நல்லபாம்பு கடிக்காத ஊர்!

படிப்பதற்கு முன்பே பயந்து கொள்ளுங்கள்; நாளை நண்பர் தாஜ்-ன் அதி கம்பீரப் ‘பாம்பு’ வெளி வருகிறது. அதுவும் , இரட்டைத் தலைப் பாம்பு! இன்று மாலை மெயிலில் அனுப்புவதாக பயமுறுத்தியிருக்கிறார். அட்டகாசமான அங்கதக் கதையாம். அங்கதம் என்றால் தூய நாகூர் தமிழில் ‘வெடை’ என்று அர்த்தம். இந்தப் பக்கத்தில்தான் பதியவேண்டுமாம். ஓகே தாஜ். எனக்கு பிரச்சனை வராமல் நீங்கள் எழுதினால் சரிதான். சரி, இப்போது என் பாம்பைப் பாருங்கள். அதாவது பாம்பு பற்றிய பதிவு!

நல்லபாம்பு கடிக்காத ஊரா?!

வேறு எந்த ஊர்? எங்கள் நாகூரேதான்! ‘மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்புற்று விளங்கும் திருத்தலமான இவ்வூரில் யாரையும் நல்லபாம்பு தீண்டியது கிடையாது’ என்கிறது ஸ்ரீ நாகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில் வெளியிட்ட ஸ்தல வரலாறு. நாகூர் புராணம். ஐயப்படும் இஸ்லாமியர்கள் அர்த்த ஜாம பூஜை கமிட்டி உறுப்பினர்களைத் தீண்டிப் பார்க்கலாம்!. அதற்கு முன் , நாகலிங்கேசர் துதியையும் சம்புபத்தன் என்னும் பிராமணன் முக்தி அடைந்த கதையையும் பார்க்கவும். ‘எப்போது பார்த்தாலும் அதென்ன அல்லா, அவுலியா  என்று பதிவு போடுகிறீர் ? ஊரில் மற்றவர்கள் இல்லையா என்ன?’ என்று என்னை மின்னஞ்சலில் கொத்தி மகிழ்ந்த சில நண்பர்களுக்காக பதிகிறேன். அழகு கொஞ்சும் சிவன்கோயிலின் ஸ்தல புராணம் தேடிக்கொடுத்த அன்பு ராஜேந்திரனுக்கு (வினோ டைலர்) நன்றிகள். பெரிய sizeல் பார்க்க புகைப்படத்தை சொடுக்குங்கள் என்று சொல்லனுமா தனியாக?


நாகலிங்கேசர் துதி

உலகில் வளர் சராசரப்பல் லுயிர்க ளாகி
உலகமுந்தா னாகிஅந்த உலகுண் டாக்கும்
மலரயனு மாகிஅதைப் புரக்கும் மாலாய்
மற்றதனை மாய்க்கும் அரன் வடிவுமாகி
நிலைமைபெறு விந்தியுமாய் நாதமாகி
நித்தபரி பூரணமுடமாகி நின்றோர்
நலமிகு புன்கைவன மாடும் நாகூர்
நாகேசர் பாதம் பணிவோம் நானும் தானே

முக்தி

சம்புபத்தன் என்னும் பிராமணன் தன் மனைவியுடனும் ஐந்து வயது மகனுடனும் காட்டில் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அச்சிறுவன் நண்பர்களுடன் காட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது பாம்புகளுக்கு அரசனா தக்கன் என்பவன் தன் மனைவியுடன் கூடி மகிழ்வதை அச்சிறுவன் கண்டுவிட்டானே அன்பதை உணர்ந்த நாக அரசன் தன்முன் வினைப்பயன் காரணமாக, சீறிப்பாய்ந்து அவனைக் கடிக்க, அப்பிள்ளை இறந்து போனான். நெடுநேரமாகியும் மகன் வரவில்லையே என்று தாய் கணவரிடம் கேட்க , உடன் சம்புபத்தன் காட்டில்தேடி ஓரிடத்தில் தன் மகன் பிணமாகக் கிடப்பதைக் கண்டான். அந்த அந்தணன் தன் ஞான திருஷ்டியினால் பாம்பு அரசனால்தான் தன் மகனுக்கு இப்பழி வந்தது என்பதை உணர்ந்து கோபமுற்று நாகராசனை சபிக்கலானான். நீ நாகர் உலகை விட்டு நீங்கி அறிவும் வலிமையும் நீங்கி தனிப்பட்டவனாய் இப்பூலோகத்தில் திரியக்கடவாய் என்று சாபமிட்டான். நாக அரசன் நடுநடுங்கி அந்தணன் காலில் வீழ்ந்து வணங்கி தான் செய்த தவறை உணர்ந்து தன் சாபம் நிறைவேறும் காலத்தைக் கேட்டான். அதற்கு அந்தணன், ஆயிரம் வருடங்கள் சென்ற பிறகு உன் தந்தை காசியபனை நீ காண்பாய் அப்போது சாபம் தீரும் என்றார். அதன்படி நாகராஜா தன் தந்தையைக் கண்டு வணங்கி தன் சாபம் தீர மகாசிவராத்திரி நாளில் முதற்காலம் கும்பகோணம் வில்லவனத்திலும், இரண்டாம் காலம் திருநாகேஷ்வரம் சண்பகாரணியத்திலும் மூன்றாம்காலம் திருபாம்புறம் வன்னி வனத்திலும், நான்காம் காலம் புன்னாக வனத்திலும் உங்கள் நாகநாத சுவாமிகளை சிறப்பு வழிபாடு நடத்தி வழிபட்டு தன் சாபவிமோசனம் நீங்கி நாகூர் ஸ்ரீ நாகநாதசுவாமியின் திருவடிகளைச் சேர்ந்து முக்தி அடைந்தார்.

*

அவ்வளவுதான். இருபக்கத்தாரும் இனி நல்ல பார்சல் BOMBபுகளுடன் என்னைத் தேடி வருக! ‘பயான்’ பெறுக!

சிவன் கோயில் தேரும் சின்னதாய் ஒரு வேனும்

தேரடி நேற்று அமர்க்களப்பட்டது. ஒருவாரத்திற்கு முன்பு , சென்னைக்கு உறவினர் கல்யாணத்துக்குப் போய்விட்டு நாகூர் திரும்பியபோது , பழக்க தோஷத்தில், ‘தேரடி ஸ்டாப்பிங்’ என்று கண்டக்டரிடம் சொன்னதற்கு ‘தேரே இல்லையே அங்கே..’ என்று கிண்டலடித்தான் அவன். தேர் இருந்தால் அதற்கு அடியில் பயணியைத் தள்ளிவிடும் பஸ் அப்படித்தான் கேட்கும். ‘பாலத்தடி’ என்று கேட்டவரை பாலத்துக்கு அடியில் புதைத்த ‘ஆடம்டம்பர’ ரதிமீனா பஸ் அல்லவா? ‘சீக்கிரம் வந்துடும்ப்பா ‘ என்று நம்பிக்கையோடு சொல்லி இறங்கி , அஸ்மா என்ற என் அழகுத் தேரில் உட்கார ஓடினேன் . ‘ஓடி’ நின்றிருந்த அந்தத் தேர் , தேடி என் மேல் ஏறி நசுக்கிற்று. என்ன சுகம்!

சொல்லப்போவது பாலத்தடி தேர்.

முந்தா நாள் தர்ஹாவின் பீரோட்டம் நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று கோயிலின் தேரோட்டம். புதிய தேர்.

பிறந்ததிலிருந்து இடிபாடுகளுடனும் சாக்கடையும் பன்றிக்கூட்டமும் சூழவுமாக பார்த்து வருகிற , அந்த அற்புதமான பிள்ளையார் கோயிலுக்கு பக்கத்தில் உள்ள , பழந்தேர் (பல்லவர் காலத்துத் தேராம்) பத்து நாட்களுக்கு முன்பு போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டதில் மனம் பதட்டமாகத்தான் இருந்தது.  ஒரு இஞ்ச் அகலமுள்ள மெயின் ரோடை ஓரடி அகலப்படுத்தவா அல்லது மறு கலவரத்தை மலர்ந்த முகத்துடன் ஏற்படுத்தவா? அதுவும் கந்தூரி நடக்கும் இந்த சமயத்திலா? போலீஸ்காரன் நின்றாலே சந்தேகம்தானே வருகிறது… பின் அந்தத் தேரின் அத்தனை அழகான சிலைகளும் (‘பலான சிலைகளைப் பார்ப்பதற்கென்றே பாண்டிச்சேரியிலிருந்து வருவார்கள் வெள்ளையர்கள்) கொஞ்சம் கொஞ்சமாய் திருடு போனதற்கு காரணம் யாராம்?

அப்படியெல்லாம் இல்லை. பல கோடி ரூபாய் பெறும் அந்தத் பெருந் தேருக்குப் பதிலாக வேறு ஒரு சிறிய தேர் – பத்து லட்ச ரூபாய் அரசு உதவியுடன் – செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியறிந்து அமைதியடைந்தேன். அதைவிட அமைதி, சந்தனக்கூடு இழுக்கும் அதே நாளன்று தேரோட்டம் நடக்காத செய்தியில் வந்தது. ‘பெரிய எஜமான்’  காப்பாற்றினார்கள். எத்தனை நாள் இப்படி காப்பாற்ற முடியும் என்பதுதான் தெரியவில்லை. அவுலியாவை விட ஆர்.எஸ்.எஸ்க்கு சக்தி அதிகமாயிற்றே…

அந்தத் தேரின் தேரோட்டம்தான் நேற்று நடந்தது. முன் இரவு முழுவதும் ஒலித்த மேளம், பறை ஓசையைக் கேட்டு ‘சாமிக்கு உரு ஏத்துறாஹா போலக்கிது ‘ என்று கேலி செய்தாள் அஸ்மா. பூதப்பார், விக்கிரகப்பார், சிந்துருதளம், பெரிய அங்கனம், தேவாசனம், சிம்மாசனம், யாளிக்கட்டை, சிங்கக்கட்டை, அஸ்தியாளி என்று கூகிள் அவுலியா தயவில் தகவலை அள்ளிவிட்டு அறிவாளி முகத்தை காண்பித்தேன். ‘நம்மளுக்கு கூடு மாதிரி அஹலுக்கு தேரு போலக்கிது’ என்று உல்டாவாகப் புரிந்து வைத்திருக்கிற அஸ்மா, ‘இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கம்மா’ என்று கேட்ட ஒரு கேள்வியில் என் மூஞ்சி ‘பே மச்சான்’ ஆனது.

‘தேரை செஞ்சிட்டு சக்கரத்தை உள்ளே உடுவாஹலா, இல்ல, சக்கரத்தை செஞ்சிட்டு தேரை உள்ளே உடுவாஹலா?’ என்பதுதான் அவள் கேள்வி!

இதையே நான் கூட்டுக்கும் கேட்கலாம், ஆனால் ‘கூட’ முடியாது! அஸ்மாவின் கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள், ஒற்றுமைக் கயிறு இழுப்பதை விட்டுவிடாமல் இங்கே பதில் சொல்லலாம். அதற்கு முன் , தேரோட்டம் சம்பந்தமாக தினமலர் இன்று வெளியிட்ட செய்தியை பார்த்து விடவும். தினமலர் தவறவிட்ட முக்கியமான தகவலையும்தான். அது கடைசியில் வருகிறது. (சுருள் கத்தி வீசியபடி ‘விளையாடும்’ பக்தர் கூட்டம் போட்ட ஒவ்வொரு பெரிய வெடிக்கும் வீடியோ கேமராவை நான் கீழே போட்டதைச் சொல்லவில்லை; அதைவிட முக்கியமானது).

***

நாகூர் நாகநாத சுவாமி கோயிலில் 56 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

நாகை அருகே நாகூரில் திருநாகவல்லி அம்பாள் சமேத நாகநாத சுவாமி கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் நாகநாத சுவாமி புன்னை மரத்தடியில் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றி மகா விஷ்னுவிற்கு  காட்சி கொடுத்ததாகவும், பிரம்மன், இந்திரன், சந்திரன், துர்வாசர், சப்த ரிஷிகள் மற்றும் சமுத்திர ராஜன் ஆகியோர் இக்கோயிலில் வழிபட்டதாகவும்  தலவரலாறு கூறுகிறது. மேலும் நாகூர் நாகநாத சுவாமியை நான்காம் கால பூஜையில் வழிபட்டு  நாகராஜன் சாப விமோசனம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இக்கோயிலின் மரத்தேர் சிதிலமடைந்ததால் கடந்த 56 ஆண்டுகளாக தேரோட்ட விழா நடக்காமல் இருந்தது. இதையடுத்து இக்கோயிலுக்கு  புதிய தேர் செய்ய அரசு 10 லட்ச ரூபாயை மானியமாக அளித்தது. தொடர்ந்து கோயிலுக்கு  புதுத்தேர்  செய்யப்பட்டு கடந்த வாரம் வெள்ளோட்ட விழா நடந்தது. இக்கோயிலின் பிரமோற்சவ விழா கடந்த 5-ஆம் தேதி தொடங்கி வரும் 21-ஆம் தேதி வரை நடக்கிறது. உற்சவ நாட்களில் சுவாமிக்கு காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து சர்வ அலங்காரத்தில் நாகநாத சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட புதிய தேரில் நாகநாத சுவாமி எழுந்தருளினார். பின்னர் தேர் வடம் பிடிக்கப்பட்டது.

இதில் கலெக்டர் ஜெயராமன், எஸ்.பி. விஜயன், அறநிலையத்துறை இணை ஆணையர் சுப்பிரமணியன், எம்.எல்.ஏ. மாரிமுத்து, நாகை நகராட்சித் தலைவர் சந்திர மோகன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜேந்திரன், ஆய்வாளர் சவுந்திரராஜன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். விழாவை ஒட்டி தினமலர் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

***

அவ்வளவுதான் செய்தி.

ஆனால் மனதைக் கொள்ளை கொண்ட தேரை விட அழகு அதற்குப் பின் வந்த சின்ன வேன்தான். அழகோ அழகு . அதற்கு ஏற்பாடு செய்தவர் ஜெய்னுலாபுதீன் என்ற சகோதரர் (பி.ஜே அல்ல). அவரை முழு விழா மரியாதையோடு கௌரவிக்க ஏற்பாடு செய்தவர் வினோ டைலர் ராஜேந்திரன். ஷாஹூல் ஹமீது பாதுஷா, மஞ்சக் கொல்லை ஷிப்லி பாவா என்றால் உருகி விடும் , எப்போதும் கைலி கட்டும் ராஜேந்திரன். இவர்களையும் சொல்லியிருக்க வேண்டும் தினமலர். ஆனால் பத்திரிக்கையின் பெயரை மாற்ற வேண்டியிருக்குமே.. எனவே போடவில்லை.

வேனில் ஒன்..றும் இல்லை. ICICI பேங்க் உதவியுடன் ஒரே ஒரு வினைல் போஸ்டர். ‘நாகநாத சுவாமி கோயில் தேரோட்டத்திற்கு வரும் பக்தர்களை வரவேற்கிறோம் – இவண்: மனித நேயம், மத நல்லிணக்கம் நாடும் முஸ்லிம் சகோதரர்கள்’

அவ்வளவுதான். தூக்கிவாரிப் போடுகிறது, இல்லை?

வாஞ்சூரில் இருக்கும் அவுலியா , நல்ல செயல்கள் நடக்க இந்த ஜெய்னுலாபுதீனையும் (பி.ஜே அல்ல) ராஜேந்திரனையும் ஏன் தேர்ந்தெடுத்திருக்கக் கூடாது? –   உள்ளுக்குள் ஒரு சந்தேகம். பெரிய எஜமான், காரணக்கடல் என்றழைக்கப்படுகிற பாதுஷா நாயகம் நாகூரில் அல்லவா இருக்கிறார்கள் என்று கேள்வி கேட்காதீர்கள். கவிஞர் ஜபருல்லாவுக்கல்லவா உண்மை தெரியும்? கந்தூரி சமயத்தில் , பக்தர்கள் சாபுமார்கள் தொல்லை தாங்காமல் 14 நாள் வாஞ்சூருக்கு ஓடி விடுவார்களாம் ‘எஜமான்’. இன்று கடைசி நாள். கொடி இறக்கம். நாளை வந்து விடுவார்கள், இன்ஷா அல்லாஹ்.

‘கொடி எறக்குற அன்னைக்கி மனாரா கொடியைப் பாத்தா பாவமா இக்கிம். அப்ப்டியே சோஹமா தொங்கும்.. ‘ என்பாள் அஸ்மா.

தொங்கினால் அஸ்மாவுக்கு பிடிக்காது.

இனி அவுலியா உதவி இல்லாமலேயே ஊர் உருப்பட்டு விடுமோ? என்ன ஒன்று , ‘நிறுத்து நிறுத்து…நல்லிணக்கம் நாடும் முஸ்லிம்-ஆ’ என்று வேன்-ஐ இந்த முறை செய்தது போல Full Check-up செய்யாமலிருக்க வேண்டும் முட்டாள் போலீஸ் கூட்டம். வடம் பிடிப்பவர்களுக்கு கொடுப்பதற்காக ரஸ்னா சர்பத்துதான் வேனுக்குள் வைத்திருந்தார் ஜெயினுலாபுதீன். ஒவ்வொரு போலீஸ்காரனும், காரியும் பத்து முறை குடித்து அது ரஸ்னாதான் என்று தெரிந்து கொண்டார்கள்.

‘வேன்’ஐப் பார்த்து மனம் நெகிழ்ந்ததை அஸ்மாவிடம் சொன்னேன்.

‘தேருக்கு முன்னால , தப்ஸ் அடிச்சிக்கிட்டு ‘பைத்து சபா’ வுட்டா இன்னும் அலஹா இக்கிம்’ என்கிறாள் அஸ்மா.

‘தப்ஸ்’ (பறை) வந்ததால் பைத்து வந்ததா , ‘பைத்து’ (பாமாலை) வந்ததால் தப்ஸ் வந்ததா?

***

தொடர்புடைய சுட்டி :

தேரின் வரலாறு – திருமலை கோளுந்து

***

பதிவிற்குப் பிறகு :

இன்று ‘வினோ டைலர்’ ராஜேந்திரன் என்னைக் கூப்பிட்டனுப்பினார், ஜெயினுலாபுதீன் வந்திருப்பதாக. சந்தித்தேன். ஐந்து பிள்ளைகளுள்ள பட்டதாரி S. ஜெயினுலாபுதீன் B.Com , சித்த வைத்தியரும் கூடவாம். ‘மாத்திரை’ என்று சொன்னால்தான் தன்னைப் பற்றி தெரியும் என்று சொன்னார். இலவசமாக மாத்திரை கொடுப்பதால் ஊர் வைத்த பெயர்!
‘வேற மாதிரில நெனச்சுக்குவாங்க..’ என்று இழுத்தேன்.
‘இல்லேண்டா ‘குப்பைத்தொட்டி’ண்டு வேற பெயர் இக்கிது நம்மளுக்கு. அத போடுங்களேன்’ என்றார் பெருமையாக.
‘என்னங்க இது?’
‘ஆமா.. ஊர்க்குப்பையிலாம் எடுத்து சரிசெய்றதுக்கு ஒரு அமைப்பு நம்ம ஊருல இக்கிது. அதோட தலைவரு நான்தான்’
அவராகத்தான் இருப்பார். ஆனால் நாகூருக்கு இவரைப் போல் ஆயிரம் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்.

மரம் நடுவதில் அவருக்கு இருக்கும் அக்கறை, இதில் அவரைப் பயன்படுத்தும் அதிகாரிகள், ஊர் பணக்காரர்களின் உண்மை சொரூபம் பற்றி தனிப் பதிவாக எழுத வேண்டும் பிறகு.

பதிவில் எழுத மறந்த அந்தப் போஸ்டரின் வேறு வாசகங்கள் (அப்துல் கலாம் புகைப்படத்துடன்) : மாசற்ற ஆன்மீகம், கலப்பற்ற தேசபக்தி, வளமும் வலிமையுமான பாரததேசம்!

– ஆபிதீன் , நாகூர் / 19thJune2008 –