தெய்வங்கள் – கலீல் ஜிப்ரான்

’கலீல் ஜிப்ரான் கதைகள்’ என்ற நூலிலிருந்து, நன்றியுடன்.
(தொகுப்பும் மொழிபெயர்ப்பும் : கமலபாலா)
——-

galil jibran - amazonகிலாபிகளின் நகரத்தில், கோயிலுக்கு முன்னால் இருக்கும் படிகளில் நின்றபடி ஒரு மத போதகர் பல தெய்வங்களைப்பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார். ஜனங்கள்
தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டனர். “நமக்கு இதெல்லாம் தெரியுமே. அந்த தெய்வங்கள் எங்களுடன் வசிக்கவும், எங்கேயும் எங்களைப் பின்தொடரவும்
செய்கின்றனவே.”

சீக்கிரமாகவே மற்றொரு மனிதன் சந்தையிலிருந்து சத்தமாக பிரச்சாரம் செய்தான். “கடவுள் என்று ஒருவர் இல்லை .” அதைக்கேட்டு பலரும் சந்தோஷப்பட்டனர். காரணம் அவர்கள் தெய்வங்களை நினைத்து பயப்படுபவர்களாகவே இருந்தனர்.

மற்றொரு நாள் ஒரு பெரிய மேடைப் பேச்சாளன் அங்கே வந்தான். அவன் சொன்னான். “ஒரே ஒரு தெய்வம் மட்டும் தான் இருக்கிறது.” ஜனங்கள் குழம்பினர். ஒரே ஒரு தெய்வத்தின் நியாயமான தீர்ப்பு, அவர்களுக்கு ஒரு கூட்டம் தெய்வங்களுடைய செயல்களைக் காட்டிலும் பயப்படுத்துவதாகவே இருந்தது.

அந்த நேரத்திலேயே மற்றொரு மனிதனும் அங்கே வந்தான். அவன் ஜனங்களிடம் சொன்னான்.

“மூன்று தெய்வங்கள் இருக்கின்றன.” காற்றில் அவர்கள் ஒன்றாக வசிக்கிறார்கள். அவர்களுக்கு கருணை உள்ளம் கொண்ட ஒரு தாயும் இருக்கிறார். தாய் ஒரு காதலியும் சகோதரியும் ஆகிறாள்.”

அது எல்லோரையும் நிம்மதியடையச் செய்தது. அதன் காரணத்தை ரகசியமாக அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். “மூன்று தெய்வங்கள் நமது தவறுகளைப் பற்றி ஒரு நாளும் ஒரேபோல் நினைக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல இந்த அப்பாவிகளான பலவீனமானவர்களின் தவறுகளை மன்னிக்க அந்த அன்பு மிகுந்த தாய் தெய்வங்களிடம் சொல்லவும் செய்வார்.”

இருந்தாலும் தெய்வம் இல்லையென்றும், நிறைய தெய்வங்கள் இருக்கின்றன என்றும், ஒரு தெய்வம்தான் இருக்கிறது என்றும், மூன்று தெய்வங்கள் ஒன்றாக வசிக்கின்றனர் என்றும், தெய்வங்களுக்கு அன்பான ஒரு தாய் இருக்கிறார் என்றும் வாக்குவாதம் செய்யவும், வீணாக ஒருவருக்கொருவர் சண்டைபோடவும் செய்கிறவர்கள் இன்றும் கிலாபிகளின் நகரத்தில் இருக்கின்றனர்.