இங்கே இலவச தமிழ் ஆடியோ புத்தகங்கள் கிடைக்கும் (4.44 GB)

இலவசமென்றதும் என்ன வேகமாக ஓடி வருகிறீர்கள், என்னைப் போலவே! வாழ்க.  இப்போது நான் கேட்டுக்கொண்டிருக்கும் வாரியார் சுவாமிகளின் மஹாபாரத உரை முதல்,  தென்கச்சி சுவாமிநாதனின் ‘இன்று ஒரு தகவல்’, கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’, முனைவர் கு. ஞானசம்பந்தனின் ‘சிரிக்கலாம் வாங்க’, அறிஞர் அண்ணாவின் சுதந்திரம் (முஸ்லீம்கள் கவனிக்கவும் : இதில் இஸ்லாம் பற்றிய 80 கே.பி உரையும் அடங்கும்!), நடிகவேள் எம்.ஆர். ராதா, வைரமுத்து, திருச்சி கே.கல்யாணராமன், முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யர், டி.ஏ.ஜோஸப், சுகி.சிவம் மற்றும் பலரின் ‘ரிலாக்ஸ் ப்ளீஸ்’ உரைகள் கீழ்க்கண்ட சுட்டியில் கிடைக்கின்றன. PDF சென்ஷி மாதிரி MP3 சென்ஷியாக விளங்கும் எமது நண்பர் எம்.டி. மூர்த்திக்கும் எழில்மிகு கடற்கொள்ளைக்காரனுக்கும் நன்றி.

இங்கே சொடுக்கி டோரண்ட் கோப்பை இறக்குங்கள். சுட்டி வேலை செய்யாவிடில் வேறு காதுகளை வாங்கிக் கொள்ளுங்கள் 🙂

எம்.ஆர். ராதா (F.C.F)

பொட்டி பொட்டியாய் பழைய தமிழ் படங்கள் வைத்திருக்கும் பொதக்குடி நண்பரிடம் ,’ஊட்டி வரை உறவு’ கிடைத்தால் எடுத்து வையுங்கள்’ என்று சொல்லியிருந்தேன். டி.எஸ்.பாலையாவின்  ரசிகன் நான்.  ‘தில்லானா மோகனாம்பாள்’ சினிமாவில் சிவாஜி முறைக்கும் போதெல்லாம் ‘டக்’கென்று அவர் தலையைத் தொங்கப்போட்டுக் கொள்ளுவதை நினைத்துக் கொள்ளுங்கள். சிரிக்காமல் இருந்து விடுவீர்களா? ‘ஊட்டி வரை உறவு’ படத்திலும் மனுசன் விலாநோகச் சிரிக்க வைத்திருப்பார். தன் மகள்தான் கே.ஆர்.விஜயா என்று சொல்ல இயலாமல் அவர் தவிக்கும் தவிப்பு – அந்த நடுங்கும் குரலில் – பிரமாதமாக இருக்கும். அம்மாவின் ஸ்டைலான டான்ஸ் வேறு இருக்கே அதில். (ப்ரியாமணி அல்லது ஸ்வேதா மேனனைச் சொன்னால் ‘எடு வெளக்கமாற’ என்பாள் அஸ்மா. எனவே விஜயாம்மா. ரொம்ப சேஃப். அம்மா யாரு, அம்ம்ம்மா!)

தேடினேன் வந்தது..

‘உங்க ஆள் நடிச்ச படம் வந்துடிச்சி’ என்று சொன்னாரே நண்பர் என்று நேற்றிரவு வாங்கப் போனால் இது! கண்ணதாசன் தயாரித்து கதாநாயகனாக சந்திரபாபு நடித்த – ‘கவலையில்லாத மனிதன்’. படம் தயாரித்ததே பெரிய கவலையாகப் போய்விட்டது என்பாராம் கண்ணதாசன். விசுவநாதன் – ராமமூர்த்தி இசையில், ‘பிறக்கும்போதும் அழுகின்றாய்’, ‘காட்டில் மரம் உறங்கும்’, ‘சிரிக்கச் சொன்னால் சிரிப்பேன்’ போன்ற திகட்டாத பாடல்களைக் கொண்ட இந்தப் படத்தில் டி.எஸ். பாலையா இருக்கிறார்தான். ஆனால் யார் தன்னுடன் சேர்ந்து நடித்தாலும் அவர்களை ஓரம்கட்டிவிடும் ‘ஹராத்து’ ராதாவும் (பலேபாண்டியாவின் ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ பாட்டு ஒரு உதாரணம். ‘நடிகர்திலகம்’ மவுத்! யாராச்சும் யூ-டியூப் சுட்டியைக் கொடுங்கப்பா) இருந்தார்.  நான் மோகன்லாலை வியந்தால் லாலேட்டன் , ராதாவையல்லவா வியக்கிறார்! சரி, ‘கவலையில்லாத மனிதன்’ஐ எப்போதோ நான் பார்த்த ஞாபகம். அதை திரும்ப இப்போது பார்த்தபோதுதான் எம்.ஆர்.ராதாவின் படிப்பை கவனிக்க முடிந்தது.

எம்.ஆர். ராதா

நிறையதான் படித்திருக்கிறார் நம் எம்.ஆர்.ராதா.

பாக்ஸிங் பயிற்சி செய்துகொண்டிருக்கும் அண்ணன் ராதாவிடம் பட்டதாரி தம்பி சந்திரபாபுவின் அட்வைஸ் இது : ‘முதல்லெ பணக்காரனா ஆவனும்டு சொன்னே, அப்புறம் அறிவாளியாவனும்டு சொன்னே, அப்புறம் இப்ப ‘பாக்ஸர்’ ஆவனும்ங்குறே… எதுதான் உனது லட்சியம்? தனக்கா வாழாம பிறத்தியாருக்காக வாழனுமண்ணே’

‘போடா! லட்சியத்தைப் பத்தி பேசுறான். சீசனுக்கு தகுந்தபடிதாண்டா இப்ப லட்சியம். இப்ப (பாக்ஸிங்லெ)தாண்டா சீசன். இதுலெ கலைஞன் நான். பாக்ஸர் கலைஞன்!’ என்று சொல்லியபடி ராதா சந்திரபாபுவை குத்தும்போது அப்பா பாலையா ‘அடேய்.. அடேய்..’ என்று ஓடிவந்து , ‘ஏண்டா அவனை அடிக்கிறே’ என்று கேட்கிறார். எகத்தாளமாக பதில் சொல்கிறார் ராதா : ‘ஒண்ணுமில்லே ஃபாதர். என்ன நெனைச்சிக்கிட்டான் நம்மளை? நான் ஒருநாளைக்கு ஆயிரம் கொள்கையை க்ரியேட் பண்ணுறேன். இவன் வந்து என்கிட்டேயே கொள்கை பேசுறான். டேய்…’

‘ஏண்டா அவன்ட்டெ போயி கொள்கையைப்பத்தி பேசுறே?’ . சந்திரபாபுவிடம் பாலையா கடிந்துகொள்கிறார்.

‘நான் என்னப்பா சொன்னேன்? தனக்காக வாழக்கூடாது; பிறத்தியாருக்காக வாழனும். அதுலெதான் சந்தோஷம் இருக்கு’ண்டுதானே சொன்னேன்’

‘இத சொன்னியா? அது ஒண்ணு போதுமே. கர்மம்!. டேய்.. கொள்கையைப் பத்தி நான் சொல்றேண்டா’

சந்திரபாபு அவர் தோளில் நட்போடு கைபோடுகிறார்!

‘டேய்.. எடுறா கையை, எடுறா கையை! பிறத்தியாருக்காக வாழக்கூடியவனுக்கு தனக்குண்டு ஒரு வயிறு இருக்கப்படாதுடா’

ராதா (அப்பாவுக்கு ஒரு செல்லக் குத்து விட்டபடி) : ‘கரெக்ட் ஃபாதர்! கரெக்ட். நல்லா சொல்றே! ‘நம்ம ட்ராக்குக்குத்தான் வர்றே…’

‘டே அப்பா.. உன் கொள்கைக்கு நான் வரவா? என்னா ஆகும்டு தெரியிமுல்லெ? மண்சட்டியத்தாண்டா தூக்கனும், மண்சட்டிய. டேய் பசங்களா… கொள்கையைப்பத்தி எங்கிட்டே கேளுங்க. எப்படியாவது பணத்தை சம்பாத்தியம் பண்ணனும். அத அப்டியே , அப்டியே பெட்டிக்குள்ள வச்சி பூட்டனும். அதுதாண்டா கொள்கை. தெரிஞ்சிக்குங்க. ‘

‘பாடுபட்டுத் தேடி பணத்தைப் புதைத்து வைத்த கேடுகெட்ட மானிடனே கேள்..’ – அப்பாவைச் சுட்டியபடி சந்திரபாபுவின் சித்தர்பாணி பாட்டு வருகிறது.

‘நிறுத்துடா! என்னடா பாட்டுல பதில் சொல்றே? டே.. உங்களைச் சொல்லி குத்தமில்லேடா… நான் உங்கள படிக்க வச்சேன் பாரு.. அது என் மேலே முட்டாள்தனம். பெரீ…ய வக்கீல்வேலைக்கு படிச்சவரு. இவரு( ராதாவை சுட்டிக்காட்டி)..’ என்று பாலையா இழுக்கும்போது ராதா பெருமையாக தன்னைச் சொல்லிக் கொள்கிறார் தான் ஒரு ‘F.C.F’ என்று.

F.C.Fஆ? பார்த்துக்கொண்டிருந்த நான் சந்திரபாபுவோடு சேர்ந்து முழிக்கும்போதுதான் ராதாவிடமிருந்து ‘டக்’கென்று விடை வந்தது:

‘ஆமா.. Fourth Class Fail….’

அட! எனக்கு எங்க ஊர் தர்ஹாலைன் கடைக்காரர் ஹாஜித்தம்பிதான் நினைவிற்கு வந்தார். அவர்தான் ‘ஹாஜித்தம்பி (L.F.S)’ என்று விசிட்டிங் கார்டில் எல்லாம் போட்டிருப்பார். இப்போது குழம்பியபோது போலவே அப்போதும் குழம்பினேன். (எப்போதும் குழம்புவேன், அது வேறு). என்னபடிப்பு அது கேட்கவும் தயக்கம். இதுகூட தெரியவில்லையா என்று யாராவது கேட்டால் இருக்கும் கொஞ்சநஞ்ச மானமும் என்னாகிறது?

இப்போது விசாரித்தபோதுதான் தெரிந்தது. 

Lucky Fancy Store -ன் சுருக்கமாம் அது!

**

சுட்டி : எம்.ஆர்.  ராதா – விக்கிபீடியா