இன்று எனக்கு முக்கியமான நாள். ஆமாம், பிறந்த நாள் + கல்யாண நாள்!. வயசா? அது ஆச்சு கழுதைக்கு அம்பதுக்கும் மேலே! ‘குரல் ரொம்ப இளமையா இருக்கே’ என்று இந்த ஹரன்பிரசன்னா சீரியஸாகச் சொன்னால் என்ன அர்த்தமாம்? போனவருடம் அவர் அப்படி சொன்ன நொடியிலேயே எனக்கு இரண்டு வயது கூடிவிட்டது! சரி, நல்ல காரியம் ஒன்று செய்யலாம் இன்று என்று நினைத்தேன். (‘பதிவு போடாம இரியுமேங்’ – இன்னொரு கழுதை). அறியாச் சிறுவயதில் , சுவரிலும் போஸ்டர்களிலும் கேலிச்சித்திரங்கள் வரைந்து மகத்தான அந்த தலைவனை கேவலப்படுத்தியதற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்ட மாதிரியும் ஆச்சு , நல்லது செய்தமாதிரியும் ஆச்சு என்று கையொடிய இந்தப் பதிவு. தினமணிகதிரில், கி. கஸ்தூரி ரங்கன் (கணையாழி புகழ்) எழுதிய ‘டயரி’. முடிவு பிரமாதமாக இருக்கும். இத்துடன், பெருந்தலைவர் பற்றி நெல்ல கண்ணன் பேசிய பட்டிமன்றப் பேச்சை (முன்பு எப்போதோ பொதிகை டி.வியில் ரிகார்டிங் செய்தது) பதிவேற்றலாம் என்று நினைத்தேன். கூகிளிட்டபோது – அதைவிடச் சிறப்பாக – இந்த சுட்டி கிடைத்தது. கேளுங்கள் அதை. ‘வாழ்த்த வயதில்லை’ என்று பொய்யெல்லாம் சொல்லாமல் படியுங்கள் இதை. நன்றி.
YouTube : நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா…
**

இவர்தான் தலைவர்! – ஒரு நிருபரின் டயரி –
கி.கஸ்தூரி ரங்கன்
தினமணிகதிர் 25-12-70 (தினமணி வைரவிழா மலர் 1994லிருந்து)
*
ஜனவரி 1966
செவ்வாய் கிழமை அதிகாலை மூன்றே முக்கால் மணி இருக்கும். குளிரான குளிர். தூக்கமான தூக்கம்.
கிரீங்ங்..கிரீங்ங்…
என்ன கஷ்டகாலம், யார் டெலிபோன் மணி மாதிரி குறட்டை விடுகிறார்கள்?
காதுவரை மூடியிருந்த போர்வையை அரை இஞ்ச் கீழே தள்ளிவிட்டுக் கவனித்தேன்.
நிஜமாகவே டெலிபோன் என் தலைமாட்டில் அலறிக் கொண்டிருந்தது.
‘ஹலோ, எஸ்?’
தந்தி ஆபீஸிலிருந்து யாரோ பேசினார்கள்.
‘உங்களுக்கு ஒரு தந்தி; படிக்கட்டுமா?’
‘எஸ். எஸ்’
‘X%0+X-0%X0′
ஆங்கிலமா, இந்தியா, தமிழா என்று தெளிவில்லாமல் வாசித்தார்.
எனக்குத்தான் தூக்கம் தெளியவில்லை.
‘அவ்வளவுதான். தந்தியை எங்கே அனுப்பட்டும்?’ என்றார் அவர்.
‘தந்தியா, என்ன தந்தி?’ என்று கேட்டேன் நான்.
‘இப்போதுதானே படித்தேன்’ என்றார் அவர்.
‘வெயிட் எ மினிட். ஹோல்டான்’ என்று சொல்லிவிட்டு வந்தேன். வாஷ் பேஸினுக்குச் சென்று முகத்தில் தண்ணீரை அறைந்து
கொண்டேன். பேனாவைத் தேடி எடுத்துக்கொண்டு திரும்பவும் டெலிபோனுக்குப் போனேன்.
‘நிறுத்தி வாசியுங்கள். எழுதிக் கொள்கிறேன்!’
அவர் தலையெழுத்தே என்று திரும்பவும் படித்தார்.
‘தாஷ்கெண்டில் சாஸ்திரி இறந்து போன செய்தி தெரியும் என்று நினைக்கிறாரார். அங்கே ரியாக்ஷன் என்ன? அடுத்த பிரதமர் யாராக
இருக்கும்? உடனடியாகச் செய்தி அனுப்பவும்’ –
நியூயார்க்கிலிருந்து என் செய்தி ஆசிரியர் அனுப்பிய தந்தி.
நான் அப்படியே திக்பிரமித்து உட்கார்ந்துவிட்டேன்.
என்னால் நம்ப முடியவில்லை.
சாஸ்திரியின் கருணை பொங்கும் முகம் கண்முன் வந்தது. மகாலட்சுமி மாதிரி பெரிய வட்டமான குங்குமத்துடன் காட்சியளிக்கும் அவருடைய மனைவி லலிதா தேவியின் முகம் தோன்றியது. அவருடைய மகன் ஹரிகிருஷ்னா, சிறுவன் கென்னி, மருமகன் வி.என்.சிங், காரியதரிசி வெங்கட்ராமன்.. சாஷ்திரியின் குடும்பத்தைச் சேர்ந்தவரெல்லாம் முன்னே வந்தனர். மனதை சோகம் அழுத்தியது.
இப்போது என்ன செய்யவேண்டும்? எங்கெ போவது? யாரை விசாரிப்பது? – நான் யோசித்துக்கொண்டே எழுந்து கம்பளி உடைகளை மாட்டிக் கொண்டேன்.
செய்தியை ஊர்ஜிதம் செய்யத் தேவையில்லை. அடுத்த நடுவடிக்கை என்ன என்பதைத்தான் விசாரிக்க வேண்டும். நேரு இறந்தபின் நந்தா பிரதமரானார். இப்போதும் அவரே சீனியர் காபினெட் மந்திரி. அவரைத் தற்காலிகப் பிரதமராக்கியிருப்பார்கள்…
நான் நேரே ஹேஸ்டிங்ஸ் ரோடில் உள்ள் நந்தாவின் வீட்டிற்குச் சென்றேன். ஒரே வெளிச்சமாக இருந்தது. நந்தா கூடத்தில் ஒரு சோபாவின் பிரதமர் தோரணையுடன் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் முகத்தில் வழக்கமான கடுகடுப்பு நிலவியிருந்தது. ஏற்கெனவே அங்கே சில நிருபர்கள் கூடியிருந்தார்கள்.
நான் அனுமானித்து நடந்தேறியிருந்தது. சற்று முன்புதான் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நந்தாவைப் பிரதமராகப் பிரமாணம் ஏற்கச் செய்திருந்தார். அவரோடு தகவல் இலாகா மந்திரியாக இருந்த இந்திரா காந்தியையும் நிதியமைச்சர் சசீன் சௌத்ரியும் மீண்டும் மந்திரிகளாகப் பிரமாணம் ஏற்றனர்.
மணி ஐந்தரை ஆகிவிட்டது. அதற்கு மேல் நேரத்தைக் கடத்த முடியாது. நியூயார்க்கில் பத்திரிக்கை அச்சாவதற்கு இன்னும் இரண்டு மணி நேரம்தான் இருந்தது..
நான் என் அலுவலகத்திற்குப் போய்ச் சுருக்கமாகச் செய்தி தயாரித்தேன். என் புதிய தலைமை நிருபர் லூகாஸ், தாஷ்கெண்டில் இருந்தார்.
அவர் அங்கிருந்து இந்தியாவில் அரசியல் விளைவுகளை எழுதியிருப்பார் என்று தெரியும். அதனால் நந்தா தற்காலிகப் பிரதமாரகப் பதவியேற்றதையும் அடுத்த பிரதமர் யாரென்று தெளிவாகச் சில நாட்களாகும் என்றும், மொரார்ஜிக்கு இம்முறை வாய்ப்பு இருக்கிறது என்றும் அவரைக் கட்சி அங்கீகரிக்காவிட்டால் நந்தாவே அடுத்த தேர்தல் வரை பிரதமராக நீடிக்கலாம் என்றும் எழுதினேன்.
ஏனோ அப்போது இந்திரா காந்தி பிரதமராகக் கூடும் என்று தோன்றவே இல்லை.
எனக்கு மட்டுமல்ல; வேறு யாருக்குமே அது மனதில் படவில்லை. காலையில் வெளியான இந்தியப் பத்திரிக்கைகளெல்லாம் வேறு யார் யார் பெயரையோ பிரேரேபித்திருந்தன. இந்திராகாந்தி பெயரையும் காணோம்.
பிற்பகல் 2.30 மணியளவில் சாஸ்திரியின் சடலம் பாலம் விமான நிலையத்தில் தனி விமானம் மூலம் வந்திறங்கியது. சோவியத் பிரதமர் கோசிஜின்னும் உடன் வந்தார்.
விமான நிலையத்திற்குப் புதிய பிரதமர் நந்தா வந்தபோது கூடவே காரில் இந்திரா காந்திர்யையும் அழைத்து வந்தார். தன் பதவி நீடிப்புக்கு ஆதரவாக இந்திரா காந்தியின் சம்மதத்தை நந்தா பெற்றிருக்கிறார் என்று அனுமானிக்க முடிந்தது. அதற்கு முன் எஸ்.கே.பட்டீல் நந்தாவே பிரதமாக நீடிக்கவேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்திருந்தார். நந்தாவுக்க்கு வேறு சில தலைவர்களும் ஆதரவு தர இசைந்திருந்தனர்.
ஆனால் கட்சி அக்கிராசனராக இருந்த காமராஜ் சென்னையிலிருந்து தனி விமான நிலையத்தில் தில்லி வந்து சேர்ந்த பின், நிலைமையே மாறிவிட்டது. அவரைப் பொறுத்தவரை இந்திரா காந்தியே அடுத்த பிரதமராக வேண்டும் என்று முடிவு செய்திருந்தார் . எனவே அவருக்கு முன்னிருந்த ஒரே வேலை இந்திரா காந்திக்கு ஆதரவாகக் கட்சித் தலைவர்களைத் திருப்புவதுதான்.
இது சாமான்யமான வேலையல்ல. அப்போது காமராஜைத் தவிர வேறுயாரும் இந்திரா பிரதமராவதை விரும்பவில்லை. அதுல்ய கோஷ் காமராஜே பிரதமராக வேண்டும் என்று பிரேரேபித்தார். இந்த யோசனை பெரும்பான்மை தலைவர்களின் முறையான ஆமோதிப்பைப் பெற்றது. ஓராண்டில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அக்கிராசனராக இருப்பவரே பிரதமராவதுதான் முறை நியாயமான வாதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
காமராஜோ, ஆரம்பத்திலேயே, ‘என்னை விட்டு விடுங்கள். என் பெயரைத் தயவு செய்து இழுக்கவேண்டாம்’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
ஆனால் இந்திராவைப் பிரதமராக்க வேண்டும் என்ற தன் கருத்தை அவர் வெளியிடவில்லை. அது மற்றவர் வாய் மூலம் வரவேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்.
இந்திரா காந்தி காமராஜைத் தனியே சந்தித்து, ‘நந்தா பிரதமராக நீடிக்க விரும்புகிறார்’ என்று கூறினார்.
‘அதைப் பற்றி இப்போது என்ன? நிறையப் பேரை கலந்து ஆலோசித்து முடிவு செய்யவேண்டிய விஷயம் இது’ என்று பதில் தந்தார் காமராஜ்.
சாஸ்திரியின் உடல் எரிக்கப்படும் வரை இவ்விஷயம் பற்றி விவாதிப்பது நன்றாக இருக்காது என்று காமராஜ் கருதினார். மொரார்ஜியும் இம்முறை வாய்மூடி மௌனியாக இருந்தார். முதல்தடவை போல் அவசரக் குடுக்கையாக ‘நான், நான்’ என்று ஓடிவரவில்லை.
அடுத்த நாள் அதிகாலை நந்தா காமராஜின் வீட்டிற்கு வந்து காலில்விழாத குறையாக நின்றார். ‘என்னை ஏன் எல்லோரும் திரஸ்கரிக்கீறீர்கள்? ஒரு வருடம்தானே; நான் பிரதராக இருப்பதற்கு லாயக்கில்லை என்று தெரிந்தால் விலக்கிவிடலாமே. அதுவரை நானே பிரதராக இருக்கிறனே!’ என்று வேண்டிக்கொண்டார்.
காமராஜ் வழக்கம்போலப் பதிலே சொல்லவில்லை. இந்த மவுனம் சம்மதத்திற்கு அடையாளம் என்று நந்தா நினைத்தார். பிறகு நடந்த சிண்டிகேட் தலைவர்கள் கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது.
‘யார் பிரதராக வந்தாலும் மொரார்ஜி பிரதராகக் கூடாது’ என்பதே அது. மூன்றாம் நாள் தான் இந்திராகாந்தியின் பெயர் அடிபட ஆரம்பித்தது. ராஜஸ்தான் முதல்வர் சுகாதியா, ‘காமராஜ் பிரதமராக விரும்பவில்லை என்றால் இந்திரா காந்தியைப் போடலாமே!’ என்று அபிப்ராயப்பட்டார்.
இந்திரா காந்தி இதற்கு ஒப்புக்கொள்வாரா என்று மற்றவர்கள் கேட்டபோது, சுகாதியா, ‘அதைத் தீர்மானப்படுத்திக் கொண்டபிறகுதானே இந்த யோசனையே வந்தது!’ என்றார்.
இடையில் நிஜலிங்கப்பா மொரார்ஜியிடம் சென்று, ‘உங்களைப் பிரதமர் ஆக்குவதற்கு கட்சியின் ஆதரவு இல்லை!’ என்று சூசகமாகக் கூறினார். அவர் மிகவும் ஆத்திரமடைந்தார்.
‘கட்சியா, யாருடைய கட்சி அது? பார்லிமெண்ட் கட்சி என் பக்கம். பார்த்துவிடலாம் என்று சூளுரைத்தார். பிரதமர் போட்டி நடக்கட்டும். ஜனநாயக முறையில் வோட்டெடுப்பு நடந்து யார் வெற்றி பெறுகிறார்களோ அவரே பிரதமராக வேண்டும்!’ என்று நிருபர்களிடம் கூறினார் மொரார்ஜி.
மொரார்ஜியின் இந்தக் கெடுபிடிகளினால் சிண்டிகேட் தலைவர்களிடையே சற்றுக் குழப்பம் ஏற்பட்டது. போட்டியைத் தவிர்க்கவே ஒவ்வொருவரும் விரும்பினர். பாட்டீல், சவாண், சஞ்சீவரெட்டி, ஜகஜீவன்ராம் இவர்கள் பெயர்களும் பிரேரேபிக்கப்பட்டு பிரச்சினை ஒரே சிக்கலாகப் போயிற்று.
சிக்கலைத் தீர்க்க ஒரே வழி காமராஜ் பிரதராவதுதான் என்று அதுல்ய கோஷ் கூறினார். அவருக்குக் காங்கிரஸ் அக்ராசனர் பதவியில் ஒரு கண் இருந்தது. காமராஜ் பிரதமரான பின் அப்பதவி காலியாகி அதில் தன்னை இருத்திக் கொள்ளலாம் என்று திட்டம் போட்டிருந்தார் அவர். அவருடைய திட்டத்திற்குப் பலர் ஆதரவளித்தனர்.
காமராஜ் மசியவே இல்லை. தேர்தல் வருடத்தில் அக்கிராசனராகவே இருப்பதுதான் சிலாக்கியம் என்று முடிவு செய்தார் அவர்.
முதலில் நந்தாவே இடைக்காலப் பிரதராக அடுத்த பொதுத் தேர்தல் வரை நீடிப்பது என்ற கருத்துக்கு திரண்ட ஆதரவு இருந்தது. ஆனால், இடையில் இந்திரா காந்தி சவாணைச் சந்தித்து தனக்கு ஆதரவாஅக இருக்க வாக்குறுதி பெற்றுக்கொண்டார். அதற்குப் பரிசாக சவாணை உள்துறை மந்திரியாக்குவது என்றுன் இந்திரா உறுதி தந்தார். அப்படி இந்திராவைக் கட்சி பிரேரேபிக்கவில்லை என்றால் சவாணை இந்திரா ஆதரிப்பது என்று ஒப்பந்தமாயிற்று.
இந்த சங்கதியெல்லாம் தெரியாத மொரார்ஜி ஏமாளியாகவே இருந்தார். வெள்ளிக்கிழமை அன்று சுறுசுறுப்பாக அவர் ஆதரவு தேடப் புறப்பட்டபோது, தனக்கு எதிராக அணி ஒன்று உருவாகியிருப்பதைக் கண்டார். அவர் மிகவும் நம்பியிருந்த சி.பி.குப்தா, சவாண், பட்நாயக் முதலியவர்களெல்லாம் கைவிட்டு விட்டனர்.
எப்படியும், தோற்றாலும் சரி, பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டே தீர்வது என்று முடிவுக்கு வந்து அதை வெளிப்படையாக அறிவித்தார்.
அன்று காலை, பதினோரு மணிக்கு முக்கியமான காரியக்கமிட்டி கூட்டம் நடைபெற்றது. காமராஜ் முன்னைப்போலவே இப்போதும் போட்டியில்லாமல் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அபிப்ராயம் தெரிவித்தார். இதைக் கேட்ட உடனேயே மொரார்ஜி வெகுண்டு ‘பார்லிமெண்ட் கட்சி முடிவு செய்யட்டும். நீங்கள் தலையிடுவானேன்?’ என்று ஆட்சேபித்தார். முடிவில் காமராஜ், மொரார்ஜி, நந்தா, ஜகஜீவன்ராம் ஆகிய நான்குபேர் அடங்கிய குழு ஒன்று எப்படியோ உருவாகி, பிரதமர் தேர்தலை எப்படி நடத்துவது என்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டது. ஆனால் இந்தக் ‘குழு’ ஒருமுறை கூடக் கூடவில்லை.
ஜனவரி 19-ஆம் தேதி, புதன்கிழமை பிரதமர் தேர்தலை நடத்துவது என்றும் நாள் குறிக்கப்பட்டது.
மொரார்ஜி போட்டியிடுவதிலும் இரகசிய ஓட்டெடுப்பு முறையில் தேர்தல் நடக்கவேண்டும் என்பதிலும் பிடிவாதமாக இருந்தார். கடைசி முறையாக, நான்கு முதல்வர்கள், (மத்தியப் பிரதேஷ், பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா) காமராஜைப் பிரதமர் பொறுப்பை, ஏற்க்கும்படி வற்புறுத்தினர். காமராஜ் மீண்டும், ‘முடியாது’ என்று மறுத்துவிட்டார்.
‘இது தீர்மானமான முடிவுதானா?’ என்று முதல்வர்கள் கேட்டனர்.
‘சந்தேகமே வேண்டாம். நான் பிரதமராக விரும்பவில்லை’ என்றார் காமராஜ். கூடவே, ‘நந்தாவுக்குப் போட்டியில் வாய்ப்பு இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது’ என்றார்.
காமராஜ் இந்திரா காந்தியை ஆதரிக்கிறார் என்று முதல்வர்கள் அறிந்து கொண்டனர். இந்திரா மொரார்ஜியுடன் தேர்தலில் போட்டியிடத் துணிவாரா என்பது ஒரு கேள்வியாக இருந்தது. நானும் சில நிருபர்களும் அவரைச் சந்தித்துக் கேட்டோம்.
‘மொரார்ஜியுடன் போட்டியிடுவதில் தங்களுக்கு தயக்கம் ஏதேனும் உண்டா?’ என்று ஒரு நிருபர் கேட்டார்.
‘போட்டிக்குப் பயந்தவளல்ல நான்’ என்று பதில் சொன்னார் இந்திரா சூடாக.
இந்தப் பதிலை சனிக்கிழமை காலை பத்திரிக்கையில் படித்தவர் எல்லாரும் போட்டி நிச்சயம் என்று முடிவு செய்தனர்.
இரு தரப்பிலும் கட்சி பிரிய ஆரம்பித்தது. அன்று காலை எட்டு முதல்வர்கள் கூடிப் பேசி, ‘இந்திரா காந்தியே பிரதமராக வேண்டும்’ என்று அறிக்கை விட்டனர்.
சிண்டிகேட் தலைவர்களும் இதை ஆமோதித்தனர்.
நிருபர்கள் காமராஜைச் சந்தித்து, ‘இந்திரா காந்திக்கு ஆதரவாக முதல்வர்கள் அறிக்கை விட்டிருப்பது உண்மையா?’ என்று கேட்டனர்.
‘அட, அப்படியா? எனக்குத் தெரியாதே!’ என்றார் அவர் ஒன்றுமே தெரியாதவர் போல.
பிறகு மொரார்ஜிக்கு ஆதரவாக உத்தரப்பிரதேச முதல்வர் சுதேசா கிருபாளினி, குஜராத் முதல்வர் ஆகிய இருவர்தான் இருந்தனர்.
மற்றவர்களெல்ல்லாம் இந்திரா காந்தியின் பக்கம் திரும்பிவிட்டனர். தேர்தல் டிக்கெட்டுகளுக்காக முதல்வர்களை நம்பியிருந்த நிலையில் எம்.பி.க்கள் ராஜ்ய ரீதியாகக் கூடிப் பேசித் தத்தம் முதல்வர் கருத்தையே ஆமோதித்துத் தீர்மானம் போட்டனர்.
தன்னைக் காண வந்த இந்திராவிடம், ‘வீட்டுக்குப் போய் சும்மா உட்கார்ந்திருங்கள்.; நான் சொல்லும்வரை பேசாமல் இருங்கள்’ என்று சொல்லிவிட்டு காமராஜ் மொரார்ஜியிடம் தூது போனார்.
இந்திரா காந்தியே பிரதராமக வேண்டும் என்று பெரும்பான்மை தலைவர்கள் விரும்புவதாக அவரிடம் அறிவித்தார். ‘நான் என்ன குற்றம் செய்தேன்? ஏன் இந்த வஞ்சனை?’ என்று பாய்ந்தார் மொரார்ஜி.
‘கட்சி மெஜாரிட்டி உங்கள் பக்கம் இல்லையே. நான் என்ன செய்யட்டும்?’ என்றார் காமராஜ்.
‘எந்தக் கட்சி? உங்கள் சிண்டிகேட் கட்சிதானே. பார்லிமெண்ட் கட்சி என் பக்கம்’ என்றார் மொரார்ஜி.
‘பார்லிமெண்ட் வோட்டுகள் உங்களுடைய போட்டி அபேட்சகருக்குத்தான் அதிகம் கிடைக்கும்’ என்றார் காமராஜ்.
‘அதையும் பார்த்துவிடுவோமே’ என்றார் மொரார்ஜி.
புதனறு காலை பார்லிமெண்ட் மத்திய ஹாலில் 526 காங்கிரஸ் எம்.பி.க்கள் கூடினர். பார்வையாளர்கள் காலரிகளில் கூட்டம்
நெருக்கியடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது.
ஜி.எஸ்.பாதக் வோட்டெடுப்புப் அதிகாரியாகப் பணி ஏற்றார். சுமார் ஒன்றரை மணி நேரம் ஒவ்வொரு எம்.பி.யாக முன்வந்து வோட்டுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு தனியான தடுப்பு அறைக்குள் சென்றனர். வாக்குகளை இரண்டு முறை விரல் விட்டு எண்ணியபின் சுமார் 3 மணிக்கு முடிவுகளை அறிவிக்க எழுந்தார் பாதக்.
‘இந்திரா காந்தி, தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று அறிவிக்கிறேன்’
கரகோஷம் கட்டடத்தையே அதிர வைத்தது. மொரார்ஜிக்கு 169 வோட்டுகளே கிடைத்தன; இந்திராவுக்கு 355.
வெளியே பொதுமக்கள் கூட்டம் மோதிக் கொண்டிருந்தது.
வெளியே வந்த மந்திரி ஒருவரை நிறுத்தி, ‘ஆணா, பெண்ணா?’ என்று ஒரு அன்பர் கேட்டார்.
‘பெண்தான்!’ என்றார் மந்திரி.
**
நன்றி : தினமணி
**
நண்பர் நாகூர் ரூமியின் ‘காமராஜ் – கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை’ நூலிலிருந்து. Text Copyright : Nagore Rumi !
1.
அரசு சார்பாக புதிய திட்டம் ஒன்று பற்றி காமராஜ் உத்தரவு போடச் சொன்னபோது ‘ஜீ.ஓ. இடம் தராது’ என்று சம்பந்தப்பட்ட அதிகாரி சொன்னார். உடனே காமராஜர், ‘ஜீ.ஓ.’ன்னா என்ன?’ என்று கேட்டிருக்கிறார். இதுகூட தெரியாமல் ஒரு முதலமைச்சர் இருக்கிறாரே என்று நினைத்தாரோ என்னவோ, ‘அது கவர்மெண்ட் ஆர்டர் ஐயா’ என்றார் அந்த அதிகாரி.
‘அதுசரி, கவர்மெண்ட் ஆர்டர் என்றால் என்ன?’ என்று மறுபடி கேட்டார்
என்ன பதில் சொல்வதென்றே அதிகாரிக்குத் தெரியவில்லை. மௌனம். மீண்டும் காமராஜரே பேசினார் : ‘நீங்கள் எழுதி வைப்பதில் நான் கையெழுத்துப் போட்டால் அது கவர்மெண்ட் ஆர்டர். அப்படித்தானே? நான் சொன்னபடி மாற்றி எழுதுங்கள். நான் கையெழுத்துப் போடுகிறேன்!’
2.
தஞ்சை மாவட்டத்தில் இருந்த ஒரு பழைமையான கோயிலுக்கு காமராஜரை அழைத்துச் சென்றனர். வியப்போடு அதைச் சுற்றிப்பார்த்த அவர், ‘இதை யாரு கட்டினதுங்கறேன்?’ என்று கேட்டார். உடன் வந்த அதிகாரிகள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
‘இதப்பத்தி தெளிவான வரலாறு ஒன்னும் இல்லீங்கய்யா’ என்றார் அதிகாரி.
சிரித்தவாறே மேலே இருந்த ட்யூப் லைட்டைப் பார்த்தார் காமராஜர். ‘இவ்வளவு காலமா நெலச்சு நிக்கிற கோயிலைக் கட்டினவன் யாருன்னு தெரியல. ஒரு மாசம்கூட ஒழுங்கா எரியாத லைட்டுல உபயதாரர் யாருன்னு எவ்வளவு பெருசா எழுதி வச்சிருக்காம் பாருன்னேன்’ என்றார்!
*
முடிவாக , ‘ஒரு நிருபரின் டயரி’ கட்டுரையை ஸ்கேன் செய்து அனுப்பியவரும் , பெரியார் – காமராஜ் பெயர்களைக் கேட்டாலே உருகுபவருமான என் பிரிய நண்பர் தாஜுக்கு பிடித்த ஒன்று:
‘தோழர்களே! நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமென்றால் இன்னும் பத்து ஆண்டுகளாவது காமராஜரை விட்டு விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். காமராசரை பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.’ – இராமநாதபுர மாவட்ட திராவிடர் கழகத்தின் நான்காவது மாநாடு 9.7.1961 ல் தேவகோட்டையில் நடைபெற்றபோது பெரியார் பேசியது.
தாஜ், நோ சான்ஸ்…!
*
மேலும் பார்க்க : காமராஜ் – விக்கிபீடியா