14-9-1949 : காயிதே மில்லத் பேச்சு

எனது சின்னமாமா நிஜாமுக்கு மிகவும் பிடித்தவரான கவிஞர் தா. காசிம் அவர்களைப் பற்றி இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது அண்ணன் ஹிலால் முஸ்தபாவின் வலைப்பதிவு மூலம் கவிஞரின் நாத்திகம் , காயிதே மில்லத்-ன் ராஜநடையால் சிதறிப் போனதை அறிந்து ஆச்சரியப்பட்டேன்.  நேற்றிரவு தர்ஹாவுக்குள் நுழைந்தால் , ‘கவ்மின் காவலர்’ நூல் கிடைக்கிறது!  இரண்டாம் பதிப்பு (1983). அனுபந்தத்தில் சேர்க்கப்பட்ட காயிதே மில்லத்தின் உரையைத்தான் முதலில் படித்தேன்.  நண்பர்கள் சிலர் சொல்வதுபோல , காயிதே மில்லத் அவர்கள் தமிழ்மொழியை தேசிய மொழியாக அறிவிக்கக் கோரவில்லை,  தொன்மை என்று வரும்போது பெருமிதத்தோடு தமிழை அவர் குறிப்பிட்டாலும் ‘அதிகம்பேர் பேசக்கூடிய இந்திய மொழி’யாக ஹிந்துஸ்தானியையே (இது ஹிந்தியா உருதா?) முன்மொழிந்திருக்கிறார் என்றுதான் என்னால் முடிவுக்கு வர முடிந்தது. அன்னாரின் பிறந்த தினத்தில் பதிவிடுகிறேன். ‘காப்பி மாஸ்டர்கள்’ கண்டிப்பாக சுட்டி கொடுக்கவும்!

கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களைப் பற்றி நண்பர் சீதையின் மைந்தன் விரிவாக எழுதிய இந்தப்  பதிவையும் படியுங்கள். ‘காயித்’ என்பதன் அர்த்தம் விளங்கும். நன்றி. – ஆபிதீன்

***

qaiidemillth-book-cover2A.K. ரிபாயி அவர்கள் எழுதி வெளியிட்ட ‘கவ்மின் காவலர்’ நூலிலிருந்து.. (பக்: 207-214)

14-9-49 அன்று அரசியல் நிர்ணய சபையில், தேசீய மொழி பிரச்னை விவாதத்திற்கு வந்தபொழுது.. காயிதே மில்லத் அவர்கள் ஆற்றிய உரையின் தமிழாக்கம்  வருமாறு :-

மிஸ்டர் முஹம்மது இஸ்மாயில் (மதறாஸ் , முஸ்லீம்) :-  அவைத் தலைவர் அவர்களே! இத் திருத்தங்களின் மீது நான் பேச விரும்புகிறேன். இப் பிரச்னை மீது விவாதம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருகிறது. விவாதம் முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே எனது திருத்தங்களைப் பற்றி நான் குறிப்பிடலாம் என நினைக்கிறேன். இத்திருத்தங்கள் ஏற்கனவே என்னால் சமர்ப்பிக்கப்பட்டவை; அவை சபை முன்பு இருக்கின்றன.

ஒரு உறுப்பினர் :- அப்படியானால் மற்ற திருத்தங்கள்?..

மிஸ்டர் முஹம்மது இஸ்மாயில் :- ஏற்கனவே நான் நோட்டிஸ் கொடுத்துள்ள திருத்தங்கள் சபை முன்பு இருப்பதாலும் அதுபற்றி விவாதங்கள் இன்னும் முடிவுக்குக் கொண்டுவரப் படாததாலும் விவாதம் மீண்டும் தொடங்கப் பட்டு விட்டதாலும் எனது திருத்தங்கள் மீது பேச எனக்கு உரிமை இருக்கிறது என நான் நினைக்கிறேன்.

அவைத்தலைவர் : உறுப்பினர் கூறுவது சட்டப்படி சரிதான்.

மிஸ்டர் முஹம்மது இஸ்மாயில்:-அவைத் தலைவர் அவர்களே! எனது கருத்தைத் தெரிவிக்குமுன்பு முதலாவதாக, திரு K.M. முன்ஷி சமர்ப்பித்துள்ள திருத்தங்களை நான் எதிர்க்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தேவநகரி லிபியிலும் உர்தூ லிபியிலும் எழுதப்படும் ஹிந்துஸ்தானி என்ற மொழியே தேசீய மொழியாக இருக்கவேண்டும் என்றும் சர்வதேச “எண்”கள்தான் (Numerals) அரசாங்கப் பழக்கத்தில் இருந்து வர வேண்டும் என்றும் எனது திருத்தங்கள் கோருகின்றன. அத்துடன், மத்திய ஆரசின் ஆட்சி மொழியாக ஆங்கிலமே 15 ஆண்டுகளுக்கு இருந்துவருவது என்ற விதியை, பாராளுமன்றத்தின் இரு சபைகளும் தங்களது பெரும்பான்மை மூலம் வேறு விதமாகக் கருத்துத் தெரிவிக்காத வரையில் , ஆங்கிலமே இந் நாட்டின் தேசீய மொழியாக நீடிக்க வேண்டும் என்று அந்த விதியை மாற்ற வேண்டும் என்றும் எனது திருத்தங்கள் கோருகின்றன. இவைதான் எனது திருத்தங்களின் சாரம்.

அவைத் தலைவர் :- அவற்றின் நம்பர் என்ன?

மிஸ்டர் முஹம்மது இஸ்மாயில்:- தலைவர் அவர்க்ளே! நேற்று இச்சபையில் பிரதம மந்திரி அவர்கள் மிக முக்கியமானதொரு உரையை நிகழ்த்தினார். அச்சமயம் மூன்று அம்சங்களை அவர் வலியுறுத்தினார். முதலாவதாக இப்பிரச்னை குறித்து மஹாத்மா காந்தியின் கருத்துக்களை அவர் மேற்கோள் காட்டினார்; அவரை ஆதாரமாக எடுத்துச் சொன்னார். இரண்டாவதாக நாம் பின் நோக்கிச் செல்லக்கூடாது என்றார்; வெகுதூரம் பின்நோக்கிப் பார்ப்பது நமது எதிர்கால முன்னேற்றத்தைப் பாதிக்கும் என்று எடுத்துச் சொன்னார். மூன்றாவதாக,  உலகம் இன்று மிகவும் சுருங்கிக் கொண்டுவருகிறது என்பதை நாம் உணரவேண்டும் என்று சொன்னார். மணிக்கு மணி நம்மை எப்படி உலகம் சுற்று வளைத்துக்கொண்டு வருகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என அறவுரை கூறினார். மேற்கூறிய மூன்று அம்சங்களையும் மனதில் கொண்டு இப்பிரச்னையை நாம் ஆராய முற்பட்டால் பிரச்னையை இலகுவில் தீர்த்துவிட இயலும் என்பதுதான் எனது கருத்தாகும்.

நாட்டின் தேசீய மொழியாகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய மொழி ஒரு இந்திய மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்பது ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். அத்துடன் நாட்டிலுள்ள மக்களில் அதிகப்படியானவர்கள் பேசக்கூடிய மொழியாகவும் அது இருக்கவேண்டும் என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. நமது தேசீய மொழி தற்கால போக்குகளையும் நவீன கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் அவற்றை நன்கு பிரதிபலிக்கும் வகையிலும் அந்த மொழி இருக்க வேண்டும் என்பதும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த அம்சங்களைக் குறித்து கருத்து முரண்பாடு இல்லை என்றுதான் நான் கருதுகிறேன்.

அப்படியானால், அப்படிப்பட்ட மொழி எது? எல்லா அம்சங்களிலும் திருப்திதரும் மொழி எது? இதுதான் இன்றைய பிரச்னை; விவாதம். இது குறித்து மஹாத்மா காந்தியை நான் மேற்கோள் காட்டுவதை விட வேறு எதுவும் சிறப்பாகக் கூறிவிட முடியாது. 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10ஆம் தேதி அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

“டில்லியில் என்னை தினசரி ஹிந்துக்களும் சந்திக்கிறார்கள். முஸ்லிம்களும் சந்திக்கிறார்கள். ஹிந்துக்கள் அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். இவர்கள் பேசுகிற மொழியில் ஒரு சில சமஸ்கிருத வார்த்தைகள் இருக்கின்றன. அரபி, பார்ஸி வார்த்தைகளும் அதில் அதிக அளவில் இல்லை. இந்த மக்களுகு அல்லது அவர்களில் பெரும்பான்மையினருக்கு, தேவநகரி லிபி தெரியாது. அவர்கள் எனக்கு எழுதும்பொழுது அவர்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில்தான் எழுதுகிறார்கள்; ஒரு அந்நிய மொழியில் எழுதுவதற்காக அவர்களை நான் கடிந்துகொள்ளும் பொழுது, அவர்கள் உர்தூ லிபியில்தான் எழுதுகிறார்கள். நமது நாட்டின் தேசிய மொழியாக ஹிந்திதான் இருக்க வேண்டும் என்றும் அது தேவநகரி லிபியில்தான் எழுதப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டால், மேலே நான் குறிப்பிட்ட ஹிந்துக்களுடைய நிலை என்ன? கதி என்ன?”

இது மஹாத்மா காந்தி எழுப்பிய கேள்வி: அதிக நாட்களுக்கு முன்பு அல்ல; 1947ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எழுப்பிய வினா. டில்லியையும் அதை சுற்றிலுமுள்ள பகுதிகளைத்தான் அவர் இங்கு குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அதே கட்டுரையில் அவர் மேலும் குறிப்பிடுகிறார். அவர் வார்த்தைகளை அப்படியே நான் இங்கு படிக்கிறேன்.

“இந்தியாவிலுள்ள கிராமங்களில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு புத்தகங்களை வாசிக்கத் தெரியாது. ஆனால் அவர்கள் பேசுகிற மொழி ஹிந்துஸ்தானி. இதை முஸ்லிம்கள் உர்தூ லிபியில் எழுதுகிறார்கள். ஹிந்துக்கள் தேவநகரி லிபியில் எழுதுகிறார்கள். எனவே, என்னையும் உங்களையும் போன்ற மக்களின் கடமை என்னவென்றால், அந்த இரண்டு லிபிகளையும் கற்றுக்கொள்வதுதான்.”

அவைத் தலைவர் அவர்க்ளே! மஹாத்மா காந்தியின் கருத்து இதுதான். பெரும்பாலான மக்கள் பேசுகிற மொழி ஹிந்துஸ்தானி என்று அவர் மிகவும் தெளிவாகக் கூறி இருக்கிறார்; அதற்காக மக்கள் பயன்படுத்தும் லிபிகள் தேவநகரியும் உர்தூவும் என்று அவர் வலியுறுத்தியிருகிறார். எனவே, இந்தியாவினுடைய தேசீய மொழிக்கு உர்தூவையும் தேவ நகரியையும் லிபிகளாக ஏற்றுக் கொள்ளும்படி எனது நண்பர்களுடன் சேர்ந்து நானும் இச்சபையை வேண்டிக்கொள்கிறேன்.

ஹிந்துஸ்தானி ஒரு அந்நிய மொழி அல்ல; இது நீங்கள் எல்லோரும் அறிந்ததுதான். இது முழுக்க முழுக்க ஒரு சுதேசி மொழி. இந்நாட்டில்தான் இது பிறந்து வளர்ந்தது. இம்மொழியைப் பற்ரிய மற்றொரு சிறப்பான அம்சம் என்னவென்றால், நவீன கால தேவைகளுக்கு ஏற்ற தருணத்தில் இது பிறந்தது; சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை வளர்த்துக்கொண்டது. தற்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நிலையிலும் இது உள்ளது. எனவே, நவீன கருத்துக்களை வெளியிடவும், தற்கால சூழ்நிலைகளைப் பூர்த்தி செய்யவும் ஏற்ற மொழி இதுதான் என்று நான் கூறுகிறேன். ஏற்கனவே நான் சுட்டிக் காட்டியபடி இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்கள் பேசக்கூடிய மொழியும் இந்த ஹிந்துஸ்தானிதான்.

முன்காலங்களில் வழக்கில் இருந்த விஷயங்கள் பற்றிப் பேசப்பட்டது. மிகப் பழமையான காலங்களிலுள்ள நடைமுறைகள்தான் பின்பற்றப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டால் , அது குறித்து தர்க்க ரீதியான ஒழுங்குமுறையைக் கையாள வேண்டும் என நான் சொல்ல விரும்புகிறேன். பழமையை ஏற்றுக்கொள்ள நாம் ஏன் விரும்புகிறோம்? நமது நண்பர்களில் சிலர், ஒரு மொழி இந்திய மொழியாக மட்டும் இருந்தால் போதாது, இந்நாட்டினுடைய மிகவும் பழமையான மொழியாகவும் அது இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மொழியைத்தான் நமது தேசீய மொழியாக ஏற்றுக்கொள்ள முடியும் எனக் கூறினார்கள்.

இந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்படுமானால், நான் ஒரு உண்மையை இச்சபை முன்பு தைரியமாகக் கூற விரும்புகிறேன். ** இந்நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும் , ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான்; அதாவது திராவிட மொழிகளே இந்நாட்டின் புராதன மொழி என நான் துணிந்து கூறுகிறேன். இந்நாட்டு மண்ணில் பேசப்பட்ட முதல் மொழி திராவிட மொழியே என்ற  எனது கூற்றை எந்த வாலாற்றாசிரியராலும் மற்க்க முடியாது. எந்த புதைபொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும் நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது மிகவும் புராதனமான மொழி. இது எனது தாய்மொழி என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன். அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.

என்றாலும், ஒரு உண்மையை நானோ அல்லது இதர தமிழர்களோ மறந்துவிடவில்லை. சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் இந்நாட்டின் மிகப் புராதன மொழியாக தமிழ் இருந்தபோதிலும் இந்நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களால் இது பேசப்படவில்லயாதனால் இம்மொழியைத்தான் நமது தேசீய மொழியாக வேண்டும் என நாங்கள் வற்புறுத்திக் கொண்டிருக்கவில்லை;  நாங்கள் நிலைமையைப் புரிந்துகொண்டுதான் இருக்கிறோம். ஆனால், பழமைக்குத்தான் செல்லவேண்டுமென்றால், புராதனமானதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், இந்நாட்டின் தேசீய மொழியாக தமிழைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அம்மொழியைப் பேசுபவர்கள் அக்கோரிக்கையை வலியுறுத்திக் கொண்டிருக்கவில்லை.

பழமையை நாம் மறந்து விடுவதற்கில்லைதான்; அதன் செல்வாக்கிற்குள்பட்டுத்தான் நாம் இருந்து வருகிறோம். தாண்டன்ஜீ அவர்கள் விளக்கிக் கூறியதைப் போல, பழமையிலிருந்து நாம் முழுவதுமாக விடுபட்டுவிட முடியாதுதான். பழமைச் சங்கிலியால் நாம் பிணைக்கப்பட்டிருந்தாலும் அந்தப் பிணைப்பு அசைவற்றதாக, உயிரற்றதாக இருக்கக் கூடாது. அது விட்டுக்கொடுக்கக் கூடியதாக இருக்கவேண்டும்; நெளிவு சுழிவுகளுக்கு இடமளிப்பதாக இருக்க வேண்டும். இதைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எல்லாமே வேர் பாகமாக அமைந்துவிட்டால் , மரம் முழுமை பெறுமா? வேர்களும் இருக்க வேண்டும். கிளைகளும் இருக்க வேண்டும். மலர்கள் இருக்க வேண்டும்; கனிகளும் இருக்க வேண்டும். எனவே தற்கால சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

திரு ராம்நாத் கோயங்கா (மதறாஸ், பொது) :- அவைத் தலைவர் அவர்களே! இந்த விவாதத்தை முடிவுக்கொண்டு வரவேண்டுமென ஏற்கனவே நான் பிரரேபித்துள்ளேன். கனம் உறுப்பினரும் தமது பேச்சை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரரேபணை செய்கிறேன்.

அவைத்தலைவர் :- கனம் உறுப்பினர் தமது பேச்சை முடித்துக்கொள்ள நான் அனுமதிக்கிறேன்.

மிஸ்டர் முஹம்மது இஸ்மாயில்:- அவைத் தலைவர் அவர்களே! விவாதத்தை முடிக்க வேண்டும் என பிரரேபணை செய்யப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்படுமானால், அதன்பிறகு இங்கு என்னால் ஏதும் கூற இயலாது. அது அவ்வாறு செய்யப்படவில்லை. விவாதமும் நடந்துகொண்டிருக்கிறது. எனக்குள்ள உரிமையின்படி நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.

திரு ராமநான் கோயங்கா:-  உறுப்பினர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

அவைத் தலைவர் : கனம் உறுப்பினர் சீக்கிரம் முடித்துக் கொள்ளலாம்.

மிஸ்டர் முஹம்மது இஸ்மாயில்:- அவைத் தலைவர் அவர்களே! எண்கள் (Numerals) குறித்து ஒரு சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். சர்வ தேச வழக்கில் பழக்கத்தில் இருகும் எண்களையே நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். இந்தியாவிலுள்ள பழ மொழிகளும் இந்த எண்களையே கடைப்பிடித்து வருகின்றன.

தேசீய மொழி பிரச்னை போல எண்கள் பிரச்னையும் நெடுங்காலமாக இருந்து வரவில்லை என்று சொல்லப்படுகிறது. தேசிய மொழி பிரச்னை வேறு. எண்கள் பிரச்னை வேறு என்பதை மக்கள் புரிந்துதான் வைத்திருக்கிறார்கள். இந்நாட்டின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் இப்பொழுது இருந்து வருகிறது. என்றாலும் பொதுமக்கள் மத்தியில் அம்மொழி அவ்வளவாக ஊடுருவவில்லை; எல்லோரிடமும் பழக்கத்தில் இல்லை. ஆனால் எண்கள் பிரச்னை அப்படி அல்ல. பாமர மக்களும் கூட “ஆங்கில” என்களையே கடைப்பிடித்து வருகிறார்கள்; உபயோகித்து வருகிறார்கள். அவர்களது அன்றாட வாழ்க்கையில் இந்த எண்கள் புழக்கத்தில் இருந்து வருகின்ற. கை வண்டி இழுப்பவர்கள், தினக் கூலிகள் எல்லோருமே இந்த எண்களையே உபயோகிக்கிறார்கள். லட்சக்கணக்கானவர்கள் இந்த எண்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே இந்த எண்களையே நமது தேசீய மொழியிலும் நிரந்தரமானதாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுவே மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும். இந்த நாட்டில் எது நடைமுறையில் இருக்கிறதோ அதையே நாமும் ஏற்றுக்கொண்டதாகவும் பிரதிபலிப்பதாகவும் அமையும்.

எண்கள் விசயத்தில் ஏதாவது மாற்றங்கள் செய்ய நாம் முற்பட்டால், நிறைய குழப்பங்கள் உண்டாகும்; பணச் செலவாகும்; உழைப்புகள் வீணடிக்கப்படும். அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டது போல, இந்த “எண்கள்’ அந்நிய நாட்டைச் சார்ந்தவையல்ல. நமக்குச் சொந்தமானவைதான்,. எனவே, நமது தேசீய மொழியில்  இந்த எண்கள் நிரந்தரமான அம்சமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என நான் மீண்டும் வேண்டுகோள் விடுகிறேன்.. சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த எண்களை கைவிட்டுவிட்டு புதிய எண்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அதாவது, தேவநகரி லிபியிலும் உர்தூ லிபியிலும் இந்துஸ்தானி மொழியே தேசீய மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதும் சர்வதேச ரீதியில் வழக்கில் இருக்கும் ‘இந்திய எண்களே’ நமது தேசீய மொழியில் நிரந்தர அம்சமாக இருக்கவேண்டும் என்பதும் எனது கோரிக்கைகளாகும்.

————-

**
from the Draft Costitution – Part XIV A Languages – Page : 1471 to 1474 – Date 14th September 1949 – Vol : IX

Mr. Mohamed Ismail (Madras, Muslim) :- .. Some friends of ours want to have an ancient language of the country to be the official language of the Union. If it were granted then I make bold to say that Tamil, or to put it generallay, the Dravidian languages are the earliest among the languages that are spoken on the soil of this coutry. No historian or archaelogist will contradict me when I say that it is the Dravidian language that was spoken first here on the soil of this country, and that is the eralier language. Tamil language has got a rich literature of a high order. It is the most ancient language. It is, I may say, my mother tongue. I love and I am proud of that Language.

மாமனிதர் கக்கன்

செம்பியன் வளவனின் ஃபேஸ்புக்கிலிருந்து, நன்றியுடன்.. (ஷேர் செய்த நண்பர் மஜீத், ’படிச்சு உச்சுக்கொட்ட மட்டுமே நம்மளால இப்ப முடியும்’ என்று சொல்லியிருந்தார்..)

***

kakkan-chembian

உலக வரலாற்றிலேயே உயர்திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம். தமிழக வரலாற்றில் உயர் திரு கக்கன் அவர்கள் ஒரு வைரக்கல்.

உயர் திரு .கக்கன் போன்ற நாணயமான அரசியல்வாதி இந்திய அரசியல் கட்சிகள் எதிலும் கிடையாது .

மதுரை மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடுகளுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட மாமனிதர் அவர்.

மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார்.

மாசுமருவற்ற தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது.

இரவு நேர பள்ளிகளுக்குச் சென்று சேவை செய்துள்ளார். பள்ளிக்குழந்தைகளுக்கு உணவளிக்க தனது மனைவியின் தாலியை அடகு வைத்து பணம் தந்து உதவி உள்ளார்.

சுதந்திர போராட்டம்

காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது. காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார். அவர் மனைவி முன்னிலையில் 5 நாட்கள் கசையடி கொடுத்து சக தோழர்களை காட்டிக் கொடுக்கச் சொன்னபோது கடைசி வரை அடி வாங்கினாரே தவிர, காட்டிக் கொடுக்கவில்லை. சுயநினைவு இழந்தவரை குதிரை வண்டியில் பாதம் வைக்கும் இடத்தில் கிடத்தி, தலையும் கால்களும் தொங்கிய நிலையில் இழுத்துச் சென்றனர்.

தமிழக அரசியல்

இந்திய சுதந்திரத்திற்க்கு பின் தமிழ்நாடு கங்கிரஸின் தலைவராகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட இனம் என்று அதிகார வர்க்கத்தால் பிரிக்கபட்ட மனித இனத்தின் முதல் மனிதர் கக்கன். அந்த புனிதர் வகித்த பதவியை தான் இன்று பல பணம் திண்ணும் பிணங்கள் வகிக்கிறது.

தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அமைச்சராக இருந்த கக்கன் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு, அரசின நலம், அறநிலையத்துறை போன்ற பல்வேறு இலாக்காக்களை நிர்வாகித்தார்.

கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார்.

விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான அரசு பணிகள் உயர் திரு கக்கன் அவர்கள் ஆரம்பிக்கபட்டது.

அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்த போதும் அவரது துணைவியார் ஆசிரியைப் பணி செய்தே குடும்பத்தைக் கவனித்தார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் அவரது தந்தையார், தான் செய்து வந்த வருவாய்த்துறை ஊர்ப்புற உதவியாளர் பணியைச் செய்தே வாழ்க்கை நடத்தினார்.

அமைச்சராக இருந்த போது மதுரை வந்த போது அரசு விடுதியில் வேறு நபர் இரவில் தங்கி இருக்கிறார். அவரை வெளியேற்றலாமா? என்கிறார்கள். வேண்டாம் எனத் தடுத்து விடுகிறார். தனியார் விடுதியில் அறை எடுக்கலாமா? என்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லி விட்டு, ரயில்வே காலனியில் தனது உறவினரின் சிறிய வீட்டில் போய் தங்குகிறார்.

பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 – தேர்தலில் தோற்ற பின்பு சொந்தக் கூரை கூட இல்லாத பரம ஏழையாகப் பேருந்தில் நின்றபடி பயணித்தார்.

கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார்.

விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார்.

மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைபோய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர்., சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார் கக்கன்.

கடைசிக் காலத்தில், வறுமையில் வாடியது கண்டு, திரு.பழ நெடுமாறன், மதுரையில் நிதி திரட்டி வந்த நிதியை நிலையான வைப்புத் தொகையில் போட்டு வட்டியில் வாழ்க்கை நடத்துங்கள் என்று யோசனை சொல்கிறார்கள். மறுத்து விட்டு முன்பு தேர்தலின் போது நாவினிப்பட்டி மைனர் தந்த பணம் 11000 திருப்பித் கொடுக்கிறார். அவர் நான் கேட்கவில்லை, கடனாக தரவில்லை என மறுத்து போதும் அந்த பணத்தை திருப்பித் தந்து விடுகிறார்.

டிவிஎஸ் நிறுவனத்தில் தங்கியதற்காக ரூ.1,800 கட்டுகிறார். அவர்கள் கேட்கவில்லையே ஏன் ? செலுத்த வேண்டும் என்கின்றனர். நான் என்றாவது திருப்பித் தருவேன் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் கேட்கவில்லை என கூறி பணத்தை திருப்பி கொடுத்தார் . இப்படிப்பட்ட ஒரு அமைச்சரை உலகின் எந்த நாட்டிலும் பார்க்க முடியாது.

இறுதிவரை ஏழ்மையிலேயே வாடிய கக்கன் நோய்வாய்ப்பட்ட போது, உயர் ரக சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வசதியின்றி சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். நினைவிழந்த நிலையில் இரு மாதங்கள் இருந்த அவர், 1981 டிசம்பர் 23-ஆம் நாள் உலக வாழ்வை நீத்தார். எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த கக்கன் உடல் கண்ணம்மாபேட்டையில் டிசம்பர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது.

நன்றி :
http://www.thangampalani.com/
http://rssairam.blogspot.in/

***

நன்றி : செம்பியன் வளவன்

Invictus

While incarcerated on Robben Island prison, Nelson Mandela recited this poem to other prisoners and was empowered by its message of self-mastery. – wikipedia.

***
Invictus

William Ernest Henley (1849 – 1902 / Gloucester / England) :

Out of the night that covers me,
Black as the Pit from pole to pole,
I thank whatever gods may be
For my unconquerable soul.

In the fell clutch of circumstance
I have not winced nor cried aloud.
Under the bludgeonings of chance
My head is bloody, but unbowed.

Beyond this place of wrath and tears
Looms but the Horror of the shade,
And yet the menace of the years
Finds, and shall find, me unafraid.

It matters not how strait the gate,
How charged with punishments the scroll.
I am the master of my fate:
I am the captain of my soul.

***

source : http://www.poemhunter.com/poem/invictus/

வக்கீல்களை விளாசும் காந்திஜி

’படிங்க நானா’ என்று தம்பி பஃக்ருதீன்  முந்தாநாள் சுட்டி அனுப்பிய உடனே – படித்துவிட்டு – முழுக்க இங்கே மீள்பதிவிடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன்.  இதற்கொரு வக்கீல்நோட்டீஸ் வரப்பெற்றால் எங்கே ஓடி ஒளிவது?  சபரிலிருந்து வந்தாலே , ’கோர்ட் கோர்ட்’ என்று அலையாய் அலைந்த என் சீதேவி வாப்பா அந்தக் கட்டுரையைப் பார்த்தால் ரொம்பவும் சந்தோஷப்பட்டிருப்பார்கள்தான்.  கொடுத்து வைக்கவில்லை. சரி,  ’ வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! ’ என்று கடுமையாக விளாசும் சட்ட ஆராய்ச்சியாளர் , சகோதரர் ’வாரண்ட் பாலா’வின் முழுக் கட்டுரையையும் வாசிக்க ‘இந்நேரம்’ தளத்திற்குச் செல்லுங்கள். பெரியார் விளாசியதும் அங்குண்டு. எனக்கு பயமுண்டு. நன்றி. – ஆபி..

***

’ மகாத்மா காந்தி தனது 40 -வது வயதான 1909 ஆம் ஆண்டில் எழுதிய ‘இந்திய சுயராஜ்யம்’* என்ற நூலின் 11 -வது கட்டுரையில் வக்கீல்களைப் பற்றியும், நீதிபதிகளைப் பற்றியும் விரிவாக தெரிவிக்கும் கருத்தை, விரிவஞ்சி மிக முக்கியமான கருத்துக்கள் மாறாமல் கீழ்கண்டவாறு தொகுக்கிறேன். (* இந்நூலைக் காந்திய இலக்கியச் சங்கம், மதுரை – 625020, மலிவு விலை வெளியீடாக ரூ 10 க்குத் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது.) –  வாரண்ட் பாலா . ***

***

வக்கீல் தொழில் ஒழுக்கக்கேட்டைப் போதிக்கிறது.

இத்தொழிலுக்கு வருபவர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்களே ஒழிய, துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக வருவதில்லை.

பணக்காரர் ஆவதற்கான வழிகளில் வக்கீல் தொழிலும் ஒன்று.

மனிதர்களுக்குள் தகராறுகள் ஏற்படும் போது வக்கீல்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை நான் அறிவேன்.

இவர்கள் சகோதரர்களை விரோதிகள் ஆக்கியிருக்கிறார்கள்.

வக்கீல்களுக்கு வேலை என்பதே இல்லை. அவர்கள் சோம்பேறிகளாக இருப்பவர்கள்.

இவர்கள் தெய்வப் பிறவியோ ஏன்று ஏழை மக்கள் எண்ணும் வகையில் ஆடம்பரத்தையும் மேற்கொள்ளுகின்றனர்.

இவர்களால் குடும்பங்கள் அழிந்து போய் இருக்கின்றன.

கோர்ட்டுகளுக்கு போகத் தலைப்பட்ட பிறகே அவர்கள் மனிதத்தன்மையில் குறைந்தவர்களாகவும், கோழைகளாகவும் மாறினர்.

மக்களின் நன்மைக்காக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று நினைப்பது தவறு.

தங்கள் தகராறுகளை மக்கள் தங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்வதாய் இருந்தால், அவர்கள் மீது மூன்றாம் ஆள் எந்த வித ஆதிக்கத்தையும் செய்ய முடியாது.

எது நியாயம் என்பது தகராறில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். இதில் மூன்றாம் ஆள் கூறும் தீர்ப்பு எப்போதுமே நியாயமானதாக இருந்துவிட போவதில்லை என்பது நிச்சயம்.

முதன் முதலில் வக்கீல்கள் எவ்விதம் தோன்றினர், அவர்களுக்கு எவ்விதம் சலுகைகள் அளிக்கப்பட்டன என்பவைகளை நீங்கள் சரியாக தெரிந்துக் கொள்ள வேண்டும். பிறகு இத்தொழிலைக் குறித்து எனக்கு இருந்து வரும் வெறுப்பே உங்களுக்கும்   ஏற்படும்.

வக்கீல்கள் நாட்டிற்கு செய்திருக்கும் மிகப் பெரிய தீங்கு ஆங்கிலேயரின் பிடிப்பை இங்கு பலப்படுத்தி இருப்பதாகும். விபச்சாரத்தைப் போல இத்தொழிலும் இழிவானது என்று கருதி விட்டால், ஒரே நாளில் ஆங்கிலேய ஆட்சி சிதைந்து விடும்.

வக்கீல்களைப்பற்றி நான் கூறியன யாவும் நீதிபதிகளுக்கும் பொருந்தும். நீதிபதிகள் பெரியப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். ஒவ்வொருக்கொருவர் பக்க பலமாக இருப்பவர்கள்.

இவைகள் முற்றிலும் உண்மை. இதற்கு எதிரான எந்தக் கூற்றும் பாசாங்காகும்.

***

நன்றி :

வாரண்ட் பாலா வலைப்பூ : http://warrantbalaw.blogspot.com/  |  Cell : +919842909190  | E-Mail : warrantbalaw@gmail.com

« Older entries Newer entries »