ஆஸ்தானம் கலகலவென்று இருக்கிறது

இது கடைசி பதிவு.  ‘வேறொரு பெயரில் / முகவரியில் தொடரலாம் என்றால் வேண்டாம் என்று மனசு சொல்கிறது. உங்கள் அபிப்ராயம் என்ன?’ என்று நண்பர் தாஜிடம் கேட்டால், ‘ கரெக்ட். மீறிட்டா நாளைக்கு அது தொல்லை தாங்காது. ஆனா, இப்பத்தான்  நம்ம ஃபிளைட் டேக்ஆஃப் ஆகியிருக்கிறது. பறக்கவிட்டுப் பார்ப்பதென்பதுதான் இத்தனை நாள் கொண்ட சிரமத்திற்கு சரியான அர்த்தமாக இருக்க முடியும். என்றாலும்… the ball is in your court’ என்கிறார் . யோசிப்போம்… இப்போது  பெர் லாகர்குவிஸ்ட் ( Pär Lagerkvist ) எழுதிய ‘குள்ளன்’ நாவலிலிருந்து (தமிழில் : தி. ஜானகிராமன்) கொஞ்சம் பதிவிடுகிறேன். க.நா.சு அவர்களின் மொழிபெயர்ப்பில் வந்த புகழ்பெற்ற ‘அன்பு வழி’ (barabbas) பற்றி தாஜ் விரைவில் எழுதுவார், அவரது வலைப்பக்கத்தில்.  ‘அன்பு வழி’ மாதிரி ஒரு நாவல் என்னால் எழுத இயலுமா? என்று நம் வண்ணநிலவன் ஏங்கியதையும் சேர்த்து அவர் எழுதவேண்டும். ஆபிதீன் பக்கங்களுக்கு பங்களித்த எல்லாருக்கும் நன்றி. – ஆபிதீன்

***

ஆஸ்தானம் கலகலவென்று இருக்கிறது. வினோதப் பிரகிருதிகளெல்லாம் அங்கு நிறைந்திருக்கிறார்கள். தலையைக் கையில் தாங்கிக்கொண்டு வாழ்க்கையின் பொருளைக் கண்டுபிடிக்க முயலும் அறிஞர்கள் வயதாகி பஞ்சடைந்த தங்கள் கண்களால் விண்மீன்களின் போக்கைத் தொடர்ந்து பார்க்க முடியும் என்றும் மனிதனுடைய விதியே இந்த நட்சத்திரங்களில் பிரதிபலிக்கப்படுகிறது என்றும் நம்புகிற வானியல் பண்டிதர்கள் ஒருபுறம். தூக்குமேடைக்கு லாயக்கானவர்கள் ஒருபுறம். ஆஸ்தானத்திலுள்ள பெண்மணிகளுடன் தாங்கள் செய்த போதை நிறைந்த செய்யுட்களை வாசித்துக் காட்டும் சாகஸிகள் ஒருபுறம். இவர்கள் மறுநாள் காலையில் சாக்கடையில் ரத்தம் கக்கியவாறு குப்புற விழுந்து கிடப்பார்கள். (இப்படிக் கிடக்கும்பொழுதுதான் ஒருவன் முதுகில் குத்திக் கொல்லப்பட்டான். கவலியர் முரசெல்லிக்கு எதிராக ஒரு நையா|ண்டிப் பாட்டு எழுதியதற்காக இன்னொருவன் நன்றாகப் புடைக்கப்பட்டான்.) வரம்பில்லாமல் வாழும் கலைஞர்கள் ஒருபுறம். பக்தி விக்ரகங்களை மாதா கோயிலுக்குச் செய்து கொடுக்கும் வேலை இவர்களுக்கு. புதிய மாதா கோயிலின் மணிமண்டபத்தைக் கட்டுவதற்காக வந்த சிற்பிகளும் பிளான் எழுதுபவர்களும் ஒருபக்கம். இன்னும் எத்தனையோ பேர் கனவு காண்பவர்களிலிருந்து வைத்தியர்கள் வரையில் எத்தனையோ பேர். இந்த நாடோடிகள் வந்து போய்க்கொண்டே இருப்பார்கள். சிலர் என்னவோ இங்கேயே பிறந்து வளர்ந்த மாதிரி நீண்டகாலம் தங்குகிறார்கள். எல்லோருமே இளவரசரின் விருந்தோம்பும் பண்பை துஷ்பிரயோகம் செய்கிறவர்கள்.

இவர் (இளவரசர்) உபயோகமில்லாத எந்த ஆட்களை எதற்காக வைத்துச் சோறு போடுகிறார் என்றே எனக்குப் புரியவில்லை. இதைவிடப் புரியாதது அவர்களோடு உட்கார்ந்து அவர்களுடைய பிதற்றல்களையெல்லாம் காது கொடுத்துக் கேட்கிறாரே அதுதான். யாராவது கவிகள் அதுவும் எப்பொழுதாவது தாங்கள் எழுதிய பாட்டுகளைச் சொல்லும் பொழுது ஒருவர் கேட்கலாம். இந்தக் கவிகளெல்லாம் ஆஸ்தானத்தில் வளர்கின்ற கோமாளிகளைப் போல மனித ஆத்மாவின் தூய்மையைப் பற்றியும்  பெரிய சம்பவங்களயும் வீரச் செயல்களையும் போற்றிப் பாடுவார்கள். இதைப் பற்றி எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. அதுவும் இந்தப் பாட்டுகள் அவரை முகஸ்துதி செய்தால் வரவேற்க வேண்டிய விஷயம்தான். மனிதர்களுக்கு முகஸ்துதி தேவை. இல்லாவிட்டால் பிறந்த நோக்கமே நிறைவேறவில்லை என்றுதான் அவர்கள் நினைப்பார்கள். தங்கள் கண்ணில் தாங்களே மட்டமாகி விட்டதாக அவர்களுக்குத் தோன்றும். பழைய காலத்திலும் இந்தக் காலத்திலும் அழகான உன்னதமான எத்தனையோ பொருட்கள் இருக்கின்றன. அப்படி அவைகள் இருக்கக் காரணம் அவற்றிற்கு அளிக்கப்பட்ட புகழ்ச்சிதான். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கவிகள் காதலின் புகழைப் பாடுகிறார்கள். இது மிகவும் அவசியம். இந்த உலகத்தில் இன்னொன்றாக பரிணமிக்கக்க் கூடிய தேவை காதல் மாதிரி வேறு எதற்குமே இல்லை. பெண்மணிகள் ஏக்கம் நிறைந்து மார்பு விம்ம பெருமூச்செறிகிறார்கள். ஆண்கள் கனவு காண்பது போல சூன்யத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பெண்களின் இந்த அவஸ்தையின் காரணம் தெரியும். தங்கள் அழகான கவிதையே காரணம் என்று அவர்களுக்கு ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது. மக்களுக்கு மத சம்பந்தமான படங்கள் வரைய கலைஞர்கள் இருக்க வேண்டுமென்பதும் எனக்குப் புரிகிறது. ஏனெனின் தங்களைப் போல வறுமையும் அழுக்குமில்லாத ஒன்றைத்தானே மக்கள் தொழ வே|ண்டும்? உயிரைத் தியாகச் செய்தவர்களின் உருவங்களை. அழகாக மண்வாடையே இல்லாமல் இந்தக் கலைஞர்கள் வரைகிறார்கள். உயிரைத் தியாகம் செய்த இந்த மகான்களுக்கு உயர்ந்த ஆடைகளும், தலையைச் சுற்றி ஒரு தங்க ஜோதியும் வரைகிறார்கள். தாங்கள் செத்துப்போன பிறகு மக்கள் இப்படி தங்களையும் கௌரவிப்பார்கள் என்ற எண்ணம் இந்தக் கலைஞர்களுக்கு. இந்தப் படங்கள் பாமர மக்களுக்கு என்ன காட்டுகின்றன? அவர்களுடைய பிரபு சிலுவையில் அறையப்பட்டார். ‘இந்த பூமியில் ஏதோ அவர் நல்லது செய்ய நினைத்த பொழுதுதான் இது நிகழ்ந்தது. ஆக இந்த மண்ணில் எந்தவித நம்பிக்கைக்கும் இடமில்லை’ என்று மக்களுக்கு உரைக்கின்றன இந்தப் படங்கள். இத்தகைய எளிய தொழிலாளிகள் ஒரு இளவரசருக்கு மிகமிக அவசியம். ஆனால் அரண்மனையில் அவர்களுக்கு என்ன வேலை என்றுதான் புரியவில்லை.

***

நன்றி : ஐந்திணைப் பதிப்பகம்