ஹிந்தி வேண்டும் ஹிலால் முஸ்தபா

ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பெயர்ப் பலகையில் ஹிந்தி எழுத்துக்களை மட்டும் தார் பூசி அழிக்க ஏணியில் ஏறிய கலகத் தொண்டர் , அங்கிருந்து கொண்டே கத்தினாராம்: ‘ஏய்..  இதுல எதுடா ஹிந்தி?’. உயிர்மையில் முன்பு வந்த கட்டுரையில் இருந்த ஜோக் இது. எழுதிய எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனா? சரியாக ஞாபகமில்லை. ஆனால் சிரித்தது ஞாபகம் இருக்கிறது. ஏறியவனே நான்தானே! அதுவல்ல இங்கே முக்கியம். ஹிந்திமொழி வேண்டும் அண்ணன் ஹிலால் முஸ்தபா ஒரு தமிழ்ப்புலவர் என்பதுதான் முக்கியம். 1987-ல் வெளியான அவருடைய ’தேவையான தீர்ப்புகள்’ நூலிலிருந்து ‘மொழி – ஒரு சம்பாஷனை’ கட்டுரையின் சிறு பகுதியைப் பதிவிடுகிறேன். நான் பேசும் ‘ரகுதாத்தா’ ஹிந்தியால் மற்ற மாநிலத்தவர்கள் அலறிக்கொண்டு துபாயில் ஓடுவதை கவனத்தில் கொள்ளற்க. அதிகாரம் தந்தால் – ஒலஹத்துல இல்லாத மொளியான –  நாகூர் பாஷையைத்தான் உலகமொழியாக அறிவிப்பேன் என்பதையும் அறிக!

இங்கே ஒரு தமாஷ். இணைய விவாதம் ஒன்றில் ‘தமிழ் நாட்டு பாட திட்டத்தில் மற்ற மாநிலங்களை போல் தேசிய மொழி ஹிந்தி இல்லை என்பது நல்லதா இல்லை கெட்டதா?’ என்ற கேள்விக்கு வந்த பதில் : ‘நல்லது. ஒரு பாடம் குறைந்தது!’. எழுதிய பெரியவர் வினோத் – LKG. நன்றாகவே சிரிக்க வைக்கிறார்கள். வாழ்க! ‘எழுதப்பட்ட சட்டங்கள் ஒரு புறமிருக்க எழுதப்படாத சம்பிராதயங்கள் சட்டங்களுக்கு மேல் வலிமை பெற்று விளங்கும் பாங்கு இந்நூலில் பரவலாக எடுத்துக் காட்டப்படுகிறது’ என்று ‘சிராஜூல் மில்லத்’ மர்ஹூம் அப்துஸ் ஸமத் சாஹிப்  பரிந்துரைக்கும் ஹிலால் முஸ்தபாவின் நூலிலுள்ள மற்ற பகுதிகளை ( போதை – ஒரு பிரச்சினை, பேச்சு-எழுத்து-ஒரு கட்டுப்பாடு, நிலம் – ஒரு பறிமுதல், மதபீடம் – ஒரு சொத்துரிமை, கல்வி – ஒரு தடை விதிப்பு, விபச்சாரம் – ஒரு விசாரணை) அவ்வப்போது பதிவிடுவேன், இன்ஷா அல்லாஹ்.

அண்ணன் ஹிலால் முஸ்தபா இப்போது எங்கே இருக்கிறார் , ஏன் எழுதுவதில்லை, ஹிந்தி பற்றிய அவரது நிலைப்பாடு இப்போது எப்படி இருக்கிறது போன்ற கேள்விகளுக்கு விடை பெற அவருடைய அருமை நண்பரும் ஆன்மீகத் தென்றலுமான கவிஞர் ஜபருல்லாநானாவை தொடர்பு கொண்டேன் இப்போது.

‘ஆஜ் மே(ங்) தோடா பிஸி ஹூங்..! ‘ என்கிறார்!

ஆபிதீன்

***

எதிர்ப்பு ஏன்? – ஹிலால் முஸ்தபா

ஹிந்தி மொழியைப் பரப்புவதற்கும், பாரதத்தின் பல்வகையானப் பண்பாடுகளை வெளிப்படுத்தக் கூடிய மொழியாக அதனை வளர்ச்சியுறச் செய்வதற்கும் ஹிந்துஸ்தானியிலிருந்தும், மற்றும் 8-வது அட்டவணையிலுள்ள மற்ற இந்திய மொழிகளிலிருந்தும் அதன், மூலம், வடிவம், நடை, மற்றும் விளக்கம் ஆகியவற்றை மாற்றாமல் அதனைச் செறிவும் செம்மையும் அடையச் செய்வதற்கும் அதனுடைய சொல்வளத்துக்காக முதலில் சம்ஸ்கிருதத்திலிருந்தும் பிற மற்ற மொழிகளிலிருந்தும் தேவைப்படும் மற்றும் விரும்பத்தக்க சொற்களைக் கையாண்டும் ஆவண செய்வது மத்திய அரசின் கடமையாக இருக்க வேண்டும்’ – இந்திய அரசியல் சட்டம் : விதி 351

***

இந்தியாவில் டெல்லி பிரதேசம் ஒப்புக்கொண்டு ஹிந்தியைப் பயன்படுத்துகிறது. ஹரியானாவும் இணைந்து கொண்டது. பதட்டம் மிக்க பஞ்சாப் பயன்படுத்திக் கொண்டது. குஜராத் ஒப்புக் கொண்டது. மராத்தியப் பிரதேசம் தழுவிக் கொண்டது. மேகலாயா கூட இணைந்து கொண்டது. உத்திரப் பிரதேசம் முனைந்து நிற்கிறது. திரிபுரா சேர்த்துக் கொண்டது. கர்னாடகம் கைப்பற்றி விட்டது. ஆந்திரா அணைத்துக் கொண்டது. கேரளா இணைத்துக் கொண்டது.

இத்தனை மாநிலங்களிலும் மாநிலத் தாய்மொழிகள் வேறு வேறு. ஆனாலும் ஹிந்தியைக் கொண்டு இணைந்து கொண்டு பரிவர்த்தனைகளைப் பரவலாக்கிக் கொண்டன.

அதனால் அம்மாநில மொழிகள் தாழ்ந்துபடவில்லை. அழிந்துபடவில்லை. மாறாக அம்மொழிகளும் இலக்கிய வளம் மிக்கதாகப் பரிணமித்துவிட்டன.

அம்மாநில மக்களின் தாய்மொழியைத் தரம் தாழ்ந்ததாக எந்த மாநில மொழியாவது கருதினால் அப்படிக் கருதும் மொழி மகாக் கழிசடையான  தேக்கத்தில் இருப்பதாகத்தான் எண்ண முடியும். அதுவே உண்மையும் கூட.

தமிழகமும் வங்காளமும் ஏனோ இதில் தனித்து நின்று பரிதாபத்தைத் தழுவிக்கொள்கின்றன.

இதில் வங்காளத்தில் கூட ஆட்சி ரீதியில் எதிர்க்கிறார்கள். மக்கள் மத்தியில் ஹிந்தி நன்றாகவே பரவிவிட்டது.

தமிழகத்தில்தான் முழுமையாகப் பின்தங்கிவிட்டோம். தமிழ் அழியும் என்றும்,  வடமொழி ஆதிக்கம் என்றும் வெறும் கூச்சல் போட்டு அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர் கோஷங்களில் மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இது மாபெரிய பாவம். பரிதாபம்.

ஹிந்தியால் கன்னட மொழியை அழிக்க முடியவில்லை. தெலுங்கு மொழியை ஒழிக்க முடியவில்லை. மலையாளத்தை தகர்க்க முடியவில்லை. மராட்டிய மொழியை தவிர்க்க முடியவில்லை. குஜராத்தி மொழியை நீக்க முடியவில்லை. அஸ்ஸாமிய மொழியை அப்புறப்படுத்த முடியவில்லை. உர்து மொழியை உதவாமல் ஆக்க முடியவில்லை. அப்படி இருக்கத் தமிழை மட்டும் அது அழித்துவிடும் என்று சொல்வது சப்பைத்தனம். சண்டித்தனம். ஒப்புக்கொள்ளக்கூடாத கொச்சைத்தனம்.

ஹிந்தி எல்லா மாநில மொழிகளிலிருந்தும் வார்த்தைகளை அமைப்புகளை தழுவியே வளர முடிந்த தனித்தன்மையற்ற ஒரு மொழி என்பதை மறந்து விடக்கூடாது.

இந்திய தேசீய மொழியாக ஹிந்தியும், எல்லா மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழியும் உலகமொழியாக ஆங்கிலமொழியும் போதிக்கப்பட வேண்டும். அதுதான் இந்த யுகத்தின் சமமான வளர்ச்சி.

மாநிலங்களில் மாநில மொழி ஆட்சிமொழி, இந்தியத்தின் இணைப்பு மொழி ஹிந்திமொழி, உலகப் பரிவர்த்தனைக்கு ஆங்கிலமொழி. மும்மொழித்திட்டம் அமலாகியே தீர வேண்டும். தடுப்பது அறிவீனம்.

ஏனெனில் நடப்பது விஞ்ஞான யுகம். இதனை அது பொருட்படுத்தாது. நடந்தே தீரும். வீண்குழப்பங்கள் விபரீதமானது. சிறிதுகாலம் தேக்கம் ஏற்படலாம். முடிவு வேறுவிதமாகத்தான் இருக்கும். கொஞ்சகாலம் ஒரு சமூகம் மட்டும் தேங்கி நின்றால் அந்தச் சமூகம் பின்னர் பல நூற்றாண்டுகள் அதற்கு விலை கொடுக்க நேரிடும்.

***

தமிழனை விட மலையாளை தாழ்ந்தவனுமில்லை. கன்னடனைவிட வங்காளி மேன்மாயானவனுமில்லை. எல்லோரும் சமமானவர்கள். சமமாக இணைந்து வளர்வது யுகத்தின் சட்டம். தவற விடுவது அழிவின் சின்னம்.
***

இந்திய யூனியன் முஸ்லிக் லீக் தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் கூட இந்தியத் தேசியமொழியாகத் தன் தாய்மொழியாகிய தமிழ் ஆட்சிமொழியாக வரவேண்டும் எனக் காரணங்கள் காட்டி வலியுறுத்தினார்கள். தமிழில் இலக்கிய வளம் நிரம்ப உண்டு. இந்திய மொழிகளில் ஹிந்தி மாதிரி சில 100 ஆண்டுகள் சரித்திரம் மட்டுமே கொண்டது போல் இல்லாமல், மிகப்பெரும் பழமை தமிழுக்கு உரியது என்றெல்லாம் வாதாடினார்கள்.

இருப்பினும் அரசியல் சபை ஓட்டெடுப்பில் எதிர்ப்பை விட, ஒருவாக்கு அதிகம் பெற்ற வெற்றியின் அடிப்படையில் ஹிந்தியே, தேசியமொழியாக அங்கீகாரம் பெற்றது.

***

வெறும் மொழி வாதம் கூறி பிளவு படுவது சாத்தியம் இல்லை. மாறாக பின்தங்க வாய்ப்பாகிவிடும் என்பதைப் புரிந்து செயல்படுவதே அறிவியல் பூர்வமான சமூக வளர்ச்சியாகும்.

***

நன்றி : அ. ஹிலால் முஸ்தபா, சாரா பதிப்பகத்தார்
***

தொடர்புடைய பதிவு :  அறிவியலில் மொழியின் தேவை – நாகூர் ரூமியின் ‘தமிழ்ப்படுத்தலும் தமிழ் மனமும் ‘ முன்வைத்து. –
வெங்கட்ரமணன்