அன்பு மகனார் தம்பிவாப்பாவுக்கு…

16.10.89 /JohoreBahru

அன்பு மகனார் தம்பிவாப்பாவுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளும் நிறைவான வாழ்வும் தந்தருளப் பிரார்த்திக்கும் தந்தையின் நல்லாசி. வாழ்க.

அவிடம் அனீகா முதல் எல்லோருடைய நலத்திற்கும் தேவைக்கும் எழுதவும்.

உமது 3-ஆம் தேதி கடிதம் கிடைத்தது. இங்கு வந்து திரும்புவது பற்றி கேட்டிருக்கிறீர். இங்கு தாம் வந்து திரும்புவது ஆதாயமாக அமையாது. ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை இழக்க நேரிடலாம். காரணம் அனீகாவிற்கு – ஆயிஷாவிற்கு பிறகு தம்பி – தங்கைமார்களுக்கு – உமது தாயாருக்கு – பிறகு உமக்கு – உமது மைத்துனர் சேத்தாப்பாவுக்கு – இப்படிப் பட்டியலிட்டு எல்லோருக்கும் சாமான் வாங்கி ஆக வேண்டும். இது தவிர்க்க முடியாதது. சிங்கை – மலேசிய சந்தைகளில் பார்க்கும் சாமான்களெல்லாம் உமது கண்களைக் கவர்வன. மலேசியாவில் குறிப்பாக பினாங்கு – கோலாலம்பூர் – ஜொகூர் – குவந்தான் பிறகு சிங்கப்பூர் இந்த இடங்களை எல்லாம் சுற்றிப்பார்க்காது தாயகம் திரும்புவதில் அர்த்தம் கிடையாது. மலேசியாவில் இரண்டுமாதமும் சிங்கையில் ஒரு மாதமும் சுற்றிப்பார்க்க தாராளமாக அனுமதி கிடைக்கும். ஆனால் எந்த இடத்திலும் வேலை செய்ய முடியாது – கூடாது. வேலை செய்பவருக்கு – வேலை கொடுப்பவருக்கும் பிரம்படி தண்டனை என்பது சிங்கை குடி நுழைவுத் துறையின் சட்டம். வரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு – கொடுக்கும் கால அளவிற்குள் – திரும்பிவிட வேண்டும். சிங்கையும் மலேசியாவும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் சக்திமிக்கவை என்பதில் சந்தேகம் இல்லை. இயற்கை அழகை ரசிக்க நினைப்பவர்களுக்கு நல்ல தீணி கிடைக்கவே செய்யும். சேமிப்பில் ஐந்து பத்து ரூபாயை இழக்கும் துணிவு இருப்பவர்கள் தாராளமாக வந்து திரும்பலாம். மற்றபடி லாபம் கிடைக்கும் என்ற நினைப்பையே விட்டுவிட வேண்டும். அங்கு கஸ்டம்ஸில் முன்ஏற்பாடு செய்து நடப்பவர்களின் நிலை வேறுமாதிரியானது. நமது சூழ்நிலைக்கு அது ஒத்துவராது. அப்படி ஏதும் சென்னையில் உமக்கு வாய்ப்பு இருப்பின் தெரியப்படுத்தும். மற்ற விபரங்களை பிறகு தெரிவிக்கிறேன். இங்கு வந்து திரும்புவதானால் அவிடம் டிக்கெட் எடுத்தது போக – அமெரிக்கன் டாலர் வாங்கியது போக – பதினைந்தாயிரம் ரூபாய் வரையில் அவிடம் நான் குறிப்பிடும் இடத்தில் கொடுக்க நேரிடும்.

அனீகாவுக்கு தரமான சாமான்கள் நான் அனுப்பியதாக குறிப்பிட்டிருந்தீர். சந்தோஷம். ஆனால் அவள் பிறந்தவேளை மூச்சுமுட்டும் அளவு சிரமத்தில் மூழ்கியிருந்தேன். 2 மாதங்களாகத்தான் சற்று தாரளமாக மூச்சு விட முடிகிறது. இது தொடர துஆ செய்யவும். ஆயிஷாவிற்கு என் சலாம் சொல்லவும். அடிக்கடி நம் வீட்டிற்கு அழைத்து வந்து அனுப்பி வைக்கவும். உம் தங்கைமார்களுடன் socialஆக பழகும்படி செய்யவும். நான் ஊரில் இருந்த சமயம் வந்த புதிதில் reserved டைப்பாக இருந்ததைப் பார்த்தேன். தற்போது கூச்சம் தெளிந்திருக்கும். சகஜமாக – கலகலப்பாக பழகும் என நம்புகிறேன்.

உமது பெரியமாமா ஜஸ்டிஸ் M.M.I அவர்கள் என்னை விசாரித்து சலாம் சொல்லியதாக குறிப்பிட்டிருந்தீர். சந்தோஷம். வரும்போது மரியாதைக்காக நானும் சென்று – கண்டு – பயணம் சொல்லிக்கொண்டுதான் வந்தேன்.

உமது தாயாருடைய 9-ஆம் தேதி கடிதம் இவிடம் 14ஆம் தேதி கிடைத்தது. நாளை மறுநாள் பதில் போடுவதாக சொல்லவும்.

ரி·பாய் பெயருக்கு 3 ஜட்டிகள் கொண்ட பார்சல் ஒன்று அனுப்பியிருக்கிறேன். உம் தாயாரிடம் தெரிவிக்கவும்

மற்றவை பின்பு

ஜே.எம்.ஹூசைன்

*

இன்று என் சீதேவி வாப்பாவின் நினைவு தினம். (13-4-1995ல் மவுத்தானார்கள். ஹார்ட் அட்டாக்). மனசு சரியில்லை. வேலை ஓடவில்லை. ஒரே வாப்பாவின் நினைவு. பொக்கிஷம் போல எப்போதும் வைத்துக்கொண்டிருக்கும் வாப்பாவின் கடிதத்தை (பெரும்பாலும் ‘டைப்’ செய்யப்பட்டதாக இருக்கும். ஆனால் இது அவர்கள் கைப்பட எழுதியது. நான் சவுதியிலிருந்து one-wayல் திரும்பியிருந்த சமயம் அது) பதியவேண்டுமென்று தோன்றியதால் பதிகிறேன். ‘நம்ம புள்ளைங்க நம்மள கவனிச்சுக்குமா?’ என்று நண்பர் இஸ்மாயிலிடம் முந்தாநாள் பேசிக்கொண்டிருந்தபோது கேட்டதற்கு , ‘நம்ம வாப்பாவ நாம கவனிச்சோமா? அதுமாதிரிதான்’ என்றார். ‘சொரக்’ என்றது. ‘என்னய்யா சொல்றே?’ ‘உண்மையைத்தான் சொல்றேன்’. நான் என் வாப்பாவுக்கு ஒன்றுமே செய்யவில்லை. இயலவில்லை என்பதுதான் உண்மை. ஆனாலும் தன் பிள்ளைகளுக்கு எந்த சிரமத்தையும் கடைசிவரை கொடுக்காத சீதேவி வாப்பா… என் வாப்பாவின் ஆரோக்கியம், சம்பாதிக்கும் திறமை, கலை ரசனை மற்றும் தமிழறிவு என்னிடம் இல்லாமல் இருக்கலாம். பிற மதத்தவர்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் , அவர்களை நம் சகோதர மக்களாகப் பார்க்க வேண்டும் என்று சொன்ன அவர்களின் எண்ணத்திற்கு , ஆசைக்கு மாறுசெய்யக்கூடாது, அதையே என் பிள்ளைகளுக்கும் கடத்தவேண்டும் என்ற எண்ணம் மட்டும் மேலோங்கி நிற்கிறது. இறைவன் உதவுவானாக, ஆமீன்.

குறிப்பு : மேலேயுள்ளது நான் வரைந்த வாப்பாவின் கோட்டோவியம். முதல் சிறுகதைத் தொகுப்பின் சமர்ப்பணத்திற்காக அவசரமாக கிறுக்கியது.