சிந்தாவிஷ்டயாய சீனிவாசன்

சீனிவாசன்மரண அறிவிப்புகளை (Obituary News) ஆர்வமாக பார்க்கும் தன் தாயாரிடம் , பிரபல மலையாள திரைக்கதையாளர் / நடிகர் / இயக்குனர்  சீனிவாசன் கேட்டாராம் : ‘எத்தனை நாளைக்குத்தான் இப்படி மற்றவர்களின் ஃபோட்டோக்களையே பார்ப்பது? உன் ஃபோட்டோவை பார்க்க விருப்பம் இல்லையா உனக்கு?’

தாயார் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்.

நாலைந்து வருடங்களுக்கு முன்பு , ஒரு மலையாள சேனலில் , சீனிவாசனின் அந்த நேர்காணலை பார்த்து நானும் அநியாயத்திற்கு சிரித்தேன்.

அசாத்தியமான நகையுணர்வு கொண்டவர் சீனிவாசன். என் ஃபேவரைட். இவர் நடித்த படங்களை பெரும்பாலும் பார்த்து விடுவேன். இவரது கதை வசனம் அல்லது இயக்கம் என்றால் சி.டி, கேஸட்டை வாங்கியே விடுவேன். அத்தனை ஆர்வம். மிகச்சில படங்களையே இயக்கியிருக்கிறார். 

இவர் இயக்கி நடித்த ‘சிந்தாவிஷ்டயாய ஷ்யாமளா’ (சிந்திக்கும் ஷ்யாமளா) சினிமாவின் கடைசிக் காட்சியில் சீனிவாசன் பேசுவதைப் பதிவிடுகிறேன். முன்பு நான் குறித்து வைத்தது இது. நம்ம சனங்களின் நன்மைக்காக இப்போது, இங்கே. மொழிபெயர்ப்பு அல்ல இது; நான் புரிந்து கொண்டது. குறையிருப்பின் திருத்துங்கள்.

படித்துவிட்டு, ‘ப்ப்பூ… இது ஒரு தத்துவமா?’ என்று கேட்பவர்களுக்கு இருக்கப்பூ.. அடுத்த கட்டம்!

சீனிவாசன் :

‘எல்லா கல்லிலும் சிற்பமுண்டு. ஒரு சிற்பி , தன்னுடைய ஆயுதங்களை உபயோகித்து , அந்தக் கல்லிலிருந்து சிற்பத்தை பிரித்தெடுக்கிறான் என்று நாம் அறிந்துகொள்ள வேண்டும். நம்முடைய அறியாமைகளிலிருந்து, தவறுகளிலிருந்து , நம்முடைய நன்மைகளை தேர்ந்தெடுக்கும் சிற்பி நம்முடைய அனுபவங்களாகும். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களிலும் ஒவ்வொரு கருத்துக்கள் நமக்கு ஆர்வத்தையும் அழுத்ததையும் கொடுக்கும். ஒரு சமயத்தில் நாம் புரட்சியாளனாக இருப்போம், நம்மைக் காப்பவர்களையே எதிர்ப்போம், தெய்வத்தை திட்டுவோம், நாத்திகனாவோம். பிறகு எப்போதாவது. நாம் அதே தெய்வத்தையே தொழவும் செய்யலாம். இன்னொரு கட்டத்தில் தத்துவவாதியாக ஆகுவோம். கடைசியில்.. அதுவும் வேண்டாமென்று தோன்றிவிடும். இப்படி மாறி மாறி அலைந்து திரிந்துதான் நாம் யதார்த்தமான ‘நாம்’ ஆகிறோம்’

**

Links :

Sreenivasan – Wikipedia

மலையாள சினிமாவுக்கு ஒரு முன்னெச்சரிகை – சுதேசமித்திரன் (உயிர்மை)

Interview – Sreenivasan (Video)