அதுவும் அப்படியே! – திருக்குறள் முனுசாமி

‘இவர் பழகப் பழக இனிமையாகப் பேசுவார்’ என்றெல்லாம் குணத்தை சொல்லித்தான் ஒருத்தர அறிமுகப்படுத்தனும்; அவரோட எடையை சொல்லப்படாது. ‘இவர் முன்னூறு பவுண்ட் எடை, இவர்கிட்டே நீங்க தாராளமா சிநேகம் பண்ணலாம், அவசரமா ஓடமாட்டார்’ அப்படீன்னுலாம் சொல்லப்படாது’ என்று சொல்லி சிரிக்கவைத்த ஐயா திருக்குறள் முனுசாமி அவர்களின் பேச்சு. ரொம்ப நாளா தேடிக்கிட்டிருந்தது. நண்பன் நாகூர் ரூமி மூலமாக கிடைத்தது , தற்செயலாக. அவருக்கு ‘சன் டிவி’ வீரபாண்டியன் கொடுத்தாராம் , தற்செயலாக. நாகூர் ரூமியின் ‘தற்செயலான’  நீண்ட பேச்சை பிறகு பதிவிடுகிறேன்.  இப்போது கொஞ்சம் சிரியுங்கள் – மதம், இலக்கியம், அரசியல்னு எப்போ பார்த்தாலும் பிறாண்டிக்கிட்டு அலையாமல்!

நாகூர் பாஷையில் திருக்குறள் – PART II

நகைச்சுவைக்காக நாகூர் வட்டார வழக்கில் நல்லுரை எழுதப் போக, நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில், நயம்பட நானும் தொடருகின்றேன். திருக்குறளைச் சிதைப்பதன்று எம் நோக்கம். மாறாக இயற்றமிழ் நடையின் இணையிலா இனிமையையும், இலக்கியப் பயிற்சியே இல்லாத சாமான்யரும், எம்மக்களும் எளிதில் புரிந்துக் கொள்ளும் வண்ணம் எல்லார்க்கும் பயனுறச் செய்யவே இவ்வாக்கம். –  ‘நாகூரி’ (அப்துல் கய்யும்)

*

நாகூர் பாஷையில் திருக்குறள் – PART II

(முதல் பகுதி பார்க்க இங்கே சொடுக்கவும்)

அப்துல் கய்யும்

***

பழிஅஞ்சிப், பாத்துஊண் உடைத்து ஆயின், வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

அல்லா ரசூலுக்கு பயந்து, ஹலாலான வழியிலே சம்பாதிச்சு, வூட்டு மனுசருவோ, சொந்தக்காரஹ, இஹலுக்கு பவுந்து உண்ணுரஹலோட பரம்பரை என்னிக்குமே அழியாது.

*

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

வூட்டுக்கார உம்மனைக்கூட ஒத்துமையா, ஜதப்பா குடும்பம் நடத்துற சாலிஹான சீதேவி மனுசரு, மனுசருலே சேத்தியில்லே. மலாயக்கத்துமாருவ மாதிரின்னு வச்சுக்குங்களேன்.

*

அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம்;அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்

ஹவா நஃப்ஸ் இல்லாதஹலுக்கு முசீபத்து அண்டவே அண்டாது. அது இருக்குறஹலுக்கு (அல்லா வச்சு காப்பாத்த) பலா முசீபத்து ஹல்கை புடிச்சு வாட்டி எடுத்துடும்.

*

பணைநீங்கிப் பைந்தொடி சோரும், துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

அஹ என்னை வுட்டுட்டு (சபர்) போனப் பொறவு என் தோள்பட்டைக்கூட துறும்பா இளைச்சு போச்சு. இப்ப கை மெலிஞ்சிட்டதாலே பூட்டுக்காப்பு, பொன்மணிபவளம் கூட ‘புசுக்’குன்னு கழண்டு கழண்டு உலுந்துடுது.

*

கவ்வையால் கவ்விது காமம்; அதுஇன்றேல்
தவ்என்னும் தன்மை இழந்து

நான் அந்த புள்ளே மேலே மொஹப்பத் வச்சிருக்கேன்னு இந்த ஊருக்காரஹ உடாமே பிஸாது பண்றதுனாலேதான் எங்களோட மொஹப்பத்து இவ்ளோ நாளு நீடிச்சிக்கிட்டு இக்கிது. இல்லாக்கட்டி எப்பவோ அது உப்பு சப்பு இல்லாம முடிஞ்சி போயிருக்கும்.

*

களித்தொறும் கள்உண்டல் வேட்டுஅற்றால்; காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.

(வாஞ்சூர்லே போயி) கள்ளுக் குடிச்சிட்டு வந்து மெதப்புலே இருக்குறஹ எப்படி குஷியா இருக்குறாஹலோ அதுமாதிரி எங்க காதலெ பத்தி ஊருலே பிஸாது பண்ணும்போதுதான் கல்புக்கு ராஹத்தா இக்கிது.  

*

கண்டது மன்னும் ஒருநாள்; அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண்டு அற்று

நான் அஹலை பாத்துப் பேசியது கொஞ்சமோ நஞ்சமோதான். (களிச்சல்லே போவ) அதுக்குள்ளே ஊரு ஜனங்களுவ பொறையை பாம்பு புடிச்சு ‘லபக்’குன்னு வாயிலே போட்டுக்கிட்ட மாதிரி பிஸாது பண்ணுறாஹலே??

*

அமிழ்தினும் ஆற்ற இனிதே,தம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்

சின்னப் புள்ளையிலுவோ கையைப் போட்டு பிசையிற கோதுமைக் கஞ்சியானது, பாச்சோறை விட அம்புட்டு ருசியா இக்கிது.

*

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்  

வாப்பாக்காரஹ புள்ளைக்கு செய்யிற சவாபான காரியம் என்னன்னு சொன்னா, முஹல்லாவுலே/ மஜ்லீசுலே, அவனை பெரிய ஆளா, நசீபு உள்ளவனா ஆக்கிக் காட்டணும்.   

*

என்புஇல் அதனை வெயில்போலக் காயுமே
அன்புஇல் அதனை அறம்

எலும்பு இல்லாத புழுவை பட்டப் பவலு வெய்யிலு காய்ச்சி மவுத்தாக்குற மாதிரி, கல்புலே ஈவு இரக்கம் இல்லாதஹலே அவுலியா கண்ணை அவுச்சிடுவாஹா.

*

காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

ஒருத்தஹலுக்கு நெருக்கடியான வஃக்துலே கூட மாட ஒதவி ஒத்தாசை செய்யிறது கொஞ்சக்கோனு இருந்தாலும் தேவலே. ஆனா அது இந்த துனியாவை விட ரொம்ப ரொம்ப பெருசு.

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்; மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து

ஹாஜத்து எப்பவுமே பெருசா இருக்கணும். ஒருவேளை நம்மளோட ஹாஜத்து கைக்கூடாம போனாக்கூட, பெரிய மனுசஹலுவோ நம்மள, ஆஹா ஓஹோன்னு பாராட்டுவாஹா. அதுவே முராது ஹாசில் ஆன மாதிரிதானே?

*

பரியது, கூர்ங்கோட்டது ஆயினும், யானை,
வெரூஉம் புலிதாக் குறின்.

(நாகூர் தர்ஹா) யானைக்கு பெரிய சரீரமும், கூர்மையான கொம்பும் இருந்தாலும் கூட, புலி தாக்குனுச்சுன்னு வச்சுக்குங்க, அதுக்கு அத்து பித்து எல்லாம் கலங்கிப் போயிடும்.

*

புறந்தூய்மை நீரான் அமையும், அகம்தூய்மை
வாய்மையால் காணப் படும்

நம்மளோட சரீரம் ஒளு செஞ்சா நஜீஸ் நீங்கும். அதுமாதிரி கல்பு, ஹக்கான அமல்னாலேதான் சுத்த பத்தமாவும்.

*

மனத்தொடு வாய்மை மொழியின், தவத்தொடு
தானம்செய் வாரின் தலை

கல்பு அறிய ஹக்கா பேசுறஹ, இத்திகாஃப் இருக்குறஹலை விட, ஜகாத் கொடுக்குறஹலை விட ரொம்ப ரொம்ப ஒசத்திஹானஹ.

*

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்,
தீயுழி உய்த்து விடும்

பொறாமை, பொச்சரிப்பு எஹக்கிட்ட இக்கிதோ, அது அஹலோட ஆஸ்தி அந்தஸ்த்தெ அழிக்கிறதோட நிக்காம, அஹலெ நரகத்து கொள்ளிக்கட்டையா ஆக்கிப்புடும்.

*

உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர், எஞ்ஞான்றும்
கள்ஒற்றிக் கண்சாய் பவர்

(மனாரடி ஓரம் விக்கிற) கஞ்சா, அபினை வாங்கிச் சாப்பிடுறது ஊரு ஜமாஅத்துக்கு தெரிஞ்சிச்சுன்னா அப்புறம் விசயம் நாறி நறங்குலைஞ்சுப் போயிடும். கபர்தார்.

***

நன்றி :  ‘நாகூரி’ அப்துல் கய்யும் | E-Mail : vapuchi@gmail.com

நாகூர் பாஷையில் குறள்களுக்கு உரை!

ஆனந்த விகடனில்தான் அப்படியொரு அட்டகாசமான பொழிப்புரையை பார்த்து மிகவும் ரசித்திருக்கிறேன். ‘குதுர கர்ணா’ என்கிற பெயரில் ஒரு நண்பர் மெட்ராஸ் பாஷையில் விளையாடியிருப்பார். இப்போது கூகுளில் தேடியபோதுதான் அது திரு. லதானந்த் என்று தெரிந்து கொண்டேன். அநியாயமாக தமாஷ் செய்கிறார் இந்த காட்டிலாக்கா அதிகாரி. ரகளையான பதிவுகள். மனம் லேசாக அங்கே போகலாம். சரி, ‘குதுர கர்ணா’ வுக்குப் பிறகு புறப்பட்டு வருகிறார் ‘காமெடி கிங்’ கய்யும். செய்யும்! சிரிக்கத் தெரியாத தமிழ்ப்பற்றாளர்கள் சிலரின் கண்கள் உறுத்தியதால் லதானந்த் அப்போது தொடர முடியவில்லையாம். கய்யுமிற்கு என்ன நேருமென்று பார்க்கலாம். அட, சிரிங்க சார்.. ‘Laughter is my message. I do not ask you to do prayer. I ask you to find moments, situations, in which you can laugh whole-heartedly. Your laughter will open a thousand and one roses within you’ என்கிறான் ஓஷோ.

ஒரு சந்தேகம், மெட்ராஸ் பாஷை என்கிற ‘சென்னை செந்தமிழ்’கூட ஓரளவு எல்லோருக்கும் புரியும். நாகூர் பாஷை அப்படியா? சகோதரி அமரந்தா நாகூர் வந்திருந்தபோது ‘வாங்க அக்கா’ என்றாள் என் ‘படிச்ச’ தங்கச்சி. மறப்புக்கு அந்தப் பக்கம் ‘கெக்கெக்கே’ என்று சிரிப்பு சத்தம். மச்சிதான் அப்படி சிரித்தாள். ‘லாத்தாவை போயி அக்காண்டு கூப்புடுறாஹா!’ என்று விழுந்து விழுந்து சிரித்தாள். பாருங்க, இஹ அஹலை வெடைக்கிறாஹா!

நண்பர் கய்யும் அனுப்பிய சில பொழிப்புரைகளை கீழே தந்திருக்கிறேன். விரைவில் அவர் ‘கிறளோவியம்’ எழுதவும் வாழ்த்துகிறேன். மாமேதை வள்ளுவன் என்னை மன்னிப்பானாக. இங்கே ஒரு செய்தி. திருவள்ளுவர் ஒரு நபிதான் என்று அழுத்தமாக வாதிடுவார் இஜட். ஜபருல்லா. தன்னை விமர்சித்தாலும் சிரிக்கும் நபி சிறந்த நபியாகத்தான் இருக்க முடியும். வான் புகழ் வள்ளுவன் வாழ்க!

***

நாகூர் பாஷையில் குறள்களுக்கு உரை!

அப்துல் கய்யும்

“உடுக்கை இழந்தவன் கைபோல” என்று தொடங்கும் ஒரு திருக்குறளை எனது வலைப்பதிவில் எழுதப்போய் நம்ம ஊர்க்காரர் ஒருவர் இதுக்கு என்ன அர்த்தம்னு விளக்கம் கேட்டார். அவருக்கு நாகூர் பஷையிலேயே விளக்கினேன். அவருக்கு உடனே புரிந்துப் போய் விட்டது.

இதேபோன்று குறள்களுக்கு  நாகூர் பாஷையிலேயே பதவுரை எழுதினால் என்ன என்ற ஒரு விபரீத ஆசை எனக்கு தோன்றியிருக்கக் கூடாதுதான். என்ன செய்வது? திருவள்ளுவர் என்னை மாப்பு செய்வாராக.

(பிகு. பரிமேலழகர், மு.வ., சாலமன் பாப்பையா, மு.க. இவர்கள்தான் விளக்கவுரை எழுத வேண்டுமா? நாம எழுதக்கூடாதா? நாகூர் ரூமியிடம் கேட்டுப் பாருங்கள். யாராவது பதிப்பாளர்கள் ரெடியாக இருக்கிறார்களா என்று. “நாகூர் பாஷையில் திருக்குறளுக்கு பதவுரை” என்று ஒரு புத்தகம் போட்டு விடலாம். நான் ரெடிப்பா.)
 
***
 
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

கைலி அவுந்து உலும்போது கை எப்படி கப்புன்னு புடிச்சுக்குதோ அதுமாதிரி கூட்டாளி முசீபத்துலே இருக்கும்போது உளுந்தடிச்சு போயி கூடமாட ஒத்தாசை செய்யிணும்.

*
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

அரபு பாஷைக்கு அலீஃப் எழுத்து எப்படியோ அதுமாதிரி அல்லாஹுத்தாலாதான் இந்த துனியாவுக்கு எல்லாமே.

*
கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல

அஹ எஹல பாக்கும்போது, எஹ அஹல பாக்கும்போது பேச்சு மூச்சு இரிக்காது

*
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்

பச்சப்புள்ளெ மதலை பேச்சை கேக்காதஹத்தான் பீப்பீ சத்தம்தான் அலஹா இருக்கு, புல்புல்தாரா சத்தம் அலஹா இருக்குன்னு சொல்லுவாஹா.

*
மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்

புள்ளெ வாப்பாவுக்கு செய்யிற உதவி என்னான்னு சொன்னா ‘இவனைப் பெத்ததுக்கு அஹ ரொம்பவும் கொடுத்து வச்சிருக்கணும்’னு சொல்றமாதிரி அவன் நடந்துக்கணும்.

*
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு

வந்த விருந்தாடி ஜனங்களுக்கு பணியான் பண்டம் வச்சுக் கொடுத்து, வேற யாராச்சும் வர்ராஹலான்னு வாசக்கதவெ பார்த்துக்கிட்டு இருந்தா அஹலுக்காகா மலாயக்கத்துமாருவ மஹ்ஷர்ருலே காத்துக்கிட்டு இருப்பாஹா.

*
இல்லாரை எல்லாரும் எள்ளுவர்; செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு

ஏழைப்பட்ட ஜனங்களெ எல்லாரும் ஏசுவாஹா. காசுபணம் இருக்குறஹலெ தலையிலே தூக்கிவச்சுக்கிட்டு ஆடுவாஹா.

*
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

ஓதுங்க. (சாபு சொல்ற மாதிரி) நல்லா ஓதுங்க. ஓதி முடிச்சப்பொறவு அதுக்கு தகுந்தமாதிரி அதபு அந்தீஸா நடந்துக்குங்க.

*
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு

யார் பிஸாது செஞ்சாலும் அஹ ஹக்கா பேசுறாஹலான்னு விசாரிச்ச பொறவுதான் எதையும் முடிவு பண்ணனும்.

*
யாகாவ ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

வாயை அடக்கி பேசுங்கனி. இல்லாட்டி பலா கர்மம் கொண்டு ஹயாத்தெ அளிஞ்சு போயிடுவியும்.

*
அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு

நல்ல அமல் செய்யிறதைக் காட்டிலும் பரக்கத் வேற ஒண்ணுமே கெடையாது. அத செய்யாமப் போனா அதைவிட பலா முசீபத்து வேற எதுவுமே கெடையாது.

*
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்; நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்

நாம அஹல பாக்குறப்போ அஹ தரையை பாக்குறாஹா; நாம அஹல பாக்காதப்போ அஹ நம்மள பாத்து அஹலுக்குள்ளேயே சிரிச்சுக்குறாஹா.

*
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்

ஹவா நஃப்ஸ் புடிச்சு நாம தனியா உக்காந்து வயித்துலே கொட்டிக்கிறது, மிஸ்கீன் மாதிரி மத்தஹக்கிட்டே காசுபணம் கேக்குறதை விட மோசம்.

*
விருப்புஅறாச் சுற்றம் இயையின், அருப்புஅறா
ஆக்கம் பலவும் தரும்

ஒருத்தஹலுக்கு மொஹபத் காட்டுற சொந்தக்காரஹ மட்டும் அமைஞ்சிட்டாஹனா, அந்த சீதேவிக்கு நெறஞ்ச பரக்கத்தையும், நீடிச்ச ஸலாமத்தையும் கொடுக்கும்.

*
இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்;மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்

பொண்டாட்டிக்கு பயந்து நடுங்குறஹ, சாலிஹான மனுசருக்கு ஒத்தாசை செய்யக்கூட பயப்படுவாஹா.

*
யாதானும் நாமாம்ஆல்; ஊராம்ஆல் என்னொருவன்
சாம்துணையும் கல்லாத ஆறு

நாலெழுத்து படிச்சஹலுக்கு சஃபர் செஞ்ச எல்லா நாடும் அஹலோடசொந்த ஊரு மாதிரிதான். அப்படியிருந்தும் ஏன் அஹலுவோ படிக்காம இருக்குறாஹா?

*
கல்லாதான் சொல்கா முறுதல், முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற்று அற்று

(மாப்புசெய்ங்க. இதுக்கு பதவுரை எழுதி “அதபு கெட்ட மனுஷன்”னு ஏச்சுபேச்சு வாங்குறதுக்கு நான் தயாரா இல்லை)

**
நன்றி : ‘நாகூரி’ அப்துல் கையும் | E-Mail : vapuchi@gmail.com

**

ஒப்பிட இரு சுட்டிகள் : http://kural.muthu.org/  & http://www.tamilnation.org/literature/kural/index.htm

சிரிக்க ஒரே ஒரு சுட்டி : எங்கும் குறள் – ஜெயமோகன்