தட்டச்சு செய்து அனுப்பிய தாஜ்பாயின் குறிப்பு முதலில் (தர்மசங்கடம்தான், என்ன செய்வது?) :
நண்பர் அழகிய சிங்கரின் ‘நவீன விருட்சம்’ – 101 இதழில் (Jan’2017, அசோகமித்திரன் ஓர் ஓரங்க நாடகம் எழுதி இருக்கிறார். பெயர் ‘ஆகா கான் மாளிகை’ – அது காந்தியைப் பற்றியது.
‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் போது, காந்தியுடன், கஸ்தூரிபாயும் கைது செய்யப்பட்டு, பூனாவிலுள்ள ஆகா கான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர். அங்கு, சுவாசக் கோளாறால், அவதிப்பட்டு மரணம் கொள்ளும் தறுவாயில் கஸ்தூரிபாய் ! –
தாயைக் காண காந்தியின் மூத்தமகன் ஹரி, ‘ஆகா கான் மாளிகை’க்கு வருகிறார்.
ஹரி அங்கு வருகிற போது, காந்தி – கஸ்தூரிபாய் – ஹரி ஆகிய மூவருக்குமான உரையாடலை அசோகமித்திரன் ஓர் காட்சியாக மிக வலுவாக எழுதியுள்ளார்.
அசோகமித்திரன் இத்தனை கடுமையான மொழிப் பிரயோகத்தை பயன்படுத்தி எந்தவோர் ஆக்கத்தையும் இதற்கு முன் எழுதி – நான் வாசித்ததில்லை.
காந்தியின் அடுத்த மகனான தேவ்தாஸும் அம்மாவை காண வருகிறார். அந்த மகனிடமும் காந்தி நிகழ்த்தும் தர்க்கமும் சகஜமானதல்ல!
தாயைக் காண – ஹரி வந்திருந்த போதான நிகழ்வு – குறிப்பிடத் தகுந்த கடுமை கொண்டதாக இருந்திருக்கிறது. நிஜ சம்பவமும் கூட , இத்தனைக்கு கடுமையானதாக இருதிருக்கும் என்றும் யூகிக்கிறேன்.
இந்த ஓரங்க நாடகம்தான் அசோகமித்திரன் எழுதிய கடைசி ஆக்கம். சின்னச் சின்ன வாக்கிய அசைவுகளிலும் – நிறைய அர்த்த பாவங்கள்!! இதனை ஜீவனோடு வாசிக்கத் தந்தமைக்கு, அசோகமித்திரனுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.
தாஜ்…
‘ஆகா கான் மாளிகை’ – அசோகமித்திரன்
(ஓரு பெரிய அறை. சுவரோரமாகத் தரையில் போட்ட படுக்கையில் ஒரு முதிய பெண்மணி படுத்திருக்கிறாள். அறை ஓரத்தில் ஒரு கிழவர் உட்கார்ந்திருக்கிறார். ஓர் இளைஞன் ஒரு நிக்கல் செம்பையும் தம்ளரும் கொண்டு வருகிறான்.)
இளைஞன்:
பாபுஜி, அம்மாவுடைய கஞ்சி.
பாபுஜி:
இப்போ அம்மாவுக்கு மட்டும்தானா?
இளைஞன்:
உங்களுடையது இன்னும் தயாராகலை.
பாபுஜி:
சரி, கொடு.
(பாபுஜி, தூங்கும் கஸ்தூர்பா அருகில் உட்கார்ந்து கொள்கிறார்)
பாபுஜி:
பா… பா…. என்னாயிற்று? பா!
(தோளைத் தொடுகிறார்.)
மறுபடியும் ஜுரம் போலிருக்கே…. பா! பா!
பா:
(திடுக்கிட்டு) என்ன?…. நீங்கள் சாப்பிட்டுவிட்டீர்களா?
பாபுஜி:
இல்லை, இன்னும் தயாராகலை.
பா:
எனக்கு தலையை வலிக்கிறது. வலி தாங்க முடியவில்லை.
பாபுஜி:
நல்ல ஜுரம் அடிக்கிறதே? காலையிலே டாக்டர் வந்தாரே, அப்பவே சொல்லியிருக்கலாமே?
பா;
எல்லாம் சொல்லியாச்சு. அவர் ஆஸ்பத்திரிக்கு போகணும்றார். நான் முடியாதுன்னுட்டேன்.
பாபுஜி:
இப்போ ஏதாவது வேணுமா? எனக்கும் ஆஸ்பத்திரி விஷயம் பிடிக்கலே.
பா:
நாளைக்குப் பாத்துக்கலாம். (கஞ்சி பாத்திரத்தை வாங்கிக் கொண்டு, ஒரு நிமிஷம் கண்ணை மூடிப் பிரார்த்தனை செய்கிறாள்.)
பாபுஜி:
சூடு ஆறிடப் போறது.
பா:
சூடு ஆறறதுக்குதான் இந்த ஜுரம்.
பாபுஜி:
முடிஞ்சவரை நம்பளும் உடம்பைப் பாத்துக்கணும்.
பா:
எனக்கும் சேர்த்துத்தான் நீங்க பாத்துக்கிறீங்களே. காலையில நல்ல பனி. அந்தப் பனீலே வாக்கிங்க்!
பாபுஜி:
சரியோ தப்போ அது பழக்கமாயிடுத்து. என் வாக்கிங்கைக் காவல் பாக்கிற போலீஸ்காரங்க ஓடி ஓடி வந்தாங்க. ஒரு சமயம் சிரிப்பா இருக்கு. உடனே வருத்தமாயும் இருக்கு.
(பா, சிறிது கஞ்சியை விழுங்குகிறாள்.)
பா:
கஞ்சி கசக்கிறது.
பாபுஜி:
இங்கே எங்கேயோ உப்பு வச்சிருந்ததே? எடுத்துத் தரட்டுமா?
பா:
உங்க உப்பு உங்க கிட்டேயே இருக்கட்டும்.
பாபுஜி:
உனக்கு ஹரி ஞாபகம் வந்துடுத்து.
பா:
எனக்கு மட்டும்தான் அவன் ஞாபகமா? உங்க அகங்காரம் அவனை வரவிடாம பண்ணறது. அவன் இங்கேதான் எங்கேயோ இருக்கானாம். இதை ஒரு ஆபிஸரே சொன்னார்.
பாபுஜி:
அவர் சொன்னா சொல்லட்டும். நாமா ஒண்ணும் கேக்கக் கூடாது. இது ஜெயில்.
பா:
இருக்கட்டுமே. ஜெயில்னா அம்மா பிள்ளை உறவு போயிடுமா?
(பாபுஜி பதில் சொல்லாமல் இருக்கிறார். பா, கஞ்சி முழுதும் குடித்து முடிக்கிறாள்… தள்ளாடி எழுந்து வேறோரு அறைக்குப் போகிறாள். அவள் திரும்பி வரும்போது தள்ளாடல் சிறிது குறைந்து இருக்கிறது.)
பாபுஜி:
நீ அகங்காரம்னு சொன்னது நிஜமா இருக்கலாம். என்னுடைய கடந்த காலம், நான் பிடிவாதம் பிடிச்சது, எல்லாம் எனக்கு உள்ளூர வெட்கமாயிருக்கு. பகவான் கிட்டே சொல்லலாம். உன்கிட்டே சொல்லலாம். வேறு யார்கிட்டே அது நல்லதைவிட விபரீதத்தைதான் ஏற்படுத்தும்.
(பாபுஜி எழுந்து நிற்கிறார். இளைஞன் உணவுத் தட்டு, லோட்டாவுடன் வருகிறான்.)
இளைஞன்:
பாபுஜி, உங்க சாப்பாடு.
பாபுஜி:
மூணு ரொட்டிதானே இருக்கு?
இளைஞன்:
இன்னும் அடுப்பிலே இருக்கு. நீங்க சாப்பிட ஆரம்பிங்க. நான் சூடா கொண்டு வர்றேன்… இது ஆறிடப் போறது.
பாபுஜி:
ஹே ராம்.
(இளைஞன் தட்டையும் லோட்டாவையும் பாபுஜியிடம் கொடுத்துவிட்டு, மீண்டும் உள்ளே போய் ஒரு நிக்கல் தம்ளருடன் வருகிறான்.)
பாபுஜி:
(இளைஞன் போன பிறகு)
எப்போவோ ஆட்டு பாலுனு சொன்னேன். ஆனால் அதுலேதான் என் உயிர் இருப்பதாக நினைக்கிறார்கள்.
(பா, சட்டென திரும்புகிறாள்.)
பா:
அப்போ ஆட்டுப் பால் உங்களுக்குப் பிடிக்கலெ.
பாபுஜி:
அப்படிதான் வைச்சுக்கோயேன்.
பா:
அப்போ இன்னொரு பொய்.
பாபுஜி:
ஒத்துக் கொள்கிறேன். பகவான் சில பொறுப்புகளை எங்கிட்டே கொடுத்திருக்கிறார்.
பா:
பகவான் நேரிலே வந்து கொடுத்தாரா?
பாபுஜி:
பகவான் நேரிலே வரமாட்டார். ஆனால் அவருக்கு தெரிவிக்கத் தெரியும். இல்லைன்னா என்னோட நூத்துகணக்கான இல்லே, லட்சகணக்கானவங்க ஜெயில்லே இருப்பாங்களா? நாம இருக்கிறதும் ஜெயில்தான். நமக்கும் சரோஜினிக்கும், கட்டில் போடறேன்னாங்க. நான் தான் வேண்டாம்னுட்டேன்.
பா:
ஒங்களுக்கு வேண்டாம்னு சொன்னாப் போறாது! ஏன் எனக்கும் வேண்டாம்னீங்க? படுக்கைலேந்து எழுந்து நிக்கறதுக்கு எவ்வளவு கஷ்டப்படறேன், தெரியுமா?
பாபுஜி:
பார்த்தேன். இன்னிக்கு தான்ஸன் வருவான். அவன் கிட்டே ஒரு கட்டில் வேணும்னு சொல்லறேன்.
பா:
கொசுக்கு என்ன பண்ணப் போறீங்க?
பாபுஜி:
கொசுவலையும் கட்டித்தரச் சொல்றேன். இப்போ முடிஞ்சாக் கொஞ்சம் தூங்கு.
(பா – படுத்து கண்ணை மூடிக்கொள்ள, பாபுஜி உணவு அருந்துகிறார். மேடை மூலையில் பரிதாபகரமான தோற்றதுடன் ஒருவன் தோன்றுகிறான். அது ஹரிலால்.)
ஹரிலால்:
அம்மா, அம்மா, நீ செத்துப் போயிடாதேம்மா…!
(ஹரிலால் மறைந்து விடுகிறான். சிறிது நேர இடைவெளி – டாக்டர் பா – வைப் பரிசோதிக்கிறார்.)
டாக்டர்:
இரண்டு மார்பிலும் சளி அடைந்து கிடக்ககிறது. ஆபரேஷன் தியேட்டர்லே டூயூப் விட்டு எடுக்க முயற்சி செய்யலாம். அதுக் கூட முடியுமான்னு நிச்சயமா சொல்ல முடியாது. நாடி மிகவும் பலஹீனமா இருக்கு. எப்படியும் இவங்களை ஹாஸ்பிடல் கொண்டு போகணும். இந்த விஷயங்களிலே ஏதோ நினைச்சுண்டு பிடிவாதம் பிடிக்கக் கூடாது.
பாபுஜி:
பா….! பா…!
பா:
(மிகுந்த சிரமத்துடன்) என்ன?
பாபுஜி:
டாக்டர் சொன்னது புரிஞ்சுதா?
(பா பதில் சொல்வதில்லை.)
பாபுஜி:
டாக்டர், என்ன மருந்தும் இங்கேயே கொடுத்துடுங்க. அவங்க விருப்பத்துக்கு மாறா ஹாஸ்பிடல் வேண்டாம்.
டாக்டர்:
இங்கே அதிகம் போனா ஆக்ஸிஜன் மாஸ்க் வைக்கலாம். ஆனா, அவுங்க மூச்சு விடறதுக்கு இடமே இல்லாம இரண்டு மார்பிலும் ஃப்ளூட் அல்லது ஃபிளம் இருக்கு. சுவாசப்பை ரொம்ப சுருங்கிப் போயிடுத்து. இப்போ அவங்க ரொம்பக் கஷ்டப் பட்டுண்டுதான் பாத்ரூம் போறாங்க. அங்கே படுக்கையை விட்டு நகராமே எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணலாம்.
பாபுஜி:
எல்லாம் சரி, டாக்டர். ஆனா அவுங்க இங்கே என்னை விட்டுட்டு வருவாங்கன்னு தோணலை.
டாக்டர்:
அவுங்க உயிருக்கு ஆபத்து.
பாபுஜி:
நீங்களே கேட்டுப் பாருங்க.
டாக்டர்:
(கஸ்தூர்பாவிடம்) அம்மா, அவர் சரீங்கறார். ஆஸ்பிடல் போகலாமா?
பா:
பாபுஜியும் வருவாரா?
டாக்டர்:
இல்லேம்மா, அவர் கைதியில்லே? எதுக்கும் கமிஷனர் தாம்ஸனைக் கேக்கலாம். பாபுஜி உங்களுக்கு பிராப்ள்ம் ஏதாவது இருக்கா? பிபி எடுத்துடறேன்.
(மேடை இருளில் மூழ்கிறது)
ஒரு குரல்:
அம்மா…! அம்மா….!
பா – குரல்:
வந்துட்டயா, ஹரி! என் கண்ணே! ஏண்டா மூஞ்சியெல்லாம் என்னமோ மாதிரி இருக்கு?
பாபுஜியின் குரல்:
சாராயம். சாராயமே குடிச்சுண்டு இருந்தா மூச்சி இப்படித்தான் இருக்கும்.
ஹரியின் குரல்:
வாயை மூடுடா! நீ மஹாத்மாவா? என் அம்மா மஹாத்மா… வாயைத் திறக்காதே! கப்சிப்!
பாவின் குரல்:
அப்பாவோட சண்டை போடாதேடா, கண்ணா. மத்தப் பிள்ளைங்க அப்பாவோட சண்டைக்கு வராங்களா? கிட்ட வாடா, கண்ணா ஹரி. என்னாலே சரியா திரும்ப முடியலே. எழுந்திருக்க முடியலே.
ஹரியின் குரல்:
அம்மா, அப்படியே இரும்மா. நான் வறேன். உன்னை இந்த மாதிரி நோயாளியாக்கிட்டானே! இந்த மஹாத்மா! பெரிய மஹாத்மா!
(மேடையில் மீண்டும் வெளிச்சம். அழுக்கு உடையணிந்து கொண்டு, பா அருகில் ஹரி அழுது கொண்டு இருக்கிறான்.)
பா:
அழாதேடா, கண்ணா. எனக்கு கொள்ளி போடுவையா? நீ எங்கேன்னு மட்டும் அப்பாவுக்கு அப்பப்போ சொல்லிடுடா.
ஹரி:
என்னை போட விட மாட்டாம்மா. நான் முஸல்மான் ஆனவன் இல்லையா? அதோ அங்கே இருக்கானே, பெரிய மஹாத்மா. அவன் உனக்கும் போடுவான், எனக்கும் போடுவான். நாம எல்லோருக்கும் போடுவான்.
(ஹரி அழுது கொண்டே வெளியேறுகிறான். மீண்டும் இருள்.)
பாபுஜி குரல்:
நான் எவ்வளவு பாபம் செஞ்சிருக்கேன். எத்தனை ஆயிரக் கணக்கானவங்க என் பேச்சைக் கேட்டு உயிரை விட்டிருக்காங்க. மனைவி, குழந்தை, குடும்பம், தொழில், வருமானம் எல்லாத்தையும் துறந்திருக்காங்க. நான், இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறேன். யார்கிட்டே சொல்லப்போறேன்? பகவானே என்னை மன்னிப்பானா?
ஹரி குரல்:
மாட்டான். ஒரு போதும் மாட்டான்.
(மேடையில் வெளிச்சம்.)
பாபுஜி:
ஹரி, என்னை ஏன் சித்திரவதை செய்கிறாய்? நீ சீமைக்குப் போய் ஒரு வெள்ளைக்காரனாத் திரும்ப வேண்டாம்னு இன்னிக்கும் சொல்றேன்.
ஹரி:
உனக்கு ஒரு நியாயம், மத்தவங்களுக்கு ஒரு நியாயம். ஒரு டிகிரி கூட வாங்காம நீ கடல் தாண்டிப் போகலாம், எல்லா தகுதிகளும் உள்ள நான் போகக் கூடாது. உன் கூட இருக்கிற சகாக்கள் கூட்டாளிகளெல்லாம் சீமைக்குப் போனவங்கதானே?
பாபுஜி:
நீ ஒருவனாவது முழு இந்தியனா இருக்கணும்னு ஆசைப்பட்டேன். எனக்கு இன்னும் தெரியலைடா, இன்னொருவன் வாழ்க்கையை நான் தீர்மானிக்கக் கூடுமா, கூடாதான்னு. ஹரி நான் உள்ளுக்குள்ளே நிறைய சித்திரவதைப் படுகிறேன். இப்பொ பார், அம்மாவுக்கு வெள்ளைக்கார வைத்தியம். அது அம்மாவுக்கும் பிடிக்கலை, எனக்கும் பிடிக்கலை.
ஹரி:
நீ எக்கேடு கெட்டுப் போ. நீ எனக்கு அப்பன் இல்லே. நான் உனக்குப் பிள்ளை இல்லே.
(ஹரி போய் விடுகிறான்.)
பாபுஜி:
ஹரி, நீ மஹாப் பாபங்கள் செஞ்சிருக்கே. நான் மன்னிக்கணும்னு இல்லே. பகவான் மன்னிக்கட்டும்.
(பாபுஜி, ஒரு மூலையில் அடுக்கி வைத்திருந்த கடிதங்களை எடுத்து படிக்க ஆரம்பிக்கிறார்.)
பாபுஜி:
பா, இன்னிக்கு தேவ்தாஸ் வரப் போறான்.
(பா, கண்ணை மூடிப் படுத்தபடி இருக்கிறாள். பாபுஜி அவள் அருகில் சென்று நெற்றியைத் தொட்டுப் பார்க்கிறார்.)
பாபுஜி:
ஐயோ, நெருப்பா கொதிக்கறதே!
(ஒரு கணம் கலங்கி நிற்கிறார். அறை ஓரத்தில் இருந்த பெட்டி ராட்டையை எடுத்து நூல் நூற்கத் தொடங்குகிறார். தேவ்தாஸ் வருகிறார்.)
தேவ்தாஸ்:
அப்பா…!
பாபுஜி:
தேவ்தாஸ், வந்துட்டயா? எப்போ வந்தே? நான் ரொம்பக் கலங்கி இருக்கேண்டா.
தேவ்தாஸ்:
அப்பா, அம்மாவுக்கு ஒரு புது மருந்து கொண்டு வந்திருக்கேன். இது எந்தப் பிராணியையும் கொன்னு செஞ்சதில்லே. இது கொடுத்தா அம்மா நியூமோனியா போய்யிடும்.
பாபுஜி:
என்ன மருந்து?
தேவ்தாஸ்:
இப்போதைக்கு இதைப் பெனிசிலின்னு பெயர் வைச்சிருக்கா. எந்த விஷக் காச்சலும் போயிடும். இந்த மருந்து குடும்பத்துக்கு ஆண்டிபயாடிக்ஸ்னு பேர் வச்சிருக்காங்க.
பாபுஜி:
ஆண்டிபயாடிக்ஸ்னா உயிரினத்துக்கு எதிரின்னு அர்த்தம்.
தேவ்தாஸ்:
இல்லை பாபுஜி, இது விஷகிருமிக்கு எதிரி.
பாபுஜி:
ஊஹும் வேண்டாம். இந்த புது மருந்து அம்மாவுக்கு வேண்டாம்.
தேவ்தாஸ்:
அம்மா சரியாக வேண்டாமா? அம்மா பொழைக்க வேண்டாமா? இது என்ன பிடிவாதம்பா? அம்மா நிமோனியா இதுலே போயிடும்.
பாபுஜி:
வேண்டாம். இந்தப் புது மருந்து வேண்டாம்.
தேவ்தாஸ்:
அப்பா, நீங்க என்னையும் அண்ணா மாதிரி ஆக்கப் பாக்கறீங்க.
பாபுஜி:
என் கஸ்தூரியே போயிடப் போறா. நீ தாராளமா என்ன வேண்டுமானாலும் ஆகலாம். இந்தப் புது மருந்து வேண்டாம்.
(தேவ்தாஸ் மிகுந்த வெறுப்புடன் பாபுஜியைப் பார்க்கிறான். அம்மாவிடம் போகிறான்.)
தேவ்தாஸ்:
அம்மா! அம்மா! இதோ உன் தேவ்தாஸ் வந்திருக்கேன்மா. அம்மா! அம்மா!
(அம்மாவைக் குலுக்குகிறான். பா-வின் கையை தூக்கிக் கீழே விடுகிறான். உயிரற்ற கை அப்படியே விழுகிறது.)
**
குறிப்பு:
காந்தி சிறை வைக்கப்பட்ட அறையில், மேஜை – நாற்காலி – கட்டில் எதுவும் கிடையாது.
*

நன்றி : அழகியசிங்கர் (நவீன விருட்சம்) , தாஜ்
தொடர்புடைய சில சுட்டிகள் :
‘புதிய தமிழ்ச் சிறுகதைகள்’ அசோகமித்திரனின் முன்னுரை
கொடுத்த கடன் – அசோகமித்திரன்
மீரா தான்சேன் சந்திப்பு – அசோகமித்திரன்