அறியாதது அறிந்த அப்துல்லா இப்னு உமர் (ரலி)

செல்லமகன் நதீமுக்கு…

வாப்பாவும் மகனும் சேர்ந்து இதுபோல் வயலின் வாசிக்கலாம்; வாழ்வை புரட்டிப்போடும் ‘சஃபர்’ மட்டும் செய்யக்கூடாது! நாளை மறுநாள் வரப்போகும் உனது 17ஆம் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள். இஸ்லாத்தின் இரண்டாம் கலீஃபாவான உமர் (ரலி) அவர்களின் மதநல்லிணக்க வழிமுறை பற்றி சென்றமுறை உனக்குச் சொன்னேன். இந்தமுறை அவர்களின் அறிவார்ந்த மகனார் அப்துல்லா இப்னு உமர் (ரலி) பற்றி சொல்லப் போகிறேன். ‘The Good One, son of the Good One’. அவர்களைப் போல் பெருமானாரின் அடிச்சுவட்டை அட்சரம் பிசகாமல் பின்பற்றியவர்கள் யாரும் இருக்க முடியாது. அன்னை ஆயிஷா நாயகத்தின் கூற்று இது. அதுமட்டுமல்ல , அப்துல்லா இப்னு உமர் அவர்கள் மிகச்சிறந்த நீதிமான். எப்போதும் ஏழைகளுக்கு உதவியவர். கண்ணியத்தின் இருப்பிடம். அடக்கத்தின் உறைவிடம். பேரறிவாளராக இருந்தும் கொஞ்சமும் பெருமை கொள்ளாதவர். எனவே நாம் பின்பற்றவேண்டிய மகத்தான ஞானி. ஒரேயொரு சம்பவம் சொல்கிறேன். மதவெறி இல்லாது வாழ்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தன் நிறைகுறைகளை அறிந்து இறைவனின் நேசத்தைப் பெறுவது என்று எடுத்துக்காட்டும் சம்பவம்.

ஒரு சமயம் அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்களை ஒரு மனிதர் அணுகி ஏதோ ஒரு விஷயம் பற்றிக் கேட்டார். ‘நீங்கள் கேட்டதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே..’ என்று உண்மையைச் சொன்ன அப்துல்லா இப்னு உமர் (ரலி) , அந்த மனிதர் போன பிறகு சந்தோஷம் தாங்காமல் கைகளைத் தட்டிக்கொண்டு தனக்குள் சொல்லிக்கொண்டார்களாம் : ‘உமரின் மகனிடம் – அவனுக்குத் தெரியாத ஒரு விஷயம் பற்றி – கேட்கப்பட்டபோது அவன் தனக்குத் தெரியாது என்றே சொன்னான்!’

சமயம் கிடைக்கும்போது  (கண்டிப்பாக +2 பரீட்சை முடிந்தபிறகு!) இங்கே சென்று அவர்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்.

பிறந்த நாள் முத்தங்கள்.

ஆபி வாப்பா

மகனுக்கு ஒரு மாதாகோயில் கதை!

nademm161உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக இருந்த காலத்தில் ரோம், பாரசீகப் பேரசுகள் எல்லாம் இஸ்லாமிய ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. ஜெருசலத்திற்கு ஒருமுறை உமர்(ரலி) விஜயம் செய்தார்கள். கிறித்துவப் பாதிரிமார்கள் அவர்களுக்கு வரவேற்பு அளித்து புகழ்மிக்க சர்ச் ஆப் ரிசரக்சன் என்ற மாதாக் கோயிலைச் சுற்றிக் காட்டிக்கொண்டிருக்கும்போது தொழுகைக்கான பாங்கு ஒலி கேட்கிறது. “நீங்கள் உங்கள் தோழர்களுடன் இம்மாதாக் கோயிலுக்குள்ளேயே தொழுதுகொள்ளுங்களேன்’ என்று பாதிரிமார்கள் வேண்டினார்கள்.ஆனால் உமர் (ரலி) மறுத்து விட்டார்கள். தனது தோழர்களுடன் மாதாக் கோயிலின் வெளியே தொழுகையை நிறைவேற்றினார்கள்.

பாதிரிமார்கள் ‘உங்களைத்தான் மாதாக் கோயிலுக்குள்ளேயே தொழச் சொன்னோமே, ஏன் மறுத்தீர்கள்? என்று கேட்டபோது உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள் :’பிற்காலத்தில் இஸ்லாமியர் யாராவது இது எங்கள் கலீ·பா தொழுத இடம் என்று உரிமை கொண்டாடினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதனால்தான் பிற்காலத்தில் உங்களுக்கு எந்தப் பிரச்சையும் வரக்கூடாது என்பதற்காகத்தான் நான் மாதாக்கோயிலுக்குள் தொழ மறுத்தேன்’ – பேரா. எம். அப்துஸ் ஸமது அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து…

எப்பேர்ப்பட்ட ஜாக்கிரதை உணர்வும் புரிதலும்!

சமய நல்லிணக்கத்துக்கு சான்றான இந்த கதையை செல்லமகன் நதீமுக்கு இன்று இரவு சொல்ல வேண்டும். ‘மன்மதன்’ சிம்புவின் விசிறியான அவர் மல்லிகார்ஜூன் மன்ஸூரின் விசிறியான நான் சொல்வதைக் கேட்பாரா? கேட்கவேண்டும். நாளை அவருக்கு பிறந்த நாள் (20/2/2009) . பதினாறு நிறைகிறது. வழக்கம்போலவே ஏதோ ஒரு ‘தலக்கட்டு’ நாட்டில் இருந்துகொண்டு வாழ்த்த வேண்டியிருக்கிறது. நதீமை வாழ்த்த நினைக்கும் சகோதரர்கள் நன்றாக அவரை படிக்கச் சொல்லுங்கள் (சொல்லாமலேயே நன்றாக படிக்கும் ரகம்தான், தன் ‘லாத்தா’வைப் போல).

நதீம் , கண்டிப்பாக நீ ‘ஸஃபர்’ கதைகள் மட்டும் எழுதக்கூடாது…!

Newer entries »