இணையத்தில் தேட தாஜுக்கு இயலவில்லை போலும்! மறதி என்று இந்தக் கட்டுரையில் தாஜ் குறிப்பிடுவது மகா தவறு. நண்பர் பவுத்த அய்யனார் எடுத்த நேர்காணலில் வேண்டுமானால் வண்ண நிலவன் சொல்ல மறந்திருக்கலாம். ஜூன் 2002 ’ஜங்ஸன்’ இதழ் பேட்டியில் – ’கடல்புரத்தில் ’ நாவல் எழுதிய விதத்தைச் சொல்லும்போது – குலசேகரன்பட்டினம் முஸ்லிம் பெரியவர் பற்றி சொல்கிறார். சுட்டி : “நான் என்ன எழுதிக் கிழித்துவிட்டேன்?’’ – வண்ணநிலவன் . வண்ணநிலவனை லேசாக யாராவது குறைசொன்னால் கொன்னுடுவேன் கொன்னு. தாஜ், அவர் துக்கம் என் துக்கம்.. ரொம்ப ’ஆராய்ச்சி’ பண்ணாதீர்! –ஆபிதீன்
***
அபூர்வக் கலைஞனின் ஒரு சின்ன மறதியும் ஒரு சின்ன கவிதையும்
தாஜ்
இந்த வருட, சென்னை புத்தகக் காட்சியில், வாங்க விரும்பிய புத்தகங்களின் பட்டியல் நீளம். வாங்கியது ஒரு சில புத்தகங்கள் மட்டும்தான். கூடுதலாக ‘நேர்காணல்’ சிற்றிதழின் பழைய இதழ்கள் இரண்டு. வீட்டிற்கு வந்த நாழியில், முதலில் அந்தச் சிற்றிதழ்களைத்தான் வாசித்தேன்.என் வியப்பு விரிவடைந்து கொண்டே இருந்தது. அந்தச் சிற்றிதழை கொண்டு வந்திருப்பவர் பவுத்த அய்யனார்!
பவுத்த அய்யனாரைப் பற்றி, இலக்கியச் சூழலில் நிறைய கேள்விப்பட்டதுண்டு. என்றாலும் சந்தித்ததில்லை. அவ்விதழை வாங்கிய தருணத்தில்தான் அவரை, அவரது ஸ்டாலில் வைத்து சந்தித்தேன். சுந்தரராமசாமியின் நட்பு வட்டத்தில் பவுத்த அய்யனாருக்கு தனித்த, தவிர்க்க முடியாத இடமுண்டு. சு.ரா.வோடு அவர் பழகத் துவங்கிய காலம் தொட்டு, சு.ரா. இறப்பைத் தழுவும்வரை (1986 – 2005) தான்கொண்ட நட்பை சிதையாமல் காத்து போற்றியவர்!
பவுத்த அய்யனாருக்கும் சுந்தரராமசாமிக்கும் இடையே கடிதத் தொடர்பு துளிர்த்து, இவர் அவருக்கும் அவர் இவருக்குமென அந்தக் கடிதப் போக்குவரத்து நடந்தேறியிருக்கிறது! அவர்கள், தங்கள் கடிதங்களில் இலக்கியம் சார்ந்தும், சாராமலும் பலதரப்பட்ட செய்திகளை இருவரும் பறிமாறி கொண்டிருக்கிறார்கள். சு.ரா., அமெரிக்காவில் இருந்தப்படிக்கு கடைசியாக எழுதிய கடிதமும் கூட பவுத்த அய்யனாருக்கு எழுதியக் கடிதம்தான்! சு.ரா.வின் கடிதங்கள் மட்டுமென சுமார் 200 கடிதங்களை தொகுத்து, ‘அன்புள்ள அய்யனார்’ என்று புத்தகமாக கொண்டு வந்திருக்கிறார் அய்யனார்! வாசிக்கவும் வாசித்தேன். பெரிய அதிர்ஷ்டம்தான்!
அந்தப் புத்தகத்தை வாங்க அய்யனாரின் ஸ்டாலுக்கு சென்ற போதுதான் ‘நேர்காணல்’ சிற்றிதழைக் கண்டேன். ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’ / அந்த்வான் து செந்த் எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’ / ழாக் ப்ரெவெரின் ‘சொற்கள்’ / பியர் பூர்தியுவின் ‘தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்’ / ழான்-போல் சார்தரின் ‘மீள முடியுமா?’ / பியரெத் ஃப்லுசியோவின் ‘சின்னச் சின்ன வாக்கியங்கள்’ இப்படியான பிரெஞ்ச் இலக்கியப் படைப்புகளை தமிழுக்கு தந்த வெ. ஸ்ரீராமை பேட்டிக்கண்ட ஓர் முழு இதழைக் கண்டமாத்திரத்தில் வியந்து வாங்கினேன். அதே மாதிரி இன்னொரு இதழாக, ‘அபூர்வக் கலைஞன்’ வண்ணநிலவன் என்று அட்டைப்படம் கண்ணில்பட அதனையும் வாங்கினேன்.
குறிப்பிட்ட இரண்டு இதழ்களையும் இத்தனை நாட்களாகப் படித்து, சமீபத்தில்தான் நிறைவு செய்தேன். அத்தனைக்கு, அந்தப் படைப்பாளிகளது செய்திகளின் அழுத்தங்கள் விசேஷம் கொண்டதாக இருந்தது.
நிஜத்தில் வண்ணநிலவன், ‘அபூர்வக் கலைஞன்’தான். அவர் போற்றத்தக்க கலைஞன் என்பதில் இரண்டு கருத்துகள் இருக்க முடியாது. அவரது நாவல்களான கம்பாநதி / கடல்புரத்தில் / ரெயினீஸ் ஐயர் தெரு என்ற அத்தனையும் வளமான படைப்புகள். சுமார் முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால், நாவல் வாசிக்கும் வாசகனை எந்த அளவுக்கு அவரது நாவல்கள் நெகிழ்வு கொள்ள வைத்தது என்பதை நான் அறிவேன். அது மாதிரியே அப்போது வாசித்த, அவரது சிறுகதைகள் ‘எஸ்தர்‘ போன்றவைகளும் அதே அளவிலான தாக்கம் தந்தவைகள்தான்.
இங்கே பிரசுரம் ஆகியிருக்கும் வண்ணநிலவனின் ‘மெய்ப்பொருள்:3’ என்கிற இந்தக் கவிதை, அவரை நேர்காணல் கண்டிருந்த இதழில் கண்டெடுத்தது. இதுவும் கூட சுமார் 33 வருட பழமைவாய்ந்த எளிய கவிதை!. வண்ணநிலவனின் படைப்புகளை, என்பதுகளின் பின்னாண்டுகளில், சௌதியில் வைத்து எனக்கு அறிமுகம் செய்துவைத்த என் நண்பர் ‘மர்ஹூம்’ கூத்தாநல்லூர் ஹாஜா அலி அவர்கள், இந்தக் கவிதையை மெச்சிப் பேசியதாகவும் நினைவு. தவிர, ஹாஜா அலி எழுதும் சில கவிதைகள் கூட இதே சாயல் கொண்டதாகவே இருக்கும்.
ஹாஜா அலி, வியந்து சொல்லித்தான் வண்ணநிலவனின் கடல்புரத்தில் / ரெயினீஸ் ஐயர் தெரு; ஜானகிராமனின் மரப்பசு, சு.ரா. / அம்பை / கி.ராஜநாராயணன் / மௌனி / எம்.வெங்கட்ராம் / அசோகமித்திரன் போன்ற மேதைகளை வாசித்தேன். ஏன்… சு.ரா.வின் ஜே.ஜே. சிலக் குறிப்புகளைக் கூட அவர்தான் எனக்கு தந்து வாசிக்கவும் ஆர்வம் உதவினார்!
எழுதுவதென்பது அவருக்கு அத்தனை இஷ்டமில்லாதது. வாசிப்புதான் அவரது உலகம். அதுதான் அவரது சுவாசம்! கடைசி காலங்களில் தமிழ் இலக்கியம் அவருக்கு போதாதென்றாகி ஆங்கிலத்தில் தேர்வு செய்து வாசிக்கத் தொடங்கினார்.
சொத்தை விற்று ஆர்வமாக புத்தககங்கள் வாங்கிய ஒருவரை நான் கண்டேன் என்றால் அது இவர்தான். நாகூர் கடற்கரையில் அநாதைப் பிணமாக கிடந்த கிடப்புதான் இவரின் புரிபடாத முடிவாகிப் போனது. பொதுவில், சக மனிதர்கள் அவரது பார்வையில் அர்த்தம் கொண்டவர்களாக தெரிந்ததில்லை என்பதை மட்டும் அறிவேன்.
வண்ணநிலவனின் இந்தக் கவிதையை கூட, நண்பரின் நினைவாகவே இங்கே பிரசுரத்திற்கு தேர்வு செய்தேன்! எனக்கென்னவோ இக்கவிதை, என் ஹாஜா அலி எழுதிய எழுத்தாகவே தோன்றுகிறது. அட்சரம் பிசகாமல் அவரது கவிதை வரிகள் மாதிரியே இருக்கிறது. பவுத்த அய்யனாரும், வண்ணநிலவனும் என்னை மன்னிக்க வேண்டும். என் நண்பர் என்னை ரொம்பவும் பாதித்திருப்பதைதான் இப்படி சொல்கிறேன்.
இந்த என் அலப்பறையை முடித்துக் கொள்ளும் முன், இன்னொரு சின்னச் செய்தி. 1
80-களில், ஒருவருடத்தின் ஜனவரி-15ல் , ‘துக்ளக் ஆண்டுவிழா’ எங்கள் பக்கத்து டவுனான சிதம்பரத்தில் நடந்தது. அந்த விழாவில் பேச விரும்புகின்றவர்களின் முகவரியும், கேட்க நினைக்கும் கேள்வி குறித்தும் பதினைந்து நாட்களுக்கு முன்னமே தகவல் செய்து பதிவு செய்ய வேண்டுமென முந்தைய துக்ளக் இதழில் அறிவித்திருந்தபடிக்கு, என் பெயர்/ முகவரி/ கேட்க இருந்த கேள்வி என்று அனைத்தையும் வழிமுறையாய் கடிதம் எழுதி அனுப்பியிருந்தேன்.
அந்த 80- காலக்கட்டங்களில்தான் துக்ளக் ஆசிரியர் சோ, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை வலுக்கட்டாயமாக தமிழத்தில் தன் பத்திரிகையின் வாயிலாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். (இப்போதும் கூட அதுதான் நிலை!) ஆனால், அந்த இயக்கத்தின் சூழ்ச்சி நிறைந்த அரசியல் குறித்தான இன்னொரு பக்கத்தை அவர் எழுதுவதே இல்லை. (ஆனால்.. இன்றைக்கு அவ்வப்போது எழுதவும் எழுதுகிறார்!) அந்த முரண்பாட்டையொட்டிய கேள்வியாகவே அன்றைக்கு என் கேள்விகள் அமைந்திருந்தன.
அந்த விழா நடந்த அன்று, என்னுடன் கல்லூரியில் படித்த, நண்பரான சுந்தரவடிவேலுடன் சென்றிருந்தேன். அவன் என் கேள்வியினை கேட்டறிந்த பின், “சோவை விடாதே” என்று ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தான். விழா தொடங்கியதில் இருந்து சோவின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அங்கே கூடியிருந்த பெரும்கூட்டம் ஆராவரித்துகொண்டு இருந்தது.
நண்பனிடம் சொன்னேன். ‘சூழ்நிலையைப் பார்த்தால், எனது கேள்வியில் எத்தனை அர்த்தம் இருந்தாலும், இந்த மக்கள் சோ சொல்வதைதான் ஏற்பார்கள். இந்தக் கூட்டமே அவருக்காகத்தான் கூடியிருக்கிறது. மேடையில் கேள்வி எழுப்பும் அன்பர்களை, இடையிடையே நகைச்சுவை கிண்டல்களுடன் சோ மடக்கும் தர்க்கத்தை காணுகிற போது, என்னை அவர், சட்டென ’சைபர்’ ஆக்கிவிடுவார். எதிர்த்தும் பேச அனுமதியும் கிடைக்காது. பிறகு நான் ஏன் மேடையேறனும்?’ என்றேன். விசயதாரியான அந்த நண்பன் என் கூற்றை ஏற்றுக் கொண்டான். இத்தனைக்கும் மேடை அருகில் நின்றபடிக்குதான் இந்த ‘வேண்டாம்’ ஆலோசனை நடந்து கொண்டிருந்தது.
அந்தக் காலக்கட்டத்தில் வண்ணநிலவன் துக்ளக்கில் பணிபுரிய தொடங்கியிருந்தார். அந்தக் கூட்டத்திற்கும் வந்திருந்தார். அங்கே அவர்தான் விழா ஒருங்கிணைப்பாளராக பணியோடு ஓடியாடிக் கொண்டும் இருந்தார். மேடையில் பேச பெயர் கொடுத்தவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்களை ஒவ்வொன்றாக வாசித்தார்கள். என் பெயரையும் அறிவித்தார்கள். வண்ணநிலவனிடம், ’நான் பேச விரும்பவில்லை; என்றேன். ஏன்? என்றார்! காரணத்தைக் கூறாது ‘இல்லை வேண்டாம் சார்’ என்றேன்.
‘நோ… நோ.. கட்டாயம் நீங்கள் பேசணும், எங்களுக்கு வந்திருந்த கேள்விகளில் உங்களது கேள்விதான் அர்த்தம் கொண்டது’ என்றார். அவர் சொன்ன பிறகு, மிகுந்த தைரியத்துடன் மேடையேறி, நான் பேசி முடிக்கும்வரை குறுக்கே நீங்கள் பேசக்கூடாது என்று ஆரம்பத்திலேயே சோவிடம் மிகுந்த தைரியத்துடன் கூறியவனாக, என் பேச்சைத் துவங்கி, எழுப்ப நினைத்த கேள்விகளை முழுவதுமாக கேட்டுத் தீர்த்தேன். எனக்கு சோ பதில் சொன்னார் என்பதைவிட, மழுப்பி சமாளித்தார் என்பதுதான் சரியாக இருக்கும்.
மேடையைவிட்டு கீழே இறங்கிய பிறகு, வண்ணநிலவன் என்னோடு மிகுந்த பிரியமாகப் பேசினார். அனேகமாக என் தைரியம் அவருக்கு பிடித்து போய் இருக்கலாம். அப்போதுதான் சொன்னார், ‘இளம் பருவத்தில் தானொரு இஸ்லாமியக் குடும்பத்தினரின் அரவணைப்பில், அவர்கள் காட்டிய பரிவில் படித்து வளர்ந்தவன் என்று சிலாகித்து சொன்னர். இப்போது நான் வாசித்த அவரது முழுமையான அந்த நேர்காணலில், குறிப்பிட்ட அந்தச் சிலாகிப்புச் செய்தி ஒரு வரி கூட இல்லை!
சிதம்பரத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் மேடையில் வைத்து சோவிடம், ஆர்.எஸ்.எஸ்.-ன் இன்னொரு பக்க அரசியல் சூழ்ச்சிகள் குறித்து, அன்றைக்கு கேள்விகள் எழுப்பியதை எப்படி என்னால் மறக்க முடியாதோ, அது போலவே அன்றைய தினம் வண்ணநிலவன் என்னுடன் அன்பு கொண்டு உரையாடியதையும், இஸ்லாமியக் குடும்பத்தினர் குறித்து குறிப்பிட்ட சிலாகிப்பையும் என்னால் மறக்க முடியாது. வயது பொருட்டு மறதி அவரை ஆண்டிருக்கலாம்! நான் மறந்துவிடவில்லையா எத்தனை எத்தனையோ கவிதை மணித்துளிகளை!
**
மெய்ப்பொருள்:3 – வண்ணநிலவன்
எல்லாம் விலை குறித்தனவே
எல்லாம் விற்பனைக்கே
ஹே, அர்ஜுனா,
விற்பனைத் துணை கொள்
காய்ந்த விறகோ, ஹரி கதையோ
பழைய ஹிந்து பேப்பரோ, மகளோ,
கலையோ, கருமாரியம்மனோ…
வேஸ்ட் பேப்பருக்கும்
வேசிக்கும் சமவிலைதான்.
சூரியனுக்குக் கீழுள்ள
சகலமும் விற்பனைக்கே,
விற்பனை செய்வாய், விற்பனை செய்வாய்.
மியூஸிக் அகாடமியில் கலை விற்பனை.
கந்த விலாஸ் கடையில் ஐவுளி விற்பனை
அரபு தேசத்தில் இளைஞரும்
சீரணி அரங்கில் அரசியலும்,
‘பாக்கு மன்னன் பூச்சி?’
டிரேட் மார்க்கில் கவனம் வை.
மரமும் மகனும்
காய்த்துக் கனி தருவர்.
உட்லண்ட்ஸ் ஹோட்டலில் டிபனுற்பத்தி
பழனியில் பஞ்சாமிர்த உற்பத்தி
கலைப் படம் கான்ஸ்டாண்டி நோபிளுக்கு,
கமர்ஷியல் படம் காரைக்குடிக்கு.
ஐயப்பசாமிக்கும், ஐயனார் காபிக்கும்
பிராஞ்சுகள் திற.
மாடர்ன் ஆர்ட்டுக்கு மார்க்கெட் தேடு.
ஓய்ந்த நேரத்தில்
நட்பு செய்தாலும்
நாய் வளர்த்தாலும் – நல்ல
லாபமுண்டு.
***
நன்றி: வண்ணநிலவன், ’நேர்காணல்’ இதழ் (செப்டம்பர்-நவம்பர் 2010 ) , தாஜ் , சொல்வனம், அழியாச் சுடர்கள்