டெட்சுகோ குயோயாநாகி (Tetsuko Kuroyanagi) எழுதிய புகழ்பெற்ற குழந்தை இலக்கியமான ’TOTTO-CHAN : The Little Girl at the Window’’ நூலிலிருந்து மீண்டும் பதிவிடுகிறேன் (தமிழாக்கம் : அ. வள்ளிநாயகம், சொ.பிரபாகன்). இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயமுமே வைரம்தான் என்றாலும் இந்த ’மாசோ-சான்’ மிகவும் அற்புதமானதாகப் படுகிறது – பிளவுபடுத்த வெறிகொண்டவர்கள் அலையாய் அலையும் இந்த சமயத்தில். வாசியுங்கள். நன்றி. –ஆபிதீன்
**
ஸ்டேஷனிலிருந்தும், ஸ்டேஷனுக்கும் டோட்டோ-சான் செல்லும்போது, கொரியன்கள் வாழும் ஒரு குடியிருப்பு வீட்டைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. டோட்டோ-சானுக்கு அவர்கள் கொரியன்கள் எனத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களைப் பற்றி அவளுக்குத் தெரிந்தது எல்லாம், அங்கு ஒரு பெண்மணி இருக்கிறாள் என்றும், அவள் தனது தலைமுடியை நடுவில் இரண்டாகப் பிரித்துக் கட்டி கொண்டை வைத்திருப்பாள் என்றும், குண்டான அவள் படகு போல் முன் வளைந்த ஒரு வெள்ளை ரப்பர் ஷூவை அணிந்திருப்பாள் என்றும் அறிந்திருந்தாள். அந்தப் பெண்மணி நீள ‘ஸ்கர்ட்’டுடன் கூடிய ஆடையை அணிந்திருந்தாள். அதன் ‘ரிப்பன்’ அவளது சின்ன ‘ப்ளவுசின்’ முன்புறம் வளைத்துக் கட்டப்பட்டிருந்தது. அவள் எப்போதும் பரபரப்புடன் தனது மகனைத் தேடிக்கொண்டு, ‘மாசோ-சான்’ என்றழைப்பாள். பின்னர் தொடர்ந்து தனது மகனை அழைத்துக்கொண்டே இருப்பாள். எல்லோரும் அழைப்பது போல, ‘மசவா-சான்’ என அழைப்பதற்குப் பதில், இரண்டாவது எழுத்திற்கு அழுத்தம் கொடுத்து, “சானை’ உச்ச கட்டையில் அவள் அழுத்தி அழைப்பது டோட்டோ-சானுக்கு வருத்தம் தோய்ந்த குரலாய் ஒலிக்கும்.
அந்தக் குடியிருப்பு ஒய்மாச்சி ரயில் தடம் செல்லும் அந்தச் சின்ன கரையில் அப்படியே பின்னால் இருந்தது. டோட்டோ-சானுக்கு ‘மசவா-சான்’ யார் என்று தெரியும். டோட்டோ-சானை விட கொஞ்சம் பெரியவன். அவன் எந்தப் பள்ளிக்குச் செல்கிறான் எனத் தெரியாவிட்டாலும் அவன் இரண்டாம் கிரேடு படிப்பவனாக இருக்க வேண்டும். அவனது தலைமுடிகள் எப்போதும் கலைந்து கிடக்கும். அவனுடன் எந்த நேரமும் ஒரு நாய் சுற்றிக்கொண்டிருக்கும். ஒருநாள் டோட்டோ-சான் ரயில் தடக்கரை வழியாய் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது மசவா-சான் ரயில் தடக்கரையின் மேல் கால்களை விரித்துக்கொண்டு, கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு, வெறி பிடித்தாற்போல் நின்று கொண்டிருந்தான்,
“கொரியன்” என அவன் டோட்டோ-சானைப் பார்த்துக் கத்தினான்.
அவன் குரலில் புண்படுத்தும் நோக்கமும், வெறுப்பும் மண்டிக் கிடந்தது. டோட்டோ-சான் ரொம்பவும் புண்பட்டுப் போனாள். அவள் அவனுக்கு எதுவுமே செய்ததில்லை. ஏன் அவனுடன் பேசியதுகூட இல்லை. ஆகவே அவன் மேலேயிருந்து வன்மமாய் மொழிந்த போது திடுக்கிட்டுப் பார்த்தாள்.
அவள் வீட்டிற்கு வந்ததும் இது பற்றி அம்மாவிடம் சொன்னாள். “மசவா-சான் என்னைக் கொரியன் என்று அழைத்தான்” என்று அவள் சொன்னாள். அம்மா உடனே அவள் வாயைக் கைகளால் பொத்தினாள். அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந்தன. என்னவோ மோசமாக நடந்திருக்கிறது என நினைத்து டோட்டோ-சான் பதறிப்போனாள். அம்மா இன்னும் தனது கண்களைத் துடைப்பதை நிறுத்தவில்லை. அவளது மூக்கின் நுனி கன்றிப் போய் சிவந்திருந்தது. “பரிதாபமான குழந்தை!” என அம்மா அனுதாபப்பட்டாள். “எல்லோரும் அவனைக் ‘கொரியன், கொரியன்’ என அடிக்கடி அழைத்து இம்சை செய்திருக்க வேண்டும். அதனால் அதை அவன் ‘மோசமான வார்த்தை’ என் நினைத்துக் கொண்டிருக்கிறான். அவன் இன்னும் சிறுவனாய் இருப்பதால் அப்படிச் சொல்வதற்கு என்ன அர்த்தம் என்பது அவனுக்குப் புரிந்திருக்காது. யாராவது ஒருவனை ‘நீ முட்டாள்’ என்று சொல்வதற்கு, ‘பாகா’ என்று சொல்கிறார்களே, அப்படியொரு வார்த்தை என நினைத்திருப்பான். தன்னை நோக்கி, ‘கொரியன்’ என்ற பதம் அதிகமாக பிரயோகப்படுத்தப்படுவதைக் கண்டு, தானும் அந்த மாதிரியான ‘மோசமான வார்த்தை’யை யாரையாவது நோக்கி பிரயோகப்படுத்த வேண்டும் என நினைத்திருக்கிறான். அதனால்தான் அவன் உன்னை ‘கொரியன்’ என அழைத்திருக்கிறான். மக்கள் ஏன் இப்படிக் கொடுமையாக நடந்து அவனை வெறுப்பேற்றுகிறார்களோ?”
அம்மாவின் கண்கள் காய்ந்ததும், மெல்லிய குரலில் டோட்டோ-சானிடம் சொன்னாள், “நீ ஒரு ஜப்பானிச்சி. மசவா-சான் கொரியா என்ற நாட்டில் இருந்து இங்கு வந்திருக்கிறான். ஆனாலும் அவனும் உன்னை மாதிரி ஒரு குழந்தைதான். என்னருமை டோட்டோ-சான், நீ எப்போதும் மக்களுக்குள் பல வகைகள் இருப்பதாக நினைக்காதே.. ‘இவன் ஜப்பானியன்.. அல்லது இவன் கொரியன்’ என்று எண்ணாதே. மசவா-சானுடன் மென்மையாக நடந்து கொள். அவன் கொரியன் ஆனதால், அவன் மென்மையானவன் அல்லன் என்று மற்றவர்கள் நினைப்பது மிகவும் துக்ககரமானது.”
இதைப் புரிந்து கொள்வதற்கு டோட்டோ-சானுக்குக் கடினமாக இருந்தது. இருந்தாலும் அவள் புரிந்து கொண்டது என்னவோ மசவா-சான் என்ற சிறுவனிடம் எந்தவிதக் காரணமும் இல்லாமல் மக்கள் மோசமாக பேசுகிறார்கள் என்பது மட்டும்தான். அதனால்தான் அவன் அம்மா எப்போதும் ஆர்வத்துடன் அவனைத் தேடிக் கொண்டிருக்கிறாளோ, என டோட்டோ-சான் நினைத்தாள். அடுத்த நாள் காலை அந்த ரயில் கரைத்தடம் வழியாக அவள் கடந்து கொண்டிருந்த போது, அந்த அம்மாவின் கீச்சுக் குரலில் “மாசோ-சான்” என ஒலித்தது. அவன் எங்கே போயிருப்பான் என வியந்தாள். அவள் தனது மனதைத் திடப்படுத்திக் கொண்டாள். அவள் கொரியச்சி இல்லை என்றாலும், அவன் அவளை அப்படி அழைத்தால் இப்படித்தான் பதில் சொல்ல வேண்டும். “நாம் எல்லோரும் குழந்தைகள்! நாம் எல்லோரும் ஒன்று!!”” பிறகு அவனுடன் நட்புறவு கொள்ள வேண்டும்..
மசவா-சானின் அம்மாவின் குரல், ஆவலும் அவதியும் கலந்து தனக்கேயுரிய இயல்புடன், காற்றுடன் நெடுநேரம் தங்கியிருக்கும்… அந்த வழியே கடக்கும் ரயில் சத்தத்தால் விழுங்கப்படும் வரைக்கும் அந்த குரல் அதிர்ந்து கொண்டிருக்கும்.
“மாசோ-சா………ன்”
நீங்களும் அந்தத் துக்ககரமான, கண்ணீர் நிரம்பிய குரலைக் கேட்டால் பிறகு மறக்கவே மாட்டீர்கள்…
**
நன்றி : Tetsuko Kuroyanagi , நேஷனல் புக் டிரஸ்ட் , இன்று இரவு மீண்டும் ’The King and the clown’ திரைப்படம் காணப்போகும் சென்ஷி