தீர்வு: தேர்தல்தான் – ஏ.ஹெச்.ஹத்தீப்

‘சமஉரிமை’ இதழில் வெளியான கட்டுரை (June 2009)

**
தீர்வு: தேர்தல்தான்

ஏ.ஹெச்.ஹத்தீப்

“ குற்றமிழைத்தவர்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களையும் வேட்பாளராக அறிவிப்பதை அரசியல் கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் ” என்று தேர்தலுக்கு முன்னரே ஒரு கோரிக்கையை முன்வைத்தது தேர்தல் ஆணையம். ஏனெனில் குற்றப் பின்னணியுடையோரின் தொகுதிகளில் கட்டவிழ்த்துவிடப்படும் அராஜகத்தை யாரும் சகித்துக் கொள்ளமுடியாது. அவற்றைத் தடுக்கும் முயற்சியில் பலமுறை தேர்தல் ஆணையம் தோல்வி கண்டிருக்கிறது. அதனாலேயே ஆணையம் பாரபட்சமாக நடந்துகொள்கிறது என்ற அபாண்டக் குற்றச்சாட்டுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது.

ஆணையத்தின் ஆலோசனைக்குத் தேசத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அத்வானியின் பதில்:  “தேர்தல் ஆணையம், நீதிமன்றங்களாக மாற முயற்சிக்கிறது.”

“ பணபலமும் ஆட்பலமும் தேர்தலில் வென்றிருக்கின்றன” என்று குமுறுகிறார் வைகோ. மறுக்க முடியாது.ஆனால் அவர் தனது எதிரணியை மட்டும் குற்றம் சாட்டுவது அநாகரீகமானது. என்றாலும் அவரது கூற்று குறித்துக் கவலை கொள்ளாமல் இருக்க முடியவில்லை. பணமும் மிரட்டலும் வெற்றி ஈட்டத் துவங்கிவிட்டால் இந்திய ஜனநாயகம் துரு பிடிக்க ஆரம்பித்துவிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

“ ஓட்டு இயந்திரத்தைத் தவிர்க்க வேண்டும். எங்களது தோல்விக்கு அவைதான் காரணம் ” என்று வேடிக்கையாக வெடிக்கிறார் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா.அப்படியானால் 40 தொகுதிகளையுமே தேசிய முற்போக்குக் கூட்டணி ஆக்ரமித்திருக்க வேண்டும். 12 இடங்களில் மட்டும் இயந்திரம் தனது  கடமையை செவ்வனே ஆற்றியிருக்கிறது எனச் சாடுவது, தார்வீக முறைக்கேடு. ‘தனது தோல்விக்கு மக்களல்ல காரணம்’ என்று யார்மீதோ கோபம் கொண்டு ஜனநாயகத்தைப் பழிக்கும் செயல். அ.தி.மு.க.வுக்குத் தோள் கொடுக்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர் ‘சோ’ போன்ற பழுத்த அரசியல்வாதிகள்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட சுளீரென்ற சாட்டையடியின் வலி குறைவதற்கு முன்னரே, “ ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான மொத்த வாக்குகளில் ஐம்பது விழுக்காடு ஆதரவு பெற்ற வேட்பாளரே வெற்றி பெற்றவர் என்று அறிவிக்கப்பட வேண்டும். அதற்குரிய சட்டத் திருத்தம் தேவை” என்று ஈனஸ்வரத்தில் முனகுகின்றன இடதுசாரிக்கட்சிகள். தோல்வி கண்ட ஜன்னியில் பிதற்றுகிறதோ என்று எண்ணத் தோன்றினாலும், தேர்தல் பற்றிய மக்களின் மனநிலையில் மாற்றம் கொணர வேண்டுமென்ற ஒட்டுமொத்தக் கருத்தையும் அப்படியே ஒதுக்கித் தள்ளிவிட முடியாது என்பதைத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியே இருக்கின்றன. தேசத்தின் மொத்த வாக்காளர்களில் சுமார் 25 விழுக்கானர் மட்டுமே வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயகக் கடமைகளையும் உரிமைகளையும் நிலைநாட்டியிருக்கிறார்கள். வக்காளர்களை ஓட்டுச்சாவடியை நோக்கித் திருப்பியதில் முக்கியப் பங்கும் உழைப்பும் முரட்டு அரசியல்கட்சிகளைச் சார்ந்தவை..

‘ வெற்றி பெற்று நாடாளுமன்றம் நுழைந்த அங்கத்தினர்களில் சிலர், தனது தொகுதியில் பதிவான வாக்காளர் எண்ணிக்கையில் பத்து விழுக்காட்டுக்கும் குறைவான ஆதரவு பெற்றவர்கள் ’ என்ற புள்ளிவிவரம் அதிர்ச்சியளிக்கிறது. அப்படியானால் தொண்ணூறு சதவிகிதத்தினர் எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள் என்பதே பொருள். இப்படிப்பட்ட குறைப் பிரசவத்தில் வெற்றியை ஈன்றவர்கள், ‘ஜனநாயகக் காவலர்கள்’ என்ற வர்ணனைக்கும் வாழ்த்துக்கும் தகுதியுடையவர்கள் அல்ல. இத்தகைய விசித்திரப் பட்டியலில் பெருந்தலைகளும் அடக்கம். என்றாலும் அதுதான் ஜனநாயகம் கணித்து வைத்திருக்கிறார்கள் நமது அரசியல் சாசனச்சிற்பிகள்.

என்ன செய்வது? எப்படிச் சரி செய்வது?

தமிழகத்தில், ஐக்கிய முன்னணிக்கும் தேசிய ஜனநாயக அணியினருக்குமிடையே வாக்கு வித்தியாசம் வெறும் 5 விழுக்காடே. ஆனால் பாராளுமன்ற இருக்கை வித்தியாசமோ பாரதூரமானது. மேற்கு வங்கத்தில் 44% ஆதரவு பெற்ற காங்கிரஸ் அணியினர், 43% சதவிகித வாக்கு பெற்ற இடதுசாரிகளைவிட 10 இடங்கள் அதிகம் ஈன்றிருக்கிறார்கள். கர்நாடகத்தில், 41% ஓட்டு பெற்ற பா.ஜ.க. 19 தொகுதிகளிலும், 37% விழுக்காட்டினரின் ஆதரவு வழங்கிய காங்கிரஸார் வெறும் 6 இடத்திலும் வெற்றி. 4 சதவிகித ஓட்டு வித்தியாசத்தில் கற்பனையில் அடங்காத சீட்டு வித்தியாசம்.இவற்றையெல்லாம் தாண்டிவிட்டது உத்திரப் பிரதேசம். 27 விழுக்காடு ஓட்டு வாங்கிய பகுஜன் சமாஜ் கட்சி 20 இடங்களையும், 18 சதவிகித ஆதரவு பெற்ற காங்கிரஸ் 21 இருக்கைகளையும் அறுவடை செய்திருக்கின்றன. சதவிகித அடிப்படையில் ஆசனங்களை ஒதுக்கினால் இத்தகைய குளறுபடிக்கோ அங்கலாய்ப்புக்கோ அவசியமற்றுப்போகும் என்பது பெரும்பாலோரது ஆதங்கம்.

என்றாலும் எல்லாத் தொகுதிகளிலும் இதுதான் நிலவரம். இதுதான் ஜனநாயகம். இதுதான் தேர்தல். இதுதான் மக்கள் தீர்ப்பு.

என்ன செய்வது?

தேர்தல் என்பது மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் ஒரு நடவடிக்கை. வாக்காளர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் ஒரு நிலைக்கண்ணாடி. வெறும் மலைகளையும் காடுகளையும் கடல்களையும் கட்டிக் காப்பதற்காக தனது பிரதிநிதிகளை அவர்கள் தேர்வு செய்வதில்லை. தனது பரிதாப வாழ்க்கைமுறையையும் சமூக அவலங்களையும் மாற்றியமைப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வேட்பாளர்களைப் பொறுக்கியெடுக்கிறார்கள். வாக்காளர்களின் எதிர்ப்பார்ப்பு பொய்க்கும்போது தேர்தல் நடைமுறைமீதே மக்களுக்கு வெறுப்பும் கோபமும் மிகைக்கின்றன.  நமது ஜனநாயகம் மங்கிக் கொண்டே வருவதற்கு ஆட்சியாளர்களின் முறையற்ற செயல்பாடும் செயலற்றதன்மையுமே  முதற்முக்கிய காரணங்கள்.

அதனால்தான் தேர்தல் நடைமுறைகளை இன்னும் அர்த்தம்மிக்கதாக, ஆரோக்கியமுள்ளதாக, உயிர்ப்புமிகுந்ததாக உருமாற்றம் செய்ய வேண்டும் என்ற குரல் வலுவடைகிறது. தேர்தல்வரை சாதுவாக இருந்துவிட்டு, வெற்றிக்கனியைப் பறித்ததும் அடாவடித்தனம் பண்ணுவோரையும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்களையும் வாக்களர்கள் திரும்ப அழைக்கும் சட்டம் ஃபிரான்ஸில் நடைமுறையில் உள்ளது. குற்றப்பின்னணியுடையோர் யாரும் தேர்தலில் போட்டியிட முடியாது அமெரிக்காவில். சதவிகித அடிப்படையில் இருக்கைகளைப் பகிர்ந்தளிக்கும் முறை பல நாடுகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இந்தியா ஒன்றும் மேல்தட்டு வர்க்கத்தினர் வாழும் அமெரிக்காவோ பிரிட்டனோ அல்ல. இந்தியாவின் மேல்தட்டுக்காரர்கள் தேர்தலைப்பற்றிப் பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்வதில்லை என்றாலும் அவர்களது எண்ணிக்கை அதிருஷ்டவசமாக மிகக் குறைனானதே. ஆதலால் அவர்கள் ஓட்டுச் சாவடிப் பக்கம் தலை வைத்துப் படுக்கவில்லை என்பது பற்றி யாரும் காய்வதற்கோ கவலைக் கொள்வதற்கோ தேவையில்லை.

ஆனால் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற வியக்கத்தக்க பெருமைக்குரியது இந்தியா. நூறு கோடி மக்களையும் வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்வது அசாதாரண காரியம்; சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்குமேல் மக்களின் வரிப்பணத்தை அநாயாசமாக அள்ளி இரைத்தாலன்றி இந்த இமாலயச்சாதனை புரிவதற்குச் சாத்தியமில்லை. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் மூக்கின்மீது விரல் வைத்து அதிசயிக்கிற அளவுக்கு ஓர் அரிய கடும்பணி. ஆனால் அரசும் தேர்தல் ஆணயமும் காஷ்மீரிலிருந்து கன்னியாக்குமரிவரை நீக்கமற நிறைந்து செய்து வைத்துள்ள ராட்சத ஏற்பாடுகளை மக்கள் உணர்ந்திருக்கிறார்களா என்று அலசுகிறபோது அசல் ஜனநாயகவாதிகள் முகம் சுளிக்கத்தான் வேண்டியுள்ளது; மறுப்பதற்கில்லை. வயதானவர்களும் ஊனமுற்றவர்களும்கூட எளிதில் செல்கின்ற தொலைவில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டும்கூட ஜனநாயகக்கடமைகளை மக்கள் எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பதை உற்றுக் கவனிக்கிறபோது ஆயாசமும் அநேக நேரத்தில் ஆத்திமுமே மேலிடுகிறது.

டெல்லி, மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான் போன்ற மிகவும் முன்னேறிய மாநிலங்களில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில், வாக்குச்சீட்டுக்கள்மூலம் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை மக்கள் புறந்தள்ளுகிறார்களோ என்ற ஐயம் அனைவரையும் ஆட்கொள்கிறது. நேர்மையான தியாகிகளையும் திறமையான ஆட்சியாளர்களையும் தேசத்துக்கு வாரி வாரி வழங்கிய முன்னோடி மாநிலங்களிலேயே இத்தகைய அவலநிலை. அங்கெல்லாம் 50 சதவிகித்த்திற்கும் குறைவானவர்களே ஓட்டளித்திருகிறார்கள். ஆட்சிப்பீடத்தின் கருணைப்பார்வை அதிகம் படாத லட்சத்தீவு, மணிப்பூர், நாகலாந்து, திரிபுரா, புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களில்கூட சராசரி 75% ஓட்டளித்துள்ளனர். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுக்குப் பிரதமர்களை வழங்கிய உத்திரப் பிரதேசத்தில் வெறும் 47 விழுக்காடுதான். 1999லிருந்து 2004வரை ஆண்டுக்கொருமுறை தேர்தல் நடைபெற்ற சமயத்தில்கூட மக்கள் அதிக அளவில் ஓட்டுப் போடத் திரண்டனர்.

இந்தத் தேர்தலில் மட்டும் ஏன் இந்த மந்தநிலை?

“ ஆமாம்.யார் வெற்றி பெற்றாலும் தோற்கப்போவது மக்களே ” என்ற விரக்தியா?  “இத்தகையோரைத் தேர்ந்தெடுக்க வாக்குச்சாவடிக்குக் கால் கடுக்க நடப்பது தேசியப் பாவம் ” என்ற வெறுப்பா? அல்லது  “யாரைத் தேர்வு செய்தாலும் 38 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்குக்கீழே வாடத்தான் போகிறார்கள். வேறு விமோசனமில்லை. பின்னே எதற்குத் தேர்தலும் வெங்காயமும் ” என்ற அலட்சியமா?

ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்: ஊழலும் தவறும் புரிந்த ஆட்சியாளர்கள் ஓரங்கட்டப்பட்டு, புதிய முகங்களும் ஒழுக்கமானவர்களும் அரியணை ஏறுவதற்கு தேர்தலைவிட்டால் வேறு வழியில்லை. அதிகாரத்தில் வீற்றிருக்கும்போது தலைக்கனம் ஏறித் தவறு புரிபவர்களைக் கடுமையாகத் தண்டிப்பதற்கும் தேர்தல்தான் ஒரே வழி. தேர்தல் சாசனத்தில் தேவையான மாற்றங்களைக் கொண்டு வருவது எத்தனை முக்கியமோ, எவ்வளவு அவசியமோ அதுபோலவே தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்பதும்.

***

நன்றி :  ஏ.ஹெச்.ஹத்தீப் , ‘சம உரிமை’

***

Contact :

A. H. Hatheeb Sahib
16, Mohideen Palli Street, Nagore – 611002
Tel : 0365 250218, Mob : 9944884080

E- Mail : hatheeb@gmail.com

சுயப் பரிசோதனை – ஏ.ஹெச்.ஹத்தீப்

‘சம உரிமை’  இதழில் வெளியான  கட்டுரை ( July ‘2009).

*

சுயப் பரிசோதனை
ஏ.ஹெச்.ஹத்தீப் 

 
பதற்றத்தையும் அச்சத்தையும் எங்கும் பரப்பி, நாட்டின் முன்னேற்றத்தையும் சுபிட்சத்தையும் நாசப்படுத்துகிற எந்தச் சித்தாந்தமும் ‘வாழ்க்கை- வளர்ச்சி’ என்று வருகிறபோது ஸ்தம்பித்துப் போவது இயல்பு. வழிபாட்டு ஸ்தலங்கள், திருமண மண்டபங்கள், இடுகாடுகளில் பின்பற்ற வேண்டிய சடங்குகளையெல்லாம் தேர்தல்களிலும், சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்தினுள்ளும் அள்ளி வந்து கொட்டுபவர்கள், மக்களின் சிந்திக்கும் திறன் திசை மாறினால் இப்படித்தான் பாரதிய ஜனதா மாதிரி மூச்சுத் திணற வேண்டி வரும். பாரதிய ஜனதாவை வானளாவிய சிகரம் என்று வர்ணித்தவர்களே அதை இப்போது வெறும் காகித மலையாகச் சித்தரித்துக் கொண்டிருப்பது பெரும் கொடுமை; வேதனை.

பி.ஜே.பி.யின் 116 இடங்கள் என்பது சற்றேறக்குறையக் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வாங்கிய இருக்கைகள் அளவே. 62 தொகுதிகளைக் கைப்பற்றிய கம்யூனிஸ்ட்களையும் மாநிலச் சில்லறைக் கட்சிகளையும் தோளில் சுமந்துகொண்டு ஐந்தாண்டுகளை வெற்றிகரமாகக் கடக்க காங்கிரஸுக்கு முடிகிறதென்றால் அதற்கு முக்கியக் காரணம், பா.ஜ.க.வைப்போல் கரடு முரடான சித்தாந்தங்களைத் தலையில் வைத்துக் கொண்டு கூத்தாடாமல், ‘வளர்ச்சி’ என்ற கவர்ச்சிகரமான சொற்களைக் கைகொண்டதுதான். காங்கிரஸைவிட அதிக எண்ணிக்கையில் தேசிய தலைவர்களைத் தன்னகத்தே வைத்துள்ள பா.ஜ.க., ‘ஏன் இந்த வீழ்ச்சி?’ என்று சுயப்பரிசோதனை செய்யாமல், உட்கட்சிப் பூசலில் இறங்கியிருப்பது மக்களைத் திசை திருப்பும் அல்லது ஏமாற்றும் முயற்சி. இந்தியாவிலுள்ள அத்தனை பெரிய மாநிலங்களிலும் அது கடுமையான சரிவைச் சந்தித்திருக்கிறது.

சீனா, கொரியா, தைவான் போன்ற முன்னேறிய நாடுகள் மாதிரித் திட்டம் போட வேண்டாம். செயல் புரிய வேண்டாம். குறைந்த பட்சம் அவற்றைப்போல் சிந்திக்கக் கூடத் தேவையில்லை என்று செயல்பட்ட எந்தக் கட்சியையும் மக்கள் ஏற்கவில்லை.  அமெரிக்காவுடன் ஒட்டுறவாடுவது தங்களது சீனத்து எஜமானர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை இருட்டிலே மறைத்துவைத்துவிட்டு, உற்பத்திக்கும் முன்னேற்றத்திற்கும் அவசியமான அணுசக்தியே தேவையில்லை என்று பிடிவாதம் பிடித்து காங்கிரஸ் அரசுக்கு வழங்கிய ஆதரவை நிர்த்தாட்சண்யமாகப் பறித்துக் கொண்டு இடதுசாரிகள் வெளியேறியதை மக்கள் சகித்துக் கொள்ளவில்லை. அவர்களும்கூட பா.ஜ.க.வைப் போன்று திருவிழாவில் காணாமல் போன குழந்தை மாதிரி விழி பிதுங்கி நிற்கிறர்ர்கள். பெரிய சித்தாந்திகள் என்று தங்களை வர்ணித்துக் கொண்ட இருகட்சியினருமே எதிர்காலத்தைத் தொலைத்துவிடுவோமோ என்று அஞ்சுவது அப்பட்டமாகத் தெரிகிறது.

அவசியமில்லாமல் அவசரப்பட்டுத் தோழமைக்கட்சிகளுடனான நட்பை முறித்துக்கொண்ட இடதுசாரிகள் மட்டுமின்றி ராஷ்டிரீய ஜனதாதளம், பஸ்வானின் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய அத்தனை அமைப்புக்கும் மக்கள் தண்டனை வழங்கியிருப்பது அரசியல் வரலாற்றில் ஓர் அதிசயமான அற்புதம் என்றே சொல்ல வேண்டும்.

நாட்டை வழி நடத்துவதற்குத் தேவையான மனமாற்றம் இப்போதெல்லாம் தலைவர்களிடமிருந்து வெளிப்படும் என்ற நம்பிக்கையில் நம்பிக்கையற்று  வெகுஜனங்களே பார்வையை மாற்றிக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான் இந்தத் தேர்தலில் கிடைத்த படிப்பினை. இந்த நிலை நீடிக்குமாயின் இனிமேல் மேடையில் முழங்குவதெல்லாம் வீண்வேலை என்றாகிவிடும்.அதுகூட ஒருவகையில் நன்மைக்குத்தான். முழங்குவதை வெறுமனே ஏற்பதைவிடச் சுயமாகச் சிந்திப்பதற்கு வழிவகுக்கும்.

பள்ளத்தைச் சமப்படுத்துகிற முழக்கம் முனை மழுங்கிப்போய், வானத்தை வசப்படுத்துகிற படுகவர்ச்சிகரமான  திசையை நோக்கி இந்திய வேட்பாளர்களின் முகங்கள் திரும்ப ஆரம்பித்துவிட்டன. ‘தேர்தலில் நிற்பது எனது ஜாதிக்காரனா?’ என்று உற்றுப் பார்க்கிற பிற்போக்குச் சிந்தனையிலிருந்து விடுபட்டு, ‘என்னை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வானா?’ என்று வெகுஜனம் கேட்கத் துவங்கியதாலேயே ஜாதியச் சாயங்கள் அநேக இடங்களில் வெளுத்துப் போயின. ஆரம்பத்தில் நாட்டை உயர்ஜாதியினர்தான் ஆளவேண்டும் என்று கருதிய கடைநிலை வகுப்பாளர்கள்,பிற்காலத்தில் எப்படி அந்த மாயையை உடைத்தெறிந்தார்களோ, அதுபோன்று இப்போது கடந்தகால அந்தகார இருளிருந்து வெளிப்பட்டு ‘வளர்ச்சி’ என்ற விடியலை வழிபடத் துவங்கிவிட்டார் என்பதற்கு இந்தத் தேர்தல் முடிவுகளே நிதர்சனமான சான்று.

இது காலம் வழங்குகிற மனமாற்றம். பிறந்ததிலிருந்தே மனிதன் ஒரேமாதிரியாக வாழ்ந்தான் என்றால் அவன் கற்சிலையாகவோ கருங்கற் பாறையாகவோ இருந்தான் எனப்பொருள். நல்லவேளையாக அவன் சுய நினைவாற்றலும் கடந்தகால அனுபவவங்களும் மிகுந்த மனிதனாக வாழ்ந்தான் என்பதை நிரூபிக்க இந்தத் தேர்தல் நன்கு பயன்பட்டிருக்கிறது.

தேர்தல் திருவிழாவின்போது பணம் தனது வலிமையைக் காட்டுவது, ஜல்லிக்கட்டு மாதிரி ஒரு சடங்கு. அன்பளிப்போ லஞ்சமோ 535 தொகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜெயித்திருக்கலாம். அதனால் வெற்றிக்குப் பணம்தான் அஸ்திவாரம் என்பது உண்மையாக இருக்கும்பட்சத்தில் அனைத்துக் கட்சியினரும்  கோடீஸ்வரர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியிருப்பார்கள். துரதிருஷ்டவசமாக அப்படியொரு நிலை வருமாயின் தேர்தலை நடத்துவதற்குப் பதில் ‘தேசமும் ஜனநாயகமும் விற்பனைக்கு’ என்று நாடாளுமன்ற முகப்பு வாயிலில் ஒரு பெரிய போர்டைத் தொங்க விடுவதைத் தவிர வேறு வழியில்லை. அதிருஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்காது என்று மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். என்றாலும் பணம் கொஞ்சம் தேவை என்பதோடு அதன் முக்கியத்துவம் முற்றுப் பெற்றுவிடுகிறது.

இந்தத் தேர்தலில் விசித்திரமான, வரவேற்புக்குரிய சில அம்சங்கள் பார்வையில் பளிச்சிடுகின்றன: புதிதாக வாக்குச்சாவடிக்குள் நுழைந்த லட்சோபலட்ச இளைஞர்கள் லாப்-டேப், டிவி.,போன்ற யாசகத்தைப் புறந்தள்ளிவிட்டு, கௌரவமான நிரந்தர முன்னேற்றத்துக்கு உழைக்கத் தயாராக இருப்பதை உறுதி செய்திருக்கிறார்கள். லஞ்சம் வாங்கிப் பழக்கப்பட்ட பெற்றோர்களைக்கூட அவர்கள் பெருமளவு திசை திருப்பியிருக்கிறார்கள். ஜாதிக்காகவும் மதத்திற்காகவும் வரிந்துகட்டிக் கொண்டு உழைத்த உதிரும் இலைகளெல்லாம் இந்தத் தடவை ‘போகும் இடத்துக்குப் புண்ணியமாகட்டும்’ என்று புதியவர்களையும் ஓரளவு நல்லவர்களையும் தேடிப்பிடித்து ஓட்டளித்திருக்கிறார்கள்.

அமைதியாக வாழ்வதிலும் முன்னேற்றம் காண்பதிலும் அக்கறையில்லாமல் மக்கள், “ பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் அதே இடத்தில் கட்டப்படும் ” என்ற அத்வானியின் அறைகூவலை அப்படியே ஏற்றிருப்பர்களேயானால், பாரதீய ஜனதாவுக்கு ஏன் இப்பேர்ப்பட்ட படுபாதாளச் சரிவு? அதுவும் உத்தரப்பிரதேசத்திலும் குஜராத்திலும்? இந்தியாவின் பிரதமர் மற்றும் துணைப் பிரதமர் பதவிகளை வழங்கிக்கூடக் கட்டி முடிக்கப்படாத ராமர் கோயில் கட்டுமான பணி ஒரு நிரந்தரத் தேர்தல் அம்சம்;  தேர்தல் சமயத்தில் அந்தக்கட்சி பழக்கமாக வாடகைக்கு எடுக்கும் வாடிக்கையான வாசகங்களே அவை என்பதை மக்கள் நன்கறிவர். வருடா வருடம் ஏமாறுவதென்று நேர்த்திக்கடன் எதுவுமில்லை.

விவசாயத் தொழிலாளர்களும் தினக்கூலிகளும் பொது உடைமைச் சித்தாந்தங்களை அமிலப் பரிசோதனைக்கு உட்படுத்தவில்லையெனில் கம்யூனிஸ்ட்களுக்கு ஏன் இத்தனை பெரிய சறுக்களை வழங்கியிருக்கிறார்கள்? அதுவும் கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும்? தேசம் வறுமையில் உழலும்போது அவர்கள் தேவை. முன்னேற்றப்பாதையில் தடம் பதித்தபிறகு அவர்கள் ஓர் அநாவசியச்சுமை. எப்போது ஆட்டாவை மட்டிலுமே பேசிக் கொண்டிருந்த இடதுசாரிகள் டாடாவையும் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்தார்களோ அப்போதே சித்தாந்தத்தில் கிழிசல் விழ ஆரம்பித்துவிட்டது. இனிமேல் காரல் மார்க்ஸ் தேவையில்லை. பில் கேட்ஸ் போதும்.

***

நன்றி : ஏ.ஹெச்.ஹத்தீப் , ‘சம உரிமை’

***

தோழர்கள் தொடர்பு கொள்ள :

A. H. Hatheeb Sahib
16, Mohideen Palli Street, Nagore – 611002
Tel : 0365 250218, Mob : 9944884080
E-Mail : hatheeb@gmail.com