கழக நிலைப்பாடு படும் பாடு – ‘துக்ளக்’ சத்யா

நன்றாக இருக்கும் எங்கள் நாகூர் வித்வானை முந்தாநாள் முகநூலில் ’தெரியாமல்’ மவுத்தாக்கிய நண்பர் தாஜை திட்டுவதற்காக ஃபோன் செய்தேன் நேற்று. ‘இந்தபாருடி,  ஆபிதீன் இன்னும் ஹயாத்தோடு இருக்கார்..!’ என்று மனைவியிடம் பயந்து அலறுகிறார்! காதர் ஒலி சார், என்ன செய்வது இவரை?  துக்ளக் சத்யா பற்றி , ’யார் யார் எழுத்திலோ… எழுத்தின் சிறப்பு பல தினுசுகளில் வெளிப்பட்டிருக்கிறது. இங்கே, சத்யாவின் எழுத்து காட்டும் தரம் தனிரகம். இதனை வாசிக்கும் அன்பர்கள், கட்டுரை என்கிற கணக்கில் மட்டும் வாசிக்கும் பட்சம், கட்டுரை மட்டும்தான் கிடைக்கும். நடந்தேறிய அரசியல் சம்பவங்களை மனதில் கொண்டு வந்து நிறுத்தி, பின் வாசிக்க வாசிக்க மனதால் அசைபோடும் பட்சம், அடக்க முடியாத சிரிப்பலையோடு ஓர் ஆனந்தத்தில் முழுகலாம்’ என்கிறார் தாஜ். நம்பி வாசியுங்கள். நன்றி. –  ஆபிதீன்

***

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொள்வது என்று முடிவெடுக்க, தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் முடிவை அறிவிக்கும் வரை நாம் ஏன் சஸ்பென்ஸில் காத்திருக்க வேண்டும்? தி.மு.க.வினரின் மனநிலையை இப்போதே ஸ்கேன் செய்து பார்க்கலாமே! – சத்யா

*

karunanidhi-2hindu

கலைஞர்:
எல்லோரும் வந்தாச்சா? விவாதத்தை ஆரம்பிக்கலாமா? கழகம் எப்போதுமே ஜனநாயக ரீதியிலே நடக்கிற இயக்கம். நாடாளுமன்றத் தேர்தல்லே எந்தக் கட்சியோடு கூட்டு வெச்சுக்கலாமுன்னு உங்க கருத்துக்களை மனம் திறந்து சொல்லலாம். அப்புறம், குடும்ப உடன்பிறப்புகளோட கலந்தாலோசித்து இறுதி முடிவெடுக்கிறேன்.

மாவட்டச் செயலாளர்:
காங்கிரஸோட கூட்டு வெச்சுத்தான் தலைவரே நம்ம நிலைமை இப்படி ஆயிடுச்சு. சட்ட சபைத் தேர்தலிலே, நாம கொடுக்காமலேயே 63 இடங்களை எடுத்துக்கிட்டு, நம்மை மைனாரிட்டி எதிர்க் கட்சியா ஆக்கினதே காங்கிரஸ்தான். மறுபடியும் காங்கிரஸோட கூட்டு வெச்சா, 28 எம்.பி. ஸீட் எடுத்துக்கிட்டு ஒண்ணோ ரெண்டோதான் ஜெய்ப்பாங்க. காங்கிரஸை நாம் ஏற்கனவே கழட்டி விடாம இருந்தா, இப்ப கழட்டி விட்டுடறது நல்லதுங்க.

துரைமுருகன்:
கழட்டி விட்டா என்ன ஆகும்னு யோசிக்கணும். 2ஜி கேஸ்லே ஸி.பி.ஐ.க்கு சுதந்திரம் கிடைச்சுடாதா? தலைவர் நிம்மதியா கட்சி நடத்த வேண்டாமா? கனிமொழியைக் காப்பத்தறது முக்கியமா? கழகத்தைக் காப்பாத்தறது முக்கியமா? எனக்கென்னவோ, காங்கிரஸோட கூட்டு சேர்ந்தா வர்ற கெடுதலை விட, கூட்டு சேரலைன்னா வர்ற கெடுதல்தான் அதிகம்னு தோணுது.

மா.செ:
அதில்லைங்க, எப்படியாவது விஜயகாந்தை இழுத்துட்டா நல்லது. கழகம் வலுவோட இருந்தாத்தான் 2016-லே மறுபடியும் ஆட்சியைப் பிடிச்சு, எவ்வளவோ செய்யலாம். முன்னாள் மந்திரிகளை சொத்துக் குவிப்பு வழக்கிலேர்ந்து காப்பாத்த முடியும். கலைஞருக்கு பாராட்டு விழா நடத்தி எவ்வளவு நாளாச்சு!

ஸ்டாலின்:
விஜயகாந்தை நாம கூப்பிட்டா அவர் கேக்கிற ஸீட் குடுக்கணும். அவரே வர்ற வரைக்கும் வெயிட் பண்ணலாம். இன்னும் டைம் இருக்குது. வேணும்னா கடைசி நேரத்திலே முயற்சி செஞ்சு பாக்கலாம்.

தயாநிதி மாறன்:
நம்ம கெட்ட நேரம் திடீர்னு விஜயகாந்தும் அம்மையாரும் சேர்ந்துட்டா, அந்தக் கூட்டணி பலமாயிடும். அதனாலே விஜயகாந்தையும் விட்டுடாம காங்கிரஸையும் சேர்த்துக்கிட்டு கூட்டணி அமைக்கலாம். அவங்களுக்கு ஒதுக்கினது போக மீதி ஏதாவது தொகுதி இருந்தா அதுலே போட்டி போடலாம். 2ஜி கேஸ் இதே மாதிரி நல்லபடியா போகும், நீரா_ராடியா டேப்பை ஸி.பி.ஐ. ஆராயாது. இவ்வளவு நன்மை இருக்குது.

கலைஞர்:
அதுக்காக? சுயமரியாதையை இழக்க நான் தயாராக இல்லை. இந்த மத்திய அரசாலே இலங்கைத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. மீனவர்கள் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. கழகத்தின் உணர்வுகளை மதிக்காம, காமன்வெல்த் மாநாட்டுலே கலந்துக்க பிரதமரே இலங்கை போறார். இதையெல்லாம் வேடிக்கைப் பார்க்க என்னாலே முடியாது. நாளைக்கே டெஸோ கூட்டம் கூட்டறேன்.

தயாநிதி மாறன்:
(செல்ஃபோனை நீட்டியபடி) தாத்தா… டெல்லியிலேர்ந்து பேசறாங்க. ஏர்செல்-மாக்ஸிஸ் விவகாரத்திலே ஸி.பி.ஐ. குற்றப் பத்திரிகை ரெடி பண்ணியிருக்குதாம். மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் என்ன முடிவு பண்ணியிருக்கீங்கன்னு கேக்கறாங்க.

கலைஞர்:
வெளிநாட்டுக் கொள்கையைப் பொறுத்த வரையிலே இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரா நான் எப்பவும் செயல்படமாட்டேன். நாம காங்கிரஸுக்கு எதிரா முடிவெடுத்தா மட்டும் இலங்கைப் பிரச்சனை தீர்ந்துடுமா? தனி ஈழம் கிடைச்சுடுமா? மீனவர்களை யாரும் கடத்த மாட்டாங்களா?

தயாநிதி மாறன்:
ஹலோ… கலைஞர் சொன்னதைக் கேட்டுகிட்டீங்களா? அதாங்க கழக நிலைப்பாடு. ஆவேசமா விவாதிச்சாலும், கடைசியிலே ஃபார்முக்கு வந்திடுவோம்.

மா.செ:
காங்கிரஸுக்கு எப்பவும் விஜயகாந்த் மேலே அக்கறை அதிகம். அவங்க ஒண்ணா சேர்ந்துகிட்டு, கழகத்தை தனிமைப்படுத்திட்டா, கழகம் மூணாவது இடத்துக்குப் போனாலும் போயிடும். அதைத் தடுக்கணும். விஜயகாந்த் கேக்கிற ஸீட்டைக் குடுத்து அவரை நம்ம பக்கம் இழுத்துடுவோம். அப்பதான் காங்கிரஸுக்கு புத்தி வரும்.

ஸ்டாலின்:
விஜயகாந்துக்கு அதிக ஸீட் குடுத்தா, எதிர்காலத்திலே எனக்கு அவரே போட்டியா வந்துடுவாரு. எப்படியும் அம்மையார் அணியிலே இடம் கிடைக்காம கம்யூனிஸ்ட்கள் நம்மைத் தேடி வருவாங்க. அப்புறம் கம்யூனிஸ்ட் தலைவர்கள் விஜயகாந்தை நம்ம பக்கம் கூட்டிட்டு வந்துடுவாங்க. 12 ஸீட்டை ஒத்துமையா பிரிச்சுக்குங்கன்னு சொல்லிடலாம்.

மா.செ:
சமயத்திலே அ.தி.மு.க.வும் காங்கிரஸும் கூட கூட்டு சேர்ந்துடலாம். அதிகார பலத்திலே அவங்க ஜெயிக்க முடியும். மத்தியிலே காங்கிரஸுக்கு மாற்று பா.ஜ.க.தான். தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்டு வெச்சா, பா.ஜ.க. தலைவர்கள் விஜயகாந்தையும் நம்ம பக்கம் இழுத்துட்டு வந்துருவாங்க. அப்ப நம்ம அணிதான் ஸ்டிராங்கா இருக்கும்.

கலைஞர்:
கூட்டணி தொடர்பான என்னுடைய பல கருத்துகளிலே அதுவும் ஒன்று. கலைஞர் இருக்கிற இடத்திலே மதவாதம் இருக்காதுன்னு ஸி.எஸ்.ஸே. சொல்லியிருக்கார். மோடிக்கு எதிரா அமெரிக்காவுக்கு எம்.பி.க்கள் கடிதம் எழுதியதைக் கண்டிச்சவனே நான்தான். நமது தொப்புள்கொடி தமிழினத்தை திட்டமிட்டு அழித்த ரத்த வெறி ராஜபக்‌‌ஷேவுக்கு துணை போன காங்கிரஸுக்கு, இன்னும் எத்தனை காலத்துக்கு நாம லாலி பாடிக்கொண்டிருக்க முடியும்? நான் காரணமில்லாம டெஸோவை ரெண்டாவது தடவை உருவாக்கலை….

துரைமுருகன்:
(செல்ஃபோனில்) ஹலோ… அமலாக்கப் பிரிவிலேர்ந்து பேசறீங்களா?… அப்படியா? ஐயையோ! ஒரு நிமிஷம்… தலைவர் கிடே குடுக்கிறேன். கலைஞரே! டெல்லியிலியிலேர்ந்து ஃபோன், கனிமொழிக்கு எதிரா அமலாக்கப் பிரிவு ஏதோ புதுசா வழக்கு போடப் போகுதாம். கூட்டணி விஷயமா என்ன முடிவெடுத்தீங்கன்னு கேக்கிறாங்க.

கலைஞர்:
நான் அவசரப்பட்டு எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எந்த முடிவும் எடுக்கத் தயாராயில்லை. மதவாத ஆக்டோபஸ் ஆட்சி இந்தியாவில் எந்த விதத்திலும் நுழைய அனுமதிக்க மாட்டோம்னு மசூதி இடிக்கப்பட்டபோதே சபதம் எடுத்திருக்கோம். மதவாத பா.ஜ.க.வை விரட்டியடிக்க காங்கிரஸை விட்டால் வேறு என்ன இருக்கிறது?

துரைமுருகன்:
அப்ப சரிங்க… அப்படியே சொல்லிடறேன். ஹலோ… ஒண்ணும் பிரச்னை இல்லைங்க. கூட்டணி தர்மப்படியே நடக்கலாம். முகுல்வாஸ்னிக்கை அனுப்புங்க. பேசித் தீர்த்துக்கலாம்.

மா.செ:
காங்கிரஸோட சேர்ந்தாலே நமக்கு ரொம்ப கெட்ட பேருங்க. மறுபடியும் காங்கிரஸோட கூட்டு வெச்சா, தமிழ் உணர்வாளர்கள் ஓட்டெல்லாம் அம்மையார் பக்கம் போயிடும். மீனவர் கடத்தல் நடக்கும் போதெல்லாம் நம்மைத்தான் திட்டுவாங்க. ராஜபக்‌‌ஷே பண்ற கொடுமைக்கெல்லாம் நாமதான் பதில் சொல்லணும்.

மா.செ:ஆமாங்க. இலங்கைப் பிரச்னையிலே நாம வீரமா கேக்கறதுக்கு ஆயிரம் கேள்விகள் இருக்குது. காங்கிரஸோட சேர்ந்துட்டா, சொல்றதுக்கு ஒரு பதில் கூட இல்லை.

மா.செ: அப்படியும், காங்கிரஸோட கூட்டு சேர்றதா இருந்தா, ‘அடுத்த சட்டசபைத் தேர்தல்லே கழகத்தை கழட்டி விட்டுடணும்’னு இப்பவே ஒப்பந்தம் போட்டுக்கறது நல்லதுங்க. காலாகாலத்திலே நமக்கு காங்கிரஸ் கிட்டேயிருந்து விடுதலை கிடைச்சா, சுதந்திரமா கழகத்தை வளர்க்கலாம்.

துரைமுருகன்:
கழகத்தை வளர்க்க இப்ப என்ன அவசரம்? மாநிலத்திலே அம்மையாரை விரோதிச்சுட்டு, மத்தியிலே காங்கிரஸையும் பகைச்சுக்கிட்டா நிம்மதியா வாழ விட்டுருவாங்களா? சுவர் இருந்தாதான் சித்திரம். தலைவர் குடும்பத்திலே பிரச்னை இல்லாம இருந்தாத்தான் எதிர்காலத்திலேயாவது அவராலே கழகத்தைக் காப்பாத்த முடியும்.

ஸ்டாலின்:
ஊழல்களால் காங்கிரஸ் பேர் ரொம்பக் கெட்டுப் போயிருக்குது. அவங்களோட சேர்ந்து தேர்தலை சந்திச்சா, ஊழல் கட்சிகள் ஒண்ணா சேர்ந்துட்டதா கிண்டல் பண்ணுவாங்க. காங்கிரஸை எதிர்த்தா, ஊழலை எதிர்க்கிறோம்ன்ற பேர் நமக்கே கிடைக்கும். காங்கிரஸ் கூட்டு வேண்டவே வேண்டாம். கலைஞர் முடிவை ஏத்துக்கறேன்.

கலைஞர்:
தம்பி ஸ்டாலின் கருத்துதான் என் கருத்தும். சோனியாவின் மருமகனும் உதவியாளரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படறாங்க. அவுங்களுக்கு ஒரு நீதி. கழகத்துக்கு ஒரு நீதியா? அதனால்தான் இலங்கைப் பிரச்னையிலேயும், சேது திட்டத்துக்காகவும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய கட்டாயத்திலே இருக்கோம்.

தயாநிதி மாறன்:
மறுபடியும் டெல்லியிலேந்து ஃபோன்.

கலைஞர்:
அதுக்குள்ளே ஏன் அவசரப்படறாங்க? நாமதான் இன்னும் எந்த முடிவும் எடுக்கலையே….

தயாநிதி மாறன்:
அழகிரியின் உரத்துறையிலே ஊழல்ன்னு பா.ஜ.க. பிரச்னை கிளப்புதாம். ஸி.பி.ஐ. விசாரணை வெக்கணுமுன்னு கேக்கறாங்களாம். கூட்டணி விசயமா இன்னுமா முடிவெடுக்கலைன்னு கேக்கிறாங்க. என்ன பதில் சொல்றது?

கலைஞர்:
காங்கிரஸ் உடனான உறவில், கழகத்தின் தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இல்லைன்னு சொல்லிடுவோம். அப்பத்தான் நாம காங்கிரஸை ஆதரிக்கிறோமா எதிர்க்கிறோமான்னு யாருக்கும் புரியாது.

***

thuklaksathya
நன்றி: சத்யா / துக்ளக் (14.8.2013) , தட்டச்சு நிபுணர் : தாஜ்

***

தொடர்புடைய கட்டுரை :  தி.மு.க.வும் ஐ.நா. சபையும்… – ‘துக்ளக்’ சத்யா

வண்ணநிலவனின் மறதியும் ஒரு கவிதையும் – ‘மறதி’யுடன் தாஜ்

இணையத்தில் தேட தாஜுக்கு இயலவில்லை போலும்! மறதி என்று இந்தக் கட்டுரையில் தாஜ் குறிப்பிடுவது மகா தவறு. நண்பர் பவுத்த அய்யனார் எடுத்த நேர்காணலில் வேண்டுமானால் வண்ண நிலவன் சொல்ல மறந்திருக்கலாம். ஜூன் 2002 ’ஜங்ஸன்’ இதழ் பேட்டியில் – ’கடல்புரத்தில் ’ நாவல் எழுதிய விதத்தைச் சொல்லும்போது –  குலசேகரன்பட்டினம் முஸ்லிம் பெரியவர் பற்றி சொல்கிறார். சுட்டி :  “நான் என்ன எழுதிக் கிழித்துவிட்டேன்?’’  – வண்ணநிலவன் . வண்ணநிலவனை லேசாக யாராவது குறைசொன்னால் கொன்னுடுவேன் கொன்னு. தாஜ், அவர் துக்கம் என் துக்கம்.. ரொம்ப ’ஆராய்ச்சி’ பண்ணாதீர்! –ஆபிதீன்

***

அபூர்வக் கலைஞனின் ஒரு சின்ன மறதியும்  ஒரு சின்ன கவிதையும்

தாஜ்

nerkaanal-cover1b3இந்த வருட, சென்னை புத்தகக் காட்சியில், வாங்க விரும்பிய புத்தகங்களின் பட்டியல் நீளம். வாங்கியது ஒரு சில புத்தகங்கள் மட்டும்தான். கூடுதலாக ‘நேர்காணல்’ சிற்றிதழின் பழைய இதழ்கள் இரண்டு. வீட்டிற்கு வந்த நாழியில், முதலில் அந்தச் சிற்றிதழ்களைத்தான் வாசித்தேன்.என் வியப்பு விரிவடைந்து கொண்டே இருந்தது. அந்தச் சிற்றிதழை கொண்டு வந்திருப்பவர் பவுத்த அய்யனார்!

 பவுத்த அய்யனாரைப் பற்றி, இலக்கியச் சூழலில் நிறைய கேள்விப்பட்டதுண்டு. என்றாலும் சந்தித்ததில்லை. அவ்விதழை வாங்கிய தருணத்தில்தான் அவரை, அவரது ஸ்டாலில் வைத்து சந்தித்தேன். சுந்தரராமசாமியின் நட்பு வட்டத்தில் பவுத்த அய்யனாருக்கு தனித்த, தவிர்க்க முடியாத இடமுண்டு. சு.ரா.வோடு அவர் பழகத் துவங்கிய காலம் தொட்டு, சு.ரா. இறப்பைத் தழுவும்வரை (1986 – 2005) தான்கொண்ட நட்பை சிதையாமல் காத்து போற்றியவர்!

 பவுத்த அய்யனாருக்கும் சுந்தரராமசாமிக்கும் இடையே கடிதத் தொடர்பு துளிர்த்து, இவர் அவருக்கும் அவர் இவருக்குமென அந்தக் கடிதப் போக்குவரத்து நடந்தேறியிருக்கிறது! அவர்கள், தங்கள் கடிதங்களில் இலக்கியம் சார்ந்தும், சாராமலும் பலதரப்பட்ட செய்திகளை இருவரும் பறிமாறி கொண்டிருக்கிறார்கள். சு.ரா., அமெரிக்காவில் இருந்தப்படிக்கு கடைசியாக எழுதிய கடிதமும் கூட பவுத்த அய்யனாருக்கு எழுதியக் கடிதம்தான்! சு.ரா.வின் கடிதங்கள் மட்டுமென சுமார் 200 கடிதங்களை தொகுத்து, ‘அன்புள்ள அய்யனார்’ என்று புத்தகமாக கொண்டு வந்திருக்கிறார் அய்யனார்! வாசிக்கவும் வாசித்தேன். பெரிய அதிர்ஷ்டம்தான்!

 அந்தப் புத்தகத்தை வாங்க அய்யனாரின் ஸ்டாலுக்கு சென்ற போதுதான் ‘நேர்காணல்’ சிற்றிதழைக் கண்டேன். ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’ / அந்த்வான் து செந்த் எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’ / ழாக் ப்ரெவெரின் ‘சொற்கள்’ / பியர் பூர்தியுவின் ‘தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்’ / ழான்-போல் சார்தரின் ‘மீள முடியுமா?’ / பியரெத் ஃப்லுசியோவின் ‘சின்னச் சின்ன வாக்கியங்கள்’ இப்படியான பிரெஞ்ச் இலக்கியப் படைப்புகளை தமிழுக்கு தந்த வெ. ஸ்ரீராமை   பேட்டிக்கண்ட ஓர் முழு இதழைக் கண்டமாத்திரத்தில் வியந்து வாங்கினேன். அதே மாதிரி இன்னொரு இதழாக, ‘அபூர்வக் கலைஞன்’ வண்ணநிலவன் என்று அட்டைப்படம் கண்ணில்பட அதனையும் வாங்கினேன்.

 குறிப்பிட்ட இரண்டு இதழ்களையும் இத்தனை நாட்களாகப் படித்து,  சமீபத்தில்தான் நிறைவு செய்தேன். அத்தனைக்கு, அந்தப் படைப்பாளிகளது செய்திகளின் அழுத்தங்கள் விசேஷம் கொண்டதாக இருந்தது.

 நிஜத்தில் வண்ணநிலவன், ‘அபூர்வக் கலைஞன்’தான். அவர் போற்றத்தக்க கலைஞன் என்பதில் இரண்டு கருத்துகள் இருக்க முடியாது. அவரது நாவல்களான கம்பாநதி / கடல்புரத்தில் / ரெயினீஸ் ஐயர் தெரு என்ற அத்தனையும் வளமான படைப்புகள். சுமார் முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால், நாவல் வாசிக்கும் வாசகனை எந்த அளவுக்கு அவரது நாவல்கள் நெகிழ்வு கொள்ள வைத்தது என்பதை நான் அறிவேன். அது மாதிரியே அப்போது வாசித்த, அவரது  சிறுகதைகள் ‘எஸ்தர்‘ போன்றவைகளும் அதே அளவிலான தாக்கம் தந்தவைகள்தான்.

 இங்கே பிரசுரம் ஆகியிருக்கும் வண்ணநிலவனின் ‘மெய்ப்பொருள்:3’ என்கிற இந்தக் கவிதை, அவரை நேர்காணல் கண்டிருந்த இதழில் கண்டெடுத்தது. இதுவும் கூட சுமார் 33 வருட பழமைவாய்ந்த எளிய கவிதை!. வண்ணநிலவனின் படைப்புகளை, என்பதுகளின் பின்னாண்டுகளில், சௌதியில் வைத்து எனக்கு அறிமுகம் செய்துவைத்த என் நண்பர் ‘மர்ஹூம்’ கூத்தாநல்லூர் ஹாஜா அலி அவர்கள், இந்தக் கவிதையை மெச்சிப் பேசியதாகவும் நினைவு. தவிர, ஹாஜா அலி எழுதும் சில கவிதைகள் கூட இதே சாயல் கொண்டதாகவே இருக்கும்.

 hajaliimage3ஹாஜா அலி, வியந்து சொல்லித்தான் வண்ணநிலவனின் கடல்புரத்தில் / ரெயினீஸ் ஐயர் தெரு; ஜானகிராமனின் மரப்பசு, சு.ரா. / அம்பை / கி.ராஜநாராயணன் / மௌனி / எம்.வெங்கட்ராம் / அசோகமித்திரன் போன்ற மேதைகளை வாசித்தேன். ஏன்… சு.ரா.வின் ஜே.ஜே. சிலக் குறிப்புகளைக் கூட அவர்தான் எனக்கு தந்து வாசிக்கவும் ஆர்வம் உதவினார்!

 எழுதுவதென்பது அவருக்கு அத்தனை இஷ்டமில்லாதது. வாசிப்புதான் அவரது உலகம். அதுதான் அவரது சுவாசம்! கடைசி காலங்களில் தமிழ் இலக்கியம் அவருக்கு போதாதென்றாகி ஆங்கிலத்தில் தேர்வு செய்து வாசிக்கத் தொடங்கினார்.

 சொத்தை விற்று ஆர்வமாக புத்தககங்கள்  வாங்கிய ஒருவரை நான் கண்டேன் என்றால் அது இவர்தான். நாகூர் கடற்கரையில் அநாதைப் பிணமாக கிடந்த கிடப்புதான் இவரின் புரிபடாத முடிவாகிப் போனது. பொதுவில், சக மனிதர்கள்  அவரது பார்வையில் அர்த்தம் கொண்டவர்களாக தெரிந்ததில்லை என்பதை மட்டும் அறிவேன்.

 வண்ணநிலவனின் இந்தக் கவிதையை கூட, நண்பரின் நினைவாகவே இங்கே பிரசுரத்திற்கு தேர்வு செய்தேன்! எனக்கென்னவோ இக்கவிதை, என் ஹாஜா அலி எழுதிய எழுத்தாகவே தோன்றுகிறது. அட்சரம் பிசகாமல் அவரது கவிதை வரிகள் மாதிரியே இருக்கிறது. பவுத்த அய்யனாரும், வண்ணநிலவனும் என்னை மன்னிக்க வேண்டும். என் நண்பர் என்னை ரொம்பவும் பாதித்திருப்பதைதான் இப்படி சொல்கிறேன்.

 இந்த என் அலப்பறையை முடித்துக் கொள்ளும் முன், இன்னொரு சின்னச் செய்தி. 1

80-களில், ஒருவருடத்தின் ஜனவரி-15ல் , ‘துக்ளக் ஆண்டுவிழா’ எங்கள் பக்கத்து டவுனான சிதம்பரத்தில் நடந்தது. அந்த விழாவில் பேச விரும்புகின்றவர்களின் முகவரியும், கேட்க நினைக்கும் கேள்வி குறித்தும் பதினைந்து நாட்களுக்கு முன்னமே தகவல் செய்து பதிவு செய்ய வேண்டுமென முந்தைய துக்ளக் இதழில் அறிவித்திருந்தபடிக்கு, என் பெயர்/ முகவரி/ கேட்க இருந்த கேள்வி என்று அனைத்தையும் வழிமுறையாய் கடிதம் எழுதி அனுப்பியிருந்தேன்.

 அந்த 80- காலக்கட்டங்களில்தான் துக்ளக் ஆசிரியர் சோ, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை வலுக்கட்டாயமாக தமிழத்தில் தன் பத்திரிகையின் வாயிலாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். (இப்போதும் கூட அதுதான் நிலை!) ஆனால், அந்த இயக்கத்தின் சூழ்ச்சி நிறைந்த அரசியல் குறித்தான இன்னொரு பக்கத்தை அவர் எழுதுவதே இல்லை. (ஆனால்.. இன்றைக்கு அவ்வப்போது எழுதவும் எழுதுகிறார்!) அந்த முரண்பாட்டையொட்டிய கேள்வியாகவே அன்றைக்கு என் கேள்விகள் அமைந்திருந்தன.

 அந்த விழா நடந்த அன்று, என்னுடன் கல்லூரியில் படித்த, நண்பரான சுந்தரவடிவேலுடன் சென்றிருந்தேன். அவன் என் கேள்வியினை கேட்டறிந்த பின்,  “சோவை விடாதே” என்று ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தான். விழா தொடங்கியதில் இருந்து சோவின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அங்கே கூடியிருந்த பெரும்கூட்டம் ஆராவரித்துகொண்டு இருந்தது.

 நண்பனிடம் சொன்னேன். ‘சூழ்நிலையைப் பார்த்தால், எனது கேள்வியில் எத்தனை அர்த்தம் இருந்தாலும், இந்த மக்கள் சோ சொல்வதைதான் ஏற்பார்கள். இந்தக் கூட்டமே அவருக்காகத்தான் கூடியிருக்கிறது. மேடையில் கேள்வி எழுப்பும் அன்பர்களை, இடையிடையே நகைச்சுவை கிண்டல்களுடன் சோ  மடக்கும் தர்க்கத்தை காணுகிற போது, என்னை அவர், சட்டென ’சைபர்’ ஆக்கிவிடுவார். எதிர்த்தும் பேச அனுமதியும் கிடைக்காது. பிறகு நான் ஏன் மேடையேறனும்?’  என்றேன். விசயதாரியான அந்த நண்பன் என் கூற்றை ஏற்றுக் கொண்டான். இத்தனைக்கும் மேடை அருகில் நின்றபடிக்குதான் இந்த ‘வேண்டாம்’ ஆலோசனை நடந்து கொண்டிருந்தது.

அந்தக் காலக்கட்டத்தில் வண்ணநிலவன் துக்ளக்கில் பணிபுரிய தொடங்கியிருந்தார். அந்தக் கூட்டத்திற்கும் வந்திருந்தார். அங்கே அவர்தான் விழா ஒருங்கிணைப்பாளராக பணியோடு ஓடியாடிக் கொண்டும் இருந்தார். மேடையில் பேச பெயர் கொடுத்தவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்களை ஒவ்வொன்றாக வாசித்தார்கள். என் பெயரையும் அறிவித்தார்கள். வண்ணநிலவனிடம், ’நான் பேச விரும்பவில்லை; என்றேன். ஏன்? என்றார்! காரணத்தைக் கூறாது ‘இல்லை வேண்டாம் சார்’ என்றேன்.

 ‘நோ… நோ.. கட்டாயம் நீங்கள் பேசணும், எங்களுக்கு வந்திருந்த கேள்விகளில் உங்களது கேள்விதான் அர்த்தம் கொண்டது’ என்றார். அவர் சொன்ன பிறகு, மிகுந்த தைரியத்துடன் மேடையேறி, நான் பேசி முடிக்கும்வரை குறுக்கே நீங்கள் பேசக்கூடாது என்று ஆரம்பத்திலேயே சோவிடம் மிகுந்த தைரியத்துடன் கூறியவனாக, என் பேச்சைத் துவங்கி, எழுப்ப நினைத்த கேள்விகளை முழுவதுமாக கேட்டுத் தீர்த்தேன். எனக்கு சோ பதில் சொன்னார் என்பதைவிட, மழுப்பி சமாளித்தார் என்பதுதான் சரியாக இருக்கும்.

மேடையைவிட்டு கீழே இறங்கிய பிறகு, வண்ணநிலவன் என்னோடு மிகுந்த பிரியமாகப் பேசினார். அனேகமாக என் தைரியம் அவருக்கு பிடித்து போய் இருக்கலாம். அப்போதுதான் சொன்னார், ‘இளம் பருவத்தில் தானொரு இஸ்லாமியக் குடும்பத்தினரின் அரவணைப்பில், அவர்கள் காட்டிய பரிவில் படித்து வளர்ந்தவன் என்று சிலாகித்து சொன்னர். இப்போது நான் வாசித்த அவரது முழுமையான அந்த நேர்காணலில், குறிப்பிட்ட அந்தச் சிலாகிப்புச் செய்தி ஒரு வரி கூட இல்லை!

சிதம்பரத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் மேடையில் வைத்து சோவிடம், ஆர்.எஸ்.எஸ்.-ன் இன்னொரு பக்க அரசியல் சூழ்ச்சிகள் குறித்து, அன்றைக்கு கேள்விகள் எழுப்பியதை எப்படி என்னால் மறக்க முடியாதோ, அது போலவே அன்றைய தினம் வண்ணநிலவன் என்னுடன் அன்பு கொண்டு உரையாடியதையும், இஸ்லாமியக் குடும்பத்தினர் குறித்து குறிப்பிட்ட சிலாகிப்பையும் என்னால் மறக்க முடியாது. வயது பொருட்டு மறதி அவரை ஆண்டிருக்கலாம்! நான் மறந்துவிடவில்லையா எத்தனை எத்தனையோ கவிதை மணித்துளிகளை!

**

vannanilavan2sol

மெய்ப்பொருள்:3 – வண்ணநிலவன்

எல்லாம் விலை குறித்தனவே

எல்லாம் விற்பனைக்கே

ஹே, அர்ஜுனா,

விற்பனைத் துணை கொள்

காய்ந்த விறகோ, ஹரி கதையோ

பழைய ஹிந்து பேப்பரோ, மகளோ,

கலையோ, கருமாரியம்மனோ…

வேஸ்ட் பேப்பருக்கும்

வேசிக்கும் சமவிலைதான்.

சூரியனுக்குக் கீழுள்ள

சகலமும் விற்பனைக்கே,

விற்பனை செய்வாய், விற்பனை செய்வாய்.

மியூஸிக் அகாடமியில் கலை விற்பனை.

கந்த விலாஸ் கடையில் ஐவுளி விற்பனை

அரபு தேசத்தில் இளைஞரும்

சீரணி அரங்கில் அரசியலும்,

‘பாக்கு மன்னன் பூச்சி?’

டிரேட் மார்க்கில் கவனம் வை.

மரமும் மகனும்

காய்த்துக் கனி தருவர்.

உட்லண்ட்ஸ் ஹோட்டலில் டிபனுற்பத்தி

பழனியில் பஞ்சாமிர்த உற்பத்தி

கலைப் படம் கான்ஸ்டாண்டி நோபிளுக்கு,

கமர்ஷியல் படம் காரைக்குடிக்கு.

ஐயப்பசாமிக்கும், ஐயனார் காபிக்கும்

பிராஞ்சுகள் திற.

மாடர்ன் ஆர்ட்டுக்கு மார்க்கெட் தேடு.

ஓய்ந்த நேரத்தில்

நட்பு செய்தாலும்

நாய் வளர்த்தாலும் – நல்ல

லாபமுண்டு.

***

நன்றி: வண்ணநிலவன்,  ’நேர்காணல்’ இதழ் (செப்டம்பர்-நவம்பர் 2010 ) , தாஜ் ,  சொல்வனம்அழியாச் சுடர்கள்

இலங்கைத் தமிழர் பிரச்னை வேறு; பயங்கரவாதம் வேறு! – ’துக்ளக்’ கட்டுரை

அ.இ.அ.தி.மு.க வழக்கறிஞர் திரு. ஏ.பி. மணிகண்டன் எழுதிய கட்டுரை. துக்ளக்-ல் ( 7.9.2011 இதழ்) வந்திருக்கிறது. தனக்குப் பிடித்திருக்கிறதென்று தட்டச்சு செய்து அனுப்பியிருக்கிறார் தாஜ். பதிவிடுகிறேன். தாஜின் பின்குறிப்பு கட்டுரைக்குப் பின் வருகிறது.  ‘சோவின் துக்ளக் அரசியல்’ கட்டுரையைப் படித்துவிட்டு இதை வாசிக்கலாம். மாற்றுக்கருத்துடைய நண்பர்கள் தாஜை தூக்கிலும் போடலாம்!

***

இலங்கைத் தமிழர் பிரச்னை வேறு; பயங்கரவாதம் வேறு!

ஏ.பி. மணிகண்டன்

‘ஐ.நா. குழு அறிக்கையின்படி இலங்கையில் மனித உரிமைகள் பெருமளவில் மீறப்பட்டுள்ளன. எனவே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். இலங்கை மீது இந்தியா உடனடியாகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்று சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதல்வரின் முன்னிலையில், தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றின. அதன் பின்பு இலங்கை பாதுகாப்பு துறைச் செயலர் கோத்தபய ராஜபக்சே தமிழக முதல்வரின் தீர்மானத்திற்கு எதிராக கடுமையாக ஆட்சேபம் தெரிவித்து இருப்பதும் நாம் அறிந்ததே.

இறையாண்மை பெற்ற ஒரு நாட்டின் மீது, மற்றொரு நாட்டின், மாகாணத்தைச் சேர்ந்த முதல்வரோ அல்லது ஆளுநரோ கருத்து தெரிவிப்பதோ, அல்லது எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவதோ சரியான அணுகுமுறைதானா என்பது விவாதத்துக்கு உரியது. உதாரணத்திற்கு, அமெரிக்காவில் ஏதாவது ஒரு மாகாணத்தைச் சார்ந்த ஒரு ஆளுநர், நமது இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட கொள்கையைப் பற்றியோ அல்லது இந்தியாவில் நடக்கும் அரசியல் நிகழ்வைப் பற்றியோ கருத்து தெரிவித்தால், அதை நாம் ஏற்றுக் கொள்வோமா? எனினும் இந்தச் சர்ச்சையைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், தமிழக முதல்வரின் அணுகுமுறையும், ஏனைய எதிர்க் கட்சிகளின் அணுகுமுறையும் முற்றிலும் வேறுப்பட்டது.

போர்க் குற்றங்களை புரிந்த இலங்கை நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் உரிய பாதுகாப்பும், நிவாரணமும் பெற வேண்டும் என்ற விருப்பத்தைத் தவிர, வேறு எந்த மறைமுக உள்நோக்கமும் முதல்வருக்கு இருக்க துளியும் வாய்ப்பு இல்லை. ஏனெனில், இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது வேறு, அதைக் காரணமாக வைத்துக் கொண்டு பயங்கரவாதிகளை ஆதரிப்பது என்பது வேறு என்பதை மிகத் தெளிவாக ஆரம்பத்தில் இருந்தே புரிந்து கொண்டு, இன்றும் பயங்கரவாத விடுதலைப் புலிகளை தீவிரமாக எதிர்த்து வருபவர் நமது தமிழக முதல்வர். சமீப காலமாக இலங்கைத் தமிழர்களின் நலனிற்காக அவரது குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் அவர் பயங்கரவாதிகளைத் துளியும் ஆதரித்தது இல்லை. எனவே, அவருக்கு வேறு எந்த மறைமுக நோக்கமும் நிச்சயம் இல்லை.

ஆனால், இலங்கைத் தமிழர்களுக்காகவே அவதரித்த தலைவர்களான வை.கோ., ராமதாஸ், திருமாவளவன், போன்றோரும், நீண்ட காலமாக விடுதலைப் புலிகளின் பிரச்சாரகர்களாக இருந்துவரும் பழ.நெடுமாறன், சீமான் போன்றவர்களும் ‘முள்ளிவாய்க்கால் சம்பவத்தை பாரீர், ஐயோ ஈழத் தமிழர்க நிலை பாரீர்’ என்று கூறுவதற்கும் நிறைய அடிப்படை வித்தியாசங்கள் இருக்கின்றன.

மேற்கண்ட தலைவர்களுக்கு ஈழத் தமிழர்களின் துயர், போர்ப் படுகொலைகள் இவற்றைப் பற்றிய அக்கறையை விட, இறுதிக் கட்டப் போரில் நடந்த துன்பியல் சம்பவத்திற்குத்தான் வருந்துகின்றனர் (பிரபாகரன் கொல்லப்பட்டது). இதை வெளிப்படையாகவும் கூற முடியாது. ஏனெனில், பிரபாகரன் கடவுள் அவதாரத்திற்கு இணையானவர், அவரை உலகில் யாராலும் அழிக்க முடியாது என்ற ‘பில்டப்’ அழிந்து விட்டதை  எப்படி அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும்? அவர் சண்டையில் கொல்லப்பட்டுவிட்டார் என்பதையே வசதியாக மறைத்துவிட்டு, ‘இதோ வருகிறார்’ விரைவில் வந்து விடுவார்’ ‘வந்து கொண்டே இருக்கிறார்’ என்று மக்களின் முன்பு நாடகமாடிக் கொண்டிருப்பவர்கள் மேற்கூறியவர்கள்.

எனவே, ‘ஈழத் தமிழர் நலன், போர்ப் படுகொலை, இலங்கை தண்டிக்கப்பட வேண்டும்’ என்று இவர்கள் கூப்பாடு போடுவது என்பது அப்பட்டமான பகல் வேஷம். அவர்களின் உண்மையான ஆத்திரம், இறுதிக்கட்டப் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டார், அதற்குக் காரணமான இலங்கை அதிபரைப் பழிவாங்க வேண்டும் என்பதுதான்.

ஐ.நா.சபை அறிக்கை என்ன இலங்கையை மட்டுமா குற்றம் சாட்டியது? விடுதலைப் புலிகள் புரிந்த அப்பட்டமான மனித உரிமை மீறல்கள், பொதுமக்களை கேடயமாகப் பயன்படுத்திய அவலம், இளம் சிறார்களைப் போரில் ஈடுபடுத்தியது… என்று அவர்களின் அட்டூழியங்களையும் பட்டியல் போட்டது. தமிழகத்தில் யாராவது ஒரு அரசியல்வாதியாவது இதைப் பற்றிப் பேசினாரா? கண்டித்தாரா? விடுதலைப் புலிகளின் அட்டூழியங்களை வசதியாக மறைத்துவிட்டு, ‘அயோ இலங்கையில் போர்க் குற்றம் பாரீர், ஈழத் தமிழரின் அவலநிலை பாரீர்’ என்று அனைத்து பத்திரிகைகளும் சிறிதும் நியாயம் இல்லாமல் நடந்து கொண்டன.

போர் குற்றங்களில் மனித உரிமை மீறல்களைப் புரிந்த இலங்கை அரசாங்கத்தையும், விடுதலைப் புலிகள் அமைப்பையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி கடுமையாக நடவடிக்கை எடுங்கள் என்று கூறாமல், யாரை ஏமாற்ற நாடகம் நடத்துகின்றனர் இந்த வைகோ, ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள்?

சரி, இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றகளுக்காக நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு வேளை அவ்வாறு நிறுத்தப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால்? அப்போது இந்த மனித உரிமை காவல் தலைவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா? அல்லது மரண தண்டனை கூடவே கூடாது என்பார்களா?

இந்திய நாட்டின் இளம் தலைவரை, அறிவியல் முன்னேற்றத்திற்கு அடிகோலிய ஒரு முன்னால் பிரதமரை துடிதுடிக்கக் கொலை செய்ய உதவிய குற்றவாளிகளுக்கு, தூக்குத் தண்டனை கூடவே கூடாதாம். மரண தண்டனை மனித நேயத்திற்கு எதிரானதாம்.

இந்திய நாட்டின் முன்னால் பிரதமரைக் கொன்ற விடுதலைப் புலிகளை தூக்கில் போடக் கூடாது. உலக பயங்கரவாதியான பிரபாகரனை வீழ்த்திய இலங்கை அதிபரை மட்டும் 1000 முறை சாகும் வரை தூக்கில் போட வேண்டுமாம். ராஜீவ் காந்தியின் உயிர் என்ன விடுதலைப் புலிகளின் உயிர் போல மதிப்பு வாய்ந்ததா? அல்லது குறைந்த பட்சம் அவர் இலங்கைத் தமிழரா? விடுதலைப் புலிகளை வேறோடு ஒழித்த ராஜபக்சேவை தூக்கில் போட வேண்டும். ராஜீவ் காந்தியைக் கொலை செய்த, கொலைக்கு உதவிய மனிதப் புனிதர்களான, விடுதலைப் புலிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். புலிகளுக்கு ஒரு மனித நேயம் என்றால், மனிதர்களின் மகா புனிதர்களாக விளங்கும் அஃப்சல் குரு, கஸாப் போன்றவர்கள் இந்த நாட்டின் மாட்சிமை பொருந்திய விருந்தினர்களாக நடப்பட வேண்டும். வாழ்க ஜனநாயகம்! அட சர்வேசா!

– ஏ.பி. மணிகண்டன்,
கழக வழக்கறிஞர்,
அ.இ.அ.தி.மு.க. – சேலம். 

*

பின் குறிப்பு – தாஜ்:

இந்தக் கட்டுரையின் பார்வை, எனக்கு ஏற்புடையது.  இதில் மறைப்பு வாதங்கள் உண்டு. எழுதி இருப்பவர் ஓர் வழக்கறிஞர் மற்றும், அரசியல் சார்ந்தவராயிற்றே! சென்ற பாராளுமன்ற தேர்தலில், இன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரகடனங்களில் ஒன்று ‘ஈழத் தமிழர்களுக்கு அவர்களது மண்னை மீட்டுத் தருவேன். அது என்னால்தான் முடியும்’ என்பதானது. தவிர, ஈழ மக்கள் மீது என்றும் இல்லாத அளவுக்கு ஜெயிடம் பிரியம் கரைபுரள்கிறது. அவரது மேடையில் அமர்ந்திருந்த வை.கோ., ஐயா வைத்தியரெல்லாம் பின்னுக்குப் போய்விட்டார்கள். இக்கட்டுரையாளர் அந்த நிகழ்வையே துடைத்தெறிந்த மாதிரி வசதியாக மறந்துவிட்டார். நம் அரசியல்வாதிகளுக்கு எல்லாம் ஒரே முகம்தான்.

ஈழத் தமிழ்ப் பிரச்சனை இத்தனைத் தூரம் சோகம் கப்பி போனதற்கு பல காரணங்கள். அதில் வீரியமான ஒன்று, இந்திய அரசியல்வாதிகள் அதில் சுயநலத்துடன் பங்கெடுத்ததுதான். இதனை சத்தியம் செய்து சொல்வேன். இதில், நம் மத்திய அரசு தமிழக அரசியல் கட்சிகளுக்கு சளைக்காமல் காரியம் ஆற்றியது. நாட்டின் பாதுகாப்பிற்காக என்றும் ஈனக் குரலில் ஒப்புக் கொண்டது. இங்கே மத்திய அரசு என்பது பாரதிய ஜனதா ஆண்ட மத்திய அரசையும் சேர்த்துதான். இவர்களுக்கு தமிழன் என்றாலே ஆகாது. தமிழனின் கச்சாதீவை தாரைவார்ப்பதில் ஆகட்டும்/ காவிரி நீர் வரத்து சிக்கலை கண்டுக் கொள்ளாததில் ஆகட்டும்/ சேது சமூத்திரத் திட்டம் முடங்கிப் போவதை கண்டுக் கொள்ளாதில் ஆகட்டும்/ தமிழக மீனவர்களை சிங்கள ரணுவம் கொல்வதை பெரிசுப் படுத்தாததில் ஆகட்டும் மத்திய அரசு தொடர்ந்து தமிழனுக்கு எதிராக வில்லன் வேஷம் கட்டுவதில்தான் எத்தனை இன்பம் அதற்கு!

அன்றைக்கும் இன்றைக்கும் ‘தமிழ் ஈழத்தின்’ வரைப்படம் கூட தெரியாத நம் அரசியல் தலைவர்கள் அதன் பிரச்சனையில் பங்கெடுக்கும் வேகம் அபாரமானது! மிச்சம் மீதி இருக்கும் ஈழத் தமிழர்களையும் கூண்டோடு பரலோகம் அனுப்பாதவரை ஓயமாட்டார்கள். கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள். ஈழத் தமிழனே தமிழ் ஈழத்தை மறந்தாலும், நம் அரசியல்வாதிகள் மறக்க மாட்டார்கள். இங்கே இவர்கள் அரசியல் செய்ய வேறு ஆயுதமே இல்லை. ஒரு பெரிய போருக்குப் பிறகு நீண்ட ஓய்வு என்பது புத்திசாலித் தனமான போர் தந்திரமாக கணிக்கப்படும் யதார்த்தம் கூட இவர்களுக்கு புரிவதில்லை. நிஜத்தில் ஈழ மண் என்னவோ இப்போது அமைதியாகத்தான் இருக்கிறது. இவர்கள்தான் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள். இடையிடையே ‘பிரபாகரன் வருவார்’ முழக்கம் வேறு.

அண்டை (நாட்டு முன்னால்) பிரதமரை, தமிழ் ஈழ இயக்கம் திட்டமிட்டு படுக் கொலை செய்கிறது. அது நிரூபணமாகி, அந்த இயக்கமும் ‘ஆம்’ என ஒப்புக் கொண்டப் பிறகும், இந்திய அரசு அந்த மூவரையும் இருபது வருடம் ஜெயிலில் வைத்துவிட்டு, இப்போதுதான் தூக்குக்கு அனுப்ப முனைகிறது. இதுதான் சாக்கென்று, தமிழகத்தில் சில அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்வர்களும் ‘தூக்கு கூடாது’ தென அநியாயத்துக்கு கூக்குரல் இடுகிறார்கள். எப்படி யோசித்தாலும் இவர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை.

இந்தக் கட்டுரை, தமிழக பத்திரிகைகளில் இருந்து மாறுப்பட்ட கோணத்தில், அதே நேரத்தில் திறம்படவும் கருத்துக்களை வைத்திருக்கிறது. அதனாலேயே… என் பார்வையில் இது சிறப்பாக தெரிகிறது. இன்னும் பெரிய அளவில் இங்கே நான், என் பக்க செய்திகளை வைக்க வேண்டிய முக்கியம் இருக்கிறது. என்றாலும் போதும். உணர்ச்சிகளை மழுங்கடிக்க உண்மைகளால் முடியாது.

***

நன்றி:  துக்ளக் / ஏ.பி. மணிகண்டன் , தாஜ்

***

ஆபிதீன் தரும் ஒரு சுட்டி :

மரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர்கள், கலைஞர்கள் அறிக்கை

துக்ளக்கும் சத்யாவும் – சில குறிப்புகள் : தாஜ்

‘கஜானா மூலம் கட்சி வளர்க்கும் கலை’யுடன்…!

***

‘துக்ளக்’ ஆரம்பிக்கப்பட்ட போது, சத்யா அதில் இல்லை. ஆரம்ப துக்ளக் இதழ்களின் பெரும்பாலான பக்கங்கள் சோவின் கைவண்ணமாகத்தான் இருந்தது. சில நேரம், அச்சடிக்காத வெள்ளைப் பக்கங்களோடும், ‘எழுதுவதற்கு விசயம் இல்லை’ என்கிற குறிப்பேந்தியபடியும் வரும்! அப்போது துக்ளக் இதழை பரப்பரப்பாக வாசிக்கும் என்னையொத்த வாசகர்கள், அந்த வெள்ளைப் பக்கத்தையும் ஆர்வமுடன் வாசித்து – ‘ஸாரி…’ , பார்த்து…-  ‘சோ…ன்னா சோ…தான்’ யென புளகாங்கிதத்தோடு மெச்சியபடி அவர் புகழ் பாடித் திரிந்தோம். சோவின் இந்த மாதிரியான தான்தோன்றித்தனத்தையெல்லாம் என்னை ஒத்தவர்கள் மாதிரி எல்லோரும் ஏற்கவில்லை. அதையொட்டி அந்த இதழில் மாற்றங்கள் தெரியத் துவங்கியது.

அவர் மட்டுமே ஆதிக்கம் செய்த இதழில் போனா போகிறது என்று இன்னும் ஓரிருவர் எழுதத் துவங்கினார்கள். அதில் ஒருவராக தலை காண்பித்தவர்தான் சத்யா. இன்னொருவர் ஜெயலலிதா! புனைப்பெயரில் எழுதினார். உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, ஜெயலலிதாவுக்கு எழுத வரும்! எம்.ஜி.ஆரை சீண்டி, கல்கி இதழில் அவர் எழுதிய தொடர் கதையை ‘கிசுகிசு’ படிக்கும் ஆர்வத்தோடு படித்தவன் நான்.

சத்யா துக்ளக்கில் வளர்ந்தபோது அவரை நான் பெரிதாகப் பொருட்படுத்தியது இல்லை. எனக்கு சோ போதும். அவரது கேலி / கிண்டல்/ சட்டயர் / தர்க்கம்/ குதர்க்கம் போதும் . அதைவிட அவரது தைரியம்..! அரசியலில் உலா வந்த பெரிய தலைகளை மதிக்காமல் அவர் வீசி எறியும் தைரியம் அது! எனக்கு. ‘சோ’தான் எத்தனைப் பெரிய ஆள்! பாருங்கள், நான் எத்தனைக்குப் பைத்தியக்காரனாக இருந்திருக்கிறேன் என்று! அப்போதெல்லாம் சத்யா ‘சோ’வின் நகலாகத்தான் எழுதினார். ‘துப்பறியும் சாம்பு’ எழுதிய தேவன்தான், சோவுக்கு ஆதர்சம். (சோ சொல்லிக் கொண்டது) அந்த நேரத்தில் சத்தியாவின் ஆதர்சம் சோவாக இருந்திருக்கக் கூடும். அப்படிதான் பட்டது. சோ சுற்றிவரும் அதே வட்டத்திற்குள் அப்படியேதான் எழுதுவார். சத்யாவின் தனித்துவம் அன்றைக்கு விரிவடையவில்லை.

துக்ளக்கின் அடுத்தக்கட்ட சீரமைப்பில், சோவைத்தாண்டி துக்ளக் பெரிதாக தெரியத் தொடங்கியது. அதில் எழுதுபவர்கள் சுதந்திரம் கொண்டார்கள். வெளியில் இருந்து, அதாவது… அவரது நிறம் மணம் கொள்ளாத மூன்று ஆளுமைகளின் எழுத்தும் அந்த இதழில் இடம் பெற்றது. குல்தீப்நய்யார், ஜெயகாந்தன். வண்ண நிலவன் எழுத்துகள் அந்த இதழுக்கு புதிய முகத்தைத் தந்தது. இந்தக் காலக்கட்டத்தில்தான் சத்யாவின் எழுத்து அவருக்கு ஒதுக்கப்பட்டப் பக்கங்களில் இறக்கைக் கட்டிப் பறக்கத் துவங்கியது.

‘ஒன்னரைப் பக்க நாளிதழ்’ என்றும் அரசியல் தலைவர்களின் கற்பனை உரையாடல்கள் என்றும் பிரமாதப்படுத்தத் துவங்கினார்! பல இதழ்களில் சோவின் எழுத்தை ஒன்றுமில்லை என்றும் ஆக்கினார். சோவை விஞ்சிய கேலியும் கிண்டலும் சடையரும் தர்க்கமும் சத்யாவுக்கு எளிதாக கைகூடிவந்தது. இன்றைக்குவரை அது ஓயவில்லை. வாரம் தவராமல் பக்கம் பக்கமாக எழுதப்படும் வெறும் எழுத்தால் வாசகர்களை சிரிக்க வைப்பது சாதாரணமானதல்ல! இது ஒரு மிகப் பெரிய எழுத்துச் சாதனை. ஆனால், இன்றைய சத்யவின் எழுத்தில் முன்பு அவரிடம் இருந்த சத்யம் மட்டும் மிஸ்ஸிங்!

முன்பெல்லாம் எல்லா அரசியல் கட்சிகளையும், எல்லா தலைவர்களையும் தன் எழுத்தில் இழுத்துவைத்து அவருக்கே உரிய பாணியில் விமர்சனத்திற்கு உட்படுத்துவார். சில நேரம் சோவையும் இழுத்து நிறுத்தி கேலி செய்வார்! இப்போது சத்யா பாவம். ஆசிரியர் சோ கைகாட்டும் திசையில் மட்டுமே அந்த இதழில் அவரது கேலியும் கிண்டலும் போய்கொண்டிருக்கிறது.

இது துக்ளக் இதழ் கொண்ட மற்றொரு மாற்றத்தின் விழைவால் நிகழ்ந்தது. ஆரம்பம் தொட்டு ஆனந்தவிடனின் துணை இதழாக இருந்த துக்ளக்கை, சோ தன் பெயருக்கு கைமாற்றிக் கொண்ட நிலையில், அதனை இந்துத்துவாவின் காலடியில் வைத்து ஆசுவாசம் கொண்டார். அந்த இதழில் எழுதிய எழுத்தாளர்களுக்கு முன்பு இருந்த சுதந்திரம் தேவையில்லை என்கிறு சோ தீர்மானிக்க, ஆளுமைகொண்ட வெளி எழுத்தாளர்கள் அந்த இதழில் எழுதுவது நின்று போனது. வண்ண நிலவன் மட்டும் சில காலம் வேறு இதழ்களில் பணியாற்றிவிட்டு துக்ளக் இதழுக்கு திரும்பினார். சத்யா தன்னைச் சுருக்கிக் கொண்டார். 

தமிழக அரசியல்வாதிகளில் கருணாநிதி மட்டுமே தவறானவர்! குஜராத் முதல்வர் மோடி உலக மஹா யோக்கியர். பாரதிய ஜனதா இந்திய மக்களை வாழ்விக்க வந்த கட்சி. அது தவறே செய்யாது. அப்படியே அது செய்து சந்தி சிரித்தலும் சிணுங்கலாக கண்டித்து, மறக்காமல் தட்டிக் கொடுத்துவிட வேண்டும்.  சங்கராச்சாரி, வாடகை கொலைகாரர்களை கொண்டு, கோவிலில் பிரகாரத்தில் குருக்களை கொன்றாலும் அதைப் பற்றியெல்லாம் விமர்சிக்கக் கூடாது. அத்தனைக்கும் கட்டுப்பட்டவராக கடன் பட்டவராக சத்யா, இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கிறார். அவரது அசாத்திய திறமைகளின் இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையிலும் எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் சோகம்.

*

இந்தப் பதிவில், பெருமழைப் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு நிவாரணம் தர முனைப்பு காட்டுகிற தமிழக முதல்வர் கருணாநிதியை/ ஆளும் திமுகவை முன் நிறுத்தி கேலி விமர்சனம் செய்திருக்கிறார் சத்யா. அந்தக் கேலிக் கட்டுரை மிக நேர்த்தியாக, கூரிய மதி நுட்பம்கொண்டு நம்மை சிரிக்கவும் வைக்கிறது.

ஆனால், சோ கைகாட்டுதலுக்கு சத்யா உட்படுவதால் யதார்த்த நிகழ்வுகளை மறந்த மாதிரி/ மறைத்த மாதிரி எழுதி இருக்கிறார். குறிப்பாய்… இந்த நிவாரணத் தொகையை ‘உடனே வழங்குமாறு’ தமிழகத்தில் இல்லாத பி.ஜே.பி.யில் இருந்து, கம்யூனிஸ்ட் முதலாக அண்ணாதிமுக வரை போராட்டம் நடத்தாதக் குறையாக குரல் கொடுத்தனர். இந்த நிஜத்தை சத்யா நன்றாகவே அறிவார். என்னசெய்ய. மறைத்து எழுதியிருக்கிறார். தவிர, இது மாதிரியான அவர் மறைத்திருக்கிற பிழைகள் இந்தக் கட்டுரையில் நிறைய உண்டு.

மக்கள் நல உதவிகளை முன்வந்து தராத அரசு என்று இந்தியாவில் உண்டா என்ன? பிஜேபி அரசு, இந்தியா தழுவி, ஹஜ் யாத்திரை போகும் முஸ்லிம்களுக்கு, உதவி தொகை வழங்கியதைவிட மலிவான/ வெளிப்படையான ஓட்டுக்கான சலுகை வேறு ஏதேனும் உண்டா என்ன? ஜெயலலிதா,கோட்டையில் ஆளுவதைவிட்டு ஊருக்கு ஊர் போய் நூற்றுக்கணக்கானோருக்கு திருமணங்களை செய்தபடி ‘காக்கவந்த கடவுளாக… மா மாதாவாக’ எல்லோரையும் காலில் விழவைத்து மகிழ்ந்தபடிக்கு வலம் வந்த போக்கு , ஓட்டுக்காக இல்லையா?

கருணாநிதியையும் திமுகவையும் தாக்கி எழுதினால்தான் சம்பளம் என்கிறபோது அவர்தான் என்ன செய்வார்!  பொதுத்தேர்தல் வரப் போகிறது. அதையொட்டி தமிழக முதல்வர், தேர்தல் அறிக்கையின் வழியே நம் ஏழை மக்களின் உபயோகத்திற்கென்று வாஷிங் மிஷின், ஃபிரிஜ், ஏ.சி, ஹெலிகாப்டர், வீட்டுக்கு ஒரு ரோபோ போன்ற பொருட்களை தர முன்வரலாம்! சில நேரம் நோட்டடிக்கும் கையடக்க மிஷினைக் கூட தாராள மனதுடன் தர முன்வரலாம்! ஆச்சரியப்படுவதற்கில்லை. அரசின் மக்கள் நலன்கள், வேகமும்/ முன்னேற்றமும் கொள்ள வேண்டாமா? பாவம் சத்யா!

இலக்கணப்படிக்கு அரசியல்வாதியை எழுத்தாளன் ஜெயிக்க முடியாது. நாற்பது வருஷமாக துக்ளக் சோ, கருணாநிதியை பந்தாய் உருட்டி, பம்பரமாக சுற்றி, செக்கில் போட்டு அரைத்தெடுக்கிறார். என்ன ஆனது? இன்றைய நிலவரப்படி, அவர் ஆறாவது முறையாக முதல்வர்! மத்திய அரசின் பங்குதாரர்! தவிர, பொதுக் கணிப்பில், ‘ஸ்பெக்ட்ரம் யானை மாலை போட’ கருணாநிதியே திரும்பவும் முதல்வராக வருவார் என்பதுதான்! ‘வைய வைய வைரக்கல்’லாகிக் கொண்டிருக்கிறார் கலைஞர்! ஆக, நாற்பது வருடங்களாய் தோற்றுக் கொண்டிருக்கும் சோவின் வழிக்காட்டலில் சத்யா என்கிற மிகப் பெரிய திறமை மங்கிக் கொண்டிருப்பது வெளிப்படை. நிஜமாகவே… பாவம்தான் சத்யா!

*

அரசியல்வாதிகளையும்/ மதவாதிகளையும்
தள்ளிவைத்துப் பார்க்கத் தெரிந்த
ஆபிதீன் பக்கத்து வாசகர்கள் அனைவருக்கும்
என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வெல்லுங்கள்.
வெல்வீர்கள்.
மீண்டும் வாழ்த்துக்கள்.

தாஜ்   

***

 

‘துக்ளக்’ சத்யா

ஆற்காடு வீராசாமி: காங்கிரஸ் மாநாட்டிலே சோனியா பேசியதை கவனிச்சீங்களா? ‘ஊழலுக்கு எதிராக போர் தொடங்கி விட்டது’ன்னு பேசியிருக்காங்க. கழகத்தோட மோதத் தயாராயிட்டாங்களோன்னு சந்தேகம் வரலை? இதைச் சும்மாவிடக் கூடாதுங்க.

கருணாநிதி: அனாவசியமா நீங்களும் பயந்து என்னையும் பயமுறுத்தாதீங்க. ஊழலுக்கு எதிரான போர்னா, கர்நாடக பா.ஜ.க. ஊழலுக்கு எதிரான போர்னுதான் அர்த்தம். நம்ம கூட்டணி இன்னும் உடையலைன்னுதான் நினைக்கிறேன். அதுக்குள்ளே குழப்பாதீங்க.

அன்பழகன்: இருந்தாலும் அம்மையார் – அதாவது சோனியா அம்மையார் – போற போக்கே சரியில்லைங்க. ஸி.பி.ஐ. ரெய்டு, சம்மன், விசாரணைன்னு நடக்கிறதைப் பார்த்தா, வில்லங்கமா ஏதாவது திட்டம் போடுறாங்களோன்னு ஒரு பயம் வரத்தான் செய்யுது. சுயமரியாதைக் கொள்கைப்படி, கழகம் எந்த அளவுக்கு அடங்கிக் கிடக்கலாம்னு ஒரு முடிவெடுக்கிறது நல்லதுதான்.

கருணாநிதி: நாம அவசரப்பட்டு எடுக்கிற எந்த நடவடிக்கையும் அம்மையார்கள் இணைப்புக்குக் காரணமா இருந்துடக் கூடாது. நம்ம அணியிலே எந்தக் கட்சி இருந்தாலும், இல்லைன்னாலும், கழகம் மறுபடியும் அரியணை ஏறணும். பதவி முக்கியமில்லை. ஆனா முக்கியமான பல விஷயங்கள் பதவி இருந்தாதான் கிடைக்கும். பதவியை வெறுக்கணும். ஆனா பதவியிலே இருந்தாத்தான் பதவியை வெறுக்க முடியும்.

துரைமுருகன்: மறுபடியும் நமக்கு இன்னொரு சான்ஸ் கிடைக்கும்ங்களா? மக்கள் ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை மறக்கணும். மின்வெட்டை மறக்கணும். விலைவாசி உயர்வு, சட்டம் – ஒழுங்கு சீர்கேடுன்னு ஏராளமான விஷயங்களை மறக்கணுமே. எப்படி முடியும்?

கருணாநிதி: அதுக்கான நடவடிக்கைளை நான் எடுக்க ஆரம்பிச்சுட்டேன். வெள்ளத்தால் பயிர்சேதமடைஞ்சா எவ்வளவு, குடிசைகள் சேதம் அடைஞ்சா எவ்வளவு, ஆடு மாடுகள் செத்தா எவ்வளவுன்னு யாரும் கேட்காமலேயே அறிவிச்சிட்டேனே. அதுலே எப்படியும் அஞ்சு சதவிகித ஓட்டாவது ஏறியிருக்கும். ஆனா இது போதாது. இப்படி இன்னும் பல வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டணும்.

பொன்முடி: பயிர் சேதம், குடிசை சேதம் மாதிரியே பல சாலைகளும் சேதம் அடைஞ்சிருக்குதுங்க. சேதம் அடைஞ்ச சாலைகளிலே இருக்கிற ஓவ்வொரு வீட்டுக்கும் தலா ரெண்டாயிரம் கொடுத்திடலாம். கவர்ன்மெண்ட் பணத்தை கையிலே வெச்சுக்கிட்டு ஏன் கஞ்சத்தனம் பண்ணனும்?

துரைமுருகன்: கரெக்ட், தேர்தல் கமிஷன் கெடுபிடியாலே, ஓட்டுக்கு பணம் தர முடியாத சூழ்நிலை வந்துட்டா, ஆபத்தாப் போயிடும். அதுக்குப் பதில் இப்படிக் கொடுத்துடலாம்.

எ.வ.வேலு: அதே மாதிரி, ஏப்ரல், மே, சமயத்திலே மக்கள் வெயிலால் கஷ்டப்படுவாங்க. வெள்ள நிவாரண நிதி மாதிரி, வெயில் நிவாரண நிதியும் அறிவிச்சுடலாம். ரேஷன் கார்டு இருக்கிற எல்லா குடும்பத்துக்கும் கலைஞர் படம் போட்ட இலவச குடையும் கொடுக்கலாம்.

ஆற்காடு வீராசாமி: வெங்காய விலை ஏற்றத்துக்கும் ஏதாவது செய்யணும்.

கருணாநிதி: விலையைக் குறைக்கிறதெல்லாம் கஷ்டம். அதற்குப் பதிலா, அந்த 50 ரூபாய் பாக்கெட்டிலே இலவசமா ஒரு வெங்காயத்தைப் போட்டுருவோம். அதே அம்பது ரூபாய்தான். கூடுதலா ஒரு வெங்காயம். பல லட்சம் தாய்மார்களும், கழகமும் பயன் அடையற திட்டம்.

அன்பழகன்: திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் வெச்சா கேளிக்கை வரி ரத்துன்னு ஒரு தமிழ் வளர்ச்சித் திட்டம் கொண்டு வந்தோமே….

கருணாநிதி: அதைப் பத்திதான் நானும் சிந்திச்சுக்கிட்டிருந்தேன். தமிழ் பேர் வெக்க முடியாம திரையுலகத்தினர் கஷ்டப்படறதாலே, ‘தமிழ் திரைப்படத்திற்கு எந்த மொழியிலேயும் பேர் வெக்கலாம். ஆனா, அந்த பேர்லே ஒரே ஒரு தமிழ் எழுத்தாவது இருந்தாத்தான் வரிச் சலுகை’ன்னு ஆணை வழங்கி திரையுலகத்தினர் ஓட்டைத் திரட்டிடறேன்.

துரைமுருகன்: அருமையான ஐடியாங்க. திரையுலகத்தினர் வசமா மாட்டிக்கிட்டாங்க. பாராட்டு விழா நடத்தாம தப்பிக்கவே முடியாது.

அன்பழகன்: வியாபாரிகள் ஓட்டும் முக்கியம். வணிக நிறுவனங்கள் தமிழில் போர்டு வெச்சா விற்பனைவரி ரத்துன்னு அறிவிச்சுடலாம். கணிசமா நஷ்டப்பட்டாத்தான் தமிழ் வளரும். இதன் மூலம் அரசுக்கு 4858 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டாலும், நமக்கு லாபம்தான். கழகத்துக்கு பல லட்சம் ஓட்டுக்கள் குவியும்.

ஸ்டாலின்: தமிழ் மூலம் கட்சியை வளர்க்க இன்னொரு வழியும் இருக்குது. குழந்தைகளுக்கு தமிழ் பேர் வெச்சா, பிரவசச் செலவை அரசே ஏற்கும்னு உத்தரவு போட்டுடலாம். ஏற்கனவே இருக்கிற வேற்று மொழிப் பெயரை தமிழ்லே மாத்திக்கிற ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கிடுவோம்.

எ.வ.வேலு: குழந்தைகள்னதும் ஞாபகத்துக்கு வருது. இப்ப தினமும் ஒரு முட்டை போடறோம். இனிமே மூணு வேளையும் முட்டை போட்டுருவோம். முட்டை காண்ட்ராக்டருக்கும் நல்லது, கழகத்துக்கும் நல்லது.

ஆற்காடு வீராசாமி: வேலை இல்லாத இளைஞர்கள், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு உதவித் தொகை கொடுக்கிறோம். தேர்தல் நெருங்கற சமயத்திலே கூடுதலா ஏதாவது எதிர்பார்ப்பாங்க. இந்த ஆண்டு முதல், வேலையில்லாதவர்களுக்கும் இன்க்ரிமெண்ட், பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும்போது ‘ப்ரமோஷன்’னு அறிவிச்சா இளைஞர்கள் ஓட்டு வேறே எங்கேயும் போகாது.

துரைமுருகன். தை முதல் நாள் கழகத்துக்கு தனியா புத்தாண்டு பிறக்கிறதை முன்னிட்டு, சிறையில் இருக்கிற 2011 கைதிகளை விடுதலை பண்ணி, அவர்களுக்கு ஊக்கத் தொகையா இறுதிக் காலம் வரை ஓய்வூதியம் வழங்கிடலாம். எப்படியும் தேர்தல் பணியாற்ற நமக்கு ஆட்கள் தேவைப்படும். இதன் மூலம் அந்த கைதிகள் குடும்பத்து ஓட்டும் கிடைக்கும்.

பொன்முடி: வழக்கமா பொங்கலுக்கு இலவச வேஷ்டி, சேலை கொடுக்கிறோம். அது மட்டும் எப்படிப் போதும்? உள்ளாடைகளுக்கு மக்கள் சொந்தப் பணத்தை செலவு பண்ண முடியுமா? தேர்தல் நெருங்கும்போது நாம செலவைப் பார்க்க கூடாது. இந்த வருஷம் வேஷ்டி, சேலையோட உள்ளாடைகளையும் இலவசமா கொடுத்துடுவோம். 

ஸ்டாலின்: விவசாயிகளுக்கு இலவச பம்ப் செட் கொடுத்து இலவச மின்சாரமும் கொடுக்கிறோம். மின்சாரம் வராம பம்ப் செட்டை எப்படி பயன்படுத்தறதுன்னு அடாவடியா கேக்கறாங்க. அதனாலே, விவசாயிகள் ஓட்டை வாங்க ஏதாவது செய்யணும்.

கருணாநிதி: மின்வெட்டுப் பிரச்சனை நான் எட்டாவது முறை முதல்வராகும்போதுதான் தீரும். அதனாலே, விவசாயிகளுக்கு இலவச ஜெனரேட்டர் கொடுத்துத் தொலைக்கிறேன்.

எ.வ.வேலு: போலி மருத்துங்கள் புழக்கத்தைத் தடுக்கிறதும் கஷ்டம்தான். அதனாலே போலி மருந்துகளால் உயிரிழப்பவர்களின் ஈமச் சடங்கை அரசே ஏற்கும்னு அறிவிச்சுடலாம். ஏதோ, நம்மலான உதவி.

அன்பழகன்: சட்டம் – ஒழுங்கு பிரச்சனையையும் நம்மாலே சரிபண்ண முடியலை. கொலை, கொள்ளைகள் நடக்காத நாளே இல்லை. யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தா இந்தப் பிரச்சனை தீரும்னு நாம கண்டு பிடிக்கணும்.

கருணாநிதி: அதுக்கு ஒரு வழி இருக்குது. கலைஞர் மருத்துவக் காப்பீட்டு திட்டம் மாதிரி, கலைஞர் சட்டம் ஒழுங்கு ஆயூள் காப்பீடு திட்டத்தையும் கொண்டு வந்து, மக்களுக்கு இன்ஷ்யூரன்ஸ் பாலிஸி எடுத்துக் கொடுத்துருவோம். சட்டம் – ஒழுங்கு பாதிப்பால் உயிர் இழப்பவர் குடும்பங்களுக்கு இன்ஷ்யூரன்ஸ் நிறுவனமே பணம் வழங்கிடும். பலன் அடையறவங்க எனக்கு நன்றி தெரிவிப்பாங்க.

துரைமுருகன்: ஏங்க, ஒரே ஒரு சந்தேகம். பணத்தைப் பற்றிக் கவலையே படாம கருணை உள்ளத்தோட எவ்வளவோ இலவசங்களை அறிவிக்கறீங்க. இந்த கேபிள் இணைப்பையும் இலவசமா கொடுத்தா, மக்கள் ஓட்டை அப்படியே அள்ளிடலாமே?

கருணாநிதி: ஏன் இப்படி விவரமில்லாம பேசுறீங்க? என் குடும்ப உறுப்பினர்கள் வருமானத்திலே நஷ்டத்தை ஏற்படுத்த எனக்கு என்ன உரிமை இருக்குது? நம்ம இஷ்டத்துக்கு ஆட்டம் போட அது என்ன அரசு கஜானாவா? குடும்ப கஜானாவை, அரசு கஜானாவா நினைக்கிறவன் நான் இல்லை.

***

பின் குறிப்பு (தாஜ்): மீண்டும் சத்யா!

அவரது கட்டுரையின் முடிவு வரிகளில், முதல்வர் மீது கத்திப் பாய்ச்சலை நிகழ்த்தியவராக முடித்திருக்கிறார்! சோவை திருப்திப் படுத்த வேண்டாமா? அதனால்தான் அந்தக் கத்திப் பாய்ச்சல். கேபிள் இணைப்பு இனாமுக்கு முதல்வர் ஏன் தன் குடும்ப கஜானாவில் கைவைக்க வேண்டும்? அரசு , தனியாரை எப்படி நஷ்டப்படுத்த முடியும்? அதற்கு ஒரு அரசு தீர்மானம் செய்து, அரசு பணத்திலேயே வழங்கலாமே! அநியாயத்திற்கு சிந்திக்கிறார் சத்யா!

***

  
நன்றி: துக்ளக் ( 5.01.2011) , சத்யா
தட்டச்சு & வடிவம் :  தாஜ் | satajdeen@gmail.com

« Older entries