குரங்குகளை எப்படிச் சமாளிப்பது?

கல்யாணம் பண்ணாமல் இருந்துகொள்ள வேண்டியதுதான்!

இல்லை, உங்கள் பதில் தப்பு.

‘(மச்சமுள்ள) உண்மையான நபரை எப்படி கண்டுபிடிப்பது?’ என்ற கேள்விக்கு,  ‘சட்டையக் கழட்டிப் பாக்கனும்’ என்று ஒருவர் சொல்லும்போது சுருளிராஜனோ என்னெத்த கண்ணையாவோ ( படம் :’நான்’?) ‘அதான் கெடையாது, பனியனையும் சேர்ந்து கழட்டனும்!’ என்று பக்காவாக பதில் சொல்வது போல இருக்கிறது நீங்கள் சொல்வது.

‘முதலில் பாம்பு, இப்போது குரங்கா? ஏது, மிருகக்காட்சிசாலைக்கு வந்த மாதிரில இருக்கு!’ என்றெல்லாம் முனகவேண்டாம், பிறந்த கணத்திலேயே ‘ஜூ’வில் வந்து விழுந்து விட்டோம் நாம். தெரியும்தானே? இது முற்றிலும் வேறு குரங்குகள் ஐயா. ‘பதிவுகள்’ இதழில் வெளிவந்த ஒரு உளவியல் கட்டுரையில் வரும் குரங்குகள். சரி, அந்தக் குரங்குகளைப் பார்ப்பதற்கு முன்பு ‘ஓசை’ என்ற சுற்றுச்சூழல் இயக்கத்தை நடத்திவரும் அற்புத மனிதரான காளிதாஸ் காடடும் குரங்குகளைப் பார்க்கலாமா?. தீராநதி (செப்டம்பர் 2008) இதழில் வெளிவந்த அவரது நேர்காணலை நேற்றுதான் காண முடிந்தது – நண்பர் சாதிக் தயவால். ‘காடு என்பது வெறும் மரங்களல்ல’ என்று சொல்லும் அந்தக் கட்டுரையைப் படித்து நான் கண்ணீர் விடுவதைப் பார்த்து, ‘அப்டியே கொரங்கு அளுவுற மாதிரியே இக்கிது நானா’ என்றார் அவர்!

‘கரெக்டா சொல்லியிருக்கார்’ என்ற பின்னூட்டம் வேண்டாம். அஸ்மாவுக்கு அது தெரியும்!

குரங்குகளை எப்படி சமாளிப்பது?

மனிதர்களை சமாளிக்க வேண்டும், அவ்வளவுதான்! அதற்கு முன் , தியானம் செய்யும் இந்தக் குரங்கை பாருங்கள். நண்பர் ஜமாலன் மூலம் அறிமுகமான சகோதரர் ‘ரௌத்ரன்’-இன் ஜலதரங்கப் பதிவிலிருந்து வந்தது இந்தக் குரங்கு. ‘பரகா’ சினிமாவைப் பற்றிய அற்புதமான பதிவு அது.


நேற்று முழுக்க இந்தக் குரங்கையே பார்த்துக் கொண்டிருந்தேன். relax relax my little brother!

சுற்றுச்சூழல் பற்றி திடீரென்று ஏன் விழிப்பு வந்ததென்றால் முந்தா நாள் – தமிழன் டி.வியில் – மௌலவி சதுத்துதின் பாகவி பேசிய பேச்சு காரணம்.  புவி வெப்பமாதல் குறித்தெல்லாம் ஆலிம்கள் பேசுவது மிக நல்ல மாற்றம். தொடரட்டும். சல்மான் அல் ஃபார்ஸி சந்தோஷப்படுவார்கள்!

காளிதாஸ் என்ன சொல்கிறார்?

‘குரங்குகளுக்கு உதவுவதாகச் சொல்லி அவற்றை பெரிய சீரழிவுக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது இந்தக் குரங்குகளுக்குத் தேவையான உணவு காட்டிலேயே இருக்கிறது என்பதை. அப்படி அங்கு உணவு இல்லையென்றால் உணவுள்ள இடத்தைத் தேடி அது போய்விடும். நாம் உப்பிட்டு சமைத்த உணவு அந்த விலங்குகளுக்கு நோயைத் தருகிறது. அடுத்து, நமது உணவிற்கு பழக்கப்பட்ட விலங்குகள் காட்டிலுள்ள உணவுப் பண்டங்களைத் தேடிப் போவதில்லை. ஆகவே, நம்மைச் சார்ந்து செயல்பட ஆரம்பித்து விடுகின்றன. அப்படியே செயல்படத் துவங்கும்போது  அந்தக் குரங்குகள் பிச்சைக்காரர்களாக மாறிப்போகின்றன. நாம் உணவளிக்காத காலத்தில் அவை நம் வசிப்பிடங்களைத் தேடி நகரங்களுக்கு வருகின்றன. வந்தவை பிறகு நம் வீட்டில்  இருப்பதைத் திருட ஆரம்பிக்கின்றன. முதலில் பிச்சைக்காரர்களாக இருந்தவை பிறகு திருடர்களாக மாறுகின்றன’ என்கிறார்.

கண்ணீர் வராமல் என்ன செய்யும்?

மனசு ரொம்ப பாரமாப் போச்சு…

மன அழுத்தத்தை வெல்லும் வழிமுறைகளை நாடிப் போனேன். அப்போதுதான் கிடைத்தார் டாக்டர். செல்வராஜ். அவர் எழுதியிருப்பதை பதட்டப்படாமல் படியுங்கள். மாற்றங்களுக்கு மனதைப் பழக்குதல் அவசியம் அவசியம்.

*

’பதிவுகள்’ இதழிலிருந்து, நன்றிகளுடன்..

’உங்களுக்கு வேலை இருக்கும்போதே பிறர் பல வேலைகளை உங்களுக்கு கொடுக்கலாம். அந்த வேலைகளையும் நீங்கள் சேர்த்து செய்ய வேண்டியிருக்கும்.  குரங்குகளை மேலாண்மை செய்வது மிகவும் கடினம். அதற்கு நீங்கள் எப்போதும் தீனி போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். குரங்குகளை நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் அவைகள் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். உங்கள் மேஜை மீது ஏறிக் கொள்ளும். எல்லா பொருட்களையும் இழுத்துப் போட்டு உங்கள் அறையை அலங்கோலப் படுத்தி உங்களையும் உண்டு இல்லை என்றாக்கிவிடும். நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளும் இத்தகைய பண்புகளை கொண்டதுதான். சரியான முறையில் உங்கள் வேலைகளை கட்டுப்படுத்தாவிட்டால் நேரமின்றி மன அழுத்தத்திற்கு உள்ளாக நேரிடும்.

சிறந்த முறையில் நேரத்தை எப்படி நிர்வகிப்பது? அதற்கு வேலை என்னும் குரங்குகளை சரியாக கையாள பழகிக் கொள்ள வேண்டும். நீங்கள் வளர்க்கும் எல்லா குரங்குகளையும் எப்போதும் கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் குரங்குகளுக்கு சரியான தீனி போட்டு அவைகளை வளர்க்க வேண்டும். உங்கள் பணிகளுக்கு இடையே குரங்குகளை விளையாட விடக்கூடாது. தனியறையில் குரங்குகளை உங்களால் விட்டுச் செல்ல முடியாது. விட்டுச் சென்றால் அவ்வளவுதான். அந்த அறை அத்தோடு உபயோகப்படுத்த முடியாததாகி விடும். எனவே நீங்கள் எங்காவது வெளியே சென்றாலும் உங்கள் குரங்குகளை கட்டி இழுத்துக் கொண்டுதான் போயாக வேண்டும். கூடுமானவரை குறைந்த அளவு குரங்குகளையே வளர்க்க வேண்டும். அதிக பட்சமாக ஒரு மனிதனால் மூன்று குரங்குகளை மட்டுமே ஒரு நேரத்தில் சமாளிக்க இயலும். அதற்கு மேல் போனால் குரங்குகள் உங்கள் மீது ஏறிக்கொள்ளும்.

பின்னர் குரங்குகளின் எடை தாங்காமல் நீங்கள் அவதிப்படுவீர்கள் இதைப்போல உங்களால் ஒரு சேர அதிகபட்சமாக மூன்று வேலைகளை மட்டுமே செய்ய முடியும். அதற்கு மேலான வேலைகளை நீங்கள் எடுத்துக்கொண்டால் வேலைபளு தாங்காமல் மிதமிஞ்சிய களைப்பு, ஆர்வமின்மை, முதுகுவலி, தலைவலி, மனக்குழப்பம் போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படும்.

பிறர் உங்களிடம் விட்டுச் செல்ல குரங்குகளை அழைத்து வருவார்கள். அவைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களால் எல்லாவற்றையும் வைத்து கட்டி தீனி போட்டு சமாளிக்க முடியாது. எனவே முடிந்த வரை அடுத்தவர் குரங்கை அவருடனேயே திருப்பி அனுப்பி வைக்கப் பாருங்கள். அதற்கு அவர் குரங்கை அழைத்து வரும் போதே ஏதாவது தீனி போட்டு திருப்பி அனுப்பிவிட வேண்டும். இதைப் போலத்தான் அடுத்தவர் கொண்டு வரும் வேலையை அவருடனேயே அனுப்பி வைப்பதும்.

ஆரம்பத்தில் பார்த்ததுபோல சிறிய குரங்குகளை சமாளித்து விடலாம். சற்று பெரிய குரங்குகளை கொஞ்சம் கஷ்டப்பட்டு சமாளிக்கலாம்.

கொரில்லாக்களை சமாளிப்பது இயலாது. எனவே முடிந்தவரை பெரிய குரங்குகளை அளவாக வளர்க்க வேண்டும்.

குரங்குகளை சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள் மன அழுத்தத்தை தவிருங்கள்.’

தொடர்ந்து படிக்க : http://www.geotamil.com/pathivukal/DR_SELVARAJA_ULAVIYAL_6.htm

*
நன்றி : காளிதாஸ், ரௌத்ரன், டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை)