‘ஏழாவது வானத்தில் பேசப்படும் மொழி நம் தமிழ்மொழிதான்’ என்று ஒரு அபூர்வ குண்டைத் தூக்கிப் போட்டார் ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் அவர்கள்! – தமிழன் டி.வியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் (8th Feb’09) . அசந்தே போய்விட்டேன். ‘உலகின் எட்டாவது அதிசயம் நம் தமிழ்மொழி’ என்று அவர் கூறியதன் தொடர்ச்சியாக இது இருப்பதால் இந்த குண்டை உலகின் ஒன்பதாம் அதிசயமாக வைத்துக்கொள்கிறேன்.
என்ன வேடிக்கை! இருக்கிற வானத்தின் ஒரு இஞ்ச் ரகசியத்தை கண்டுபிடிக்கவே ஓராயிரம் கோடி ஆண்டுகள் வேண்டும் . இதில் எட்டாத ஏழாவது வானத்துக்கு ‘செட்’டாகப் போகிறாரே அவர், இது சரியா? ‘வெகுமானம் என்ன வேண்டும் எனக் கேட்டால் அப்துல் ரகுமானைத் தருகவென்பேன்’ என்ற கலைஞருக்கு கவலை வந்துவிடுமே என்று எனக்கு கவலையாக இருக்கிறது.
உண்மையில் , ‘கவிக்கோ’ அவர்கள் நேரடியாக அப்படிச் சொல்லவில்லைதான். ஆனால், பெரும்புலவர் கல்வத்து நாயகம் அப்படி சொன்னதாகச் – பெருமைபொங்க – அன்று சொன்னதால் மறைமுகமாக இது ‘கவிக்கோ’வின் கருத்தும் ஆகிறது என்கிறேன்.
வெள்ளிக்கிழமை குத்பா (பிரசங்கம்) தமிழில்தான் இருக்கவேண்டும் என்று ஆணித்தரமாக வாதிட்ட மகான் கல்வத்து நாயகமப்பா அப்படிச் சொன்னார்களாம். சொன்னார்கள் என்றால் ‘ஏழாவது வானம்’ என்று அந்தப் பெருமகான் சொன்னதற்கு ‘கவிக்கோ’ புரிந்துகொண்டது வெறும் மொழி பற்றிய பெருமிதம் மட்டும்தானா அல்லது வேறெதாவதா? எனக்குப் புரியவில்லை. சூஃபிக் கவிதைகளை சூப்பராக எழுதும் ‘கவிக்கோ’ அவர்கள் தமிழின் பழம் பெருமை அறியாத எனக்கு கொஞ்சம் விளக்கவேணும். அதற்கு முன், ‘ஒவ்வோர் இரவும் இறைவன் உலகத்தை அடுத்திருக்கிற வானத்துக்கு இறங்கி வருகிறான்’ என்ற நபிமொழிக்கு ஹஜ்ரத் மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாக்கவி கொடுத்த விளக்கத்தையும் படிக்கவேணும்.
ஏன், நீங்களும் படிக்கலாம்!
சகோதர மதங்களை, மதத்தவர்களை மதிக்கும் பண்பாளரான ‘கவிக்கோ’ இஸ்லாமியர்களின் தமிழ்ப்பணி குறித்து அன்று நிறையவே சொன்னார். தமிழகத்தில் இஸ்லாம் பரவியது ஷாஹுல் ஹமீது பாதுஷா , பீரப்பா போன்ற சூஃபி ஞானிகளால்தான் என்றார். சிவவாக்கியரை அடியொற்றி ,’கோயிலாவது ஏதடா குருக்க ளாவது ஏதடா’ என்றெழுதிய பீரப்பா பாடலின் முடிவு ‘லாயிலாஹா இல்லல்லா முஹம்மதுர் ரசூலுல்லா’ என்று – சந்தத்திற்கும் யாப்புக்கும் – பொருந்தி வருவதை பிழையின்றிச் சொன்னார். பல்சந்தமாலை பற்றிப் பரவசமாகச் சொன்னார். ‘முன் உதித்து பின் பிறந்த’ ரசூல்(ஸல்) பற்றி முகம்பூரிக்கச் சொன்னார். நாமா, முனாஜாத்துகள் (மானசீக வேண்டுதல்கள்) பற்றி நன்றாகச் சொன்னார். சதாவதானி பற்றி சலிக்காமல் சொன்னார். சித்தர்களின் பாடல்கள் அனைத்திலும் இஸ்லாமியக் கருத்துக்களின் தாக்கம் இருப்பதை சிந்திக்கச் சொன்னார். ‘தூங்கு’ என்று துர்ச்சகுனமாகச் சொல்லாமல் ‘உறங்கி முழி’ என்று உயர்ந்த அர்த்தத்துடன் பாடும் இஸ்லாமிய மாதர்களின் தாலாட்டை இனிமையாகச் சொன்னார். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ , 21 காப்பியங்கள், குணங்குடியப்பா, ஷேகனாப் புலவர், நான்காம் தமிழ்ச்சங்கம் கண்ட நாகூர் குலாம்காதர் நாவலர் , 1871ல் வந்த பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதையை எழுதியது ஒரு முஸ்லிம் புலவர்தான் என்று நீ..ண்டு… ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் வரும் ‘லாவணி’ ஸ்டேஷனில் வண்டி நின்றது.
நின்றவேகத்தில் விழுந்ததுதான் அந்த குண்டு!
சமகால அரசியல், இலக்கியம் சம்பந்தமாக மிகச்சிறப்பான கட்டுரைகளை இன்று இணையத்தில் எழுதும் எச்.பீர் முகமது, ஜமாலன் போன்றவர்களை அவர் சொல்லாதிருக்கட்டும்; எ-கலப்பை அவருக்கு தெரியாது. ஆனால் எல்லோருக்கும் தெரிந்த தோப்பில் முஹம்மது மீரான், மனுஷ்யபுத்திரன், சல்மா, ஹெச்.ஜி. ரசூல், நாகூர் ரூமி, கீரனூர் ஜாகீர்ராஜா , மீரான்மைதீன் (‘என்னய வுட்டுட்டியேய்யா..’ – தாஜ்) போன்றவர்களையாவது குறிப்பிடலாம் இல்லையா? குறிப்புகளுடன் எப்போதும் வரும் ‘கவிக்கோ’ வாயைத் திறக்கவில்லை. ‘வானம்பாடி’களுடன் இலக்கியம் நின்றுவிடுகிறதா என்ன? இதற்கு, முந்தைய வாரம் வந்த முனைவர் மு.இ. அகமது மரைக்காயரின் நிகழ்ச்சி எவ்வளவோ பரவாயில்லை. இலங்கை ஜின்னா சர்புதீனிலிருந்து இங்கிருக்கும் இன்குலாப் வரை வந்தார் அவர். வாழ்க தமிழ், வளர்க தமிழ்!
தமிழுக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய, ஆற்றிவரும் தொண்டு பற்றி எனக்கு ஒரு குழப்பமில்லை எதுவும் எழுதாததால் நானும் ஒருவகையில் தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றியிருக்கிறேன் என்பதிலும் மறு சந்தேகமில்லை. சந்தேகம் அந்த ஏழாவது வானத்து தமிழ் மீதுதான். முதல்வானத்தில் பேசப்படும் மொழிதானே முதல் மொழியாக இருக்க முடியும்? ஏழாம் வானம் எனில் தமிழ் கடைசியாக அல்லவா போய்விடுகிறது! விடை சொல்லுங்கள்.
‘ஏழாவது வானத்தில்
இருக்கும்
இறைவனல்லவா சொல்லவேண்டும்?
அது சரி,
முதலாம் வானத்தின்
நிலை என்ன?
அங்கு மவுன பாஷையா?’ என்கிறார் எங்கள் இஜட். ஜபருல்லா.
விதானம் என்ற வார்த்தையிலிருந்து வந்த வானம் என்பதை ஜபருல்லாநானா அடுக்குகள் (Layers) என்றே சொல்வார் – ‘விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்’ பாட்டை படித்துக்கொண்டு. படித்தரம். ‘ஹிலுரு நபி’ என்பது நபியைக் குறிப்பதல்ல, பசுமையை , ஆக்கபூர்வமான மனநிலையை குறிப்பது, மதம் தாண்டி மனிதர்களை நேசிப்பது என்று ஆன்மிகம் பேசுபவர் அவர். அவருக்கு வானம் அவர் வீட்டு ‘மச்சு’தான், எனக்கு வானம் என் வீட்டு அஸ்மா மச்சி!
திருக் குர்-ஆனில் ஏழு வானங்கள் வரட்டும். (2 :29 , 41 : 12). அந்த மகத்துவத்தை அறியும் அறிவு எனக்கு கிஞ்சித்தும் கிடையாது. (அடி வாங்கும் வல்லமை இல்லை என்பது நேர்ப்பொருள்!). அங்கு இந்த மொழிதான் பேசப்படுகிறது என்று விதந்தோதுவதுதான் வியப்பை அளிக்கிறது. ‘இறைவனுக்கு விருப்பமான , நெருக்கமான மொழி’ என்று சொல்ல வந்தார்களோ? ஆனால். பேசாதிருக்கும் ஞானிகளுடன் அல்லவா இறைவன் பெரும்பொழுதை செலவழிக்கிறான்!
ஒரு முஸ்லிம் ‘அறிவியல்’ அறிஞர் என்னடாவென்றால் உலகின் முதல் மனிதன் பேசியது தமிழ் மொழிதான் என்கிறார். வஃக்ப் ‘வாரிய’த் தலைவரான இவர் என்னடாவென்றால் இப்படி சொல்கிறார். ‘ஏழாவது வானம்’ என்று கூகுளிட்டேன். எழுபது குழப்பங்களோடு இன்னொரு தளம் விரிகிறது – இவர்கள் இருவரையும் தோற்கடிக்க. ‘1.பூமி 2.தண்ணீர் 3.காற்று 4.நெருப்பு 5.முதல் வானம் 6.இரண்டாவது வானம் 7 .முன்றாவது வானம் 8.நான்காவது வானம் 9.ஐந்தாவது வானம் 10.ஆறாவது வானம் 11.ஏழாவது வானம் 12 .எட்டாவது வானம் (குர்ஸி) 13.ஒன்பதாவது வானம்(அர்ஷ்) 14.சூக்கும உலகம் 15.ஆன்ம உலகம் 16.ஜபரூத் 17 .லாஹுத், ஹளரத்துல் ஹக்கு.’ என்று ‘ஹலக்பலக்’காக விரிகிறது அந்த ஆன்மீகத் தளம். இங்கே என்னங்க, அரபியா அல்லது உருதா?
இப்படி ஒரு படம் வேறு!
பல வருடங்களுக்கு முன்பு , துபாயில் ஒரு மையத்திற்கு போன ஒருவரின் காதில் செவுட்டுஹஜ்ரத் என்பவரின் போதனைகள் விழுந்தன. ‘அல்லாஹுத்தாலா ‘அர்ஷ்’லதான் இருக்காண்டு நம்புறதுதான் இஸ்லாம். அங்கிங்கெணாதபடி எல்லா இடத்திலேயும் இருக்குறாங்குறது காஃபிர்களோட கொள்கை; தெரிஞ்சிக்குங்க. ‘அர்ஷ்’ எங்கேயிருக்கு? ஏழாவது வானத்துக்கு அப்பால இருக்கு. ஒரு வானத்துக்கும் இன்னொரு வானத்துக்கும் உள்ள தூரம் என்னா தெரியுமா? ‘ஐநூறு அரபிகள் நடை !’ (அரபிகள் ஒருநாளைக்கு ஐம்பது மைல் தூரம் நடப்பார்களாம்)
மையத்து எழுந்துவிட்டதா இல்லையா என்பது தெரியவில்லை. கேட்டவருக்கு அன்றிலிருந்து காது கேட்காது!
‘திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக’ என் மூளை இப்போது குழம்புகிறது.
குழப்பம் தீர்ப்பது எங்கள் ஹஜ்ரத்துதான்.
‘திருக்குர்ஆனிலிருந்து நாங்கள் சாரத்தைப் பிழிந்து எடுத்துக்கொண்டு எலும்புகளை எல்லாம் நாய்களுக்கு எதிரில் தூக்கி எறிந்துவிட்டோம்’ என்ற பாரசீக ஞானி ஒருவரின் காட்டமான கவிதை வரிகள் பல அடங்கிய ‘தர்க்கத்துக்கு அப்பால்’ புத்தகத்தில் ஹஜ்ரத் எழுதியதை கீழே பதிகிறேன். தக்க சமயத்தில் இந்த புத்தகம் கொடுத்து உதவிய ஹமீதுஜாஃபர் நானாவுக்கு என் நன்றி உரித்து. ‘நுஸுல்’ என்ற மூலவார்த்தைக்கு ‘இறங்குதல்’ என்று அர்த்தம்; இதன் வினைச்சொல்லான ‘அன்ஸால்னா’வுக்கு ‘இறக்கினோம்’ என்று அர்த்தம்; ‘நாம் தெளிவான குர்ஆனை இறக்கினோம்’ என்ற இறைவசனத்தில் இந்த வார்த்தை பிரயோகிக்கப்படுகிறது; இதை ‘கொடுத்தோம்’ அல்லது ‘அளித்தோம்’ என்றே பொருள்கொள்ள வேண்டும்’ என்று விளக்குவார்கள் ஹஜ்ரத். (இப்படித்தான் அரபி பயமுறுத்தும்!)
‘வினா எழுப்புவது அறவே கூடாது’ என்று நான் சொல்லவில்லை. வினா எழுப்புகிறவர்கள் சிந்தனையின் சிரமத்தைச் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்’ – இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
சரி, ‘ஏழாம்’ உலகத்துக்கு, அல்ல, வானத்துக்கு போவோமா? வசதி கொஞ்சம் கொறச்சல்தான். ஆனாலும் மனம் இருந்தால் ‘மார்க்கம்’ உண்டு!
‘மேலிருந்து கீழே இறங்குவதும் கீழிருந்து மேலே ஏறுவதும் இறைத் தன்மைக்கு கொஞ்சமும் பொருந்தாதவை, மேலே-கீழே என்று குறிப்பிட்டுக் கூற முடியாவதவாறு எங்கும் நிறைந்த இறைவன் எப்படிக் கீழே இறங்க முடியும்?
அவன் உண்மையிலேயே மேல் வானத்திலிருந்து கீழ் வானத்துக்கு இறங்கி வருகிறான் என்பது சரியான கருத்துதான் என்றால் இப்படி இறங்கி வருவதற்கு முன்னர் கீழ்வானம் இறைவன் இல்லாத இடமாக இருந்தது என்பது பொருள்; இறங்கி வந்தபின்னர் மேல்வானம் இறைவனை இழந்து விட்டது என்று அர்த்தம்.
எந்த இடத்துக்கும் கட்டுப்படாமல் எந்தக் காலத்துக்கும் உட்படாமல் எங்கும் எப்போதும் நிறைந்து நிற்கிற இறைவனுக்கு இது கொஞ்சமும் பொருந்தாத வர்ணனையாகும்.
அப்படியானால் இந்த நபிக் கருத்துக்கு உண்மையான பொருள்தான் என்ன?
…. …… …… …….
இந்த நபிமொழியின் வார்த்தைகள் வெளிப்பார்வைக்கு தோன்றுவதுபோல், மேல்வானத்துக்கும் கீழ்வானத்துக்குமாக இறைவன் நடைபோடுகிறான் என்று கூறவில்லை. அவன் பகலில் ஓரிடத்தையும் இரவில் ஓரிடத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் என்றும் எடுத்துரைக்கவில்லை.
இந்த நபிக் கருத்து, மனிதன் எப்போது இறைவனை நெருங்க வேண்டும் என்பதற்கு தெளிவான விளக்கம் கொடுக்கிறது.
பகல் நேரம் என்பது பல்லாயிரம் பிரச்சினைகளைக் கொண்டது. அப்போது பரபரப்புக்கும் எண்ணச் சிதறலுக்கும் எந்தப் பஞ்சமும் இருக்கது. வேலைகளும் பொறுப்புகளும் மனிதனின் மனத்தை தம் பக்கம் இழுத்துக்கொண்டிருக்கிற காரணத்தால் நெளியாத மனத்துடன் இறைவனை தியானிப்பது பெரும்பாலோருக்கு ஏறக்குறைய அசாத்தியாமான ஒன்றாகிறது. இரைச்சலும் நிலைகொள்ளாமல் அலைந்து திரிகிற எண்ணமும் ஆட்சி செலுத்துகிற இந்த நேரத்தில் ஒருவன் இறைவனை நினைத்து பிரார்த்திக்க முற்படும்போது , அவன் வெகுதூரத்தில் இருப்பது போன்ற உணர்வு மனிதனுக்கு ஏற்படுகிறது. நீங்கள் விரும்பினால் ‘வெகுதூரத்தில்’ என்பதற்கு பதிலாக ‘மேல்வானத்தில்’ என்றோ ‘ஏழாவது வானத்தில்’ என்றோ வைத்துக்கொள்ளுங்கள்.
இரவுநேரம் என்பது எல்லா வகையிலும் இதற்கு நேர் எதிரானது. பொறுப்புகள் நிறைவேற்றப்பட்ட காரணத்தினால் மனத்தில் அமைதியும் எண்ணத்தில் கூர்மையும் தோன்றுகின்றன. மனிதனின் கவனத்தைத் தம் பக்கம் கவர்ந்து இழுக்கக்கூடிய பிரச்சினைகள் அறவே இல்லாததால் – அல்லது அதிகமாக இல்லாததால் – பிரச்சினையற்ற இறைவனின் பக்கம் அவன் மனம் திரும்புகிறது.
‘இரவு நேரங்களில் இறைவனைத் துதித்து நான் பேரின்பம் அடைகிறேன்’ என்று சொல்கிறார் ராபியா பஸ்ரியா.
மனம் போன போக்கில் வாழ்ந்துகொண்டிருந்த ஒருவன் ‘இறைவன் என்ன செய்துகொண்டிருக்கிறான்?’ என்று கேட்டபோது –
முஹ்யித்தீன் பின் அரபியின் முகத்தில் புன்னகை விளையாடிற்று.
‘இறைவன் பகல் நேரத்தில் உன்னைப் போன்ற மனிதர்கள் செய்யும் செயல்களைப் பார்த்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறான். இரவு நேரத்தில் எங்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறான்!’
இந்த கோணத்திலிருந்து பார்க்கும்போது, இறைவன் மிக அருகில் வந்துவிட்டது போன்ற உணர்வு மனிதனுக்கு தோன்றுகிறது. வேண்டுமானால், ‘மிக அருகில்’ என்பதற்குப் பதிலாக ‘முன் வானத்தில்’ என்றோ ‘முதல் வானத்தில்’ என்றோ வைத்துக்கொள்ளுங்கள்.
‘ஒவ்வோர் இரவும் இறைவன் உலகத்தை அடுத்திருக்கிற வானத்துக்கு இறங்கி வருகிறான்’ என்ற நபிமொழிக்கு இதுதான் உண்மையான பொருள்.
….. …… ……. ……..
திருக்குர்ஆன் என்பது பெருமானாருக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட ஒன்று என்பது இஸ்லாத்தின் கொள்கை. ஆனால் அது ஏழாவது வானத்திலிருந்து இறைவனால் இறக்கி வைக்கப்பட்டது என்று கூறுவது உண்மைக்கு எதிரானது மட்டுமல்ல ‘இறைவன் எங்கும் நிறைந்தவன்’ எனும் அடிப்படைக் கருத்துக்கு களங்கம் விளைவிப்பதாகும்’
– மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாக்கவி , ‘தர்க்கத்துக்கு அப்பால்…’ நூலிலிருந்து… (முதற் பதிப்பு. பக் : 86 – 86)
*
கல்வத்து நாயகம் கரெக்டாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் !
**
நன்றி : தமிழன் டி.வி, ‘கவிக்கோ’, அமீர் ஜவ்ஹர், ஜபருல்லா
**
பார்க்க :
இஸ்லாமும் தமிழிலக்கியமும் – அஜ்மல்கான்
நண்பர் கய்யூமின் ‘கவிக்கோ’ வலைப்பக்கம்