நாகிப் மாஃபௌஸ்

mahfouz.gif 

நாகிப் மாஃபௌஸ் – நோபல் பரிசு (1988) ஏற்புரை
(தமிழில் : ஜி. குப்புசாமி / ‘அட்சரம்’ )அன்பார்ந்த சீமாட்டிகளே, கனவான்களே,முதலில் நான் ஸ்வீடிஸ் அகாதெமிக்கும், அதன் நோபல் குழுவிற்கும் என்னுடைய நீண்ட, இடைவிடாத இலக்கிய முயற்சிகளை அங்கீகரித்து கௌரவப் படுத்தியிருப்பதற்காக நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, எனது உரையை பொறுமையுடன் சகித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் உங்களில் பெரும்பான்மையினருக்கு பரிச்சயமில்லாத மொழியில் நான் பேசுகிறேன். ஆனால் உண்மையில் இந்த மொழிதான் பரிசை வென்றிருக்கிறது என்று சொல்ல வேண்டும். எனவே உங்களுடைய கலாச்சார, நாகரீகச் சோலையில் இந்த மொழியின் இசை மிதந்தே தீர வேண்டும். இத்துடன் இது முடிந்துவிடாதென்றே நான் நினைக்கிறேன். கவலை மிகுந்த நம் உலகத்தில், இன்பத்தின் சுகந்தத்தைப் பரப்பிவரும் மாபெரும் சர்வதேச படைப்பாளிகள் அலங்கரிக்கும் இச்சபையில் எனது தேசத்தின் எழுத்தாளர்கள் பலரும் எதிர்காலத்தில் கௌரவிக்கப் படுவார்களென்றே நான் உறுதியுடன் நம்புகிறேன்.என் பெயர் இப்பரிசிற்காக அறிவிக்கப்பட்டவுடன் , அந்த இடம் சட்டென்று நிசப்தமானதாகவும், பலரும் நான் யார் என்பது அறியாமல் வியந்ததாகவும் ஓர் அயல்நாட்டு நிருபர், கெய்ரோவில் என்னிடம் கூறினார். எனவே இயன்றவரையில் சுருக்கமாக என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டுகிறேன். சரித்திரத்தின் ஒரு கட்டத்தில் இருவேறு நாகரிகங்களுக்க்கிடையே நிகழ்ந்த ஒரு சந்தோஷமான திருமணத்தின் மூலம் பிறந்தவன் நான். இவற்றில் முதல் நாகரிகத்திற்கு ஏழாயிரம் வயதாகிறாது. அது ஃபோரோனிக் நாகரிகம். அடுத்ததிற்கு ஆயிரத்து நானூறு வயதாகிறது. அது இஸ்லாமிய நாகரிகம். உயர்ந்த அறிஞர்களான உங்களிடம் இவ்விரண்டயும் நான் அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. ஆனால் இப்போது சிலவற்றை நினைவு படுத்துவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.·ஃபோரோனிக் நாகரிகத்தைப் பொறுத்தவரை, அதன் ஆக்கிரமிப்புகளைப் பற்றியும், உருவான பேரரசுகள் பற்றியும் பேசப் போவதில்லை. நல்ல வேளையாக இன்றைய யுகத்தின் மனசாட்சி, இவற்றை காலாவதியான, பெருமிதமான சங்கடத்துடன் ஒதுக்கி விடுகிறது. முதன்முறையாக கடவுள் என்றதொரு சக்தியை உணர்ந்து மனிதனுக்கு ஆன்மிக உணர்வு அரும்பியதைப் பற்றியும் பேசப் போவதில்லை. இது ஒரு நீண்ட சரித்திரம். உங்களில் ஒருவர் கூட தீர்க்கதரிசியான மன்னன் அகெனேடனைப் பற்றி அறியாதிருக்க மாட்டீர்கள். இந்நாகரிகத்தின் கலை இலக்கிய சாதனைகளைப் பற்றியோ, புகழ்பெற்ற அதன் அதிசயங்கள், பிரமிட்டுகள், ஸ்பின்ங்ஸ், கமக்கைப் பற்றியோ கூட பேசப் போவதில்லை. இந்நினைவுச் சின்னங்களைப் பார்த்திராதவர்கள்கூட இவற்றைப் படித்தும், இவற்றின் வடிவத்தை, பிரமாண்டத்தை அறிந்தும் பிரமித்திருப்பார்கள்.

எனவே ஃபோரோனிக் நாகரிகத்தை ஒரு கதையைப் போல – என் சொந்த வாழ்க்கை என்னை ஒரு கதைசொல்லியாக உருவாக்கியிருப்பதால் – அறிமுகப்படுத்தலாமென்றிருக்கிறேன். இதோ ஒரு பதிவு செய்யப்பட்ட வரலாற்று நிகழ்வு: பண்டைய ஓலைச்சுவடி ஒன்றில் அந்தப்புரத்துப் பெண்கள் சிலருடன் தனது அரண்மனை ஊழியர்கள் சிலருக்கு தவறான தொடர்பிருப்பதை அறிந்த மன்னன் ·போரோ அக்கால வழக்கப்படி அவர்களுக்கு உடனடியாக மரணதண்டனை விதிக்காமல் , தேர்ந்த சில அறிஞர்களை அழைத்து இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறான். அதன்பிறகே தனது
தீர்ப்பை வழங்குவது நியாயமென்றும் அவ்வறிஞர்களிடம் கூறியிருக்கிறான்.

இந்த நடவடிக்கை, என் அபிப்ராயத்தில் மாபெரும் பேரரசு ஒன்றை நிறுவியதைவிடவும், பிரமிட்களை கட்டியதைவிடவும், மகத்தானதாகும். அந்நாகரிகத்தின் மேன்மைக்கு, அக்காலத்தைய செல்வச் செழிப்பைவிட இதுவே சிறந்த அடையாளமாகும். தற்போது அந்த நாகரிகம் மறைந்து போய், பழங்கதையாகிவிட்டது. ஒரு நாள் அம்மாபெரும் பிரமிட்கூட மறைந்து போகலாம்; ஆனால் மனிதகுலத்திற்கு சிந்திக்கும் திறனும், உயிர்ப்போடிருக்கும் மனசாட்சியும் உள்ளவரை சத்தியமும் நியாயமுமே நிலைத்திருக்கும்.

இஸ்லாமிய நாகரிகத்தைப் பொறுத்தவரை மனிதகுலம் மொத்தத்தையும் அதனைப்படைத்த படைப்பாளியின் கீழ் சுதந்திரத்தின், சமத்துவத்தின், மன்னிப்பின் அடிப்படையில் ஒன்றுதிரண்ட ஸ்தாபனமாக நிறுவப்பட்டதைப்பற்றி நான் பேசப் போவதில்லை. தீர்க்கதரிசி முஹமது நபியின் மகத்துவத்தைப் பற்றிக்கூட நான் பேசப்போவதில்லை. அறிஞர்களான உங்களில் பலர், உலக சரித்திரத்தின் மாபெரும் மனிதராக அவரை மதிப்பிடுகிறீர்கள். இது ஸ்தாபிக்கப்பட்டதால் எழுப்பபட்ட ஆயிரக்கணக்கான ஸ்தூபிகளைப் பற்றியோ , இவற்றில் பரப்பப்படும் பக்தியையும், புனிதமான அன்புணர்வும், பரந்து விரிந்த நிலப்பரப்பைக் கொண்ட இந்தியாவையும், சீனாவையும் தழுவிக்கொண்டு, இங்கே ·ப்ரெஞ்சு எல்லைவரை பரவியிருப்பதைப் பற்றியும் நான் பேசப் போவதில்லை. இதற்கு முன்போ, பிறகோ மனிதகுலம் இதுவரை அறிந்திராத இன ஒற்றுமையும், மதசகோதரத்துவத்தையும் அது சாதித்திருப்பதைப் பற்றிக்கூட கூறப்போவதில்லை.

பதிலாக, இந்நாகரிகத்தின் குறிப்பிடத்தகுந்த குணமாயிருக்கிற ஓர் இயல்பை இந்த ஆச்சரியகரமான சரித்திர நிகழ்ச்சியைக் கூறி அறிமுகப்படுத்துகிறேன். பைஸாண்டியத்திற்கெதிரான ஒரு வெற்றிகரமான போருக்குப் பிறகு அவர்கள் பிடித்து வைத்திருந்த போர்க்கைதிகளை விடுவித்துவிட்டு அதற்கு ஈடாக அந்நாட்டின் தொன்மையான கிரேக்க கலாச்சாரத்தின் தத்துவ, மருத்துவ , கணித நூல்களைப் பெற்றுக்கொண்டதாக வரலாற்றுப் பதிவு இருக்கிறது. மனிதனின் அறிவு வேட்கைக்கு வழங்கப்பட்ட மதிப்பீடாகவே இதனைக் கருதலாம். அயல் மதத்தைச் சேர்ந்த கலாச்சாரமாக இருப்பினும் அவர்களின் அறிவுப் பொக்கிஷங்களை தேடி விழைவதென்பது நாகரிகத்தின் உச்சமாகும்.

இவ்விரு நாகரிகங்களின் மடியில் பிறக்க வேண்டியது என் விதியாகி, இவற்றின் அமுதமருந்தி, இவற்றின் கலைகளையும், இலக்கியங்களையும் உண்டு நான் வளர்ந்தேன். அதன்பின் உங்களது செழிப்பான கலாச்சாரத்தின் தேனைப்பருகினேன். இவை எல்லாவற்றிலிருந்தும் கிடைத்த ஊக்கத்தாலும், எனது சுயகவலைகளாலும் நெகிழ்ந்த வார்த்தைகள் என்னிடமிருந்து புறப்படத்துவங்கின. மேன்மை பொருந்திய தங்கள் அகாதெமியால் இவ்வார்த்தைகள் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டுப் பெறும் அதிர்ஷ்டம் நிகழ்ந்திருக்கிறது. இதற்கான வந்தனங்கள், என் பெயராலும், இவ்விரு நாகரிகங்களை வளர்த்த மாபெரும் ஆத்மாக்களின் பெயராலும் இருக்கட்டும்.

உங்களுக்கு வியப்பாக இருக்கலாம்; மூன்றாம் உலகிலிருந்து வருகிற இம்மனிதனுக்கு கதை எழுதுவதற்கான மன நிம்மதி எப்படி கிடைக்கிறதென்று. நீங்கள் கருதுவது முழுக்க சரியே. கடன் சுமையில் அழுந்திப் போயிருக்கிற, செலவினங்களின் அழுத்ததினால், பசியால் அல்லது ஏறக்குறைய பட்டினியால வாடிக்கொண்டிருக்கிற உலகத்திலிருந்துதான் நான் வருகிறேன். ஆசியாவில் சிலர் வெள்ளத்தால் அழிவதைப் போல, ஆப்பிரிக்காவில் மற்றவர்கள் வறட்சியால் அழிந்து கொண்டிருக்கின்றனர். தென் ஆப்பிரிக்காவில் இலட்சக்கணக்கானோர் மனிதர்களாகவே மதிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டு இக்காலத்திலும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றனர். மேற்குக்கரையிலும், காஸாவிலும் தமது சொந்த மண்ணிலேயே – தமது தந்தையினரின், மூதாதையினரின் மண்ணிலேயே- தங்களது இருப்பைத் தொலைத்துவிட்டு இலட்சக்கணக்கானோர் நிற்கின்றனர். ஆதிமனிதன் முதலில் கண்டறிந்த ஓர் அடிப்படை உரிமைக்காகத்தான் அவர்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். தமது சொந்த மண்ணில், கௌரவமாக வாழ மற்றவர்களால அங்கீகரிக்கப்பட வேண்டுமென்கிற அடிப்படை உரிமைக்காக. இப்போராட்டத்திற்காக இத்தீரமிக்க மனிதர்கள் – ஆண்களும், பெண்களும், இளைஞர்களும், குழந்தைகளும் பதிலாகப் பெற்றது உடைந்த எலும்புகளையும், துப்பாக்கிக் குண்டுகளையும், சிதைக்கப்பட்ட வீடுகளையும் , சிறையிலும் முகாம்களிலும் சித்திரவதைக்கபடுவதையும் ஆகும். இவர்களைச் சுற்றிலும் பதினைந்து கோடி அராபியர்கள் நிகழ்வதைப் பார்த்து வேதனையிலும், கோபத்திலும் வெந்து கொண்டிருக்கின்றனர். இதனால் இப்பகுதி முழுவதுமே விரைவில் வெடித்து சிதறக்கூடிய கொந்தளிப்புப் பிரதேசமாயிருக்கிறது. நியாய உணர்வும், அமைதிக்கான விழைவும் கொண்ட அறிவாளர்களால் மட்டுமே நிச்சயமானதொரு பிரளயத்திலிருந்து இப்பகுதியைக் காப்பாற்ற இயலும்.

ஆம், மூன்றாம் உலகத்திலிருந்து வருகிற ஒரு மனிதனுக்கு கதைகள் எழுத மன அமைதி எப்படிக் கிடைக்கும்? அதிர்ஷ்டவசமாக கலை தாராளமாகவும், கருணையோடும் இருக்கிறது. பிரச்சினைகளற்ற சந்தோஷங்களை மட்டும் கலை ஆகர்ஷிப்பதில்லை; துன்பத்தில் உழல்பவர்களை அது நிராகரித்து ஒதுக்குவதுமில்லை. அவரவர் நெஞ்சிற்குள் பொங்கும் உணர்வுகளை அவர்களுக்கே உரித்தானதொரு தனிமுறையில் வெளிப்படுத்திக்கொள்ள கலை அனுமதிக்கிறது.

நாகரிக வரலாற்றின் இந்த அதிமுக்கிய தருணத்தில் மனிதகுலத்தின் துயரக்குரலால் பதியப்படாமல் சூன்யமாக மரித்துப் போவதென்பதை நினைத்துப் பார்க்கவே இயலாது; ஏற்றுக் கொள்ளவும் முடியாது. வல்லரசுக்கிடையிலிருந்த பனிப்போர் முடிந்து விட்ட இப்பொழுதில்தான் உண்மையில் மனிதகுலம் முதிர்ச்சியடைந்திருக்கிறதென்று நம்மால் ஆசுவாசப்படுத்திக் க்கொள்ள முடிகிறது. இத்தருணத்தில் மனிதமனம் தன்னிடம் பொதிந்திருக்கும் பேரழிவுக் கூறுகளையும், யுத்தவெறியையும் முற்றாக களைந்தெடுக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. விஞ்ஞானிகள் , தொழிற்சாலைக் கழிவுகள், சுற்றுச் சூழலில் உண்டாக்கும் மாசுகளை அகற்ற முனைவதைப் போல மனிதமனத்தின் அறநெறிகளில் பீடித்திருக்கும் மாசுகளையும் அகற்ற வேண்டிய கடமை அறிவு ஜீவிகளுக்கு இருக்கிறது. இந்த யுகத்தின் நல்ல எதிர்காலத்திற்குத் தேவையான தீர்க்க தரிசனமும், தீட்சண்யமான அணுகுமுறையும் நமது நாட்டின் பெருந்தலைவர்களிடமும், பொருளாதார வல்லுநர்களிடமும் தேவையென உரிமையுடன் கேட்கவேண்டியது நமது கடமையாகும்.

பண்டைக்காலங்களில் ஒவ்வொரு தலைவரும் தமது தேசத்திற்காக மட்டுமே கவலப்பட்டு வந்தனர். தமக்கு எதிரான கருத்துடையவர்கள் விரோதிகளாகவும், தமது நாட்டைச் சுரண்ட வந்தவர்களாகவும் கருதிவந்தனர். தமது தற்பெருமைக்கும், தனிப்பட்ட வெற்றிகளுக்கும் தந்த முக்கியத்துவத்தை வேறெந்த மதிப்பீடுகளுக்கும் தரவில்லை. இதற்காக பல தர்ம நியதிகளும், மதிப்பீடுகளும் பலியிடப்பட்டன; அறமற்ற பாதைகள் நியாயப்படுத்தப் பட்டன; கணக்கற்ற ஆத்மாக்கள் அழித்தொழிக்கப்பட்டனர். பொய், ஏமாற்று, களவு, துரோகம் போன்றவை மகத்துவத்தின் அடையாளங்களாய் கோலோச்சி வந்தன. இன்று இத்தகைய பார்வைகளை அவற்றின் அடிப்படைகளிலிருந்தே திசைதிருப்ப வேண்டிய தேவை வந்துவிட்டது. இன்றைய தேசத்தலைவர் என்பவர், அவரது உலகாளவிய பார்வையாலும், மனிதகுலத்தின் மேல் அவர் கொண்டிருக்கும் பொறுப்புணர்வாலும் மட்டுமே மதிப்பிடப் படுகிறார். முன்னேறிய நாடுகளும், மூன்றாம் உலகநாடுகளும் ஒரே குடும்பம்தான். அறிவும், ஞானமும், நாகரிகமும் பெற்றுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் இதற்கான பொறுப்பு இருக்கிறது. அநீதியை வேடிக்க பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். உமது தகுதிக்கேற்றதொரு பங்கினை நீங்கள் ஆற்றியேயாக வேண்டும். உலக சமுதாயத்தின் மேட்டுக் குடியினரான உங்களுக்கு இவ்வுலகத்தின் எத்திசையிலும் இருக்கிற மனிதரோ, தாவரமோ, மிருகமோ புரிகிற தவறுகளில் ஒரு பங்கிருக்கிறது.

சொற்கள் நம்மிடம் போதுமான அளவு இருக்கின்றன. செயல்படுவதற்கான நேரமிது. கொள்ளையர்களின், லேவாதேவிக்காரர்களின் யுகம் இத்துடம் முடியட்டும். இப்பூமி முழுவதற்குமான தலைவர்கள் உருவாகட்டும். தென் ஆப்பிரிக்காவின் அடிமைகளைக் காப்பாற்றுங்கள்! ஆப்பிரிக்காவின் பட்டினியாளர்களைக் காப்பாற்றுங்கள்! பாலஸ்தீனியர்களை துப்பாக்கி குண்டுகளிலிருந்தும், சித்திரவதையிலிருந்தும் காப்பாற்றுங்கள்! தமது மகத்தான ஆன்மிகப் பாரம்பரியத்தை இஸ்ரேலியர்கள் கெடுக்காதிருக்கும்படி காப்பாற்றுங்கள்! பொருளாதார கடும் சட்டங்களால கடனில் மூழ்கித் தவிப்போரைக் காப்பாற்றுங்கள்! அறிவியல் விதிகளை விட மனிதநெறிகளுக்கு கட்டுப்பட்டிருப்பதே மேன்மையானதென்று நிறுவுங்கள்!

உங்களது மன அமைதியை நான் குலைத்து விட்டிருந்தால் தயை கூர்ந்து என்னை மன்னியுங்கள் அன்பர்களே ! ஆனால் மூன்றாம் உலக நாடு ஒன்றிலிருந்து வரும் ஒருவனிடமிருந்து வேறு எதனை நீங்கள் எதிர்பார்க்க முடியும்? நிரப்பிவைத்திருக்கும் திரவத்தின் நிறத்தையல்லவா கண்ணாடிக் கோப்பை பெற்றிருக்கும்? மேலும் மனிதகுலத்தின் அவலங்களை இம்மாமண்டபத்தில் – அறிவியலையும், இலக்கியத்தையும், மேன்மையான மனிதமதிப்பீடுகளையும் அரியணையில் அமர்த்தி அங்கீகரிக்கும் இம் மகத்தான சபையில் – உங்கள் உயர்ந்த நாகரிகச் சோலையில் எதிரொலிக்காமல் வேறெங்கே இக்கோரிக்கையை வெளியிட முடியும்?

தனது திரண்ட செல்வத்தையெல்லாம் இந்த உன்னதப் பணிக்காக அர்ப்பணித்து அம்மாமனிதரின் உதாரணத்தை முன்வைத்து, நமது பண்பாட்டின் அடையாளமாக, உயர்குடியாளர்களான நீங்களும் அவர் வழியே நடந்தேயாக வேண்டுமெனெ மூன்றாம் உலகத்தினரான நாங்கள் விழைகிறோம். நம்மைச் சுற்றி நடப்பவை எப்படியிருப்பினும் இறுதிவரை நான் நம்பிக்கை இழக்கப்போவதில்லை. இறைவன் அதர்மத்திற்கெதிரே ஜெயிக்கப்போகிறானா என சந்தேகப்படப் போவதில்லை.

இறைவன் ஒவ்வொருநாளும் வென்றுகொண்டுதான் இருக்கிறான். நாம் நினைப்பதை விட சாத்தான் சோனியாகவே இருக்கக்கூடும். வெற்றி என்பது கடவுள் பக்கம் எப்போதும் இருக்குமென்பதற்கு அழிக்க முடியாத சான்றாக, இத்தனைப் பேரழிவுகளையும், இயற்கைச் சீற்றங்களையும், கொடும் விலங்குகளையும், நோய்களையும், அச்சங்கள், தலைக்கனங்களின் விளைவுகளையும் மீறி இம்மனிதகுலம் தழைத்து வருவதைக் கண்டு வருகிறோம். இத்தனைக்கும் மத்தியில்தான் மனிதன் தேசங்களை உண்டாக்கியும், புதிது புதிதாய் கோடானுகோடி விஷயங்களைப் படைத்தும், கண்டறிந்தும், விண்வெளியை வென்றும், மனித உரிமைகள் பிரகடனம் செய்தும் வந்திருக்கிறான். உண்மை என்னவென்றால் சாத்தான் போடும் இரைச்சலிலும், ஆடும் பேயாட்டத்திலும் மனிதன் சந்தோசங்களை விட வலிகளையே அதிகம் நினைவுபடுத்திக் கொள்கிறான். நமது பெரும்புலவர் அபுல்ஆலா-அல்-மாரி சொன்னதைப் போல :

‘ஜனனத்தின் போதான களிப்பை விட
நூறுமடங்கு பெரிது மரிக்கும் போதான துக்கம்’

இறுதியாக என் நன்றிகளை மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொண்டு, மன்னிக்கவும் வேண்டிக் கொள்கிறேன்.

**

நன்றி : ஜி. குப்புசாமி / ‘அட்சரம்’
மின்னஞ்சல் : tamilatchara@yahoo.com

**

தொடர்புடைய சுட்டி :

நாகிப் மாஃபௌஸ் – நேர்முகம் (தீராநதி)  (நன்றி : தமிழ் கூடல்)