ஜீவனம் (கவிதை) – அமுதன் இஸ்மாயில்

நண்பர்கள் சிலரின் கவிதைகளைப் படித்திருப்பார் போல, ‘புதுக்கவிதை குப்பை குப்பையாக வந்து கொண்டே இருக்கும். சட்டென்று ஒரு மாணிக்கம் தென்படும்’ என்று சொல்லியபடி சுஜாதா தேர்ந்தெடுத்த கவிதை இது. கணையாழி கடைசிப் பக்கங்களில் (ஜூலை 1993) கண்டேன். ஞானியின் நிகழ் சிறப்பிதழில் வந்த கவிதையாம்.  கவிஞரைப் பற்றி கூடுதல் விபரங்கள் தந்தால் மகிழ்வேன். தவளைகளைப் பற்றியும் தரலாம்! – ஆபிதீன்

***
ஜீவனம் (கவிதை) – அமுதன் இஸ்மாயில்

நேற்றைய தூறல் கிடக்கும்
அடிதளக் குழியில்
சவ்வுக்கால் பரப்பி
குதித்துக் கொண்டிருந்தது தவளை.
கான்க்ரீட் கலக்கியாயிற்று.
அந்த சின்ன ஜீவனை
எடுத்து வெளியே போட
பத்தரையடிக் குழியில் இறங்கப்போன
வேலைமெனக்கெட்ட சுப்பிரமணியை
நேரம் கடத்துவதாய்
கெட்ட வார்த்தையாடினான்
கடன்கார மேஸ்திரி.
ஒவ்வொரு சட்டி
திருட்டு கான்க்ரீட் வந்து விழும் போதும்
தாவிக் குதித்து
ஒதுங்கி ஒதுங்கி இறுதியாய்
சப்பாத்தித் தோல் நசுங்க
புதைந்து அமைதியானது
வேலையாகிக் கொண்டிருக்கிறது
வேகவேகமாய்.

***
நன்றி : அமுதன் இஸ்மாயில், உயிர்மை பதிப்பகம்

ஹார்மோனியம் – செழியனின் நட்சத்திர சிறுகதை

எஸ். ராமகிருஷ்ணன் கொடுத்த நூறு சிறந்த சிறுகதைகள் லிஸ்டில் இரண்டு சிறுகதைகள் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை என்று அலைந்து கொண்டிருந்தார் தம்பி சென்ஷி.  அதில் ஒன்று இந்த ‘ஹார்மோனியம்’ (இன்னொன்று சென்ஷி எழுதிய கதை என்று நினைக்கிறேன்!). எப்படியோ, மூன்று வருடங்களாக அவர் புலம்பிய புலப்பம் முடிவுக்கு வந்துவிட்டது –  இலங்கையின் ‘பொல்லாத மனுஷன்’ எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்களின் உதவியால் இன்று. உடல்நலம் குன்றிய நேரத்திலும் கறையான் அரிக்காத கணையாழியை தேடி எடுத்து அனுப்பியிருக்கிறார், தம்பி ஸபீர் உதவியுடன்.  எவன் சொன்னான் காக்காவை “பொட்டி பீத்தல், வாய்க்கட்டுத் திறம்” என்று?! எங்கள் ஸ்பெஷல் நன்றி.

‘எனக்காகக் கதைத் தேடுதலில் ஈடுபட்ட ஆபிதின் அண்ணன் தளத்தில் இந்த சிறப்பான சிறுகதை மீண்டும் வெளிவருவதே சாலச்சிறப்பானது.’ என்று சொல்லி உடனே டைப் செய்து அனுப்பிய சென்ஷிக்கும் நன்றி. உண்மையில், இந்தக் கதைத் தேடுதலில் சகோதரர் பி.கே.எஸ்ஸுக்கும் பங்குண்டு.  நான் கேட்டதற்காக பலமுறை செழியனை தொடர்பு கொண்டவர் அவர்.  ‘ஆவன செய்யுங்கள் , இல்லையென்றால் நானே அதே தலைப்பில் கதை எழுதிவிடுவேன் என்று செழியனை கடைசியாக அவர் எச்சரித்தார்.  அல்லாஹூத்தஆலா உதவியால் அந்தக் குரல் ஹனீபாக்காவுக்கு கேட்டுவிட்டதால் பிழைத்தோம்! கதா விருது பெற்ற இந்த அருமையான கதை பற்றி  நான் ஏதும் விமர்சிக்கப்போவதில்லை. படித்ததும் ஆர்மோனியச் சக்கரவர்த்தி காதர் பாட்ஷா மட்டும் நினைவுக்கு வந்தார். இசை சம்பந்தமான நுணுக்கமான விவரிப்புகள் இருப்பதால் ‘அவரோகணம்‘ குறுநாவலை எழுதிய நண்பன் நாகூர் ரூமி சொல்வதே முறை. சொல்வார்.

ஒளிப்பதிவாளர் , ‘எழுத்தும் எண்ணமும்’ குழும நண்பர், செழியனுக்கு உளங்கனிந்த நன்றி. – ஆபிதீன்

***

chezhiyan-fb2

ஹார்மோனியம் – செழியன்

மதிப்பிற்குரிய திரு. ஹசன் பண்டிட் (வயது 43) அவர்களை ஒரு மாலைப்பொழுதில்தான் சந்தித்தேன். நெடிய கட்டிடங்களுக்கு இடையிலான குறுகலான சந்தில் நடந்து, செங்குத்தான மாடிப் படிகளில் ஏறி அந்த மேன்ஷனின் ஏழாவது அறையைக் கண்டுபிடித்தேன். ‘ஹார்மனி இசைப்பள்ளி’ என்று எழுதப்பட்ட, காய்ந்த கதம்ப மாலையிட்ட விளம்பரப்பலகை இருந்தது. வாசலில், இரண்டு தேய்ந்த ரப்பர் செருப்புகள் கிடந்தன. அறையின் உள்ளிருந்து ஊதுபத்தி வாசனையோடு ஹார்மோனிய இசை கேட்டது.

“வணக்கம்.”

பண்டிட் கண்களால் என்னை அமர்த்திவிட்டு, ஹார்மோனியத்தில் ஊர்ந்த தன் விரல்களைத் தளர்த்தி நிறுத்தினார். அறையெங்கும் இசையின் அதிர்வு பரவித் தணிந்தது. பத்துக்குப் பனிரெண்டு அறை. சகல மதங்களுக்கான தெய்வங்களின் படங்களின் கீழே ஊதுபத்தி புகைந்து கொண்டிருந்தது.

‘மியூசிக் கத்துக்கணும்…’

’உட்காருங்க. எங்கெ இருந்து வர்ரீங்க?’

‘சிவசங்கைலயிருந்து..’

அவரது விரல்கள் சப்தமில்லாது ஹார்மோனியத்தின் ஸ்வரக்கட்டைகளின் மேலாக ஏதோ தேடுவதாகப் பாவனித்தன.

‘ம்.. சொல்லுங்க.. எங்கெருந்து. வர்ரேன்னு சொன்னீங்க..’

‘சிவகங்கையில இருந்து வர்ரேன். மியூசிக் கத்துக்கணும்னு ஆசை.’

‘என்ன பண்ணிட்ருக்கீங்க..’

‘வேல தேடிட்டிருந்தேன்.’

’நாள மறுநாள்….’ விரல்களில் ஏதோ கணக்குப் பார்த்தார். அஷ்டமி, என உதடுகள் முணுமுணுத்தன. ’வியாழக்கெழம அமாவாசை… அன்னிக்கே சேர்ந்திடுங்க… திங்கள் வியாழன் க்ளாஸ். வாரம் ரெண்டு க்ளாஸ். இருநூறு ரூபாய்.. சம்பளம் ஏற்கனவே மியூசிக் படிச்சிருக்கீங்களா’

‘இல்ல..’

‘வீட்ல யாராவது படிச்சிருக்கீங்களா’

‘இல்ல.. நான் தான் முதல்ல…’

’ஏன் கத்துக்கிடணும்னு நெனைக்கிறீங்க’

‘கத்துக்கணும்னு ஆசை’

ஹசன் பண்டிட் புன்னகைத்தார்.

வரும் திங்கள்கிழமையிலிருந்து வகுப்புக்கு வருவதாகச் சொல்லி விடைபெற்றேன். நான் அறையைக் கடந்து மாடிப்படிகளில் இறங்குகையில் ஹார்மோனியத்தின் இசை மீண்டும் பரவியது. ஹார்மோனியத்தின் கட்டைகளின் ஊடே தயங்கி, தாவி, ஊர்ந்து, பின்வாங்கி ஸ்வரங்களைத் தேடும் அவரின் விரல்கள் என் நினைவில் வந்தன.

இருட்டத் துவங்கிவிட்டது. ஹசன் பண்டிட், இருட்டத் துவங்குகிற கறுப்பு. பாகவதர் போல தூக்கிச் சீவிய தலைமுடி. தீர்க்கமான சிறிய கண்கள். மீசையில்லாமல் சுத்தமாக மழித்த முகம். இசைக் கலைஞனுக்குரிய தேஜஸ்.

மொட்டை மாடியில் வெறுமனே மேகங்கள் பார்த்துக் கலையும் என் மாலைப் பொழுதுகள் இனி ஹசன் பண்டிட்டின் ஸ்வரங்களால் நிறையும் என நினைக்கையில் உற்சாகமாக இருந்தது.

திங்களன்று இசைவகுப்புகுப் போகிறோம் என்பதே எனக்குள் மிகுந்த பரவசத்தை அளித்தது. இரண்டு நீள அன்ரூல் நோட்டுக்கள் வாங்கிக் கொண்டேன்.

அன்று நடுத்தர வயதில் மேலும் இரண்டு பேர் நீள நோட்டுக்களுடன் காத்திருந்தனர். ஆசிரியர் அவர்களுக்கான வகுப்பு முடியும்வரை என்னைக் காத்திருக்கச் சொன்னார். பக்கத்துக் கட்டிடத்திலிருந்த பேக்கரியில் இருந்து ரொட்டிகள் முறுகும் வாசனை இதமாய் இருந்தது. பச்சை நிற ரெக்ஸின் உறையினால் மூடப்பட்டு ஓரத்தில் இருந்த ஹார்மோனியத்தை ஒருவர் எடுத்துக் கொண்டார். அப்போதுதான் கவனித்தேன். அந்த அறையில் மொத்தம் மூன்று ஹார்மோனியங்கள் இருந்தன. ஹசன் பண்டிட்டின் ஹார்மோனியம் மட்டும் பெரியது.

‘ஜண்டை வரிசை வாசிங்க…’

ஸஸ ரிரி கக மம… எனத்துவங்கி ஹசன் பண்டிட் காட்டும் விரல் அசைவிற்கும் கைதட்டுதலுக்கும் ஏற்ப வேகம் இயல்பாய்க் கூடி.. சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் சிறுமிகள் நடனமாடுகையில் அவர்கள் கையில் இருக்கும் வண்ண வண்ணமான ரிப்பன்கள் காற்றில் அலைவதைப் போல… ஸ்வரங்களின் நடனம். அலை அலையாய் மின்சாரம் போல அறையில் பரவும் இசை அதிர்வில் அந்த இடமே எனக்கு அற்புத உலகம் போல இருந்தது. அவர்கள் வாசித்து முடித்ததும் அதிர்வுகள் தணிந்து மௌனம் கவிந்தது. அவர்களுக்கான பாடக் குறிப்புகளை எழுதச் சொல்லிவிட்டு ஆசிரியர் என்னை அழைத்தார்.

எனது நீள நோட்டினை வாங்கி முதல் பக்கத்தைத் திறந்து, கண்களை மூடிப் பிரார்த்தித்துவிட்டு, பெரிதாக பிள்ளையார் சுழி போட்டு என் பெயரை கொட்டை எழுத்தில் எழுதினார்.

அறை நிசப்தமாய் இருந்தது.

கற்காலத்தில் இடுகாட்டில் கிடந்த எலும்புகளை ஊதி, சப்தங்களை எழுப்பிய கதையிலிருந்து துவங்கினார். தேர்ந்த கலைஞனின் அடவுகளைப் போல முகபாவனைகளாலும், விரல் அசைவுகளாலும் அவர் பேசப் பேச ஆதிமனிதனின் புதைமேடுகளில் கிடந்த எலும்புகளில் வண்டுகள் துளையிட்டுப் பறக்க.. காற்றின் சுழிப்பில், விசிறலில்.. இனந்தெரியாத சோகத்தோடு ஒரு குழலிசை புகையெனச் சுழல…  அறை இருட்டிக் கொண்டே வந்தது. ஸ்வரங்களை வாசித்துப் பழகிய அவரது கறுத்த விரல்கள், காற்றில் கண்ணுக்குத் தெரியாத ஆர்மோனியத்தின் கட்டைகளை வாசிப்பது போல அபிநயித்தன. சூனியம் இல்லாத இருண்ட வனத்துக்குள் மயில்கள் அகவுகின்றன. அதிலிருந்து ஸட்ஜமம். கிரௌஞ்சப் பறவைகள் பாடுகின்றன. நிலா வெளிச்சத்தில் மூங்கில் துளிர்கள் தேடித் தின்ற களிறுகள் பாறைகளின் ஊடே தன் இணையை ஆளும் சுகத்தில் பிளிறுகின்றன. ஸ்வரங்கள் உயிர்த்து அசைகின்றன. கைலாயத்தில் நடனம் கொள்ளாது சிவனின் ஏழு தலைகளிலிருந்தும் ஒவ்வொரு பாடல் ஒவ்வொரு கதியில். இசைமுனி நாரதனின் வீணைத் தந்திகள் தாமாக அதிர்கின்றன.

ஸ ரி க ம ப த நி என ஏழு ஸ்வரங்கள். வேங்கட மகியின் பனிரெண்டு சக்கரங்கள். மேளகர்த்தாக்கள். எழுபத்திரெண்டு தாய். கோடிக்கணக்கான குழந்தைகள். திருவையாறின் பிரசன்ன வீதிகளில் தியாகையரின் தம்புரா அதிர்கிறது. காவேரியில் உதிர்ந்த நாகலிங்க மலர்கள் உயிர்த்துப் பறக்கின்றன. சியாமா சாஸ்திரியின் ஆலாபனை. முத்துச்சாமி தீட்சிதரின் ஸ்வரக்கட்டு. பனை ஓலைகளில் துளசிதாஸரின் எழுத்தாணி கீறி நகர்கிறது. சரளிவரிசை. ஹார்மோனியத்தின் கமகக் குழைவும் ஒரு காந்தர்வக் குரலுமாக…

ஸரிகம பா கம பா பா

கமபம நிதபம கம பக மகரிஸ

ஸா நித நீ தப தா பம பா பா

கம பத நித பம கமபக மக ரிஸ

ஸா ஸா நித நீநீதப தாதா பம பா பா

கமபத நிதபம கமபக மகரிஸ…

நான் மீண்டபோது எனக்கெதிரே நாற்காலி மட்டுமே இருந்தது. ஊதுபத்தியின் புகைவளையங்கள் சுழன்று திரிதிரியாய்ப் பிரிந்து மௌன ஆலாபனையாய்க் கலைந்தன.

‘ஸ்வரம் மாதா; லயம் பிதா

ஸ்வரமும் தாளமும் கூடிக் கூடிப் பிணைந்து, விலகி, ஸ்பரிசித்து.. தழுவி அணைத்து… துரித காலத்தில், விளம்பித காலத்தில் காற்றில்… காற்றுக்குள் நிகழும் கலவி. சூல் கொண்ட காற்று இசையாகிறது. மற்றதெல்லாம் உயிர்பிடிக்காது திரிதிரியாய்க் கலைகிற சப்தம். காற்றுதான் இசை. காற்றுதான் பிராணன். இசைதான் பிராணன். இசை கூடினால் தியானம். இசை கூடினால் ஞானம். ஜெபம் கோடி தியானம். தியானம் கோடி லயம். லயம் கொள். த்ருவம், மட்யம், ரூபகம், ஜம்பம், த்ருபுடம், அட, ஏகம் என ஏழு ராஜகுமாரர்கள். ஸட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என ஏழு தேவ கன்னிகைகள். ஏழு ராஜகுமாரர்களின் குதிரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு லயத்தில் குதித்து வருகின்றன. த்ருதம், அணுக்ருதம், லகு, புலுதம், காகபாதம் என சப்தக் கோவைகள். வண்ண வண்ணமாய் தொடுக்கப்பட்ட அட்சர மாலைகள். தக்கத்திமி தக்கத்திமி திமி திமியென.. காற்றின் புலனாகாத அரூப வெளியில் ராஜகுமாரர்களும் தேவகன்னியரும் மாலை சூழ சுயம்வரம் கொண்டு சூடித் திளைக்கிறார்கள்.

ஸ்வரம் மாதா; லயம் பிதா

கேட்பவை எல்லாம் ஸ்வரம்.. கேட்பவை எல்லாம் லயம். மேற்கூரையில் மழை பெய்கிறது. சட்டச் சட சட்டச்சட வென. திருபுட தாளம். பெய்து களைத்த மழை தாழ்வாரச் சருக்கத்தில் துளித்துளியாய்ச் சொட்டுகிறது ஏக தாளம். குழந்தை முனகுகிறது. மந்த்ர ஸ்தாயியில் கமகம். வீறிட்டு அலறுகிறது. தாரஸ்தாயி சஞ்சாரம். மணலைக் கயிறாய்த் திரிக்கிற மாதிரி காற்றை இசையாய் நெய்கிற ரச மந்திரம், சித்த மந்திரம். காதுகள் உள்ளவன் கேட்கக் கடவன். இயற்ற முடிந்தால் அதுதான் ஞானம். காற்றைக் கேள். கேட்கத் துவங்கு.’

காற்று முகத்தில் விசிற பேருந்தின் சன்னலோரம் அமர்ந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். காற்றிலும் இது பனிக்காற்று. பண்டிட்டைச் சந்தித்ததில் இருந்து என் சுவரில் இறுகியிருந்த சன்னல்கள் எல்லாம் தாமாகத் திறந்து கொள்வதாக உணர்ந்தேன். எனக்கான கிழமைகள் இசையென அதிர்ந்து அடங்குகையில் வியாழன் வந்திருந்தது.

சந்தன ஊதுபத்தியின் வாசனை ஈஸ்ட்டில் முகிழ்த்த மென் ரொட்டிகள் ஓவனில் முறுகும் வாசனை. ஹார்மனி இசைப்பள்ளி.

‘வணக்கம்.’

தன் ஹார்மோனியத்தின் முன் அமர்ந்து இசைக்குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்த ஹசன்பண்டிட் நிமிர்ந்தார்.

‘உட்காருங்க.. ஒரு நிமிஷம்’ ஹார்மோனியத்தின் ஸ்வரக்கட்டைகளில் ஐந்து விரல்களையும் விரித்து, சப்தம் வராமல் தொட்டுத் தொட்டுக் குறிப்புகள் எழுதிக் கொண்டு இருந்தார். அவர் தலைக்குப் பின்னால் மஞ்சள் சட்டமிட்ட மும்மூர்த்திகளின் படம் தொங்கிக் கொண்டிருந்தது.

‘போன வகுப்புல நடத்துன பாடத்தைப் படிச்சுப் பார்த்தீங்களா..’

‘படிச்சேன். ரொம்ப நல்லா இருந்துச்சு.’

‘க’ங்கற ஸ்வரத்தோட பெயர் சொல்லுங்க’

‘காந்தாரம்’

‘நல்லது. ஸரளி வரிசைல பயிற்சி கொடுத்திருந்தேன். பாடம் பண்ணிட்டீங்களா’

‘இன்னும் பண்ணலை..’

‘ஏன்… பயிற்சி ரொம்ப முக்கியம் இல்லையா’

என்னிடம் ஹார்மோனியம் இல்லை என்பதை அவரிடம் சொன்னேன்.

‘அதனாலென்ன.. ஒண்ணு வாங்கிடுங்க. பெட்டி கையில இருந்தா சாதகம் பண்ண வசதியா இருக்கும். போகப் போக பாடங்கள் நிறையாப் போயிடும். கீ போர்டு கூட பெறகு வாங்கிக்கலாம். முதல்ல ஒரு பெட்டி பழசா இருந்தாக்கூட பாத்து வாங்கிடுங்க.’

வேலையில்லாமல் வகுப்புக்கு வருவதே சிரமமான நிலையில் பெட்டி வாங்க முடியுமென்று எனக்குத் தோணவில்லை.

’சங்கீதத்தை ‘ஹராம்’னு குரான்ல சொல்லியிருக்கும். அதனால எங்க வீட்ல என்னைய சங்கீதம் கத்துக்க விடல. அப்ப பத்தொன்பது வயசு எனக்கு. சீனிவாஸ சாஸ்திரின்னு ஒரு பண்டிதர். மீனாட்சி அம்மன் கோயில் பக்கத்துல இருந்தார். அவருக்கு சகல பணிவிடையும் செஞ்சு கத்துக்கிட்டேன். ஏன் சொல்றேன்னா.. மனசு இருந்தா மார்க்கம் உண்டு. ஞானத்தைக் கொடுத்தவன் அதுக்கான கருவியை ஒளிப்பானோ? எல்லாம் கெடைக்கும்’

அன்று மாயாமாளவ ராகத்தில் ஸரளிவரிசையின் மீதமுள்ள பாடத்தை அவர் சொல்லச் சொல்ல எழுதிக் கொண்டேன். அவரது ஹார்மோனியத்தை என் பக்கம் திருப்பி வாசிக்கச் சொன்னார்.

‘இது ஸட்ஜமம். ஸட்ஜமத்துக்கு கட்டைவிரல். இடது கையில் பெல்லோஸ் போட வேண்டும். இதிலிருந்து எழும்புகிற காற்று ஹார்மோனியத்தின் உள்ளறைகள்ல போய்த் தங்குது. நாம ஒரு கட்டைய அழுத்தும்போது, உள்ள அடைபட்ட காற்று துளையின் வழியே வெளியேறும். அப்படி வெளியேறும்போது அந்தத் துளையில் இருக்கிற ரீடு, நாக்கு மாதிரி இருக்கும். அது அதிரும். அதுதான் நாதம். எங்க… ஸட்ஜமம் வாசிங்க’

இடது கை பெல்லோஸ் அழுத்த, பதட்டத்துடன் கட்டைவிரலால் ஸட்ஜமம் தொட்டேன். புதரிலிருந்து சாம்பல் குருவிகள் விடுபட்டுப் பறப்பது மாதிரி ஒரு சிலிர்ப்பு. அடுத்து சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம் என ஒவ்வொரு விரலாக அழுந்த ஹார்மோனியம் விதவிதமான தொனியில் என்னுடன் பேச முயல்கிறது. அந்த சந்தோஷத்தை எப்படிச் சொல்ல?

‘சப்தங்கள் எல்லாம் ஸ்வரம். ஏற்கனவே சொல்லியிருக்கேன். உலகத்தின் சப்தங்கள் எல்லாம் ஏழு ஸ்வரத்தில் அடக்கம்.’ அருகிலிருந்த டீ கிளாஸை ‘ணங்’கென்று மேடையில் வைத்தார். ‘இது ஒரு ஸ்வரம்’ காற்றில் சன்னலின் திரைச் சீலைகள் சரசரத்தன. ‘இதுவும் இசை’.

பேருந்தில் ஊருக்குத் திரும்பும்போது மழை பெய்தது. மழை எத்தனை பெரிய இசைக்கருவி. எத்தனை தந்திகள் கொண்ட வயலின். சதா சுழன்று கொண்டே இருக்கும் பூமி எத்தனை பெரிய இசைத்தட்டு. குளத்து நீரில் நிலா வெளிச்சம் வீணைத் தந்தியாய் நலுங்குகிறது. அதனதன் இசை. எனக்கு பிரமிப்பாய் இருந்தது. கண்களை மூடிக்கொண்டால் பிரமிப்பாய் இருந்தது. கண்களை மூடிக்கொண்டால் காதுகளுக்கான உலகம். காற்றைக் கேள். இதுதான் சப்தங்களின் வாகனம். கேட்கத் துவங்கு.

திங்கள் – வியாழன், திங்கள் – வியாழன் என கிழமைகள் இசைபடக்கழிந்தன. இன்னும் ஹார்மோனியம் வாங்க முடியவில்லை. ஸரிகம ரிகஸரி என்று ஸ்வரங்கள் தாவித் தாவி நடனமிடும் தாட்டு வரிசை வந்துவிட்டது. என் கிழமையில் வகுப்புக்கு வரும் ஷங்கர கோடி, நேற்றுதான் பத்தாயிரம் ரூபாய்க்கு புது கீ-போர்டு வாங்கி வந்திருந்தார். அதில் கடல் அலைகளின் உறுமலையும், பின்னிரவில் எழும் சில்வண்டுகளின் ஓசையைக் கூட எழுப்ப முடிந்தது. ஆச்சர்யம் ஒரு புறம், இயலாமை ஒரு புறம். இசைக்கருவி இல்லாமல் வகுப்பை மேலும் தொடர்வது அயற்சியாக இருந்தது. மதுரை, கூலவாணிகன் தெருவில் கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தேன்.

‘என்ன சார்… எப்படியிருக்கீங்க?’

’நல்லாயிருக்கேன் ஷாஜகான்…’

‘என்ன இந்தப்பக்கம்… ஏறுங்க வண்டில..’

வாகன வேகத்தில் புறந்தலையின் வியர்வை உலர்வது இதமாக இருந்தது. டவுன்ஹால் ரோட்டின் பழமுதிர்ச்சோலையில் ஆளுக்கொரு ஆப்பிள்சாறு.

’இப்ப… எங்க வொர்க் பண்றீங்க?’

‘வேலையில்ல ஷாஜகான். சும்மாதான் இருக்கேன்.’

’ஜோல்னாப் பையும் அதுவுமா மதுரையில என்ன பண்றீங்க’

‘மியூசிக் கிளாஸ். கீ போர்டு கத்துட்டிருக்கேன்.’  வேலையில்லாமல் மியூசிக் கற்றுக் கொள்வதைச் சொல்ல சற்றே குற்ற உணர்வாக இருந்தது.

‘ஓ.. இன்ட்ரஸ்டிங்… பாட்டெல்லாம் வாசிப்பியா’

‘இல்ல. இப்பதான் ஒரு மாசமா…’

‘எனக்கும் மியூசிக்ல இன்ட்ரஸ்ட். உனக்குத் தான் தெரியுமே. நானும் ஒரு பத்துநாள் மியூசிக் கிளாஸ் போனேன். அதோட சரி… எல்லாத்திலேயும் பாதிக்கிணறுதான். சரி… இன்ஸ்ட்ருமெண்ட் என்ன வச்சிருக்க..’

’இனிமேதான் வாங்கணும். பழையதா ஆர்மோனியம் தேடிட்டிருக்கேன்’

ஷாஜகான் சிரித்தார்.

‘சரி… வாங்க வீடு வரைக்கும் வந்துட்டுப் போகலாம்’

‘இல்ல ஷாஜகான் இன்னொருமுறை..’

’ஏறுங்க.. புதுவீடு கட்டிட்டு நீங்க வரவேயில்ல’

harmoniym1jpgஎன்னை ஹாலில் அமர்த்திவிட்டு உள்ளே போனவர், வரும்போது சிறிய மரப்பெட்டி ஒன்றைத் தூக்கி வந்தார். ஹார்மோனியம் என்று பார்த்த உடனேயே தெரிந்துவிட்டது. என் எதிரில் வைத்து மேலிருந்த தூசியைத் துடைத்தார். மரப் பலகையில் கீல் வைத்த மூடி இருந்தது. ஹார்மோனியப் பெட்டியின் மூடியைத் திறந்ததும், காவியேறிய பல்வரிசையுடன் பாகவதர் ஒருவர் சோகமாகச் சிரிப்பது போலிருந்தது. ரொம்பவும் பழமையானது. வெள்ளைக் கட்டைகளில் மைக்கா ஒட்டப்பட்டிருந்தது. அதன் முனைகள் உடைந்து நிறம் பழுப்பேறியிருந்தது. ஹார்மோனியத்தின் இருபுறமும் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய வெண்கலக் கைப்பிடி இருந்தது. முன்பக்கம், காற்றறைகளைத் திறந்து ஒலியின் அளவைக் கட்டுப் படுத்தும் இழுவைத் திறப்புகள் நான்கு இருந்தன. அவற்றை இழுப்பதற்கு வசதியாக நுனியில் வெள்ளைப் பளிங்குக் குமிழ்கள் பெரிய பொத்தானைப் போல இருந்தன. பார்த்த உடனேயே அது சிங்கிள்ரீட் பெட்டி எனத் தெரிந்தது. கீழே ஏதும் பழுதடைந்திருக்கிறதா என்று குழந்தையைப் போல இருகைகளாலும் தூக்கிப் பார்த்தேன். நன்றாக இருந்தது. கீழே வைக்கும்போதுதான் பார்த்தேன். இரண்டு பளிங்குக் குமிழ்களுக்கு இடையில் ஏதோ பெயர் பொறிக்கப் பட்டிருப்பதைப் பார்த்து, தூசியைக் கைகளால் துடைத்தேன். ‘எட்டுக்கட்டை முருகசிகாமணிப் பாகவதர், கண்டரமாணிக்கம்’ என்றிருந்தது.

ஹார்மோனியத்தின் மத்திம ஸ்தாயியில் வெள்ளை கறுப்பு நோட்டுகளின் மேலே ஸ்வரங்கள் எது என்று அறிய, அடையாளத்திற்காக ஸ,ரி,க,ம,ப,த,நி, என்று சிறிய சதுரமான காகிதத்தில் எழுதி ஒட்டப் பட்டிருந்தது. நல்ல தேக்கு மரத்தால் ஆன ஜெர்மன் ரீட் பெட்டி. பெல்லோஸ் காற்றுக் கசியாமல் கச்சிதமாய் இருந்தது.

‘ரொம்பப் பழைய பெட்டி. எல்லா நோட்டும் பேசுமா.’

’புரியல.’

’எல்லா கட்டையும் வாசிச்சா சத்தம் வருமா.. பழுது இருக்கான்னு’

‘வாசிச்சுப் பாரேன். நான் தொட்டே ரெண்டு வருஷம் ஆச்சு. எப்பவாவது எடுத்து துடைச்சு வச்சிடுவேன். ஒரு மாசமா அதுவும் இல்ல. பக்கத்துல வீடு எதுவும் இல்லையா. வாசிச்சா பாம்பு வரும்னு அம்மா இதைத் தொடவே விடறதில்ல. அப்படி என் இசையைக் கேட்டு பாம்பாவது வரட்டுமேன்னு மொட்டைமாடிக்கு தூக்கிட்டுப் போயி வாசிப்பேன். அந்த முருகசிகாமணி பாகவதர் ஒரு பாட்டுத்தான் சொல்லிக் கொடுத்தாரு. அதுவும் இப்ப பாதி மறந்துபோச்சு’

ஷாஜகான் மனைவி கொடுத்த ஏலக்காய் தேநீரை அருந்தும்போது வலதுகையால் ஹார்மோனியத்தின் கட்டைகளை மெதுவாக வருடிப் பார்த்தேன். கட்டைகள் ஒன்றுக்கொன்று பிடிக்காமல் இலகுவாய்த்தான் இருந்தன.

‘சும்மா வாசிச்சுப் பாருப்பா. இங்கே குடு. நானே வாசிச்சுக் காட்டிர்ரேன்’ ஷாஜகான் அவர் பக்கம் திருப்பி, கீழ்ஸ்தாயியிலிருந்து ஒவ்வொரு கட்டையாக அழுத்திக் கொண்டே வந்தார். மணிமணியான ஸ்வரங்கள். கொஞ்சமும் பிசிறில்லாமல் காத்திரமாக இருந்தது.

‘சவுண்டு சும்மா ஏழு வீட்டுக்குக் கேக்கும். அந்த பாகவதர் தன்னோட சொத்துப் போல இதை வச்சிருந்தாரு. என் ஆர்வத்தைப் பாத்தாரு. அவருக்கு ஆஸ்த்மா. மாத்திரை வாங்கக்கூட காசில்ல. வறுமை. கடேசீல நீயே இதை வச்சுக்கன்னு கொடுத்திட்டாரு’

‘எவ்வளவுக்கு வாங்குனீங்க’

’அதெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனா குடுக்கும்போது ஒண்ணு மட்டும் சொன்னாரு. இது நான் பழகுன பெட்டி என் தெய்வம். ஆசைப்பட்டுக் கேக்குறியேன்னு குடுக்கிறேன். நூலாம்படை மட்டும் அடையவிட்றாத. இது சரஸ்வதி. வச்சிக்க. வாசிச்சுப் பெரிய ஆளா வா. அவரு சொன்னதையே நான் உனக்கும் சொல்ல விரும்புகிறேன். இந்தா, வச்சிக்க. வாசிச்சுப் பெரிய ஆளா வா’

அவர் சொன்ன விதம் நெகிழ்ச்சியாக இருந்தது.

‘எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா.. ஒரு வாரத்துல..’

‘சரி நூறு ரூவா குடு. இசைக்கருவியை சும்மா குடுக்கக் கூடாது’

’இல்ல எவ்வளவுன்னு சொல்லுங்க..’

‘நான் வாங்குனதே அவ்வளவுக்குத்தான். போதுமா’

மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டார். தனக்குத் தெரிந்த ஒரே பாடலான ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா’ என்கிற பாடலின் பல்லவியை மட்டும் விரல்களை விறைப்பாக வைத்துக்கொண்டு சரளமில்லாமல் வாசித்துக் காண்பித்தார். நியூஸ் பேப்பர் போட்டு நைலான் கயிறால் கட்டி, கைகளால் தொட்டு வணங்கி, கழுத்து நிற்காத பச்சைக் குழந்தையை கையில் தருவது மாதிரி பதமாகத் தந்தார். நன்றி சொல்லி விடை பெற்று வெளியே வருகையில் நிலா வெளிச்சம் தார்ச்சாலைகளை மெழுகியிருந்தது. கையில் ஹார்மோனியத்தின் பாரம். நைலான் கயிறு அழுத்த கைமாற்றிக் கொண்டேன். இசைக் கருவியின் மௌனம் கனக்கிறது. தன்னை வாசிக்க விரல்கள் இல்லாமல் இருட்டறையில் இத்தனை ராகங்களோடும் இத்தனை ஸ்வரங்களோடும் மௌனமாய் இருப்பது எவ்வளவு பெரிய தியானம். வாசிக்கப்படாதபோது இசைக்கருவிகள் என்ன உணர்கின்றன?

எனக்குப் பிடித்தமான சன்னலோரப் பயணம். தூங்குகிற குழந்தையைப் போல அமைதியாக மடியிலிருக்க எனக்குள் ஏதோ பொறுப்புணர்வு கவிவதாக உணர்கிறேன். பாட்டியின் மந்திரக் கதைகளில் வரும் சொர்க்கபுரத்து இளவரனைத் திருமணம் செய்ய, தேவதைகள் காற்றும் எனும் பரத கணத்தோடு சேர்ந்து சூறாவளியாய் மாறித் துரத்துவது போல, முகத்தில் விசிறும் காற்று ‘என்னை இசையாக மாற்று’ என்று என்னையும் எனது ஹார்மோனியத்தையும் பயண வேகத்தோடு துரத்திக் கொண்டே வருவதுபோல் இருந்தது.

வீட்டுக்குள் ஹார்மோனியத்தைத் தூக்கி வந்தபோது எல்லோரும் விநோதமாகப் பார்த்தனர். ஹாலின் மையத்தில் வைத்து சுற்றியிருந்த காகிதத்தைப் பிரித்தேன். ஹார்மோனியத்தின் வருகை யாருக்கும் சந்தோஷத்தையோ, துக்கத்தையோ தரவில்லை. தொட்டு வணங்கிவிட்டு ஸரளிவரிசை வாசிக்கலாம் என யோசித்தேன். சின்ன வீடு. இந்த இரவு நேரத்தில், வேலையில்லாத இளைஞன் நடுவீட்டில் அமர்ந்து ஹார்மோனியம் பழகுவது யாருக்குப் பிடிக்கும். தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்குப் போனேன்.

நாளை பௌர்ணமி. வெளிச்சம் இதமாக இருந்தது. அடுத்த இசை வகுப்புக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன. ஹார்மோனியத்தை நெருக்கமாக வைத்துக் கொண்டேன். கீழ்ஸ்தாயியின் ஸட்ஜமத்தைத் தொட்டேன். இருட்டறையில் நெடுநாள் பூட்டியிருந்த கதவு திறப்பது போலிருந்தது. நடுவிரலால் பஞ்சமம். சுண்டு விரலால் மத்திமஸ்தாயி ஸட்ஜமம். மூன்று ஸ்வரங்களும் சேர்ந்து.. பூவைச் சுற்றும் கதம்ப வண்டு மாதிரி காற்றின் அரூப அடுக்குகளில் இருந்த ஸ்வரங்கள் ஹார்மோனியத்தைச் சுற்றி மொய்க்கின்றன. குரல் சேர்த்துப் பாடி சுதி சேர்த்துப் பார்த்தேன். சுதியோடு ஒட்டாது கலைந்த குரல், பிசிறு தேய்ந்து தேய்ந்து சுதி சேரும் கணத்தில்… மின்சாரம்.. சட்டென வீசிய காற்றில் என் உடல் சாம்பல் குவியலெனக் கலைந்து, குரல் மட்டும் நானாக மிஞ்சுகிறது. பிறகு குரலும் என்னுடையதில்லாமல் போக வெறும் ஸ்வரங்கள் அந்தரத்தில் இசை கூட்டிக் கொண்டு அதிர்கின்றன. ஸா பா ஸா.

தயங்கித் தயங்கி ஸரளி வரிசை. சவுக்க காலம், விளம்பியதம், துரித காலங்கள். ஜண்டை வரிசை. ஸ்வரங்களின் அடுக்கு. ஒன்றின் நிழலாய் அதே ஸ்வரம். விரல்கள் தளர்ந்து ஓர் இலகு கூடி வருகிறது. பூர்வாங்கத்தில் முன்னேறிப் பதுங்கி, உத்தராங்கத்தில் தாவி ஒரு ஸ்வரம் தொட்டு ஆரோகணித்து காற்றில் துவளும் துணியென மெதுவாய் அவரோகணம். ஸட்ஜமத்தில் இளைப்பாறி மேல்ஸ்தாயி வரிசை. தாட்டு வரிசை. ஸ்வரங்கள் துரித கதியில் பின்னிப் பின்னி பூத்தொடுக்கும் விரல்களின் அனிச்சை கொண்டு, ஹார்மோனியத்தின் கட்டைகளும் விரல்களும் ரகசியம் பேசி, குழைந்து, விலகிச் சீண்டி, கமகமெனத் தடவி ஸ்வரங்கள் அலைந்து மெது மெதுவாய் எழும்பி நுரைத்துப் பின்வாங்கி அலைகொண்டு எழும்பி அடித்துச் சிதறியது. பாற்கடல். ஹார்மோனியம் மிதக்கிறது. கால்கள் கடற்கன்னியின் செதில்களெனக் குழைய நான் நீந்துகிறேன். மொட்டை மாடியில் தங்க நிற மீன்கள் என் முகம் உரசி இடம் வலமாய் நீந்துகின்றன. சமுத்திரம் கொள்ளாத இன்னொரு அலை. ஹார்மனி இசைப்பள்ளியின் சாத்திய ஊதா நிறக் கதவில் அலைமோதி தண்ணீர் பொரிகளாய்ச் சிதறி விழுகிறது. கதவைத் திறந்தால் பாலைவனம். கண்ணுக்கெட்டிய தொலைவுவரை மணல். புழுதிக் காற்று முகத்தில் அறைகிறது. எங்கோ தொலைவிலிருந்து அரபி மொழிப் பிரார்த்தனைப் பாடல் மிதக்கிறது. மணல்வெளியெங்கும் அலை அலையாகப் பாம்புகள் ஊர்ந்த தடமென காற்றின் சுவடுகள். காற்று கானலென நெளிகிறது. வெளியிலும், மணலிலும் காற்றின் லிபிகள். சற்றே தொலைவில் இரண்டு ஹார்மோனியங்கள் இருக்கின்றன –

துகள் துகளாக மணல் விசிறுகிறது. மணலுக்குள் கை புதைத்துக் கொண்டு ஹசன் பண்டிட் என்ன செய்கிறார். காற்று விசிற விசிற புதைந்த மணலிலிருந்து மீள்கிறது அவரது ஹார்மோனியம். அவரது விரல்கள் வாசித்துக் கொண்டே இருக்கின்றன.

‘பண்டிட் ஐயா… தீபக் என்ற தான்சேனின் ராகத்தை தாங்கள் வாசிக்க முடியுமா?’ ஹசன் பண்டிட்டின் விரல்கள் நின்று தயங்கின. பிறகு விரல்கள் காற்றில் தாமாக ஒத்திகையென அசைந்து பார்த்த கணத்தில் ஹசன் பண்டிட் வாசிக்கத் துவங்கினார். வாசிக்க வாசிக்க.. பஞ்சமத்தின் கட்டையிலிருந்து துளிர் நெருப்புப் பற்றுகிறது. எரியத் துவங்குகிறது ஹார்மோனியம். காற்று சிலிர்க்கிறது. பண்டிட்டின் விரல்கள் மெழுகுதிரி போல் பற்றிக் கொள்கின்றன. ஹார்மோனியம் முழுதும் எரிந்துவிடுமுன் அதன் ஸ்வரக் கட்டைகளைப் பிடுங்கி எடுக்கிறேன். புகை வளையங்கள் பெரிது பெரிதாய்ச் சூழ்ந்து மறைக்கின்றன. மணல் குன்றுகளில் கால் சறுக்க ஓடுகிறேன். கையில் இறுக்கிப் பிடித்திருந்த ஸ்வரக் கட்டைகள் உருவி விழ என்னிடம் ஒரே ஒரு வெள்ளைக் கட்டை மட்டும் இருக்கிறது. அதன் மேல் சிறிய சதுரமான காகிதத்தில் ‘க’ என்று எழுதி ஒட்டப்பட்டிருக்கிறது.

’ஒரு ஸ்வரத்தால் ராகம் இயற்ற முடியுமா பண்டிட்ஜி… அதுவும் என்னிடம் இருப்பது அந்தர காந்தாரம் மட்டும். முடியுமா பண்டிட்ஜி.’ பாலைவனம். முழுக்க நெளியும் பாம்புத் தடங்களுக்குள் என் பதட்டமான காற்சுவடுகளும் ஹார்மோனியத்தின் ஸ்வரக்கட்டைகளும் இறைந்து கிடக்கின்றன.

பச்சை ரெக்ஸின் போர்த்தி ஒரு உருவம் படுத்திருக்கிறது. எழுப்பினேன். ஜடைமுடி வளர்த்த பாகவதர்.

‘ஐயா.. என்னிடம் அந்தரகாந்தாரம் மட்டும் வாசிக்கக்கூடிய ஸ்வரக்கட்டை இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு ஒரு ஹார்மோனியம் தர முடியுமா?’

‘தருவேன்..’

பச்சை ரெக்ஸினை முழுவதுமாக விலக்கியதும், உள்ளங்கையில் வைக்கும் அளவுக்கு தந்தத்தால் ஆன வெண்மையான குட்டி ஹார்மோனியம் இருந்தது.

‘இது ஆலங்கட்டி மழையோடு சேர்ந்து வானத்திலிருந்து தவறி விழுந்தது. உனக்கு வேண்டுமா?’

‘வேண்டும். ஆனால் ரொம்பவும் சிறிதாக இருக்கிறதே’

‘நீ வாசிக்க வாசிக்கப் பெரிதாகும். தருகிறேன். ஆனால் அதற்குப் பதிலாக நீ ஒன்று தர வேண்டும்’

‘என்ன..?’

‘உன் கையில் உள்ள பத்துவிரல்களையும் தர வேண்டும்’ சொன்னவனின் கைகள் இரண்டு கட்டைகளின் முனையைப் போல விரல்களற்றுத் தீய்ந்திருந்தன. முன் புஜத்தில் முருகேசபாகவதர் என்று பச்சை குத்தியிருந்தது.

பண்டிட்ஜி என்று கத்திக் கொண்டே கானல் நீருக்குள் ஓடத் துவங்கினேன். கால்கள் பதியும் புதைமணல். எதிரே பச்சை நிறத்தில் அலைகள். சுழித்துக் கொண்டு ஆக்ரோஷத்துடன் பாலைவனத்தைக் கடல் கொள்ள வருகிறது அலை. மணற்பரப்பு குறைந்துகொண்டே வருகிறது. என் கையில் உள்ள ஸ்வரக்கட்டையை இறுகப் பற்றிக் கொண்டு அலறுகிறேன். அலை முகத்தில் அடித்துச் சிதற பிறகு எல்லாம் கடல். கடற்குதிரைகளுடன் நீந்துகிறேன். என்னிடமிருந்த ஸ்வரக்கட்டை மீனாக மாறிப் பிடியிலிருந்த நழுவுகிறது. சமுத்ரத்தின் நீலப் பச்சை வெளியிலிருந்து குமிழிகள் பறக்க ஒரு ஹார்மோனியம் மிதந்து வருகிறது. இடது கையால் ஹார்மோனியத்தைப் பற்றி அணைத்துக் கொண்டு வலது கையால் வாசித்துக் கொண்டே வெளிச்சம் புகாத கடலின் அடி ஆழத்தில் நீந்திச் செல்கிறேன். நீரில் ஆழ்ந்த மலைத்தொடர்ச்சிகளின் படர்ந்த உப்புப்பாறைகளின் மேலே வரிவரியாய் மேற்கத்திய இசைக்குறிப்புகள். சுரங்கத் தொழிலாளி போல நெற்றியில் விளக்கைக் கட்டிக் கொண்டு உப்புப் பாறைகளின் மேல் இசைக்குறிப்புகளை ஹசன் பண்டிட் வேகமாக எழுதிக் கொண்டிருக்கிறார்.

‘இன்று திங்கட்கிழமை பண்டிட்ஜி’

‘அதனாலென்ன… இது புதைந்த நகரங்களுக்கான இசை வகுப்பு’

நீந்துவதான பாவனையில் கால்கள் உதறி விழிக்கையில், கடல் வற்றிப் போய் தரைதட்டி எழுந்தது மாதிரியான உணர்வு. பனிவிழும் மொட்டைமாடியின் சிமிண்ட் தரையில் படுத்திருந்தேன். சமுத்ரமாய் அலைந்த நீர் எதிரே கண்ணாடி டம்ளரில் சலனமில்லாமல் இருந்தது.

கீழே வீட்டில், எல்லோரும் தூங்கியிருந்தார்கள். அயற்சியாக இருந்தது. எனக்கென அடுப்படியில் மூடி வைக்கப்பட்டிருந்தது இரவுக்கான உணவு.

காலையில் திரும்பவும் தாட்டு வரிசை வாசித்துப் பார்க்க வேண்டும். ஹார்மோனியத்தின் வெள்ளைக் கட்டைகளில் நாள்பட்ட தூசு படிந்து அழுக்கேறிப் போயிருக்கிறது. திருகாணிகள் எல்லாம் துருவேறியிருக்கின்ற பெல்லோஸ் கொஞ்சம் துடைத்துச் சரி செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தூங்கிப் போனேன்.

காலையில் ஹார்மோனியத்தைத் தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்குப் போனேன். முத்துவிநாயகம் வந்திருந்தான்.

’என்னப்பா பாகவதர் ஆகப் போறியா? இதெல்லாம் வீட்ல இருந்தாலே தரித்திரம்’

அவனை நான் பொருட்படுத்தாது என் அன்பிற்குரிய ஹார்மோனியத்தைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கினேன். ஒரு திருப்புளி, பழைய துணி, சின்னக்குவளையில் தண்ணீர் எடுத்துக் கொண்டேன். தூசியைத் துடைத்ததும் துணியைத் தண்ணீரில் நனைத்து வெள்ளைக் கட்டைகளைத் துடைத்தேன். விரல் படாமல் குருட்டு அழுக்கு ஏறிப்போய் இருந்தது. திட்டுத் திட்டாய் கறை படிந்தது போல அழுக்கு. என்ன துடைத்தாலும் அப்படியே இருந்தது. துருப்பிடித்து இறுகிப் போன திருகாணிகளைக் கஷ்டப்பட்டுக் கழற்றினேன். ஸ்வரக் கட்டைகளின் மேலே அழுத்திக் கொண்டிருந்த மரச்சட்டதைக் கழற்றினேன். இப்போது ஸ்வரக் கட்டைகளை கழற்றுவது எளிதாக இருந்தது. அவற்றின் கீழே சிலந்தி இழைகளும், தூசியும், எள்ளுப் போன்ற எச்சங்களும் இருந்தன. வாயால் ஊதிப் பார்த்துத் துடைத்தும் தூசி போகவில்லை. ஹார்மோனியத்தில் இருந்த கறுப்பு வெள்ளைக் கட்டைகள் அனைத்தையும் வரிசைப்படி தரையில் அடுக்கி வைத்தேன். தரையில் அந்த வரிசை அழகாக இருந்தது. உள்ளிருந்த பித்தளை ரீடுகளில் Made in German என்று பொடியான எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. சின்னதிலிருந்து துவங்கி பெரிது பெரிதாக ரீடுகள் அழகாக அறையப்பட்டிருந்தன. அஞ்சறைப் பெட்டியைப் போலிருந்த ஹார்மோனியத்திலிருந்து ஒலி அளவைக் கட்டுப்படுத்தும் குமிழ்களை இழுத்து மெதுவாகக் கழற்றினேன். கம்பி மிகவும் துருவேறிப் போய் இருந்ததால் இழுப்பது சிரமமாக இருந்தது. ஹார்மோனியத்தின் உள் அறையில் இரண்டு அந்துப் பூச்சிகள் வெளிறிப் போய் உயிரோடிருந்தன. முருகேச பாகவதரின் காத்திரமான இசைகேட்டு இவை வளர்ந்திருக்கலாம் அல்லது அவரது இசையின் அதிர்வில் உயிர்பிடித்து மிஞ்சிய ராகங்களாக இருக்கலாம். எதுவாயினும் ஹார்மோனியத்தின் உள்தட்டு அறையின் இருட்டுக்குள் இசையுடன் காதல் கொண்டு வாழ்வது எவ்வளவு அற்புதமானது. லேசாகப் பக்கவாட்டில் தட்டியதும்… மறைந்த இசை குறித்து நீண்ட கனவில் இருந்த இரண்டு அந்துப் பூச்சிகளும் வெளிச்சம் பொறுக்காது வெளியேறி ஓடின.

காற்றுத் துருத்திகளின் உள்ளேயிருந்த தூசியினைத் துடைத்தேன். ஹார்மோனியம் இப்போது ஸ்வரக் கட்டைகள், குமிழ்கள், திருகாணிகள், மரச்சட்டங்கள் எனப் பிரிக்கப்பட்டு இருந்தது. ஹார்மோனியத்தின் வெளிப்புறமும், உட்புறமும் மரப்பலகையின் தன்மையை இழந்து நிறம் வெளிறிப் போயிருந்தது. ஸ்வரக் கட்டைகள் திரும்பவும் வெற்றிலைக் காவியேறின பல்வரிசையை நினைவுபடுத்தின. அந்த நிறமே வெறுக்கத் தக்கதாக இருந்தது.

அப்போதுதான் திடீரென எனக்கு அந்த யோசனை வந்தது. புதிதாக மாற்ற பெயிண்ட் அடித்தால் என்ன?

ஐம்பது மி.லி. ஆசியன் வெள்ளை, கறுப்பு வண்ணமும் வார்னிஷும், கடைக்காரரின் ஆலோசனைப்படி மென்மையான உப்புத்தாளும் சின்னதாக தூரிகையும் வாங்கிக் கொண்டேன்.

ஸவரக் கட்டைகளை மெதுவாக உப்புத் தாளால் தேய்த்து வரிசைப்படி அடுக்கி கிரமம் மாறாமல் இருக்க அவற்றின் பின்புறம் பென்சிலால் எண்கள் குறித்துக்கொண்டு, அக்கா எனக்கு நெயில் பாலிஷ் போட்டுவிடுவது மாதிரி இதமாக கறுப்பு வெள்ளைக் கட்டைகளுக்கு வண்ணம் பூசினேன். ஹார்மோனியப் பெட்டிக்கு வார்னிஷ் அடித்து நிழலில் காய வைத்தேன். திருகாணிகள் புதிதாக வாங்கி விட்டேன். எல்லாம் முடிக்க பதினோரு மணியாகி விட்டது. இன்று திங்கட்கிழமை. மாலை இசை வகுப்பு. இன்று இசைவகுப்புக்கு எடுத்துப் போய் ஹசன் பண்டிட்டிடம் என் புது ஹார்மோனியத்தில் ஸரளி வரிசை வாசித்துக் காட்ட வேண்டும்.

மதியம் மூன்று மணியளவில் ஸ்வரக் கட்டைகள் உலர்ந்திருந்தன. ஹார்மோனியம், வார்னிஷ் அடித்ததும் தனது மர வண்ணத்துக்குத் திரும்பி அழகாய் இருந்தது. இழுப்புக் குமிழிகளைப் பொருத்தி, ஸ்வரக் கட்டைகளை வரிசைப்படி அடுக்கினேன். அடுக்க, அடுக்க மெருகு கூடிக் கொண்டே வந்தது. ஹார்மோனியம் புத்தம் புதிதாகி விட்டது. என்ன அழகாய் இருக்கிறது. ஒருமுறை கீழிருந்து உச்சஸ்ஹாயி வரை ஆரோஹணம், அவரோஹணம் போய்த் திரும்பலாம் போல இருந்தது. கட்டைகளைத் தொடுவதே, மெதுரொட்டியைத் தொடுவது போல் இதமாக இருந்தது. மணி ஐந்தாகிவிட்டது. எப்போதும் மூன்றரை மணிக்கே மதுரைக்குக் கிளம்பி விடுவேன். அவசர அவசரமாக திருகாணிகளைப் பொருத்தினேன். வாசிக்கவும் இப்போது நேரமில்லை. முதன் முதலில்… ஹசன் பண்டிட்டின் ஆசீர்வாதம் பெற்று அவர் முன்னிலையில் வாசித்துக் காட்டுவதுதான் சாங்கியமானது என்று மனதுக்குள் பட்டது. அவரும் சந்தோஷப்படுவார்.

ஆங்கிலத் தினசரியில், ஹார்மோனியத்தைச் சுற்றி நைலான் கயிறால் கட்டி எடுத்துக் கொண்டு மதுரைப் பேருந்தில் ஏறினேன்.

ஹசன் பண்டிட்டின் அறைக்கு வரும்போது மணி ஏழாகி விட்டது. அவர் இசை பற்றிய ஆங்கிலப் புத்தகத்தின் நகல் பிரதியை ஆழ்ந்து வாசித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி, புத்தகத்தை மூடிவிட்டுப் புன்னகைத்தார்.

அறையில் மென் ரொட்டிகளின் வாசனையும் ஊதுபத்தியின் சந்தன வாசனையுமாக ரம்மியமாக இருந்தது.

என் தாமதம் குறித்து அவர் கேட்கத் துவங்குமுன், நண்பர் ஒருவரிடமிருந்து ஹார்மோனியம் வாங்கி விட்டேன் என்று சந்தோஷம் பொங்கச் சொன்னேன். நைலான் கயிற்றின் முடிச்சுகளை அவிழ்க்க ஹசன் பண்டிட் உதவினார். நான் மூடியிருந்த தாள்களைப் பிரித்தேன்.

‘ஜெர்மன் ரீடு பெட்டி. ரொம்பப் பழசா இருந்துச்சு.. அதான்’

ஹசன் பண்டிட் புரிந்து கொண்டு சிரித்தார். நான் அவரது ஆசீர்வாதம் கோரினேன். ஸ்வரங்களைக் குறிக்கும் கறுப்பு விரல்களால் ஹசன் பண்டிட் என் தலையைத் தொட்டார்.

’சார்… உங்களுக்குப் போன்’ கீழே மேன்ஷன் மேலாளரிடமிருந்து அழைப்பு வர ‘வாசிங்க வந்துர்ரேன்’ என்று சொல்லிவிட்டு ஹசன் பண்டிட் படிக்கட்டுகள் நோக்கி நடந்தார்.

எதிரே இருக்கும் மும்மூர்த்திகளின் படத்தைப் பார்த்தேன். இசை தவழும் அறையின் தியானத் தன்மையை மனதில் நினைந்து கண்கள் மூடி வணங்கினேன். ஹார்மோனியத்தைத் தொட்டு வணங்கிவிட்டு இடது கையால் பெல்லோஸ் அழுத்தி வலது கை கட்டை விரலால் மத்திமஸ்தாயியின் ஸட்ஜமம் தொட்டேன். சப்தமே இல்லை. பெல்லோஸ் கொஞ்சம் அழுத்திப் போட்டு ஸட்ஜமத்தோடு நடுவிரலால் பஞ்சமத்தையும் சுண்டு விரலால் மேல் ஸட்ஜமத்தையும் சேர்த்து அழுத்தினேன். ஸ்வரங்கள் ஊமையாய் இருந்தன. ஒலிக்கவே இல்லை. பதட்டத்தோடு பெல்லோஸை வேகவேகமாக அழுத்தி சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்யமம் வாசிக்க… மாயமாளவ கௌளைக்குப் பதில் புஸ்புஸ் என்று காற்றுதான் வந்தது. பெல்லோஸை இன்னும் லாவகமாக அழுத்தி கீழ்ஸ்தாயி, உச்சஸ்தாயி என்று மேலும் கீழும் உள்ள கறுப்பு வெள்ளைக் கட்டைகளை அழுத்தினேன். ஸ்வரங்கள் பேசவே இல்லை. கொஞ்சங்கூட ஒலி எழவில்லை. என் ஹார்மோனியமே எங்கே உன் மணிமணியான காத்திரமான ஸ்வரங்கள். ஆஸ்துமாவில், மரணப்படுக்கையில் கிடக்கும் முருகசிகாமணிப் பாகவதரின் கடைசி மூச்சு போல ஹார்மோனியத்திலிருந்து காற்றுதான் வந்து கொண்டிருந்தது. எனக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. ஊதுபத்தியின் புகை வளையம் சுழித்துப் பெரிதாகி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.

– செப்டம்பர் 2002, கணையாழி

***

நன்றி : செழியன் , ஹனீபாக்கா , சென்ஷி

***

தொடர்புடைய சுட்டிகள் :

மனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் , தமிழ்த் திரை உலகில்  – வெங்கட் சாமிநாதன்

செழியனின் விகடன் சிறுகதை – சுரேஷ் கண்ணன்

மிஸ்டர் மார்க் – செழியன் சிறுகதை

நட்சத்திர சிறுகதை – திலீப் குமாரின் ‘தீர்வு’

குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். நண்பர் திலீப் குமாரின் ‘கேணி’ கூட்டத்தில் கலந்து கொண்ட தம்பி கிருஷ்ணபிரபு அருமையான ஒரு பதிவு எழுதியிருந்தார். தன்னுடைய ’தீர்வு’ சிறுகதை உருவான விதத்தை திலீப் அதில் சொல்லியிருந்தார் இப்படி : ‘ஒய்வு நேரத்தில் சும்மா இல்லாமல் “தீர்வு” என்ற கதையை எழுதிக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த அண்ணன் கோவத்துடன் கதையைப் பிடுங்கி எங்கள் வீட்டின் பக்கத்திலுள்ள குழியில் போட்டுவிட்டார். அந்தக் குழி எங்கள் பகுதியிலுள்ள பெண்கள் மலம் கழிக்கும் இடம். இது நடந்தது மாலை 6 மணிக்கு என்பதால் அங்கு சென்று எடுத்துவரவும் முடியவில்லை. ஆகவே அதன் மீது யாரும் மலம் கழித்து விடக்கூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். பாருங்கள் கடவுளை எதற்கெல்லாம் கூப்பிடவேண்டியிருக்கிறது. நல்ல வேலை யாரும் அசம்பாவிதம் செய்யவில்லை. விடிந்தவுடன் அந்தத் தாள்களை எடுத்து கதையை வேறு பிரதியெடுத்து கணையாழிக்கு அனுப்பிவைத்தேன். கணையாழியில் அது பிரசுரம் காண ஒரு வருட காலத்திற்கும் மேலானது. ஒரு முறை நான் சென்னையிலிருந்த போது கணையாழி கஸ்தூரிரங்கனை சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது “தீர்வு” கதையை ஞாபகப் படுத்தினேன். அது நல்ல கதையாச்சே அப்பவே போட சொல்லிட்டேனே! என்று அருகிலிருந்தவரிடம் கூறினார். அவர் தேடித் பார்த்து விட்டு கடைசி நாலு பக்கங்கள் தொலைந்துவிட்டது என்றார். அதன் பிறகு உட்கார்ந்து மீண்டும் எழுதிக் கொடுத்தேன். இன்று வரை அந்தக் கதை என்னை அடையாளப்படுத்துகிறது.’

எனக்கு மிகவும் பிடித்த ’தீர்வு’ சிறுகதை இருக்கும் ‘இலக்கியச் சிந்தனை’ புத்தகம் வீட்டில் இருக்கிறது. அஸ்மாவிடமோ பிள்ளைகளிடமோ கேட்க இயலாது. இலக்கியம்தான் காரணம். தன்னிடம் இருந்த வேறொரு தொகுப்பிலிருந்து தட்டச்சு செய்து அனுப்புவதாக தாஜ் சந்தோஷமாக ஒத்துக்கொண்டார் – ஃபேஸ்புக்கில் தத்துவங்கள் உதிர்ப்பது, வஹாபிகளுடன் மல்லுகட்டுவது போன்ற முக்கியமான வேலைகளுக்கு இடையிலும். இதற்கும் இலக்கியம்தான் காரணம். நல்லது, இணையவெளியில் இதுவரை தென்படாத ‘தீர்வு’ உங்களுக்காக வருகிறது. நன்றி கூற மறவாதீர்! –  ஆபிதீன்

***

“திலீப் குமாரின் கதைகள் வெளிப்படையானப் பரீட்சார்த்தப் படைப்பு. சோதனைக் கதை என்ற பிரிவில் வர சாத்தியமில்லை. ஆனால், ஒவ்வொன்றும் சம்பிரதாய உருவத்திலேயே, இவ்வளவு சிறப்பு அடையக்கிடக்கிறதா என்ற வியப்பை உண்டு பண்ணக்கூடியவை. வறுமையைப் பற்றிய எழுத்தானாலும் அவரது உற்சாகம் தவிர்த்தது அல்ல. திலீப் குமாரின் நகைச்சுவை அவருக்கே உரிய தனி ரகம்; வறுமை, சிறுமை, கோபம், பசி, குழப்பம் இவை எல்லாவற்றுக்கும் மத்தியில்  மனிதனின் மேன்மையான தன்மைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையது. ஒரு தனிக் காரணத்தினால் என்றில்லாமல் பல பண்புகளின் தனித்துவமான ஒரு சேர்கையால் திலீப் குமாருடைய படைப்புகள் இன்றைய சிறுகதை உலகில் விசேஷ நிலை வகிக்கின்றன.”

அசோகமித்திரன் (‘தீர்வு’ உள்ளடக்கிய திலீப் குமாரின், ‘மூங்கில் குருத்து’ சிறுகதை தொகுப்பிற்கு எழுதியிருக்கும் முன்னுரையில் இருந்து..)

*
தன் எழுத்தில் அபாரமான தன்னம்பிக்கை கொண்ட ஒருவரால் தான் இப்படியான படைப்பைப் படைக்க முடியும். ‘காலத்தைக் கடந்தேனும் இந்த எழுத்து நிச்சயம் பேசப்படும்’ என்ற தீர்மானம் மனதில் பாய்ந்திருக்க வேண்டும் அவருக்கு.  1985-க்கு முன் எழுதப்பட்ட இந்தக் கதை, இன்றைக்கு, சுமார் 28- வருடம் கழித்து பேசப்படுகிறது என்றால், அது அவர் அன்றைக்கு கொண்ட தன்னம்பிக்கை தான். திலீப் குமாரை கொஞ்சம் அறிவேன். பேசி பழகியிருக்கிறேன். தமிழ் நவீனத்தில் மையல் கொண்ட வித்தியாசமும், எளிமை சாயலும்கொண்ட குஜராத்தி! இந்தக் கதையும் அவரை மாதிரியே எளிமையிலும் எளிமையாக இருக்கிறது. அடக்க முடியாத நகைச்சுவையைக் கூட, அவர்பாட்டுக்கு அவரது எளிமை மொழியில் சொல்லிக்கொண்டே போகிறார்.

தாஜ்

*

dileep-kumar

தீர்வு

திலீப் குமார்

இந்தக் கதையைச் சொல்வதற்காக, கோவையிலிருந்து சென்னைக்குத் தாமதமாக வந்து தொலைந்த நீலகிரி எக்ஸ்பிரஸில் வந்து, எனது ஒற்றைப் பெட்டியுடன் போர்ட்டர்களின் வயிற்றெரிச்சல்களையும் சுமந்து, ஆர்வமாய் அருகில் வந்த ரிக்ஷாக்காரன்களை ஏமாற்றி, அவசரமாய் வால்டாக்ஸ் ரோட்டைக் கடந்து ஒரு சின்னச் சந்தில் நுழைந்து, தங்கசாலைத் தெருவை அடைந்து நடக்கிற என்னுடன் இந்த ஏப்ரல் மாதக் காலையில், மண்டையைப் பிளக்கிற வெயிலில் உங்களையும் அழைத்து வந்ததற்கு, மன்னிக்கவும்.

வால்டாக்ஸ் ரோட்டுக்கும் ரத்தன் பஜாருக்கும் இடையே சிக்கித் தவிக்கிற ஏழெட்டுச் சந்துகளில் இந்தத் தங்கச்சாலைத் தெரு மட்டும்தான் கொஞ்சம் அகலமாகவும், நடக்கச் சௌகரியமாகவும் இருப்பது. இது வடஇந்தியர்கள், குறிப்பாகக் குஜராத்திகள் அதிகமாக வாழ்கிற பகுதி. அதனால் இங்கே ஆடம்பரமும், அசிங்கமும் அளவுக்கு அதிகமாகவே தென்படும். ஆடம்பரம் என்று நான் குறிப்பிடுவது இவர்கள் அணிந்திருக்கும் உடைகளை. மற்றபடி அசிங்கம் என்றது, அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து தெருவுக்கு இடம் மாற்றிய கசடுகளை. வீடுகளைச் சுத்தமாகவும் வாசல்களை அசுத்தமாகவும் வைத்துக்கொள்வதில் இந்தக் குஜராத்திகள் மிகவும் சிரத்தை உடையவர்கள். மேலும், அழுக்கான சூழ்நிலைகளுக்குத் தங்கள் மனத்தையும், மூக்குகளையும் பழக்கப்படுத்திக் கொள்வதில் இணையற்றவர்கள்.

மணி 8-45. கடைகளும் ஆபிஸ்களும் திறக்கப்பட்டுக் கொண்டிருந்தன. பள்ளிக்கூடக் குழந்தைகள் விரைந்து கொண்டிருந்தனர். ஜனங்கள் ‘பளிச்’சென்று சுத்தமாகக் காட்சி அளித்தனர். காந்திக்குல்லாய் சேட்ஜிக்களும், நாகரீகமாக உடுத்திக்கொண்ட அவர்களது மக்குப் பிள்ளைகளும் நிறையவே குழுமத் தொடங்கிவிட்டனர். பரவலாக, வெளிநாட்டுக் கார்களும் ஸ்கூட்டர்களும், மோட்டார் சைக்கிள்களும் அணிவகுத்து நின்றன.

நிச்சயமாக இந்தக் குஜராத்திகள் சம்பாதிக்கத் தெரிந்தவர்கள்!

புகழ்பெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோவில், இந்தத் தங்க சாலைத் தெருவில்தான் இருக்கிறது. தெப்பக்குளம் உள்ள பெரிய கோவில் இது. இந்தக் கோவிலின் பிரதானப் பிரகாரம் அளவில் மிகப் பிரமாண்டமானது. சிலைகளுடன், பெரிய பெரிய ஸ்தூபிகளுடனும், அவைகளில் அழகான சிற்பக் கலைகளுடனும் மிகக் கம்பீரமாய்க் காட்சியளிக்கும். நகரத்தில் உள்ள மற்ற எல்லாப் புகழ்பெற்ற கோவில்களைப்போல் இதுவும் வழக்கமாகப் போகிறவர்களுக்கு சுவாரஸ்யமற்றதாகவும், போகாதவர்களுக்குப் பேரழகாயும் காட்சியளிக்கும். கோவில் வாசலில், இடப்பக்கம் பலகாரம் விற்கிற ஒரு சேட்ஜிக்கும் வடப்பக்கம் தேங்காய் விற்கிற செட்டியாருக்கும், பூ விற்கிற பட்டிணத்துக் கவுண்டச்சிக்கும், வளையல் விற்கிற ஒரு சேட்டுக்கும், விற்றாலும் தீராத கொள்முதலாகிய வியாதிகளைக் கடை விரித்த சில பிச்சைக்காரர்களுக்கும் புகலிடம் கொடுத்திருந்த ஏகாம்பரேஸ்வரர் அமைதியாய் உள்ளே உட்கார்ந்தார். இந்தக் கோவிலைச் சுற்றிப் ‘ப’ வடிவில் நெளிகிற மூன்று சின்னச்சந்துகளின் ஒட்டுமொத்தமான பெயர்: ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரம். என் மாமா வீடும், நான் சொல்லப்போகிற கதையின் களமும் இங்குதான்.

நான் இடது பக்கம் திரும்பி அந்தப் ‘ப’வில் நுழைந்தேன். இந்தச் சின்னச் சந்தின் மூலையில் இரண்டு பெரிய கட்டிடங்களுக்கிடையே திணறி, ஒளிந்துகொண்டிருக்கும் என் மாமா வீடு. ஒரு பக்கம் கோவில் சுவர். மறுபக்கம் வீடுகள்.

ஒன்றிரண்டதைத் தவிர எல்லாம் திண்ணைகளற்ற பெரிய வீடுகள். இங்கு ஒரு உயர்நிலைப்பள்ளியும் ஒரு ஆரம்பப்பள்ளியும் உண்டு. அதனால் தெருவில் இப்போது நிறையச் சிறுவர்கள் நிறைந்து வழிந்து கொண்டிருந்தனர். இன்றியமையாத ஐஸ்காரனுடன்.

நான் மனத்தில் எதையும் வாங்கிக்கொள்ளாமல், வேகமாக நடந்தேன். மாமா வீட்டுவாசல் தெரிந்தது. ஏனோ அவர் முகம் நினைவுக்கு வந்தது. தொடர்ந்து அவர் குடும்பத்தினர் முகங்கள் அனைத்தும் மனத்தில் தோன்றி மறைந்தன. வாசலில் சில குஜராத்தி இளம்பெண்கள் குழாயுடன் மல்லாடிக்கொண்டிருந்தார்கள். எனது வரவை அவர்கள் கடுமையான மௌனத்தை அனுஷ்டித்துக் கொண்டாடினார்கள். நான் அவர்கள் அனைவரையுமே பார்த்தேன். எல்லா முகங்களும் சுமாராகவே இருந்தன. இத்தனைக்கும், அந்தக் கட்டிடத்தில் மட்டுமே முப்பது குடும்பங்கள் இருந்தன. இருந்தும் மருந்துக்குக்கூட ஒரு அழகி இல்லை. மேல்மாடியில் வசிக்கிற ஊர்மிளாவைத்… நிற்க. முதலில் இந்தக் கட்டிடத்தின் பூகோள ரீதியான அமைப்பை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

கட்டிடத்தின் நடுவில் ஒரு பெரிய 18 X 18 முற்றம். இந்தக் கட்டிடத்தின் இரண்டாவது மாடிக்குமேல் இருக்கிற வானத்தைச் சதுரமாக வெட்டிக் காட்டும் இது. மாடிகளில் வசிக்கிறவர்கள் கல்கத்தா பீடாக்களைக் குதப்பி உமிழ்வதற்காகவும் மற்றபடி வருணனுக்காகவும், சூர்யனுக்காகவும் கட்டப்பட்டது! இந்த முற்றத்தைச் சுற்றி எதிரும் எதிருமாக, எதிரும் புதிருமாக, புதிரும் புதிருமாக ஆறு வீடுகள். முற்றத்தின் நடுவே நடந்தால் இரண்டு பக்கங்களிலும் இரண்டு சிறு முற்றங்கள். இடதுபக்க முற்றத்தின் கடைசியில் இரண்டு கழிவறைகள்; வலதுபக்க முற்றத்தின் மையத்தில் ஒரு கிணறு. அதை அடுத்து, இன்னும் இரண்டு வீடுகள். இன்னும் சற்று நகர்ந்தால், மேலே செல்லும் அழுக்கான மாடிப்படிகள். இதே மாதிரி மேல்மாடியிலும். மொத்தம் முப்பது குஜராத்தி குடும்பங்கள் வாழ்கின்ற அழுக்கான கட்டிடம் இது.

அந்த முற்றத்தையும், அந்த ஆறு வீடுகளையும் பிரித்து, 21 அடி அகலமுள்ள ஒரு நடைவெளி சுற்றி ஓடும். அநேகமாக இந்த நேரத்தில் அந்த ஆறு வீட்டுக் கதவருகேயும் பெண்கள் உட்கார்ந்துகொண்டு மும்முரமாக ஏதோ ஒரு வேலையைச் செய்துகொண்டிருப்பார்கள். ஒரு பெண் எச்சில் பாத்திரங்களைத் தேய்த்துக்கொண்டிருப்பாள். இன்னொருத்தி துணிகளைத் துவைத்துகொண்டிருப்பாள். மற்றவர்கள் அரிசியையோ, கோதுமையையோ சுத்தம் செய்து கொண்டிருப்பார்கள். வழக்கமாக, திருமணத்திற்குப் பின் ஊதிப்போகிற உடல்வாகு உடையவர்களாக இருந்தாலும், இந்தப் பெண்கள் நல்ல உழைப்பாளிகள். இவர்கள் அறிவற்றவர்களும் அடங்காப்பிடாரிகளும்கூட. எல்லாப் பெண்களையும்போல் இவர்களும் சண்டையிலும், ஊர் வம்பிலும் மிக நாட்டம் உடையவர்கள். மட்டமான இந்திப் படங்களிலும், இனிமையான இந்திப் பாடல்களிலும், உணவு வகைகளிலும், அழகிய உடைகளிலும் தங்கள் உலகை அடக்கிக்கொண்டவர்கள். இதைத் தவிர, பிரக்ஞையே இல்லாமல் இனத்தைப் பெருக்குகிற பழக்கமும் உண்டு. இந்தக் கட்டிடத்தில் உள்ள முப்பது குடும்பத் தலைவிகளுக்குத் தலா ஒவ்வொருத்திக்கும் குறைந்தபட்சம் ஐந்து வாரிசுகளாவது இருக்கும். (என் மாமாவுக்குக்கூட 5தான்.) முழுக்க முழுக்க நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் வாழ்கிற இங்கே இந்த ஜனத்தொகைப் பெருக்கம் இயல்பான ஒன்று. தவிர்க்க முடியாததும்கூட.

இங்கு வாழ்கிற ஆண்கள், மிக சாதுவானவர்கள். மனைவிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். இந்தச் சராசரி வாழ்க்கையில் நசிந்துகொண்டிருக்கும் தங்கள் நிலையை நாளெல்லாம் நொந்துகொள்கிறவர்கள். தங்கள் மனைவிகளுக்கு ஏதோ பெரிய துரோகத்தைக் கற்பித்துவிட்டதாகக் கற்பனை செய்துகொண்டு, குற்ற உணர்வுடன் உலவி வருகிறவர்கள். மாதத்தில் 29 நாட்களும் சம்பளத்தை எதிர்பார்ப்பவர்கள். சனிக்கிழமை தோறும் சினிமாவுக்குப் போக இயலாததால் மட்டுமே பஜனை பாடப்போகிறவர்கள். எப்போதாவது செய்தித்தாளை இரவல் வாங்கிப் படிப்பவர்கள். மற்றபடி, வாழ்க்கையை ரொம்பவும் சுமப்பவர்கள். இவர்கள் ஆண்கள் என்பதற்கு இவர்கள் பெற்ற குழந்தைகளைத் தவிர, நமது கண்களுக்குத் தெரிகிற, மனதுக்குப் புரிகிற வேறெந்த ஆதாரமும் கிடைப்பது சந்தேகமே!

பொதுவாக, இந்த குஜராத்திகள் தமிழர்களைப்பற்றி மிகவும் மோசமான அபிப்பிராயங்கள் உடையவர்கள்.

உள்ளே நுழைந்ததும் என்ன ஆச்சரியம்! முற்றம் வெறிச்சோடி அழுக்காய்க்கிடந்தது. நடைவெளியும் சுத்தமாக இருந்தது. ஓரங்களில் பிளாஸ்டிக் கம்பிகளில் நேற்று உலரப்போட்ட துணிகள் தொங்கிக்கொண்டிருந்தன. ரொம்பவும் அமைதியாய் இருந்தது. நான் முற்றத்தைத் தாண்டி மாடிப்பக்கம் பார்த்தேன். கிணற்றைச் சுற்றி ஒரே கும்பல். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நின்றுகொண்டிருந்தனர். என் மாமா அந்தக் கும்பலின் நடுவில் நின்றபடி கிணற்றுக்குள் மிக சிரத்தையாக எதையோ தேடிக்கொண்டிருந்தார். நான் அவர்களை நெருங்கியதும் ஒரு கணம் எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். மாமாவும் என்னைப் பார்த்து முதலில் ஒரு கணம் வியப்படைந்து பின் லேசாக முறுவலித்தார்.

“நீ மேலே போயிரு, நான் இதோ வந்துவிட்டேன்” என்று குஜராத்தியில் கூறினார்.

ஆவலை அடக்கியபடி மேலே போக மாடிப்படிகளை அடைந்தேன். எதிரில்ன் இறங்கி வந்த கோபால் பாயிடம் என்ன விஷயம் என்று கேட்டேன்.

“என்னத்தைச் சொல்ல திலீப் பாய்! தண்ணீரின் கதைதான் பெரிய கதையாகிவிட்டிருக்கிறது. வீட்டில் குடிப்பதற்கு ஒரு துளி தண்ணீர் இல்லை. இந்த லட்சணத்தில் கிணற்றில் எலி விழுந்து இறந்துவிட்டது. பாபு பாய் பாவம்! எட்டு மணியிலிருந்து அதை வெளியே எடுக்க முயல்கிறார். முடியவில்லை.” என்று குஜராத்தியில் சொல்லி வருத்தப்பட்டார், வழக்கமான முகஸ்துதிகளுக்குப் பின் நகர்ந்துபோய் கும்பலுடன் ஐக்கியமானார் அவர்.

நான் மேல்மாடியை அடைத்து வீட்டுக்குள் நுழைவதற்கும், சந்திரா, என் மாமாவின் மூத்த மகள், பெருக்கி முடித்து நிமிர்ந்து என்னைச் சந்திப்பதற்கும் சரியாக இருந்தது. அவள் மகிழ்ச்சியுடன் சிரித்து என்னை உபசரித்தாள். மாமி

சமையல்கட்டிலிருந்து வந்து, “வா, வீட்டாரின் ஷேம நலத்தை விசாரித்தாள். நான் பதில் கூறிவிட்டு, ரெயிலின் தாமதமான வரவைப் பொதுவாக முறையிட்டுக்கொண்டேன். எனக்காக அவள் ‘டீ’ போட உள்ளே சென்றாள். என் மாமா வீடு ரொம்பவும் கச்சிதமான, ஆனால் சிறிய வீடு. ஒரு பெரிய ஹால். அதன் கோடியில் இடப்பக்கம் ஒரு அறையும், வலப்பக்கம் ஒரு அறையும் இருக்கும். இடப்பக்க அறை சமையலறை. வலப்பக்க அறை, குளியலறை, சயன அறை, ஸ்டோர் ரூம், எல்லாம் அதுதான். ஆண் குழந்தைகள் விளையாடச் சென்றிருக்க வேண்டும். மாமாவுக்கு இரண்டு பெண்கள் (பூர்ணா சமையல்கட்டில் இருந்தாள்) மூன்று பையன்கள். கனு, வ்ரஜேஷ், தீபக். பாட்டி கோயிலுக்குப் போய்விட்டிருந்தாள். காலை ஐந்து மணிக்குப் போய் 10 1/2 அல்லது 11 மணிக்குத்தான் வருவாள். பாட்டி ரொம்பவும் மடி, ஆசாரம் ஆகியவற்றை அனுஷ்டிப்பவள். ஒவ்வொரு முறையும் நான் இங்கு வரும்போது எனது உயரத்தை உத்தேசித்து இவள் செய்கிற முதல் காரியம், மடிகோலால் மேலே உலர்த்தி இருக்கும் துணிகளை, ஓரங்களுக்கு நகர்த்துவதுதான். அப்படியும் தப்பித்தவறி, அவளது ஆடைகளை நான் தொட்டுவிட்டால் அவைகளை மீண்டும் துவைக்கச் சென்று விடுவாள். இந்தக் கட்டிடத்தில் எல்லோரையும்விடவும் வயதில் முதிர்ந்தவள் இவள். லெளகீக விவகாரங்களில் மிக மிக விவேகமுள்ளவலாகவும், ஆன்மீக விசாரங்கள் நிறைந்த ஒரு தெளிந்த சிந்தனாவாதியாகவும் கருதப்பட்டும் மதிக்கப்பட்டும் வந்தாள்.

நான் கழிவறைப்பக்கம் பார்த்தேன். என்ன அதிசயம், காலியாகக் காத்திருந்தது. பொதுவாக, இந்த மேல்மாடியில் வாழ்கிற அறுபது ஜீவன்களின் உபயோகத்திற்காகக் கட்டப்பட்ட இரண்டே இரண்டு கழிவறைகள் இந்த ஒன்பதேகால் மணி உச்சகட்டத்தில் இப்படிக் காலியாய் இருப்பது ரொம்பவும் அரிது.

ஆசாரம் மிகுந்த என் மாமா வீட்டு நியதிப்படி இந்தக் கழிவறையை உபயோகிக்கச் சில கண்டிப்பான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்தக் கழிவறைப் பிரயாணம், வெகு நேர்த்தியான ஒரு அனுபவம்.

முதலில், தண்ணீரை ஒரு சிறிய பிளாஸ்டிக் செம்பில் உடைந்துபோன சிமெண்ட் தொட்டியிலிருந்து எடுத்து தண்ணீர் வராத ஒரு குழாயடியின் சின்னச் சுற்றுச் சுவர் மேல் வைத்துவிட வேண்டும். மாடியின் ஓரச் சுவரின் மூலையில் ஒரு நாலு கிலோ டால்டா டின் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும். அதை இடது கையால் எடுத்துக் கொண்டு சென்று கழிவறைக்குப் போகிற ஒரு சின்ன நடைவெளியின் முகட்டில் வைத்துவிட்டு, வலது கையால் ஒரு பிளாஸ்டிக் வாளியில் மீண்டும், உடைந்துபோன சிமெண்ட் தொட்டியிலிருந்து நீரை மொண்டு அந்த டின்னை நிறைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, அந்த டின்னை இடது கையால் சுமந்து அந்த நடைவெளியெங்கும் அந்த மேல்மாடிக் குழந்தைகள் கழித்து உண்டாக்கிய சிறுநீர்த் தீவுகளை லாவகமாகத் தாண்டி, முதலில் தென்படுகிற – கழிவால் நிறைந்து வழிகிற, ஒரு மாதத்திற்கு அருவருப்பு ஊட்டவல்ல – கழிவறையைத் தவிர்த்து, அடுத்ததில் வழுக்காமல் உட்கார்ந்து, (என்னை மாதிரி) ஜே.கிருஷ்ணமூர்த்தியையோ, டி.எஸ். எலியட்டையோ நினைத்து லயித்துவிட வேண்டும். அதாவது, அடுத்த வீட்டுப் பெண், தவிப்பும் வேதனையும் தொனிக்கிற குஜராத்தியில், “அந்தர் கோன் ச்சே? ஜல்தி நிக்ளோ!” (உள்ளே யார் இருக்கிறீர்கள்? சீக்கிரம் வெளியேறுங்கள்!) என்ரு கெஞ்சி எழுப்பிவிடுகிறவரை.

தலையைக் குனிந்து வெளியே வந்து நடைவெளியைக் கடந்து, காத்திருக்கிற பெண்ணைத் தவிர்த்து, நேரே சென்று டால்டா டின்னை இருந்த இடத்தில் இருந்த மாதிரி வைத்து, அதன் அருகில் இருக்கும் தேய்ந்துபோன 501ஐயோ, ரெக்ஸோனாவையோ, லைஃப்பாயையோ எடுத்து குழாயடி சுற்றுச் சுவரில் நிறைத்து வைத்த பிளாஸ்டிக் செம்பை இரண்டு மணிக்கட்டுகளினாலும் இறுக்கி, லேசாகக் கவிழ்த்து, கைகளைக் கழுவிக்கொண்டுவிட வேண்டும். பிறகு செம்பைச்  சாதாரணமாக எடுத்துச் சென்று கால்களைக் கழுவிக்கொள்ளலாம். நான் இந்தச் சடங்குகளை மிக அலட்சியமாகச் செய்து முடித்துவிட்டு வந்தேன். மாமி எனக்காக ‘டீ’ தயாராக வைத்திருந்தாள். அவள் வெளிறிப்போன நீலப் புடவை உடுத்தியிருந்தாள். மாமியின் சிவந்த மேனிக்குப் பிரகாசமான நிறங்கள் எடுப்பாக இருக்கும். ஆனால் அவளை நான் எப்பொழுது பார்த்தாலும் இந்த மாதிரி ஏதோ ஒரு வெளிறிப்போன நிறத்தில் உடுத்திக்கொண்டிருப்பாள். நான் மனதுக்குள் மாமாவின் புடவை ரசனையைச் சபித்துக்கொண்டேன்.

கிணற்றடியில் இப்போது கூட்டம் குறைந்து காணப்பட்டது. பெண்கள் போய்விட்டிருந்தனர். ஆண்களும் இரண்டு மூன்று இளைஞர்களும் ஒரு சில குழந்தைகளும் மட்டுமே இருந்தனர். ஆண்கள் அனைவரும் பாக்கெட் வைத்த, லாங்கிளாத் பனியன்களும், வெள்ளை பைஜாமாக்களையும் அணிந்திருந்தனர். மாமா மட்டும் ஒரு நைந்துபோன, கையில்லாத ஸ்வெட்டரும், வேட்டியும், அதைப் பிடித்து நிறுத்த ஒரு மட்டமான தோல் பெல்ட்டையும் அணிந்திருந்தார்.

மாமா எல்.ஐ.சி.யில் சுமார் இருபது ஆண்டுகளாக வேலை செய்கிறவர். இந்தக் கட்டிடத்தில் மிக அதிகமாகப் படித்தவர்கள் வரிசையில் முன்னனியில் நிற்பவர். அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சி.க்கு இருக்கிற கொஞ்சநஞ்ச மோகத்தில் தனது வண்டியை ஓட்டிக்கொண்டிருப்பவர். குறிப்பாக, இங்கே இவருடைய ஜம்பம் நூற்றுக்கு நூறு பலிக்கிறது.

இப்போது அவர் கிணற்றில் லயித்திருந்தார். கிணற்றுக்கு மேலே ஒரு தகரக் கூரை போடப்பட்டிருந்தது. அதனால் கிணற்றுக்கு வெளிச்சம் வராமல் மிக இருட்டாக இருந்தது. ஒரு இளைஞன் டார்ச் விளக்கால் கிணற்றுக்குள் ஒளியை ஏற்படுத்திக்கொண்டிருந்தான். கிணற்றில் கருப்பாக ஏதோ மிதந்துகொண்டிருந்தது. அதை எலி எண்று ஊர்ஜிதப்படுத்தினார்கள்.

இறந்துபோன எலியை எடுக்கத் தங்களுடைய வாளிகளைத் தர யாரும் சம்மதிக்கவில்லை. அதனால் ஒரு பழக்கூடையைக் கயிற்றில் கட்டி கீழே இறக்கியிருந்தார்கள். கூடையின் ஒரு பக்கத்தில் மட்டும் கட்டப்பட்டிருந்ததால், கூடை ஒரு பக்கமாக சாய்ந்துவிடப்பத்திருந்தது. நீரின் அழுத்தத்தால் அது மேலும் கதகதப்பாகிப்போனது. என்றாலும், எலியை எடுக்கும்போது தண்ணீர் கூடையில் இருந்தது, எலி மட்டும் சிக்கிவிடும். என்று இவர்கள் கூறினார்கள், இதில் இருக்கும்

சௌகரியத்திற்குப் பின்னால் ஒரு சாமார்த்தியமும் ஒளிந்துகொண்டிருந்தது. நிச்சயமாக இது மாமாவின் யோசனையாகத்தான் இருக்கவேண்டும். சுயநலத்திற்காக மனிதன் கையாளும் சாம்ர்த்தியம் சில சமயம் இந்த மாதிரி சுவாரஸ்யமாகவும் இருப்பது உண்டு.

எலி இப்போது கிணற்றின் ஓரத்தில் மிதந்துகொண்டிருந்தது. சுமார் அரை மணி நேரமாக இது அங்கேயே இருப்பதாகக் கூறினார்கள். இந்த விஷயத்தை மற்றவர்கள் என்னிடம் கூறும்போது மாமாவுக்குத் தனது திறமையை மற்றவர்கள் சந்தேகப்படுகிறார்கள் என்ற கற்பனை வந்து, கூடவே கோபமும் வந்தது. என்றாலும், அவர் மிகப் பொறுமையாகச் செயல்பட்டார். அந்த எலியை வெளியே எடுத்துப் போடுவதை ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டிருந்தார்.

காந்திலாலும் சந்திரகாந்தும் அண்டை வீட்டுக்காரர்கள். இடையிடையே இவர்கள் ஷு(த்) தயூ(ந்) பாபு பாய்? ஷு(த்) தயூ(ந்) என்று குஜராத்தியில் கேட்டுக்கொண்டிருந்தனர். இவர்கள் கேட்கிற ஒவ்வொரு முறையும் மாமா தனது கண்களையும் புருவங்களையும் சுருக்கி, தான் எல்லோராலும் கவனிக்கப்படுகிறோம் என்ற உண்மையை மனத்துக்குள் ரசித்து அசட்டுத்தனமாக ஆனந்தப்பட்டு முன்னைவிட, இன்னும் சற்று சிரத்தையுடன் தனது வேட்டையில் ஈடுபட்டார்.

போராட்டம் நீண்டது.

கடைசியில் அவர் பொறுமையை இழந்து ஆக்ரோஷமாக ஆனால் வெகு நேர்த்தியான சில சேஷ்டைகளைச் செய்தார். உலக்கையால் இடிக்கிற மாதிரியும், மாவை ஆட்டுகிற மாதிரியும், பட்டம் விடுகிற மாதிரியும், கடைசியாக ஒரு மாலுமியைப்போலவும் பல வித்தைகள் செய்தார்.

வித்தை பலித்தது.

எலி கிணற்றின் மையத்திற்கு வந்துவிட்டது. இந்த நிலையில் அதை வெளியே எடுப்பது சுலபம் என்று எல்லோருக்கும் பட்டது. எல்லோருக்கும் மனதுக்குள் உற்சாகம் பொங்கி வழிந்தது. மாமா ஒரு கப்பற்படை அதிகாரியைப் போல் விளக்கு பிடிப்பவனுக்கு ஆணைகள் பிறப்பித்தார். அலட்சியமாக அருகில் நின்றவர்களை விலகச் சொன்னார். பிறகு, கயிற்றைக் கீழே இறக்கினார், மிக நிதானமாக. பின் மெல்ல, மிக நயமாகக் கயிற்றைச் சரியாக எலிக்கு அருகே கொண்டு வந்தார். மறுகணம்! ஒரு அசாத்திய வேகத்துடன் கயிற்றை மேலே இழுத்தார்.

எல்லோரும் ஆர்வமாய்க் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்து ஏமார்ந்தார்கள். கூடை காலியாகவே மேலே வந்திருந்தது. எலியோ மீண்டும் கிணற்றின் ஓரத்திற்கே போய்த் தேங்கிவிட்டது. மாமா அசடு வழிந்தார். எலியின் மேல் அவருக்குக் கோபம் கோபமாக வந்தது.

மாமா மீண்டும் மீண்டும் அசடு வழிந்தார்.

சுமார் முக்கால் மணி நேரம் எலி போக்குக் காட்டியது. கடைசியாக, பத்தே கால் மணிக்கு எலி வெளியே எடுக்கப்பட்டது. எலியின் பிணத்தைப் பார்க்கக் கூசி, குழந்தைகளும் பெரியவர்களும் நகர ஆரம்பித்தனர். தனது ஆண்மையையும், தைரியத்தையும் வெளிக்காட்ட இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கருதிய யாரோ ஒரு இளைஞன் கூடையுடன் எலியை வெளியே எடுத்துச் சென்றான்.

மாமா, வெற்றி பெற்ற கஜினி முகம்மதாகவும், சீசராகவும், நெப்போலியனாகவும் உணர்ந்தார். தொடர்ந்து, அவர் தன்னைச் சுற்றியிருந்த ஏழெட்டு குஜராத்தி இளைஞர்களுக்குத்தான் அந்த எலியை வெளியே எடுத்த விதத்தைப் பற்றி, ஒரு அரசியல்வாதியின் சொல்லாடம்பரத்துடனும், ஒரு கட்டிட இயல் நிபுணரின் அபிநயங்களுடனும், பதினைந்து நிமிடங்களுக்கு விளக்கினார்.

மாமாவின் விரிவுரை முடிந்த பின், காந்திலாலும் ஜெயந்திலாலும் மற்ற சிலரும், இப்போது கிணற்று நீரைக் குடிக்க உபயோகிக்கலாமா?” என்ற ஒரு நியாயமான கேள்வியைக் கலக்கத்துடன் கேட்டார்கள். இதுவரை இதைப்பற்றிச் சிந்திக்காத மாமாவோ சற்று அதிர்ந்துபோனார். அவரது மனத்தின் பின்னணியில் வேகமாகப் பாய்ந்த பயங்கள் அவர் முகத்தில் நன்கு தெரிந்தன. என்றாலும், உடனே சமாளித்துக்கொண்டார். தனது தயக்கம் இந்த சிஷ்யர்களிடையே தனக்கிருக்கும் குரு ஸ்தானத்திற்கு ஊறு விளைவித்துவிடும் என்று கருதிய அவர் உடனே “இல்லை, இல்லை, அப்படியே உபயோகிக்கக் கூடாது. ஹெல்த் ஆபீஸில் போய்ச் சொன்னால் அவர்கள் ஏதாவது மருந்து தெளித்துவிடுவார்கள். அல்லது நாமாகவே சிறிது க்ளோரினைத் தூவிவிட்டுவிடவேண்டும்.” என்று கூறிவிட்டு நகர ஆரம்பித்தார். எல்லோரும் தலைகளை ஆட்டி அதை ஆமோதித்தாலும் அவர்கள் முகத்தில் கலவரமும் பீதியும் நிறைந்து காணப்பட்டன.

தஞ்சாவூர் குஜராத்தியான சந்திரகாந்த், மாமாவிடம், “ஹெல்த் பீஸ் மா தமே ஜஷோ? அம்நே கா(ந்)ய் ஆமா சமஜ் ஞ படே பாபு பாய் (ஹெல்த் ஆபீஸுக்கு நீங்கள் செல்வீர்களா? எங்களுக்கு இதில் ஒன்றும் புரியாது பாபு பாய்) என்று கெஞ்சல் குரலில் கேட்டார். மாமா அதில் தனக்குச் சிரமம் ஏதும் இல்லை என்றாலும் தனக்கு அந்த வட்டத்து ஹெல்த் ஆபீஸ் எங்கே இருக்கிறது என்று தெரியாது என்றும், மேலும் தனக்கு ஆபீஸ் செல்ல ஏற்கனவே தாமதமாகிவிட்டிருந்ததாகவும் கூறி நழுவிவிட்டார். தனது வீட்டிலும் குடிக்கத் தண்ணீர் அரைக் குடம்தான் இருந்தது என்பதை அவர் உணர்ந்திருந்தாலும் இந்தக் காரியத்தை செய்யத் தனக்கு அவகாசம் இல்லை என்று தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டார். மாமா என்று மட்டும் இல்லை, இங்கே இருக்கிற எல்லோரும் இதே மாதிரி ஏதோ ஒரு சாக்கைச் சொல்லி ஹெல்த் ஆபீஸுக்குப் போவதையும், அங்கு இருக்கப்போகிற அதிகாரியை எதிர்கொள்வதையும் தவித்தார்கள்.

தங்களைத் தவிர யாராவது ஒருவர் கண்டிப்பாகச் செல்லவேண்டும் என்று மட்டும் மிக மிக விரும்பினார்கள்.

இதர்கிடையில், மேலே இருந்து கீழே வந்த கோவிந்த்ஜி சேட் என்கிற பணக்கார, T.V.வைத்திருக்கிற கிழவர், மேலோட்டமாகக் கிணற்றிலிருந்து  பதினைந்து அல்லது இருபது குடங்கள் நீரை இறைத்துக் கீழே ஊற்றிவிட்ட பிறகு தண்ணீரை உபயோகிக்கலாம் என்று அரிய யோசனை கூறி, அதை மற்றவர்கள் மூலம் செயல்படுத்தவும் செய்தார். மூச்சிரைக்க இதைச் செய்து முடித்த பிறகும் எல்லோரும் கிணற்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தனது பெரிய முதிர்ந்த சரீரத்தைச் சுமந்துகொண்டு, கைத்தடியுடன் பாட்டி வாசல் பக்கமாக வருவது தெரிந்தது. வெள்ளையில், சிறிய கருப்புப் பூக்கள் நெருக்கமாக அச்சிட்ட சேலையை உடுத்தியிருந்தாள். கழுத்தில் துளசி மாலையுடனும், முகத்தில் தெளிவோடும் வந்துகொண்டிருந்தாள். இந்த களோபரத்தில் யாரும் பாட்டியைக் கவனிக்கவில்லை. அருகில் வந்த பின், அவளாகவே விஷயத்தை விசாரித்தாள். விஷயமும் பிரச்சனையும் அவள் முன் வைக்கப்பட்டன. பாட்டி சிறிது யோசித்தாள். பிறகு ச்சாலோஹு(ந்) தம்னே ஏக் ரஸ்த்தோ பதாவூ(ந்) (வாருங்கள் நான் உங்களுக்கு வழி காட்டுகிறேன்) என்று கூறினாள். எல்லோரும் அவளைப் பிந்தொடர்ந்து, மேலே வந்தனர்.

ஹாலில் கனுவும் வ்ரஜேஷும் மல்யுத்தம் செய்து கொண்டிருந்தனர். உள்ளே நுழைந்த பாட்டி சாதகமான கோணத்தில் இருந்த கனுவின் புட்டத்தில் லேசாக, ஆனால் வலிக்கிற மாதிரி கைத்தடியால் அடித்து ஏசிவிட்டு சமையலறைக் கதவருகே  இருந்த ஒரு தேக்குப் பீரோவின் முன் உட்கார்ந்துகொண்டாள். பிறகு அதை மெதுவாகவே திறக்க ஆரம்பித்தாள். பீரோவினுள் சின்னச் சின்ன விக்ரஹ்ங்கள் ஜரிகைத் துணிகள் அணிவிக்கப்பட்டு, குட்டிக் குட்டி மெத்தைகளின்
மேல் உட்கார்ந்திருந்தன. ஒரு மூளையில் காவித் துணியில் ஏதோ முடிந்துவைக்கப்பட்டிருந்தது. பாட்டி அதை நிதானமாக எடுத்து அவிழ்த்தாள். அதனுள் மிகச் சிறிய மண்குடம் இருந்தது. அதன் வாய் சுத்தமான ஒரு வெள்ளைத் துணியால் கட்டப்பட்டிருந்தது. பாட்டி ‘பூர்னாவுக்கு குரல் கொடுத்து ஒரு கிண்ணத்தை வரவழைத்தாள். பின் குடத்தின் வாய் – துணியை அவிழ்த்து அதிலிருந்து சிறிது நீரைக் கிண்ணத்தில் ஊற்றினாள். அங்கு ஒரு நிசப்தம் நிலவியது. எல்லோரும் அவளையே பொறுமையின்றி பார்த்துக்கொண்டிருந்தனர். பாட்டியோ சிறிதும் அவசரமில்லாமல் அந்த பீரோவை நன்றாக மூடிவிட்டுத் திரும்பினாள்.

கதவருகேயும், கதவுக்கு வெளியேயும் குழுமி நின்றவர்களில் முன்னால் இருந்த பிரான்ஜிவன்லாலை சமிக்ஞையால் அழைத்தாள் பாட்டி. சிறிது நேரமாகத் தலையைக் குனிந்திருந்ததால் பாட்டியின் மூக்கு கண்ணாடி மூக்கின் மையத்திற்கு நழுவிவிட்டிருந்தது. அவள் கிண்ணத்தைச் சிறிது முன்னால் நகர்த்தி, தலையை லேசாக உயர்த்தி, விழிகளை இன்னும் சற்று உயர்த்தி மூக்குக் கண்ணாடிக்கப்பால் பார்வையைச் செலுத்திப் பேசினாள், “ஸ்யோ ஆ கங்கா ஜல் ச்சே. பிரபுனு நாம் லய் னே குவா மா நாக்கி த்யோ னே வாப்ரோ” (இந்தாருங்கள். இதில் கங்கா ஜலம் உள்ளது. கடவுளின் பெயரைச் சொல்லி கிணற்றில் ஊற்றிவிட்டு நீரை உபயோகியுங்கள்.) பிராஞிவன்லால் மிக பவ்யமாகத் தலையை ஆட்டிக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு நகர்ந்தார். அவரைத் தொடர்ந்து எல்லோரும் கிணற்றடிக்குச் சென்றனர்.

சிறிது நேரத்தில் எல்லோர் வீட்டுப் பானைகளிலும் கிணற்று நீர் நிரம்பி வழிந்தது. கட்டிடத்தில் அமைதி கலைந்து, இயக்கம் துவங்கியது.

பாட்டி அமைதியாக ‘ஜன் கல்யானி’ல்* லயிக்கத் துவங்கினாள்.

***
*ஜன் கல்யான் – தெய்வீகமான விஷயங்கள் தாங்கி வருகிற குஜராத்தி மாத சஞ்சிகை.
***
நன்றி: திலீப் குமார் (மூங்கில் குருத்து/ க்ரியா), தாஜ்

அம்மரம் இம்மரம் – கம்பாரின் கவிதை

ஞானபீட விருது பெற்ற கன்னடப் பேராசிரியர் சந்திரசேகர கம்பார் எழுதிய இந்தக் கவிதை , கணையாழியில் (oct’2011) வெளியாகி இருந்தது. தமிழாக்கம் : கே. மலர்விழி. கம்பார் பற்றி ‘தமிழ்ச்சூழலிலிருந்து ஒரு பார்வை’ பார்த்த தமிழவனின் கட்டுரையை விரைவில் இணைக்கிறேன், இன்ஷா அல்லாஹ். கவிதையைப் பார்க்குமுன் , ‘சிற்றிதழ்களில் வருகின்ற கவிதைகள் மாணவர்களுக்குப் புரியல்ல, இதை நாங்க எப்படி கவிதைன்னு ஏத்துக்கிறதுன்னு அவங்க கேக்கிறாங்களே..’ என்ற கேள்விக்கு மா. அரங்கநாதன் அவர்கள் சொன்னதைப் பார்ப்போம் (இவரது தீராநதி நேர்காணலை நம் ஹனீபாக்கா தன் முகநூலில் போட்டிருந்தார்) :

‘வாஸ்தவம்தான்.  எனக்குப் புரியக்கூடிய ஒண்ணு என் பேரனுக்குப் புரியாமல் இருக்கும். என் மகனுக்குப் புரியாமலிருக்கும். என் அப்பாவுக்குப் புரிஞ்ச ஒண்ணு எனக்குப் புரியாமலிருக்கும். இப்படி எல்லோருக்கும் புரியும்படியா எழுதணும்னு எழுதறவனுக்கு என்ன தலையெழுத்தா?’

அதானே..? ரொம்ப ரசித்தேன்.  அதைவிட முடிவில் , ‘ கவிஞன் இதுவரைக்கும் சொல்லாத விஷயத்தை அல்லவா  சொல்கிறான். அது அவனுக்கே கூடப் புரியாமல் போகலாம்’ என்று சொல்லியிருந்தது பிரமாதம் –  ‘ பழங்கள் /கொட்டிக்கொண்டே இருந்தாலும் / பரந்த மண்ணில் / விழுந்தால் பயனில்லை..!  / ஒரு / சின்னக்கூடை / சேமித்து விடுமே..!’ என்று ‘புரியாமல்’ எழுதும் நம் ஜபருல்லாநானாவுக்கு சொன்னது மாதிரி –  சீர்காழிக் கவிஞருக்காக அல்ல! – இருந்தது. கம்பீரமான கம்பாரின் கவிதை இனி…

chandrashekar-kambar2

அம்மரம் இம்மரம்

நதிக்கரையிலொரு மரம்
நதியில் ஒரு மரம்

நிஜமான மரம் மேலே
பிம்பமான மரம் கீழே

மேலிருக்கும் மரத்தில் கீசு கீசு பிரபஞ்சம்
கீதங்கள் பாடிக்கொண்டு

இறக்கை நுனிகளால் இலைகளின் மேலே
கனவுகளைக் கிறுக்குகையில்

கீழே வேர்களில்
துள்ளும் மீன்கள் ஆழத்தில் போய்
நிழல் வெளிச்சத்தின் வலையில் நீந்தியவாறு
நினைவுகளைத் தூண்டும்.

நீரலை எழும்போது
ஒன்று நடுங்கும்
மற்றொன்று நகைக்கும்

என்றாலும் ஞாபகமிருக்கட்டும்
மரங்கள் இரண்டானாலும்
வேர் ஒன்றே.

நீ ஒரு மரம் ஏறினால்
மற்றொன்றில் இறங்குவாய்
தலை மேலாக ஏறுகிறாய்
தலை கீழாக இறங்குகிறாய்

மேலே நீல வானம்
கீழே அதனுடைய நகல்
இரு வானங்களிலும் மௌனம்

ஏற ஏறக் காற்றாவாய் என்றறிவாய்
என்றாலும் நினைவிருக்கட்டும்
கீழிறங்கும் விதி தப்பாது.

ஏறுவது உன் கையிலிருந்தாலும்
இறங்குவது உன் கை மீறியது

ஏறியவர் சொர்க்கம் சேருவார்களாம்
நமக்கது உறுதியில்லை
மூழ்கியவர்க்கு பாதாளம் நிச்சயம்
வேண்டுமெனில் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்

இக்கதையின் சோக தோஷம் என்னவெனில்
நிஜமான மரம் மற்றும்
நீரிலுள்ள மரம்
இவ்விரண்டும் ஒன்றான இடம்
மாயமாக இருப்பது.

அதற்காகத்தான் சொல்கிறேன் நண்பா!
மேலே ஏறினாலும்
தலை கீழாகத் தொங்குவது தப்பாது.

மேலிருந்து குதித்துத்
தளம் தொட்டு
மாயமான நிலத்தை
தேடனுமடா! தேடி வாழணும்.

***

நன்றி : சந்திரசேகர கம்பார் , கே. மலர்விழி, கணையாழி, தீராநதி, மா. அரங்கநாதன், இஜட். ஜபருல்லா

« Older entries