‘நாங்கள்’, உங்கள் பார்வையில்! – தாஜ்

‘மௌனி’, ‘மல்லாக்கொட்டை’ என்று தட்டச்சு செய்து அனுப்பிவைத்த கவிஞர் தாஜை கடுப்படித்தது நல்லதாகப் போயிற்று.  ஒரு முத்து கிடைத்தது. வேறென்ன, அவசியமான கட்டுரைகள்தான், இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அவைகள் ஏற்கனவே இணையத்தில் இருக்கின்றனவே… வேர்க்கடலை இங்கே இருக்கிறது. செம்மங்குடி மௌனி 10 வருடம் முன்பே செம்மையாக திண்ணையில் உட்கார்ந்துவிட்டார். இப்படித்தான் நண்பர் உமா வரதராஜனின் அற்புதமான சிறுகதையான ‘அரசனின் வருகை’யைப் பதியலாம் என்று நினைத்தேன். அவரிடம் அனுமதியும் வாங்கினேன். ஆனால் அவருக்கென்று தனியாக தளம் இருப்பது அப்புறம்தான் தெரிகிறது. அதே கதை நண்பர் ‘அழியாச்சுடர்கள்‘ ராமின் வலைப்பதிவிலும் இருக்கிறது. திருப்பித்திருப்பி பதிவிட்டு என்னங்க பிரயோசனம்? ‘யோவ்.. அவசியமான செய்திய்யா… நம்ம பையங்க தெரிஞ்சிக்கனும்’ என்று தாஜ் சொன்னதை நான் காதில் போட்டுக்கொள்ளவேயில்லை. நண்பர் சாதிக் மூலமும் தூதுவிட்டார் ஆள். மசியவில்லை. ரொம்ப கோபமாகிப்போய் , உடனே ‘நாங்கள்’ அனுப்பிவிட்டார்! ஆ, இதுதான் வேணும் தலைவரே!

தாஜின் ‘மேடும் பள்ளமும்’ சிறுகதையைப் படித்துவிட்டு அப்துல் ரஹீம் என்ற சகோதரர் , ‘Dear Sir, I READ YOUR STORY IN ABDHEEN.COM. ITS VERY INTERESTING. TODAY`S MUSLIM POSITION IS THE SAME WHAT IN 1987. THEY WERE SEPERATED THEIR FAMILY, RELATION AND FREINDSHIP. THEY EARN MONEY, BUT THEY SPEND MORE PRICE FOR THAT. BIG ONE IS THEIR YOUNGER AGE. THE STORY MEDU PALLAM IS VERY NICE. YOUR EDHARTHA NADAI IS VERY NICE. ‘ என்று அழகான தமிழில் பாராட்டியிருந்தார். ‘நாங்கள்’ படித்தால் அவர் மட்டுமல்ல நீங்களும் தாஜின் வலியை உணரலாம் என்று நம்புகிறேன். வசதியான இடங்களில் உட்கார்ந்துகொண்டு ‘வாழும்’ தத்துவங்களைப் பொழியும் நண்பர்கள் அவசியம் தாஜை படிக்கவேண்டும். அப்போதுதான் அடிக்கடி நான் கோபிக்கலாம்!

நன்றி கவிதாசா!

ஆபிதீன்

***

தாஜின் குறிப்புகள்:

மார்ச்-1983, ‘தமிழ்ப்பூக்கள்’ இதழில் வெளிவந்த கதை இது.

‘அல்ஹோட்டி எஸ்டாபிளிஸ்மெண்ட்’ (அல்கோபர்-சௌதி அரேபியா) என்கிற ‘க்ளீனிங் மெயின்டனன்ஸ்’ கம்பெனியில் நான் முதன் முதலில் வேலைக்குச் சென்றபோது, வேலை தெஹ்ரானில் [Dhahran (Arabic الظهران aẓ-Ẓahrān) ] உள்ள ‘ARAMCO‘ (Arbian-American Oil Company) ஹெட்-ஆபீஸில்! பணியெடுப்பவர்களைக் கண்காணிக்கும் கங்காணி வேலை. சூப்பர்வைஸர் என்றும் சொல்லிக்கொள்ளலாம்! எங்களது கம்பெனியின் அறுபது வேலையாட்கள் பணிபுரிந்த அந்த இடத்தில் இரண்டு சூப்பர்வைசர்கள். அதில் ஒன்று நான்.

அல்கோபருக்கும்-தெஹ்ரானுக்கும் இடைப்பட்ட இடத்தில் உள்ள துக்பாவில் எங்களுக்கான தங்குமிடம் இருந்தது. மூன்று தளம் கொண்ட பெரிய வீடு அது. ஏகப்பட்ட ரூம்கள்! என்னையும் சேர்க்க தமிழ் பேசிய ஏழுபேர்களோடு, அரைகுறை தமிழ் பேசிய ஒரு ‘கோவா’னியுமாக எட்டு பேர்கள். முதல் தள ரூம் ஒன்றில் தங்கி இருந்தோம். அந்த எட்டு பேர்களும் தனித்தனி குணாதிசயம் மிக்கவர்கள். அவர்களது அந்த வித்தியாசப்போக்கு எனக்குப் பிடித்திருந்தது. மறக்க முடியாத நண்பர்கள் அவர்கள்.  

அடுத்த வருடம் எனக்கு பிரமோசன் கொடுத்து, ‘ரஸ்தனூரா’ என்கிற இடத்திற்கு அனுப்பினார்கள்.

தெஹ்ரானில் இருந்து அறுபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அந்த ஊர்! சௌதியின் மிகப் பெரிய பெட்ரோல் ஃபீல்ட் அங்கேதான் உள்ளது. ‘ஷியா முஸ்லிம்கள்’ அதிகத்திற்கு அதிகமாக வாழும் பிரதேச எல்லைக்குள் அந்த ஊர் இருப்பது குறிப்பிடத் தகுந்தது. சௌதியின் மொத்த ஜனத் தொகையில் ‘சுன்னி முஸ்லிம்’களே அதிகம். அரசும் அவர்கள் சார்ந்த அரசுதான். ஆனால் பாருங்கள் , அவர்களது இறைவன் அந்நாட்டின் பெட்ரோல் செல்வத்தை, ஷியா முஸ்லிம்களுக்குட்பட்ட பிரதேசக் கடலில் என்று ஆசீர்வதித்து இருக்கிறான்!

ரஸ்தனூரா என்கிற டவுன், அரசால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட டவுன். ஜித்தாவிலிருந்து சுன்னி முஸ்லிம்களைக் கொண்டுவந்து இங்கே குடியமர்த்தி, வேலையும் தந்திருக்கிறது அரசு! அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த ஷியாக்களுக்கு அஞ்சிய அரசு, பெட்ரோல் ஃபீல்டுக்கான பாதுகாப்பு பொருட்டு புதிய நகர நிர்மாணத்தையும் சுன்னி முஸ்லிம்களைக் கொண்டு குடியமர்த்தலையும் செய்திருக்கிறது. இதனூடே இன்னும் சொல்ல ஏக செய்திகள் உண்டு. என்றாலும், வேண்டாம். அது சௌதியின் அரசியல் சார்ந்த சங்கதிகளாக நீளும்!

ஷியாக்களின் கேந்திர நாடான இரானை அழிக்க சௌதி அரசு அமெரிக்காவுடன் சமீபகாலமாகப் பேசிக்கொண்டு இருக்கும் அந்த ரகசித் தகவல்களை ‘விக்கிலீக்ஸ்‘ இணைய தளம் சமீபத்தில் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதை, என் குறிப்புகளோடு பிணைத்தால்… உங்களுக்கு பல அனுமானங்கள் கிட்டும்.

ARAMCO- நிர்வாகத்திற்கு உட்பட்ட ஒரு ‘பாலிடெக்னிக்’ ரஸ்தனூராவில் உள்ளது. அந்தக் கட்டிட மெயின்டனன்ஸிற்காக முப்பது வேலையாட்களோடு, தனி சூப்பர்வைஸர் என்கிற கோதாவில்தான் நான் அங்கே போனேன். ரஸ்தனூராவில் எனக்கு வேலை என்பது வெறும் அதிகார அலட்டலோடு சரி! பொழுது போக எதையாவது செய்யணுமே என நினைத்தபோதுதான் தமிழ்ப்பூக்கள் (கையெழுத்து + ஜெராக்ஸ்) செய்தேன்.

ரஸ்தனூராவில் காலம் தள்ளிய நேரத்தில், முதலில் தங்கியிருந்த இடமும், நண்பர்களும் ஞாபத்தில் கிளைத்துக் கொண்டே இருக்க, எழுதினேன்! தமிழ்ப்பூக்களில் அதைப் பிரசுரிக்கவும் செய்தேன். அதுதான் ‘நாங்கள்’

நேரடி அனுபவங்களை அப்படியே, அசல் யதார்த்தமாக பதிவில் இறக்கும்போது வாசிப்பின் சுவை குன்றிப்போகும் அபாயம் உண்டு. வலுவாக எழுதக்கூடிய சிலருக்குத்தான் அப்படி சுவை குன்றாமல் எழுத இயலும். ஆபிதீன் அதில் கெட்டி! ஆரம்பம் தொட்டே அப்படி எழுத அவர் பழகிவிட்டார்! நண்பர்களையும் அவர்களுடான சம்பவங்களையும் சொல்லியே ஆகணும் என்றான போது, இப்படியான பரிசோதனையில் நானும் இறங்கும்படி ஆனது. ஆனால், என் எதிர்பார்ப்பிற்கு மாறாக இந்த யதார்த்தக் கதை சுவைகூடியே வந்தது.

ஆவணமான இந்தக் கதையை இன்றைக்கு மறுவாசிப்பு செய்த போது இதில் இன்னும் சில சங்கதிகளை சேர்க்கலாம் என்று தோன்ற, தப்பாது சேர்த்தேன். அது மாதிரியே , தோன்றிய கழிவுகளையும் தாராளமாக நீக்கிக் கழித்தேன்.

இப்போது… ‘நாங்கள்’, உங்கள் பார்வையில்!

– தாஜ்

***

நாங்கள்

கவிதாசன் (தாஜ்)

வியாழக் கிழமை…

ஆறு நாட்களின் ஆமை ஓட்டத்திற்குப் பின்னால் வரும் ஓர் இனிமை வந்திருக்கிறது. வேலையில்லை. விடுமுறை இன்று. மெல்ல விழிக்கிறேன்.

மணி பதினொன்று. நண்பர்கள் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏ.சி. கத்துகிறது. எழுந்திருக்க மனம் வரவில்லை.

அரபிக்காரன் அடித்தொண்டையால் கட்டளையிடும் ‘ஹாமி… ஹாமி…’ வேலை நாட்களுக்குப் பின் – இதோ விடிந்து – அதோ போகப் போகிற இந்த வியாழனை அப்படியே நிறுத்திவைக்க முடியுமென்றால்…. ஆசை இனிக்கிறது.

தலையணைக்கு அடியில் கைபோகிறது. தட்டுப்படும் அட்டைக் கொப்பியை எடுத்து திறந்து ஒரு ‘டன்ஹில்’லை உறுவி, தலையுயர்த்தி சாய்ந்துகொண்டு பற்றவைத்துக் கொள்கிறேன்.

புகையிலை கருகி மணக்கிறது. ‘நிக்கோடின் மெல்லக் கொள்ளும் வஞ்சகன்.’ தெரியும். கிசுகிசுக்கும் மன பட்க்ஷியே, தெரியுமா உனக்கு? என்னமாய் மணக்கிறது அது!.

அப்படியே, அந்த நிலையில் இருந்தே, சௌதியில் இருந்து தமிழ் மண்ணுக்கு வந்துவிட்டேன்!

விமானமில்லை; டிக்கட் இல்லை ; அரபியைப் பிடித்து ரீயெண்ட்ரி விசா வாங்கவேண்டிய தொல்லை இல்லை…. இப்படி சிரமமேயில்லாமல் நினைத்த மாத்திரத்தில் ஊர் போய்வர கண்களை சற்றே மூடினால் போதும்!

இதோ, தம்பியிடம் அன்பு வழியப் பேசுகிறேன் , பெற்றோரை வணங்கி புத்தி கேட்கிறேன் , பாட்டியின் முன் ஒரு பூவாகி, உச்சி குளிர முத்தத்தை/ ஆசிகளைப் பெறுகிறேன்.  மறைந்து வெளிப்படும் மனைவியிடம் நகர்ந்து, அவள் தலை நிறைய பொதிந்திருக்கும் மல்லிகையின் வாசனையில் மயங்குகிறேன்.

அப்புறம், நெருக்கமான நண்பர்களுடன் அளவளாவல். அங்கே தெறிக்கும் ஜோக்குகளுக்கு சிரிக்கிறேன். ‘நல்ல குறத்தி… இரண்டு லைஃபாய் கூட செலவழியும்!’

அவ்வளவுதான். ஒரே ஓர் நாழிதான்! வெற்றிகரமான விஜயம்! இதோ திரும்பி விட்டேன்.

தலையணைக்கு அடியில் மீண்டும் கை போகிறது. நேற்று முந்தினம் வந்த மனையின் கடிதம்! மீண்டும் படிக்க ஆவல் கொள்கிறேன். இப்போதைக்கும் சேர்க்க இருபத்தி மூன்றாம் தடவை! மனனம் கூட ஆகிவிட்டது! என்றாலும், வார்த்தை வார்தையாக சுவைத்துப் படிக்கிறேன். சில வரிகள் நிஜமாகவே என்னவோ செய்கிறது.

‘சென்ற முறை நீங்கள் வாங்கி வைத்துவிட்டு போன ரோஜா செடி, வளர்ந்து தினைக்கும் மொட்டும் பூவும்! தாங்கவில்லை அதன் கொண்டாட்டம்! பனிச் சொட்டச் சொட்ட விடியற்காலையிலேயே இதழ் விரித்து, என்னைக்கண்டு சிரிக்கவுமல்லவா சிரிக்கிறது!’

அவள் கடிதத்திற்கு கொஞ்சம் மழுப்பி , கூடுதலாக சமாதானம் பூசி , இதமாய்ச் சிணுங்கி , இத்தினோண்டுக்கு வெகுண்டு , பின் அடங்கி எழுதி , பதிலாக இன்றைக்கே தபாலில் சேர்த்துவிட வேண்டும்.

வாழ்வை இப்படி தபாலில்  நடத்துவது மனதை உறுத்த, பற்றவைத்துப் புகைத்த சிகரெட்டின் கங்கு கையைச் சுட்டது. கவனிப்பு இல்லையெனில் சுடாதா பின்னே?!

சிகரெட்டின் அடிக்கட்டையை ஆஸ்ட்ரேயில் அணைத்துவிட்டு, மீண்டும் புகையுடன் நினைவுகளோடு கைகோர்க்க முனைந்த நாழியில், நிகோடின்…. மெல்லக் கொல்லும் வஞ்சகன்…. சரி, எப்படி இதைத் தலைமுழுகித் தொலைக்க? வருஷா வருஷம் ஜனவரி முதல் நாளில் ‘இனிக் கூடாது’ என்றுதான் சபதம் எடுக்கிறேன். பிறகு… சபதமும் அல்லவா சேர்ந்து புகைகிறது!

என் மீது அன்பு கொண்ட ஓர் ஆன்மீகவாதி, சிகரெட் புகைப்பதிலிருந்து தப்ப எனக்கோர் மார்க்கம் சொன்னார், ‘சிகரெட் பிடிக்கக் கூடாது என்கிற நிய்யத்தோடு, எப்பவும் ‘ஒது’வில் இருந்து வாருங்கள். சிகரெட் புகைக்கணும் என்கிற எண்ணமெழும் போதெல்லாம், இரண்டு ரக்காயத் சுன்னத் தொழுது வாருங்கள். அல்லாவின் உதவியால் சிகரெட் புகைப்பதிலிருந்து நீங்கள் தப்பித்துவிடலாம்’ என்றார்.

இந்த மார்க்கம் ரொம்பப் பிடித்திருந்தது. நல்ல வழியெனவும் உணர்ந்தேன். முயற்சிக்கலாம். புகைப்பதை விட்டுத் தொலைக்கவும், சொர்க்கத்தை நெருங்கவுமான இரட்டை முகாந்திரங்கள் கொண்ட இந்த வழி லாபகரமாகவே பட்டது. யோசிக்கிற போது, நான் விழித்திருக்கும் நேரமெல்லாம் தொழவேண்டியிருக்கும்! அது கூட பரவாயில்லை. நேரம் காலமில்லாமல் அப்படி விழுந்து எழுந்து கொண்டிருந்தால் சிலருக்கேனும் நான் புதிராகப் போகக்கூடும். ஏற்கனவே என்னை எல்லோரும் ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள்! இதனையும் கண்டார்கள் என்றால் தீர்மானத்திற்கே வந்து விடுவார்கள்! என்ன செய்ய?

ரூமிற்கு வெளியே ‘கசகச’வென்று மலையாளிகளின் குரல்கள். எதிர் ரூம் விழித்துவிட்டது. அவர்கள் என்றைக்குமே முன்னதாக விழித்துக் கொள்ளக் கூடியவர்கள்.

தலையைத் தூக்கி , ரூமின் இதர பெட்டுகளை பார்க்கிறேன். எல்லோருமே தூக்கத்தில்.

ஹாஜா – ஹாஜா குத்புதீன் – ஹபீப் – முகம்பது பாரி – ஹலீம் – இஸ்மத் பாட்ஷா – விக்டர் பிண்டோ. அப்புறம் நான். மேலும் கீழும் படுக்கைகள் கொண்ட நாலு கட்டில்கள், எட்டுப் படுக்கைகள். என் ரூமில் எல்லோருமே பாவங்கள்! சௌதி அரேபியாவுக்கு நாங்களும் சம்பாதிக்க வந்திருக்கின்றோம் என்கிற பாவங்கள்! தூங்கட்டும். விழித்துவிட்டால், கம்பெனியை சபிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

தமிழ் வார இதழ் ஒன்று விளம்பரித்திருந்த ‘அக்கரைச் சிறப்பிதழ்’ அறிவிப்பு மெல்ல ஞாபகத்திற்கு வருகிறது.

எழுத வேண்டும். சௌதி என்கிற கானல் நீரைத் தேடி, தாய் நாட்டில் வசிக்கும் நல்ல உத்தியோகத்தையும் இரவெல்லாம் இனிக்கும் மனைவியையும் விட்டு ,  வீட்டையும் நிலத்தையும் விற்றுவிட்டு , மிதிப்பட்ட கோலமாய் இங்கே வந்து விழுந்து சிதைந்துக் கொண்டிருக்கும் ஜீவன்களைப் பற்றி  எழுத்தில்  படுசுத்தமாய் – நெருக்கத்தில் – படம் பிடித்துக் காட்ட வேண்டும்.

முடியுமா? பார்க்கலாம். ஆசை விஸ்வரூபம் எடுக்கிறது.

இன்றே எழுத வேண்டும். விட்டால், அடுத்த வியாழன் வரை ஆசையை மூட்டை கட்டிவிடவேண்டும். 

சரி, எழுதலாம். டீ குடித்துவிட்டு சிகரெட் பாக்கெட்டுடன் உட்கார்ந்து விட வேண்டியதுதான். பெண்டாட்டிக்கு ஒரு கடிதம். அக்கரைச் சிறப்பிதழுக்கு ஒரு கதை. கதைக்கான தலைப்பு சிந்தையில் இப்பவே, ‘நாங்கள்’ என்று நர்த்தனம்!

எதிர்ப் படுக்கையின் மேல்தட்டு அசைகிறது. ஹலீம் டேப் ரிக்காடரை உயிர்ப்பித்து, நாகூர் ஹனிபாவுக்கு அனுமதி கொடுக்கிறார். மெல்லவரும் சப்தத்திலும், ‘அல்லா பாட்டு’ தெறிக்கிறது.
வியாழன் காலையில் விழித்ததும் ஹனிபாவை பாடவிடும் இனாம் சேவையை ஹலீம் மறந்தும் தவறவிடுவது கிடையாது.

சற்றைய நாழிக்கெல்லாம், ரூமின் அடக்கமான ஏ.சி.யின் குளிர் பிரதேசத்தில், பூ விழிப்பதைப் போன்று இதர படுக்கைகளில் நண்பர்கள் கண் விழித்திறக்கிறார்கள்.

“டீ போடேண்டா….” – என் அடுத்த படுக்கை, அதற்கு அடுத்த படுக்கையிடம். “இன்னைக்கி நீதான் போடேன்.” சற்றைய நாழிக்கெல்லாம் இருவரிடம் இருந்தும் வழக்கமான – திட்டல்கள்! அவர்கள் இருவரும் ஒரே ஊர்க்காரர்கள். ஒத்த வயதுக்காரர்கள். நண்பர்கள் வேறு! தினைக்கும் அப்பப்ப அவர்களிடையே இதே கூத்துதான்! அவர்கள் திட்டிக்கொள்வதால் பிறருக்குப் பிரச்சனையேதுமில்லை. ஆனால் அவர்கள் சிரித்துப் பேசிக் கொண்டால்தான் ஆபத்து! அவர்களது அந்தச் சிரிப்பில், ரூமில் உள்ள எவனோ ஒருவன் தயவு தாட்சண்யமற்ற சிக்கி கந்தலாகிக் கொண்டல்லவா இருப்பான்!

வழக்கம் போல ஹாஜா எழுந்து டீ போட புறப்பட்டார். அவர் டீ போட்டால், அவரையும் மீறிதான் டீ, டீயாக மாறவேண்டும்! இப்போதைக்கு அவர் போடப் போகிற டீ எந்த ருசியில் இருக்கும்? முதலில் டீ வரட்டும்!

இப்படித்தான் சென்ற மாதத்தில் ஒரு நாள், டீ போடுகிறேன் என்று போய், கெட்டிலை ஸ்டவ்வில் வைத்துவிட்டு ரூமிற்கு வந்து எங்கள் எல்லோருடனும் பேச ஆரம்பித்துவிட்டார் ஹாஜா! இந்தியா தனது பிரஜைகளுக்கு வழங்கியுள்ள பேச்சு சுதந்திரம் முழுமையையும் இவர் ஒருவரே பேசித்தீர்ப்பதாக எனக்கோர் எண்ணமும் உண்டு! பட்டதாரி!. அற்புதமான ஆங்கில இலக்கியங்களைத் தேடிப் படிப்பவர். அன்றைக்குப் பார்த்து அசலான ‘ஊர்பலா’! நேரில் பார்த்த சாட்சியாய் பேசிக்கொண்டு இருந்தார். இடையில் விடுபடும் அதையெட்டிய செய்திகளை ஹாஜா குத்புதீன் எடுத்து கொடுக்க, பேச்சு களைகட்டியது.

அவர் ஊரில், முஸ்லீம் பணக்காரவீட்டு மருமகள் ஒருத்தி, வீட்டில் எடுபிடி வேலைசெய்த வேற்று ஜாதிக்காரன் ஒருவனோடு ஓடிப்போனாள். செய்தி கேள்விப்பட்டு, சிங்கப்பூரில் இருந்த அவள் கணவன் அடுத்த வாரமே ஊர் வந்து, ஆள் பலத்தைத் திரட்டி, பணத்தை வாரி இறைத்து, ஆங்காங்கே துப்பும் வைத்து, ஒரு மாதத்திற்கும் கூடுதலாக ஜில்லா பூராவும் அலைந்து திரிந்து, சல்லடை போட்டு தேடி, கடைசியாக பக்கத்து டவுனில் உள்ள பிரபலமான சினிமா கொட்டகைக்கு சமீபத்துச் சந்தில், ஓர் குடிசையில் கண்டுபிடித்து அழைத்து வந்தார்கள்.

அவளிடம் அவளது கணவன், ‘நான் கேள்விப் பட்டதெல்லாம் வாஸ்தவமா?’ என ஆரம்பித்து ஒன்றுவிடாமல் கேட்டறிந்தப் பிறகுதான் ஆசுவாவம் கொண்டான்! சொந்தபந்தங்கள் வலியுறுத்தலின் பேரில், அவளை விட்டு விடுவதாகச் சொல்லி, பள்ளிவாசல் நாட்டாண்மைப் பஞ்சாயத்தைக் கூட்டுகிறான்! பள்ளிவாசலில் முழங்கிய ‘நகரா’ சப்த அதிர்வால் பள்ளிவாசலின் முன் ஊரே திரண்டு ஆர்ப்பரித்தது!

நாட்டாண்மை பஞ்சாயத்தார்கள், தங்களது பங்கிற்கு அவளை தனியே ஒரு வீட்டில் வைத்து தோண்டி துருவி ஒன்றுவிடாமல்  விசாரிக்க, எதையும் மறைக்காமல் பதில் சொன்ன அவள், கடைசியாக அழுத்தம் திருத்தமாக… தான் இழுத்துக் கொண்டு ஓடியவனோடுதான் வாழ்வேன் என்றுவிட்டாள்! நாட்டாண்மையும் பஞ்சாயத்துக்காரகள் செய்தியை சபையில் எதிரெலித்தார்கள். எல்லோரிடத்திலும் நிசப்தம். சபையில் அமர்ந்திருந்த ஜமாத்தார்களில் ஒருவர், அருகில் அமர்ந்திருந்த தன் சக நண்பனிடம் சத்தமாக கைசேதப்பட்டாராம். ‘தெரியாத்தனமா நாமல்லாம் ‘சுன்னத்’ பண்ணிகிட்டோம்டா!’

எல்லாற்றையும் மறந்து, எங்க ரூமே சிரித்தது. அங்கே சமையற்கட்டில்… கெட்டிலில் நீர் கொதித்து, வற்றித்தீர்ந்து, அது பிளந்து, வெடித்து… மலையாளிகள் ஓடிவந்து ரூமைத் திறந்து கத்த, ஏக தடபுடல்!

வெளியே மலையாளக் குரல்களின் வசவுகள். அருவருப்பான வார்த்தைகளினாலான சுத்தமான வசவுகள். கம்பெனியையும், முதலாளியின் மூன்று பொண்டாடிகளையும் ஒரு சேர தாராளமாக வசவுகிறார்கள். பைப்பில் தண்ணீர் வரவில்லையாம்! தெரிந்த சங்கதிதானே! இது எங்கேயும் எப்பவும் சகஜமான ஒன்று! முதலாளி அரபிக்கு அந்தக் கஷ்டம் இல்லையாயென்ன? சும்மாவா அவன் அப்பப்ப கெய்ரோ போகிறான்? சரி பண்ணத்தானே! யாருக்கில்லை கஷ்டம்?

எழுந்து முகம் அலம்ப வேண்டுமென்ற எண்ணம் தள்ளிப் போய்விட்டது. ‘டீ’க்காக எழுந்து உட்கார்கிறேன். சமையற்கட்டிலிருந்து ஹாஜா ‘டீ’யுடன் வருகிறார். முதல் கிளாஸ் எனக்குதான். அத்தனைக்குப் பிரியம் நான்! அவர் படிக்கும் ஆங்கில நாவல்களின் ரசனையான பகுதிகளை, வலியக் கேட்டுச் சிலாகிப்பவனல்லவா நான்! “ஆப்ரிக்க காட்டில் அழிந்துக் கொண்டிருக்கும் ஓர் இனத்தின் கடைசி மனிதனை, ‘ரூட்’ என்ற இந்த நாவலை எழுதி இருக்கும் எழுத்தாளன், அவனைப் பின்தொடர்ந்தறிந்து என்னமாய் எழுதியிருக்கிறான்?” “முழுசா படிச்சு முடித்தப் பிறகு சொல்லு ஹாஜா, தமிழில் அப்படி ஒண்ணெ எழுதிவிடுகிறேன்!”

டீ சூடாக இருந்தது. மிடறு மிடறாகக் குடிக்கிறேன். டீ குடிக்கிறோம் என்கிற நம்பிக்கையால், இப்போது குடிப்பது டீ-யாக இருக்கிறது. டீ குடித்த கையோடு சிகரெட்டை எடுத்துக் கொண்டாகிவிட்டது.

‘நிகோடின் மெல்ல……’ – பட்க்ஷி இப்போது தணிந்த குரலில்.

எல்லோருக்கும் டீ போட்டு தந்த வெற்றிமிதப்பில் நண்பர் ஹாஜா, என்னுடன் பேச உட்கார்ந்துவிடுகிறார். ‘ஊர்பலா’ நெடிவீசத் தொடங்குகிறது. “இதோ இருக்கானே… ஹாஜா குத்புதீன், இவன் ஊர்ல கம்யூனிஸ்டுங்க… அதைப்பற்றி இவனுக்கு என்ன மயிரெ தெரியும்? வால்யூம் வால்யூமா படிச்சாலே புரியாது! அரிவாள்.. சுத்தி… செங்கொடி… தெரிஞ்சா கம்யூனிஸ்ட் பற்றி தெரிஞ்சதா ஆயிடுமா? எங்க தொகுதி எம்.எல்.ஏ. கம்யூனிஸ்ட் தெரியுமுல்ல உங்களுக்கு? அவனோடு இவன் சைக்கிளில சுத்துவான்! அப்புறம் என்னடான்னா, படுவா, கருணாநிதிதான் என் தலைவன்கிறான்!”

நான் காதுகொடுக்கவில்லை. அது அவருக்கு புரிந்துவிட்டது. கவலைப்படாமல், மூலை பெட்டில் துணி மறைப்புக்குள் அசைந்துக் கொண்டிருக்கும் இஸ்மத் பாட்ஷாவிடம், போனார். “ஏன் இவ்வளவு பேசுறே நீ, பேசாம படு” ன்னு அதட்டல் கேட்டது. உடனே ஹாஜா படுத்து ஐக்கியமாகிவிட்டார்! அப்புறம் என்ன? தெரியாது. குசுகுசு பேச்சுதான் காதில் விழும்!  

நாகூர் ஹனீஃபாவை அடுத்து சரளா! இஸ்லாமியப் பாடல்களுக்கென்றே வழமையாகிப் போன பிடிப்படாத இசை சங்கதிகளோடு தமிழைக் குழைகிறார் அவர். குரலோ…. குழந்தை!

சரளா பாடி முடித்துக்கொண்ட பிறகு, தமிழகத்தின் அரசியல் கட்சியின் முன்னணி பேச்சாளர் ஒருவர் எதிர் கட்சிகளை இடித்து, நக்கல் அடித்து, குதர்க்கமாய் பேசிக்கொண்டிருக்கிறார்.
தன் முதுகைப் பார்க்க முடியாத சௌகரியம் இருப்பதினாலோ என்னமோ இப்படியெல்லாம் பேசுகிறார்கள்!

கையைத் திருப்புகிறேன். ‘கேஸியோ’ கண்ணைச் சிமிட்டுகிறது. மணி ஒண்ணு பதினைந்து.

ரூம் களைகட்டிவிட்டது! வெகுதூரத்தில் வசிக்கும் முகம் தெரியாத தமிழ் இதயங்கள் இந்த விடுமுறை தினங்களில் இந்த கேம்புக்கு வந்து, சக தமிழர்களை கண்டு பேசி ஆறுதல்பட்டுச் செல்வது வாடிக்கை. காலண்டரில் வியாழக்கிழமையே தவறினாலும், அவர்களது வருகை தவறாது!

சமையற்கட்டில் கறி வேகும் வாசனை. ஹாஜா குத்புதீன்தான் எங்களது சமையல் நாயகன்! சிகரெட் பிடித்தபடி சமையல் கட்டிற்குப் போனேன். ‘எங்கேயா கத்துக்கிட்டே இதே?’ ‘இதுக்கு முன்னாடி நான், லாவோஸில அஞ்சு வருஷம் இருந்தேன்ல!.’

‘கறி குழம்பு வைக்கக் கத்து கொடுய்யா.’ ‘அட, அது ஒண்ணுமில்லிங்க. சட்டியெ ஸ்டவ்வுல வையுங்க. எண்ணையெ கொஞ்சம் விடுங்க. வெங்காயம் இஞ்சி இருந்தா வெட்டிப் போடுங்க. ஆச்சா? அப்புறம் எவ்வளவு குழம்பு தேவையோ அவ்வளவுக்கு தண்ணியை கொதிக்க விடுங்க. மசாலா போட தயக்கமோ குழம்பவோ கூடாது. எல்லாத்துக்கும் ஒரே கலவைதான். மனம் போல அள்ளிப் போடுங்க. உப்ப மறந்திடாதிங்க. மசாலா கலவைத் தண்ணி சூடானதும் கறியெப்போட்டா கறிக்குழம்பு! கோழியைப் போட்டா கோழிக் குழம்பு! அவ்வளவுதான்! வெரி சிம்பிள்! இப்போ கூட பாருங்க , அப்படித்தான் கோழிக் குழம்பு வைத்திருக்கேன். எவனாவது இது கோழி குழம்பு இல்லைன்னு சொல்லச் சொல்லுங்க? சொல்ல முடியாது. ஏன்னா குழம்புல கோழிக்கறி போட்டு இருக்குல!’

‘பாவம்யா இது!’ ‘ஏங்க, வீடா இது? பார்த்துப் பார்த்து பதமா சமைக்கிறதுக்கு? கண்டுக்காம விடுவிங்களா.’

அவரை விட்டு வந்துவிட்டேன்.

‘சாப்பிடலாம்’ என்று பரபரத்தான் விக்டர் பிண்டோ. மூணு மணிக்கெல்லாம் அவன், சீட்டாட நண்பர்களைத்தேடி தூரத்தே போகவேண்டும். இவனிடம் தோற்பதற்காகவே அந்த நண்பர்களும் வாரம் தவறாமல் வா வான்னு இவனைக் கூடுகிறார்கள். இன்னேரம் அவர்கள் இவனைத் தேடிக்கொண்டிருக்கக் கூடும். தோற்பதும்தான் சிலருக்கு எத்தனை சுகம்!

சீட்டுக் கச்சேரி நடைபெறும்போது, சுற்றி அமர்ந்திருக்கும் சக சீட்டாட்டக்காரர்கள், எத்தனைக்கு ரகசியமாக தங்களது கார்டுகளை இறுகப்பிடித்திருந்தாலும், அத்தனை பேர் கைகளிலும் உள்ள அத்தனை சீட்டையும் மிகத் துல்லியமாகச் சொல்வான் எங்கள் விக்டர் பிண்டோ! அதையொரு கலையாகவே கற்றும் தேர்ந்திருக்கிறான்! கோவாக்காரனாச்சே!
கம்பெனியையோ வேலையையோ நம்பி அவன் சௌதியில் இல்லை! வாரம் ஒரு நாள் சீட்டாடினால் போதும் அவனுக்கு! கட்டாயம் மறுநாள் காலையில் பேங்கில் அவனைப் பார்த்துக் கொள்ளலாம். மாதத்திற்கு நான்கு வியாழன். நான்கு டிராஃப்ட்! 

எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். ‘பாரியைக் கூப்பிடு’ என்கிற வழக்கமான கூப்பாடு எழுந்தது. பாரி அதே ரூம்தான்! எதிரே… அதோ உட்காந்தும் இருக்கிறார். ஆனால் பாருங்கள் காலையில் இருந்து ரூமில் நடக்கும் நடப்பேதும் அவர் அறியமாட்டார். விழித்ததிலிருந்து எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை எதிரே வைத்து ஏக்கம் கூடி, மெய்மறந்து பார்த்துக் கொண்டே இருக்கிறார்!

இப்போது என்றுதான் இல்லை, இந்த ரூமிற்கு அவர் வந்த நாள் தொட்டு இப்படிதான். டூட்டி முடிந்து வந்து, கைகால் அலம்பிவிட்டு, பெட்டில் அமர்ந்தாரோ இல்லையோ.. எம்.ஜி.ஆர். எதிரில் வந்துவிடுவார்! ரூமே கிடுகிடுத்து சரிந்தாலும், அந்தப் பணியில்தான் இருப்பார்! வேலைக்கு லீவு போட்டுவிட்டுக்கூட எம்.ஜி.ஆரோடு அவர் ஆழ்ந்து விடுவது உண்டு!
எம்.ஜி.ஆர். மீது இவருக்கு இருக்கும் அன்பை எடைபோட, இன்னும் மெஷின் ஏதும் கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை! ‘மெகா மெஷின்’ இதுவென்று ஏதொவொன்றை கொண்டுவந்து எடைபோட முயன்றாலும் அது நொறுங்கிப் போவது நிச்சயம்!

நான் பாய் விரித்து பேப்பர் போட, விடிகாலையில் போய் மூன்று வீட்டுகளில் பார்ட் டைம் ஜாப் முடித்துவிட்டு வந்திருக்கும் ஹபீப் சமைத்த உணவு வகைகளை கொண்டுவந்து வைக்க,  வெளி நண்பர்களும் ரூம் நபர்களும் உட்கார இடம் கொள்ளவில்லை! ஹலீம் சாப்பாடு பரிமாறினான். அளவோடு அலுக்காமல் பரிமாறுவதில் அவன்தான் கெட்டி! ஒரு வழியாய் சாப்பாடு ஆனது! சாப்பிட்ட கையோடு, அத்தனை பேர்களும் சொன்ன ஒரே வார்த்தை, ‘கோழி குழம்பு பிரமாதம்!’

ரூம் புகை மயம்! எல்லோர் கைகளிலும் ‘ரோத்மன்ஸ்’ புகைகிறது. பேச்சில் தமிழ் நாட்டு அரசியல் அமக்களப்படுகிறது. சைபீரியாவுக்கே போனாலும் நம் நிறத்தை மாற விடமாட்டோம். வந்திருந்த நண்பர்களின் பேச்சு, சற்றைய நேரத்திற்கெல்லாம் திசை மாறி, புலம்பலாக வெளிப்பட்டது!

“என் கம்பெனியில் சம்பள உயர்வே தரமாட்டேன்கிறான்பா!” “எனக்கு பம்பாயில அக்ரிமெண்ட் செய்யும் போது, ஆயிரத்தி இரநூறுக்கு செய்தானுங்க.. இங்கே வந்ததிலிருந்து ஐநூறு ரியால்தான் கொடுக்கிறானுங்க!” “அட போங்கப்பா, உங்களுக்கெல்லாம் சம்பளமாவது கிடைக்குது. என் கம்பெனியில் சம்பளமே தரலே, மூணுமாசமாச்சு! கஃபிலை பார்த்து கேட்கலாமுண்னா, அவன் நாலாவது கல்யாணம் செய்துக்க ஹைதராபாத் போயிட்டான். கடனவுடன பட்டு ‘குப்ஸ்’ சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம்.”

“நீங்களெல்லாம் சம்பளத்த பேசுறீங்க. இதோ பாருங்க என் கையை! கேபிள் போட தினைக்கும் பள்ளம் வெட்டி… ச்சை,. நாலு பேரை பார்க்கக்கூட வெட்கமா இருக்கு.” “இதில என்ன வெட்கம் வேண்டியிருக்கு? வேலை செய்யத்தானே வந்திருக்கோம்! ‘அல்-ஸாகிரியில போய் பாரு…. நம்ம பக்கத்து பணக்கார வீட்டுப் பசங்கள்ல எத்தனை பேர் தெருக் கூட்ட வந்திருக்காங்கன்னு!” “அப்படியா!?” “என்ன அப்படியா… போய் பாரு… பி.ஏ., பி.காம்லாம் அங்கே சர்வ சாதாரணம்!” “வக்கீலுக்கு படிச்ச நம்ம பக்கத்து பையன் ஒருத்தன் சீயத் கோழிப் பண்ணைக்கு வந்து, முட்டை பொறுக்குறான்பா!”

எல்லோரும் ‘உச்சு’ கொட்டுகிறார்கள். அதற்கு அனுதாபம் என்று அர்த்தம்!

நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒருத்தர் மாற்றி ஒருத்தர் இப்படியே. பொறுத்துப் பொறுத்து பார்க்கிறேன். பொறுக்க முடியவில்லை…

“எல்லாவற்றையும் தெரிஞ்சி, எல்லாத்திற்கும் உட்பட்டுதானே காசு… காசுன்னு இங்கே இன்னும் இருக்கோம். அப்புறம் என்ன ஒப்பாரி? இன்னிக்காவது சந்தோஷமா விடுமுறையை கழித்தால் என்ன?” – நான் கத்துகிறேன். எல்லோரும் என்னை கேள்விக் குறியோடு பார்க்கிறார்கள்.

கோபப்பட்டிருக்கக்கூடாது. சொந்த தகிப்பை ஆற்றிக் கொள்ளத்தானே இங்கே வருகிறார்கள்.. நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. வருத்தமாக இருந்தது. அவர்களது பாஷையில் அவர்களோடு இழைந்து பேசி, என் பங்கிற்கு நானும் அவர்களின் கஃபில்களை ஏகதாளத்தில் திட்ட, அவர்களுக்கு மகிழ்ச்சி இப்போது.

எழுதவேண்டும் என்ற நினைப்பைக் கழற்றி, மன ஹாங்கரில் மாட்டிவிட்டு, ரூமை விட்டு புறப்பட்டேன்.

வெளியே இரவின் இளம் முகம். கையில் புகையும் சிகரெட்.

எங்கே புறப்படுகிறேன்? அடுத்த வியாழனைத் தேடியா? பிடிபடவில்லை.

*

(தமிழ்ப் பூக்கள்/ மார்ச்-1983)

*


தவிர்க்க முடியாத கூடுதல் திருத்தங்களோடு, தட்டச்சும் – தாஜ் | E-Mail : satajdeen@gmail.com
11:38 AM 6/12/2010

மழைக்காலத்து ஈரம் – தாஜ்

தாஜ் எழுதிய இந்த பழைய கதையில் ஒரு சுவாரஸ்யம். அவரது பாட்டி அவ்வப்போது அவருக்கு சாம்பிராணி போடுகிறது! அப்போதிருந்தே தாஜுக்கு ஷைத்தான் கோளாறு உண்டு என்பதற்கு இந்த ஒரு சாட்சி போதாதா நூருல் அமீன்? நான் ‘குழந்தை’ எழுதிய வருடத்தில் இவர் இந்தக் கதையை செய்திருக்கிறார். என்னை அப்போது ‘தலைமுறைகள்’ நீல.பத்மனாபன் பாதித்திருந்தாரென்றால் இவருக்கு ‘சாயாவனம்’ கந்தசாமி. எழுத்தாளர்களைக் கெடுக்கும் எழுத்தாளர்கள் ஒழிக! அப்புறம்… ‘இளமையா, நல்லா போட்டோவா போடுய்யா’ என்று தாஜ் சொன்னதால் முந்தைய தாஜின் பதிவில் சூர்யாவைப் போட்டேன். அதுவும் அவருக்குப் பிடிக்கவில்லை. ‘மரியாதை வர்ற மாதிரி, பெரிய தாடிலாம் வச்ச போட்டோவை போடக்கூடாதா?’ என்று கோபித்துக்கொண்டார். பாலகுமாரனைப் போடலாமா?! வேண்டாம், ‘ரியாத் வீரன்’ஐ இணைத்து விடலாம், அவரது பாட்டியோடு. ஓகே?

தாஜ் எழுதியதில் எனக்கு பிடித்த கதை இது. பேசுபொருள் அப்படி. மழைக்காலத்து ஈரம் அல்ல; அமிலம்…

ஆபிதீன்

இனி தாஜ் :

முன்குறிப்பு: 1

1981-ம் ஆண்டில் எழுதப்பட்ட கதை இது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தக் கதையை நான் சமீபத்தில் படிக்க நேர்ந்தபோது, அதன் உள்ளடக்கம் என் பாட்டியைப் பற்றி பேச, நெகிழ்ந்து போனேன். தவிர, இயற்கையை நேசிப்பதிலும்,  மூட நம்பிக்கைகளை அசட்டை செய்வதிலும் அன்றைக்கும் கூட தெளிவாக இருந்திருக்கிறேன் என்பதை அறிய, பிடித்துப் போனது என் கதை எனக்கு!

80-களில் இலக்கியக் கதைகளின் மகத்துவமாக, யதார்த்தம் சார்ந்த கதைகளே பேசப்பட்டது. அன்றைக்கு, அப்படி எழுதுவதில் சிறந்த மதிப்பீட்டுகளுடன் வலம் வந்த ‘சாயாவனம்’ கந்தசாமியை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எங்க பக்கத்து ஊர் வேறு! காவேரிப்பூம்பட்டிணம். இன்றைக்கு அவர் எழுதுவது இல்லை. என்றாலும் போற்றத் தகுந்த கலைஞர்.

கந்தசாமி அவர்களின் சிறுகதைகளில் ஒன்றான ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ விசேசமானது. ஓர் கிழவனும் ஓர் சிறுவனும் வாய்க்கால் கரையோரம் அமர்ந்து, தூண்டில் போடும் காட்சி மட்டும், சாதாரண வர்ணனைகளில் தொடங்கி அப்படியே நீண்டு முடியும்! எனக்கும் ரொம்பப் பிடித்த கதை. அந்தக் கதையின் பாதிப்பை, இந்தக் கதையின் ஓர் காட்சியில் நீங்கள் காணமுடியும்.

சுற்றி வளைக்காமல் சொல்லணும் என்றால், படைப்பு சார்ந்து ‘சாயாவனம்’ கந்தசாமியாக மாற அன்றைக்கு ஆசை இருந்தது. இந்தக் கதையே கூட அப்படி சூடுபோட்டுக் கொண்டதுதான்.  அவரது கதைகள் யதார்த்த சாயல் கொண்டது என்றாலும் நுட்பம் கூடியதாக இருக்கும். அந்தக் கலை, எனக்கு அன்றைக்குப் படியவில்லை.. 

முன் குறிப்பு: 2

இயற்கையை நேசித்த/நேசிக்கும் நான்தான், இன்றைக்கு அதன் கூறுகளை ஆங்காங்கே அழித்து , ‘மனை’ப் போட்டு விற்பனை செய்யப் பரபரக்கும் பெரும் கூட்டத்தோடு – தொழில் ரீதியாய், ரியல் எஸ்ட்டேட்காரன் என்கிற கோதாவில் – உறவுக் கொண்டிருக்கிறேன்.

இதுவோர் ஓர் நகைமுரண்! உறுத்தல் உண்டு. வலிக்கவும் செய்கிறது. இரக்கமற்ற காலம், இப்படித்தான் எல்லோரையும் இடம் தெரியாது தள்ளிவிட்டுவிடும்!  

*     

மழைக்காலத்து ஈரம்

தாஜ்

காலை மணி பத்து. டிஃபன் சாப்பிட்டாகிவிட்டது. முற்றத்தில் சூரியனின் உக்ரம் விழுந்து, குட்டிச் சுவற்றைப் பற்றி மேலேறுகிறது. தாயாரின் திட்டு சின்னச் சின்ன வார்த்தைகளில் முனகல்களாக கிளம்பி, வெடிக்கத் துவங்குகிறது. கொல்லைப்புறக் கதவை திறக்கிறேன், தலைகொள்ளா பச்சையடர்ந்த மரங்கள் வளைந்து கிடக்கின்றன. நல்ல பருவம் கொண்ட அம் மரத்தின் நாளைய கனிகள், அதன் கிளைகளில் இன்றைய காய்களாக முத்து முத்தெனத் திரண்டு, கொத்துகொத்தாகத் தெரிகிறது. கோழியைத் சேவல் திரும்பத் திரும்ப துரத்துகிறது. பக்கத்து வீட்டில், தாய்க்கும், அவளது மூத்த மகளுக்குமான வழக்கமான வாய்ச் சண்டை , நேரம் தப்பாமல் இன்றைக்கும் தடித்து உரக்க தெளிவாக கேட்கிறது. யார், யார்யாரோடு படுத்தார்கள் என்பது அந்தச் சண்டையில் இருவரும் சப்தமிட்டு விதர்னையில்லாமல் உடைத்துக் கொண்டிருக்கும் உச்சம் நிகழ்கிறது. தினம் தினம் கேட்டு சளித்துப் போன சங்கதி! ஆனால், பொழுதின் மற்ற நேரங்களில், அந்த தாயும் மகளும் கொள்ளும் அன்னோன்னியம் காண்போரை வியக்கச் செய்யும்!

என் நடை அவசரம் கொள்கிறது. எங்களது நீளம் கூடிய கொல்லையில், இரு புறமும் வரிசைகட்டி வளர்க்கிற தென்னைக் கன்றுகளின் நீட்டோலைகள் முகத்தில் நெடுக தட்டுப்பட, அவற்றை விலக்கியவனக நடக்கிறேன். ஒரு கன்னிவாய்க்கால் சலசலக்கும் நீரோடு கொல்லைக்கு வடபுற எல்லையாக ஓடுகிறது. அதனோர வேலி அருகில் நின்று, நீரில் படைபடையாக ஓடித் திரியும் மீன் குஞ்சுகளைப் பார்க்கிறேன். அப்படியே அள்ளி முத்தமிட நினைத்து, சிரிக்கிறேன்.

வேலியைத் திறந்துக்கொண்டு, கன்னியைத் தாண்ட. கூடவே ‘இட்லி சட்னி’ ஏப்பம். பாதமெல்லாம் சகதி. மேட்டில் ஏறுகிறேன். ரொம்பதூரம் பச்சையாகவே வயல்! காற்றுக்கு அது அசைந்துக் கொடுத்து ஆட்டம் கொள்வதும் எவ்வளவு அழகு! அதன் மையத்தில் நீளும் வரப்பில் நடக்கிறேன். காலில் அப்பிய சகதிகளை புல்தரையில் தேய்த்து துடைத்தப்படி, வரப்பின் போக்கில் சென்று, வலது புறமாகத் திரும்பி, மேடு பள்ளமெல்லாம் ஏறி இறங்கி, ஓரிரு பாம்புப் புற்றுகளையும் கடந்து, பனை மரங்கள் ஓங்கி நிற்கும் கிழக்கு பார்த்த மேட்டுப் பகுதி ஒன்றின் மீது ஏறி நிற்கிறேன்.

மேட்டுப் பகுதியின் இடதுபுறம் சற்றுப் பெரிய வாய்க்கால் ஒன்று ஓடுகிறது. கரைகளைத் தொட்டபடி, மையத்தில் சுழித்துக்கொண்டு தண்ணீர் மெதுவாக நகர்கிறது. வாய்க்கால் வளைந்துத் திரும்பும் வளைவின் கரையோரம், கோரைகளின் மீதமர்ந்து ஒரு கிழவனும் ஒரு பொடியனும் சிரத்தையாக தூண்டில் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களது கவனம் தங்கள் தங்கள் தூண்டிலின் தக்கைகளின் மீது பதிந்திருக்கிறது. தக்கையின் மீது பதிந்திருக்கும் அவர்களது கவனமே, பகலில் அவர்கள் பசியாற ஏதுவாக இருக்கக் கூடும்!

அவர்களின் மீன்பிடி சிரத்தைக்கு பங்கம் வராது தூரத்தே நகர்ந்து, வாய்க்காலின் இன்னொரு திருப்ப முனைக்குப் போய், கைலியை மடித்து ஆணுறுப்போடு சேர்த்துப் பிடித்தபடிக்கு வாய்க்காலைக் கடந்து, எதிர்வரப்பில் மீண்டும் நடக்கிறேன். கால்களில் சுருக் சுருக்கென்ற வலி! நின்று, பாதத்தைத் தூக்கி விரலால் தடவிப்பார்க்கிறேன். தைத்த முள் தட்டுப்படுகிறது. அதை வெளியே நிமிட்டி எடுக்க இப்போதைக்கு அவகாசமில்லை. பாதங்களை ஒருமாதிரி குத்தலாக வைத்தபடி நடக்கிறேன். வழியில் கவிழ்ந்துக்கிடக்கின்றன இலந்தை மர முட்கிளைகள்! சட்டையிலும், தலையிலும் முட்கிளைகள் தைத்தப்படி இருக்க, உபாதைகளை சகித்தபடியும், விலக்கியபடியும் நடக்கிறேன்.    

நான் தேடிவந்த என் சமஸ்தானம் வந்துவிட்டது. கிளிகளும் பறவைகளும் கீதம்பாடி வரவேற்கிறது. சின்னச் சிட்டுகள் கிளைகளிலிருந்து கிறீச்சிட்டு மேலெழும்பி, என் வரவை வட்டமிட்டு ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு கிளைகளில் அமர்கிறது. எத்தனையோ ஆண்டுகள் கொண்ட இலுப்பை மரங்கள் அங்கே இறுமாப்பாய் திட்டு திட்டாய், பார்வை மலைக்க நிற்கிறது. அதன் உடம்புகளில் ஏகப்பட்ட நெளி நெளியான திருகல்கள்! மரங்களைச் சுற்றி இழுப்பைப் பூக்கள் சிதறிக் கிடக்க, மனம் கொள்ளா மணம்! எண்ணற்ற மூலிகைச் செடிகொடிகள் பரந்து விரிந்து ஸ்தலம் பூராவையும் பசுமைப் படுத்தியிருக்கிறது. ஆனாலும், கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் தெரியும் இலுப்பை அல்லாத பலவிதப் பெரிய மரங்களும் சேர்ந்து, மனிதர்களை இந்தப் பக்கம் வரவொட்டாதும் அஞ்ச வைக்கிறதென்பதும் நிஜம்.

ஊரின் வடகிழக்குக் கோடியிலிருந்த ஓர் ஆதிக் காட்டை, தோப்பாக சரிப்படுத்திய ஆதிக்க வம்சத்தின் பிரதிநிதி ஒருவன், அங்கே பங்களா ஒன்றையும் கட்டியெழுப்பி, எப்போதோ தனிமை வாசம் செய்த இடம் என்கிறார்கள். மனைவியல்லாத பெண்களுடன் ஆதிக்கம் சல்லாபம் புரிந்த இடம் இது என்பதும் காதுவழிச் செய்திகள்! அந்த பங்களா இருந்த இடத்தில் இப்போது அரித்த செங்கல் சுவர்கள்தான் பாக்கி! ஆதிக்கத்தின் அடாவடிகள் அத்தனைக்கும் நேரடிச் சாட்சியாக இது மட்டுமே மீதம்! இன்றைக்கு அங்கே உதவியென யாரேணும் குரல் கொடுத்தால் கூட, ஓடி வந்து உதவுவதற்கு அதன் சுற்றுவட்டத்தில் மனித வாடையே கிடையாது. இப்போது அங்கே வாழ்வதும், வளர்வதும், பாடுவதும், பறப்பதும், ஆடுவதும், ஓடுவதும், ஊர்வதும், உலாவுவதும் என்று எல்லாமே மனிதரில்லா சிருஷ்டிகள் மட்டுமே!

என்னுடைய கல்லூரி காலத்தின் விடுமுறை தினங்களில் கனமான புத்தகங்களுடன் இங்கேதான் வந்துவிடுவேன். எங்காவது ஒரு மரத்தின் மீது ஒய்யாரமாய் சாய்ந்துகொண்டு மணிக்கணக்கில் படிப்பேன். இயற்கை எனக்குப் பின்னணி வாசிக்கும். படித்தது அவ்வளவும் மண்டைக்குள் ஒட்டிக்கொள்ள, அப்படியே அயர்ந்து அதன் அடியில் சாய்ந்துவிடுவேன்.  தென்றல் தாலாட்ட, நேரம் போவதும் தெரியாது. விழித்தெழுந்த பின்னும், வீட்டுக்குப் போக மனம்வராது. ‘அங்கேயெல்லாம் போகக்கூடாது’ என்று திட்டித் திட்டி என் பாட்டி அலுத்தும் சலித்தும் போய்விட்டார்கள். இங்கே ‘பேய்’ இருக்கிறதாம்!

மாலைவேளைகளில் இறை ஆயத்துக்களை ஓதி, என்மீது ஊதுவார்கள். நினைத்துக் கொண்டால் சாம்பிராணி போடுவார்கள்! எனக்கு வேடிக்கையாக இருக்கும். என்றாலும், சிரிக்காமல்… வயதுகொண்ட அந்த அன்புப் பொக்கிஷத்தின் மத ரீதியான சம்பிரதாயங்களை மறுக்காமல், அப்படியே ஏற்றுகொள்வேன்.

சொல்ல விட்டுவிட்டேன். எனக்குக் கிடைத்த இன்னொரு இயற்கைச் செல்வம் என் பாட்டி. நான் படித்து முடித்துவிட்டு சம்பாதிக்காமல் ஊர் சுற்றுகிறேன் என்று என் தந்தை திட்டுவார்கள். தாயோ நான் இப்படி இருக்கும் சூழ்நிலைகளின் ஆற்றாமைப் பொறுக்க முடியாமல், ஆதங்கம் கொள்ளப் புலம்புவார்கள். சிலநேரம் நேரிடையாக திட்டவும் திட்டுவார்கள். ஆனால், என் பாட்டிக்கு அது குறித்தெல்லாம் கவலை இல்லை. பெற்றோர்களின் திட்டை பெருசுபடுத்தி நான் சாப்பிட மறுத்தால்தான் கவலை. நாழிகழித்து வீட்டுக்குத் திரும்பினால்தான் கவலை. நான் தலைச்சன்பிள்ளையாக இருப்பதிலும், அந்தத் தோப்புக்கு போய்வருவதிலும் பாட்டிக்கு சொல்லமுடியாத பெருங் கவலை. காத்துக் கருப்பு பேய்களுக்கெல்லாம் தலைச்சன் பிள்ளைகள் என்றால் கொண்டாட்டம் என்பது எனக்கு விளங்கவில்லை என்று கவலையோ கவலை.

நம்மோடு வலம்வருகிற, கூடவே உலாத்துகின்ற மனிதர்களுக்கு பயந்துதானே தினமும் அங்கே ஓடுகிறேன். மனிதர்களை விடவா பேய் கொடுமையாக இருந்துவிடப் போகிறது? அப்படி என்று ஒன்று இருந்தால்!

ஒரு முறை விளையாட்டாக என் பாட்டியிடம் சொன்னேன், ‘பேய் என்னை அடிப்பதாவது? நான் அதை அடிக்காமல் இருந்தால் போதாதா! எனக்கும்கூட பேயைப் பார்க்க வேண்டுமென்கிற ஆசை ரொம்ப நாளாக இருக்கிறது. அதற்காகதான் நான் தொடர்ந்து அங்கே போகிறேன். அதுதான் இன்னும் எதிர்பட மாட்டேன் என்கிறது!’ என்றேனே பார்க்கலாம் என் பாட்டிக்கு ஏகப்பட்ட கோபம். என்றைக்கும் அவர்களிடம் அப்படியோர் சீற்றத்தைப் பார்த்ததில்லை.

நான் ஆர்வமாக போய்வரும் அந்தத் தோப்பு, இன்றைக்கெனக்கு தனது வசீகரப் பக்கங்களைக் காட்டினாலும், காதில் விழும் அதன் பழைய வரலாறு அச்சப்படுத்தக் கூடியதாகத்தான் இருக்கிறது. அந்தத் தோப்பு பங்களாவில் வாசம்செய்த ஆதிக்கப் பிரதிநிதி, ஓடியாடி ஆண்டு அனுபவித்த அதே வாலிபப் பருவத்தில்தான் அவன் தற்கொலையும் செய்துக் கொண்டானாம்! தனது வைரமோதிரத்தில் ஜொலித்த வைரக்கல்லை பொடிசெய்து சாப்பிட்டுவிட்டானாம்! அவன் தற்கொலை செய்து கொள்ளவில்லை, அப்படி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற பேச்சும் எழ, அதையொட்டிய வழக்கு விசாரணையின் ஒரு கட்டத்தில், போலீஸ் அதிகாரிகள் அந்தத் தோப்பில் புதைக்கப்பட்டிருந்த ஏகப்பட்ட பெண்களின் சடலங்களை தோண்டி எடுத்ததாகவும் சொல்கிறார்கள். பெருத்துக் கிடக்கிற எல்லா மரங்களின் அடியிலும் கூட பெண்களின் சடலம் இன்னும் இருக்கலாம் என்கிற ஹேசியம் இன்றைக்கும் நிலவுகிறது. நான் பிறப்பதற்கு முன் நிகழ்ந்த இந்தச் சம்பவங்கள் இன்றைக்கும் சில மனிதர்களை அச்சப்படுத்திக் கொண்டிருப்பதை கண்டிருக்கிறேன். 

நான் அங்கே போய்வருகிற போது, சகஜமாக மக்கள் யாரும் தென்படுவது இல்லை என்பது நிஜமென்றாலும், அது அத்தனை உண்மையில்லை. சில நேரம் அங்கே சீட்டு விளையாடும், சாராயம் விற்கும், பாலியல் சேட்டைகளுக்காக மாடுமேய்க்கும் பெண் பிள்ளைகளை அங்கே இட்டுவரும் மனிதர்கள் சிலரை சந்திக்க நேர்ந்ததும் உண்டு. இதனையெல்லாம் என் பாட்டி அறிந்திருக்கக் கூடும். என்னிடம் எதனையும் விவரிக்க விரும்பாமல் அங்கே ‘பேய் பிசாசு’ யென எனக்கு ஆச்சம் காட்டுகிறார்களோ என்னவோ. ஏனோ எனக்கு ‘பேய் பிசாசுகள்’ குறித்து பயமே எழுவதில்லை. வயசு கோளாறோ என்னவோ!  

என் பாட்டியின் கோபத்திற்கும் சீற்றத்திற்கும் வேப்பிலையடிக்க எனக்கா தெரியாது? பொய்யான சிணுங்கல்களோடு பிடிபடாத கோபமும் வெடிக்கும். ‘இனிமேல் நான் அங்கேயேதான் இரவும் பகலும் தங்கப்போகிறேன்’ என்கிற அறிவிப்பு தடாலென என்னிடம் கிளம்பும். என் பாட்டி பாவம். அப்படியே உடைந்துப் போய் , ‘வேண்டாம் பாவா’ என்ற கெஞ்சலாய் கெஞ்சுவார். எனக்காக கவலைப்படுவதைத் தவிர, இன்றைக்கு வேறேதும் தெரியாத என் பாட்டியை இனியும் சங்கடப்படுத்தக் கூடாது என்றும், முடிந்தால் சந்தோஷப் படுத்தவேண்டும் என்றும் நினைத்தேன். ஒண்ணு, ஏதாவது ஒரு வேலை தேடிக் கொள்ளவேண்டும், இரண்டு, அரணான அந்தத் தோப்புக்குப் போவதை நிறுத்த வேண்டும். இரண்டும் கஷ்டம்தான்.

பத்தாயிரம் பேர் கூடிப் பட்டத்தைக் கொடுத்துவிடுகிறார்கள்! ஒருவன் கூப்பிட்டு வேலைக் கொடுக்க மாட்டேன் என்கிறான். வேலை தேடிக் கொள்கிற ஒவ்வொருவனின் திரையையும் விலக்கிப் பார்த்தால்… ஊசிக் கண்ணில் ஒட்டகத்தை சமர்த்தாய் இழுத்திருப்பான்! எனக்கு அந்தக் கலை தெரியதே.

இப்படியொரு நெருக்கடியான நேரங்களில் மனம் இறுக ஆரம்பிக்கும் போதுதான்… அந்த தோப்பை நோக்கிய வனவாசத்தை அவ்வப்போது நிகழ்த்துகிறேன். அங்கே நான் மலர்வதும், திரும்பியதும் மனித வாடையில் நான் வீழ்வதும் வாடிக்கையாகிவிட்டது.

எனக்கு வேலை கிடைக்காதது என்னவோ வாஸ்தவம்தான். தினம் தினம் சாப்பிட்டுவிட்டு ஊர் சுற்றுகிறேன் என்பதும் வாஸ்தவம்தான். ‘சாப்பிடாமல் ஊர் சுற்ற முடியுமா என்ன?’ சரி, வீட்டில் முடங்கிக் கிடப்பதென்பதும் நடக்குமா? நான் என்ன வேலைக்குப் போகமாட்டேன் என்றா சொல்கிறேன். எவன் கொடுக்கிறேன் என்கிறான். இதற்காகப் போய் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா? நல்ல வாழ்வு வாழ்வேன் என்ற பெரிய நம்பிக்கை என்னுள் வாழ்கின்ற போது இந்தச் சின்னச் சின்ன சமாச்சாரத்திற்கெல்லாம் சங்கடப்படவும் முடியுமா?

ரொம்பவும் நிதானமாகத்தான் இருந்தேன். இப்படியே வாரங்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக, என் தந்தையுடன் என் தாயும்… அப்புறம் என் பந்துக்கள் எல்லோருக்குமே எனக்கு வேலை கிடைக்கவில்லை என்பதில் பெரிய கவலையாகி….. தாங்கமுடியாத சப்தங்கள் நாலாத் திக்கிலிருந்தும் என்னை தாக்கியபோது, கோபத்தின் உச்சிக்கும் போயிருக்கிறேன். எத்தனையோ பொருட்கள் பறந்து, ஓடி, உருண்டு, விழுந்துடைந்திருக்கிறது.

அன்றைக்கு, என்னையொத்த எல்லோருக்கும் விடிவெள்ளியாகத் தெரிந்த சவூதி அரேபியாவுக்கு நானும் போய் சேர்ந்துவிட்ட பிறகு, என் வீட்டில், உறவினர்கள் வீட்டில் என்று எல்லோரின் முகத்திலும் ஏகப்பட்ட பிரகாசம்! அவர்களது கடித வரிகளில் அந்த வெளிச்சம் பிரகாசிக்கவும் செய்தது. என் பாட்டிக்கும் எனது இந்தப் பயணம் மகிழ்ச்சி தந்திருப்பதாக அறிய வந்தபோது, நான் சௌதி வந்ததில், கக்கூஸ் கழுவியதில் எனக்கும்கூட மகிழ்ச்சியாகவே இருந்தது.

ஆனால், அந்த என் சமஸ்தானத்தை, அதன் இனிமையான வசீகரங்களை, இங்கு என் மனம் நினைத்தேங்காத நாளேயில்லை! மழைக்காலத்து ஈரமாய் மனதில் அப்படியொரு சொத சொதப்பு. காயாத ஈரம்! அச்சுப் பிசகாமல் அந்த வசீகரங்கள் நிறம் காட்டிக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு நாளாய்… எழுநூற்று இருபது நாட்கள்! இரண்டு வருட கான்ட்ராக்ட் முடிந்த நாளில் இங்கே எனக்கு இடைக்கால விடுதலை கிடைக்க, தாய் மண்ணின் தகதகத்த விடியலை மீண்டும் தர்சித்தேன். என் பாட்டி, பெற்றோர் உற்றோரென எல்லோரையும் நமஸ்கரித்து, இன்னுமான சம்பரதாய முகமன்களை சம்மந்தப்பட்டவர்களைச் சந்தித்து முடித்துவிட்டு, மறுநாள் காலை என் வீட்டு நீளக் கொல்லை, கன்னி வாய்க்கால், வரப்புகளையும் தாண்டி, இலந்தை முற்களின் கீறல்களையும் சகித்துக் கொண்டு நடந்தேன்.

விருட்சங்கள் தளைத்து பசுமையோடு வாழும் என் சமஸ்தானத்து இனிமை காண, அன்றைக்குப் பூராவும் என்னை நான் அங்கே முழுகவிட நடந்தேன். அந்த எனது நடையை, நடை என்பதைவிட, சின்ன ஓட்டமாகத்தான் சொல்ல வேண்டும். முடிவில், கால்கள் ஓர் எல்லையில் நின்றது. சமஸ்தானத்தைக் காணோம்! தேட, தேடத் தேட கண்கள் விறிந்து பார்வை அலைந்ததுதான் மிச்சம்.

சூரியனின் கிரணங்கள் புக முடியாத என் சமஸ்தான மண், இன்று வெளிச்ச ஆக்ரமிப்பில்! மரங்கள் இறுமார்ந்திருந்த இடமெல்லாம் பள்ளம்! புரட்டப்பட்ட மண், புல் பூண்டுகள் அற்று தீய்ந்துக் காய்ந்து காற்றில் எழும்பி திரிந்துக் கொண்டிருந்தது! நிர்வாணமாக்கப்பட்டு கற்பிழந்த நிலையில் வெறிச்சோடிய நிலதைப் பார்க்க சகிக்கவில்லை! மனதில் இடம்கொள்ளா கேள்விகள்! ‘எங்கே என் சமஸ்தானம்? அரக்கர்கள் மாதிரி எழுந்து நின்ற மரங்களெல்லாம் ஏன் இப்படி சாய்க்கப்பட்டிருக்கிறது? ஏனாம் இப்படி துண்டாடப்பட்டிருக்கிறது? ஏன்? ஏன்? எங்கே என் ஆதி உலகம்?’
        
மாய வாசிப்பின் இசை நாண்களில் சிக்காமல் ஒலி செய்யும் அந்தச் சின்னஞ்சிறு பறவைகளின் கூட்டம் எங்கே? சலசலப்புகளுக்கெல்லாம் எழுந்து வானில் கோலமிட்டமரும் அந்தச் சிட்டுகளின் கூட்டமெங்கே? அவைகளின் கிசுகிசுக்கும் ரீங்காரப் பண்னெங்கே? மனத்தைக் கட்டி இழுக்கும் காட்டுப் பூக்களின் வாசனையும், வண்ணத்திலொரு நிறம் காட்டியப் பூக்களும்தான் எங்கே? கோணல் மனம் கொண்ட எந்தவொரு மிருகமும் கூட இப்படியொரு அழிப்புக்கு உடன்படா!  இப் பாதகங்களுக்கெல்லாம் மனிதன்தான் துணிவான்! அவனின் கைகளுக்குத்தான் இது சாத்தியம். உயிர்களை இப்படி திருகிப் போட அவனுக்குத்தான் கூசாது! நிர்மூலமான என் சமஸ்தானத்திற்காகவும், அங்கே துண்டாடிக் கிடக்கும் மரங்களுக்காகவும் என் மனம் மௌன அஞ்சலி கொண்டது.

திரும்ப நினைத்தேன். அந்த மண்ணைவிட்டு அகல மனமில்லாமல் கால்கள் தயக்கம் காட்டியது. சிகரெட்டை பற்ற வைத்தப்படி, ஸ்தலத்தில் ஆங்காங்கே கோடாரி, வெட்டரிவாளோடு திரியும் மனிதர்களை வெறுப்புடன் பார்த்து நின்றேன்.

அழிப்பு ஆயுதத்தோடு ஒருவன் என்னிடம் வந்தான். என்ன? என்பதுபோல் நிமிர்ந்தேன். “விறகா ஸார் வேணும்… நல்ல இழுப்பன் விறகு ஸார்… டன் நூறு ரூபாய்தான். நல்லா காஞ்சுப் போச்சு ஸார். கபகபன்னு நின்னு நிதானமா எரியும் ஸார்! விலாசம் மட்டும் சொல்லுங்க, வீட்டிலேயே கொண்டு வந்து இறக்கிடுறோம்!” என்றான்.

இயற்கையை விறகாக்கி, எரிக்கத்தரும் பாவிகளில் ஒருவனை நேருக்கு நேர் சந்தித்ததிலான சூடோடு, தக தகவென்று நின்றேன்.

“என்ன ஸார் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறீங்க, ஓ…, நீங்க மனைப் பார்க்க வந்த ஆளா? அதுக்கு இன்னும் வேலையாகல. மூணுமாசமாவது பிடிக்கும்! சினிமா கொட்டகை கிட்ட இருக்கிறாரு பாருங்க… சம்பந்த முதலியாருன்னு, அவருதான் இங்கே மனை போடுறார். அவரைப் பாருங்க.” என்றான்.

மீண்டும் ஒருமுறை அவனை அடிமுதல் நுனிவரை எரித்துவிட்டுத் திரும்பினேன்.
   
(தமிழ்ப்பூக்கள் (மார்ச்-1981)

***

நன்றி: தவிர்க்க முடியாத திருத்தங்களும், தட்டச்சும் செய்த : தாஜ்

E-Mail : satajdeen@gmail.com

மனசு சரியில்லை தலைவரே…. – தாஜ்

அன்புடன் ஆபிதீன்…
மனசு சரியில்லை தலைவரே….
மனம்விட்டு பெரிய கடிதம்
எழுதணும் எழுதணுமென்று
எழுதாது இருக்கிறேன்.

ஏதாவது இரவில் கிறுக்குவது ஒண்ணுதான்
இப்போதைக்கு ஆறுதல்.

எப்படி ஆபிதீன் வாழ்க்கையை
சமாளிக்கிறீங்க?
காசுபணத்தை முன்வச்சி இந்த கேள்வியை கேட்கலே..
என்னமோ போங்க.

– தாஜ் / 28th Oct’2010

*

கவலைப்படாதீர்கள் தாஜ்..

உங்கள் நிலையில்தான் நான் இருக்கிறேன். ஒன்றும் உருப்படியாகச் செய்ய வழியில்லை. உங்களுக்கு கிறுக்குவது ஆறுதலென்றால் அதைப் பதிவதுதான் எனக்கு ஆறுதல். ‘நான் சுட்ட அப்பத்தை நீங்களும் வலைச்சட்டியில் சுட்டுவைத்து அசத்திவிட்டீர்கள். நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சி’ என்று தம்பி அறபாத் போன்றவர்கள் எழுதும்போது கொஞ்சம் சிரிப்பு. அவ்வளவுதான். நித்தமும் தொடரும் பிரச்சனைகள் என்னை அலைக்கழிக்கிறது. என்ன செய்வேன், எல்லாம் சரியாகும் என்று ‘அவனிடம்’ பாரத்தைப் போடுவதைத் தவிர? எழுதுங்கள். அது ஒன்றுதான் வழி – நாம் நினைக்கப்பட.

ஆபிதீன் / 30th Oct’2010

*

அன்புடன் ஆபிதீன்…

தமிழ்ப்பூக்கள் (மார்ச் -1982) இதழில் நண்பர் ஹாஜா அலி கைப்பட எழுதிய வடிவத்தை அனுப்புகிறேன். எழுத்துச் சிதறலான இந்த வடிவத்தை – முடிந்தவரை அப்படியே உபயோகிக்கலாமெனத் தோன்றுகிறது.
– தாஜ் / 30th Oct’2010

***

ஹாஜா அலி : மேலும் சில குறிப்புகள் – தாஜ்

பெயர்: ஹாஜா அலி / புனைப்பெயர்: ‘ராவுத்தன் ஹாஜா அலி’ / ஊர்: கூத்தாநல்லூர் / அத்தா: திருவாரூர் / அம்மா: ஜாவா (இந்தோனேசியா) / கணீர் தமிழ் பேசும் ஜாவா அம்மா! / பையனை தமிழ்ப் படிக்கவைத்த ஜாவா அம்மா! / ஆமாம்.. ஹாஜா அலி தமிழ் படித்தவர் / மதுரைப் பக்கம் கருத்தவாப்பா கல்லூரி / தமிழ் ஆசிரியர் : கவிஞர்(?) நா. காமராசன் / வயதில், நவீன இலக்கிய ஈடுபாட்டில்… என்னில் மூத்தவர் / சௌதி-அல்கோபர்-துத்பாவில் வைத்துப் பழக்கம் / புத்தகம் படிப்பதும், சிகரெட் புகைப்பதும் – அவர் விழித்திருக்கும் வேளையில் – அதிக நேரம் விழுங்கும் வேலை.

ரொம்ப வித்தியாசமான மனிதர்/ ‘ஹாஜாவா , யார்?’ – சொந்த ஊர் / தெருக்காரர்களே விழிக்க விளங்கிய மனிதர் / ஒருதரம், நானும் அவரும் புகைபிடித்தபடி பேசிக் கொண்டிருக்க, அவர் அடுத்த சிகரெட்டை பற்றவைத்துப் புகைத்தபடி, புகை எத்தனைக் கேடு என்றும், அது வேண்டாமென்றும் எனக்கு தீர அறிவுரை வழங்கினார்! / அவரது பொழுதுபோக்கு வேடிக்கையானது / சக நண்பர்களை, அவரது பார்வைக் குத்த பேசித் திரிபவர்களை (குறிப்பாய், தஞ்சை மாவட்ட இஸ்லாமிய சகோதரர்களை) கூர்ந்து வேடிக்கை பார்ப்பதுதான் அது. பல நேரம், அவர்களிடமிருந்து அவர் தள்ளிப்போய் முகம் மலர நமூட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு திரும்புவதை கண்டிருக்கிறேன் (நிஜத்தில், நம் சகோதர்கள் அத்தனைக்கு அப்படியா?).

அவருக்கு பொருளீட்டும் வித்தைக்காரர்களைப் பிடிக்கும் / அமெரிக்கர்களையும்,அமெரிக்காவையும் கேள்வியறப் பிடிக்கும்/ அவர்களது பரிபூர்ண சுதந்திரம்… ரொம்பப் பிடிக்கும் / ‘இஸ்லாம் , கேப்பிடலிசம் சார்ந்த மதம்’ என்பதைச் சுட்டிக்காட்ட ரொம்ப ரொம்பப் பிடிக்கும். கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் போன்ற சிகப்புத் தலைவர்களை வரிசையாக அவர் அறிவார். அந்த இயக்கத்தின் எந்தவொரு பொலிட்பீரோ உறுப்பினரையும் தாண்டி, அவர்களின் சித்தாந்தங்களை அறிவார். அத்தனையையும் தலைகீழாகப் புரட்டிப் படித்தவர்.

என்றாலும்… புரட்சிகர சிந்தனைகளுக்கு… ‘நோ’!. ஜனநாயகம்தான் ‘எஸ்’! / அதுதான் சுதந்திரத்தின் திறவுகோல்/ சுதந்திரமே உரிமைகளின் கண்ணி / உரிமைகள்தான் உயிரின் உயிர் / அது அற்ற உயிர், உயிர் வாழ்வது வேஸ்ட் / இந்திய இடதுசாரிகள்? கடுமையான வேஸ்ட் / பெரியார்? கேள்வியே வேஸ்ட், முகத்தை திருப்பிக்கொள்ளத் தகுந்த வேஸ்ட் / தொடர்ந்தால்… கதவைச் சாற்றும் வேகமும், இரட்டைத்தாள் இடும் ‘கிறீச்’… ‘கிறீச்’சும் கேட்கும் / அவருக்கு அவர் விபரமானவர் / கொண்டதை மாற்றிக்கொள்ள மாட்டார் / வயதுக்கு மீறிய அறிவு அப்படித்தான் நர்த்தனமாடும்!

கொண்டதை, மாற்றிக் கொள்ள மாட்டார் என்பது நிஜமானாலும், ஓரேடியாய் தீர்மானமாய் அப்படிச் சொல்லிவிட முடியாது / எனக்குத் தெரிந்து துக்ளக் சோ, அவரது வெகுக்கால செல்லம் / தீர்மானமான அரசியல் விமர்சகர் , தீரர், மஹா புத்திசாலி , சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட நேர்மை / அப்படித்தான் நம்பினார் / அப்படியே பேசினார்/ சோவை கேள்வியாக்கி அவரிடம் பலமுறை வாதாடி இருக்கிறேன் / ம்… ஹும் / அவர், தனது வட்டத்தை விட்டு வந்தது கிடையாது.

சோ குறித்த, அவரது இன்னொரு மதிப்பீடு அவரிடம் தகைத்தது / அது பிற்காலச் சங்கதி/ துக்ளக்கோடு எங்கே எப்போது மோதி காயம்கொண்டாரெனத் தெரியாது / நான் அவரைச் சந்தித்த ஓர் சந்திப்பில், சோ பற்றிய தடித்தச் சொல் அவரிடமிருந்து தெறித்தது / இடியட்! / தமிழில் முட்டாள் எனச் சொல்லலாம்/ தான் கொண்டதை, அவர் மாற்றிக்கொள்ள லேட்டானாலும்…. லேட்டஸ்ட் ‘ரைட்’!

வைத்தீஸ்வரன்கோயிலில் நாடிஜோசியம் பார்க்க, ஊரிலிருந்து அவர் நேரே சீர்காழி வந்து, வைத்தீஸ்வரன்கோயில்போக அழைத்தார் / நாடிஜோசியம் பார்க்கவேண்டிய அளவுக்கு வாழ்வில் அவருக்கு என்ன கஷ்டமோ, என்ன நஷ்டமோ/ அல்லது, எந்த அழுத்தத்திலான மனச் சங்கடமோ… எனக்குத் தெரியாது / அவர் பார்க்கணும் என்று கருதிவந்த நாடிஜோசியம் பார்க்கப்பட்டிருக்கும் பட்சம், அது அவருக்கு நிஜமாலுமே ஆறுதலை தந்திருக்கலாம் / புரிந்தே அவரை நான் மறுத்தேன் / அவரும் தன்னை மாற்றிக்கொண்டு ஊர் திரும்பிவிட்டார்/ இது எனக்குத் தெரிந்த இன்னொரு ‘ரைட்’!   

மறக்க முடியாத அவரது வித்தியாச சம்பவங்களும், நினைவுகள் ஏராளம் / கொஞ்சகாலமாக அவரே கூட, என்னில் வெறும் நினைவாக மட்டுமே வாழ்கிறார்! / எஸ்…/ அவர் இறந்து, அல்லது தற்கொலை செய்துக்கொண்டு (நிஜம் மறைக்கப்படுகிறது) பத்து வருஷம் ஆகிவிட்டது / 1.அவர் இப்படி திடுமென இறந்துப் போனதும், 2.பெரிதாக எதுவும் எழுதாது மறைந்துப்போனதும், அவர்மீது கோபத்தையே தருகிறது.

அபூர்வமாக எழுதக் கூடியவர் / கோடைக்காலத் தூறல் மாதிரி/ ‘எழுதணும் என்றில்லை தாஜ்…. நல்ல எழுத்தை தேடிப் படித்தாலே போதும், அதுவும் இலக்கிய ஈடுபாடுதான்’ என்பார் / தனக்குப் பிறகு, தான் கற்ற… வளர்த்தெடுத்த…. எழுத்து வாழணுமென அவர் நினைக்கவில்லை / இப்போது, அவரைக் காண… அவர் எழுதியதை தேடினால், சிலச்சில எழுத்துக்கள்தான் கிடைக்கிறது / அது கடுகு என்றாலும் வசீகரம் / கீழே அவரது கடுகானதோர் எழுத்துண்டு. இருபத்தி எட்டு வருடக் கடுகு! / ஓர் கோட்டோவியம் மாதிரியான கடுகு!/ வாசிக்கும் நாம்தான் தோணும் காட்சிகளையும், உருவங்களையும் அதில் ஏற்றிப் பார்த்துக் கொள்ளணும் / இது, நவீன எழுத்தின் இன்னொருமுனை! / அபூர்வரகம்!

ஆன்மீகத்தில் அபார நம்பிக்கை உடையவர் / அம்மா, மாமியார், மனைவி இவர்களோடு சச்சரவு என்றால்… அடுத்த அவரது நடவடிக்கை ஆன்மீக ரீதியகத்தான் இருக்கும்! மாதக் கணக்கில் ‘தப்லிக்’ புறப்பட்டுவிடுவார் / இடைக்கால, நவீன சந்நியாசம் மாதிரி! / மத அரவணைப்பிலான தப்பித்தல் என்றும் சொல்லலாம் / ஒரு ரம்ஜான் காலத்தின் முப்பது நாளும், நோன்போடு அவர், பள்ளிசாலை புகலிடமாக்கிக் கொண்டு பக்கா ‘இபாதத்’துடன் காலம் கழித்ததை நான் கண்டிருக்கிறேன்/ அவர், தீரா நேசித்த இறைவன்… அவருக்கு, ‘கபரின்’ கஷ்டத்தை இலேசாக்கியிருப்பானா? சொர்க்கத்தை காட்டுவானா? தெரியவில்லை.

சொல்ல மறந்துவிட்டேன்… மது அவருக்கு இஸ்டம். உயர்வகை மது, தீர இஸ்டம். சரியாகச் சொன்னால்… அதற்கு அவர் அடிமை! 

– கநாசு.தாஜ்

*

இந்திய….
சுதந்திர….
ஜனநாயக…
குடியரசு… முகங்கள்.

 
– ராவுத்தன் ஹாஜா அலி

இவ்வருஷமும்
இந்தியாவின்   ஆட்டு மந்தைகளுக்கு   பழக்கமும்
வழக்கமும்   இரும் பெரும்  தளைகள்.
சட்டை போடாத  ஜாதிகள்   இப்பவும்  
    சாகாவரம்      பெற்றிருக்கின்றன.
இந்த வருஷமும்   சுண்ணாம்புக் கட்டியிலிருந்து 
    சூரியன்வரை    சகலமும்   கோயில்   தெய்வங்களே.
அட,  புது வருஷமென்று  காந்தி சிலைப் பார்த்து 
            காகங்கள்  எச்சமிடாமல்
இருக்கப் போவதில்லை.  அரசியல்வாதி 
           குறைச்சலாய்  போய்விடப்போவதில்லை.
2010  நூற்றாண்டிலும்  இந்திய  இலக்கியங்களெல்லாம்  
                              சடாரென்று

தூக்கத்திலின்றும்   விழித்ததுபோல்  சுதாரித்துக் கொண்டு  திசை
            திரும்பப்போவதில்லை.

பழம்பெருமைகள் நிறைய பேச,   புதுக் கண்டுபிடிப்புகள்  
                              மௌனம்.

‘ரொபோட்’  யாருக்கும்   தெரியவராது.
ராக்காயி வயசுக்கு வந்தது  தெரியாதவனெல்லாம் 
          இத்தடவை அவசியம் தெரிவர்.

இன்னும்   தெரிந்த முனியாண்டி  
           தெரியாத முஸ்தபாவாக  உருவெடுப்பான். 

               மூன்லைட்டில்     கூட்டாஞ்சோறு
               நியான்லைட்டில்      ஊதாரி
               நக்ஸலைட்டில்     பட்டதாரி
                               
                           மேலும்
                   
                  சாதுகள்     சம்சாரித்து
                      சம்சாரி      சன்யாசித்து
                   ரவுடிகள்    சட்ட சபையில்
                ரயில்கள்  விபத்தில்   – நான் தனியே  விட்டுவந்த
                         தங்கச்சி   ஆபத்தில்.
மீந்து கிடக்கும்   கிழங்கட்டைகள்   பார்க் பெஞ்சிலும்,  பீச் மணலிலும்
பழசு  பேசி   வெத்திலை   மெல்லலாம்.     அதோடு…

யுகத்துக்கு முந்தி   எழுதிப்பெற்ற    வேய்ங்குழலுடன்
இடையனின்   மேய்ப்பு.   வழக்கமே  இந்திய   சிங்கங்கள் கத்த
இந்தியக்   கழுதைகள்   கர்ஜிக்கும்.  இந்த   நாதத்தின்   பேதமறியா
அவசரமாய்   மானிடர்   அலைவர்.

                 
                  அவன்   அரிசிக்காய்.
       இவன்  பருப்பிற்காய்.  தின்று கொழுத்த எவனோ ஒருத்தன்
                  பாவாடை   மீறிய   பருவத்துக்காய்.

எனக்கும்   உனக்கும் மட்டும்   திரும்பவும்   டூரிங் டாக்கீஸ் பார்த்து
சக்கை   போடு  போடும்       எம்ஸியாண்டை  போதும்.
எழுதிப்  படிக்க  வேண்டிய     வயதுகளுக்கு    ரஜினிகாந்த்.
    
   
     இந்த லட்சணத்தில்    இனி ஒரு   மாடலாய்   நாற்பது பக்க
     கணக்கு நோட்டு புக்கின்   அட்டையில் சரிதா   சிரிக்கலாம்.
அவதி அவதியாய்  கட்டப்பட்ட  அணைகள் 
                    திரும்பவும்  உடையலாம்.
திரும்பத் திரும்ப   பஸ்கள்  
                    பாதசாரிகளை   பதம் பார்க்கலாம்.

இருநூற்றி   எழுபத்தெட்டாவது  தடவையாக 
                     வரிகள்   ஏறலாம்.
முன்னூற்றி   நாற்பதாவது முறையாக  
                   அரசியல் சாசனம்  திருத்தலாம்.

அங்கே   ‘அந்துலே’ சைஸில்     இன்னொரு   ‘பொந்துலே’
முதன் மந்திரியாகி   பணம்   பண்ணலாம்.

ஏழைகளுக்கும்   ஏமாந்தவனுக்கும்   இப்பவும்  இருக்கவே
                                      இருக்கின்றன,  

                 ஈரத்துணிகளும்
                        நீண்ட   நீண்ட    கியூக்களும்.

அத்தனைக்   கியூவிலும்  நின்று  பார்த்துவிட்டு   இந்த முறையும்
எந்த   கவிஞனாவது   “இன்று  என்னிடம்   பீரங்கி   இருந்தால்”
என்று     புதுக் கவிதை    எழுதலாம்.
காக்காக்கடிப்   போட்டு   சின்னப் பயல்கள் விளையாட்டில்  
                         திண்ணை     ரெண்டுபடுவது போல 
பெரிய   மனுஷன்கள்  வினையால்  அரசியல்  கூறுபடும்.  
          
       டை கட்டி   நகரத்தார்   பூரிகிழங்கு  தின்க,   மிஞ்சியபேர்
             புது   கடன்காரர்கள்.
         புது   கவிஞர்கள்.

            உழைப்பும்    உரிமையும்     ஊரான் சொத்து
அதில்     மறந்தும்கூட   இந்த   வருஷமும்   கைவைக்கவேண்டாம்.

           ரௌத்திரம்   பழகச்   சொன்னது   பாரதிதான்.
அதனால்    என்ன?     அவன்தான்    இல்லையே.

        சாதுவாயிரு ! 
        இவ்வருஷமும். . . .
        புண்ணிய    பாரதத்தில்
        திரும்பத். . . . பம்ருதி
        கத்தரிச் செடி
               வளர்ப்போம். . . .  வா. 

***

நன்றி: கநாசு. தாஜ் | E-Mail : satajdeen@gmail.com

நாளைய தமிழகம் – ஆக்டோபஸ் (1982)

இணையம், டி.வி சேனல்களென்று எதை நோக்கினாலும் ஆரூட அரசன் ஆக்டோபஸ் ‘பால்’ பற்றிதான் பேச்சு. ‘ஆரூடம் சொன்னாயே… ஆருயிர் நீத்தாயே!’ என்று அழுகிறது தினமலர். தன் வாழ்வை கணிக்கமுடியாத ‘பால்’-ன் ஆத்மா சாந்தியடையட்டும். இன்னாலில்லாஹி…! கால்பந்து ரசிகர்களின் சோகத்தை விடுங்கள், கவிதை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்த நமது ‘சீர்காழி ஆக்டோபஸ்’ தாஜ் ,எழுதிய ஒன்றை பதிவிடுகிறேன். 1982-ஆம் வருடம் தனது ‘தமிழ்ப்பூக்கள்’ இதழில் – சவுதியில் – எழுதியிருக்கிறார், ‘மணிமுடி’ என்ற புனைபெயரில். அப்போதெல்லாம் எவருக்கும் புரிகிறமாதிரிதான் எழுதியிருக்கிறார் மனுசன். அதைவிட ஆச்சரியம் இவரது அன்றைய கனவு இன்றும் , என்றும் பொருந்தக்கூடியதாக இருப்பது. வாழ்க ஆக்டோபஸ் கனவுகள்!

***

நாளைய தமிழகம்

– மணிமுடி (தாஜ்)

என் கனவுகள் தூய்மையானது.
ஏன்…
சத்தியமானதும் கூட.

என் தாய்நாடு
நாளை எப்படியெல்லாம்…
இருக்கவேண்டுமென நினைக்க…
கனவுகள் காண
இன்றைக்கு எனக்கு பேராவல்.

நான் மந்திரம் தெரிந்தவனாக இருந்திருந்தால்…
இப்படிக் கனவுகளுடன் கட்டுரை
எழுதிக்கொண்டு இருக்கமாட்டேன்.

நான்….
சாதாரண மனிதன்.
இப்படித்தான் எழுதி… எழுதி…
என் சகமனிதர்களுக்கும்
கனவுகளை பகிர்ந்தளித்து கிரியையூட்டி
அவர்களோடான கூட்டு முயற்சிகளால்
நாளைய ‘அந்த’ நாட்டை
அலங்கரித்துப் பார்க்க முயலவேண்டும்.

என் நாட்டிற்கு…
இன்றைக்கு என்ன நேர்ந்துவிட்டது?
நான் ஏன்
நாளைய ‘அந்த’ நாட்டை
அலங்கரிக்க கனவு காணுகின்றேன்?
இன்றைக்கு ஒன்றும் நடக்கவில்லை…
அதனால்தான்.

பிறந்த பூமியை பறிகொடுத்துவிட்டு,
கண்ட நாடுகளிலெல்லாம் தஞ்சமென அடங்கி
சொந்த மண்ணைத் தேடும் பாலஸ்தீனர்களை விட
நாம் கொஞ்சம் தேவலாம்தான்.

குந்த நிலமிருக்கிறது.
பிரச்சனைகளைச் சொல்ல வழியிருக்கிறது.
மற்றபடி
பாலாறும் – தேனாறும்
நேற்றைய புலம்பலாக மட்டுமே இருக்கிறது.

இன்றைக்கு….
என் நாட்டில் சுகவாசம் செய்யும்
அரசியல் மரங்கொத்திகள்
நிறைய இருக்கின்றார்கள்.
ஆனால்…
வேருக்கு நீர்விடத்தான்
எண்ணிவிடும் அளவிலும் ஆட்களில்லை.

மக்களோ….
பதப்பட்டுப்போய் விட்டார்கள்.
பதவியில் உட்காருபவனையெல்லாம்
பரமன் என்று நினைக்க பக்குவப்பட்டுவிட்டார்கள்.

அவர்களை நிமிர்க்க வேண்டியது
என் புத்தியின் ,
பொறிகொண்ட எல்லோருடைய புத்தியின்
கட்டாயம்.
தவிர,
காய்கள் நாளடைவில் பழுத்துவிடும் என்பது
இயற்கையின் விதி.
என் ஆசைக்கு ஆறுதல் தரும் விதி.

என் தாய்த் தமிழகத்தில்
நாளைக்கு பொன்னும் மணியும்
காய்த்துத் தொங்கவேண்டும் என்கிற
பேராசை இல்லை எனக்கு.
ஆனால்…
பொன்னும் மணியும் கொண்டுவந்து குவிக்கும்
தொழிற்சாலைகள் சங்கொலிக்கவேண்டும்.

விண்முட்டக் கொடி போட்டு
இறுமாந்திருக்க அல்ல இந்த ஆசை.
நேச நாட்டுக்காரனிடம் நேர்பார்த்து பேச
உயரம் வேண்டுமே என்பதினாலான ஆசை.

இன்றைய அரசியல்வாதிகளைப் பற்றி
எனக்கு கவலை இல்லை.
ஆனால்….
நாளைக்கு எவனேனும் அவன் சந்ததியென
சொல்லிக்கொள்ள வெட்கிக் கூசும் நிலைவேண்டும்.

அன்றைக்கு…
என் மக்களை என் மக்களே ஆளவேண்டும்.
என் மொழி, எனக்கு தேசியமொழியாக ஆகவேண்டும்.

என்னை ஆள்கிறவன்
என்னைவிட சிறுவனாக இருக்கலாம், அனுமதிப்பேன்
ஆனால்…
உலகில் செங்கோல் பிடிக்கும் எவனைவிடவும்
அவன் புத்திசாலியாக இருக்கவேண்டும்.

நாளை என் நாட்டில்…
குறைவாய் படித்தவன் இவன்தானென
எவனொருவனைக் காணவும்
மோப்பநாய் கொண்டு அலையவேண்டும்.

தமிழ், கம்ப்யூட்டரில்
நடனம்புரிய வேண்டும்.
மறுமலர்ச்சியின் சாட்சிகளாக…
விஞ்ஞானத்தின் கூறுகள்
வீதிகளில் விஞ்சிக் கிடக்கவேண்டும்.

வருங்கால சந்ததியர்கள் படிக்கும் சரித்திரத்தில்
இமயத்தில் கொடிபோட்ட தமிழனுடன்
கிரகங்களில் குடியேறிய தமிழனின்
அறிவும் தீரமும் சேரவேண்டும்.

லஞ்சத்திற்கு…
அகராதியில் அர்த்தம் தேடவேண்டும்.
தீண்டாமை…
புரியா வார்த்தையாக வேண்டும். 

நாளைய தமிழகம்…
இன்றைய தமிழகத்தை
கெட்டகனவாக மறக்கவேண்டும்.

***

(மார்ச்-1982 / தமிழ்ப் பூக்கள்)

***

நன்றி: தாஜ் / தமிழ்ப் பூக்கள் 😉

E-Mail : satajdeen@gmail.com

« Older entries