பணக்காரனுக்கு ஒண்ணு பத்தாது! – ’கூகி’

’முஸாஃபிர் ஹுங் யாரோ’ என்று நான் பாடியதைக் கேட்ட நண்பன்,  ‘நீதான்’ என்றான். ஹக். ’முஸாஃபிர் சத்திரம்’ என்ற தலைப்பில் தாஜ் எழுதிய பதிவிற்கான சுட்டியையும் கொடுத்தான். அல்லாவே, அவர் அங்கே எழுத ஆரம்பித்து விட்டாரா மீண்டும்? ஆபிதீன் பக்கங்களின் ஆறு வாசகர்களும் தப்பித்தார்கள்.   தாஜ் தனியாக எழுத ஆரம்பித்தது எனக்கு தெரிந்துவிட்டது என்று காட்ட ’ நாகூர் முஸாஃபர்’ என்ற பெயரில் ஒரு கமெண்ட் போட்டேன். இன்னொரு கமெண்ட் போட்ட ஷார்ஜா நண்பர் தன்னை ‘இன்னொரு முஸாஃபிர்’ என்று அங்கே குறிப்பிட்டிருக்கிறார்.  மூணு ட்ரக் வாங்கி சம்பாதிக்க நினைப்பவர் முஸாஃபரா? வேடிக்கை.  எங்கள் இருவருக்கும் பதில் சொன்ன தாஜ்பாய் – தாஜ்வின் ரியல் எஸ்டேட் ஓனர் – இருக்கிறாரே… தன்னை ’நிஜ முஸாஃபிர்’ என்று சொல்லியிருக்கிறார். ’வாங்க நம்ம காரில் போகலாம்’ என்று சொல்லி சோழன் டிரான்ஸ்போர்ட் பஸ்ஸில் கூட்டிச் செல்பவர் அப்படித்தான் சும்மா சொல்வார்; விடுங்கள் மோகன்லால் ரசிகரை.

அருமையாக ஆரம்பித்திருக்கும் தாஜ் பதிவில் , ஏழை – பணக்காரன் – அல்லா என்றெல்லாம் ’விவாதம்’ வருகிறது.  அதில் வரும் ஹஜ்ரத்தையும் எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது. படித்தவுடன் , பணக்காரர்கள் பற்றி ‘கூகி’ எழுதிய பகுதிதான் ஞாபகம் வந்தது. பயங்கரமாக என்னை சிரிக்கவைத்த எழுத்து அது. ’“If poverty was to be sold three cents today, i can’t buy it.” என்று சொல்லும் ’கூகி’யின் எழுத்தை –  சிரிப்பும் சினமும் கலந்த எழுத்தே சிறந்த எழுத்து என்று சொல்வதற்காக – பதிவிடுகிறேன். இண்டெர்நெட் ’ஏழைகள்’ இன்புறுவார்களாக!

ஒரு விஷயம்.  ‘சுதந்திரத்திற்காகப் போராடுவது என்ற விஷயமே ஒரு மோசமான கனவுதான், அர்த்தமில்லாத கொடுங் கனவுதான். இனி, மூன்றே மூன்று விஷயங்களுக்காக நாம் ஒன்று சேர்வோம்: கபளீகரம் செய்வது, பணம் பிடுங்குவது, சொத்துக்களைப் பறிமுதல் செய்வது. திருட்டின் மூன்று புனித வடிவங்கள்: தட்டிப் பறித்தல், அச்சுறுத்திப் பணம் பறித்தல், பறிமுதல் செய்தல். பொதுமக்களுக்குச் சொந்தமான எதைக் கண்டாலும் சும்மா விடாதீர்கள்; ஏனென்றால் நம்மை நாமே பார்த்துக் கொள்ளாவிட்டால் வேறு யார்தான் பார்த்துக் கொள்வார்கள்?’  என்றெல்லாம் (வாக்குமூலத்தில்) வரும் நீண்ட முற்பகுதியை பிறகு பதிவேற்றுகிறேன். நேற்றிலிருந்து கடும் ஜூரம். முந்தாநாள் சந்திக்க வந்த கவிஞர் முபாரக், ஆபிதீன் பக்கங்கள் வரவர சகிக்கவில்லை ; ஆபிதீனும் எழுதுவதில்லை என்று சொன்னதுதான் காரணம் என்று நினைக்கிறேன். அவன் எழுத ஆரம்பித்தால் இன்னும் மோசமாக அல்லவா போகும்! எனவே, முக்கியமான பிற்பகுதி மட்டும் இப்போது. நன்றி – ஆபிதீன்

***

கூகி வா தியாங்கோ  எழுதிய ’சிலுவையில் தொங்கும் சாத்தான்’ (Devil on the Cross) நாவலிலிருந்து..(தமிழாக்கம் : அமரந்த்தா – சிங்கராயர்)

***

தீதிகா வா கூஞ்சியின் வாக்குமூலம் :

‘…இப்போது நான் அந்த புத்திசாலித்தனமான திட்டத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். அப்போது அடிமைத்தனத்தின் மகுடத்தை அணியக்கூடிய தகுதியான ஒரே ஆள் நான்தான் என்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

‘ஒரு இரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென்று அந்தயோசனை உதித்தது. என் இதயம் மகிழ்ச்சியால் துள்ளியது. நம்மைப் போன்ற செல்வந்தர்களுக்கு புது வாழ்வு தரும் ரகசியம் எனக்கு வெளிப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன்.

‘நமது தென்னாப்பிரிக்க போயர் இன நண்பர் பேராசிரியர் பர்னாடு மனித உடலில் உறுப்பு மாற்று சிகிச்சை பற்றிப் பேசுவதற்காக இங்கு வந்திருந்தாரே, அப்போதுதான் அது உதித்தது. கென்யாட்டா மருத்துவமனையில் அவர் மருத்துவர்களுடன் பேசும்போது நானும் இருந்தேன். வழக்கமாக எனக்கு ஏற்படும் கவலை அப்போது பீடித்தது.

‘இந்த தீதிகா வா கூஞ்சி எப்போதெல்லாம் அவனுடைய அபரிதமான செல்வத்தைப் பற்றி நினைக்கிறானோ அப்போதெல்லாம் பல விடை தெரியாத கேள்விகளை அவனுக்குள்ளேயே வருத்தத்துடன் கேட்டுக் கொள்கிறான். இவ்வளவு செல்வங்கள் இருந்தும் என்னிடம் இருப்பது என்ன? ஒரு மனிதனுக்கு – ஒரு தொழிலாளிக்கோ, ஒரு விவசாயிக்கோ, ஒரு ஏழைக்கோ – இல்லாதது என்ன இருக்கிறது என்னிடம்? ஏழையைப் போலவே ஒரே ஒரு வயிறுதான். பரம ஏழையைப் போலவே ஒரே ஒரு இதயம்தான்; இருப்பதிலேயே ஏழையான மனிதனைப் போலவே ஒரே ஒரு…தான். உங்களுக்கு தெரியும், நான் எதைச் சொல்ல வருகிறேன் என்று.

‘ஆயிரம் பேருக்கு உணவு படைக்கும் அளவுக்குப் போதுமான பணமும் சொத்தும் என்னிடம் இருந்தும் ஏழைகளைப் போலவே ஒரு தட்டு உணவே எனக்குப் போதுமானதாக இருக்கிறது. ஒரே சமயத்தில் நூறு சூட்டுகள் அணியுமளவுக்கு என்னிடம் போதுமான பணம் இருந்தும், மற்றவர்களைப் போலவே ஒரே ஒரு கால்சட்டையும், சட்டையும், ஜாக்கெட்டும்தான் நான் அணிய முடிகிறது. சந்தையில் மனித உயிர் விற்கப்படுமானால், ஐம்பது உயிர்களை வாங்குமளவுக்கு என்னிடம்  பணம் இருந்தும் மற்றவர்களைப் போலவே எனக்கு ஒரே ஒரு இதயமும், ஒரே ஒரு உயிரும்தான் இருக்கிறது. ஒரே இரவில் பத்துப் பெண்களுடன் படுக்குமளவுக்கு என்னிடம் சொத்தும் பணமும் இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு தடவையில் ஒரே ஒரு பெண்ணே என்னை சோர்வடைய வைத்து விடுகிறாள். நானும்  முழுத் திருப்தியில்லாமல் தூங்கிப் போய்விடுகிறேன்.

‘ஆக, ஒரே ஒரு வாயும், ஒரே ஒரு வயிறும், ஒரே ஒரு இதயமும், ஒரே ஒரு உயிரும், ஒரே ஒரு குறியும் எனக்கு இருப்பதைப் பார்க்கும்போது பணக்காரனுக்கும் ஏழைக்கும் என்னதான் வேறுபாடு இருக்கிறது என்று தோன்றுகிறது. அடுத்தவரிடமிருந்து திருடி என்ன பயன்?

‘அந்த இரவில் எனக்குப் புரிந்தது இதுதான்: நம் நாட்டில் வாய், வயிறு, இதயம் போன்ற மனித உடலின் பாகங்கள் – உதிரி பாகங்கள் – தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இருக்க வேண்டும். அதாவது, வசதிப்பட்டால் ஒரு பணக்காரன் இரண்டு அல்லது மூன்று வாய்கள், இரண்டு வயிறுகள், இரண்டு குறிகள், இரண்டு இதயங்கள் வைத்துக்கொள்ள முடிய வேண்டும். முதல் வாய் மென்று, மென்று அலுத்துப் போய்விட்டால், முதல் வயிறு நிரம்பிப் போய்விட்டால், மற்ற வாயும் வயிறும் அந்த வேலையைச் செய்ய முடிய வேண்டும். என்னைப் போல வயதான மனிதனிடம் ஒரு சுகர் கேர்ள் இருக்கும் போது முதல் எஞ்சின் நின்றவுடன் அப்படியே தூங்கி விடுவதற்குப் பதிலாக அடுத்ததை இயக்கி கையிலுள்ள வேலையை தொடரலாம். இரண்டு எஞ்சின்களுள் ஒன்றுக்கொன்று இரவு முழுவதும் உதவி செய்தால், காலையில் விழித்தெழும்போது மனமும் உடலும் முழுவதுமாக ஓய்வெடுத்த நிறைவு கிடைக்கும், சில புதிய பழமொழிகளை உருவாக்கலாம்.: ‘பணக்காரனின் இளமை முடிவதேயில்லை’; ஒரு மனிதனுக்கு இரண்டு இதயங்கள் இருந்தால் உண்மையில் அவனுக்கு இரண்டு உயிர்கள் இருப்பதாகத்தானே அர்த்தம்? அப்படியானால், மெய்யான பணக்காரன் சாகவே மாட்டான் என்று பொருள். இன்னொரு பழமொழிக்கும் சாத்தியமுண்டு: ‘பணக்காரன் சாவதில்லை’. நமது பணத்தைக் கொண்டு சாகா வரத்தை வாங்கி, சாவை ஏழைகளின் முழு உரிமையாக்கி விட்டுவிடலாம்.

‘இந்த யோசனையால் நான் புளகாங்கிதமடைந்துவிட்டேன். ஆனால் ஒரு தவறு செய்துவிட்டேன். அதைப் போய் என் மனைவியிடம் சொல்லிவிட்டேன். அதிக அவசரம் கிழங்குக்கு கேடு. பெண்களுக்கு ரகசியங்கள் கிடையாது.

‘முதன் முதலில் என் மனைவி இந்த யோசனையில் மகிழ்ந்து போய் என்னைக் கட்டி அணைத்து ஆங்கிலத்தில் கொஞ்சி (’என் புத்திசாலி குட்டிக் கண்ணு’) முத்தமாரியும் பொழிந்தாள். ஒருவேளை இந்த யோசனை நிறைவேறினால் பிரமாதமாக இருக்கும்; ஏனென்றால் பணக்காரனின் மனைவியை ஏழையின் மனைவியிடமிருந்து வேறுபடுத்துக் காட்ட அது உதவும் என்றாள். இப்போதெல்லாம் ஏழையோ, பணக்காரர்களோ துணிகளின் மொத்த உற்பத்தியால் பெண்கள் எல்லோரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். ஆனால், இந்தத் தொழிற்சாலை உருவாகி விட்ட பிறகு, பணக்காரர்களின் மனைவிகளை அடையாளம் காண அவர்களுடைய இரண்டு வாய், இரண்டு வயிறு, இரண்டோ அதற்கு மேலோ இதயம், அப்புறம்…. இரண்டோ அதற்கு மேலோ பெண்ணுறுப்புகள். இவற்றை வைத்து அடையாளம் கண்டுவிடலாம்.

‘இரண்டு பெண்ணுறுப்புகள், ஒன்றுக்கு பதிலாக இரண்டு வைத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் அவள் சொன்ன பிறகு,  நான் பயத்தில் வெலவெலத்துப் போய்விட்டேன். ஒளிவு மறைவில்லாமல் அவளிடமும் சொன்னேன்: ‘உனக்கு இரண்டு வாய், இரண்டு வயிறு, இன்னும் பிற உறுப்புகள் எத்தனை இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. ஆனால் இரண்டு… மட்டும் கூடாது, கூடவே கூடாது! இந்தப் பைத்தியக்காரத்தனைத்தை எல்லாம் மறந்துவிடு’ என்று சொன்னேன். உடனே அவள் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டாள். விஷயம் அப்படித்தான் என்றால் உங்களுக்கும் இரண்டு குறிகள் இருக்கலாகாது என்றாள். உனக்கு எதற்கு இரண்டு சொல், இரண்டை எதற்கு உபயோகிப்பாய் என்று கசப்புடன் கேட்டேன். உனக்கு மட்டும் எதற்கு இரண்டு? இரண்டை நீ எதற்கு உபயோகிப்பாய்? உனக்கு இரண்டு இருந்தால் எனக்கும் இரண்டு இருக்க வேண்டும். இரு பாலாருக்கும் சமத்துவம் இருக்க வேண்டும் என்றாள்.

’இதற்குள் எனக்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்து விட்டது. அவளுடைய சமத்துவத்தை எடுத்துக்கொண்டு ஐரோப்பா, அல்லது அமெரிக்காவுக்கு ஓடும்படி சொல்லிவிட்டேன். இங்கு நாம் ஆப்பிரிக்கர்கள். நாம் ஆப்பிரிக்கப் பண்பாட்டைத்தான் பின்பற்ற வேண்டும் என்று சொல்லி அவள் முகத்தில் பளாரென்று ஓர் அறை விட்டேன். அழ ஆரம்பித்து விட்டாள். மறுபடியும் ஓர் அறை விட்டேன். மூன்றாவது முறை அறையப் போனபோது அவள் சரணடைந்து விடாள். நான் மூன்றோ பத்தோ கூட வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாள். அவள் ஒன்றிலேயே திருப்தி அடைந்து கொள்வாளாம்.

’மக்களே! அந்தக் கண்காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். ஒவ்வொரு பணக்காரனும் இரண்டு வாய், இரண்டு வயிறு, இரண்டு குறி, இரண்டு இதயம் வைத்துக் கொள்ளலாம். அப்படியே இரண்டு உயிர்களும் கூட. நம் பணம் நமக்கு சாகா வரம் வாங்கும்படி உதவும். சாவை ஏழைகளுக்கே விட்டு விடலாம். ஹாஹாஹா!

‘கொண்டு வாருங்கள் மகுடத்தை! ஒருவழியாக அது தனக்குத் தகுதியானவரிடம் வந்து சேர்ந்து விட்டது!’

***

நன்றி : அமரந்த்தா, தாமரைச் செல்வி பதிப்பகம்

***

பார்க்க : சிலுவையில் தொங்கும் சாத்தான் – தமிழ்கூடல் விமர்சனம்

மேலும்…


Thanks : africanheritagevideo