வடமொழிக் கவிஞன் வான்புகழ் ரஹீம்

தலைப்பில் மட்டுமாவது ரஹீம் என்று மாற்றிவிடு என்று வல்ல ரஹ்மான் சொன்னான்.  மாற்றிவிட்டேன். கட்டுரையாளர் மன்னிக்கவும். உண்மையில் , இந்தக் கட்டுரை ஒரு இஸ்லாமிய ‘நஜாத்’ இதழில் இடம் பெறவேண்டும்.  இதே போல ரஹ்மானின் அடியானாக ராமன்  உரைப்பது – கணையாழியில் அல்ல, ‘விஜயபாரதம்’ இதழில் இடம் பெற வேண்டும். நடக்கிற காரியமா என்கிறீர்களா? இயலாத ஒன்றை இயம்புவதுதானே நம்ம வேலையே…

தாஜ் அனுப்பிய இமேஜ்களை  தட்டச்சு செய்திருக்கிறேன்.  சுலோகங்களில் ‘அச்மா’ என்ற வார்த்தை  மட்டும் சரியாக விளங்கியது! வேறு தவறுகளிருப்பின் தயவுசெய்து தெரிவியுங்கள்; உடனே திருத்துகிறேன். நன்றி.  – ஆபிதீன்

***

Tomb_of_Abdul_Rahim_Khan-I-Khana,_Delhi

வடமொழிக் கவிஞன் வான்புகழ் ரஹீம்

சங்கரநாராயணன்
(கணையாழி , ஏப்ரல் 2013 இதழில் வெளியானது)

நமது நாட்டின் இரு தொன்மொழிகள் தென்மொழியும் வடமொழியும் ஆகும். இவற்றுள் தென் மொழியான தமிழ் எல்லா இனத்திற்கும் பொதுவாய் நிற்கிறது. ஆதலின் இன்றளவும் இலக்கிய உலகில் கோலோச்சி வருகிறது. ஆனால் வடமொழியைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது இனத்தைச் சார்ந்ததாகத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு வருகிறது. உண்மையில் வடமொழியும் தமிழைப் போல எல்லாத தரப்பு மக்களுக்கும் இயைந்த மொழியே ஆகும். இந்த உண்மையை வடமொழியில் வெளிவந்திருக்கும் பிற தரப்பு இலக்கியங்கள் நிறுவுவன ஆகும். இன்று பகுத்தறிவு என்னும் பெயரில் வழக்கிலுள்ள கருத்துக்கள் கூட வடமொழியில் உள்ளன. வேதமதத்திற்குப் புறம்பான சைனம் மற்றும் பௌத்த இலக்கியங்களிலும் வடமொழியில் காணப்படுகின்றன. மேலும் இசுலாமிய மதத்தின் கருத்துக்கள் அல்லோபநிஷத் (அல்லா + உபநிஷத்) என்னும் பெயரில் உபநிடத வடிவில் எழுதி வெளிவந்ததும் உண்டு. பாகவத புராணத்தைப் போலக் கிறித்துவின் வாழ்க்கையை விவரிக்கும் கிறித்து பாகவதமும் உண்டு.

ஆங்கிலேயர் ஆட்சிக்கும் முன் இசுலாமிய அன்பர்களும் கிறுத்துவ மதத்தைச் சேர்ந்தவர்களும் கூட வடமொழியைக் கற்றுத் தேர்ந்து பல இலக்கியங்களைப் படைத்திருக்கின்றனர். அவர்களுள் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தவர் அக்பரின் அவையில் நவரத்தினங்களில் ஒருவராகத் திகழ்ந்த இரகீம் என்பவர் ஆவார்.

இரகீம்

அக்பரது மெய்த்துணையாகத் திகழ்ந்தவர் பைரம் கான் என்பவர் ஆவார். அவருடைய மகன் இரகீம் என்பவர். இவர் 1556ஆம் ஆண்டு இலாகூரில் பிறந்தார். இவருக்கும் ஆறு வயது ஆனபோது ஹஜ் யாத்திரைக்குச் சென்ற பைரம் கான் மரணம் அடைந்தார். அன்று முதல் அக்பருக்கு இரகீன் செல்லப்பிள்ளையானார். அக்பர் இரகீமிற்குப் பல மொழிகளையும் கலைகளையும் கற்பித்தார். வடமொழி, உருது, பாரசீகம், அரபி, துருக்கி என்று பலமொழிகளிலும் இரகீம் கரைகண்டார். வடமொழியில் வேத உபநிதங்களையும் புராணங்களையும் காவியங்களையும் கற்றுக் கவியானார் இரகீம்.

கவிஞராக மட்டும் இல்லாமல் சிறந்த வீரராகவும் திகழ்ந்தவர் இரகீம். குஜராத்தில் ஒரு கலகமுண்டானபோது இரகீமின் தலைமையில் அக்பர் ஒரு படையை அனுப்பினார். அந்தக் கலகத்தை அடக்கிய இரகீம் அக்பரால் சுபேதார் பதவியில் நியமிக்கப்பட்டார்.

அக்பரின் மரணம் வரை இரகிமீன் புகழ் ஓங்கியிருந்தது. அக்பர் இரகீமிற்கு மிர்ஜாகான் என்னும் பட்டத்தையும் கான்கானா என்னும் பட்டத்தையும் வழங்கிச் சிறப்பித்தார். இவ்விரு பட்டங்களும் மிக நெருங்கிய உயர்வான அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட பட்டங்கள் ஆகும். இரகீம் மிகச்சிறந்த வள்ளலாகவும் திகழ்ந்தார். முஜாபர்பூர் போரில் வென்றெடுத்த செல்வங்களையெல்லாம் மக்களுக்கு அவர் வாரியளித்தார்.

அவருடைய இறுதி வாழ்க்கை சோகம் நிறைந்ததாக இருந்தது. அக்பருடைய மரணத்திற்குப் பிறகு பதவி ஏற்ற ஜகாங்கீருடன் இரகீமிற்கு ஒத்து வரவில்லை. ஜகாங்கீர் இரகீமைச் சிறையிலடைத்தான். அங்கேயே இரகீம் உயிர் துறந்தார்.

நிலைத்து நின்ற இலக்கியங்கள்

அவர்தம் பூதவுடன் மறைந்தாலும் புகழுடம் மறையாவண்ணம் அவர் இயற்றிய இலக்கியங்கள் இன்றளவும் அவர் புகழ்பாடுகின்றன. அவர் எழுதிய இலக்கியங்களாவன.

1. கேட கௌதுகம்

இந்த நூல் சோதிட நூலாகும். உருது மற்றும் அரபி பதங்கள் இந்த நூலில் நிறைந்துள்ளன. இந்த நூலில் 124 சுலோகங்கள் உள்ளன. இதன்  காப்புச் செய்யுளில் திருமாலையும் திருமகளையும் வணங்கி நூலைத் துவக்கியிருக்கிறார் கவிஞர். ஜாதகங்களில் கிரகங்களில் நிலைகளை வைத்துப் பலன் கூறும் இந்த நூல் சோதிடத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகப் பயனுள்ள நூலாகும்.

2. த்ரயஸ்த்ரிம்சத் யோகாவளி

இந்த நூலுல் சோதிட நூலாகும். இந்த நூலில் 35 சுலோகங்கள் மட்டும் கிடைத்துள்ளன. ஜாதகத்தில் பல யோகங்களை இந்த நூல் விளக்குகுகிறது.

3. கங்காஷ்டகம்

இரகீமின் இலக்கியத்தில் இந்த துதி மிக முக்கியமானதாகும். இது முழுக்க வடமொழியில் அமைந்தது. கங்கையின் புகழ் பாடுவது. புராணக் கதைகள் பலவற்றையும்க் கூறும் இரகீம் தன்னைச் சிவபெருமானின் பக்தனாகக் கூறிக் கொள்கிறார். கங்கையன்னையே! நான் இறக்கும்போது எனக்குச் சிவ சொரூபத்தை அருள்வாயாக என்ற வேண்டுதல் இதனைத் தெளிவாக்குகிறது. முதாகராத்த மோதகம் என்னும் கணேச பஞ்ச ரத்தினம் அமைந்துள்ள பா வகையை பஞ்ச சாமரம் என்பர். அந்தப் பாவகையில் கங்காஷ்டகமும் அமைந்துள்ளது.

‘சிவோத்தமாங்கவேதிகாவிஹாரஸௌக்ய காரிணீ
ததோ பகீரதாங்கஸங்கமர்த்யலோக சாரிணீ
த்ரிமார்ககா த்ரிதாபஹா த்ரிலோகசோக கண்டிநீ
ஜகத் த்ரிதோஷத : தனு: புநானு ஜஹ்னு நந்தினி’

ஜன்னு முனிவரின் மகளான கங்காதேவி என்னுடலை மூவகை பாவங்களிலிருந்தும் காப்பாற்றட்டும். அவள் சிவனின் தலையாகிய மேடையில் உலவுபவள். பிறகு பகீரதனின் தொடர்பால் பூவுலகில் நடப்பவள். மூன்று தாபங்களையும் போக்குபவள். மூவுலகின் சோகங்களையும் நீக்குபவள் என்பது இந்தச் செய்யுளின் பொருள். மேலும் தன்பெயரையும் முத்திரையாகப் பதித்து இறுதிச் சுலோகத்தை பலச்ருதியாக யாத்திருக்கிறார்.

முராரிபாதஸேவினா விராமகானஸூனுனா
சுபாஷ்டகம் சுபம் க்ருதம் மயா குருப்ரபாவத:
படேதிதம் ஸதா சுசு ப்ரபாதகாலதஸ்து ய:
லபேத வாஞ்சிதம் பலம் ஸ ஜாஹ்னவீப்ரபாவத:

திருமாலின் திருவடிகளை வணங்கும் பைரம்கானின் மகனால் இந்த அஷ்டகம் இயற்றப்பட்டது. இது சுபமானது. குருவின் அருளால் இயற்றப்பட்டது. இதனைத் தூயவராக காலையில் எவர் பாராயணம் செய்கிறாரோ அவர் ஜான்னவியின்  அருளால் விரும்பியதை அடைவார் என்பது இதன் பொருள்.

இப்படிக் கங்கைநதியை அவர் துதித்திருக்கிறார்.

4. மதனாஷ்டகம்

இந்தத் துதி கிருஷ்ணரின் ராஸலீலையை வர்ணிப்பது. அழகிய பாவகைகள் இந்தத் துதியில் இடம் பெற்றிருக்கின்ற்ன. ஆயர்பாடியில் கோபியர் கணவன், குழந்தைகளை மறந்து கண்ணனின் வேணுகானத்தைக் கேட்டவுடன் மதி மயங்கி நின்ற நிலையை மிக அழகாக இந்தத் துதி உருது மற்றும் பாரசீகச் சொற்களைக் கலந்து மணிப் பிரவாள நடையைப் போல யாக்கப்பட்டிருக்கிறது.

5. சில தனி சுலோகங்கள்

இவை தவிர இரகீம் இயற்றிய பல தனி சுலோகங்கள் அவருடைய பக்தியையும் புலமையையும் எடுத்துக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக ஒரு செய்யுள்

ரத்னாகரரோஸ்தி ஸதனம் க்ருஹிணீ ச பத்மா
கிம் தேயம் அஸ்தி பவதே ஜகதீச்வராய
ராதாக்ருஹீதமனஸே அமனஸே ச துப்யம்
தத்தம் மயா நிஜமன; ததிதம் க்ருஹாண

இந்தச் செய்யுள் மிக அழகானது. பொருள் பொதிந்தது. ஏ கிருஷ்ணா உனக்கு இருப்பிடம் கட,. மனைவியோ திருமகள். நீயோ உலகிற்குத் தலைவன். உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் என்ன இருக்கிறது. உன்னுடைய மனத்தை ராதை எடுத்துக் கொண்டு விட்டாளல்லவா, மனமில்லா நீ என்னுடைய மனத்தை எடுத்துக் கொள் என்பது இதன் பொருள். மேலும் இராமபிரானைத் துதிக்கும் முகமாக

அஹல்யா பாஷாண; ப்ரக்ருதிபசுராஸீத் கபிசமூ:
குஹோயூச் சாண்டால: த்ரிதயமபி நீதம் நிஜபதம்
அஹம் சித்தேன அச்மா பசுரபி  தவார்சாதிகரணே
க்ரியாபி: சாண்டலோ ரகுவர ந மாமுத்தரஸி கிம்

என்னும் செய்யுளை யாத்திருக்கிறார். இந்தச் செய்யுளின் பொருளைப் பார்த்தால் புல்லரிக்கும். ஏ இராமா , அகல்யா கல்லாக இருந்தவள். வானர சேனையோ விலங்கு. குஹன் தாழ்ந்தவன். இந்த மூன்றையும் உன் திருவடியில் சேர்த்துக் கொண்டாயே, நான் மனத்தளவில் கல்லானவன். உன்னை அர்ச்சிப்பதில் விலங்கைப் போன்றவன். செய்யும் செயலால் தாழ்ந்தவன். என்னை கரையேற்ற மாட்டாயா என்பது இதன் பொருள்.

இப்படி பிறப்பால் இசுலாமியராக இருந்து எல்லா மதங்களும் கூறும் இறைவன் ஒருவனே என்பதை உணர்ந்து வடமொழியில் கரைகண்டு இரகீம் இயற்றிய கவிதைகள் மத நல்லிணக்கத்திற்கு நல்ல வாயிலாக அமைந்துள்ளவை. வடமொழி ஒரு இனத்தாரின் மொழியல்ல என்பதற்கு இரகீம் கவிதைகளே சான்று எனலாம்.

***

நன்றி : சங்கரநாராயணன், கணையாழி , தாஜ்

Image Courtesy : wikipedia

லா.ச.ரா.வுக்கும் சுஜாதாவைப் பிடிக்கும்!

சொல்பவர் நம்ம ஹனீபாக்கா.  அவரை பகிரங்க விவாதத்திற்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙂

***

தம்பி ஆபிதீன்,

நேற்று சும்மா இருந்தாப்ல கணையாழிக் கட்டொன்றை எடுத்துப் புரட்டினேன். 1966 தொடக்கம் 70 வரையுமான தொகுப்புகள். உள்ளே சுஜாதா அவர்களின் கடைசிப் பக்கக் குறிப்புகளில் சிலது என் கண்களில் பட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தன. தமிழ் எழுத்துலகில் நுட்பமாக அவதானித்து படிமமாக வெளிக்கொண்டு வருவதில் அவருக்கு நிகராக யாரைச் சொல்ல முடியுமோ நானறியேன். லா.ச.ராவைச் சந்தித்த நேரம் அவரின் மேசையில் சுஜாதாவின் நைலோன் கயிறு நாவல் கிடந்தது. நான் கண்ணைக் காட்டி வியந்த போது, சுஜாதாவின் நடை எனக்குப் பிடிக்குமென்றார். இதோ அவர் எழுதிய நான்கு பத்திகள். – எஸ்.எல்.எம்,ஹனீபா

sujatha-kanayali3

ஆகாசவாணி

ஆகாசவாணி பற்றி சென்ற இதழில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. மதராஸ் நிலையத்தில் சங்கீதக் கச்சேரி எனக்கு மிகவும் பயம். நல்ல ச, கச்சேரியாக இருக்கும். மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருப்பேன். பட்டென்று மென்னியை நெரித்து “இதுவரை பாடினார்கள். இனி மாட்டுத் தீவனத்தைப் பற்றி அகில பாரத உரை நிகழ்ச்சியில் விவசாய அதிகாரி ஒருத்தர் பேசுவார்” என்பார்கள். பேச்சு என்றால் என்ன? சரசரசர என்று பேப்பர் புரட்டும் சப்தம்… இரைக்க இரைக்க பதினைந்து நிமிஷ விஷயத்தைப் பத்தே முக்கால் நிமிஷத்தில் படித்து முடிப்பார். அதற்கப்புறம் நிலைய வித்வான் நொந்து போய் ஸாக்ஸபோன் வாசிப்பார்.

ஆகாசவாணியின் வெளிநாட்டுக்கான காலைத் தமிழ் நிகழ்ச்சியிலிருந்து ஒரு பகுதி:-

“ஆகாசவாணி” ‘சலம்’ – நாடகம்… இதை எழுதியவர் ஆர்.ஜி. கோவிந்தன்… இதில் நடிப்பவர்கள் ஆர்.ஜி. கோவிந்தன், ஆர்.ஜி. ஜனஜகுமாரி, ஆர்.ஜி. உஷா, தயாரிப்பு ஆர்.ஜி.ஜி. விந்தன்… “இதுவரை சலம் நாடகம் கேட்டீர்கள். நடித்தவர்கள் ஆர்.ஜி…” அறிவிப்பாளர் யார் என்கிறீர்கள்? ஆர்.ஜி. கோவிந்தனே!

ஈப்போவிலிருந்து இந்த நிகழ்ச்சிகளைத் தினம் தவறாமல் 3 வருஷம் கேட்டு வந்த நைனார் முகம்மது என்கிற கடல் கடந்த தமிழர் ஒருவர் தற்போது பேப்பர் துணி கிழிக்கிறார் என்று கேள்வி.

பெப்ரவரி 1966

**

ஒரு டெலிபோன் சம்பாஷணை

“ஹலோ”
“ஹலோ”
“யார் பேசுறது?”
“நான்தான்”
“நான்தான்னா யார்?”
“நான்தான் ரேவதி”
“ரேவதி! அப்பா இல்லையா?”
“இல்லை”
“அம்மா?”
“இல்லை”
“சரி, அப்பா வந்தா ராமன் போன் பண்ணினதாகச் சொல்லுகிறாயா?!”
“யாரு?”
“ராமன், எழுதிக்கோ ரா-ம-ன்”
“ரா எப்படி எழுதுவது?”
“சரிதான்! பாப்பா, வீட்டில வேறே ஒருத்தரும் இல்லையா?”
“சேகர் இருக்கான்”
“சரி சேகரைக் கூப்பிடு”
“சேகர் இந்தா” என்று ரேவதி சேகரிடம் (வயது 1) டெலிபோனைக் கொடுக்கிறாள்.

**

அச்சுப்பிழைகள்

அச்சுப்பிழைகளில் நகைச்சுவை இருக்கிறது. சம்போ கந்தா என்பதை சம்போகந் தா என்று அச்சடித்தவர் தன்னையறியாமல் நகைச்சுவை நாஸ்திகராகிறார். சென்ற இதழில் சில சுவாரசியமான பிழைகள் இருந்தன. சுவையுள்ள புத்தகம், சுமையுள்ள புத்தகமானது. “அத்தா, உனை நான் கண்டு கொண்டேன்” என்ற ஆழ்வார் வரி, “அத்தான் உனை நான் கண்டு கொண்டேன்” என்று சினிமாப் பாட்டாக மாறியது.

நான் இவைகளை எடுத்துரைப்பதில் என் நோக்கம் இதிலுள்ள ஹாஸ்யத்தைச் சொல்வதற்கே. அச்சகத்தார் என்னை மன்னிக்கவும். அவர்கள் தொழிலிலுள்ள கடினத்தை நான் அறிவேன்.

**

என்ன செய்கிறாய்?

லேய்ட்ம்டன் என்கிற கனடா தேசத்துக் கவிஞரை அறிமுகப்படுத்துகிறேன்:-
“பதினான்கு வருஷ
மண வாழ்க்கையில் நான் ஒரு தடவை
கூட
என் மனைவிக்குத் துரோகம் நினைத்ததில்லை.
நீ, நான் கேள்விப்பட்டேன், இன்னும்
கன்னி என்று.
உனக்குச் சம்மதமானால்
உன் கன்னிமையையும்
அபூர்வமான என் கற்பையும் பண்ட
மாற்றிக் கொள்ளலாம்,
நாளைக்கு மூன்றிலிருந்து ஐந்துக்குள்
என்ன செய்கிறாய்

ஏப்ரல் 1970

***

நன்றி : ஹனீபாக்கா (E-Mail : slmhanifa22@gmail.com)

கலைந்து போன கனவு ராஜ்யம் – சிதம்பரப்பிள்ளை சிவகுமார் சிறுகதை

சிதம்பரப்பிள்ளை சிவகுமார் (யாழ்ப்பாணம்)

‘ பெருநாள் கழித்து போட்டால் போதும். இதுவும் ஒரு வகை தியாகம்தான். நமது தியாகத் திருநாளில் ஒரு தமிழ் இளைஞனின் மனத்தின் தியாகம் கலைந்து போன கனவு ராஜ்யமாக ஆப்தீன் பக்க வாசகர்களை ஆட்கொள்ளட்டும். எல்லோர்க்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்’  என்று சொல்லி சிவகுமாரின் சிறுகதையை அனுப்பிய நம் ஹனீபாக்கா அவர்களின் குறிப்பு முதலில்:

கணையாழி ஜனவரி 1992 இதழில் வெளியான இந்தக் கதை அன்றும் இன்று இருபது வருடங்களுக்குப் பிறகும் அதே சூட்டோடு திகழ்கிறது. சிவகுமார் இலங்கை அரச ஒளி-ஒலிபரப்புக் கூட்டுத்தாபனங்களின் ஆளுமை மிக்க கலைஞன். தான் சார்ந்த மக்களின் விடுதலைக்காக ஒரு தோளில் துப்பாக்கியும் மறு கையில் பேனாவும் ஏந்திய மனுஷ்யன். அவன் எழுதிய முதற்கதையே இலக்கியச் சிந்தனையின் பரிசை வென்றது. ஒரு கதை எழுதி தன்னை சிறுகதை ஆசிரியன் என நிறுவிக் கொண்டவன். இந்தக் கதையைப் பற்றி பொன் தனசேகரன் இவ்வாறு குறிப்பிடுகின்றார்:

“இலக்கிய நூலொன்றில் அரசியல் கொள்கைகள் குறுக்கிடும் போது அது சங்கீதக் கச்சேரியின் நடுவில் துப்பாக்கி சுடப்பட்டது போல் ஒலிக்கிறது. இதிலும் அரசியல் அலசப்படுகிறது. ஆனால் கோஷமாகவோ கொச்சையாகவோ அல்ல. இதில் அடி நாதமாக வெளிப்படுவது பரஸ்பர மனித நேயமே” என்கிறார்.

***

கலைந்து போன கனவு ராஜ்யம்

சிதம்பரப்பிள்ளை சிவகுமார்

“தெருவில் ஒருவன் தலையே இல்லாமல் போய்க் கொண்டிருந்தான்.” மனசுக்குள் சிரிப்போடியது. சிறுகதை எழுதுவது பற்றிய யோசனை வந்த போது, முதல்வரி இப்படிக் கவர்ந்திழுப்பதாய் அமைய வேண்டும் என்று யாரோ சொல்லியிருந்த ஆலோசனைதான் நினைவில் மின்னியது. சிரிப்புக்குக் காரணம், அப்புறம், ‘தலையில்லாமல் அல்ல, தலைக்குள்ளே ஒன்றுமில்லாமல்தான் போய்க் கொண்டிருந்தான்’ என்று மாற்றிச் சொல்லி விடலாம் என்பது. மிகப் பெரும்பாலும் சரியாகவே இருந்து விடும் என்பதால், இந்த வரியை யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. ஆனால் நான் சொல்லி விட வேண்டும் என்று துடிக்கிற விஷயங்களுக்கு சிறுகதை உகந்த வடிவமல்ல. சமீபகாலமாக எனக்குள் வெறியாக மாறி விட்டிருக்கிற, என்னை அறிவித்துக் கொள்ளும் ஆவேசத்துக்கு மிக நீண்டதாய் ஒரு கவிதை அல்லது நாவல் எழுத முடிந்து விடும் என்றால் எவ்வளவு நல்லது. எழுதுகிறவர்கள் எல்லோரும் இத்தனை அவஸ்தைகளுக்குப் பிறகுதான் எழுதுகிறார்களா தெரியவில்லை. எழுதுவது பற்றி அவர்கள் சொல்லும் கெட்டித்தனமான வாக்கியங்களிலிருந்து எந்த மனசைத்தான் தெளிவாய்க் கண்டு கொள்ள முடிகிறது?

பெண்களின் இருக்கைகளின் பக்கம் புதிதாய்ப் பலர் பஸ்ஸில் ஏறினார்கள். சட்டென்று அழகான முகங்களுக்குத் தாவியது மனம். ஆண் மக்கள் எல்லோரையும் ‘இளமையில் கொல்’ என்று சொல்லி யார் படைத்து விட்டது இவர்களை! இளமையின் அழகு பற்றி சற்று அதீதமான வியப்புணர்வுகள் என்னுள் உண்டாவதாய்த் தோன்றியது. ஒருவேளை இளமைப் பருவத்தைக் கடந்து கொண்டிருக்கும என் வயதுதான் காரணமாய் இருக்கக் கூடும்.

இயல்புக்கு மாறானதாய் பல்லவன் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் ஆட்களை மட்டுமே சுமந்து ஓடிக் கொண்டிருந்தது. திடீரென்று ஞாபகம் கொண்டாற் போல் நான் ஆண்கள் பக்கம்தான் அமர்ந்திருக்கிறேனா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். தமிழ்நாட்டுக்கு வந்த புதிதில் என் அம்மா வயதுப் பெண்மணிக்குப் பக்கத்தில் ஸ்வாதீனமாய் போய் அமர்ந்து கொண்டதும், அந்தம்மா தன் கற்புக்காகப் போட்ட கூச்சலும்  நான் பட்ட அவமானமும், தமிழகம் பற்றிய முதல் அறிமுகம் எனக்கு. அப்புறம் ‘இன்னாபா ஆட்டோ வடபயனி வருமா… இந்தா லெப்டில ஒடிச்சி ஸ்ட்ரெயிட்டா போய்க்கிட்டே இரு… எவ்ளோபா மீட்டர்லே சூடு வெச்சிருக்கே… நம்மகிட்டயே பேஜார் பண்றியே நைனா…’ எங்கிற அளவுக்குத் தேறியிருக்கிறேன். சந்தேகமில்லை.

முன்னிருக்கையில் அமர்ந்திருந்த இரட்டை ஜடைக்காரி ஒருத்தி பின்னாலிருந்த தோழிகளுக்கு எதையோ கீச்சிட்ட குரலில் சொல்லிச் சிரித்தாள். என்னை மூழ்கடித்து மூச்சுத்திணற வைக்கக்கூடிய இரண்டு சின்னச் சமுத்திரங்கள் அவள் முகத்திலிருந்தன. திரும்பும் போது எல்லாக் குறும்புக்காரிகளையும் போல் ஆயிரம் வோட் மின்சாரத்தை என் மீது பாய்ச்சி ஒரு கண நேர அதிர்ச்சியைத் தந்து விட்டே தோழிகளோடு சிரித்தாள். என்னைப் பற்றித்தான் ஏதேனும் சொல்லியிருப்பாளோ? இப்போது அவள் தோழிகள் என்னைப் பார்க்கத் திரும்பக் கூடும். நான் வேறு பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டேன். இந்தக் கலாரசனை மிக்க உள்ளத்தை, முகதேஜஸைப் பார்த்தே புரிந்து கொண்டுவிடக் கூடியவர்கள் இருக்கலாம், யார் கண்டது? இளம் பெண்கள் எல்லோரும் அடக்கிக் கொள்ள மாட்டாத ஆர்வத்தோடு அடிக்கடி என்னைக் கள்ளமாகவேனும் பார்க்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வதில் எனக்கு போதை இருந்ததால், அலட்சியமாகத் தீவிரமாக சிந்தனையிலிருப்பது போன்ற பாவனையிலிருந்தேன். அவர்களைப் பார்க்க விரும்பி மனம் குறுகுறுத்தாலும் அப்படிப் பார்ப்பது அவர்கள் என் மீது கொண்டிருக்கும் வியப்பு நிறைந்த ஈடுபாட்டிற்கு பங்கம் நேர இடம் கொடுத்து விடும் என்று பட்டது. வெறுமனே அழகை ஆராதனை செய்கிற ரசிக உணர்ச்சிதான் என் பாரவையில் இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளாமல் போகலாம். இன்னும் சற்றுப் பெரிய மனிதத் தோரணையோடு ‘எனக்கு நீங்களெல்லாம் ஒரு பொருட்டில்லை’ என்ற பாவனையில் இருக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

“ராஜன்!”

மிகச் சமீபமாய்க் குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினேன். திடுக்கிடக் காரணம், அது பெண் குரல்… மாலினி!

“மாலினி என்ன இது? surprise, எப்ப இங்க வந்தனீ?”

“அங்க பின்னுக்கிருந்து பாத்தே உங்களை நான் அடையாளம் கண்டிட்டன்… எங்க போறீங்கள்… அவசரம் ஒண்டுமில்லைதானே?”

“இல்லை நீ எப்படி இருக்கிறாய்?”

“அடுத்த ஸ்டொப்பில இறங்குவம். நிறையக் கதைக்க வேணும்”

***

“வாராய் என் தோழி வாராயோ உன் மாப்பிள்ளை காண வாராயோ…” என்று பாடி வரவேற்றான் லோகு.

வந்தவள் தயங்கி நின்றாள். மிரட்சியோடு நோக்கினாள்.

“வலது காலை எடுத்து உள்ள வாறதுக்கு முந்தி மேல நிமிர்ந்து போர்டைப் படிச்சுச் சொல்லம்மா. நாங்கள் வந்திருக்கும் இடத்தை எல்லோரும் தெரிந்து கொள்ளலாமே” என்று பணிவாக அபிநயித்துச் சொன்னான் ஜெயக்குமார்.

“வந்த இடம் நல்ல இடம், வர வேண்டும் தோழி வர வேண்டும்” என்று மதில் சுவரில் அமர்ந்து கொண்டு வாய்க்கு வந்த படி பாடுவதாகக் காட்டிக் கொண்டான் தயா.

“ஏய் வாசி” – உறுக்கினான் ரட்ணம்.

“ஜவ்னா யூனிவர்சிற்றி” நடுங்கிய குரலில் சொல்லித் தலை கவிழ்ந்து நின்றாள் அவள்.

“அடி சக்கை! இங்கிலீசில படிக்கிறாடா… தமிழ் தெரியாதாடி உனக்கு?”

“கொழும்பு ரமிலா? அப்ப நல்ல கொழுப்பாய்த்தான் இருக்கும்…”

“வாம்மா மோதகம்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சொல்ல வாய் சுளுக்குதா?”

“டேய்! இங்க வாம்மா” – மிரட்சிப் பார்வையை எனக்குத் தந்தாள்.

“உன் பேர் என்ன?”

“மாலினி!”

“என்ன படிக்கப் போறாய்?”

“Medical Faculty” என்றவள் நாக்கைக் கடித்துக் கொண்டு, “மருத்துவ பீடம்” என்றாள்.

“கொப்பர் என்ன செய்யிறார்?”

தமிழ் அரசியல்வாதி ஒருத்தரின் பெயர் சொன்னாள்.

“அடடடே! தமிழ்க் கடலின் முத்து” என்றான் ரகு.

“முத்து எங்கள் சொத்து” என்றான் தயா.

“வீட்டில் எப்பிடிப் பொழுதைக் கழிக்கிறாய்?” என்றேன். முழித்தாள்.

“கோழி வளர்க்கிறியா?” என்றேன் நெஞ்சுக்கு நேரே பார்த்துக் கொண்டு.

தயங்கியவாறே ஆமென்பதாய் தலையாட்டினாள்.

கூட்டம் பேரொலியாகச் சிரித்தது.

“நான் தனியே வந்தா காட்டுவியா?”

குழப்பத்தோடு என் கண்களைப் பார்த்தவள், தலையைக் குனிந்து அழுவதற்கு ஆயத்தமானாள்.

கூட்டம் கெக்கட்டமிட்டுச் சிரித்தது.

***

நான் கென்டீனிலிருந்து வெளியே வந்த போது, மாலினி வந்து கொண்டிருந்தாள். தோழிகளைத் தவிர்த்து விட்டு தனியாக வரும் போதே, “என்ன இங்க நிக்கிறிங்கள், பந்தல் போடுமிடத்தில் உங்களைத் தேடுறாங்க” என்றபடியே மூச்சுவிட்டாள்.

“உண்ணாவிரதமிருக்கப் பேர் குடுத்திருக்கிறவர்கள் உங்களில் எத்தனை பேர்?”

“நாலு பேர், போய்ஸ்ல அஞ்சு பேர். மொத்தம் ஒன்பது பேர், லிஸ்ட் குடுத்தாச்சு”

“ஒரே முறையில் இவ்வளவு பேரும் இருக்க வேண்டாம் எண்டு படுது… தொடர்ச்சியா பிறகும் ஆட்கள் இருக்கலாமெல்லே… அதுதான் யோசிக்கிறேன்…”

“இன்னும் நிறயப் பேர் தயாராய்த்தானிருக்கிறம்… இருக்கட்டுமேன், சுலோகங்களெல்லாம் ரெடியா?”

“ம்… கமலனை விடுதலை செய், தரப்படுத்தலை நீக்கு, ராணுவ அடக்குமுறைச் சட்டங்களை வாபஸாக்கு எண்ட ரீதியில கொஞ்சம் எழுதியிருக்கு. மிச்சம் எல்லோரோடையும் கதைச்சு இரவுக்கும் எழுதலாம்”

“இப்ப எங்க போறீங்கள்?”

“பந்தலடிக்குத்தான்… ஏன்?”

“இல்லை ராஜன், எனக்கு கன நாளாய் சந்தேகம் ஒண்டு….”

“என்ன?”

தயக்கம், நாணம் என்ற கலவையை வெளிப்படுத்த, கைக்குட்டையால் மோவாயைத் துடைத்தபடி எனக்கருகில் தரையில் கிடந்த ஏதோ ஒரு பொருளை வெகு தீவிரமாக உற்றுப் பார்த்தாள்.

“மோதகம் எண்டு நீங்கள் யாரைச் சொல்றனீங்கள்?”

“சரியான வெயிலா இருக்கு. எல்லாத்தையும் அவிழ்த்துப் போட்டிட்டு ஓடலாம் போல…”

“ச்சீ… டேர்ட்டி!” என்றாள் முகத்தைச் சுருக்கி.

“அ… இதுதான்!” என்றேன்.

புரிந்திருக்க வேண்டும். மேலும் அழகானாள்.

“இன்னுமொண்டு…” என்று தயங்கினாள்.

“என்ன?”

“கோழி எண்டது ஏதேனும் கெட்ட வார்த்தையா… என்னது?”

“சேச்சே! கெட்ட வார்த்தையெல்லாம் இல்லை…” என்ற என் மீது நேர்ப்பார்வையோடு நின்றாள்.

“அப்ப அடிக்கடி உங்களுக்குள்ள சொல்லி சிரிச்சிக்கிறீங்களே!”

“பெண்களின் அப்பாவித்தனமோ, அல்லது அது மாதிரியான பாவனையோ எல்லாச் சமயங்களிலும் எரிச்சல் உண்டாக்குவதில்லை. என் கண்ணில் விஷமத்தைத் தவிர்க்க பிரயாசை எடுத்துக் கொண்டு பதில் சொன்னேன்.

“இல்லைக்கிடைக்குறை, இலையாமெனில் முல்லைக்கிடைக்குறை அதுவாகுமே…” அவள் புரிந்து கொள்வதற்குள் விலகி நடந்தேன்.

***

“அடிச்சாங்களா, ராஜன்?”

“ம் என்றேன்” இதென்ன அசட்டுக் கேள்வி என்ற பரிதாபப் பார்வையுடன்.

“உங்களைப் பிடிச்சுக்கொண்டு போனதிலிருந்து எங்கள் யாருக்கும் சாப்பாடே வேண்டியிருக்கேல்ல… எப்படி ராஜன் விடுதலை செய்தாங்கள்?” அவள் முகத்திலிருந்த வேதனையும் கோபமும் எனக்கு மிதப்புத் தருவதாய்த்தான் இருந்தது.

“எங்களைப் பயமுறுத்தி அடக்கிறதெண்டால், அதிலிருந்து எழுச்சி ஏற்பட்டு விடாமலும் தடுக்கிறதெப்படி எண்டதில் எல்லாம் அவர்களுக்கு இன்னம் குழப்பம் இருக்கலாம் போலத் தெரியுது”

“உங்களைக் கைது செய்த பிறகு இங்க ஒரே பதட்டம். சரியான சித்திரவதை செய்யிறாங்கள் எண்டும், திரும்பி வரமாட்டீங்கள் எண்டும் கதை பரவி, நாங்கள் எல்லாரும் ஒரே அழுகைதான்…!”

நான் முதன் முதலில் என்னை ஒரு போராளியாக உணர ஆரம்பித்தேன்.

***

“என்ன ராஜன், இந்தப் பக்கம் பார்க்காமலே போய்க் கொண்டிருக்கிறீங்கள்?”

“அ… இல்லை மாலினி. ஏதோ யோசனை, உன்ர வீடு இதில இருக்கெண்ட ஞாபகமே வரேல்ல. இருட்டிப் போச்செல்லே. அதான் நீ வாசல்ல நிண்டதும் தெரியேல்லே…”

“சென்ரி முடிச்சு வாறீங்கள் போலை… உள்ள வாங்கோ”

“இல்லை மாலினி… இப்ப…”

“அஆ… அதெல்லாம் வரலாம் வாங்கோ” என்று கொண்டே திரும்பி வீட்டினுள் நுழைந்து விட்டாள். தோளில் மாட்டிய ஏ.கே. 47 உடன் வீட்டினுள் போகக் கூச்சமாய் உணர்ந்தேன் நான். அவள் பெருமிதத்தோடு அழைத்ததாய்த்தான் தோன்றியது. மடித்துக் கட்டியிருந்த சாறத்தை அவிழ்த்து இறக்கி விட்டுக் கொண்டு, பவ்வியத்தை வரவழைத்துக் கொண்ட முகத்துடன் மெல்ல அவளைப் பின்தொடர்ந்து போனேன்.

நான் எதிர்பார்த்தது போலவே முன்னறையிலேயே அவள் தந்தை சாய்மனைக் கதிரைக்குள் கிடந்தார். என்னைக் கண்டதும் நிமிர்ந்து, “வாருங்கோ தம்பி” என்றார் வெகு மரியாதையாக. எதற்கு அந்த மரியாதை என்றிருந்தாலும் கூசிக்கொண்டு ஒடுக்கமாய் அவர் முன்னால் அமர்ந்தேன்.

“அப்பாவோட கதைச்சுக் கொண்டிருங்கோ, சாப்பிட்டுட்டுப் போகலாம்” என்று சொல்லிக் கொண்டே, சமையலறைக்குள் போனாள் மாலினி. சம்பிரதாயத்துக்கெல்லாம் மறுப்புச் சொல்லிக் கொண்டிராதே என்ற மாதிரி அவள் நடந்து கொண்டதை அதிசயித்து முடிவதற்குள் உள்ளே சமையலுக்கான ஆயத்தங்கள் கேட்க ஆரம்பித்தது. அந்தச் சத்தத்தின் பின்னணியில் அவள் தந்தையுடன் அவரை நான் வென்றெடுப்பதாக எண்ணியிருந்த ஒரு நீண்ட உரையாடலை நடத்திக் கொண்டிருந்தேன். மிருக நோக்கமெதுவுமில்லாத எங்கள் ஆயுதப் போராட்டத் தனித்துவ அவசியம் குறித்து அவர் சரிவரப் புரிந்து கொண்டு விட்டாரா என்று நான் தீர்மானிப்பதற்குள் மாலினி வந்து நின்றாள்.

“சாப்பிடலாம் எழும்புங்கோ. அப்பா நீங்களும் வாங்கோ!”

“இல்லைப் பிள்ளை, தம்பிக்குக் குடு. நான் கொம்மா வரட்டும். பிறகு சாப்பிடுறன்…” என்றவர் என்னைப் பார்த்து “தம்பி நீங்கள் போய்ச் சாப்பிடுங்கோ” என்றார் பரிவு ததும்ப.

கையைக் கழுவும் போதே கோழிக் கறி மணத்தது. தட்டின் முன்னால் அமர்கையில் ஏதாவது பேச வேண்டும் என உந்தப்பட்டேன்.

“மாலினி, அம்மா எங்க காணல்ல” அனேகமான அல்லது எல்லா உரையாடல்களின் துவக்கத்தையும் போல அபத்தமானதும் அவசியமற்றதுமான முதல் கேள்விக்கு அவள் என்ன சொன்னாள் என்பது மனதில் செல்லவில்லை.

“ஏன் ராஜன், ஒரேயடியா இயக்க வேலை எண்டு மாறிட்டியள்… படிச்சுக் கொண்டே உதெல்லாத்தையும் செய்யலாந்தானே! இப்ப விட்டிட்டுப் பிறகெப்ப படிக்கிறது?”

“ராணுவம் நினைச்ச நினைச்சவுடன் பொடியன்களைக் கைது செய்யுது… சுட்டுக் கொல்லுது… அவைக்குப் பணிஞ்சு எதையும் கேட்டுக் கொள்ள வேண்டுமெண்ட அடக்குமுறைச் சட்டங்களுக்குள்ள இப்ப யாருக்குப் பாதுகாப்பிருக்கு? வடக்கு கிழக்கில் உள்ள யாருக்குமே வாழற உரிமைக்கான உத்தவராதமில்லை எண்ட நிலைமையில நான் படிச்சு என்ன சாதிக்கிறது? எனக்கு உனக்கு எல்லாருக்குமே எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் எண்டிருக்கிற இந்த இன அழிப்பு நிலைமையை மாத்திறதுக்கு என்னால இயலுமானதையெல்லாம் இப்ப செய்யாமல், படிச்சுட்டு வேலை தேடி வெளிநாட்டுக்குப் போனால், எனக்குப் பின்னால வாற தலைமுறை என்னை மன்னிக்குமா மாலினி?”

ஆசுவாசப்படுத்திக் கொள்ள தண்ணீர் குடித்தேன். பிறகும் அவளைப் பேச விடாமல் நானே தொடர்ந்தேன்.

“எதிர்காலம், சந்ததி எல்லாத்தையும் விடு, இப்ப படிச்சுக்கொண்டு உயிரோடயும் இருக்கலாமெண்டதை உத்ததரவாதப்படுத்திறது யார்? கண்ணை மூடிக் கொண்டே பாலைக் குடிச்சுக் கொண்டிருந்தால் சூட்டுக்கோலைப் பற்றிக் கவலையே இல்லை என்கிறாயா?”

மாலினி மௌனமாக இருந்தாள். நான் பேச்சை நிறுத்தி விட்டு சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்ற அக்கறையும் காரணமாயிருக்கலாம்.

“மாலினிக்கு தேர்ட் இயர் எக்ஸாம் முடிஞ்சிருக்கோணுமெல்லே… ரிசல்ட் எப்படியெண்டு சொல்லவேயில்லையே!”

“குண்டுதான்” என்றான் நிஷ்களங்கமுடன் சிரித்து, பிறகு அவளாகவே சொன்னாள்:

“எல்லாம் நல்லாய்த்தான் எழுதினனான்… எதுக்கு ஃபெயிலாக்கிப் போட்டினம் எண்டு தெரியேல்லே…”

“………………………..”

“ஏன் சிரிக்கிறீங்கள்?”

“டொக்டர்கள் சொல்லியிருக்கிறத நினைச்சேன்”

“எதைப் பத்தி?”

“நான் பிரமாதமா எழுதியும் என்னை ஃபெயிலாக்கிப் போட்டினம் எண்டு சொல்றது… அருள் வந்து சாமியாடுற மாதிரியான ஒரு மன நிலையை அடிப்படையாகக் கொண்டது எண்டு அவை சொல்லுகினம். தனக்குத்தான் அதிகம் பக்தி, தன்னோடு கடவுள் பேசுறார் எண்டு தன்னைத்தானே நம்ப வைச்சுக் கொள்கிற சாமியாடல். இந்த தோய்க்கு ஒட்டோஹிப்னோசிஸ் எண்டு பெயர் சொல்லுகினம்…” பெண்கள் தம்மை மேலும் அழகுபடுத்திக் காட்டும் தந்திரமான சிணுங்கலுடன் கூடிய முகச்சுளிப்பொன்றை வெளிப்படுத்தினாள்.

“கறியெல்லாம் எப்பிடியிருக்கு?”

“எல்லாமே அட்டகாசமாயிருக்கு… இத்தனை வேகமா… அதேசமயம் எப்படி இவ்வளவு ரேஸ்ற்றா சமைக்கிறாய்?”

“அஆ… சும்மா புளுக வேண்டாம். கேட்டதுக்குப் பிறகுதானே சொல்றீங்கள்…” அவளது செல்லமும் சிணுங்கலும் மிக நெருக்கமாய் உணர்த்தியது. எனக்குள் ‘சைரன்’ கேட்டது. எச்சரிக்கையாகும் படி சகல தூண்டல் நிலையங்களிலிருந்தும் செய்தி பிறந்தது. பெண்ணின் சகலவிதமான படைக்கலங்களோடும் வருகிறாள். உன் சுவரை உடைத்து விட அனுமதிக்காதே. பெண் போகப் பொருள் அல்ல; பொம்மை அல்ல; மனசை மயக்குகிற மாயப் பிசாசு அல்ல; சக மனுஷி; உன்னோடு போராட்டத்தில் கைகோர்க்க வேண்டிய சக தோழி என்ற அறிவின் விளக்கங்கள் அனைத்தும் பொசுங்கிப் போகக் கூடிய அதிசய ஈர்ப்புகளோடு வருகிறாள். தளர்ந்து போகாதே, அதற்கு இது காலமல்ல, மனசை இறுக்கி வைத்துக் கொள். அலைக்கழிக்கிற நினைவுகளுக்கென்று உன்னைத் தாரை வார்த்துக் கொடுத்து விடாதே! உன் பாதை தடுமாறி விடக் கூடும். உன் பயண நோக்கம் நிறைவேறும் வரை வேறு சிந்தனைகள் உன்னிடம் தடை போட வரக் கூடாது.

“ராஜன்”

“ம்…”

“எனக்கு இதெல்லாம் சரியெண்டு படேல்லை…”

“எதெல்லாம்”

“இயக்கங்களெல்லாம் தனித்தனியா பிரிஞ்சிரிக்கிறதாலதான் பிரச்சினை தீரக் கஷ்டம். ஒரே இயக்கமாய் எல்லாரும் ஒற்றுமையாய் இருந்தா, ராணுவத்தைத் துரத்திப் போடலாம். எல்லா இயக்கங்களுக்குமே நோக்கம் ஒண்டுதானே, பிறகேன் தேவையில்லாமல் நூற்றெட்டுப் பேர்களில் இயக்கங்கள்?”

“இப்ப இருக்கிற இயக்கங்களெல்லாம் எப்படி ஒரே இயக்கமாகலாம் எண்டு நீ சொல்றாய்?”

“எல்லா இயக்கங்களும் தங்களைத் தாங்களே கலைச்சிக் கொண்டு ஒரு புதுப்பேரில் எல்லாரையும் உள்ளடக்கினதா பெரிய ஒரு அமைப்பை உருவாக்கலாம்” என்றவள் சிறிது யோசித்து விட்டு, “இல்லாட்டி, எல்லா இயக்கங்களும் இப்ப இருக்கிற பெரிய இயக்கத்தில் சேர்ந்து ஒண்டாயிடலாம்” என்றாள்.

“பெரிய இயக்கத்தை எப்படி தீர்மானிக்கிறது? பயிற்சி எடுத்தவர்களின் எண்ணிக்கையையும் வெச்சிருக்கிற ஆயுதங்களின் எண்ணிக்கையையும் பார்த்தா?”

“ம்… அதிலே என்ன?”

“அப்படியெண்டால் அரசு ராணுவத்துடன்தான் எல்லாரும் சேர வேணும்…”

“உங்களோட கதைச்சு எனக்கு வெல்ல ஏலா” செல்லச் சிணுங்கலோடு சரணாகதி ஆகிவிடுகிற அவளது எளிமை மிகு ஆயுதம்.

“இல்லை மாலினி. நோக்கம் ஒண்டாயிருந்தாலும் செயற்படுகிற முறைகளில் ஆரம்பத்திலிருந்தே குறிக்கோளை சிதைத்து விடக்கூடிய நடவடிக்கைகளைக் கண்டு கொள்ளேலும். முடிஞ்சா அவற்றைத் திருத்தித்தான் சேர்த்துக் கொள்ளவோ சேர்ந்து கொள்ளவோ முடியும். எங்கட மக்களது நலமான வாழ்க்கை எங்கிறதுதான் நோக்கம். பிறகு ஒரு கட்டத்தில நாங்கள் விரும்புகிற முறையிலதான் மக்களுக்கு நல்லபடியான வாழ்க்கை அமைய முடியும் என்ற வெறியா மாறியிடக் கூடாது”

அவளுக்குப் புரிகிற வகையில்தான் இதை நான் சொல்லிக் கொண்டிருக்கிறேனா என்று சந்தேகம் உண்டாயிற்று. இடையில் அவளைப் பார்த்தேன். மாலினி என்னையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் சொல்லும் விஷயங்கள் பற்றியதுதானா இந்த ஆர்வம் என்பது குறித்துச் சந்தேகம் மீண்டும் கிளம்பிற்று. எனது தரப்பில் நான் பேசிக் கொண்டே சாப்பிடுவதுதான் தற்காப்பானது என்ற உணர்வுடன் அவள் பார்வையைத் தவிர்த்தபடி தொடர்ந்தேன்.

“தமிழன் இல்லாத நாடில்லை. தமிழனுக்கெண்டொரு நாடுமில்லை” என்பது மாதிரியான காரணங்களுக்காக இந்தப் போராட்டத்தை நடத்த முடியாது. இனவாத அரசுதான் எங்களின் எதிரியே தவிர, சிங்கள மக்களல்ல. நாங்களும் உண்மையாகவே பயங்கரவாதிகளாய் மாறிக் கொண்டு அரசைப் பணிய வைக்க நினைக்கிறதும் சிங்களப் பொதுமக்களைக் கொன்று குவிக்கிறதுமான வழிமுறைகளில் எல்லாம் நாம் உடன்பட்டுப் போக முடியாது. இது எங்களை நாங்களே கொன்று கொள்கிற வரைக்கும் போகக் கூடியது. பிடிக்காதவர்களையெல்லாம் கொலை செய்துவிட வேண்டும் என்றாகி விடும். தமிழ் மக்களால் தவிர்க்க முடியாமல் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம் பிழையான பாதையில் போய் சீரழிந்து விட விட்டுடக் கூடாது மாலினி. அதுதான் முக்கியமானது…”

“ஒருத்தருக்கொருத்தர் முகத்தைத் திருப்பிக் கொண்டே வளர்ந்து எப்படி இதைச் சாதிக்கப் போகிறீர்கள்?”

“அப்படியரு விரோதமும் இன்னும் வளரல்ல மாலினி. முதல்ல இப்ப மூண்டு இயக்கங்கள் ஒன்றுபட்டு ஒரே அமைப்பாய் இயங்கக் கூடிய வழிமுறைகள் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கினம். சரிவந்தால் கொஞ்சம் கொஞ்சமாய் எல்லோரும் ஒண்டு சேர்ந்து போராடி வெல்லும் காலம் வரும்” பிறகு மௌனமாகச் சாப்பிட்டு முடித்தேன். கடைசியாக மாலினிதான் பேசினாள்.

“நீங்களும் கொஞ்சம் கவனமாய் இருக்க வேணும் ராஜன்” என்றாள் கீழிறங்கிய குரலில்.

கையைக் கழுவிவிட்டு எழுந்தேன்.

***

“எவ்வளவு காலமாச்சு…?” அவளைத் திடீரென்று சந்திக்க நேர்ந்த வியப்பு வடிந்து விடாமல், வள்ளுவர் கோட்ட நிழலொன்றில் அமர்ந்திருந்த போதும் வெளிப்பட்டது.

“முதல்ல உங்களப் பத்தி சொல்லுங்க ராஜன். எங்க தங்கியிருக்கிறீங்கள், என்ன பண்றீங்கள்…”

“இங்கதான் கோடம்பாக்கத்தில நண்பன் ஒருத்தன் வீட்டில தங்கியிருக்கன். என்ன பண்றதெண்டு தெரியாததுதான் இப்ப இருக்கிற பிரச்சினை” என்னை அறியாமலே என் பேச்சில் விரக்தி வெளிப்படுவது தெரிந்தது. அவள் முகபாவத்தைக் கவனித்து என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

“இதில இனி யோசிக்க என்ன இருக்கு… நாட்டு நிலைமைய உங்களால எல்லாம் திருத்த முடியாது. இன்னும் நிறைய அழியப் போகுது. விடாப்பிடியா அதில தலையிட நினைச்சு இன்னும் ஏன் உங்களை அழிச்சுக் கொள்ள நினைக்கிறீங்கள்?”

“சேச்சே, விடாப்பிடியெல்லாம் ஒண்டும் கிடையாது மாலினி. என்ர பலம் எனக்குத் தெரியும். நாங்கள் ஆசை ஆசையாகக் கனவு கண்ட தேசம் அழிஞ்சு கொண்டிருக்கிறதை கையாலாகாத்தனத்தோடு பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கே எண்ட கவலைதான். வேறொண்டுமில்லை இப்ப” யாரையும் சந்தேகத்துடன் விட்டுவிட விரும்பாத என் பழக்க தோஷத்தில் மேலும் அவளுக்கு விளக்கமளிக்க முற்பட்டேன்.

“மக்களுடைய எதிர்காலத்தை நல்லபடியாக அமைக்கக் கூடிய யுத்தம் தேவைதான். அப்படித்தான் நினைச்சு ஆரம்பிச்சம். ஆனால், யுத்தத்தின் பலன் மேலும் மேலும் யுத்த அழிவுகள்தான் எண்டாக்குகிற பராக்கிரமசாலிகளின் பிடியில்தான் எங்கட மக்கள். அவர்களுடைய போராட்டம் எல்லாமே போயிட்டுது. என்னால இதை ஒப்புக் கொள்ளவும் முடியல்ல. எதிர்த்து வாழவும் பலமில்ல. இங்க வேற இப்ப சொல்கிறார்கள்; நீங்கள் உங்கட நாட்டுக்கே திரும்பிப் போயிர்ரதுதான் நல்லதெண்டு“.

“இன்னும் ஏன் அரசியல்ல ஈடுபடுறதையே நினைக்கிறீங்கள்?”

“அரசியல் எது மாலினி? ஒரு சாதாரண ஈழத்துக் குடிமகனா, நமக்கு எது வேணும் எண்டு தீர்மானிக்கிற உரிமை எனக்கில்லையா? எல்லா இடங்களிலும் மறுக்கப்படுகிறதே. ஒரு கற்கால வீரத்தமிழனாக அர்த்தமற்ற யுத்தத்தை பார்த்துக் கைதட்ட மட்டும்தானே நமது நாட்டில் எனக்கு அனுமதிக்கப்பட்டிருக்கு”

“முதல்ல உங்க வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொண்டு நாட்டைப் பற்றி கவலைப்படுறதை வைச்சுக் கொள்ளலாமே ராஜன்”

“ஏதோ நம்மட தேசத்தின் ஒரு பக்கத்தை என்ர தோளில தாங்கிக் கொண்டிருக்கிற மாதிரியும் நான் விட்டுட்டா தேசம் விழுந்து நொறுங்கிப் போகும் எண்டெல்லாம் பிரமையில் நான் இல்லை மாலினி… மனசாட்சித் தொந்தரவுதான். தேசம் எக்கேடு கெட்டால் என்ன, நம்மால ஒண்டும் ஆகாதெண்டு சட்டெண்டு தனிமைப்படுத்திக் கொள்ள முடியல்ல, கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியிருக்கு, இதுவும் இல்லாட்டித்தான் நீ நினைக்கிற மாதிரி சாமியாராகி இருப்பேன்”

சிரித்தது நான் மட்டும்தான் என்பதைக் கவனித்துக் கொண்டே கேட்டேன்.

“உன்னைப் பற்றி ஒன்றும் சொல்லவேயில்லையே மாலினி?”

“ஓம் ராஜன்! மூண்டு வயசில குழந்தை இருக்கு. ப்ரமிளா. அவ அப்பா பிஎச்டி முடிச்சிட்டு லண்டனிலே இருக்கிறார். உங்களுக்குத் தெரியும் ராஜன், ரவியை…. ரவீந்திரன் எங்களுக்கு ரெண்டு வருஷம் சீனியர். நானும் பாப்பாவும் கூட லண்டனுக்குப் போயிடப் போறம்… ம்.. அவ இனிப் படிக்கவும் வேணும்”

“கோப்பாய் ரவிதானே மாலினி?”

“ஓமோம். தயா, ரட்ணம், லோகு, பாமா, நந்தினி எல்லோருமே லண்டனில இவர் இருக்கிற இடத்துக்குப் பக்கத்திலதானாம். அடிக்கடி சந்திக்கிறவையெண்டும் இவர் எழுதியிருக்கிறார்”

“ரவி நல்ல அமைதியான ஆளெல்லே…. உன்னைப் பூப்போல நேசிப்பார். நீ லக்கி!”

“நான் மட்டும்தானா லக்கி, அவரில்லையா?” வெள்ளையாகச் சிரித்தாள். அவள் அசட்டுத்தனமாகக் கருதக்கூடிய சிரிப்பொன்றைச் சிரித்து வைத்தேன்.

“ஜெயக்குமார், விஜி, குகா, செல்வி எல்லோருக்கும் கனடாவில் அகதிகளுக்கான அடையாள அட்டைகள் கிடைச்சிட்டுது… கடிதம் போடுவினம்” கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து விட்டுக் கேட்டாள்.

“இங்கயும் இப்ப பிரச்சினைதானே, ஏன் ராஜன், நீங்க கொஞ்ச காலம் வெளிநாட்டுக்குப் போய் இருந்திட்டு வரக்கூடாது?”

மனம் எங்கெங்கோ அலைபாய ஆரம்பித்திருந்ததால், எனக்கு அவள் கேள்வியை வாங்கிக் கொள்ளச் சிறிது நேரம் பிடித்தது. உண்மையில் அவள் கவலைப்படும் அளவுக்கு எனது பத்திரமான எதிர்காலம் குறித்து நான் முடிவு செய்துதான் ஆக வேண்டும் என்பது சற்று எரிச்சலாகக் கூட இருந்தது. எரிச்சல் என் இயலாமை, அல்லது தோல்வி. எதனிலும் இருந்துதான் வருகிறதா என்றும் தேட முயன்றேன். அவளுக்கு என் மனநிலையை விளக்கி விட முடியுமா என்ற சந்தேகத்துடனேயே பதில் சொன்னேன்.

“தேசமும் மக்களும் உண்மையாகவே போராட்ட நெருக்கடிக்குள் சிக்கியிருந்த காலத்தில் வெளிநாடுகளுக்கு ஓடிப்போனவர்களையெல்லாம் துரோகிகளாகவே நான் நம்பினேன் மாலினி. இப்போதும் எனக்கு மனத்தடைகள் உண்டு”

“இங்க தனிய இருந்து என்ன செய்யப் போறீங்கள்?”

“எதுவும் செய்ய முடியாது” சற்று நேர மௌனத்திற்குப் பிறகு சொன்னேன். “…. ஆனால் தனிய இல்லை. அகதிகளாய் இங்க ஒண்டரை லட்சம் பேர் இருக்கிறம்”

“உங்களை எனக்கு விளங்கக் கொள்ளேலாமல் இருக்கு ராஜன்”

“எனக்கும்தான்!”

வள்ளுவர் கோட்டத்திலிருந்து நாமிருவரும் வெளியே வந்தபோது, எனக்கு எதையோ இழந்திருப்பது போன்ற உணர்வு இருந்தது. இப்போதைக்கு அது என்னவென்று என்னால் நிச்சயமாய்ச் சொல்லிவிட முடியாதென்றும் தோன்றியது.

***

நன்றி : சிவகுமார் ( aayanan@hotmail.com )  ,   கணையாழி  , எஸ்.எல்.எம். ஹனீபா , ஸபீர் ஹாபிஸ்

தாஜ் வைத்த ‘க்கு’

நண்பர் தாஜிடமிருந்து நேற்று வந்த மெயில். பரிசு, பணம் என்று என்னமோ சொல்லியிருக்கிறார். அது மட்டும் புரியவில்லை. ’யாத்ரா’வில் வருவதற்கு தாமதமானதால் , ‘இங்கெ கண்டிப்பா போடுவாங்க, பாருங்க’ என்று கதையை – என் சார்பாக – ’கணையாழி’ இதழுக்கு அனுப்பிவைத்த நண்பருக்குத்தான் தெரியும். அது போகட்டும், இந்தப் பதிவின் தொடர்ச்சி நாளை வெளியாகும் – கொத்தும் குலையுமாக! அதற்கு முன் – இன்று ரசித்த பாதித்த – எழுத்தாள நண்பர் ஜே. டேனியலின் ‘எப்ப வருவீங்க’ கவிதை.   கடைசி பத்தி மட்டும், நன்றிகளுடன்…

’இப்போது வாசித்தாலும்
ஏமாற்றம் தராத வசனம் 
சீக்கிரம் வருவேன்
என்றுதான் இருக்கிறது
எப்போது வருவீங்க.
வந்தாலும் எப்போதும்போல்
நீங்களே எங்களுக்கா கொலையாகிவிடும் நோக்கம்தானா? ’

***

தாஜ் மெயில் :

அன்புடன்
ஆபிதீன்….

நீண்ட நாட்களாயிற்று
கடிதமென
உங்களோடு உரையாடி.

நடப்பு பொழுதுகளில்
என் வியாபாரம்
காற்று வாங்க
நான்..
நடந்து முடிந்த
மாபெறும் தேர்தல் கூத்தை
கண்டு களித்தவனாக
இன்னும் இன்னும்
சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த நேரங்களில்
உங்களை மாதிரி துபாயில் இருந்தால்
பணம் மட்டும்தான் பார்த்திருக்கலாம்.
இது மாதிரி
வாழும்கூத்து கிடைத்திருக்காது.
இப்படி ஒரு மஹா அனுபவத்தையோ
வயிறு நோகும் அளவிலான
உயிர்ப்பான ஹாஸ்யத்தையோ
கண்டு களித்திருக்க முடியாது.
பாக்கியவான் நான்!

நின்று போய் கிடந்த
நம்ம காலத்து பேரிலக்கிய சிற்றிதழான
‘கணையாழி’
இந்த ஏப்ரலில்
மீண்டும் உயிர்த்திருக்கிறது!
இதன் வெளியீட்டு விழா
15/04/2011 அன்று,
சென்னை….
தி.நகர் / வாணி மஹாலில் நடந்திருக்கிறது.

கணையாழியின்
கௌரவ ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருக்கும்
பெரியவர் இந்திரா பார்த்தசாரதி
தலைமை தாங்க
தமிழ் எழுத்துலக சிம்மம்
ஜெயகாந்தன்
இதழை வெளியிட்டு பேசியிருக்கிறார்.

“கணையாழியில் நான் எழுதியதில்லை.
ஆனால், கணையாழி
என்னை எழுதியிருக்கிறது.
இப்போ…
கணையாழியில்
நான் எழுதலாம்!”
ஜெயகாந்தனின் இந்தப் பேச்சு
நிறைய செய்திகள் கொண்டது.

கணையாழியால் வளர்ந்த
நவீன இலக்கிய கர்த்தாக்கள்
நம்மில் அதிகம்.
அதன் கொசுறுகளில்…
நிச்சயம் நான் உண்டு.

கணையாழியை
ரொம்பப் பிடித்துப்போக
பல காரணங்கள்.
அதில் ஒன்று…
கடை‘!

அந்தக் குறு நாவலை
கணையாழியில் வெளிவந்துதான் படித்தேன்.
இப்படியெல்லாம் துணிவாக
நம் சமுதாயத்தைப் பற்றி எழுதலாம் என்கிற
உணர்வையும் பெற்றேன்.

முத்திரைச் சிறுகதையாக
வெளிவந்த குறுநாவல் அது!
அப்பவே….
அதற்கு 1000/ ரூபாய் பரிசு!
அந்தப் பணத்தில்
அன்றைக்கு
அந்தக் கதை எழுதியவர்
அவரது ஊரில்
ஓர் வீட்டுமனையே வாங்கலாம்!
வாங்கினாரா?
இல்லையா?
தெரியாது!
ஏன் ஆபிதீன்…
உங்களுக்குத் தெரியுமா?

*
நம்ம கி.ரா.
அவருக்கு நண்பரும்
மரியாதைக்கு உரியவருமான
தி.க.சி.யைப் பற்றி
சிலாகித்து கட்டுரை ஒன்றை எழுதியிக்கிறார்.
அதில் தி.க.சி.யின்
இலக்கிய குசும்பெல்லாம் பேசப்பட்டிருக்கிறது!
அந்தக் கட்டுரையில்
ஓர் சுவாரசியமான விவாதம்!

கி.ரா. தன் கதை ஒன்றில்
‘உயிர்த்தலம்’ என்கிற
வார்த்தையை உபயோகித்துவிட,
அந்த வார்த்தைப் பிரயோகத்தை
ஆபாசம் என்றுவிடுகிறார் தி.க.சி.!
இல்லை என்று பதறுகிறார்
அதை எழுதிய கி.ரா!

பாருங்கள் ஆபிதீன்
நம்மிடையேதான்
எத்தனை கனவானான
எழுத்தாளப் பெருமக்கள்!?
அன்றைக்கு!!!

இன்றைக்கு…
முலையைப் பிடித்து
திருகோ திருகென்று திருகுவதை
கதைக்குக் கதை
மறக்காதல்லவா எழுதுகிறார்கள்!
இத்தனைக்கும்  
சாதாரண எழுத்தாளர்கள் அல்ல அவர்கள்!
அவதாரமாகவும்
இந்திரனும் சந்திரனுமாகவும்
தங்களைக் காண்பித்துக் கொள்பவர்கள்!

கி.ரா.வின் ’உயிர்த்தல’த்தைப் பற்றி
இங்கே சொல்ல நேர்ந்ததற்கு
ஓர் ‘க்கு’ உண்டு.
இன்ஷா அல்லாஹ்….
அதனைப்பற்றி
பிறகு.
பொழுது விடியட்டும்!

***

நன்றி :  தாஜ்satajdeen@gmail.com

« Older entries Newer entries »