பேட்டி கண்டது நண்பர் தாஜ் அல்ல. தைஸீர் அலோனி (تيسير علوني). அவர் (தாஜ்) அனுப்பிய ‘த சன்டே இந்தியன்’ கட்டுரையைப் பதிவிடுகிறேன்.’கவர் ஸ்டோரி’யின் இரு இமேஜ்கள் இங்கே இருக்கின்றன. ‘க்ளிக்’ செய்து பெரிதாக்கவும். இதையே – சில பின்குறிப்புகளுடன் – கவிஞரும் தட்டச்சு செய்து அனுப்பியிருந்தார். அதுவும் அடியில் உண்டு. பாருங்கள். நன்றி.
‘நாம் அனைவரும் அமைதிக்குத் தரவேண்டிய விலைதான் போரா?’
***
செப்டம்பர் 11 தாக்குதல் நடந்ததற்கு ஒரு மாதம் கழித்து, அப்போது உலகம் முழுவதும் தேடப்பட்ட ஒரு நபரை பத்திரிகையாளர் டைசீர் அலோனி பிரத்யேக நேர்காணல் செய்தார். அந்த நபர் ஒசாமா பின்லேடன். காபூலில் சி.என்.என். மற்றும் அல்ஜெசிராவின் செய்தியாளராக இருந்த இவர், சிரியாவில் பிறந்து ஸ்பெயினில் வாழ்பவர். அல்காயிதா அமைப்பைச் சேர்ந்தவர் எனக் குற்றம்சாட்டப்பட்டு, மேட்ரிட் நீதிமன்றம் இவருக்கு ஏழாண்டு சிறைத்தண்டனை அளித்தது. எண்ணற்ற மனுக்களுக்குப் பிறகு 51 வயதான டைசீர், கொடும் சிறையான அல்காலா மெகாவிலிருந்து ஸ்பெயினில் கிரானடாவில் உள்ள தன் வீட்டுக்கு மாற்றப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இப்போதும் வீட்டுக்காவலில் இருக்கும் டைசிர் அலோனி, த.ச.இ.க்கு (த சன்டே இந்தியன்-க்கு) அரபியில் தனது நேர்காணலை எழுதி அளித்திருக்கிறார். இதில் அவர் இஸ்லாம், மேற்குலகம், சமாதானத்திற்கான தடைகள் குறித்துப் பேசுகிறார் – இந்திரா
***
வீட்டுச்சிறை
பிப்ரவரி 2012 வரை நான் வீட்டுக் காவலில்தான் இருக்கவேண்டும். காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நான் வெளியே சென்றுவரலாம். ஆனால் கிரானடாவுக்கு வெளியே நான் செல்லமுடியாது. இதனால் பத்திரிகையாளராக பணிபுரிய இயலாது. அதற்கு நான் ஸ்பெயின் நாடு முழுவதுமாவது பயணிக்க இயலவேண்டுமே….
ஒசாமாவுடன் நேர்காணல்
நான் ஒரு பத்திரிகையாளராக அவரை பேட்டி கண்டேன். இதற்காக ஒருபோதும் வருத்தப்படமாட்டேன். மீண்டும் அதுபோன்ற சூழ்நிலை எழுந்தாலும், அந்த வேலையைச் செய்வதற்கு தயங்கமாட்டேன். பின்லேடன் , குரானுக்கு அவருக்கே உரியதான அர்த்தப்படுத்தலைச் செய்தார். அவரது கருத்துடன் அனைத்து முஸ்லிம்களும் உடன்பட வேண்டியதில்லை. ஒரு யூதராகவோ, கிறிஸ்துவராகவோ இருப்பதற்காக அவர்களுடன் முகமது நபி சண்டையிடவில்லை. ஆனால் நீங்கள் எப்படி அவர்கள் மீதான போரை நியாயப்படுத்துகிறீர்கள் என்றும் கேட்டேன். அவர் 1998 ஆம் ஆண்டில், தான் வெளியிட்ட அறிக்கையைக் குறிப்பிட்டார். முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்ததாலேயே யூதர்கள் மற்றும் சிலுவைப் போராளிகள் மீது போரை அறிவித்ததாகக் கூறினார். ஆனால் இதற்கு முரணாக 2001 ஆம் ஆண்டில் ஜார்ஜ் புஷ், தனக்கு கடவுளிடமிருந்து செய்திகள் வந்துகொண்டிருந்ததாகவும் ‘சிலுவைப் போரை’ தொடங்கியதாகவும் தெரிவித்தார். இது ஒசாமாவுக்கும் பொருந்துவதுதான் சோகமயமானது.
மேட்ரிட் குண்டுவெடிப்புகள்
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற மேட்ரிட் குண்டுவெடிப்புகள் பற்றி நான் செய்தி எழுதினேன். குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்கள் மீதானவிசாரணையின் தகவல் அது. அவர்கள் வடக்கு ஸ்பெயினில் உள்ள சில சுரங்க உரிமையாளர்களிடம் வெடிமருந்துகளை வாங்கினார்கள். ஆனால் விற்றது வாங்கியதைத் தவிர அங்கு வேறு எதுவும் நடக்கவில்லை. சுரங்க உரிமையாளர்களுக்கு வெடிமருந்து எதற்காக வாங்கப்படுகிறது என்பது தெரியாது.
வேறு வழி உண்டா?
அல் காயிதா மற்றும் பிற அமைப்புகளில் முஸ்லிம் இளைஞர்கள் அதிகம் சேர காரணம், உலகின் பல இடங்களில் முஸ்லிம்கள் சந்திக்கும் அநீதிதான். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்காவும் மேற்குநாடுகளும் தங்கள்மீது இலக்கு வைத்துள்ளதாக அவர்கள் உணர்கிறார்கள். அப்பாவிகள் கொல்லப்படுவதுதான் பயங்கரவாதம் என வைத்துக்கொள்வோம். அப்படிதான் பின்லேடன் பயங்கரவாதி ஆகிறான். ஆனால் அமெரிக்காவோ, ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களைக் கொன்றுள்ளது. இந்தக் கொலையில் இங்கிலாந்தும் பங்குபெற்றது. இந்தச் செயலை நாம் எப்படி பெயரிடப்போகிறோம்? பாலஸ்தீனிய பொதுமக்களை இஸ்ரேல் கொன்றுள்ளது. போராட்டங்களின்போது காஷ்மீரிகளை இந்தியா கொல்கிறது. இதை என்ன பெயரிட்டு அழைப்பது? 60 ஆண்டுகள் ஆகியும் பாலஸ்தீனிய பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கவேயில்லை. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் பாலஸ்தீனியர்கள் கடும் கொடுமைகளுக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கு அமெரிக்காவும் உதவி செய்கிறது. ஐக்கிய நாடுகள் சபையும் இஸ்ரேலுக்கு எதிராக எந்தத் தீர்மானத்தையும் கொண்டுவர முடியவில்லை. ஏனெனில் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா அதை ரத்து செய்ய முயலும். மூன்றாம் உலகநாடுகளின் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக மேற்குநாடுகள் உள்ளன. இப்படியான சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு எதிர்காலம் மிகப் பாதகமானதாகவே தோன்றுகிறது.
அகிம்சை ஓரளவுக்கு உதவும்
மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா ஆகியோரின் போராட்ட வழிமுறைகள் வெற்றிக்கரமான பலன்களைத் தந்தன. ஆனால் தற்போதைய நிலைமை வித்தியாசமானது. காந்தி ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராகவும் மண்டலா நிறவெறி பாகுபாட்டிற்கு எதிராகவும் போராடினார். தற்போது நாம் அரசியல்ரீதியான பாகுபாட்டை எதிர்கொள்கிறோம். உதாரணத்துக்கு பாலஸ்தீனத்தில் ஆக்ரமிப்பை எதிர்க்கும் எந்த வன்செயலும் பயங்கரவாத நடவடிக்கையாக இனம் காணப்படுகிறது. ஆனால், இஸ்ரேலின் குற்றங்களை பாதுகாப்பு என்ற பெயரில் மேற்குநாடுகள் நியாயப்படுத்துகின்றன.
இஸ்லாம் – மறு கண்டுபிடிப்பு
அரசியல் லாபத்திற்காக இன்று இஸ்லாம் தாக்கப்படுகிறது. இஸ்லாம்தான் பயங்கரவாதத்தின் அச்சாக நமக்கு தொடர்ந்து கூறப்படுகிறது. பயங்கரவாதம் என்பதற்கான பொது வரையறை சர்வதேச சமூகத்தில் இல்லை. இஸ்லாமுக்கு வழிகாட்டுதல்கள் எதுவும் தேவையில்லை. அதற்குச் சொந்தமாக கோட்பாடுகள் உள்ளன. உலகம் முழுவதும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எந்த அவசியமும் இஸ்லாமுக்கு இல்லை. இஸ்லாம் அமைதியின் மதம். முஸ்லிம்களின் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராகவே அம்மதம் ஜிகாத்தை வரவேற்கிறது. இச்செயலை எதிரிகள் தீவிரவாதம் என்று சொல்வார்கள் எனில், அது அவர்களுடைய பிரச்சனை. ஏனெனில் அவர்கள் இஸ்லாமை வெறுக்கிறார்கள். இரட்டை அளவுகோல்களையும், போலித்தனத்தையும் முடிவுக்குக்கொண்டு வந்தால் மட்டுமே தீர்வு சாத்தியம்.
***
நன்றி: த சன்டே இந்தியன்/ 04-17,Oct 2010
***
பின் குறிப்பு:
மேற்கண்ட தேதியிட்ட இதழில்,
‘போரும் சமாதானமும்’ என்கிற தலைப்பின் கீழ்…
‘நாம் அனைவரும் அமைதிக்குத்
தரவேண்டிய விலைதான் போரா?
தோட்டா நிரம்பிய துப்பாக்கி இல்லாத வேறொரு வழி இருக்கிறதா?
வாய்ப்புகளை அலசுகிறது த சண்டே இந்தியன்.’
என்கிற முழக்கத்தை முன் வைத்து…..
உலகம் தழுவிய தீவிரவாத எதிர்ப்பு கட்டுரைகள் 12 -ஐ
மாறுபட்ட எழுத்தாளர்களின் பார்வையில்
வெளியிட்டு இருக்கிறது.
அதில் ஒன்றுதான் இது!
*
தட்டச்சு & வடிவம்: தாஜ் | E-Mail : satajdeen@gmail.com
8:52 PM 10/25/2010
***
நன்றி : கநாசு. தாஜ்
***
மேலும் பார்க்க : A Discussion on the New Crusader Wars
Tayseer Allouni with Usamah bin Laden