள் – நம்
இதயதெய்வம் புரட்சித்தாயை நம்பி வாருங்கள்

(அன்னை முகம்)

இந்த நாடு ஏற்றம் பெற திட்டம் தீட்டுவார் – நம்
எல்லோருக்கும் இன்னல் தீர சட்டம் போடுவார்
வந்த செல்வம் ஏழைகளக்கு வாரி வழங்குவார் – நம்
சிந்தை குளிர அறிவுரைகள் தினம் முழங்குவார்
அனைவரையும் ஓரினமாய் கருதி பார்ப்பவர்
அருமையாக தமிழகத்தை ஆண்டு வருபவர்
அலைபோல் எழும் எதிர்ப்புகளை வென்று நிற்பவர் – மக்கள்
அம்மா என்று அழைக்கும்படி என்றும் வாழ்பவர்

(அன்னை முகம்)

தேர்தல் முடிவு குறித்த அலப்பறை – தாஜ்

***

மே-13/ 2011

-தாஜ்

என்ன….
நம்ம தலைவர்கள் எல்லாம்
ஏலம் கேட்பது மாதிரி தெரிகிறதா?
இல்லீங்க.
வெளிவரப்போற
தேர்தல் முடிவு குறித்து
தங்களது
முன் அனுமானத்தை
சொல்றாங்க.

அத்தனை அத்தனை MLA ஸீட்டுகள்
தங்கள் தங்களுக்கு
கிடைக்கும்னு நம்புறாங்க.
 
என் நெருங்கிய நண்பன் சொன்னான்
அவுங்க சொல்வது
அனுமானத்தையல்ல…
அவுங்கவுங்க
ஆசையைன்னு சொல்றான்.
முட்டாப்பையங்க அவன்.
வெளிப்படையா…
இப்படியா சொல்றது?
அசல் லூசுங்க அவன்.
அரசியல்வாதின்னா
ஏன்தான்….
இவன மாதிரியான ஆளுங்க
இப்படி
அநியாயத்துக்கு கரிச்சி கொட்டுறாங்களோ?
எல்லாத்துக்கும்….
ஒரு அளவு இருக்கு, ஆமாம்.

நாளைக்கி அவுங்க மேலவந்து
நாற்காலிலெ குந்திக்கிட்டு
நம்ம ‘இதுல’
குச்சியவிட்டு
கொடைஞ்சாங்கன்னு வைய்யி…
அப்பத்தெரியும்
குண்டி நாறிப்போறது!
 
பொதுவான நீங்களே சொல்லுங்க…
நமக்கு சேவைச் செய்யத்தானே
அவுங்களெல்லாம்
ஊரூரா அலைஞ்சி
மேக்கப்பெல்லாம் கலைஞ்சி
முகம் சிவக்க சிவக்க
ஓய்வு ஒளிச்சல் இல்லாமல்
பேச்சோ பேச்சென்று பேசி
கோடிகோடியா
சாக்குப் பையில
அள்ளிக்கிட்டுப் போயி செலவு செஞ்சி
ராதூக்கமில்லாம
பகலிலும் தூங்க முடியாம
அல்லோலோப் பட்டு
தேர்தலை சந்திக்கிறாங்க
என்பத யாரும் மறந்திடக் கூடாது.
 
அவுங்க எல்லாரும் ஜேச்சா..
நமக்குத்தானே லாபம்!
கலைஞர் சொன்னதும் கிடைக்கும்
அம்மா சொன்னதும் கிடைக்கும்.
ஊட்டுக்கு ரெண்டு ரெண்டு
மிக்ஸி,  கிரைண்டர், லேப்டாப்பெல்லாம்
வந்து குவியுமே!
அதான் சொல்றேன்
எல்லாருமே ஜெய்க்கட்டும்
அம்மா வட தமிழ்நாட்டுக்கு
முதல் அமைச்சராகவும்
கலைஞர் தென் தமிழ்நாட்டுக்கு
முதல் அமைச்சராவும் ஆகட்டும்,
அவுங்கக்குள்ளே சமரசம் செஞ்சிக்கிட்டா
நமக்கெல்லாம்…
தொல்ல இல்லாம போயிடும்..
எல்லோரும் ஒத்துமையா
இருக்கிறது நல்லதுதாங்களே.
அப்பத்தானே தமிழ்நாடு
சட்டுன்னு பேர் சொல்லும்.
 
எல்லோரும்
அவுங்க அவுங்க
குலதெய்வத்தையோ
பெரிய தெய்வத்தையோ
வேண்டிக்கங்க.
ஏசுகாரங்களும்
அல்லாகாரங்களும்
கட்டாயம் வேண்டிக்கிங்க.
நானும் பெரியாரை வேண்டிக்கிறேன்
13-ம் தேதி நல்லதே நடக்கணும்!
14=ம் தேதி
தமிழ்நாடு தமிழ்நாடா இருக்கணும்!
அன்னைக்கி வேறு ஒரு ரிசல்ட் வருது!

***

நன்றி : தாஜ்  [ E-Mail :  satajdeen@gmail.com ]  &  நக்கீரன்

எலக்சன் குத்துப் பாட்டு

கிஷோரி அமோன்கரை ( (किशोरी अमोणकर) ) கேட்கும் நீர் , கிஷோர்குமாரை எப்படிக் கேட்கலாம்? –  கிண்டல் செய்தார் நண்பர். கிஷோருக்கு என்ன குறைச்சல்ங்கனி? ‘மெஹ்பூபா’வில் வரும் ‘மேரே நைனா’வை அவரைப்போல் யார் பாட இயலும்? சரி, முஹமது ரஃபியின் பட்டுக்குரலைப் பற்றிச் சொன்னால் பட்டென்று சொல்வீர், இஸ்லாமிய வெறியன் நான் என. என்னமோ போரும்… எல்லாவற்றுக்கும் விமர்சனமா?

வானத்திலேயே உலாவிக்கொண்டிராமல் கீழே வந்து மக்களையும் பார்க்க நினைப்பவர்களுக்கு இந்த மக்களின் பாடலைத் தருகிறேன். எலெக்சன் ஸ்பெஷல் என்றும் வைத்துக்கொள்ளலாம். பாடியவர் பெயர் ஞாபகம் இல்லை. மதுரை ஆறுமுகமா? சொல்லுங்க.

திசையெங்கும் அதிரட்டும்!

Download

***

நன்றி :  அசனா மரைக்கார்

« Older entries