‘உங்க பெயர் ?’
‘தாஜுதீன்!’
‘எந்த ஊர்?’
‘சீர்காழி.’
மெல்லிய சிரிப்போடு, ‘என்ன செய்றீங்க?’
‘சௌதிக்கு போக இருக்கிறேன்.’
கேட்டது கலைஞர். பதிலளித்தது நான்.
*
எமர்ஜென்சி காலக்கட்டத்தில் ஸ்டாலின் முதலாக திமுக தலைவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். கொடுமைகள் பலவும் அவர்களுக்கு அரங்கேறியது. திமுகவில் இருந்து ராஜினாமா செய்தாகணும் என்ற கண்டிப்பு வேறு! கலைஞர் குடும்ப பெண்கள் கூட எமர்ஜென்ஸியின் மிரட்டலுக்கும் – வீடு புகுந்த போலீசார்களின் ஏச்சு பேச்சுக்கும் ஆளானார்கள் – சரியாகச் சொன்னால், சுகந்திர நாட்டுப் பிரஜைகள் அனைவரும் கொடுங்கோலை நேர்கொண்ட தருணம் அது!
திமுகவில் பலரும் பலவித இன்னல்களுக்கு ஆளாக – ஒருகட்டத்தில் ஆட்சியை இழந்தார் கலைஞர். ஆட்சியை இழந்த நிலையிலும் எமர்ஜென்ஸியை எதிர்த்தார்! சென்னை வீதிகளில் இறங்கிப் போராடினார். அவர் கொஞ்சமும் பணியவில்லை. தன் கருத்துகளைச் சொல்ல உதவும் பேனாவையும் செய்தித்தாள்களின் சுதந்திரத்தையும் எமர்ஜென்சி அரக்கம் முடக்கிவிட்ட நிலையில் அவர்தான் என்ன செய்வார்!?
என்னோடு அண்ணாமலையில் படித்த – நண்பன் செல்வராஜ் சிதம்பரத்தை சேர்ந்தவன். கலைஞர் மீது பற்றும் பாசமும் கொண்டவன். கல்லூரி பருவத்தில் – என்னோடு அரசியல் விஞ்ஞானம் ( Political Science) படித்தான் என்றாலும், கல்லூரிக்கு வெளியே பெரியாரின் தத்துவங்களை கூடுதல் பாடமாகப் படித்தவன் அவன்! பின்னே கலைஞர் மீது பாசத்திற்கு சொல்லவா வேணும்?
அன்றைக்கு ஆட்சியை இழந்து – தொண்டர்களை இழந்து – எமர்ஜென்ஸியை எதிர்த்து ஒத்தையாக போராடிக் கொண்டிருந்த கலைஞரை நேரில் பார்க்க விரும்பினான். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. கலைஞரை அப்படி அவன் அன்றைக்கு பார்க்காது போயிருந்தால்தான் வியப்பு!
எங்க ஊரில் கோவிந்தராஜ் என்றொரு தோழர் வெற்றிலை பாக்கு ‘ஹோல்சேல்’ வியாபாரம் செய்துவந்தவர். திமுக அனுதாபி. எமர்ஜென்ஸி காலத்தில் திருவாரூரில் ஒரு கூட்டத்திற்கு போய்விட்டுத் திரும்பிய கலைஞருக்கு, சீர்காழியில் தன் வீட்டில்வைத்து பகல் சாப்பாடு கொடுக்க விரும்பினார். கட்சி நிர்வாகிகளை அனுகி முறையான அனுமதியையும் பெற்றார். ஆக, அந்த அனுதாபி வீட்டில் பகல் சாப்பாடு. அதன்படிக்கு அவரது வீட்டில் சாப்பாட்டை முடித்த கலைஞர், கோவிந்தராஜ் வீடு சார்ந்த பக்கத்து வீதியில் திமுக கொடியையும் ஏற்றினார்.
அந்தக் கொடியேற்ற தருணம் கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்ட செய்தியை 2-10 ஆல்-இந்திய ரேடியோ அறிவித்தது. அவசரமாக கலைஞர் சென்னை புறப்பட, வெற்றிலை-பாக்குக் கடை கோவிந்த ராஜ் கைது செய்யப்பட்டு திருச்சி கொண்டு செல்லப்பட்டார். கலைஞருக்கு பகல் சாப்பாடு ஏற்பாடு செய்த காரணத்திற்காகவே அவரை சிறைவாசம் செய்தனர். எமர்ஜென்ஸியின் செயல்பாடுகள் குறித்து ஏன்? என்று கேள்விகேட்க முடியாத நேரம் அது!
கலைஞர் தன் அரசியல் வாழ்வில் பல போராட்டங்களை கண்டிருக்கிறார். தலைமையேற்றும் களம் கண்டிருக்கிறார். ஆனால், எமர்ஜென்சியை எதிர்த்து அவர் நிகழ்த்திய எதிர்வினைகளும் – போராட்டங்களுமே அவர் புகழை இந்திய முழுமைக்கும் கொண்டு சேர்த்தது என்பதுதான் உண்மை.
ஆட்சியை இழந்த கலைஞர் – சென்னை வீதியில் இறங்கி – எமர்ஜென்ஸி கொடுமைகளை தெளிவுப்படுத்தும் வாசகங்கள் கொண்ட நோட்டிஸ்களை – மக்கள் மத்தியில் வீசியடித்து கோஷம் எழுப்பிப் போராடினார். அவர் அப்படி அன்றைக்கு போராடியது தினசரி சங்கதியாக சிலநாட்கள் தொடர்ந்தது.
அந்த எமர்ஜென்ஸி நிலையிலும் – துவளாமல் அப்படிப் போராடும் கலைஞரை காண என்னையும் உடன் அழைத்தான் நண்பன் செல்வராஜ். ‘சென்னை போய் ஒருதரம் கலைஞரை பார்த்து வரலாம், கூடவே ‘ஷோலே’ இந்திப் படத்தை ‘சத்திய’த்தில் கண்டுவரலாம்’ என்று கூடுதலாக அழுத்தம் தந்தான். உட்பட்டேன்.
எமர்ஜென்ஸி நேரத்தில் கலைஞரை காண்போர்கள் அனைவருமே மத்திய அரசின் போலீஸாரால் கண்காணிப்புக்கு உள்ளாகும் நிலை இருந்தது. அதனையெல்லாம் யோசிக்காது என்னை அவன் அழைத்ததும் – நான் பரபரக்க கலைஞரைக் காணப் போனதும் மறக்க முடியாத நிகழ்வு.
அந்தக் காலக்கட்டத்தில் நான் காமராஜ் பிரியன். அதனாலேயே காமராஜை எதிர்த்த இந்திராவை எனக்கு பிடிக்காது. இந்திரா கொண்டுவந்த எமர்ஜென்ஸியையும் பிடிக்காது. அதன் சர்வாதிகாரத்தனங்களையும் சேர்க்க சுத்தமாய் பிடிக்காது. காமராஜ் சார்ந்து இந்த முடிவை நான் எடுத்திருந்தேன் என்றாலும், என் சுய அறிவும் அதனைதான் சொல்லியது. ‘சுதந்திரம் இல்லாமல் மனிதன் வாழ்வதெப்படி?’
எமர்ஜென்ஸி கொடுமைகளை – இந்தியா பூராவும் நடந்த பல மூத்த அரசியல்வாதிகளின் கைதுகளை, களமிறங்கி எதிர்க்க முடியாத உடல்நல குறைவில் காமராஜ் வீட்டிலேயே முடங்கிவிட, எமர்ஜென்சியை கலைஞர் பலமாக எதிர்த்தார்! பத்திரிகை ஆசிரியர் சோ, தன் துக்ளக் வாயிலாக எமர்ஜென்ஸியை மறைமுகமாகவும் – ஆனால் – மக்களுக்கு உறைக்கும்படிக்கும் ‘சடையராய்’ எதிர்த்து எழுதினார். அதாவது, அன்றைக்கு காமராஜின் பின்புலமாக நின்றபடிக்கு – அவரது பாதுகாப்போடு சோ எழுதினார் என்றும் கொள்ளலாம்.
அன்றைய காலக்கட்டத்தில் சிறையில் அடைக்கப்படாமல் வெளியில் நின்று போராடிய மாநில முதல்வர் ஒருவர் உண்டென்றால் அது கலைஞராகதான் இருக்கும். அதுமாதிரியே சிறைபிடிக்கப்படாமல் எமர்ஜென்சியை எதிர்த்த பத்திரிகை ஆசிரியர் ஒருவர் இருந்தார் என்றால் அது துக்ளக் ‘சோ’வாகத்தான் இருக்கும்! தவிர, ஏக இந்தியாவிலும் எமர்ஜென்சியின் போது கைது செய்யப்படாத பெரிய தலைவர் ஒருவர் விளங்கினாரென்றால் அது காமராஜாகதான் இருக்கும்!
இதனை இப்படிக்கூடச் சொல்லலாம், காமராஜின் உறுதுணையால் பிரதமர் அரியாசணை ஏறிய இந்திரா, தனது எமர்ஜென்சியின் போது இந்தியா பூராவும் பல அரசியல் தலைவர்களை – மதத்தலைவர்களை கைது செய்தபோதும், தமிழகத்தில் தனது அடாவடியை அடக்கி வாசித்ததற்கு காரணம், காமராஜ் தமிழகத்தில் இருக்கிறார் என்பதினாலேயே!
இப்படியான ஓர் கால சூழலில்தான் செல்வராஜும் நானும் கலைஞரைக் காணச் சென்றோம்.
ரயிலைவிட்டு இறங்கி, காலைப்பணிகளை முடித்துக் கொண்டு – கலைஞரைக் காண நேரே கோபாலபுரம் போனோம். அங்கே வீட்டில் கலைஞர் இல்லை. அன்பாலயத்திற்கு கிளம்பிச் சென்றுவிட்டதாக சொன்னார்கள். அன்பாலயம் (இன்றைக்கு அது திமுக இளைஞர் அணி சார்ந்த அலுவலகக் கட்டிடமாக இருக்கிறது – தவிர, ‘அறிவாலயம்’ அப்போது கட்டப்படவில்லை. )
அன்பாலயத்துக்கு போனோம். உள்ளே பெரிய ஹாலிற்குள் நுழைந்த போது, ஹாலின் மறுபக்கம் நீள மேஜை போடப்பட்டிருந்தது. மேஜைக்கு அந்தப் பக்கம் கலைஞர், நெடுஞ்செழியன், பேராசிரியர் என மூவரும் உட்கார்ந்து இருந்தனர். அவர்களைக் காணவந்த கட்சிக்காரர்கள் வரிசையில் நின்று ஒருவர் பின் ஒருவராய் அவர்களை கண்டு சென்றவண்ணம் இருந்தனர். செல்வராஜும் நானும் அந்த நீளவரிசையில் போய் நின்றோம். எங்க ‘டர்ன்’ வந்தது.
எங்களுக்கு முன் நின்ற கோவையைச் சேர்ந்த கணவன் மனைவி இருவர் கலைஞருக்கு வணக்கம் சொன்னார்கள். அவர்களிடம் கலைஞர் நேரம் எடுத்து கொண்டு, எமர்ஜென்சி நேரத்து நள்ளிரவு கைது பற்றி கூறி நொந்து கொண்டார். நள்ளிரவில் போலீஸார் வீடுதேடிவந்து ஸ்டாலினை அடித்துத் துன்புறுத்தி கைது செய்துகொண்டு போனதையும், வீட்டில் உள்ள பெண்களை கண்டமேனிக்கு பேசி துன்புறுத்தியதையும் அவர்களிடம் விவரித்தார் கலைஞர். அந்தக் கணவனும் மனைவியும் அழாத குறையாக கண்களில் நீர் மல்க அகன்றார்கள். அடுத்து என் நண்பன் செல்வராஜ் முறை. கலைஞருக்கு வணக்கம் செய்தவனாக முன்னே நகர்ந்து பிற தலைவர்களுக்கும் தன் வணக்கத்தை செய்தபடி நகர்ந்தான். இப்போது நான் நகர்ந்து வணக்கத்துடன் கலைஞர் முன் நின்றேன்.
‘உங்க பெயர்?’ ‘தாஜுதீன்!’ ‘எந்த ஊர்?’ ‘சீர்காழி.’ மெல்லிய சிரிப்போடு, ‘என்ன செய்றீங்க? என கேட்டார் கலைஞர்.’ ‘சௌதிக்கு போக இருக்கிறேன்.’ அந்நாட்டிலிருந்து எனக்கு கடிதம் ஏதேனும் எழுதும்பட்சம் நேராக என் முகவரிக்கு எழுத வேண்டாம். இங்கே என் கடிதங்கள் அத்தனையும் போலீஸால் பிரித்துப் படிக்கப்படுகிறது. நண்பர்கள் முகவரிக்கு எழுதி எனக்கு கிடைக்கச் செய்யுங்கள்’ என்று சொன்னார். தலையாட்டினேன்.
‘எமர்ஜென்சியை எதிர்த்து முரசொலியில் நீங்கள் எழுதுவதை தவறாமல் படித்துவருகிறேன். மிகச்சிறப்பாக இருக்கு. நாவலர் அப்படி எதுவும் எழுதுவதில்லையே?’ என்று கலைஞரிடன் மெல்லக் கேட்டேன். தனது கையை நாவலர் பக்கம் சுட்டிக் காட்டி, ‘இதனை அவரிடமே கேளுங்கள்’ என்றார். மீண்டும் கலைஞருக்கு வணக்கம் செய்தவனாக முன்நகர்ந்து ‘எமர்ஜென்ஸி கொடுமைகள் குறித்து மறைமுகமாகவேனும் முரசொலியில் நீங்கள் ஏதும் எழுதுவதில்லையே ஏன்?’ யென கேட்டேன். அவர் என்னை நிமிர்ந்துக்கூட பார்க்கவில்லை. கீழே குனிந்தபடிக்கு ஏதோ யோசனையில் இருந்தார்.
எமர்ஜென்சி காலக்கட்டத்தில் அதன் சிறைவாசத்திற்கும் – அதனூடான பல கொடுமைகளுக்கும் – துன்புறுத்தல்களுக்கும் பயந்து, பல மாவட்ட திமுக நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் கட்சியைவிட்டு – தங்கள் தலைவர் கலைஞரை விட்டு – வரிசை வரிசையாக அண்ணா திமுகவுக்கு சென்றுகொண்டு இருந்தனர். அந்த வரிசையில் நாவலர் நெடுஞ்செழியனும் அண்ணா திமுக-விற்கு விரைவில் போக இருக்கிறார் என்றோர் செய்தி அன்றைக்கு உலா வந்தவண்ணம் இருந்தது. நான் சென்னையில் வைத்து அவரை கண்டுவந்த சிலநாட்களில் அது மெய்யாகி அவர், அண்ணா திமுக-வென்றாகிபோனார்!
கலைஞரை அதன் பின்னர் நான் சந்தித்ததில்லை. நானும் அதற்கு முயன்றதில்லை. காமராஜ் மீது பிரியம் கொண்டவனாக ஊரில் நாட்களை அரசியலோடு நகர்த்திக் கொண்டிருந்தேன். பின்னர் 1998-ம் ஆண்டு வாக்கில் ‘சுப மங்களா’ என்கிற இலக்கிய இதழ் வழியாக, நவீன இலக்கியம் பொருட்டான கலைஞரின் நேர்காணலில் எதிரொலித்த அவரது நவீன இலக்கியப் புரிதலுக்கு – எதிராய் விமர்சனம் ஒன்று எழுதினேன். அன்றைய கலைஞரது மந்திரிசபையில் சபாநாயகராகவும், திமுகவின் இலக்கிய அணித் தலைவராகவும் இருந்த ‘தமிழ்க்குடி மகன்’ சுபமங்களாவின் அடுத்த இதழில் என் விமர்சனத்திற்கு பதில் அளித்திருந்தார். 2006 – வாக்கில் திண்ணை வலைதளத்திலும், பின்னர் ஆபிதீன் பக்கங்களிலும் இந்தச் சர்ச்சையை குறித்த என் பதிவை செய்திருக்கிறேன்.
கலைஞர், இன்றைக்கு தனது 95-வது வயதில் இயற்கையை எய்தி இருக்கிறார். அவரது பெரும்வாழ்வு மதிக்கத் தகுந்தது. ஐந்துமுறை முதல்வராகி அவர் ஆற்றிய தொண்டுகள் விமர்சனங்களுக்கு உட்பட்டதே என்றாலும், பின்தங்கிய – ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் செய்த நற்காரியங்கள் அதிகம். அத்தனையும் – திராவிட சிந்தனைக் கொண்டது. பெரியார் குறிப்பிட்டு சென்ற கீழ்த்தட்டு மக்களுக்கான நற்காரியங்கள் அவை!
அந்த நற்காரியங்களை கலைஞர் செய்தார் என்று சுலபமாக நான் சொல்லிவிட்டேன். இதனையெல்லாம் அவர் நேரம் பார்த்து சட்டம் இயற்றி மேட்டுக்குடி மக்களின் ஏச்சு பேச்சுகளை ஏற்று – அவர்களது தடைகளை தகர்த்து – கலைஞர் நடத்திக்காட்டிய சாதனைகள்!
இன்னொரு மொழியில் சொல்வோமெனில், கலைஞர் நிறைவேற்றிய கீழ்த்தட்டு மக்களுக்கான திட்டங்கள் அத்தனையும் வாழ்வியல் புரட்சி சார்ந்தது. ஏழை எளிய மக்களுக்கான நல்வாழ்வை – அவர்களுக்கு கிட்ட வேண்டிய சமநீதியை ஓர் அரசு வழங்குவதென்பது சாதாரணமானதல்ல! வெளியில் நின்று வாய் இருக்கிறது என்பதற்காக எதனையும் பேசிவிடலாம். விமர்சித்துவிடலாம். ஆனால் அரியணையில் அமர்ந்த வண்ணம் அதனையெல்லாம் செய்து முடிப்பதென்பது அத்தனை எளிதானதல்ல.
இப்படியான திராவிட சிந்தனை கொண்ட சட்டங்கள் இனி சபையேறி – அது வென்று – மக்களை சென்றடைவதும்தான் எங்கணம்? பெரியார், அண்ணா, கலைஞர் இல்லாத மண்ணில் நாளைக்கு இதெல்லாம் சாத்தியமா? எட்டுவழிச்சாலை போட – மலைகளை உடைக்க – கனரக கான்ராக்ட் விட்டு இங்கத்திய இயற்கை செல்வத்தை அள்ளிப் போக ஆயிரம் பேர் ஆளவருவார்கள் போவார்கள். அடித்தட்டு மக்களை கைதூக்கிவிட கலைஞர் மாதிரி இன்னொரு பெரியாரின் பிள்ளை எவர்வருவார்?
*
(6:56 PM 13/8/2018)
நன்றி : தாஜ்