Download (mp3, 50MB)
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றிய மதிப்பிற்குரிய எஸ்.ஆல்பர்ட் அவர்கள், ‘முன்றில்’ கருத்தரங்கத்தில் 1991-ல் பேசியதை முழுமையாக மேலே கேட்கலாம். படு சுமாரான ரிகார்டிங். கவனமாக கேளுங்கள். உரையின் கடைசிப்பகுதியில் Donald Barthelme , Julio Cortázar -ன் சிறுகதைகளை பேசுகிறார் ஆல்பர்ட் சார். அதற்கு முன்பாக , அந்தகாலத்தில் வந்த அலம்பல் நூலான ‘கர்நாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும்’ பற்றியும் குறிப்பிடுகிறார் (இதிலுள்ள முக்கியமான ஒரு சிறுகதையில் ஆபிதீன் பற்றிய குறிப்புகளும் இருப்பதாக என் ஞாபகம்) . சரி, ஆல்பர்ட்சார் உரையின் முதல் பத்து நிமிடத்தை மட்டும் இப்போது தட்டச்சு செய்து பதிவிடுகிறேன். நேரம் கிடைக்கும்போது மீதிப்பகுதி வரும். மீதி வரும்போது நேரம் கிடைக்காமலும் போகும்! பேசியது போலவே டைப் செய்திருக்கிறேன். பிழையிருந்தால் தெரியப்படுத்துங்கள். திருத்துகிறேன். நன்றி- ஆபிதீன்
***
தமிழ்ச் சிறுகதை வடிவம்
எஸ். ஆல்பர்ட் உரை
லா.ச.ரா அவர்களே.. மற்றும் அவையோர்களே எழுத்தாளர்களே விமர்சகர்களே எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நான் ஒரு உரையாக இதை ஆற்ற இருக்கிறேன். கட்டுரை தயார் செய்துகொள்ளவில்லை. காரணம் இந்த பரந்த தளத்தை என்னாலே முழுமையாக உட்கிரகித்துக்கொண்டு அந்த காரியத்தை கட்டுரை எழுதுகிற அளவுக்கு துணிச்சலை வரவழைத்துக்கொள்வது எனக்கு பெரிய பிரச்சனையாக இருந்ததினாலே தமிழ்ச் சிறுகதை வடிவம் என்று ஓர் அளவுக்கு ஒரு வகையிலே என்னுடைய தளத்தை குறுக்கிக்கொண்டிருக்கிறேன். எந்த வகையிலே என்று சொன்னால் தற்போது எழுதுகின்ற எழுத்தாளர்களைப் பற்றி குறிப்பாக நான் பேசுவதற்கில்லை. ஆனால் அதே நேரத்திலே பொதுவாக இன்றைய தமிழிலக்கியம் பற்றிய பொதுவான சில கருத்துக்கள் இவைகளையும் வைத்துக்கொண்டு தமிழ்ச் சிறுகதை வடிவம் எங்கிருந்து ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அளவிலே நான் சில எனக்குத் தோன்றிய கருத்துக்களை உங்கள் முன் வைக்கலாம் என்று கருதுகிறேன்.
ஆங்கிலத்திலே Poetry என்று சொன்னால் அது இலக்கியம் முழுவதற்கும் ஆன சொல்லாகும். முதன்முதலில், குறிப்பிடத்தகுந்த ஆங்கில விமர்சகர் என்று சொல்லக்கூடிய Philip Sidney, ‘An Apology for Poetry’ என்று எழுதினார். அதேபோல romantic poetsலெ ஷெல்லி (Shelley) , ‘A Defence of Poetry’ என்று எழுதினார். பொதுவாக poetry என்று Eliot , ‘Tradition and the Individual Talent’ எழுதும்போதுகூட – மொழியும் இலக்கியத்தையும்தான் அவர்கள் கருத்திலே எடுத்துக்கொண்டார்கள். இந்த வரையறைகள் – கவிதை, உரைநடை , prose ·பார்முலெ verse ·பார்முலெ இருக்குது – யாப்பு வடிவத்திலே இருக்கிறது, வரிகளை ஒடித்துப்போட்டு எழுதுவது என்பது ஒருவகையான verse ·பார்ம் என்று. அது ஏதோ ஒரு சில ஒலிகளுக்கு உள்பட, அந்த யாப்பிலக்கணம் தொடர்பான புதிய கவிதை என்று சொன்னால்கூட அதிலே சில வரையறைகள் இருக்கின்றன. ‘வரையறைகள் என்பது முக்கியம், அதை நாம் விட்டுவிட முடியாது’ என்று லா.ச.ரா அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்த கருத்தோடு நான் மிகவும் ஒன்றிப்போகின்றேன். என்னுடைய கருத்திலே அடிநாதமாக இந்த கருத்தை நான் வைத்துக்கொண்டிருக்கிறேன்… எங்கே நம்முடைய வேர்கள் பிடிக்க வேண்டும், இன்றைக்கு எழுதுகின்றவர்கள் எந்த அளவுக்கு ஒரு விரிந்த தள கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் , எந்த அளவுக்கு ஒரு சிக்கலான செய்தியாக மனிதனுடைய வாழ்க்கையைப் பார்க்க வேண்டும் என்பதிலே எல்லாம் சில அடிப்படைக் கருத்துகள் இருக்கின்றன. அவைகளை சுட்டிக்காட்ட நான் விழைகின்றேன்.
சிறுகதை வடிவம்.. இப்போது சில கதைகள் எழுதினால் கதையிலே.. post modernist fiction என்று சொல்லும்போது.. அதிலே.. என்னென்னவெல்லாம் சிறுகதையிலே இருக்க வேண்டும், அல்லது புதினத்திலே நாவலிலே இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கின்றோமோ அந்த வரையறைகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு எழுதுவதுதான் அது post modernist fiction ஆகும் என்ற அளவுக்கு வந்திருக்கின்றது. யாப்புடைத்த கவிதை புதுக்கவிதை என்று சொல்வாங்க.. யாப்புடைத்த என்று சொல்லும்பொழுது அதிலே ஒரு வரையறை உண்டு. யாப்பு என்பது பழைய யாப்பை உடைத்துவிட்டு அல்லது புதிய யாப்பு ஒன்றை அது உருவாக்கிக்கொண்டிருக்கிறது. ஒருவேளை, எல்லாக் கவிதைக்குமான ஒரே யாப்பு இல்லை அதாவது பொதுவான யாப்பு இல்லை, அதாவது எண்சீர் விருத்தப்பாக்கள் என்பது இல்லை. ஆனால் ஒவ்வொரு கவிதையிலும் ஒரு சிக்கலும் ஒரு ஒழுங்கமைதியும் இருக்கின்றன என்பது தவிர்க்க முடியாத விசயம். அது எப்படி செயல்படுகிறது அந்தந்த கவிதையைப் பொருத்தவகையிலே, அந்தந்த சிறுகதையைப் பொருத்தவகையிலே…? இந்த கவிதை என்ற சொல், அல்லது இலக்கியம் என்று சொல்கின்ற ஒரு சொல் , பரந்துபட்ட சொல். அது ஒவ்வொரு படைப்பும் இலக்கியம் ஆகிறதா ஆகவில்லையா என்பதைப் பற்றி தனித்தனியே ஆராயப்படவேண்டிய ஒன்று. சில இலக்கண வரையறைகளை வைத்துக்கொண்டு பார்க்கலாம், அல்லது இலக்கணங்களை மீறும்பொழுது – ஒருவகையிலே, ஒவ்வொரு முறையும் – ஒரு இலக்கியவாதி பழைய வடிவத்திலேயே எழுதினாலும் கூட சில வரையறைகளை ஏற்றுக்கொள்கிறான். சில வரையறைகளை மீறவும் அவன் செய்கின்றான்.
வடிவம் என்று நான் சொல்லும்பொழுது , பொதுவாக அந்த வடிவத்துக்குள்ளே, உள்ளடங்கிய அந்த கருத்தையும் அல்லது அனுகூலத்தையும் நான் உள்ளடக்கித்தான் வடிவம் என்று குறிப்பிடுகிறேன். ஏனென்று சொன்னால் ஒவ்வொரு அனுபவமும் ஒரு வடிவம் எடுக்கக்கூடும். இந்த அனுபவத்தை நான் ஒரு கவிதையாக எழுதலாம் என்று இருக்கிறேன், எழுதலாம் என்று தோன்றுகிறது, எழுதுகின்றேன்.. அல்லது நாவலாக விரிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.. அதை சிறுகதையாக சுருக்கவேண்டும் என்று சொல்வது.. இப்படியாக ஒரு கட்டுரையாக சொல்லிவிடலாம் இந்த செய்தியை என்று நினைக்கிறேன்… என்பதெல்லாம் ஒரு சில நிர்ப்பந்தங்களைப் பொருத்தது. அது எத்தைகைய நிர்ப்பந்தங்கள், அந்த நிர்ப்பந்தங்கள் இங்கே எந்த அளவுக்கு பொருள் பொதிந்த வகையிலே அமைந்திருக்கின்றன என்பதெல்லாம் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டிய செய்திகள்.
முதலிலே, எனக்கு என்ன தோன்றுகிறது என்று சொன்னால்.. நமக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்கின்றது, இந்த பாரம்பரியம் என்ற உணர்வு மிகவும் தவிர்க்க முடியாத ஒன்று என்று நினைக்கின்றேன். … இந்த பாரம்பரியத்திலே நம் சமூகத்தினுடைய வரலாறு முழுதும் அடங்கியிருக்கிறது, இந்த பாரம்பரியத்தை நாம் என்னுடைய பாரம்பரியம் என்று எடுத்துக்கொள்ளலாம், என்னுடைய குடும்பத்தினுடைய பாரம்பரியம் என்று எடுத்துக்கொள்ளலாம்… இன்னும் விரித்து என்னுடைய ஊர் பாரம்பரியம் , என்னுடைய மாநில அல்லது மொழிப் பாரம்பரியம் , என்னுடைய இந்திய நாட்டினுடைய பாரம்பரியம் , உலகப் பாரம்பரியம் என்றெல்லாம் விரித்துக்கொண்டே போகலாம். Eliot சொல்வது போல , poets should have the entire tradition in his bones என்று சொல்வார், அப்படிச் சொல்கின்ற அப்படிப்பட்ட தேவையானது முழுமையாக அந்த tradition என்பதை முழுமையாக உலக அளவிலே இப்பொழுது ஏற்றுக்கொள்ள வேண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் இப்போது அழுத்தமாக மனதிலே பட்டு வருகின்றது. எல்லா துறையிலும் interdisciplinary approach என்று சொல்வதுபோல.. கலைகள், விஞ்ஞானங்கள், வேறு பல்வேறு வகையான இயல்கள் என்று எல்லா வகையான அறிவிலும் ஒருங்கு சேர்த்து மனதிலே கொள்ளவேண்டிய ஒரு தேவையும் இன்று ஏற்பட்டிருக்கிறது. ஆகையினாலே எழுத்தாளன் என்பவனுடைய , அவனுக்கு இருக்கக்கூடிய தேவையானது – அவன் மேலுள்ள ஒரு டிமாண்ட் ஆனது – மிகவும் பரந்துபட்டு , Eliot சொல்வான்… ஒரு poet வந்து scholarஆ இருக்கனும் scholorshipங்குறது அவனுக்கு ரொம்ப தேவையான ஒன்று என்று சொல்வான்.
ஒரு கவிஞன் வந்து எவ்வளவு காலம் கவிஞனாக இருக்க முடியும்? கொஞ்ச காலத்துக்கு ஒரு ஆர்வத்துல அவன் எழுதலாம் இளைமையிலே. ஆனால் அவன் தொடர்ந்து அதற்கப்புறம் ஒரு காலகட்டம் தாண்டி அந்த ஆர்வம் பிந்திப்போன பிற்பாடு , அந்த ஆர்வத்தை மீண்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும் , தக்க வைத்துக்கொள்ள வேண்டும் , உயிர்த் தொடர்பு கொண்டு எழுத வேண்டும் சமூகத்தோடு என்று சொல்லும்போது அவன் தன்னுடைய பாரம்பரிய எல்லையை விரித்துக்கொண்டே போகவேண்டும்.. அந்த பாண்டித்தியத்தை – living tradition… – உயிரோடுள்ள ஒரு பாரம்பரியத்தை அவன் முழுமையாக உட்செரித்துக்கொண்டு எழுதவேண்டிய தேவைக்கு உள்ளாகின்றான். இதிலே வரலாறு அடங்கும், இலக்கியம் என்பது அடங்கும் , folklore நாட்டுப்புற இலக்கியம் என்பதற்கும் அடங்கும், தத்துவப்பின்னணிகள் அடங்கும்.. இவை எல்லாம் ஓரளவுக்கு நம்முடைய மண்ணிலே வேர்பிடித்து , நம்முடைய பாரம்பரியத்திலே முதலிலே சரியான வேர் பிடித்து , இயங்க வேண்டும் என்பது முதல் தேவை என்று நான் நினைக்கின்றேன். ஆகையினாலே சிறுகதை எழுதுகின்றவர்களுக்கு எங்கிருந்து அவர்கள் தொடங்கவேண்டும் என்று சொன்னால் நம்ம நாட்டைப் பொறுத்தவரையிலே ராமாயணம் மகாபாரதம் என்ற இதிகாசங்களிலிருந்து பல புராணங்கள் , பஞ்சதந்திரக் கதைகள், ஜாதகக் கதைகள் என்று இவை அனைத்தையுமே அவன் உட்செரித்துக்கொண்டு அந்த பாரம்பரியத்தை அவன் ஏற்றுகொண்டால்தான் அந்த கதைக்கு அவன் சரியான வடிவத்தைக் கொடுக்க முடியும். அதே நேரத்திலே உடனடியாக சமகாலத்திலே இருக்கக்கூடிய ஒரு contemperory situation சமகால நிகழ்வுகளோடும் அவனுக்கு ஒரு உயிர்த்தொடர்பான அனுபவம் இருக்க வேண்டும்
என்பது தவிர்க்க முடியாத ஒன்று. Gabriel Garcia Marquez-ன் முதல்பரிசு உரையை இந்த ‘பறை’ புத்தகத்திலே வெளியிட்டிருக்கிறார்கள் , மொழிபெயர்த்து. அவர் பேசும்போது தன்னுடைய பாரம்பரியத்திலே இருந்து தொடங்குகின்றார். அந்த பாரம்பரியத்தையெல்லாம் உட்செரித்துத்தான் அவர் எழுதுகின்ற எழுத்து அங்கே அமைந்திருக்கின்றது . அதிலேதான் அந்த எழுத்தினுடைய ஒரு தனித்துவம் , அதிலே இருக்ககூடிய செய்திகளுடைய புதுமையும் அடங்கியிருக்கின்றது என்பதைப் பார்க்கலாம்.
இன்னொன்று, எழுத்தாளன் மனதிலே வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால்.. குறிப்பாக சிறுபத்திரிக்கை உலகத்துக்கு , சிறுபத்திரிக்கை உலகத்துக்குள்ள்…ளேயே சுற்றிச்சுற்றி வருகின்றவர்களுக்கு , அதற்குள்ளேயே.. இயங்குகின்றவர்களுக்கு இவர்களுக்கெல்லாம் தேவையான ஒன்று… யாருக்காக நாம் எழுதுகின்றோம் , நம்முடைய Target Audience யார் என்பதை ஓரளவு மனதிலே வைத்துக்கொண்டு எழுதவேண்டும் என்பது தவிர்க்க முடியாத ஒரு தேவை.
(தொடரும்)
நன்றி : எஸ். ஆல்பர்ட், மா.அரங்கநாதன் (முன்றில்)