செயலா சிந்தனையா?

ismail.jpg

நீதிபதி மு.மு. இஸ்மாயில் அவர்களின் “கவிச்சக்கரவர்த்தியும் கவியரசரும்” என்ற புத்தகத்திலிருந்து :

“ஒரே பெற்றோருக்குப் பிறந்த இரு குழந்தைகள் எப்பொழுதுமே ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒன்று, உடலில் வலிவுடையதாகவும், துடிப்பு நிறைந்ததாகவும், உணர்ச்சி வயப்படக்கூடியதாகவும், எதிலுமே ஒரு திடீர் முடிவுக்கு வந்து செயலில் குதித்துவிடுவதாகவும் இருக்கும். மற்றொன்று, அவ்வளவு உடல் வலிவு இல்லாததாகவும், கூர்த்த மதியினதாகவும், நுண்ணிய உணர்வுகளை உடையதாகவும்,
எதிலும் சிந்தித்துச் செயல்படுவதாகவும் இருக்கும். இந்த இரண்டு
குழந்தைகளுடைய பொதுத்தன்மையோ, எங்கு அநியாயம் நிகழ்ந்தாலும், அந்த அநியாயத்துக்குப் பரிகாரம் தேடி நியாயத்தையும் நேர்மையையும்
நிலைநாட்டுவதற்கான ஆர்வத்தைக் கொண்ட நற்குணசீலமேயாகும். இந்தத் தன்மை இருவருக்கும் பொதுவாக இருந்தபோதிலும், இருவரும் ஒரேமாதிரியாகச் செயலில் ஈடுபடமாட்டார்கள். முதலாவதாக விவரிக்கப்பட்ட குழந்தை கர்மவீரனாகவும், இரண்டாவதாக விவரிக்கப்பட்ட குழந்தை ஞானாசிரியனாகவுமே விளங்கும் என்பது
தெளிவு.

இந்த வேறுபாட்டினால் உண்டாகும் விளைவுதான் என்ன? இந்த விளைவிலும் ஒரு பொதுத்தன்மை இருப்பதை நோக்கத் தவறக் கூடாது. தங்களுடைய கடமை என்று தங்களுக்குத் தோன்றியதை நிறைவேற்றிவிட்டோம் என்பதனாலான மனஅமைதியும்
மனநிறைவும் இருவருக்கும் பொதுவானது. இன்னொருவருக்கு இழைக்கப்படும் அநீதியினால் தான் நேரிடையாகப் பாதிக்கப்படவில்லை என்று வாளாக இருந்துவிடாமல், அநீதி யாருக்கு இழைக்கப்பட்டாலும் அது அநீதியே; அதைத் தவிர்த்து நீதியை நிலைநாட்ட வேண்டுமென்ற இலட்சியப் பாதையில் இருவருமே இறங்கிவிட்டது மற்றொரு பொதுத்தன்மை.

இந்தப் பொதுத்தன்மைகளுக்கிடையே, விளைவுகளில் வேறுபாடு இருக்கவே செய்கிறது. கர்மவீரன் சம்பந்தப்பட்ட வரையில், தன் வரையில் பிறருக்கு அநீதி இழைக்காமல் இருப்பதோடு இன்னொருவருக்கு அநீதி இழைக்கப்படுவதை எப்பொழுதெல்லாம் காண்கிறானோ, அப்பொழுதெல்லாம், அவன் திரும்பத் திரும்பச்
செயலில் இறங்கி அந்த அநீதியைத் துடைக்க முற்படுகிறான். இதன் காரணமாக, இவன் செயலின் விளைவு ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியில், ஒரு குறிப்பிட்ட மனிதனோடு அல்லது ஒரு குறிப்பிட்ட சம்பவத்துடன் நின்று விடுகிறது. திரும்பத் திரும்ப இவ்வாறு செயலில் இறங்கும்பொழுது பற்பல வேளைகளில் பற்பல மனிதர்கள் பயனடைவார்கள்; பற்பலச் சூழ்நிலைகளில் நீதி நிலைநிறுத்தப்
பெறும்.

ஞானாசிரியனாகச் செயல்படுபவனோ, தான் உணர்ந்த நீதியைத் துடைப்பதற்கு நிரந்தரமான ஒரு வழியை வகுத்து, அந்த வழியின்படி யார் வேண்டுமானாலும் செயற்பட்டு, அநீதியைத் துடைத்து நீதியை நிலைநிறுத்தலாம் என்ற நிலையை உண்டுபண்ணி விடுகிறான். இந்த நிலை உண்டாவதற்குக் காரணமாக அமைந்தவை அவனுடைய நுண்ணிய உணர்வும் சிந்தித்துச் செயற்படும் இயல்புமேயாம்.”

நன்றி : பி.கே. சிவகுமார்   /  ‘எழுத்தும் எண்ணமும்’ இணையக் குழுமம்