முதல் ராவுத்தர், ‘ராவுத்தன்’ என்று தன்னைச் சொல்வதில் பெருமை கொண்ட கூத்தாநல்லூர் ஹாஜாஅலி. இரண்டாமவர் , அப்படிச் சொன்னாலே கடுப்பாகும் சீர்காழி தாஜ். பதியும் நாகூர்க்காரனான நான் யாரென்று தெரியவில்லை. வாப்பா – ராவுத்தர் , உம்மா வகை – மரைக்காயர் என்பதால் ராவுக்காயனாக இருக்கலாம். அதுபோகட்டும், ராவுத்தர்களைப் பற்றிய அரிய செய்திகள் தெரிந்துகொள்ள சகோதரர் சடையன் அமானுல்லாவின் (சாபு) ‘மரத்தடி’ கட்டுரையை முதலில் வாசியுங்கள். பிறகு ‘ராவுத்தன்’ ஹாஜா அலியின் கோபத்தை கீழே பார்க்கலாம். ‘என்ன நானா… வேலைவெட்டி இல்லை போலக்கிது… அதான் எதாச்சும் ‘நெட்’டுல அப்பப்ப போட்டுக்கிட்டிக்கிறீங்க…’ என்று சவுதி தம்பிகள் என்னை வெடைக்கும்போது ‘பொருளற்ற’ கோபம் எனக்கும் வருகிறது. ஆமாம் ஹாஜா, கோபத்தின் பொருள்தான் என்ன?
***
ஹாஜா அலி: நினைவுகளும் பதிவுகளும்
தாஜ்
அன்புடன்
ஆபிதீன்…..
வெள்ளைத் தாளில்
எழுதி மறந்த
வெள்ளைக் கவிதை
குப்பை கிளரும் தருணம்
வெற்றுத் தாளாய்
கீழே வார்த்தைகள் சிதற
கறுத்துக் கிடந்தது!
சூழ வலம்வருவோர்
வளர எடுத்தடுக்கி
மக்கி மங்கித் தெரியும்
ஆதாரத்தைக் கண்டு தெளியாது
வலிய ஆளாளுக்கு
அர்த்தம் களிக்கும் நாழியில்
முனைகள் இடர விளித்தார்கள்.
பெருவெளி மரங்கள்
இடம் தப்பாது வளர்ந்தோங்க
காண வியந்தவனாய்
காலமாகிவிட்டது என்றேன்!
[‘துரத்தும் இறந்த காலம்’ – தாஜ்]
*
இருபத்தியாறு ஆண்டுகளுக்குப் பிறகு
இன்றைக்கு….
ஹாஜா அலியின் எழுத்துக்களை
மீள் வாசிப்பு செய்கிற போது – அவர்
இன்னும் வாழ்ந்திருக்கலாமென்றும்
கூடுதலாய் இன்னும் கொஞ்சம்
எழுதியிருக்கலாமென்றும்….
கசிய சுரக்கிறது ஆதங்கம்!
அவரது கடைசி காலக்கட்டம் சிக்கலானது!
அதில் இரண்டு கருத்திருக்க முடியாது.
அந்தச் சிக்கல்…
அவரே தேடிக் கொண்டது!
எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும்
அது அப்படித்தான்!
தேடிக் கொண்டதேதான்.
என் அனுமானமும் அதுதான்!
அனுபவச் செருக்கு திரளும் போது
முளையின் அமர்வை
இடம் தப்பாமல்
பார்த்துக் கொள்வதென்பது
மனிதர்களால் பெரும்பாலும்…
முடியாமல்தான் போகிறது.
கற்றவர்களும்
நடை முறுக்கி பின்னிக் கொள்ள
குப்புறவே வீழ்கிறார்கள்!
குறிப்பாக
கலை சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம்
இப்படியாகத்தான் வீழ்கிறார்கள்!
*
வாழ்க்கை = பேய்த்தனம்!
அதன் அட்டகாசம் சொல்லி மாளாது.
இந்தப் பேயிடம் அறைபடாத
மனிதனே கிடையாது!
மனிதர்களை அதீத
அர்த்தம் கொண்டவராக்கி
யதார்த்தத்தில்
அர்த்தமற்றவர்களாக்கி
சபித்துக் கைக் கொட்டும்.
ஹாஜா அலி
இந்தக் கைகொட்டலில்
மிரண்டிருக்கலாம்!
பருவத்தில்
ஒருவன் காணும்
கனவுகளுக்கு பஞ்சமில்லை!
வானம்/ சூரியன்/ சந்திரன் தாண்டி
நட்சத்திரங்கள் கூட
அவனின் கைக்கெட்டும் தூரம்தான்!!
நடைகள்…
கடக்கும் பாதைகள்…
மேலே ஏறப் போகும்
மலை முகடுகள்/ சிகரங்கள்
தாண்டப் போகும் கடல்கள் குறித்தெல்லாம்
கூட்டிப் பெருக்கி வகுத்து…
எண்ணங்கள் ரொம்பவே வாழ்கிறான்.
காலத்தில்…
நில்லாது சுழலும் உலகம்
அவனை கலைத்துப் போட்டுவிடுகிறது.
கனவுகள் அத்தனையும்
அவன் கண் எதிரேயே வீழ்ந்து
தூள் தூள்!
தருணம் பார்க்க அவனது சுய சக்திகள்
வெப்பக் காற்றாய்
வெளிப்படவும்….
இன்னொரு சராசரி என்ற நிலை!
அவனை அது வெட்கப்படுத்தும்.
அது குறித்தெல்லாம் சொல்லி
ஆறுதலும் கொள்ளவும் முடியாது.
சொன்னாலும் சபையேறாது.
அவன் ரணம் கொள்ளலாம்.
அது நடக்கும்.
விதிவிலக்காய்…
மரங்களை ஒத்த எத்தனையோ பேர்கள்
வளையாது நிற்கக் காண்பதும் வியப்புதான்!
மேலே நான் பதிந்திருக்கிற
என் கவிதை மாதிரி!
ஹாஜா அலி
துரத்தப்பட்டதில் கூட
ரணம் கொண்டிருக்கலாம்.
மறுப்பதற்கு இல்லை.
அவரது சாவு..
இத்தனைச் சுளுவில் என்பதற்கு
வேறு என்னதான்
காரணங்களாக இருக்க முடியும்?
*
ஆபிதீன்…
சென்ற பதிவில் பதியப்பட்ட
‘பயல்கள்’ குறித்து…
ஹாஜா அலியின்
தேர்வில்/ பார்வையில்
பதியப்பட்ட அந்தக் கட்டுரைக்கு
அவர் உரிமை கொள்ளவில்லைதான்.
‘யாரோ’ என்றே குறிப்பிட்டிருந்தார்!
போறபோக்கில் நான்
அவரது நழுவல்களில்…
இதுவும் ஒன்றாக இருக்குமென
கருதிவிட்டேன்.
அவரது எழுத்தின்
சாயலும்/ லாவகமும்
கொஞ்சம் அறிந்தவன்.
அந்த எழுத்தும்
அப்படியோர் மயக்கம் தர
கொஞ்சம் மயங்கிவிட்டேன்.
அவரது கூச்சங்களும்
கணக்கில் கூடிக்கொள்ள
அவரே அதை எழுதியிக்கக் கூடுமென
நிறுவி விட்டேன்.
அவருடன்…
ஆண்டுகள் பழகிய
நட்பும்
அப்படியோர் முடிவுக்கு வித்திட்டுவிட்டது.
என் அனுமானம் வீழட்டும்.
‘பயல்கள்’ வழியேயான புகழ்
உரியோனுக்கே சேரட்டும்.
அதுவே மகிழ்ச்சி.
*
ரௌத்திரம் பழகச் சொன்ன
பாரதி நூற்றாண்டின்
புகழ்பாடிய
தமிழ்ப்பூக்கள் சிறப்பிதழ் – 1ல்
‘கோபமே நின் பொருள் என்ன?’ என்று
கட்டுரைக்குள் கேள்வி எழுப்பி இருந்தார்….
ஹாஜா அலி என்கிற
ராவுத்தன் ஹாஜா அலி!
காலம்: ஜனவரி – 1982
தமிழ்ப் பூக்கள்-5
பதிப்பு: சௌதி அரேபியா – ரஸ்தனூரா.
கோபமே நின் பொருள் என்ன? என்கிற
இந்தக் கட்டுரையின் வடிவம்…
‘பயல்கள்’ குறித்த சர்ச்சையை
மீண்டும் எழுப்புவதாக இருக்கிறது.
இதன்….
வார்த்தைகளும்
வாக்கியங்களும்
பயல்களின் மினுக்கிற்கு
கொஞ்சமும் குறைந்ததல்ல.
ஆபிதீன்…
நீங்கள் கணித்த மாதிரி
பயல்கள்….
ஹாஜா அலியினுடையதாக
இல்லாதிருக்கலாம்!
ஆனால்…
அத்தகையதோர் எழுத்து
அவரின் அருகாமையில்
இருந்ததென்பது நிஜம்!
எல்லா நிஜங்களையும்
எதிர் கொள்வதை விட்டும்
பாவி மனிதன்…
தப்பித்து விட்டாரே!
*
கோபமே நின் பொருள் என்ன?
– ராவுத்தன் ஹாஜா அலி
என்னைச் சாடவேண்டாம். ப்ளீஸ்….
என் கோபத்தைச்சாடு – ஏனெனில்
நீ நிற்கவும் நான் இருக்கவும் விடா
இக் கோபத்தின் முன்
நாம் க்ஷணநேரப் பம்பரங்கள்.
ஒரு கோபத்தில்
கண் சிவக்கிறது
முகம் வெளுக்கிறது.
பிற நிகழ்ச்சிகள் யாவும் கறுக்கின்றன.
கோபம்தானே…
முட்டாளின் தூக்கு
புத்திமான் கவசம்.
ஆடிக் குதிக்கும்
ஓர் அவசரக்காரன் வாயினின்றும்
அது வார்த்தை வீழ்ச்சி.
மூடனின் கோபம் மூக்கில்
முனிவன் கோபம் சாபம்.
முதிர்ந்த வயதுக்கு…
முன் நிற்கும் அது!
ஒரு கோபத்தின் முன்னிலையில்
விளக்கங்கள் எல்லாமே மௌனம்.
விபரங்கள் அனைத்துமே ஊமை.
ஒவ்வோர் இதயத்துள்ளும்
கோபமே தூங்கும் புலி.
அதை இடறியவன் பாடே இடர்ப்பாடு.
சம்ஸாரம் துறந்த சன்யாசியும்
சங்கடம் பார்க்காமல்
கோபத்தை மட்டுமே
உடன் எடுத்துச் செல்கிறான்.
ஒரு கோபத்தில்தான்…
சூரியனும் உச்சிக்குப் போகிறான்.
அலைகளும் ஆள் உயரம் எழுகின்றன.
ஒரு கோபம் கண்டதும்
குழந்தைகள்கூட கப்சிப்.
வானத்தின் கோபமே இடி மின்னல்.
வருணனின் கோபமே புயல்.
வாயுவின் கோபம் சூறாவளி!
பருவம் கூட வருடத்தின் ஒருதரம்
மரத்தின் இலை உதிர்த்து
தன் கோபம் காட்டுகிறது.
பணமும் தன் கோபத்தாலேயே
பாதாளம் வரையிலும் பாய்கிறது.
பதிவிரதா கோபம்…
மதுரையை மட்டும் எரிக்குமெனில்
பசியின் கோபம் பத்தும் செய்யும்!
சில மலைகளும்..
மில்லியன் ஆண்டு கோபங்களையே
நெருப்பாகக் கக்குகின்றன.
சில மலர்களும் கோபத்தினாலேயே
வாசமற்று சிரிக்கின்றன!
மனிதர்களுள் கோபப்படாதவர்கள்
ஒன்று செத்துப்போய்விட்டார்கள்
அல்லது…
உயிரோடு பைத்தியமாய் அலைகிறார்கள்.
அன்றியும்…
உனக்கு கோபமே வராதெனில்
நீ வாழ்ந்து பார்க்கவில்லை.
ஒரு கூட்டைப் பிரித்தால்
குருவியும் கோபப்படும்.
வீட்டுப் பூனையும் விரட்டிப் பிடிக்கையில்
கோபத்துடன் திரும்பிப் பாயும்.
விதி மீது பழியிடாத..
அனைவரும் கோபக்காரர்களே
சிவன் கோபப்படவே
நெற்றிக்கண் வைத்துக் கொண்டான்.
கோபத்தின்போதுதான்
பரந்தாமன்
கௌரவர்கள் முன்
வானுக்கும் பூமிக்குமாக
எழுந்து நிற்க முடிந்தது.
ராகவன் ஒரு கோபத்தோடுதான்
ராவணனை மாய்க்க முடிந்தது.
ஒரு கோபத்தை வைத்தே
மைதி’லீ’ தீ புகத் துணிந்தாள்
நேச நாடுகள் கோபப்பட்ட பிறகே
ஹிட்லரும் தூங்கப் போனான்.
ஆரம்பத் தொழிலாளியின்
கோபம் வளர்ந்தே
‘மே’ தினம் கிடைத்தது.
ஒவ்வொரு காலனியும்
கோபத்திற்குப் பிறகே
சுதந்திரம் வாங்கிக் கொண்டன.
கோபத்தில் அழகு இருக்கிறது.
அது தாம்பத்யம் புரியும் ஊடல்.
கோபத்தில் வீரியம் இருக்கிறது.
அது காந்தி செய்த சத்யாகிரஹம்.
கோபம் நன்றாய் வேர்விட்ட பிறகே
புரட்சிப் பூக்கள் பூக்கின்றன.
கவிதைகள்கூட
கோபத்தின் நிறம் காட்டும்.
அல்லது….
கோபத்தின் வாசனை வீசும்.
முதல் கோபம்…
இறைவனிடமிருந்தே வந்தது.
தப்பாய் கனி தின்ற பெரியப்பனை
ஸ்வர்க்கத்தை விட்டும் நிர்வாணமாக்கியது.
பூமியில் பார்க்கத் தூக்கி வீசியது – நாளை…
நீ, நான்,
நத்தை, வண்ணத்துப் பூச்சி
அவள், அது,
கடல், கட்டிடம்,
மொழி, நினைவு,
உணர்ச்சி, உயிர்,
இன்னும் பெயரிடாத நட்சத்திரங்களும்
முடியப் போகிற நாடகமாய்
இறுதிக் கோபமும்
இறைவனிடமிருந்தே வரும்!
எப்படி எனில்…
கோபங்கள் புராணத்தில் நிகழ்ந்தன
பின் சரித்திரத்தில் படைத்தன
இன்றும் யதார்த்தத்தில் இருப்பன
மேலும் நவீனமாய் நுழைவன.
இடையில்…
நிஜக் கோபங்களாய் தீவிரவாதிகள் பரவ
காதலின் கண்களில் மட்டும்
பொய்க் கோபம் வாழும்.
ஆனால்….
எனக்கும் உனக்குமோ
ஓர் ஆழ அகலமும்
கன பரிமாணமுமற்ற
தானே அழியும் மழைக் காளான்களென
வெறுமனே உதவா
வீண் கோபங்களும்…
முன் கோபங்களும்…
ஏன் இப்படி….?
எதற்கு இப்படி….?
என்னைச் சாட வேண்டாம். பிளீஸ்….
என் கோபத்தைச் சாடு – ஏனெனில்
நீ நிற்கவும் நான் இருக்கவும் விடா
இக் கோபத்தின் முன்
நாம் க்ஷணநேரப் பம்பரங்கள்…
நம் கோபத்தில்
கண் சிவக்கிறது.
முகம் வெளுக்கிறது…. புற
நிகழ்ச்சிகள் யாவும்
கறுக்கின்றன.
*** ***
நன்றி : தாஜ் ( தமிழ்ப்பூக்கள்)
E- Mail : satajdeen@gmail.com