சிரியாவின் துயரம் – களந்தை பீர் முகம்மது பதிவு (FB)

ஃபேஸ்புக்கில் நண்பர் களந்தை பீர் முகம்மது எழுதியதைப் பகிர்கிறேன். ஓவியம் : ஹாஸிப்கான்

*

syria-hasifkhan-av

சிரியாவின் துயரம் எப்போது தீரப்போகிறது என்று மனசு பதற்றப்பட ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து வரும் செய்திகள் அமைதியைக் குலைக்கின்றன.குழந்தைகளும் கொல்லப்படுவதாகச் செய்திகளும் அது சார்ந்த படங்களும் வரும்போது எல்லோரின் சாபங்களும் சிரியாவின் மீதும் ரஷ்யாவின் மீதும் குவிகின்றன. புதிய செய்தியின்படி வடகொரியாவின் பெயரும் அடிபடுகிறது. சிரியாவுக்கு இரசாயனக் குண்டுகளை வடகொரியா வழங்கியது என்றும் அந்தக் குண்டுகளே குழந்தைகளைக் கொல்லப் பயன்படுகிறது என்றும் செய்தி.

அதேசமயம் இவ்வகைச் செய்திகள் அனைத்தும் ஒரு தரப்பாகவே வருவதைக் கவனிக்க வேண்டும். இதன்பின்னால் அமெரிக்காவும் மேலைய ஊடகங்களும் இருக்கின்றன. ஆரம்பத்திலிருந்தே சிரியாவின் உள்நாட்டுக் கலவரத்தைத் திசைதிருப்புவதில் அமெரிக்கா வெற்றிபெற்றுவிட்டது.

இப்போது புதிதாக வடகொரியாவின் பெயரும் அடிபடும்போது அமெரிக்கச் சதியின் கோரமுகமும் வெளிப்படுகிறது. வடகொரியாவின் மீது தனக்குள்ள அச்சத்தைக் களையமுடியாமல் தவிக்கிறது அமெரிக்கா. சிரியா போரின்மீது சர்வதேசத்தின் கவனமும் குவிந்துவிட்டதால் இதுதான் தக்க சமயம் என்று வடகொரியாவின் பெயரையும் அமெரிக்கா கோத்துவிட்டுள்ளது. தன் அவமானத்தை இப்படி துடைக்கப்பார்க்கிறது அமெரிக்கா.

சிரியா அரசு எதிர்த்துப் போரிடுவது ஐ.எஸ். பயங்கரவாதிகளையும்தான். இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு வெளிப்படையாகவே ஆயுதம் வழங்குவது அமெரிக்கா. வெளியே ஐ.எஸ்ஸை ஒழிக்கப் போவதாகப் பசப்புவது அதன் கபடம். உலகின் கவனத்தைத் தடமாற்றம் செய்தபின் அங்குள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களைத் தாராளமாக வழங்கியதால், அந்த ஆயுதத்தின் துணைகொண்டே ஐ.எஸ், போராடுகிறது. ஆனால் மேலைய ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

சிரியா அரசு கிளர்ச்சியாளர்களுடன் மோதுவதற்காக அபாயகரமான ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது என்று திரிக்கின்றன. நாசூக்காக ஐ.எஸ். பயங்கரவாதிகளைப் பற்றிப் பேசவே மறுக்கின்றன.

இந்த வகையில் பரப்பப்பட்ட செய்திகளால் சிரியாவுடன் சேர்ந்து ரஷ்யாவும் நிறைய கெட்ட பேரைச் சம்பாதித்துவிட்டது. இதில் மாபெரும் கொடுமை ஒன்றுண்டு. கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யா என்று சந்தடிச் சாக்கில் சொல்லிக் கம்யூனிஸ்டுகளின் மீதும் வெறுப்பைக் கிளறுகிறார்கள். அதனால்தான் உலகமெங்குமுள்ள கம்யூனிஸ்டுகள், ரஷ்யாவை ஆதரிக்கிறார்களாம்!

ரஷ்யாவில் எப்போதோ கம்யூனிஸம் செத்துவிட்டதாகக் கூறுகிற அதே ஊடகங்கள்தான் இப்போது ரஷ்யாவைக் கம்யூனிஸ்ட் நாடு என்றும் பொய் கூறுகின்றன. இவையெல்லாம் வெட்கம்கெட்ட, தார்மீக நெறியற்ற செய்திகள் – செயல்பாடுகள். இந்தச் செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தால் இந்தப் போரைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் கருதுகின்றன; இன்னொரு வார்த்தையில் சொல்வதானால் இந்தச் சிரியா உள்நாட்டுப் போர் இன்னும் செம்மையாக நடக்க வேண்டும் என்று நாவைத் தொங்கப்போட்டுக் காத்திருக்கின்றன இந்த ஓநாய்கள். அந்தத் தந்திரம் வெளியே தெரிந்துவிடாமல் வதந்திகளைச் செய்திகளாகத் திரிக்கின்றன.

இவ்வாறெல்லாம் சொல்வதால் சிரியா அரச பயங்கரவாதத்தை நாம் நியாயம் செய்துவிடவும் கூடாது. அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. சிரியாவும் தன் போர் உத்திகளைக் கைவிட்டுவிடுவது நல்லது. ஏனெனில் அது எய்யும் ஏவுகணைகள், குண்டுகள் அனைத்தும் அதன் சொந்த நிலத்தையும் பொருளாதாரத்தையும் மனித வளத்தையும்தான் காலி செய்கின்றன. போர் முடிந்தபின் இந்தச் சேதாரங்களைச் சரிசெய்வதற்குள் சிரியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் அதன் சக்தியும் காலியாகிவிடும். எச்சரிக்கை!

ஐ.நா. தன் பிறப்பு முதலாகவே நேர்மையாகவும் நாணயமாகவும் நடந்திருந்தால் இன்று அது பொருட்படுத்தக் கூடிய உலக அமைப்பாக இருந்திருக்கும். உலகெங்கும் சமாதானத்தையும் அமைதியையும் எப்போதோ நிலைநாட்டியிருக்கலாம்.

என்ன செய்வது மனித குலத்துக்கு இவ்வளவு பெரிய மந்த புத்தியும் போர் வெறியும் இருக்கக்கூடாது. உள்ளமெல்லாம் பதறுகிறது!!

*

நன்றி : களந்தை பீர் முகம்மது & ஹாஸிப்கான்

சீரியஸ் சிரியா : இஸ்லாமிய 24 கூட்டமைப்பினருக்கு…

ஃபேஸ்புக்கில் நண்பர் தாஜ்-ன் ஸ்டேட்டஸ்…

***

A-Sad-view-Syrian-Civil-War-e1351269157746

24 – இஸ்லாமியக் கூட்டமைப்பினர்கள்
கவனம் கொள்வீராக!

சிரியாவில்
அதிபர் ஆசாத்துக்கு எதிராக
2011-வில் இருந்து இன்றுவரை
புரட்சிப் படையெனும்
இஸ்லாமிய மக்களுக்கும்……
அதிபரின் ராணுவம் என்னும்
இஸ்லாமியப் படைகளுக்கு இடையே….
தொடர்ந்து
சண்டை நடந்து வருகிறது.

//இதுவரை…
சுமார் 80 ஆயிரத்திற்கு மேலானோர்
இறந்திருக்கிறார்கள்.
அத்தனை பேர்களும் முஸ்லிம்கள்தான்! //

நேற்றைய செய்தித்தாளில்….
ஓரு இஸ்லாமிய ராணுவ வீரனைக் கொன்று
அவனது ஹிருதயத்தை
இஸ்லாமியப் புரட்சிப் படையில் ஒருவன்
கையில் எடுத்து சுவைக்கும் செய்தி
நெட்டில்….
‘யூ – டியூப்’ல் காண கிடைப்பதாக
தகவல் வெளிவந்திருக்கிறது!

இஸ்லாமிய நாட்டில்…
இஸ்லாமியர்களுக்குள்
எந்தவோர் சமாதானமும் அற்று
வருடக்கணக்காக
இப்படி…..
இஸ்லாமியர்கள்
இஸ்லாமியர்களை கொன்றுகுவித்தபடி
வெற்றி வெற்றி யெனத் திரிகிறார்கள்!

அதாவது…
இன்னொரு ஆப்கானிஸ்தானாக
இன்றைக்கு மாறிக்கிடக்கிறது சிரியா!

இந்த நிகழ்வை…
விஸ்வரூபம் எடுத்த
கமலஹாசன் மாதிரி இன்னொருவர்
சினிமாவாக எடுக்கக் கூடுமெனில்…
தமிழக இஸ்லாமியக் கட்சிகளான
24-கூட்டமைப்பினர்களும் பொங்கி எழுவார்கள்.
தங்களது அமைப்பினர்களை எழுப்பிவிட்டு விடுவார்கள்!
தமிழக சந்து பொந்துகளில் கூட
‘எதிர்ப்பு’ போஸ்டர் ஒட்டப்படும்!
மௌண்ட் ரோட்டை அடைத்துக் கொண்டு
‘ஹதம்’ செய்வார்கள்.

ஆனால்…
இன்றைக்கு அந்தப் போர் நிறுத்தத்திற்கு
ஒரு சிறு காயையும் நகர்த்த மாட்டார்கள்!

தமிழகத்தில் வாழும்
இந்த 24-இஸ்லாமியக் கூட்டமைப்பினரையும்…
இவர்களிடமிருந்து மக்களையும்…
இறைவன்தான் காபந்து செய்ய வேண்டும்.
***

taj-new1

நன்றி : தாஜ்

***

சாதிக்கின் கமெண்ட்  :

யாரையும் யாரலூம் காபந்து செய்யமுடியாது,இல்லைங்கிறது ஒத்துக்கொள்வது வரை. கத்திரி வெயிலில் இப்படியா அருவாளா போடுறது?