அம்ஷன் குமார் : ஷோல்டேர் ஆர்ம்ஸ் என்று ஒரு மௌனப்படம். அதில் முதல் உலகப் போரில் தோற்றுப்போன ராணுவ வீரனாக சாப்ளின் தோன்றுவார். எதிரிகளிடமிருந்து தப்பியோடி அவர் ஒரு வீட்டிற்குள் நுழைவார். அந்த வீடு குண்டுகள் பாய்ந்து சின்னாபின்னமாக இருக்கிறது. அதில் மீதமிருப்பன ஒரு கதவும் மாடிப் படிகளும்தாம். சாப்ளின் அவசரமாக உள்ளே நுழைந்து கதவைத் தாழிட்டுக்கொள்வார். பின்னர் மாடிக்குச் சென்று ஒரு திரைச் சீலையை ஒப்புக்குத் தொங்கவிட்டு விட்டு அப்பாடா என்று சோம்பல் முறித்தவாறு கட்டிலில் படுத்துக்கொள்வார். வீட்டில் எவ்விதப் பாதுகாப்பும் இல்லை. ஆனால் சாப்ளின் கதவையும் திரைச்சீலையையும் தாண்டி எவரும் தன்னைக் கண்டு பிடித்துவிட முடியாது என்று நம்புகிறார். அதற்குக் காரணம் அவர் அந்த வீட்டிற்குள் கதவின் வழியாக நுழைந்தார். கதவிற்கு இரண்டு அடிகள் தள்ளி ஓட்டைச் சுவர் மூலமாகவும் அவர் நுழைந்திருக்கலாம். அதை அவர் செய்யவில்லை. கதவு இருக்கும்போது அதைத்தானே பயன்படுத்த வேண்டும். அதே போன்றுதான் மாடியில் படுக்கச் செல்வதும். திரைச்சீலையைத் தாண்டி முன் அனுமதியின்றிச் சயன அறைக்குள் எவரும் பிரவேசிக்க முடியாதல்லவா? யுத்தம் நடந்தாலும் நாகரிகப் பண்புகள் காக்கப்பட வேண்டும். சாப்ளினின் நகைச்சுவை இவ்வாறான மனோபாவத்திலிருந்துதான் உருவாகிறது. வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தைக் காட்டு என்கிற அறிவுரையைப் பின்பற்றினால் எதிராளியின் கோபத்திலிருந்து தப்பலாம் என்பதை அப்பட்டமாக நம்பி அவர் இடது கன்னத்தைக் காட்டுவார். பளார் என்று அங்கேயும் ஒரு அறை விழும். பார்வையாளர்களுக்கு உடனே சிரிப்பு வரும். அதே சமயம் நியாயம், தர்மம், நாகரிகம் ஆகியன என்னவாயின என்று நமது அக்கறையையும் அவர் தூண்டிவிடுகிறார். – காலச்சுவடு கட்டுரையிலிருந்து
Thanks to : Adrian A & Amshan Kumar