14-9-1949 : காயிதே மில்லத் பேச்சு

எனது சின்னமாமா நிஜாமுக்கு மிகவும் பிடித்தவரான கவிஞர் தா. காசிம் அவர்களைப் பற்றி இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது அண்ணன் ஹிலால் முஸ்தபாவின் வலைப்பதிவு மூலம் கவிஞரின் நாத்திகம் , காயிதே மில்லத்-ன் ராஜநடையால் சிதறிப் போனதை அறிந்து ஆச்சரியப்பட்டேன்.  நேற்றிரவு தர்ஹாவுக்குள் நுழைந்தால் , ‘கவ்மின் காவலர்’ நூல் கிடைக்கிறது!  இரண்டாம் பதிப்பு (1983). அனுபந்தத்தில் சேர்க்கப்பட்ட காயிதே மில்லத்தின் உரையைத்தான் முதலில் படித்தேன்.  நண்பர்கள் சிலர் சொல்வதுபோல , காயிதே மில்லத் அவர்கள் தமிழ்மொழியை தேசிய மொழியாக அறிவிக்கக் கோரவில்லை,  தொன்மை என்று வரும்போது பெருமிதத்தோடு தமிழை அவர் குறிப்பிட்டாலும் ‘அதிகம்பேர் பேசக்கூடிய இந்திய மொழி’யாக ஹிந்துஸ்தானியையே (இது ஹிந்தியா உருதா?) முன்மொழிந்திருக்கிறார் என்றுதான் என்னால் முடிவுக்கு வர முடிந்தது. அன்னாரின் பிறந்த தினத்தில் பதிவிடுகிறேன். ‘காப்பி மாஸ்டர்கள்’ கண்டிப்பாக சுட்டி கொடுக்கவும்!

கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களைப் பற்றி நண்பர் சீதையின் மைந்தன் விரிவாக எழுதிய இந்தப்  பதிவையும் படியுங்கள். ‘காயித்’ என்பதன் அர்த்தம் விளங்கும். நன்றி. – ஆபிதீன்

***

qaiidemillth-book-cover2A.K. ரிபாயி அவர்கள் எழுதி வெளியிட்ட ‘கவ்மின் காவலர்’ நூலிலிருந்து.. (பக்: 207-214)

14-9-49 அன்று அரசியல் நிர்ணய சபையில், தேசீய மொழி பிரச்னை விவாதத்திற்கு வந்தபொழுது.. காயிதே மில்லத் அவர்கள் ஆற்றிய உரையின் தமிழாக்கம்  வருமாறு :-

மிஸ்டர் முஹம்மது இஸ்மாயில் (மதறாஸ் , முஸ்லீம்) :-  அவைத் தலைவர் அவர்களே! இத் திருத்தங்களின் மீது நான் பேச விரும்புகிறேன். இப் பிரச்னை மீது விவாதம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருகிறது. விவாதம் முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே எனது திருத்தங்களைப் பற்றி நான் குறிப்பிடலாம் என நினைக்கிறேன். இத்திருத்தங்கள் ஏற்கனவே என்னால் சமர்ப்பிக்கப்பட்டவை; அவை சபை முன்பு இருக்கின்றன.

ஒரு உறுப்பினர் :- அப்படியானால் மற்ற திருத்தங்கள்?..

மிஸ்டர் முஹம்மது இஸ்மாயில் :- ஏற்கனவே நான் நோட்டிஸ் கொடுத்துள்ள திருத்தங்கள் சபை முன்பு இருப்பதாலும் அதுபற்றி விவாதங்கள் இன்னும் முடிவுக்குக் கொண்டுவரப் படாததாலும் விவாதம் மீண்டும் தொடங்கப் பட்டு விட்டதாலும் எனது திருத்தங்கள் மீது பேச எனக்கு உரிமை இருக்கிறது என நான் நினைக்கிறேன்.

அவைத்தலைவர் : உறுப்பினர் கூறுவது சட்டப்படி சரிதான்.

மிஸ்டர் முஹம்மது இஸ்மாயில்:-அவைத் தலைவர் அவர்களே! எனது கருத்தைத் தெரிவிக்குமுன்பு முதலாவதாக, திரு K.M. முன்ஷி சமர்ப்பித்துள்ள திருத்தங்களை நான் எதிர்க்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தேவநகரி லிபியிலும் உர்தூ லிபியிலும் எழுதப்படும் ஹிந்துஸ்தானி என்ற மொழியே தேசீய மொழியாக இருக்கவேண்டும் என்றும் சர்வதேச “எண்”கள்தான் (Numerals) அரசாங்கப் பழக்கத்தில் இருந்து வர வேண்டும் என்றும் எனது திருத்தங்கள் கோருகின்றன. அத்துடன், மத்திய ஆரசின் ஆட்சி மொழியாக ஆங்கிலமே 15 ஆண்டுகளுக்கு இருந்துவருவது என்ற விதியை, பாராளுமன்றத்தின் இரு சபைகளும் தங்களது பெரும்பான்மை மூலம் வேறு விதமாகக் கருத்துத் தெரிவிக்காத வரையில் , ஆங்கிலமே இந் நாட்டின் தேசீய மொழியாக நீடிக்க வேண்டும் என்று அந்த விதியை மாற்ற வேண்டும் என்றும் எனது திருத்தங்கள் கோருகின்றன. இவைதான் எனது திருத்தங்களின் சாரம்.

அவைத் தலைவர் :- அவற்றின் நம்பர் என்ன?

மிஸ்டர் முஹம்மது இஸ்மாயில்:- தலைவர் அவர்க்ளே! நேற்று இச்சபையில் பிரதம மந்திரி அவர்கள் மிக முக்கியமானதொரு உரையை நிகழ்த்தினார். அச்சமயம் மூன்று அம்சங்களை அவர் வலியுறுத்தினார். முதலாவதாக இப்பிரச்னை குறித்து மஹாத்மா காந்தியின் கருத்துக்களை அவர் மேற்கோள் காட்டினார்; அவரை ஆதாரமாக எடுத்துச் சொன்னார். இரண்டாவதாக நாம் பின் நோக்கிச் செல்லக்கூடாது என்றார்; வெகுதூரம் பின்நோக்கிப் பார்ப்பது நமது எதிர்கால முன்னேற்றத்தைப் பாதிக்கும் என்று எடுத்துச் சொன்னார். மூன்றாவதாக,  உலகம் இன்று மிகவும் சுருங்கிக் கொண்டுவருகிறது என்பதை நாம் உணரவேண்டும் என்று சொன்னார். மணிக்கு மணி நம்மை எப்படி உலகம் சுற்று வளைத்துக்கொண்டு வருகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என அறவுரை கூறினார். மேற்கூறிய மூன்று அம்சங்களையும் மனதில் கொண்டு இப்பிரச்னையை நாம் ஆராய முற்பட்டால் பிரச்னையை இலகுவில் தீர்த்துவிட இயலும் என்பதுதான் எனது கருத்தாகும்.

நாட்டின் தேசீய மொழியாகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய மொழி ஒரு இந்திய மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்பது ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். அத்துடன் நாட்டிலுள்ள மக்களில் அதிகப்படியானவர்கள் பேசக்கூடிய மொழியாகவும் அது இருக்கவேண்டும் என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. நமது தேசீய மொழி தற்கால போக்குகளையும் நவீன கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் அவற்றை நன்கு பிரதிபலிக்கும் வகையிலும் அந்த மொழி இருக்க வேண்டும் என்பதும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த அம்சங்களைக் குறித்து கருத்து முரண்பாடு இல்லை என்றுதான் நான் கருதுகிறேன்.

அப்படியானால், அப்படிப்பட்ட மொழி எது? எல்லா அம்சங்களிலும் திருப்திதரும் மொழி எது? இதுதான் இன்றைய பிரச்னை; விவாதம். இது குறித்து மஹாத்மா காந்தியை நான் மேற்கோள் காட்டுவதை விட வேறு எதுவும் சிறப்பாகக் கூறிவிட முடியாது. 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10ஆம் தேதி அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

“டில்லியில் என்னை தினசரி ஹிந்துக்களும் சந்திக்கிறார்கள். முஸ்லிம்களும் சந்திக்கிறார்கள். ஹிந்துக்கள் அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். இவர்கள் பேசுகிற மொழியில் ஒரு சில சமஸ்கிருத வார்த்தைகள் இருக்கின்றன. அரபி, பார்ஸி வார்த்தைகளும் அதில் அதிக அளவில் இல்லை. இந்த மக்களுகு அல்லது அவர்களில் பெரும்பான்மையினருக்கு, தேவநகரி லிபி தெரியாது. அவர்கள் எனக்கு எழுதும்பொழுது அவர்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில்தான் எழுதுகிறார்கள்; ஒரு அந்நிய மொழியில் எழுதுவதற்காக அவர்களை நான் கடிந்துகொள்ளும் பொழுது, அவர்கள் உர்தூ லிபியில்தான் எழுதுகிறார்கள். நமது நாட்டின் தேசிய மொழியாக ஹிந்திதான் இருக்க வேண்டும் என்றும் அது தேவநகரி லிபியில்தான் எழுதப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டால், மேலே நான் குறிப்பிட்ட ஹிந்துக்களுடைய நிலை என்ன? கதி என்ன?”

இது மஹாத்மா காந்தி எழுப்பிய கேள்வி: அதிக நாட்களுக்கு முன்பு அல்ல; 1947ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எழுப்பிய வினா. டில்லியையும் அதை சுற்றிலுமுள்ள பகுதிகளைத்தான் அவர் இங்கு குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அதே கட்டுரையில் அவர் மேலும் குறிப்பிடுகிறார். அவர் வார்த்தைகளை அப்படியே நான் இங்கு படிக்கிறேன்.

“இந்தியாவிலுள்ள கிராமங்களில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு புத்தகங்களை வாசிக்கத் தெரியாது. ஆனால் அவர்கள் பேசுகிற மொழி ஹிந்துஸ்தானி. இதை முஸ்லிம்கள் உர்தூ லிபியில் எழுதுகிறார்கள். ஹிந்துக்கள் தேவநகரி லிபியில் எழுதுகிறார்கள். எனவே, என்னையும் உங்களையும் போன்ற மக்களின் கடமை என்னவென்றால், அந்த இரண்டு லிபிகளையும் கற்றுக்கொள்வதுதான்.”

அவைத் தலைவர் அவர்க்ளே! மஹாத்மா காந்தியின் கருத்து இதுதான். பெரும்பாலான மக்கள் பேசுகிற மொழி ஹிந்துஸ்தானி என்று அவர் மிகவும் தெளிவாகக் கூறி இருக்கிறார்; அதற்காக மக்கள் பயன்படுத்தும் லிபிகள் தேவநகரியும் உர்தூவும் என்று அவர் வலியுறுத்தியிருகிறார். எனவே, இந்தியாவினுடைய தேசீய மொழிக்கு உர்தூவையும் தேவ நகரியையும் லிபிகளாக ஏற்றுக் கொள்ளும்படி எனது நண்பர்களுடன் சேர்ந்து நானும் இச்சபையை வேண்டிக்கொள்கிறேன்.

ஹிந்துஸ்தானி ஒரு அந்நிய மொழி அல்ல; இது நீங்கள் எல்லோரும் அறிந்ததுதான். இது முழுக்க முழுக்க ஒரு சுதேசி மொழி. இந்நாட்டில்தான் இது பிறந்து வளர்ந்தது. இம்மொழியைப் பற்ரிய மற்றொரு சிறப்பான அம்சம் என்னவென்றால், நவீன கால தேவைகளுக்கு ஏற்ற தருணத்தில் இது பிறந்தது; சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை வளர்த்துக்கொண்டது. தற்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நிலையிலும் இது உள்ளது. எனவே, நவீன கருத்துக்களை வெளியிடவும், தற்கால சூழ்நிலைகளைப் பூர்த்தி செய்யவும் ஏற்ற மொழி இதுதான் என்று நான் கூறுகிறேன். ஏற்கனவே நான் சுட்டிக் காட்டியபடி இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்கள் பேசக்கூடிய மொழியும் இந்த ஹிந்துஸ்தானிதான்.

முன்காலங்களில் வழக்கில் இருந்த விஷயங்கள் பற்றிப் பேசப்பட்டது. மிகப் பழமையான காலங்களிலுள்ள நடைமுறைகள்தான் பின்பற்றப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டால் , அது குறித்து தர்க்க ரீதியான ஒழுங்குமுறையைக் கையாள வேண்டும் என நான் சொல்ல விரும்புகிறேன். பழமையை ஏற்றுக்கொள்ள நாம் ஏன் விரும்புகிறோம்? நமது நண்பர்களில் சிலர், ஒரு மொழி இந்திய மொழியாக மட்டும் இருந்தால் போதாது, இந்நாட்டினுடைய மிகவும் பழமையான மொழியாகவும் அது இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மொழியைத்தான் நமது தேசீய மொழியாக ஏற்றுக்கொள்ள முடியும் எனக் கூறினார்கள்.

இந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்படுமானால், நான் ஒரு உண்மையை இச்சபை முன்பு தைரியமாகக் கூற விரும்புகிறேன். ** இந்நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும் , ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான்; அதாவது திராவிட மொழிகளே இந்நாட்டின் புராதன மொழி என நான் துணிந்து கூறுகிறேன். இந்நாட்டு மண்ணில் பேசப்பட்ட முதல் மொழி திராவிட மொழியே என்ற  எனது கூற்றை எந்த வாலாற்றாசிரியராலும் மற்க்க முடியாது. எந்த புதைபொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும் நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது மிகவும் புராதனமான மொழி. இது எனது தாய்மொழி என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன். அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.

என்றாலும், ஒரு உண்மையை நானோ அல்லது இதர தமிழர்களோ மறந்துவிடவில்லை. சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் இந்நாட்டின் மிகப் புராதன மொழியாக தமிழ் இருந்தபோதிலும் இந்நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களால் இது பேசப்படவில்லயாதனால் இம்மொழியைத்தான் நமது தேசீய மொழியாக வேண்டும் என நாங்கள் வற்புறுத்திக் கொண்டிருக்கவில்லை;  நாங்கள் நிலைமையைப் புரிந்துகொண்டுதான் இருக்கிறோம். ஆனால், பழமைக்குத்தான் செல்லவேண்டுமென்றால், புராதனமானதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், இந்நாட்டின் தேசீய மொழியாக தமிழைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அம்மொழியைப் பேசுபவர்கள் அக்கோரிக்கையை வலியுறுத்திக் கொண்டிருக்கவில்லை.

பழமையை நாம் மறந்து விடுவதற்கில்லைதான்; அதன் செல்வாக்கிற்குள்பட்டுத்தான் நாம் இருந்து வருகிறோம். தாண்டன்ஜீ அவர்கள் விளக்கிக் கூறியதைப் போல, பழமையிலிருந்து நாம் முழுவதுமாக விடுபட்டுவிட முடியாதுதான். பழமைச் சங்கிலியால் நாம் பிணைக்கப்பட்டிருந்தாலும் அந்தப் பிணைப்பு அசைவற்றதாக, உயிரற்றதாக இருக்கக் கூடாது. அது விட்டுக்கொடுக்கக் கூடியதாக இருக்கவேண்டும்; நெளிவு சுழிவுகளுக்கு இடமளிப்பதாக இருக்க வேண்டும். இதைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எல்லாமே வேர் பாகமாக அமைந்துவிட்டால் , மரம் முழுமை பெறுமா? வேர்களும் இருக்க வேண்டும். கிளைகளும் இருக்க வேண்டும். மலர்கள் இருக்க வேண்டும்; கனிகளும் இருக்க வேண்டும். எனவே தற்கால சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

திரு ராம்நாத் கோயங்கா (மதறாஸ், பொது) :- அவைத் தலைவர் அவர்களே! இந்த விவாதத்தை முடிவுக்கொண்டு வரவேண்டுமென ஏற்கனவே நான் பிரரேபித்துள்ளேன். கனம் உறுப்பினரும் தமது பேச்சை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரரேபணை செய்கிறேன்.

அவைத்தலைவர் :- கனம் உறுப்பினர் தமது பேச்சை முடித்துக்கொள்ள நான் அனுமதிக்கிறேன்.

மிஸ்டர் முஹம்மது இஸ்மாயில்:- அவைத் தலைவர் அவர்களே! விவாதத்தை முடிக்க வேண்டும் என பிரரேபணை செய்யப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்படுமானால், அதன்பிறகு இங்கு என்னால் ஏதும் கூற இயலாது. அது அவ்வாறு செய்யப்படவில்லை. விவாதமும் நடந்துகொண்டிருக்கிறது. எனக்குள்ள உரிமையின்படி நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.

திரு ராமநான் கோயங்கா:-  உறுப்பினர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

அவைத் தலைவர் : கனம் உறுப்பினர் சீக்கிரம் முடித்துக் கொள்ளலாம்.

மிஸ்டர் முஹம்மது இஸ்மாயில்:- அவைத் தலைவர் அவர்களே! எண்கள் (Numerals) குறித்து ஒரு சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். சர்வ தேச வழக்கில் பழக்கத்தில் இருகும் எண்களையே நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். இந்தியாவிலுள்ள பழ மொழிகளும் இந்த எண்களையே கடைப்பிடித்து வருகின்றன.

தேசீய மொழி பிரச்னை போல எண்கள் பிரச்னையும் நெடுங்காலமாக இருந்து வரவில்லை என்று சொல்லப்படுகிறது. தேசிய மொழி பிரச்னை வேறு. எண்கள் பிரச்னை வேறு என்பதை மக்கள் புரிந்துதான் வைத்திருக்கிறார்கள். இந்நாட்டின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் இப்பொழுது இருந்து வருகிறது. என்றாலும் பொதுமக்கள் மத்தியில் அம்மொழி அவ்வளவாக ஊடுருவவில்லை; எல்லோரிடமும் பழக்கத்தில் இல்லை. ஆனால் எண்கள் பிரச்னை அப்படி அல்ல. பாமர மக்களும் கூட “ஆங்கில” என்களையே கடைப்பிடித்து வருகிறார்கள்; உபயோகித்து வருகிறார்கள். அவர்களது அன்றாட வாழ்க்கையில் இந்த எண்கள் புழக்கத்தில் இருந்து வருகின்ற. கை வண்டி இழுப்பவர்கள், தினக் கூலிகள் எல்லோருமே இந்த எண்களையே உபயோகிக்கிறார்கள். லட்சக்கணக்கானவர்கள் இந்த எண்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே இந்த எண்களையே நமது தேசீய மொழியிலும் நிரந்தரமானதாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுவே மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும். இந்த நாட்டில் எது நடைமுறையில் இருக்கிறதோ அதையே நாமும் ஏற்றுக்கொண்டதாகவும் பிரதிபலிப்பதாகவும் அமையும்.

எண்கள் விசயத்தில் ஏதாவது மாற்றங்கள் செய்ய நாம் முற்பட்டால், நிறைய குழப்பங்கள் உண்டாகும்; பணச் செலவாகும்; உழைப்புகள் வீணடிக்கப்படும். அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டது போல, இந்த “எண்கள்’ அந்நிய நாட்டைச் சார்ந்தவையல்ல. நமக்குச் சொந்தமானவைதான்,. எனவே, நமது தேசீய மொழியில்  இந்த எண்கள் நிரந்தரமான அம்சமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என நான் மீண்டும் வேண்டுகோள் விடுகிறேன்.. சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த எண்களை கைவிட்டுவிட்டு புதிய எண்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அதாவது, தேவநகரி லிபியிலும் உர்தூ லிபியிலும் இந்துஸ்தானி மொழியே தேசீய மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதும் சர்வதேச ரீதியில் வழக்கில் இருக்கும் ‘இந்திய எண்களே’ நமது தேசீய மொழியில் நிரந்தர அம்சமாக இருக்கவேண்டும் என்பதும் எனது கோரிக்கைகளாகும்.

————-

**
from the Draft Costitution – Part XIV A Languages – Page : 1471 to 1474 – Date 14th September 1949 – Vol : IX

Mr. Mohamed Ismail (Madras, Muslim) :- .. Some friends of ours want to have an ancient language of the country to be the official language of the Union. If it were granted then I make bold to say that Tamil, or to put it generallay, the Dravidian languages are the earliest among the languages that are spoken on the soil of this coutry. No historian or archaelogist will contradict me when I say that it is the Dravidian language that was spoken first here on the soil of this country, and that is the eralier language. Tamil language has got a rich literature of a high order. It is the most ancient language. It is, I may say, my mother tongue. I love and I am proud of that Language.

கண்ணியமிகு ‘காயிதே மில்லத்’

கட்டுரையில் வரும் ‘சாயபு’ என்பதை மட்டும் ‘சாஹிப்’ – அல்லது சில அன்பர்கள் சொல்வதுபோல ‘சாஹேப்’ – என்று படித்தால் சரியாக இருக்கும். ‘சாஹிப்’-ஐ தமிழ்ப்படுத்திய அடியார், ‘காயிதே’வில் ஏன் கை வைக்கவில்லை என்பதறியேன். இதற்கெல்லாம் நாகூர்தான் சரி. ‘சாஹிப்’ அல்ல அங்கே. வெறுமனே : சாபு. ஒரு சா(ர்)பும் கிடையாது, சகோதரரைச் சுருக்குவதில் அவ்வளவு மகிழ்ச்சி. அது இருக்கட்டும். ‘யார் யாரையோ எழுதுறீங்க, நம்ம ‘காயிதே மில்லத்’-ஐ சொல்ல மாட்டீங்களா?’ என்று கேட்ட அபுதாபி இஸ்மாயில் (என் உயிர்த்தோழர்) , ஆனந்த விகடனின் ‘பொக்கிஷம்’ பகுதியை ஸ்கேன் செய்து அனுப்பியிருந்தார். பலமான பழைய தலைவர்களை நினைத்துப் பார்த்தாவது நம் பலவீனம் மாறாதா என்ற நப்பாசையில் அதை இங்கே பதிகிறேன்.

‘காயிதே மில்லத்  என்றால் சமுதாய வழிகாட்டி என்று அர்த்தம்’ என்று ஆரம்பித்து , அவர்களைப்பற்றி மிக நெகிழ்ச்சியுடன், மணிக்கணக்காகப் பேசும் ஒருவர் ஊரில் உண்டு. ஆமாம், நீங்கள் நினைக்கும் அதே ஆள்தான். அவர்களைப் பற்றி ஒரு பெரிய தொடர் எழுதப்போவதாக பத்து வருடங்களாக என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் அவர். என்னைவிட சுறுசுறுப்பு!. கெஞ்சுவதாக இல்லை இனி. எனவே சுருக்கமான இந்தப் பதிவு. காயிதே மில்லத் பற்றிய விக்கிபிடியா குறிப்பை இங்கே சென்று படித்துவிட்டு பசியாறுங்கள்! கட்டுரையைப் படித்துவிட்டு, ‘நாகூரில் சொல்லப்படும் ‘பசியாற’ என்ற சொல் நெல்லையிலும் இருப்பதறிந்து மகிழ்ந்தேன். வேறு எந்த எந்தப் பகுதிகளில் இருக்கிறது?’ என்று வட்டலப்பம் போல வழியாதீர்கள். கட்டுரையை இட்ட நோக்கம் வேறு.

*

 
காயிதே மில்லத்

அடியார்

பூமி அதிராத நடை.. புன்முறுவல் பூந்தோட்டம் போட்ட முகம்.. கருணை நிலா ஒளி வீசும் விழிகள்..மென்மையான குரல்..எந்த நிலையிலும் கண்ணியம் தவறாத சீர்மை..இதுதான் காயிதே மில்லத் இஸ்மாயில் சாயபு.

எங்கள் தமிழாசிரியர் அன்றைக்கு ஒருநாள் வகுப்பில் தமிழ்ப்பாடம் நடத்துவதற்குப் பதிலாக ‘அரசியல்’ பேசினார்.

‘எத்தனையோ தலைவர்கள் தமிழுக்காக உயிர்விடுகிறேன் என்கிறார்கள். ஆனால், இந்தியாவின் ஆட்சிமொழியாக எந்த மொழி இருக்கலாம் என்ற விவாதம் டெல்லியிலே வந்திருக்கிறது. வடக்கே உள்ளவர்கள் இந்திதான் ஆட்சிமொழி என்கிறார்கள். தெற்கே உள்ளவர்கள் ஆங்கிலம்தான் ஆட்சிமொழி என்கிறார்கள். ஆனால் ஒரு ‘சாயபு’தான் ‘எங்கள் தமிழ்மொழி எல்லா வளமும் பெற்ற மொழி. அதுவே இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கத் தகுதி உள்ளது’ என்று பேசியிருக்கிறார். அவர் இஸ்மாயில் சாயபு. நல்ல தமிழ் பேசும் நெல்லையைச் சேர்ந்த பச்சைத் தமிழர்!’

கேரளத்திலுள்ள மஞ்சேரி (இப்போதைய மலப்புரம்) நாடாளுமன்றத் தொகுதிக்குள் நுழையாமலேயே காயிதே மில்லத் வெற்றி பெற்றிருந்த நேரம். அவரைச் சந்திக்க நினைத்தேன். எக்கச்சக்கமான கூட்டம், மலர் மாலை, கைத்தறித் துண்டு, பட்டாசு வெடிகள் இவையெல்லாம் இருக்கும் என நினைத்து அவரது இல்லத்தை அடைந்தபோது, அதிகாலை நேரத்து ஏரிக்கரைபோல அமைதியாக இருந்தது அவரது வீடு.

என்னைப் பார்த்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி : ‘பசியாறிட்டீங்களா?

‘பசியாறுதல்’ எனும் தமிழ் சொல்லின் அழகு பற்றி வியந்து போனேன். ‘உணவு உண்பதற்கு இப்படி ஒரு சொல்லா உங்கள் பகுதியில்?’ என்று கேட்டேன்.

‘உணவு உண்டீர்களா என்பதற்காக அல்ல இந்தச் சொல்! ‘பிரேக் ஃபாஸ்ட்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரானது இந்தச் சொல். காலை உணவு உண்டீர்களா என்று கேட்பதற்குத்தான் இந்தச் சொல் பயன்படுத்தப்படும்’ என்று பதிலுரைத்தார்.

எழில் எழிலான தமிழ்ச் சொற்கள் எத்தனை நெல்லைப் பகுதியில் வழங்குகின்றன என்று அவர் அடுக்கிக்கொண்டே போனார். ‘புட்டிங்’ என்ற சிற்றுண்டி குறித்த சொல்லுக்கு ‘வட்டில் அப்பம்’ என்ற சொல் இருப்பதாக அவர் கூறியபோது இமை இரண்டும் சேரா வண்ணம் நெடுநேரம் அவரைப் பார்த்தபடி இருந்தேன்.

நபிகள் நாயகம் விழா! காயிதே மில்லத் பேச இருக்கிறார். அதற்கு முன், திராவிட இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் பிள்ளையார் பற்றிய கதையைக் கூறி கேலி செய்தார். காயிதே மில்லத் தமது பக்கத்தில் இருந்தவரிடம் ஏதோ சொல்ல பேச்சாளரின் பேச்சு அத்தோடு முடிக்கப்படுகிறது.

காயிதே மில்லத் பேசும்போது சொன்னார்.. ‘இது புனிதமான மீலாது விழா மேடை. இதில் நபிகள் நாயகத்தின் சிறப்பு, இஸ்லாத்தின் மேன்மை பற்றி மட்டுமே பேச அனுமதிக்கப்படும். பிற மதத்துக் கடவுள்களைப் பற்றி கேலி செய்து பேசக் கூடாது. இஸ்லாமிய மார்க்கம் ‘பிற மதத்துக் கடவுள்களைப் பற்றி கேவலம் செய்து பேசாதீர்கள்’ என்று கூறியிருக்கிறது.’

இத்தகைய பண்பு நலன்கள் கொழித்துச் செழித்து இருந்த காரணத்தால்தான் அவர் ‘கண்ணியமிகு காயிதே மில்லத்’ என அழைக்கப்படுகிறார்.

*

நன்றி : ஆனந்த விகடன்

*

சுட்டி : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (தமிழ்நாடு) இணைய தளம்