Moko Kahan – Sherdil: The Pilibhit Saga

Singer – Soumya Murshidabadi, Lyrics – Saint Kabir
Thanks : T-Series & SenShe

கொரிய ராஜதந்திரம் – சென்ஷி

jesters-senshe-fb1

Jesters: The Game Changers – கொரியன் – 2019

தனது போட்டியாக வாய்ப்பு உள்ள உறவினர்கள் அனைவரையும் கொன்று ஆட்சிக்கட்டிலில் அமரும் அரசன்மீது அந்நாட்டு மக்கள் வெறுப்புடன் இருக்கிறார்கள். அவன் கொலை செய்த காவியத்தை வேறு புத்தகமாக வெளியிட்டதால் அந்த புத்தகத்தை அரசு தடை செய்கிறது. ஆனாலும் ஆங்காங்கு ஒளித்து வைத்து வாசித்தும் நாடகமாய் நடத்தியும் மக்களிடையே பிரபலப்படுத்துகிறார்கள்.

நடப்பு அரசன் இழந்த பெயரை மீட்டு அவனை தேவதூதனாகக் காட்ட அவனது மந்திரிசபையினர் நாட்டுமக்களிடையே இல்லாத கதைகளை உண்மையென்று சொல்லி ஊர் முழுக்க பரப்பி வாழும் ஒரு கும்பலை தேர்ந்தெடுக்கிறது. அவர்களும் அவர்களது திறமைகளை எல்லாம் வெளிக்காட்டி கடவுள் தேர்ந்தெடுத்த அரசனாகவும், அவன் செல்லும் வழியெல்லாம் அற்புதங்கள் நிகழ்வதாகவும் கதைகளைக் கட்டி விட்டு அதை மக்களை நேரில் காணவைத்து நம்பவும் வைக்கின்றனர். ஆனால் இவர்களது செயல்களினால், மக்களின் வாழிடம் பாதிப்படைய இவர்களது உயிர்களுக்கும் ஆபத்து உண்டாகிறது.

அந்த ஆபத்திலிருந்து தப்பித்தார்களா? கொடுங்கோல் அரசன் மற்றும் அவனது மந்திரிகளின் நிலை என்ன என்பதையெல்லாம் நகைச்சுவையாய் சொல்லிச் செல்லும் திரைப்படம்.

கண்கட்டி வித்தை போல காண்பதையெல்லாம் நிஜமென்று நம்பவைத்து அதற்கு பின்னான விளையாட்டுகளை மிக சுவாரசியமாக காட்டியிருப்பதில் ஜெயித்துள்ளனர். குறிப்பாய் முடிவுக்காட்சியில் தடைசெய்யப்பட்ட புத்தகக்கதையை உயிரோட்டமாக அனைவர் முன்னிலும் நடத்தும் நாடகம் அபாரம்.

நகைச்சுவை திரைப்படமென்றாலும், நம் நாட்டில் தற்சமயம் நடக்கும் மீடியா வெளிச்சங்களை இதனுடன் ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்ள முடியும். மக்களின் நிராசைகளை விருப்பங்களை ஏக்கங்களை விளம்பரங்களின் மூலமாக மாத்திரம் வென்று ஆட்சியமைத்து தொடரமுடியுமென்பதற்கு நல்லதொரு உதாரணம்.

விடுபட்ட முக்கிய விசயமொன்று: படம் நகைச்சுவைக்காக பெரிதுபடுத்தப்பட்ட சம்பவங்களால் பின்னப்பட்டதென்று தோன்றலாம். ஆனால், உண்மையில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் இது. அரசனைப்பற்றிய கட்டுக்கதைகளை‌ ஊருக்குள்‌‌உலவவிட்டு தெய்வாம்சம்‌ பொருந்தியவனாய் மாற்றியிருக்கிறார்கள் போல. இறுதிக்காட்சியில் கொரியாவில் Joseon வம்ச அரசன் King Sejoவிற்கு புத்தர் தரிசனம்(!!) தந்த இடத்தில் போதி சத்துவாவுக்கு வைக்கப்பட்ட சிலை, எதிரிகளிடமிருந்து அரசனைக் காப்பாற்றிய பூனைகளுக்கு சிலைகள் என்று அனைத்து அதிசயங்களையும் இன்னமும் கொரியாவில் பத்திரமாய் கல்வெட்டுக்களாய் வைத்துள்ளனர் என்று கடைசி காட்சிகளில் காட்டுகிறார்கள்.

*

senshe-fb

நன்றி : சென்ஷி

வாங்கு (மலையாளத் திரையோரம் – 2)

தம்பி ஆசிப் மீரான் எழுதிய அருமையான விமர்சனம் – நன்றியுடன்…

***

“ஆயிரக்கணக்கான நபிமார்களை உலகிற்கு அனுப்பியிருந்தும் ஏன் ஒரே ஒரு நபி கூட பெண்ணாக இல்லை?” என்ற கேள்வியைக் கவிதையில் கேட்டு விட்டு தக்கலை ஹெச்.ஜி.ரசூல் பட்டபாடு நாமறிந்தது.

இவ்வளவு இறுக்கமான மதவாதிகள் நிறைந்திருக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் ஒரு பெண் பாங்கு ( தொழுகைக்கான அழைப்பு) சொல்ல ஆசைப்பட்டால் என்னாகும்?

அதையும் திரைப்படமாக்கிப் பார்க்கும் ஆசை வந்தால் அதுவும் மாற்று மதம் சார்ந்த ஒரு‌பெண் அந்தப் படத்தை இயக்கியிருந்தால் என்னாகியிருக்கும் இங்கு?

ஆனால் கேரள தேசத்தில் அது நிகழும். இத்தனைக்கும் வடகேரளத்தின் பெரும்பகுதி இசுலாமியர்கள் நிறைந்த பகுதி. இசுலாமிய இயக்கங்களும் கட்சிகளும் வலுவாக இயங்கும் ஒரு மாநிலத்தில் இது நிகழ்வதிலிருந்து ஒன்று தெளிவாகிறது.

ஒன்று இசுலாமிய இயக்கங்கள் திரைப்பட உருவாக்கங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து அறிந்திருந்தாலும் அதிகம் கவலைப் படுவதில்லை

அல்லது

இப்படி எடுக்கப்படும் திரைப்படங்கள் குறித்து அவர்களுக்கு அக்கறையேயில்லை

அநேகமாக முதலாவதுதான் சரியாக இருக்கக் கூடும். சமீபத்திய உதாரணம் ‘ஹலால் லவ் ஸ்டோரி’ அதற்கு முன்பே ‘அலிஃப்’ உள்ளிட்ட திரைப்படங்கள் வந்திருக்கின்றன. 3% வாக்குகள் வைத்துக்கொண்டு முந்நூறு பிரிவாக இயங்கும் நம்மூர் ‘முல்லா’க்களுக்கு ஒட்டு மொத்தமாகவே திரைப்படமென்பது ‘ஹராம்’ என்பதால்நாம் மல்லு தேசத்தைத்தான் நம்ப வேண்டியிருக்கிறது. அப்படித்தான் நான் நம்புகிறேன்.

கல்லூரியில் படிக்கும் ரஸியாவுக்கு பள்ளிவாசலில் தொழுகைக்கான அழைப்பான பாங்கொலியைக் கேட்டு அதைப் போலவே தனக்கும் பாங்கு சொல்லத் தோன்றும் ஆசையைத் தன்‌ தோழிகளிடம் வெளிப்படுத்தும் வரை வாழ்க்கை இயல்பாகவே இருக்கிறது.

கல்லூரிப் பேராசிரியை மாணவிகளைப் பார்த்து “கல்லூரி‌ முடியும் முன்னர் உங்களுக்கென தனிப்பட்ட ஏதேனும் ஆசைகள் இருந்தால் நிறைவேற்றிக் கொள்ளுங்கள். கல்லூரியை விட்டு வெளியேறி விட்டால் வாழ்க்கையில் அவற்றை நிறைவேற்ற இயலாமல் போகலாம்” என்று சொல்வதன் அடிப்படையில் மற்ற மூன்று தோழிகளும் தங்களது ஆசைகளை நிறைவேற்ற எண்ணுகையில் ரஸியாவின் ஆசை மட்டும் பாங்கு சொல்ல வேண்டும் என்பதாக இருக்கிறது.

அதைச் சொன்னதுமே உடனிருக்கும் இசுலாமியத் தோழி பதற்றமடைந்து, ” உனக்கென்ன பைத்தியமா? இது தீவிளையாட்டு” என்கிறாள்.

ஆனால் ரஸியாவின் இந்த இரகசிய ஆசையை ஃபேஸ்புக்கில் மற்றொரு தோழி வெளிப்படுத்தி விட வீட்டில், கல்லூரியில் மட்டும் என்றில்லாமல் போகிற இடங்களில் எல்லாம் இம்சை தொடங்குகிறது ரஸியாவுக்கு. வாழ்க்கை நரகமாகி விடுகிறது அவர் குடும்பத்தினருக்கும்.

“பெண்ணை ஒழுங்காக வளர்க்கத் தெரியாதா?” என்று நாத்தனார் குத்திக் காட்டுவது, உறவுகள் புடை சூழ பெண்ணுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதாகச் சொல்வது, ஜமா அத்தார் ஒன்று கூடி ரஸியாவின் தந்தையை எச்சரித்து பள்ளிவாசல் கட்டுவதற்கான ஒப்பந்தத்தையும் ரத்து செய்வது, ‘பேய் பிடித்திருக்கலாம்’ என்று முஸலியாரிடம் ‘ஆயத்துல் குர்ஸி’ ஓதி ஊதிய நீரை வாங்கிக் குடிக்க வைப்பது என்று ஒட்டுமொத்தமாக மாறி விடுகிறது ரஸியாவின் அன்றாட வாழ்க்கை. “ஜேஎன்யூ”வில் படிப்பைத் தொடர நினைக்கும் நல்ல படிப்பாளியுமான ரஸியாவுக்கு எல்லா இடங்களிலிருந்து ம் ஏற்படுத்தப்படும் அழுத்தம் தாங்கவொணாததாகி விடுகிறது. ரஸியாவின் கனவுகளுக்கு எப்போதும் துணையிருக்கும் ரஸியாவின் தாயாருக்கும் ஏன் குடும்பத்தினருக்குமே கூட..

ரஸியாவால் பாங்கு சொல்ல முடிந்ததா என்பதுதான் படத்தின் முடிவு.

“மதத்தைத் தொட்டு விளையாடாதே” என்று ரஸியாவுக்கு விடப்படும் எச்சரிக்கையைத்தான் இன்று எல்லா மதத் தீவிரவாதிகளும் நம்பிக்கையாளர்களுக்கும் சேர்த்தே விடுகிறார்கள்.

பல்லியை அடித்துக் கொல்ல முனையும் தம்பியைத் தடுக்கும் அக்காவிடம் “பல்லியைக் கொன்றால் நன்மை கிடைக்கும்” என்று ‘உஸ்தாத்’ கூறியதாகச் சொல்கிறான் தம்பி

“ஓர் உயிரைக் கொன்று மனிதர்கள் நன்மையைப் பெறுவதற்காக எதையாவது இறைவன் படைப்பானா?” என்கிறாள் அக்கா”உஸ்தாதுகளுக்குத் தெரியாத விசயமா உனக்குத் தெரியும்?” என்று மகளை அடக்கி வைத்து விட்டு “பல்லி குறைஷிகளிடம் நபிகளாரைக் காட்டிக் கொடுத்ததால் அதைக் கொன்றால் புண்ணியமென்றும் ஆனால் சிலந்தி நபிகளாரைக் காப்பாற்றியதால் அதைக் கொல்லக் கூடாதென்றும்” பாடம் நடத்துகிறார் வாப்பா.

“அப்படியென்றால் வீட்டில் ஒட்டடை அடிக்காமல் சிலந்திப்பண்ணை வைக்கலாமா வாப்பா?” என்றொரு வசனம் வைத்திருந்திருக்கலாம். (ஆபிதீன்‌ அண்ணன் வசனகர்த்தாவாக இருந்திருந்தால் நிச்சயம் நடந்திருக்கும்)

நபிகளாரைக் காப்பாற்றியது இறைவன்தானே தவிர சிலந்தியோ பிறவோ இல்லை என்பதை நம்புவதை விடவும் ‘உஸ்தாத்கள்’ உருவாக்கிச் சொல்லும் மிகைப்படுத்தப்பட்ட கதைகளை நம்புவதையே இச்சமூகம் விரும்புகிறது என்பதே சோகம் 🙁

‘லீலா’ என்ற படத்தின் கதை திரைக்கதை எழுதிய அதே உன்னியின் கதையை அடிப்படையாக வைத்தே இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘கேரளா கஃபே” ‘சார்லி’ திரைப்படங்களின் கதை வசனகர்த்தா என்றால் ‘சட்’டென்று புரியலாம். “ஒழிவு திவஸத்தெ களி”யும் இவரது சிறுகதைதான் என்பது இன்னொரு கூடுதல் தகவல். திருவனந்தபுரத்தில் பாளையம் பள்ளிவாசலருகில் வாழ்ந்த காலத்தில் அவர் எழுதிய இந்தச் சிறுகதை 25 ஆண்டுகளுக்குப் பின் பொன்னானி என்கிற இசுலாமியர்கள் அதிகம் வாழும் பகுதியின் பின்னணியில் திரைக்கதையாகியிருக்கிறது.

நாயகியின் தாயாகவும் வேடமேற்றிருக்கும் ஷப்னா முஹம்மதுதான் படத்தின் திரைக்கதையாசிரியருமே கூட. அறிமுகம் என்பதால் படத்தில் பெண்ணியத்தைப் பேசுவதா நம்பிக்கைகளின் அடிப்படையில் நழுவுவதா என்ற குழப்பத்தோடேயே காட்சிகளை உருவாக்கியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. நாயகியின் குழப்பங்களுக்கு திரைக்கதையும் காரணமாக இருக்கலாம் என்பது சறுக்கல்தான். ஆனால் முழுதுமாக ஒரு நம்பிக்கையைச் சிதைக்கும் விதத்தில் பெண்ணியம் பேசும் சூழலை மட்டுமே வைத்துப் படமெடுத்து விட முடியாது என்ற யதார்த்தத்திற்கான சமாதானமாகவும் அதனை வைத்துக் கொள்ளலாம்

படத்தின் இயக்குநரும் ஒரு பெண்தான். இந்த இசுலாமியப் பின்னணி கொண்ட திரைப்படத்தை இயக்கியவர் காவ்யா பிரகாஷ் என்பதும் அவரும் அறிமுக இயக்குநர்தான் என்பதும் இன்னொரு சுவாரஸ்யமான செய்தி. முதல் படத்திலேயே துணிச்சலான ஒரு கதையைச் சொல்ல முயன்றதற்காகப் பாராட்டலாம்.

அனஸ்வரா ராஜன் அழகாக இருக்கிறார் 🙂 அழகாகச் சிரிக்கிறார். சில நேரங்களில் யாருக்கு வந்த விதியோ என்றிருந்தாலும் பாத்திரத்தின் கனத்தைத் தாங்கிக் காப்பாற்றி விடுகிறார். வினீத் வழக்கம்போல சிறப்பாகத் தன் வேலையைச் செய்திருக்கிறார். “சுடானி ஃப்ரம் நைஜீரியா” புகழ் சரசா பாலுஸ்ஸேரியை இசுலாமியக் கதாபாத்திரங்களுக்கு நேர்ந்து விட்டு விட்டார்கள் போலிருக்கிறது. நாயகியின் பாட்டியாக சில காட்சிகளே எனினும் அசத்தியிருக்கிறார்.

வீட்டிற்கு மருமகளும் பேத்தியும் புர்கா அணிந்து வரும் காட்சியைக் கண்டு விட்டு ” இதெந்து கோலம்?” என்று கேட்கும்போது அவரது உடல் மொழி அபாரம். ‘தட்டம்’ அணிந்த இசுலாமியப் பெண்கள் ‘புர்கா’வுக்குள் மாறிப்போனதை இந்தக் காட்சியின் மூலமாக உணர்த்த முனைந்திருக்கிறார்கள்.

அர்ஜுன் ரவியின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. காட்சிகளுக்குத் தேவையானதைத் தந்திருக்கிறார். பாடல்களில் கூடுதல் சிறப்புற இயங்கியிருக்கிறார். ஔசேப்பச்சன் நெடுநாட்களுக்குப் பின் இசை அமைத்திருக்கிறார். அவரது மேதமை முற்றாக வெளிப்படவில்லையெனினும் அவரது இசை ஓர் ஆறுதல்.

ஆனால் தேவையற்ற பாடல்களை வெட்டி நீக்கியிருந்தால் படத்தோடு இன்னும் நெருக்கமாக உணர்ந்திருக் கலாம்.

பி.எஸ். ரஃபீக்கின் வரிகளில்

“யாரோ நீ, நான்தானே நீநீயல்லவோ நான்மண்ணல்லவா நான்மழையும் அல்லவா நான்” என்ற பொருள் கொண்ட “மலயுடெ முகலில்” பாடல் ஈர்க்கிறது.

ஒரு வித்தியாசமான முயற்சி என்ற அளவில் தவிர்க்க முடியாத படமென்ற போதிலும் மத நம்பிக்கைகளுக்கெதிரான விசயங்களில் ஒரு கட்டத்திற்கு மேல் எதையாவது செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாதென்ற எச்சரிக்கை உணர்வோடேயே படம் உருவாக்கப்பட்டிருப்பதால் ஒரு முழுமையான படமாக இது உருவாகிவிடவில்லை என்பது ஒரு குறைதானென்றாலும்….

நல்ல படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு இந்தப் படத்தைப் பரிந்துரைக்கத் தயங்க மாட்டேன்

**

தொடர்புடைய பதிவு :

ஆசிப்மீரானின் ‘மலையாளத் திரையோரம்’ – வாழ்த்துரை

TENET – சென்ஷியின் சிறு விமர்சனம்

’படம் எப்படி?’ என்று தம்பி சிவா ஃபேஸ்புக்கில் கேட்டதற்கு ‘புரியலே, ஆனா நல்லா இருந்தது!’ என்று நேர்மையாக பதில் சொல்லியிருந்தேன். அமர்க்களம்.. அமர்க்களம்.. என்று சொல்லியபடி கைதட்டிக்கொண்டே தூங்கிக்கொண்டிருந்த சென்ஷியின் குறிப்பு பிடித்திருக்கிறது. பகிர்கிறேன். – AB

*

TENET – சென்ஷி

மிக எளிமையான நாயக மனப்பான்மை கதைதான். அதை நோலன் கொடுத்திருக்கும் விதம்தான் இன்செப்சனை விட அதிக சிக்கலானதாக மாற்றுகிறது. காரணம் கால பயணம் குறித்த பல திரைப்படங்களை ரசிகர்கள் விமர்சனம் என்ற பெயரில் கிழித்து தொங்கவிட்டிருப்பதால், நோலனின் காலபயணம் எப்படி இருக்குமோ என்ற ஆர்வம்தான் என்னை அவசியம் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் தள்ளியிருந்தது. (Interstellar-ல் புதிய கிரகத்தினை தேடி பயணப்படும் கதை என்பதில் கிடைத்த அதே ஆவல்) நோலன் காட்டியிருக்கும் திரைப்படம் ஒரு காட்சிப்பதிவில் அட்டகாச முன்முயற்சி. காலபயணத்தில் நம் கண்முன் இரண்டு(!) விதமான சாத்தியத்தையும் எடுத்திருப்பதும், முன்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் குழப்பங்களுக்கெல்லாம் கடைசி முப்பது நிமிடங்களில் பிரம்மாண்டமான சண்டைப்பதிவுடன் முடிவு சொல்லுவது அற்புதம்.

முக்காலே மூணுவீசம் இயற்பியல் கோட்பாடுகளும் அரைவீசம் கணிதச்சமன்பாடுகளும் மற்றும் காலபயண திரைப்படங்களின் ரசிகர்களிடையே படாதபாடுபடும் பாரடாக்ஸ் (முரண்பாட்டின்) சாத்தியத்தையும் வசனங்களாய்க்கொண்ட திரைப்படத்தில் இவற்றைக் காட்சிப்படுத்தலில் நோலன் எடுத்திருக்கும் முயற்சிதான் பிரமிப்பு. அவர்கள் பேசும் வசனங்களை புரிந்துகொள்ளும் முன்பே காட்சியின் பிரம்மாண்டத்தில் ரசிகர்களை சிக்க வைத்துவிடுவதால், முதன்முறை பார்த்துவிட்டு படம் புரிந்தது என்பவர்கள் பிஸ்தாக்கள்தான். எனக்கு சில இடங்களில் விடுபடல்களும் குழப்பங்களும் இருந்தன. முக்கியமாய் முதல் காட்சியில் வரும் தொடர்பு பின்னால் எங்கேனும் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். ஆனால் இறுதிக்காட்சிவரை சினிமாப்பிரியர்களை நோலன் ஏமாற்றவில்லை.

நிச்சயம் நான் இங்கு திரைப்படத்தின் கதையை எழுதவில்லை. அப்படியே எழுதினாலும், உலகை அழிக்கத் துடிக்கும் கெட்டவனிடமிருந்து உலகைக் காப்பாற்ற புறப்பட்டு(!) வரும் நாயகன் என்பதாக ஓரிரு வரியில் முடிந்துவிடும். ஆகவே எதையும் எதிர்பார்க்காது, நோலனின் கால யந்திர உலகத்தை காட்சிப்பதிவாக அனுபவித்து ரசிக்க எண்ணினால் திரைப்படத்தை தவறவிடாதீர்கள்.

அநேகமாக நமது இயக்குந கஜினிகள் யாரேனும் சில வருடங்கள் கழித்து இது தோல்வியடைந்த குழப்பமான கதை. நான் இதை மக்களுக்கு புரியும்படி எடுத்தேன் என்று உடான்ஸ் விடவும் சாத்தியம் அதிகம் உண்டு.

(திரைப்படத்தின் கதை அவசியம் தெரியவேண்டும் என்பவர்களுக்காக ஸ்பாய்லர் அலர்ட்களுடன் தனிப்பதிவு நட்பு வட்டத்தினருக்காக மாத்திரம் இடப்படும். இதில் எனது சந்தேகங்களும் இடம் பெறும் படம் பார்த்து தெளிவு பெற்றோர் விளக்கமளித்தால் தன்யனாவேன்!)
*


Thanks to : SenShe
https://www.facebook.com/me.senshe/posts/10220942135195691

Related Link :
TENET – Trailer
Thanks to : Warner Bros. Pictures
https://www.youtube.com/watch?v=AZGcmvrTX9M

« Older entries