எம்.ஜி.ஆர்: இஸ்லாமிய திரைக்கதைகளும் சில முத்திரைச் செய்திகளும் – கநாசு.தாஜ்

அயோத்தி ‘தீர்ப்பு’ வெளியாகவிருந்த 24/09/2010 அன்றுதான் இதை வலையேற்றச் சொன்னார் கநாசு.தாஜ் (## கட்டுரை 14th september-2010  அன்று எழுதப்பட்டது).  திடீரென்று , திருத்தம் செய்து மறுபடியும் அனுப்புகிறேன் என்று அவர் குழப்பம் விளைவித்ததால் அன்று பதிவிட இயலவில்லை. ‘சமரச வாழ்வியலுக்கு’ வழி பிறந்தது!

மறைந்த எம்.ஜி.ஆர் இப்போது வருகிறார். எம்.ஜி.ஆர் செய்த நிஜமான புரட்சி அவரைப்பற்றி கவிஞர் தாஜை எழுதவைத்ததுதான் என்று சொல்வேன். சினிமா, அரசியல், மதம் என்று கலந்துகட்டி தாஜ் அடித்த இந்தக் கட்டுரையில் தகவற்பிழை ஏதுமிருப்பின் சுட்டுங்கள்; தவறாது திருத்துகிறேன். நன்றி.

இன்றும் பதட்டாகவே இருக்கிறது… ராம்ரஹீம்ராம்ரஹீம்ராம்ரஹீம்…

குர்ஆன், ஹதீஸ் என்று பதியாமல் இதையெல்லாம் போடலாமா என்று அறிவார்ந்த சில சகோதரர்கள் ஆத்திரப்படலாம். அவர்களுக்கு புலவர் ஆபிதீன் காக்காவின் ‘சினிமா’ கவிதையில் இருந்து ஒரு பத்தி :

‘உலகத் தொழில்க ளத்தனையும்
உருவாய் அமையும் ஒருபீடம்
இலகும் சமுகத் தொண்டேனும்
இதனில் புரிய இடமுண்டு
விலகும் நெஞ்சின் அறியாமை
விரியும் கல்வி இயல்பூக்கம்
திலகம் வைத்தாற் போல்வெளியில்
திறமை காட்டும் திரைக்கலையே!’

***

எம்.ஜி.ஆர்: இஸ்லாமிய திரைக்கதைகளும் சில முத்திரைச் செய்திகளும் – கநாசு.தாஜ்

எம்.ஜி.ஆர்.!
தமிழ் சினிமாவின் –
தமிழ்ச் சமூகத்தின் –
மிகப் பெரிய அடையாளம்!
நேற்று இன்று மட்டுமல்ல
நாளையும் அவர் தவிர்க்க முடியாத ‘ஜெயண்ட்’!
எம்.ஜி.ஆரே உயிர்த்தெழுந்து வந்து
அவரது இந்தக் கீர்த்தியை
துடைத்தெறிய முயன்றாலும் இயலாது!

*
என இளமையை
‘எம்.ஜி.ஆர் ரசிகன்’-ல் துவங்கி
சிவாஜியிடம் மயங்கி
மீண்டும், எம்.ஜி.ஆரின் ரசிகனாக
சந்தோஷம் கொண்டாடிய போது
அரசியல் என்னை திரும்பவும்
சிவாஜியிடம் சேர்த்தது!

காமராஜ் வாழ்கவென சொல்லித் திரிய ஆரம்பித்த
கல்லூரி காலத்தில்
‘சிவாஜி வாழ்க!’வென உரத்து குரல் எழுப்பி
அவரை மாதிரியே நடை நடந்து
அவரை மாதிரியே உடல் வளர்த்து
அவரை மாதிரியே பனியன் இல்லாமல் சட்டைப் போட்டு
சப்தமாகவும் பேசிப் பழகி
லாவகமாக சிகரெட் பிடித்து
வெறிபிடித்த அந்த என்
ரசிப்பின் காலம்… பதட்டம் கொண்டது.

உங்களிடம் சொல்வதற்கு என்ன
அன்றைக்கு…
எங்களின் இஸ்லாமிய வட்டத்தில்
என் வயதையொத்த வாலிபர்களில்
எவரொருவரும் காங்கிரஸ் கிடையாது.
எவரொருவரும் சிவாஜி என்று பேசுவதும் கிடையாது.
அப்படி வலிய பேசித்திரிந்த நபர் ஒருவன் உண்டென்றால்
அவன் நானாகத்தான் இருக்கும்!
இப்படி தனித்து நின்றதில்
பலரின் ஏளனத்திற்கு ஆளாகியது தனிக் கதை!
பதட்டத்திற்கு சொல்லவா வேண்டும்?

எம்.ஜி.ஆரின் பொழுதுபோக்கு படங்களையும்
சிவாஜியின் அழுகைப் படங்களையும்
பார்த்துப் பார்த்து புத்திபடித்த பின்னரே
நல்ல சினிமாவை தேடத் துவங்கினேன்.
அவர்களிடமிருந்து எப்படியோ தப்பித்தேன்.
ஏதோவோர் வகையில் என்னை
நல்ல சினிமாவின் பக்கம்
நகர்த்த உதவியதற்காக
எம்ஜிஆர்/ சிவாஜியின் பால்…
இன்றைக்கும் நன்றி உண்டு.

சிவாஜி ரசிகனாக
என்னை நான் உயர்த்திக் கொண்ட காலத்தில்
எம்.ஜி.ஆரின் படங்களில் ஒன்றுமில்லை/
அவருக்கு நடிக்கவே தெரியாது என்கிற
எண்ணமே என்னுள் ஓங்கி இருந்தது.
சிவாஜியையும் தாண்டிப் போனபிறகு
மறந்தும் கூட
சிவாஜியின் படங்களைப் பார்ப்பதில்லை.
ஆனால்…
வாய்ப்பு கிடைக்கிற போது
இன்றைக்கும் எம்.ஜி.ஆர் படங்களை
என்னால் பொறுமையாகப் பார்க்க முடிகிறது.
மேடைத்தனம் இல்லாத
அவரது நடிப்பு நளினமாகவே இருக்கிறது.

எம்.ஜி.ஆரை பற்றிய புகழை
எத்தனைக்கு உயர்த்தி எழுதினாலும்
தடையற ஒப்புக் கொள்ளும் சமூகமாகவே
நம் சமூகம் இருக்கிறது!
அப்படியொரு அந்தஸ்து அமரர் எம்.ஜி.ஆருக்கு!

இண்டர்நெட்டில்…
ஈழத் தமிழர்கள் எம்.ஜி.ஆரின் புகழை
மண்ணில் இருந்து விண்வரை
பரப்பி வைத்து இருக்கிறார்கள்!
சில பல தகவல்களைப் படிக்கிற போது
அவர் வேறு எம்.ஜி.ஆராக இருக்குமோ?
என்கிற கேள்வியும் மேலோங்குகிறது.

ஏன் இதை குறிப்பிட்டு எழுதுகிறேன் என்றால்…
எம்.ஜி.ஆர். குறித்து
நான் எழுதும் இந்தத் தகவல்களில்
‘மிகை’ தென்பட்டாலோ
காலம் வித்தியாசப் பட்டாலோ
அதை நீங்கள்…
என் ஞாபகப் பிசகாகவே கொள்ள வேண்டும்.
பிளீஸ்.

*
இன்றைக்கு
திடுமென நான்,
எம்.ஜி.ஆரை பற்றி எழுத முனைந்ததற்கு
காரணம் என்று எதுவுமில்லை.
பல நிலைகளைத் தொட்டு எழுதணும் என்கிற
வாழும் ஆவல் ஒன்றேதான்
என் எல்லா கட்டுரைகளுக்குமான காரணம்.
வேறு ஏதேனும் காரணம் இருக்கும் என்றால்….
அது, சாதிக்!

சாதிக் என்கிற…
எ. முஹம்மது சாதிக்.
எனக்கும் ஆபிதீனுக்கும்
நல்ல நண்பர்!
தீவிரமான தி.மு.க. அனுதாபி.
‘கலைஞர் இல்லையென்றால்
தமிழகமே இல்லை’ என்கிறவர்!
சம்பாத்திய நிமித்தமாக மட்டும்
துபாய் என்பது வேறு செய்தி. 
ஊர்…. சீர்காழி!
எனக்குப் பக்கம்.

வாழ்வின் சகலவிதப் பிரச்சனைகளோடு
மஹா அரசியல்/
எதற்கும் உதவாத நவீன இலக்கியம்/
மண்டை நரம்புகளை நீவி விடும்
இந்துஸ்தானி இசையில் திளைப்பு/
உலகம் தழுவிய கலைப் படங்களின் தாகம் என்பன தவிர…
அவரை மேலும் உங்களுக்கு காட்டணும் என்றால்..
கூடுதலாக கொஞ்ம் ‘சிகப்பு!’!
இன்னும் கூடுதலாக…
அமெரிக்க எதிர்ப்பும், ஆண்டவனும்! 

நாங்கள் பேச ஆரம்பித்தால்
எல்லைகள் தகரும்!
ஆனாலும், வானுக்கு மேலே போவதுமில்லை.
ஏழாவது வானத்தில்
ஆண்டவன் இருக்கிறான் என்பதால் அல்ல.
அத்தனை தூரத்திற்குப் போய் பேசுவதில்
சுவாரசியமில்லை.

இந்திய அரசியல்வாதிகள்/ சினிமாக்காரர்கள்/
விசேசமான கலைப்பட கர்த்தாக்கள்/
அவர்களின் நேற்றைய இன்றையப் படங்கள்/
மதங்கள்/
அதுகளின் புதிய வினோதச் சேட்டைகள்/
கடவுளர்கள்/ அவர்கள் குறித்த பிரஸ்தாபங்கள்/
நமது துப்பறியும் இதழ்கள்/
அதுகளின், வெந்துபோன செய்திகள்/
நவீன இலக்கியக் கிறுக்கல்கள்/
அந்த கிறுக்கல்களைக் கிறுக்கிய கிறுக்குகள்…
என்கிற அளவிலேயே எங்கள் பேச்சு வட்டமடிக்கும்.

இந்தப் பேச்சுகளை விட்டு
பால் வீதியைப் பற்றியே… பரலோகத்தைப் பற்றியே…
பேசுவதில் என்ன சுவாரசியம் இருக்கிறது?
குறைந்த பட்சம், சொர்க்கம்/ நரகத்தைப் பற்றிய
மதிப்பீடாவது எங்களுக்கு இருக்க வேண்டாமா?

*
இந்த முறை…
நண்பர் சாதிக்
விடுமுறையில் துபாயிலிருந்து
ஊர் வந்திருந்த போது…
நீண்ட நேரம் பேசும் வாய்ப்பு அமைந்தது.
உலகமயமாக்கம்/
மதம் சார்ந்த அரசியல் சூழ்ச்சிகள்/
காவி தீவிரவாதம்/ பாபர் மசூதி ஸ்தலம் பற்றிய
24th Sep-2010 நாளன்று வர இருக்கும் ##
உ.பி./லக்னோ/ சிறப்பு பெஞ்சின்
தீர்ப்பு குறித்த அனுமானங்கள் போன்றவைகள்
எங்கள் பேச்சில் பிரதானப்பட்டது.

மதம் சார்ந்த அரசியல் சூழ்ச்சியை முன் நிறுத்தி
அகில இந்திய காங்கிரஸை
சாதிக் தீர திட்டியதை
மறுக்காமல் நான் ஒப்புக் கொண்டேன்.

சாதிக்கிற்கு டெல்லி அரசியலின் பின் நோக்கிய
நிகழ்வுகள் பிடிபட்டு இருக்கும் பட்சம்
காங்கிரஸை இந்த அளவுக்கு திட்டி சாடியிருக்க மாட்டார்.

இந்தியாவில்… வெளிப்படையாக
எத்தனை ஆயிரம் அரசியல் கட்சிகள் இருந்தாலும்
மறை முகமாய் இரண்டே கட்சிகள்தான் இருக்கிறது.

ஒன்று,
இந்து தீவிர வாதம் கொண்ட பழைய சமஸ்தானங்கள்,
பழைய ஜமீன்தார்கள்,
பணம் படைத்த இன்றைய தொழில் அதிபர்கள்,
மடாதிபதிகள் மற்றும் என்றும் வாழும்
பழமைவாதிகளையும் உள்ளடக்கியது.
இரண்டு,
இந்து தீவிர வாதத்தையும், மேற்கண்டவர்களையும்
பொருட்படுத்தாத
நடுத்தர வர்க்க ஏழைகள்/ இடது சாரிகள்/
மற்றும் சிறுபான்மையினர்களை உள்ளடக்கியது.

எப்படிப் பார்த்தாலும்…
இரண்டாவது கட்சியே ஆகப் பெரியது.
ஆனால்…
இந்த ஆகப் பெரியதை
முதலாம் கட்சியினர் ஆளவே அனுமதிப்பதில்லை.
அமெரிக்க ‘வால் ஸ்ட்ரீட்'(Wall Sreet) அரசியலைப் போல
இது இந்திய ‘வால் ஸ்ட்ரீட்'(Wall Sreet) அரசியல்!

முதல் கட்சியினரான ஆதிக்க வர்க்கமே
இரண்டு பெரிய கட்சிகளாகப் பிரிந்து
மக்கள் எல்லோரையும் பகடைக்காயாக்கி
பல்வேறுபட்ட காரணத்தைச் சுட்டிப் பிரித்து
ஆதிக்க வர்க்கமே மத்தியில் மாறி மாறி
ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தபடிக்கு இருக்கிறார்கள்.
இதற்காக இவர்கள் எத்தனை ஆயிரம் பொதுமக்களையும்
காவு வாங்க தயங்க மாட்டார்கள்.
அது மஹாத்மாவாகவே இருந்தாலும் சரி!

சாதிக்,
கொஞ்சம் முயன்று கவனிக்கும் பட்சம்…
காங்கிரஸும்/ பி.ஜே.பி.யும் வேறு வேறு அல்ல என்கிற
வாழும் உண்மை பிடிபட்டிருக்கும். பிறகு….
பேசவும் பேச்சு இருந்திருக்காது!

சாதிக்கை
இன்னொரு பக்கமாய் அழைத்துப் போய்
ஆசுவாசப்படுத்த நினைத்த நான்…
சினிமாவைப் பற்றி பேசினேன்.
பழைய சினிமா/ எம்.ஜி.ஆர்./ அவரது திறமைகள்/
இஸ்லாமியத் திரைக்கதைகளில்
அவர் தயக்கமற நடித்த தகவலுமாக
என் பேச்சு போய் முடிய,
சாதிக்கிடம் சகஜமும் தெரிந்தது.
மனதில் நிம்மதி.

விடுமுறை கழிந்தது.
சொந்தப் பிரச்சனைகளின் சகல சுமைகளோடும்
தூக்க முடியாத லக்கேஜுடனும்
துபாய் போய் சேர்ந்தார் சாதிக்.

அன்றிரவே ஆபிதீனிடமிருந்து போன்,
சாதிக் போய் சேர்ந்ததின் நலம் குறித்த
தகவலாக இருக்கும் என்கிற ஆவலில்…
‘ஹலோ…’ என்றேன்.
‘இஸ்லாமிய திரைக்கதைகளில் எம்.ஜி.ஆர்.
பற்றி எழுதுங்கள்.’ என்றார்!

வியப்பே முதலில்!
ஆபிதீன் என்னை
எழுதச் சொல்லிக் கேட்டதில் சந்தோஷமே!
எனக்கும் அதுபற்றி எழுதும் எண்ணம்
கனிந்துகொண்டுதான் இருந்தது.
அந்தத் தருணத்தில்
அவர் திடுமென கேட்பார் என நினைக்கவில்லை.
வாழ்க சாதிக்!

*
எம்.ஜி.ஆரை பற்றியதான தகவல்கள் கடலானது!
‘இஸ்லாமிய திரைக்கதைகளில் எம்.ஜி.ஆர்.’ என்பது
அதன் உட்கடல்!

எம்.ஜி.ஆரின் மத்திம காலப் படங்கள்தான்
நான் பார்த்ததில் அதிகம்!
மன்னிக்கணும்
கொஞ்சம் தாமதமாகப் பிறந்து விட்டேன்.
அது மாதிரியே…
அவரது கடைசி காலப் படங்களைப் பார்க்காது
‘டாட்டா’ காண்பித்தும் விட்டேன்.

எம்.ஜி.ஆரைத் தேடி,
எங்க ஊர் ‘ஃபோர் ஸ்டார்’ தியேட்டருக்குப் போய்
நான் பார்த்த முதல் படம்… ‘வேட்டைக்காரன்’!
அதுவும்…
அது வெளியாகி ஒரு வருடம் கழித்து! 

*
எம்.ஜி.ஆரின் முதல் படம் சதி லீலாவதி(1936)
கடைசிப் படம்…
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்(1977)
எம்.ஜி.ஆர் மூன்று படங்களை இயக்கி இருக்கிறார்
அவரது மிகப் பெரிய வெற்றிப் படம்
எங்க வீட்டுப் பிள்ளை(1965)
நடிகை சரோஜா தேவியும், ஜெயலலிதாவுமே
அவரோடு கதாநாயகியாக
அதிகப் படங்களில் நடித்தவர்கள்
எம்.ஜி.ஆர் அதிகம் நடித்த
படக்கம்பெனி ‘தேவர் ஃபிலிம்ஸ்’
அவர் இலங்கை-கெண்டியில் பிறந்தார்
தாய் மொழி மலையாளம்
அவர் நடித்த ‘மலைக் கள்ளன்'(1954)
முதல் தேசிய அவார்ட் பெற்ற தமிழ்ப் படம்!
‘ரிக்சாக்காரன்(1971)ல் சிறந்த நடிகருக்கான
தேசிய அவார்ட் அவருக்கு கிடைத்தது.
சென்னை மற்றும் அமெரிக்காவின்
பல்கலைக்கழகங்கள் எம்.ஜி.ஆருக்கு
கௌரவ டாக்டர் பட்டங்கள் கொடுத்து கௌரவித்தன.
அவர் மறைந்த பிறகு…
இந்திய அரசின் மிகப் பெரிய விருதான ‘பாரதரத்னா’ விருதை 
அவரது புகழுக்கு
அரசு வழங்கி கௌரவித்தது!!

எம்.ஜி.ஆர். குறித்த இப்படியான தகவல்களை
மீடியாக்களின் வழியே
நீங்கள் சகஜமாக அறிய வந்திருப்பீர்கள்.
இங்கே, என் பார்வையின் வழியே 
சற்று வித்தியாசமான கோணத்தில்
எம்.ஜி.ஆரை நீங்கள் பார்க்கலாம்…
முயன்றவரை.

*          

1959 – வாக்கில்….
எங்கள் ஊரான சீர்காழியில்
எம்.ஜி.ஆரின் நாடகமான ‘இன்பக் கனவு’ நடந்தது.
நாடகத்தின் இடையில், ஓர் சண்டைக் காட்சி
மேடையிலேயே அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
வாழ்வில் சகலவிதமான கஷ்டங்களுக்குப் பிறகு
திரைப் படங்களில் படு அமர்க்களமாக
அவர் முன்னேறிய காலக்கட்டம் அது.
நாடோடி மன்னன்(1958) படத்தின்
வரலாறு காணாத வெற்றியில்
அவர் உச்சத்தில் இருந்த நேரம்!
அந்தச் சண்டைக் காட்சியில்
நடிகர், ‘குண்டு மணி’ என்கிற பொதியை
‘அலேக்’காக தூக்கிய போது,
அவரது கால் ‘ஸ்லிப்’பாகிவிட்டது.
சந்தோஷப்பட்ட
அவரது திரைவுலக விரோதிகள் வியக்க
குணமாகி…
முன்பை விட பல வெற்றிப் படங்களை தந்தார்!

குணமான பின் மீண்டும் சீர்காழி வந்து
தடைப்பட்ட நாடகத்தை நடத்தி தருவதாக
எங்கள் ஊர் மக்களுக்கு
வாக்கு தந்துவிட்டுப் போனாராம் எம்.ஜி.ஆர்.
அந்த வாக்கு இன்னும் அப்படியே இருக்கிறது.

எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கிய காலத்தில்
எங்கள் ஊருக்கு ஒரு தடவை வந்திருந்தார்.
மேலே நான் குறிப்பிட
நண்பர் சாதிக் வீட்டிற்கு
பக்கத்து வீட்டுப் பையனான ராஜேந்திரன்
அ.தி.மு.க.வின் அன்றைய நகரச் செயலாளர்.
எம்.ஜி.ஆர். தலைமையில் அவருக்கு திருமண ஏற்பாடானது!
ராஜேந்திரன் வசதி இல்லாத குடும்பத்து ஆசாமி.
தன் வீட்டுக்கு முன் உள்ள ரோட்டை அடைத்து
தட்டுப் பந்தல் மட்டுமே போட்டிருந்தார்.
எதையும் யோசிக்காமல் எம்.ஜி.ஆர். வரவே செய்தார்!
தலைமை தாங்க வந்திருந்த எம்.ஜி.ஆர்.
மணமக்களை வாழ்த்திப் பேசினாரே தவிர
மறந்தும்,
மீண்டும் ‘இன்பக் கனவு’ நாடகம்
நடித்து தருவது குறித்துப் பேசவே இல்லை.
ஞாபகம் செழித்த எங்க ஊர் பெரிசுகளுக்கெல்லாம்
அதில் கொஞ்சம் வருத்தம்! 

எம்.ஜி.ஆருக்கு விபத்துகள் ராசி போலிருக்கிறது!
இப்படித்தான்…
1967-ம் ஆண்டு வாக்கில், நடிகர்வேள் எம்.ஆர்.ராதா
எம்.ஜி.ஆரை சுட்ட போதும் நடந்தது.
இப்பவும் சந்தோஷப்பட்ட
அவரது திரைவுலக விரோதிகள் வியக்க
குணமாகி…
முன்பை விட பல வெற்றிப் படங்களை தந்தார்!

என்றாலும்….
குண்டடிக்குப் பிறகான
எம்.ஜி.ஆரின் வெற்றிகள் கூடுதல் மதிப்பு கொண்டது!
குண்டடி பட்டதில் எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட,
உடைந்த அந்தக் குரலோடு கடைசிவரை நடித்தார்!
உச்ச நிலையில் இருக்கும் எந்தவொரு நடிகனும்-
‘டப்பிங் டெக்னாலஜி’ வளர்ந்த ஒரு துறையில்-
இப்படியொரு ‘ரிஸ்க்’ எடுக்க மாட்டான்!
அதுவும் சினிமாவில்.
எம்.ஜி.ஆர் ‘ரிஸ்க்’ எடுத்தார்!
மக்களும் ஒப்புக் கொண்டார்கள்.
உலக சினிமா சரித்திரத்தில்
இந்த நிஜம்…
தனித்து நின்று கால காலமும் பேசும்!

தமிழ் சினிமாவில்
அதிகத்திற்கு அதிகமும்
அரச வேடமிட்ட நடிகர் எம்.ஜி.ஆர்.தான்!
இதில் குறிப்பிடத் தகுந்த தனித்துவம் என்னவென்றால்…
சேரன்/ சோழன்/ பாண்டியன்/ பல்லவன் என்று
தமிழகத்தை ஆண்ட
நான்கு மன்னர்களின் வேடங்களையும்
அவர் தரித்தார் என்பதுதான்!
தவிர, தமிழாண்ட பல குறுநில மன்னர்களின்
வேடங்களையும் தவிர்க்காமல் செய்தார்!
அத்தனையும் அவருக்கு பொருந்தியும் போனது!
ஆச்சரியமான ஆச்சரியம்!!

சிவாஜி நடித்த ‘ராஜராஜ சோழன்’ படம் வெளியான போது
எழுத்தாளர் சுஜாதா ஒரு வாரஇதழில் எழுதினார்…
‘ராஜராஜ சோழனை பார்க்கப் போய்
‘சிவாஜி’யை பார்த்து வந்தேன்’ என்று.
இப்படியான ‘பாராட்டை’யெல்லாம்
எம்.ஜி.ஆர். நடித்த அரசப் படங்கள்
அரசபுரசலாகக்கூட பூசிக்கொண்டதில்லை.

எம்.ஜி.ஆர். திராவிட கொள்கைச் சார்ந்து இருந்ததினால்
தன் படங்களின் வசனத்திலும்/ காட்சிகளிலும்/ பாடல்களிலும்
மிகுந்த கவனம் செய்பவராக இருந்தார்.
தயாரிப்பாளர்களும் அதற்கு இடம் கொடுத்தனர்.
படங்களில் சாமி கும்பிட மாட்டார்.
பொட்டு வைத்துக் கொள்ள மாட்டார்.
சாமி கும்பிடணுமென்றால்…. தாயைத்தான் கும்பிடுவார்.
வசனங்களில் திராவிட கொள்கைகளை இடம்பெற செய்தார்.

அவரது ‘நாடோடி மன்னன்’ படத்தின் வசனத்தை
புரியவர காது கொடுத்துக் கேட்டவர்களுக்கு
அதன் மகத்துவம் புரியும்.

அன்றைக்கு ஆண்ட காங்கிரஸ் ஆட்சியை விரட்டிவிட்டு
திராவிட கட்சியை அந்த இடத்தில் அமர்த்த
விபரம் அறிந்த பலரும் முயன்ற நேரம்.
அவர்களின் கனவு பலித்து
தமிழகத்தில் புதிய ஆட்சி மலரக் கூடுமெனில் 
அதன் சுபிட்சத்திற்கான சட்டத் திட்டங்களை
குறிப்புணர்த்துகிற மாதிரி
அப்படத்தின் வசனம் அழுத்தம் காண்பித்திருக்கும்.
அவரது சொந்தப் பட ‘லோகோ’வாக
உதயசூரியனின் ஒளியில்
தி.மு.க.வின் கொடியை ஆணும் பெண்ணும்
உயர்த்திப் பிடிப்பதாக அமைத்திருந்தார்.
அண்ணா எழுதிய
‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ -1959
‘நல்லவன் வாழ்வான்’ -1961
என்கிற இரண்டு திரைப்படங்களில் நடிக்கவும் செய்தார். 
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின்
அர்த்தப்பொதிவுள்ள சமதர்ம பாடல்களை பெரும்பாலும்
எம்.ஜி.ஆரின் படங்களில்தான் கேட்க முடியும்.

தமிழில்…
பொழுதுபோக்குப் படத்திற்குரிய அம்சங்களை
இட்டு நிரப்ப இலக்கணம் வகுத்து,
தர நிர்ணயமும் செய்தவர் 
எம்.ஜி.ஆர்.தான் என அழுந்தச் சொல்லலாம்.
படங்களில் அவர் வெற்றி கண்டதும்
மக்களை சென்றடைந்ததும் அதன் வழியாகத்தான்!

ஆனாலும்,
அவர் தலை சிறந்த இயக்குனர்களிடம்
மரியாதையும் கொண்டிருந்தார்.
இந்தி இயக்குனர் சாந்தாராம் மீது அவர் கொண்ட
மதிப்பும் மரியாதையும் அலாதியானது.
சாந்தாராமின்
படங்கள் அத்தனையையும்
விரும்பி பார்ப்பவராகவே இருந்தார்!
எம்.ஜி.ஆரின் ‘பல்லாண்டு வாழ்க’(1975) படம்
சாந்தாராமின் இந்திப் பட பாதிப்புதான்!

அதுமட்டுமல்ல,
அவரது ஆரம்ப காலப் படங்களில் பலவும்
ஆங்கில வழி இறக்கம்தான்.
அவர் இயக்கிய ‘நாடோடி மன்னன்’ கூட அப்படிதான்.
ஆனாலும்….
தமிழுக்கென்று/ தென்னிந்தியாவுக்கென்று
திரைப் படத்தில் அவர் செய்த தர நிர்ணயம்தான்…
இன்றைக்கும்…
நம் வெற்றிப் படங்களில் எதிரொலிக்கிறது.

இந்தவகை தர நிர்ணயம் செய்து நடித்து
வெற்றிகள் பல பெற்ற
அதே எம்.ஜி.ஆர். தான்
சில புதுமைப் படங்களிலும் நடித்து முத்திரைப் பதித்தார்.
பிற்காலத்தில் சில நடிகர்கள்
அத்தகைய கதைவடிவங்களில் நடித்திருந்தாலும்
தொடக்கம் என்னவோ…. எம்.ஜி.ஆர்.தான்!

பறக்கும் தட்டு மற்றும் வேற்று கிரக மனிதர்களை
உள்ளடக்கிய ‘கலையரசி'(1963)
இரண்டாம் உலகப்போரை
மையமாகக் கொண்ட ‘சர்வாதிகாரி'(1951)
‘பிளாஸ்டி சர்ஜரி’யை
மையமாகக் கொண்ட ‘ஆசை முகம்'(1965)
பின் நவீனத்துவ கதை அமைப்பான
‘கலங்கரை விளக்கம்'(1965)
குகை மனிதனாக ‘அடிமைப் பெண்'(1969)
இன்றைக்கு பெரிதாக பேசப்படும்
மிருகங்களிடம் அன்பு என்கிற
சீறிய சிந்தனையை ஒட்டிய… ‘நல்ல நேரம்'(1972)
போன்ற படங்களிலும் அவர் தட்டாது நடித்தார்.
அவரது இந்த ‘கார்னர்’ யோசிக்கத் தகுந்தது.

மேற்குறிப்பிட்ட, முத்திரைப் பட்டியலில்
‘ஏசு’வாக அவர் நடித்த படமும் வந்திருக்க வேண்டும்!
ஏனோ அந்தப் படம் பாதியில் நின்று போய்விட்டது.
இந்த முத்திரைப் பட்டியலில்தான்
இஸ்லாமிய திரைக்கதைகளில் எம்.ஜி.ஆர். நடித்த
படங்களும் இடம் பெறுகிறது.

1. குலோபகாவலி-1955
2. அலிபாவும் 40 திருடர்களும்-1956
3. பாக்தாத் திருடன்-1960
4. ராஜா தேசிங்கு-1960
-மேற்குறிப்பிட்ட எம்.ஜி.ஆர். படங்கள்…
இஸ்லாமிய திரைக்கதை கொண்ட
படங்கள் மட்டுமல்ல… எல்லா வகையிலும்
அவரை தனித்துக் காட்டியப் படங்கள்.

*
எம்.ஜி.ஆரைத் தேடி,
எங்க ஊர் ‘ஃபோர் ஸ்டார்’ தியேட்டருக்குப் போய் 
நான் பார்த்த முதல் படம்… ‘வேட்டைக்காரன்’ என்றும்-
அதுவும்…
அது வெளியாகி ஒரு வருடம் கழித்துதான் என்றும்
மேலே நான் குறிப்பு வைத்திருந்தேன்.
தீர்க்கமாக வாசிக்கும் வாசகர்கள்
கொஞ்சத்திற்கு குழம்பியிருக்கக் கூடும்.

‘அது என்ன ஒரு வருடம் கழித்து?’
சொல்கிறேன்.
அவசரமில்லையே?
எம்.ஜி.ஆரின் மேலுமான
செய்திகளுக்குதானே போக வேண்டும்…
நம்ம எம்.ஜி.ஆர்.தான், கோபித்துக் கொள்ள மாட்டார்! 
போகலாம்; மெல்லப் போகலாம்.

அன்றைய கால கட்டத்தில்
எங்க ஊர் ‘ஃபோர் ஸ்டார்’ திரையரங்கிற்கு
எந்தவொரு புதுப் படமும்
அத்தனைச் சீக்கிரம் வந்து விடாது.
குறைந்த பட்சம்,
புதுப் படங்கள் வெளியாகி
ஒண்ணு, ஒண்ணறை வருஷம் கழித்தே வரும்.
இந்தத் தாமதம் என்பது
எங்க ஊர் திரையரங்கின் எழுதப்படாத சட்டம்!

அந்த ‘ஃபோர் ஸ்டார்’ திரையரங்கம்
சில வருஷங்களுக்கு முன்
ஒரு நிலச்சுவான்தாரிடம் கை மாறிவிட்டது.
அதன் இன்றைய பெயர் ‘சிவகுமார்’

என்றாலும்…
அதன் மாசு குறையவேயில்லை.
அத்தனைக்குப் பாதுகாக்கிறார்கள்!
அதே அழுக்கேறிய திரை!
அதே இருக்கை! அதே மூட்டை!
என்றாலும் டிக்கட் விலையினை
மட்டும் சிரமம் கொண்டு மாறியிருக்கிறார்கள்!
ஏதாவது ஓர் புதுமை வேண்டுமல்லவா?
நாங்கள் அன்றைக்கு அறுபது காசுக்கு வாங்கிய டிக்கட்
இன்றைக்கு அறுபது ரூபாய்!!

எழுபதுகளில்
ஒவ்வோர் தீபாவளிக்கும் முந்தைய வாரத்தில்
அந்த ஃபோர் ஸ்டார் திரையரங்கில்
‘எம்.ஜி.ஆர். வாரம்’ அமர்க்களப்படும்!
தினைக்கும் ஒரு எம்.ஜி.ஆர். படம்
ஏழு நாளைக்கும் ஏழு படங்களை திரையிட்டு அசத்துவார்கள்!
எம்.ஜி.ஆர். சிவாஜி சேர்ந்து நடித்த
‘கூண்டுக் கிளி'(1954) படத்திற்கு கூட்டம் தாங்காது!
அந்தப் படத்திற்கான விளம்பரத்தில்…
‘ரசிகர்கள் அடித்துக் கொள்ள வேண்டா’மென குறிப்பும் இருக்கும்!’

எம்.ஜி.ஆரின் பழைய படங்கள் பலவற்றை
இந்த எம்.ஜி.ஆர். வாரத்தில்தான் அதிகமும் பார்த்தேன்.
எம்.ஜி.ஆர். நடித்த,
இஸ்லாமிய திரைக்கதை கொண்ட படங்களையும் சேர்த்து.

*
குலோபகாவலி/ அலிபாவும் 40 திருடர்களும்/
பாக்தாத் திருடன்/ ராஜா தேசிங்கு என்கிற
இந்த நான்கு படங்களிலும்
இஸ்லாமியப் பெயர்களையும், அடையாளங்களையும் தாங்கி
பாத்திரத்தோடு அவர் ஒன்றி
நடித்திருப்பது கவனிக்கத் தக்கதாக இருக்கும்.
அவர் தொப்பி அணியும் அழகே அலாதியாக இருக்கும்.
இஸ்லாத்தை மாசுபடுத்தாத வகையில்
கவனமும் செய்திருப்பார்..
குறிப்பாய் ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது
குலோபகாவலி படத்தின் துவக்கம்
ஃபஜருக்கு (அதிகாலை நேரத் தொழுகை) பாங்கு சொல்வதாக இருக்கும்.
தமிழில் இப்படி ஃபஜரின் பாங்கோசையோடு துவங்கும்
இன்னொரு படம் பிற்காலத்தில் வந்திருக்கிறது. அது
மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’
மலையாளத்தில் கூட அப்படியோர் படம் பார்த்திருக்கிறேன்…
பெயர்தான் நினைவில் இல்லை.  

சினிமாவில்,
எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்த காலத்திலும்
அதற்குப் பிறகான காலத்திலும் பல நடிகர்கள்
இஸ்லாமிய வேடம் ஏற்றிருக்கிறார்கள் என்றாலும்
எம்.ஜி.ஆர். அளவுக்கு இஸ்லாமியப் பாத்திரங்களோடு
ஒன்றிப் போனார்கள் என சொல்ல முடியாது.

எம்.ஜி.ஆர். நடித்த அந்த நான்கு படங்களில்
ராஜா தேசிங்கு நீங்களாக
மற்ற மூன்றும்
வெற்றிப் பெற்ற ஆங்கில படங்களை தழுவியது.
ராஜா தேசிங்கு…
செஞ்சியை ஆண்ட ஓர் நவாபுவின்
அவரது மறைமுக மனைவிகளின்….
அவர்களது பிள்ளைகளின்…
வரலாற்றுச் சான்றுகளை ஒட்டிய திரைக்கதை!
அந்தத் திரைக்கதையின்
சரித்திரக் குறிப்புகள் பிழையெனச் சுட்டி
‘காயிதே மில்லத்’ அவர்களின் தலைமையில் இயங்கிய
‘இந்திய யூனியன் முஸ்லீம் லீக்’ கட்சி
அன்றைக்கு எதிர்ப்பு காட்டிய செய்தியும் உண்டு.

1001 இரவுகள்
பெர்ஷிய மொழியின் செறிவு கொண்ட இலக்கியம்!
ஈரானுக்கு பெருமைச் சேர்த்த
இலக்கிய கலைவடிவங்களில் இதுவும் ஒன்று.
அந்த செறிவு கொண்ட கதைகள்
ஆங்கிலத்தில் மொழிமாற்றம் ஆனபோது
உலக இலக்கிய ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
அன்றைய ஹாலிவுட்
அதை காசாக்கத் திட்டமிட்டது.
1001 இரவுகள்
பல திரைப்படங்களாக வெளிவரவும் துவங்கியது.
உலக மக்களின், மேலான வரவேற்பால்
அப்படங்கள் அமோக வெற்றிப் பெற்றது.

தமிழ்ப் பட முதலாளிகள்
அந்த வெற்றியை… அந்தக் காசை…
தாங்களும் அடைய விரும்ப…
எம்.ஜி.ஆரை முன் நிறுத்தி
குலோபகாவலி
அலிபாவும் 40 திருடர்களும்
பாக்தாத் திருடன் என தயாரித்தார்கள்.
எப்பவும் எங்கேயும் முதலாளிகளின் குறி தப்புவதே இல்லை.
வெற்றியையும் காசையும் அள்ளினார்கள்.
எம்.ஜி.ஆருக்கு கிட்டியது என்னவோ
வெறும் புகழ் மட்டும்தான்.
கூடுதலாக…
ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் நெஞ்சத்தில்
நிறந்தர இடம்!

மேற்குறிப்பிட்ட நான்கு படங்கள் மட்டுமில்லாமல்
மகாதேவி(1957) ‘தாயத்து தாயத்து’ப் பாடலிலும்
சிரித்து வாழவேண்டும்(1974)
‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாடலிலும்
இஸ்லாமிய வேடமிட்டு அவர் மின்னவே செய்தார்!
அந்தப் பாடல் காட்சிகளில்
மக்கத்து சால்வை அணிந்து
புகையும் ஊதுபத்தியை காதில் சொருகியபடி
ஃபக்கீர்களின் ‘தப்’போடும்,
அவர்களின் தாளம் பிசகாத கை லாவகத்தோடும்
இசைத்தபடி
சூஃபிகளை ஒத்த
தத்துவார்த்தங்களையும் பேசி வலம் வர
அவர் மின்னாமல் என்ன செய்வார்?

இங்கே சமூகம் சார்த்து
சில தகவல்களை சொல்ல வேண்டும்.
பெரியாரின்
நீண்ட சமூகப் புரட்சியின் பயணத்தில்
ஐம்பதுகளின் கால கட்டம்..
பெரியாரின் பேச்சு சற்று வித்தியாசமாக ஒலித்தது.
அது அவரது இயக்கத்தார்களிடையே கூட
சலசலப்பை ஏற்படுத்தியது.
தாழ்த்தப்பட்டவர்களையும்/ பின் தங்கியவர்களையும்
இஸ்லாத்திற்கு மாற அவர் அறிவுரை செய்தார்,
உயர் வர்க்கத்தினரால் அந்த மக்கள் அனுபவிக்கும்
அத்தனை அசிங்கங்களையும் கலைய
அது ஒன்றுதான் உடனடி தீர்வென்றார்!
தாழ்த்தப்பட்டவர்களும்/ பின் தங்கியவர்களும்
இஸ்லாத்திற்கு பெருவாரியாக மாறாவிட்டாலும்
யோசிக்க செய்தார்கள்.
அவர்கள் மட்டுமல்ல மொத்த தமிழ்ச் சமூகமும்
அன்றைக்கு அவரது பேச்சை மெல்ல மெல்ல யோசித்தது.
அந்த பண்பட்ட சமூகத்தின் பார்வைக்கு
பார்க்க கிடைத்த
இஸ்லாமிய திரைக்கதையோடான
எம்.ஜி.ஆர். படங்கள்
பெரும் வெற்றி பெற்றது வியப்பில்லை.
இன்னொரு பக்கம்
தமிழக இஸ்லாமியர்கள் மத்தியில்
சிவாஜி என்றோர் நடிகர் இல்லாமலேயே போக…
எம்.ஜி.ஆர்…. 
‘அவுங்க வீட்டுப் பிள்ளை’யாகவும் ஆகிப் போனார்!

எங்க பக்கத்து எங்க பெண்களுக்கு
எம்.ஜி.ஆர். மீது அந்தக் காலகட்டத்தில்
அளவிலாப் பிரியமாம்!
அவரைப் பார்க்க மதராஸுக்கே
போய் வருவார்களாம்!
ஒருவரைப் பார்க்க போகிற போது
பிடித்தமான எதையாவது எடுத்துப் போவதென்பது மரபு.
எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானது…
கருவாடுதான்!
அதற்காக அதையா அவர்கள் கொண்டுப் போக முடியும்?
‘சீனிவாடா/ தம்மடை/ அச்சுப் பணியாரம்’ என்று
அவர் சுவைக்க கொண்டு போய்
தங்களது பிரியத்தை காட்டி வருவார்களென
சொல்லக் கேட்டிருக்கிறேன்.

சமூகம் சார்ந்த இன்னொரு தகவலோடு
கட்டுரையை முடிக்க நினைக்கிறேன்.
போதும்தானே ஆபிதீன்?

சமூகம் சார்ந்த இந்தத் தகவல்
கொஞ்சம் பிற்கால சங்கதி.
சினிமா சாராததும் கூட
அது, அரசியலே என்றாலும்…
இங்கே குறிப்பிடத் தகுந்தது.

மத்தியில் ஜனதா ‘கௌர்மெண்ட்’
தமிழக ஆட்சிக் கட்டிலில் எம்.ஜி.ஆர்.
தென்காசிப் பக்கம்/ ரஹமத் நகர் கிராமத்தின்
தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும்
ஒட்டு மொத்தமாக இஸ்லாத்திற்கு மாறினார்கள்.
இந்திய அளவில் அது
அந்த மாதத்து முக்கியச் செய்தி!
அன்றைக்கு உள்துறை அமைச்சராக இருந்தவர் அத்வானி!
பறந்து வந்துவிட்டார் தமிழகத்திற்கு
எம்.ஜி.ஆருக்கு ஏகப்பட்ட நெருக்கடி.

அடுத்தடுத்த ஆண்டுகளில்
மண்டைக்காடு கலவரம்!
கன்னியா குமரி கிருஸ்துவ சிறுபான்மையினருக்கு எதிராக
பாரதிய ஜனதாவின் எழுச்சி அது!
இந்து உயர் ஜாதியினரும்/ ஜாதி இந்துகளும்
களத்தில் இறங்கினார்கள்.
பல மனித உயிர்கள் மண்ணில் விழுந்தது.
எம்.ஜி.ஆர். பதறிப் போனார்.
மீண்டும் மீண்டுமான பாரதிய ஜனதாவின் நெருக்குதலில்
எம்.ஜி.ஆர். வேறு வழியற்று
அந்த இயக்கத்தார்களின்
அட்டூழியங்களை சகித்துக் கொண்டார்.
பாரதிய ஜனதா…
தமிழகத்தில் தன் அரசியல் கணக்கைத் துவங்கியது.
காட்சிகள் மாறியது.

இந்து முன்னணி தலைவரான ராமகோபாலன் என்கிற
உயர் ஜாதிகாரர் (இவரும் எங்க சீர்காழிதாங்க!)
தமிழகம் பூராவும் மேடைபோட்டு
ரசூலுல்லாவையும், இஸ்லாத்தையும் தரம் தாழ்ந்து பேசி
சிறுபான்மையினரை வம்புக்கு இழுத்தார்.
ராமகோபாலனை எதிர்த்தவர்கள் எல்லாம்
பத்திரிக்கையின் வழியாக தீவிரவாதிகளாகிப் போனார்கள்.
அந்த தீவிரவாதிகள் எல்லாம் படிப்படியாக சிறையில்!
அல்லது மண்ணுக்குள்!

தமிழர்கள் எல்லாம் ஒன்றேயென
பெரியாரால் பதப்படுத்தப்பட்ட மண்ணில்…
எம்.ஜி.ஆர். போன்றவர்களால் பேணப்பட்ட
மத நல்லிணக்க கட்டுகளும் தளரத் துவங்கியது.
எம்.ஜி.ஆரே பழி சுமந்தார்.
இந்த நல்லிணக்கத்தை பேணி காத்தவர்களில்
எம்.ஜி.ஆரின் பங்கு அளப்பரியது
எங்கோ பிறந்து/ வேறு மொழியை தாய் மொழியாகக் கொண்டு/
தன்னை முன் நிறுத்தி அழகு பார்த்த….
தமிழ்ச் சமூகத்திற்கு/ அதன் எழுச்சிக்கு/ மத நல்லிணக்கத்திற்கு
தன்னால் ஆன மட்டும் உணர்ந்து செயல் பட்டவர் எம்.ஜி.ஆர்!
ஆனாலும் கடைசியில்…..

எம்.ஜி.ஆர். மீது திணிக்கப்பட்ட
பாரதிய ஜனதாவின் அரசியல் நெருக்கம் என்பது…
அவர் ‘கேரியர்’-இல் நடந்தேறிய தவிர்க்க முடியாத விபத்து.
ஆனால்…
சிறுபான்மையினர்களான
கிருஸ்துவர்களும்/ இஸ்லாமியர்களும்
அதை மன்னிப்பதாகவே இல்லை.
எல்லாமாக எம்.ஜி.ஆரையே நம்பி இருந்த
அந்த மக்கள் செய்வதறியாது விக்கித்துப் போனார்கள்.
அதிலிருந்து அவர்கள் மீளவே இல்லை.

தன்னை அதிகத்திற்கும் அதிமாக நேசித்தவர்களிடமிருந்து
அரசியலால்
அபாண்டமாக பழி சுமந்தார் எம்.ஜி.ஆர்!.
இத்தனைக்கும்…
எந்த ஓர் இஸ்லாமியனை விடவும்
மண்டையை விட்டு இறங்காத வகையில்
தப்பாமல் தொப்பி அணிந்தவர் அவர்!
அரசியல் அவரை கவிழ்த்து
மண்ணோடு மண்ணாக்கி விட்டது.
 
இறப்பிற்குப் பிறகு சில தலைவர்கள்
என் கணிப்பில்
நான் வெட்கித் தலை குனியும் அளவுக்கு
முன்பைவிட உயர்ந்து நின்றிருக்கிறார்கள்.
என்னில் அண்ணாவும்/ எம்.ஜி.ஆரும் அப்படியே!
எப்படி என்கிறீர்களா?
அது அடிப்படை அரசியல் சம்பந்தப்பட்டது…
இப்போது வேண்டாம்.
இப்போதைக்கு…
வாழ்க எம்.ஜி.ஆரின் புகழ்.

***

நன்றி :

கநாசு.தாஜ் / கநாசு.தமிழ்ப்பூக்கள் 🙂

E-Mail : satajdeen@gmail.com

***

மேலும் பார்க்க : நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர்