இக்பாலும் பாரதியும் – எச். எம்.பி.முஹிதீன்

டொமினிக் ஜீவா அவர்களின் ‘மல்லிகை’ பதினோராவது ஆண்டு மலரைப் பற்றி (Aug’1975) முகநூலில் நண்பர் வ.ந.கிரிதரன் குறிப்பிட்டிருந்தார். PDF-லிருந்து Google Docs மூலம் பிரித்து இந்தப் பகுதியை பகிர்கிறேன். நன்றி : நூலகம்

**

இக்பாலும் பாரதியும் – எச். எம்.பி.முஹிதீன்

இக்பாலும் பாரதியும் பாரத நாட்டின் இரண்டு கண்கள். இக்பால் வடகோடியின் கண், பாரதி தென்கோடியின் கண். |

இக்பால் கவிதைக்காகப் பிறந்தார். பாரதி கவிதையிலே பிறந்தவர். இக்பால் எழுச்சிக்கு வித்தூன்றியவர். பாரதி புரட்சிக்குப் புத்துயிர் அளித்தவர். இக்பால் ஆண்டவன் பெயரில் நாட்டின் அலங்கோலத்துக்கு மாற்றுக் கூறினார். பாரதி முருகக் கடவுளையும், கண்ண னையும், மாகாளியையும் மனிதனின் கோணல் மாணல் வாழ்வைத் திருத்த துணைகொண்டான்.

இக்பாலும் பாரதியும் பாரத நாட்டின் இரண்டு கோணங்க ளில் வாழ்ந்த கவிஞர் என்ற போதிலும், இருவரும் நாட்டின் நல்வாழ்வில் நாட்டம் கொண்ட வர்கள். விடுதலை வீராவேசத் தின் விடிவெள்ளிகளாகத் திகழ்ந் தவர்கள். தேசிய இயக்கத்தில் தளராது தொண்டு புரிந்தவர்கள்.

பாரதி தமிழ் மொழியின் தீபஸ்தம்பம். இக்பால் உர்து மொழியின் ஒளி விளக்கு. பாரதி இந்த வையத்தில், ‘மண்பயனுற வேண்டும். வானமிங்கு தோன்றிட வேண்டும்’ என்றான். இக்பால், ‘மானிலம் சுவர்க்கமாகத் திகழ’ கனவு கண்டான். உடல் இரண்டு, மொழியும் கூட இரண்டு. ஆனால், கருத்தில் அவர்கள் இருவருமே ஒன்றுணைந்திருந்தார்கள். லட்சியத்தில் பிணைப்புற்றிருந்தார்கள். மனிதனை வாழவைப்பதில் – அவ னுக்கு வழிகாட்டுவதில் ஒரே கொள்கை பூண்டிருந்தார்கள்.

பழமைதான் புதுமை என்று கற்பனாக் கவிஞர்கள் கதையளப்பதுண்டு. இக்பாலும் பாரதியும் பழமையில் புதுமையைக் கண்டவர்கள். பழமையை ஆராய்ச்சி சல்லடமிட்டு அலசினார்கள். சத்து மிஞ்சியது. அதற்கு புது மெருகு தந்தார்கள். புதுமை பூக்க பாதை செப்பனிட்டார்கள்.

‘இருளை நீக்கி ஒளியினைக் காட்ட’ முனைந்த பாரதி, ‘ஊரையெழுப்பிவிட நிச்சயங் கொள்ளத்’ தூண்டுகிறான். தொடர்ந்து. *சாத்திரம் வளருது. புதுமை பெருகுது, பழைய பயித்தியம் படீலென்று தெளியுது…’ என்று புதிய கோணங்கியாக வந்து குடுகுடுப்பை அடித்துப் பாடி, புதுமைக் கருத்துக்கு வழி வகுக்கிறான். பழைமையில் புதுமை செய்ய உலகத்தோரை அழைக்கும் பாரதி,

’காட்டும் வையப் பொருள்களின் உண்மை
கண்டு சாத்திரம் சேர்த்திடுவீரே!’
என்று அறை கூவுகிறான். பழமையின் புதுமை காண்கிறார் முஹம்மது இக்பால். அவரின் குரலோசை எழும்புகிறது.

‘கைஸ் லைலாவை காதலித்தான்
கொண்ட காதலால் மஜ்னூவானான்.
வழியே நெடியே ஒட்டகை வலத்தின் போது
வரம்பின்றி லைலாவின் அழகில் சொக்கினான்.
உலகத்து மக்களும் அப்படியே,
உலகத்துப் பொருள்கள் என்ற லைலா மேல்
சொக்கிப்போய் காதல் கொண்டுள்ளனர்.
ஆனால், அவள் ஏறி வரும் பழைய கருத்துக்கள்
என்ற ஒட்டகம்
இன்று கிழடாகி விட்டது – ஒளி இழந்து விட்டது
அகிலத்து மாந்தர்களுக்கு பழைய லைலா பொருத்தமற்றவள்,
அவர்களுக்கு புது லைலாக்கள் வேண்டும்
புதுக் கருத்துகள் வேண்டும்
புதுமை வேண்டும்’
என்ற இக்பாலின் புரட்சிக் குரலோசை’ நம் காதுகளில் எதிரொலித்து ரீங்காரம் செய்கிறது.

இன்று பல நாடுகளில் இன வெறி தலைவிரி கோலமாகப் பேயாட்டமாடுகிறது. இது இன்றைய சாபக்கேடு மட்டுமல்ல. உலகத்தின் எட்டுத் திக்கிலும் பல்வேறு கால கட்டங்களில் இதற்கு இடம் இருந்தே வந்துள்ளது. உற்பத்திச் சக்திகளின் சொந்தக்காரர்களுக்குரிய சமுதாயத்தில், காலனி ஆதிக்கத்தில் இது தவிர்க்க முடியாத ஒரு நமூனாவாக இன்று மாறி இருக்கிறது. இந்தியாவும் இதிலிருந்து விடுபடவில்லை. இன வெறி இந்தியாவில் இரத்தப் பெருக்குக்கு பல தடவைகளில் வழி அமைத்துள்ளது. அன்பும், அறமும், பண்பும், பரஸ்பர சமத்துவமும் விரும்பிய கவிஞர்கள் மனிதப் பலியிலும், இரத்த வெறியிலும் முடிவுற்ற இனவெறிகளை, ஜாதிப் பாகுபாட்டில் வேறுபாட்டில் விளைந்த குருதிக் கொடுமைகளை வேரறுக்கப் பாடினர்.

எத்தனை மொழிகள் பேசும் மக்கள் குலத்தவராக நாம் இருந்த போதிலும், பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களாக நாம் வாழ்ந்த போதிலும், நாம் எல்லாரும் ஓரினத்தவர் . ஒரே நாட்டமுடையவர் – ஓரே நாட்டவர் – நமது லட்சியத்தில் கூட வித்தியாசம் இருக்க முடியாது.

‘முப்பது கோடி முகமுடையாள் – உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் – இவள்
செப்பு மொழி பதினெட்டுடையாள் – எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்”
– என்று எங்கள் தாயி’ல் எடுத்துரைக்கிறார் பாரதி.

எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம்
எல்லோரும் இந்தியமக்கள்
எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர்,
– என்று உணர்ச்சிகளுக்கு நாதம் தந்து, தட்டி எழுப்பிய ஒற்றுமைக்கு வித்தூன்றுகிறார்.

பாரதிக்கு நிகராக கவி இக்பால், ‘மணியோசை’ என்ற உர்துக் கவிதையில் இனவெறியர்களுக்கு – நிறவெறியர்களுக்கு சாவுமணி அடிக்கிறார்.

‘நிற பேதம் பேசுபவன் அழிவான்,
அவன் நாடோடி துருக்கனாகவோ,
பரம்பரையாய் வாழும்
அராபியனாகவோ இருக்கலாம்
எனினும் அவன்
அழிவான்’

முஸ்லிம், ஹிந்து, கிருஸ்துவம் என்று பேதம் பாராமல், பாரத சமுதாயத்தைச் சேர்ந்த கோடானு கோடி மக்களுக்கு அறிவுரை நல்கும் இக்பால்,

’மனிதனே
சமுதாயம் என்ற சங்கிலித் தொடர்பில்
ஒரு மணியாக நீ சேர்,
அல்லது லட்சியமற்ற
புழுதியாகச் சுழல்’
– என்று கடுமையான வார்த்தைளில் வன்மையாக தனது கருத்தை வலியுறுத்துகிறார்.

உண்மைக் கவிஞன் உணர்ச்சி மிக்கவன். அவனது உள்ளம் பூவைப் போன்று மிகவும் மிருதுவானது. அந்த உள்ளத்து இதழ்களுக்கு மிகச் சிறிய பொருளை தாங்கிக் கொள்ளும் சக்திகூட
சில சமயம் இருப்பதில்லை .

இக்பாலும் பாரதியும் தாங்கள் வாழ்ந்த நாட்டைச் சுற்றி தங்களின் பார்வையை செலுத்தினார்கள். அதில் வாழ்கின்ற மக்கள் சமாஜத்தைக் கண்டார்கள். மக்களின் வறுமை நிலை, அவல நிலை, ஏழ்மை கூடிய கோரத்தன்மை அவர்களின் கண்களை உறுத்தியது. உள்ளத்தை உசுப்பியது. செத்து வாழ்ந்த தன் சகோதரப் பிராணிகளின் பரிதாப நிலை கவிஞர்களின் இதயத்தில் ஈட்டிகொண்டு தாக்கின. உணர்ச்சிகளை ஆட்டி அசைத்தன. மிருதுவான அந்த உள்ளங்களால் இந்தத் துன்பத்தினைத் தாங்க முடியுமா? ஆற்றாத உள்ளத் துயரம் அழுகையாக வெளிக் கிளம்பின. பொல பொலவென வெளிக் கிளம்பிய கண்ணீர்த் துளிகள் ஆவேசத்தைத் தூண்டின. கவிஞர்களின் கண்கள் தேடின. ‘யார் இந்த அபாக்கிய நிலையை உருவாக்கியவர்கள். இந்தக் கண்ணீர்த் துளிகளுக்கு பொறுப்புதாரிகள் யார், யார்?’ கவிதை பிறந்தது. ‘சுதந்திர தாகத்தில்’ பாரதி பாடினார்,

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்சம் அடைந்த பின் கை விடலாமா?
தாய் உந்தன் குழந்தையை தள்ளிடப்போமோ?

கடவுள் தான் இதற்குப் பொறுப்புதாரி. கடவுளைப் பார்த்து முரசொலிக்கிறான் பாரதி.

‘என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்

– என்று இறைஞ்சினான். கடவுளே எங்களின் அடிமைச் சங்கிலி, சூழ்ந்துள்ள கோடி இன்னல்கள் எப்பொழுது நீங்கும்? எங்களுக்கு வழிகாட்ட மாட்டாயா? என்று மன்றாடுகிறான்.

இக்பாலும் துன்பத்தின் காரண கர்த்தாவைத் துழாவினார். அவருக்கும்கூட ஆண்டவன் தான் அகப்பட்டான். உடனே, முறையீடான ‘ஷிக்வா’ வைப் பாடினார்.

‘ஆண்டவா
வாழ்வு பூராவும் உன்னை
வழிபட்டோமே
வணங்கினோமே
தொழுதோமே
கண்ணீரும் கம்பலையும்தான்
கண்ட பலனா?
வறுமையும் பிணியுந்தான்
அதற்குக் கைமாறா?”
என்று இக்பாலின் உள்ளக் குமுறல் குரல் கிளப்பியது. –

இந்த முறையீடுகளுக்கு உள்ளக் குமுறல்களுக்கு ஆண்டவனிடமிருந்து பதில் கிடைத்தது. ஆண்டவன் கூறினான், ‘என்னிடம் முறையிட்டு என்ன பயன்? நான் உனக்குத் தீங்கு விளைவிக்கவில்லை. உன் பக்கத்தில் உள்ளவன்தான் தீங்கு விளைக்கிறான். அதனை இனங் கண்டு வேரறு. அன்று, ‘ பொருளறம் பூண்ட பொற்புடை வாழ்வு மலரும்’ என்று ஆண்டவன் கூறினான். ’ஜவாபே ஷிக்வா’ (Jawab-e-Shikwa) வை ஆண்டவனின் வாயிலாக இக்பால் வெளியிட்டார்.
‘வாழ்வுப் போராட்டத்தில்
இன்பம் காண
வளமுற வேண்டின்
மழுங்கிய
உன் ஈட்டி முனையைக்
கூராக்கு’
என்று கூறி விட்டு, ‘பாங்கீதாரா’ என்ற பாட்டு மூலம்,
‘மானில மனிதனே – உன்
விதியை –
நீயே நிர்ணயித்துக் கொள்’
– என்று மனிதனுக்கு தன்னம்பிக்கை ஊட்டி, எழுச்சிக்கு அஸ்திவாரமிட்டு, தலை நிமிரச் செய்கிறார். தொடர்ந்து ‘எழுச்சி’ என்ற பாட்டின் மூலம் ஆண்டவன் வாயிலாக இக்பால்
தன்னம்பிக்கை பெற்ற மனிதனுக்கு தமது விதியை தாமே நிர்ணயிக்க எழுந்த மாந்தர் குலத்திற்கு, உழைக்கும் மக்களுக்கு. வறுமையில் வாடுவோருக்கு தைரியத்துடன் – உறுதி பூண்டு முன்னேற வழி காட்டுகிறார்.

‘சிம்மத்தின் இரத்தம்
சில சமயம்
பலவீனர் தேகத்திலும்
ஓடுவதுண்டு .
நீர்த்துளியிலும்
நெருப்பின் உணர்ச்சி
தோன்றுவதுண்டு.
நீங்கள் ஏழைகள்தான்
என்றாலும், கோழைகளல்ல
பட்டினிகள்தான்
என்றாலும் போராடும்
வலுவற்றவர்களல்ல
எழுந்திடுக!’ என்று உத்வேகமூட்டுகிறார்.

கவிக் கோமான் இக்பாலுடன் சேர்ந்த தமிழ்க்கவி பாரதி ‘கண்ணன்’ பாட்டில்,
‘ஏழைகளைத் தோழமை கொள்வான் – செல்வம்
ஏறியார் தமைக்கண்டு சீறி விழுவான்’
என்று தெய்வத்தின் சார்புக் கொள்கையைக் கூறி, ‘தெய்வம் உங்கள் பக்கம்தான் இருக்கிறது’ எனவே, மக்கள் குலத்தோரே அஞ்சாமல் முன்வருக,
‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில்
உண்டுகளித்திருப்போரை நிந்தனை செய்வோம்’
– என்று பாடி, ‘விழலுக்கு நீர்ப் பாய்ச்சா’திருக்க, ‘வீணருக்கு உழைத்துடலம் ஓயா’திருக்க தைரியம் உண்டாக்கி, தேட்டமின்றி விழியெதிர் காணும் தெய்வங்கள் நீவிர்’ என்று பெருமைக்குரிய ஸ்தானத்தை இனித்து ஆக்கும் சக்தியாகிய பிரம்மா நீங்கள், ‘பிரம்ம தேவன் கலையிங்கு நீவிர்’ எனவே உங்கள் விதியை நீங்களே நிர்ணயித்துக் கொள்ளுங்கள் என்று பாரதி மனிதனுக்கு நம்பிக்கை ஊட்டுகிறான், மனவளர்ச்சி தருகிறான்.

புரட்சிப் பெருங் குரலுயர்த்தி போர் முரசு கொட்டும் பாரதி,

‘இனி ஒரு விதி செய்வோம் – அதை
எந்த நாளும் காப்போம்
தனி யொருவனுக்கு உணவில்லையெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம்’
– என்று சங்கநாதம் செய்கிறான். ஒரு தனி மனிதனுக்கு உணவில்லையாயின் அவனுக்கு உணவளிக்கத் தகுதியற்ற, திராணியற்ற உலகம் அழிந்து தொலையட்டும் என்று பாரதி உலகக் கவிஞர் களுக்கு ஒப்பாகப் பாடுகிறான்,

குறள் தந்த வள்ளுவப் பெருமான்,
‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக இவ்வுலகியற்றி யான்’
என்று பாடினார். மாந்தர் குலம் கையேந்தித்தான் வாழ வேண்டுமென்று கடவுளின் விதி இருந்தால், அந்த விதியை சிருஷ்டித்த கடவுள் நமக்கு வேண்டாம் என்று புரட்சிகரமான முறையில் பெரு முழக்கம் செய்கிறார்.

பாரதி, திருவள்ளுவனுக்கு ஒப்பாக கவிஞர் இக்பால் பாடுகிறார்.

‘விழியுங்கள், உலகத்து
ஏழைகளை எழுப்புங்கள்
உழைக்கும் கைகளே
ஏன் தயக்கம்?
செல்வத்தின் சிகரமான
மாடமாளிகைகளையும்
கூடகோபுரங்களையும்
அசைத்து உலுக்கித் தரைமட்டமாக்குங்கள்
எந்த ஜீவன்கள்
நெற்கதிர்களை நெடிய
வளர்த்து நெல்மணிகள்
தந்தனவோ, அந்த
ஜீவன்களுக்கு அவை
கிட்டவில்லையாயின்
அந்த நெல் மணிகளைத்
தீயிலிட்டுப்
பொசுக்குங்கள்
சாம்பலாக்குங்கள்’

இக்பாலின் கவிதை நம் உள்ளத்தை மட்டுமல்ல, நம் உணர்ச்சிகளையும் தொட்டு, வீராவே சம் கொள்ளச் செய்கிறது.

இக்பாலுக்கும் பாரதிக்கும் புதுமைக் கருத்துக்களில் வேற்றுமைகளை விட ஒற்றுமைதான் அதிகம் காணப்படுகின்றன.

நம் காலத்து தலை சிறந்த கவிஞர்களான இக்பாலும் பாரதியும் ஆசிய எழுச்சியின், குறிப்பாக பாரத தேசிய இயக்கத்தின் முனை மழுங்காத ஈட்டி முனைகள். நரம்பும் நாளமும் துடிக்க நாதமெழுப்பிய அவர்களின் கவிதைகள் உலகுள்ள வரை வாழும், அமரத்துவம் பெற்று வாழும்.

வாழ்க இக்பால்!
வாழ்க பாரதி!


***
நன்றி : மல்லிகை, நூலகம்