யாரும் உறங்கவில்லை – ஹஸீன்

ஈழத்துப் புனைகதைத் துறையில் ஒரு புதிய கண்திறப்பாக தரிசனம் தந்தவர்களில் ரஊபுக்கு அடுத்தபடி றியாஸ் அகமட், ஹஸீன் என்று சில இளைஞர்களை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது. பெண்ணின் நளினமும் வசீகரமும் கொண்ட ஹஸீன், அதிகம் பேசாத ஒற்றை வார்த்தைகளில் தனது உரையாடலை முடித்து முடித்து சுவைகூட்டும் கலைஞன். அவன் பேசுவதும் எழுதுவதும் வாழ்வதும் ஒரே விதமாக இருக்கும். ல.ச.ரா.விடம் உரையாடும் போது கிட்டிய சுகத்தை ஹஸீனிடமும் நான் பெற்று மகிழ்ந்திருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு “சிறியதும் பெரியதுமாக எட்டுக் கதைகள்” தொகுதி மூலம் அறிமுகமான ஹஸீனின் இரண்டாவது தொகுதி, “பூனை அனைத்தும் உண்ணும்”. அடையாளம் பதிப்பகம் 2009ல் கொண்டு வந்தது. முன்னுரை எழுத வந்த பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ஹஸீனுடைய எழுத்தைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்:

“இயற்கையின் மீதான லயிப்பும் நெருக்கமும் கதைகளெங்கும் விரிந்து கிடக்கின்றன. செங்கவெள்ளை கதையில் தண்ணீரில் கால்கள் படும் போது எழும்பும் சிறு ஓசை கூட பதிவு செய்யப்படுகிறது. ஹஸீன் கதையை வளர்த்துக் கொண்டு போவதில்லை. மாறாக, இடைவெட்டாக நினைவையும் நடப்பையும் ஒன்று கலக்கிறார். இருட்டுக்குள்ளிருந்து யாரோ உற்றுக் கவனிப்பது போன்று, கதைக்கு வெளியே அவரது இருப்பு எப்போதும் இருக்கிறது. அவர் குறுக்கிடுவதோ விளக்கம் சொல்வதோ இல்லை”

ராமகிருஷ்ணனின் கூற்றை நானும் வழிமொழிந்து ஆபிதீன் பக்க வாசகர்களை அழைக்கிறேன்.

எஸ்.எல்.எம். ஹனிபா

***

யாரும் உறங்கவில்லை
ஹஸீன்

வீடுகளில் எல்லாம் வெளிச்சம் எரிந்து கொண்டிருந்தது. எல்லோரும் அப்படி அப்படியே போட்டுவிட்டு ஓடி விட்டார்கள். ஓடாவியார்பொண்டி வீட்டுக் கம்மாலைக்குள் நைசர், நான், மற்ற வருஷத்துக்கு வந்த எல்லோரும் பேசிச் சிரித்துக் கொண்டிருக்கும் போது ரோட்டில் வாய்த்தகராறு சத்தம் கேட்டது. மேசையில் இருந்து இறங்கும்போது, நைசர் என்னைப் பார்த்து, “பாரீஸ், பார்த்துப் போ; பக்கத்தில நாமிருக்கிற உச்சாப்புல என்ன வேணுமெண்டாலும் செய்வானுகள்” என்றான். கிட்டத்தட்ட, சொன்ன மாதிரியே நடந்தது. கிழவனுக்கு அடிச்ச கோபத்தில குடும்பம் பொங்கிடுச்சி. இயக்கத்துக்கு போய்வந்த பாரீஸ், நைசர் எல்லோரும் நிற்கிறார்களே என்று அந்தப் பக்கத்துப் பசங்களெல்லாம் எங்களக் கண்டு பொங்கிட்டாங்க. இவங்களெல்லாம் பொங்கிட்டாங்க, நாம சும்ம நிக்க முடியாது என்று நாங்க பொங்க, வேலை கடகடவென்று நடந்து முடிந்து விட்டது. போலீஸ்காரனுங்க முதல்ல கொஞ்சம் எதிர்ப்பு காட்டினானுங்க. சனம், தேனீ மொய்ப்பது போல கூடிவிட்டார்கள்.

அவர்கள் சிங்களத்தில் அதட்டிப் பேசியதே அவர்களுக்கு வினையாக அமைந்தது. சரியாக, பள்ளிவாசல் கதவிற்கு எதிரேயிருந்த மின்சாரக் கம்பத்திற்கும் மதிலுக்குமிடையில் ஒருவர் மேல் ஒருவராகப் போட்டுக் கட்டிவிட்டார்கள். என்னிடமும் நைசரிடமும் துப்பாக்கி இருந்தது. நிச்சயமாக, நானோ நைசரோ சுடவில்லை. ஆனால் அங்கே ஏ.கே. 47 திடீரென வெடித்து, போலீஸ்காரனின் காலைத் துளைத்தது. அப்போது நான் சுதாரித்துக் கொண்டேன். கூட்டம் திடீரென மாயமாகப் போய்விட்டது. பள்ளியின் பின்புறம் போய், மாமரத்தில் ஏறி, நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் றெஜீன், மின்கம்பத்தில் கட்டியிருந்தவர்களுக்குப் பக்கத்தில் போகிறான் என்பது தெரிந்தது. அவன் என்ன நடந்ததென்பது தெரியாமல் போகிறான் என்பது தெட்டத் தெளிவாகப் புரிந்தது. இந்த மரத்தில் தினமும் நானும் அவனும் மாங்காய் ஆய்ந்து சம்பல் போட்டுச் சாப்பிட்டோம். நினைக்கவே பல் கூசுகிறது. இன்னும், றெஜீன் கோழிமுட்டை கொண்டுவருவான். அதை விற்று, படம் பார்க்கப் போவோம். றெஜீன் பொல்லாத ஆள்; என்னையும் நவலங்காவின் ரினோஸாவையும் சண்டைபோட மூட்டவிட்டு மூக்கறையர் வளவு முழுக்க நானும் அவனும் புரள்வதைப் பார்த்து நிற்பான்.

றெஜீனோட கையைப் பிடித்துக் கொண்டு வந்தேன். “என்னடா பாரீஸ்” என்று றெஜீன் புரியாதவனாக முழித்தான். சும்மா வா, சொல்றன்” என்றபடி ஓடிப்போக, அவங்க வீட்டு கேட் பூட்டியிருந்தது. நான் அப்போதே கவனித்தேன், அவர்களின் சித்தப்பா எல்லோரையும் கூட்டிக் கொண்டு போனதை. வெடிச்சத்தம் வேறு நன்றாக நெருங்கி விட்டது. எப்படியும் அபுசாலியின் கடைவரைக்கும் வந்திருப்பார்கள்.

சித்தி வீட்டுக்குச் செல்லும் குறுக்கு ஒழுங்கையால் திரும்பும் போது இருட்டுக் கசமாக இருந்தது. ‘அங்க அடிச்சுக் கெடக்கறது பொலிஸ்காரங்கடா, மடையா, நீ அதப் போய் பக்கத்துல பாக்கற’. கிறவல் ரோட்டில் ஓடுவது பயங்கர சத்தமாகக் கேட்டது. நின்று மெதுவாகச் சென்றால் பரவாயில்லை போல் இருந்தது. ஆனாலும் வேகமாய் ஓடினோம். அவர்களுடைய கேட் பூட்டியிருந்தது. ஓடிய வேகத்தில் மதிலுக்கு மேலாகக் குதித்தோம். றெஜீன் கதவைத் தட்டினான்; ரொம்ப நேரம் கதவு திறக்கவில்லை. அப்புறம் கதவு ‘கீச்’ என்ற சத்தத்துடன் மெதுவாகத் திறந்து, றெஜீனை மட்டும் அவர்களின் சித்தப்பா உள்ளே இழுத்து எடுத்துக் கொண்டார். அப்படியா ஒரு மனுசன் நடந்து கொள்வான். ஒரு சங்கடம் வரவேண்டாம்.

துப்பாக்கி தூக்கினாப்போல நாங்க மனுசனில்லெ. றெஜீனை விட்டுப் போட்டு நான் இருந்திருக்கலாம்தானே. அந்த அருவருப்பில் பயமோ பதற்றமோ வரவில்லை. மெதுவாக நடந்து முறா ஓடை வரைக்கும் போனேன். பள்ளிவாசல் பக்கம் வெங்கலக் கடைக்குள் யானை புகுந்தது போல் இருந்தது. நான் முறா ஓடைப் பாலத்திற்குக் கீழ் செருப்பைக் கழற்றிப் போட்டுவிட்டு, அதன் மேல் உட்கார்ந்து சாய்ந்து விழித்திருந்தேன்.

***

ஓடாவியார் பொண்டி வீட்டில் அன்று அவரது மகள் சல்மாவின் வருசம். காலமாகிப் போன சல்மாவைத் தவிர அவர்களுக்கு மற்ற ஐந்துமே ஆண் பிள்ளைகள். எல்லோரும் இளந்தாரிகள். ஓடாவியார் பொண்டிக்கு நிறைய சொந்தங்கள். யாரைச் சான்னாலும் ஏதாவது முறையில், எந்தப் பகுதாத்தில் இருந்தாலும் அவருக்கு அவர் சொந்தம் ஆகிவிடுவார். இதற்கு அவருடைய அம்மா மாத்திரம்தான் பரம்பரை முஸ்லீம். வாப்பா சிங்களவராக இருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்.

கண்ணுக்கு எட்டாத தூரத்திலிருந்து வந்தவர். தொப்பி போட்டிருப்பார். சிங்களப் பத்திரிகை படிப்பார். எனக்குத் தெரிந்து எங்கிட பகுதியிலேயே இஸ்லாத்தைத் தழுவிய ஒரே சிங்களவர் அவர்தான். அவர், பீடி வாங்குவதற்காகக் கடைக்குப் போக வெளியே வந்திருக்கிறார். அவரின் மேல் சைக்கிளில் வந்த பொலிஸ்காரர்கள் மோதி விட்டார்கள். பொலிஸ்காரர்கள் மூவரும் குடித்திருந்தார்கள் போல. இவர் சிங்களத்தில் பேச, உடனே அடித்து விட்டார்கள். இந்த சத்தம் கேட்டதும் வருசம் நடந்த வீட்டில் இருந்த கூட்டம் வெளியே வந்திருக்கின்றது. கம்மாலைக்குள் இருந்த எல்லோரும் இளைஞர்கள். நைசரும் பாரீஸும் கூட இருந்தார்கள். இருட்டில் கூட்டத்தைப் பார்த்து பொலிஸ்காரர்கள், ‘ஹுத்தோ’ என்று ஆரம்பித்திருக்கிறார்கள். நான் வெளியே வந்து பார்க்கும் போது பெரிய கலவரம் போல் இருந்தது. மரவேலை செய்யும் கம்மாலைக்குள் இருந்து புறவெட்டுகளை எடுத்துக் கொண்டு ஓடிவந்து அடித்தார்கள். கூட்டமும் இருட்டுமாய் இருந்தன.

யாரையும் சரியாகப் பார்க்க முடியவில்லை. பலாமரத்துக்குப் பக்கத்தில் கிடந்த மண் குதிகையில் ஏறி, வேலிக்கு அப்பால் திரும்பவும் பார்த்தேன். தெருவெல்லாம் ஒரே கூட்டம். இஷா தொழுதுவிட்டுப் பள்ளிக்குள் இருந்து வந்தவர்கள் என்ன என்று புரியாமல் வேகவேகமாக ஓடினார்கள். மற்ற எல்லோர்க்கும் புரிந்து விட்டது. முட்டாள்தனமாக இந்த இளைஞர்கள் இங்கே வைத்து போலீஸ்காரர்களை அடிக்கிறார்கள். இந்த இடத்தில் இருப்பவர்களுக்குத்தான் சிக்கல்.

நிதானிப்பதற்குள் இடையில் அந்த மூன்று பொலீஸ்காரர்களையும் பள்ளியின் முன் இருந்த கரண்டுக் கம்பத்தில் கொண்டு போய் கட்டிவிட்டார்கள். அவர்களைக் கட்டியிருந்த கரண்டுக் கம்பத்தின் பின்னால் இருந்த மதிலால் ஏறி, பொலீஸ்காரனின் தலையில் ஓங்கி அடித்தார்கள். இரத்தம் சிதறியது. சித்தியின் கணவர் பதற்றமாய் ஓடி வந்து, எங்கள் எல்லோரையும் சமைத்து வைத்த இரவு உணவைக் கூட எடுக்க விடாமல் அழைத்துச் சென்று விட்டார். போய் சித்தி வீட்டு வாசப்படியில் கால்வைக்கும் போதே வெடிச்சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது. பொலீஸ்காரர்கள் முகாமில் இருந்து கிளம்பும் போதே, துப்பாக்கி வேட்டுகளைத் தீர்த்தபடி கிளம்பி வர ஆரம்பித்து விட்டார்கள். சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தையும் விடாது சுட்டபடி வந்தார்கள்.

வாப்பாவும் றெஜீன் காக்காவும் இன்னும் வரவில்லை என்று உம்மா பதறிக் கொண்டிருந்தார். வாப்பா எங்கோ தூரத்திற்குத்தான் மோட்டார் பைக்கில் போயிருந்தார். அவரைப் பற்றி பயப்படுவதற்கு இல்லை. நம்ம சுற்று வட்டாரத்துக்குள்தான் றெஜீன் காக்கா இருக்க வேண்டுமென்று உம்மா பயந்தார். உம்மம்மா அதற்கு மேல், கதவு தட்டும் சத்தம் கேட்டது. சித்தப்பா, ஊன்னலுக்கு மேல் இருந்த லூவஸ் கட்டைகளுக்கு உள்ளால் எட்டிப் பார்த்தார். பின்னர் கதவைத் திறந்து காக்காவின் கையைப் பிடித்து இழுத்து உள்ளே எடுத்தார். கதவை மூடினார். காக்கா கதவைத் திறக்க முயன்ற போது கையைப் பிடித்து நிறுத்திய சித்தப்பா, ‘பாரீஸ் உள்ளே வந்தா, நீங்களும் வெளியே போக வேண்டியதுதான் தம்பி’ என்று சத்தமாகவும் கோபமாகவும் சொன்னார். தெரியாமல் அடித்துப் போட்டுக் கிடந்த பொலீஸ்காரர் பக்கத்தில் போன போது பாரீஸ்தான் தன்னைத் தடுத்து இங்கே கூட்டி வந்தான்’ என்று காக்கா முறையிட்டான். இதையெல்லாம் புரிய வைத்து விட்டு ஜன்னலுக்கு மேலாய் எட்டிப் பார்த்த போது அவன் அங்கு இருக்கவில்லை.

ஓயாமல் சுட்டுக் கொண்டே இருந்தார்கள். வெடிச்சத்தம் நெருங்கிக் கொண்டிருந்தது. வீடுவரைக்கும் வந்து விட்டார்கள். லூவஸால் எட்டிப் பார்த்த போது, கட்டிக் குறையில் கிடக்கும் வீடு, சின்னத் தங்கச்சியின் செத்தவேலி எல்லாம் தாண்டியும் எங்கள் வீட்டில் பொலீஸ்காரர்கள் நடமாடுவதைப் பார்த்து விட்டு சித்தப்பா, ‘லைட்டை அணைச்சிட்டு வந்திருந்தால், இருட்டுக்கள் போகாமல் பெரும்பாலும் தூரத்தில் நின்றிருப்பார்கள்’ என்று அங்கலாய்த்தார்.

வீட்டுக்குள் இருந்த கஃபோட் மாதிரியான பொருள்கள் ‘தொபிர்’ என விழுந்து நொறுங்கும் சத்தம் கேட்டு எல்லோரும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார்கள். ‘அல்லாஹ் அல்லாஹ்’ என்று பிரார்த்தனை செய்தார்கள். கொஞ்ச நேரத்தில் நாங்கள் இருக்கும் வீட்டுப் பக்கத்தில் இருந்து வெடிச்சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது. சித்தப்பா, காக்கா எல்லோரும் அண்ட சீற்றுக்குள் ஏறி ஒளிந்து கொண்டார்கள். சித்தப்பாவிடம் போகப் போவதாகச் சொல்லி, குழந்தை அடம் பிடித்து அழுதது. சித்தி, குழைந்தையின் சத்தம் வெளியே கேட்டுவிடும் என்று கையால் குழந்தையின் வாயை மூடினாள். உம்மா, சித்தியின் கையைத் தட்டிவிட்டார். சிறிது நேரம் குழந்தை அமைதியானது. வீட்டிற்குப் பின்னால் ரக்குகள் வரும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. அது வீட்டை நோக்கி வந்து, பக்கத்தில் இருந்த தெருவில், மணல் நெரிபட நடந்து போகும் சத்தம் கேட்டது. நாய்கள் வயிறு அலறக் குரைத்துக் கொண்டு ஓடின. குழந்தை கூட அமைதியாக அந்த சத்தத்தைக் கேட்டது. மூச்சைக் கூட மெதுவாக விட்டோம். இப்போது துப்பாக்கியால் சுடும் சத்தம் சன்னமாகக் கேட்க, அவர்கள், பள்ளியை நோக்கி ஓடினார்கள். அதன் சத்தம் இன்னும் வேறு மாதிரியாக, இன்னும் அதிகாரம் நிரம்பியதாகக் கேட்டது. அதன் உக்கிரத்தின் பின் ஒரு ‘ப்றா’ வெளிச்சம் அங்கே நிரம்பியது. வெடிச்சத்தம் முற்றாக ஓய்ந்தது. யாரும் உறங்கவில்லை.

பொழுது, மெதுவாக விடியத் தொடங்கியது. உம்மாவும், உம்மம்மாவும் முதலில் போயிருந்தார்கள். சனநடமாட்டம் அதிகமானதும் நாங்கள் போனபோது, வீட்டிலிருந்த எல்லாப் பொருள்களும் கண்ணாடியாய் மாறி நிலத்தில் வீழ்ந்து கிடந்தது போல் இருந்தன. அதன் நடுவில், டி.வி. குப்புறக் கிடந்தது. வாசலில் இருந்த உழவு இயந்திரம் முழுவதும் துளையாய் இருந்தது. அப்பா இடுப்பில் கை குத்தியபடி, வெடித்துச் சிதறிய இன்ஜெடக்டர் பம்பைப் பார்த்தபடி நின்றார். குசினியில் ரமழான் மாதம் என்பதால், ஸகர் செய்யப் பொரித்து வைத்திருந்த இறால்கள் சிதறிக் கிடைந்தன. சோற்றுப்பானையில் அகப்பை கூடப் படாமல் உருண்டு கிடந்தது. பாரீஸ், குழந்தைகளைக் கண்ணாடிச் சில்லுகளை மிதிக்கவிடாமல் விலத்திவிட்டுக் கொண்டிருந்தான். பொலீஸ் செய்த அட்டூழியங்களைப் பார்க்க, பொலீஸ் அதிகாரிகள் வரப்போவதாகச் சொன்னதும் பாரீஸ் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிச் சென்று விட்டான்.

***

அபுசாலியின் கடையைத் தாண்டி வரும்போதே, எட்டு மணிக்கே, சனநடமாட்டம் இல்லாமல், பேய் அறைந்தது போல் இருக்கிறதே என்று தோன்றியது. அப்புறம், பள்ளிவாசல் வெறிச்சோடிக் கிடைந்தது. கரண்டுக் கம்பத்துக்குப் பக்கத்தில் என்னவோ நாலைந்து பேர் குந்தியிருப்பது போல் இருந்தது. பக்கத்தில் போனால், பளீர் என்ற வெளிச்சத்தில் கிடத்தியும் சரிந்தும் ஸுஜூதில் வீழ்ந்தது போன்றும் மூன்று உடல்கள். எல்லோரும் டீ-சர்ட் போட்டு இருந்தார்கள். அவை, ரத்தத்தில் தோய்ந்து போய் இருந்தன. காக்கி டவுசர் போட்டு இருந்தவன், காலில் சுட்டு முறிந்து கிடந்தது. அதில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்து இருந்தது. அவன் அசைவற்றுச் சரிந்து கிடந்தான். நீட்டி நிமிர்ந்து கிடந்த உடலில் எந்த அரவமும் இல்லை. அவன் தலையில் இருந்து ரத்தம் பெருகியிருந்தது. குப்புறக் கிடந்தவன் கல்லொன்றை அழுத்திப் பிடித்தவனாக, ‘அம்மே அம்மே’ என்று முனகிக் கொண்டிருந்தான். எனக்கு ஒரு அசட்டுத் தைரியத்தில்தான் அங்கே நின்று கொண்டிருந்தேன் என்பதை உணரும்போதே, பாரீஸ் ஓடி வந்து என் வலது கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக் கொண்டு ஓடினான்.

இவர்கள், புலியில் இருந்து வந்து, ஊருக்குள் திரியும் போதே தெரியும் எப்படியும் எல்லா பிரச்சினையும் நடுவீட்டுக்குள் வந்துவிடும் என்று. அவர்கள் கதாநாயகன் போல் பவனிவருவது, புலியில் இருக்கும் பெருமையும். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் அவன் என்னைப் பிடித்துக் கொண்டு ஓடுவது நல்லதுக்கென்று மட்டும் தெரிகிறது. ‘அங்க அடிச்சுக் கெடக்கிறது பொலீஸ்காரங்கடா, மடையா. நீ அதப் போய் பாக்கற. நல்லவேளை, அவங்களத் தொடாதது.’ வீட்டு கேட் பூட்டிக் கிடந்தது. புத்திசாலித்தனமாக கிளம்பிப் போய் விட்டாங்க. தெருவில் நீட்டிக் கிடந்த கல் ஏதோ செருப்பில் தட்டி விழுந்தேன். பாரீஸ் தாங்கிக் கொண்டு ஓடினான். சமயத்தில் நல்ல நண்பன் கூட வருவான் என்பார்களே, அதுபோல வருகிறான். ‘றெஜீன், கால்ல அடிச்சிட்டா’ என்று கேட்டான். இந்தப் பரிவு அவனுக்கு நிரந்தரமானது. இவ்வளவு மென்மையானவர்கள் எல்லாம் எப்படிப் போராட்டத்திற்குப் போகின்றார்கள்?

தெருவில், வேலிக்கு மேலாக ஒரு வாழை இலை விழுந்து கிடந்தது, ஒரு ஆள் அசைவதுபோல் இருந்தது. என்னோடுதான் சுத்திக் கொண்டு இருந்தான். அவனுடைய மூத்த சகோதரன் பாரூக்கினை* ச் சுட்டு விட்டார்கள். பாரூக், புலியில் பெரிய ஆளாக இருந்தார். அவருடைய அஞ்சலி நோட்டீஸ், பள்ளிவாசல் மதிலிலும், கிடுகு வேலிகளிலும், அபுசாலியின் கடைத் தட்டியிலும் ஒட்டப்பட்டு இருந்ததை, ஒரு அதிகாலையில் பரபரப்பாய்க் கைகளை இடுப்பில் குத்திக் கொண்டு கூட்டம் கூட்டமாய்ப் பார்த்தோம். அதன் பிறகுதான் ஓடினான். ஆனால், அதற்கு முன்னாலேயே அவன் பற்றி வாப்பா எச்சரிக்கையாக இருந்தார். ஒருநாள் மாலை ஆறு மணி இருக்கும், வாப்பா, கதவின் குறுக்குச் சட்டத்தால் ஓங்கி அடித்ததை உம்மா குறுக்கே பாய்ந்து அடியை வாங்கிக் கொண்டு எனக்குப் படாமல் தடுத்தார். ‘எங்க போனாய், யாருடா உன்னக் கூட்டிக்குப் போனது’ என்று காதைத் திருகி தலையில் அறைந்தார். நான் முண்டக்கண்ணை முழித்தபடி பரிதாபமாக முறைத்துக் கொண்டிருந்தேன். உடம்பில் தடித்தடியாக சிவந்து இருந்தது. வாப்பா, திரும்பி குசினி மேசையில் இருந்த பழத்தை எடுத்தார். என் முகத்தின் மிக அருகில் அதைப் பிடித்து, ‘இது கிண்ணம் பழம். இது பெரிய முல்லைத் தீவுப் பக்கம்தான் இருக்கும். உனக்கு ஏது?’ கொஞ்சம் யோசித்தவனாக, ‘பாரீஸ்தான் கொடுத்தான்’ என்றேன். வாப்பா, ‘அவனோட உன்னக்கூடதேண்டு சொன்னேன்தானே’ என்றார். ‘ம்….’ என்று தலையாட்டினேன். வாப்பா, ‘இது பொடியன்மார் இருக்கற எடத்ததான் இருக்கு; நீ இனி என் கண்மறைவில் எங்கேயும் போகக் கூடாது’ என்றார். அவன் அப்பவே போவான் என்று எதிர்பார்த்ததுதான். சித்தி வீட்டுக்குப் போய் கதவைத் தட்டினப்போ அவனை விட்டுட்டு என்னை உள்ளே எடுத்தப்போ என்ன நடந்தது என்று தெரியததால் இவனுங்கதான் எல்லாம் பண்ணினானுங்க என்று நினைத்துவிட்டேன். இல்லையென்றால், உடனே வெளியே வந்து அவங்கூடப் போயிருப்பேன். அவன், அந்த இரவில் எங்கே போயிருப்பான் என்று தெரியவில்லை. இவர்கள் ராஜாக்களை போல பவனிவருவதெல்லாம் சுமுகமான சூழ்நிலையில்தான். பிரச்சினை வந்தால் யாரும் இவர்களை அண்டவிடமாட்டார்கள். இவர்கள் கூட இருப்பது அபாயகரமானது.

காலையில் வீட்டுக்குப் போவதற்கு முன்னால் பள்ளிக்குள் அதிக கூட்டம் இருந்ததால், அங்கேதான் போனேன். பொலீஸ், பள்ளிக்குள் இருந்த குர்ஆன்களை எடுத்து, பள்ளிக்கு நடுவில் மொத்தமாகப் போட்டு எரித்திருந்தார்கள். பள்ளிச் சுவர் முழுவதும் குண்டுத்துளைகள். வெடிப்பட்டு நொறுங்கி வீழ்ந்த ஓடுகள். கூரையில் இருக்கும் ஓட்டை வழியே வெளிச்சத் தூண்கள். வீட்டுக்குப் போனப்போ எதுவுமே இருக்கவில்லை. அப்புறம் பக்கத்து வீட்டுலயும் அதே நிலைமை.

ஓடாவியார் பொண்டி வீட்டில் ஒன்றும் பெரிய அட்டூழியம் இல்லை. அவர்களின் மர கேற்றை உடைத்துப் போட்டிருந்தார்கள். பாரீஸைப் பாத்தப்போ வருத்தமாக, ‘மௌத்து பத்தி பயப்பட்டா தோக்கு தூக்க மாட்டோம்; ஆனா றெஜீன், உங்கட சின்னாப்பா செஞ்சதைச் செத்து மண்ணோடு மண்ணானாலும் மறக்க முடியாது’ என்றான். அவன் ட்ரெயினிங் போயிட்டு வந்த பிறகு, அவனை நெருக்கமாகப் பார்க்கிறேன். காட்டன் சர்ட்டும் லுங்கியும் கட்டியிருந்தான். அவன் கால்சட்டை போட்டுக் கொண்டு குண்டாக இருந்த முகம் அப்படியே இருந்தது. உடல்தான் வளர்ந்து மெலிந்து இருந்தது. அங்கே புதினம் பார்ப்பதற்காகக் கவனம் இல்லாமல் ஓடிவரும் குழந்தைகளின் காலில் உடைந்த கண்ணாடிகள் வெட்டிவிடும் என்று எச்சரித்துக் கொண்டு நின்றான்.

அதற்குச் சில வாரங்கள் கழித்து, மதியத் தூக்கத்தில் இருப்பவர்களை அரட்டுவதற்கென்பது போலவே தெருவில் எறிபந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். மதில் ஓரமாய்க் கிடந்த தென்னக்குற்றியில் நானும் மக்கந்தாத்தாவின் ரமிஸும் உட்கார்ந்திருந்தோம். கையில் பந்து கிடைத்தால் தாமதிக்காமல் எறிய வேண்டும் என்று நிபந்தனையை மேம்போக்காக வைத்து உள்ளே ஒரு அரசியலில் சின்னக் குழுக்களாகப் பிரிந்து ஆடிக் கொண்டிருந்தார்கள். சட்டை போடாதிருந்த சலீமை வளைத்து, முதுகைச் சிவக்க வைத்தார்கள். அந்த கோபத்தில் அவனும் ஆசிக்கும் சேர்ந்து கொண்டு அவனை வளைத்தவர்களை வளைத்தார்கள்.

என் தலையை உரசிக் கொண்டு பந்து கிறவல் தெருவில் உருண்டு பச்சைப் புல்லில் ஓய்ந்தது. அப்போது தெருவில் திருப்பத்தில் மாட்டு வண்டி ஒன்று திரும்பியது. பந்தை எடுத்துக் கொண்டு திரும்பிய சலீம், எறிய ஓங்கிய கையைத் தளரவிட்டான். வண்டியில் துணி விலகி ஓரமாய் கிடக்க, பாரீஸின் மையத்து அது என்பதைச் சட்டென்று அடையாளம் கண்டு கொண்டேன். கடற்கரை நோக்கிச் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த வண்டியில் பாரீஸின் வெற்றுடல் தளும்பிச் சென்றது.

***

பாரூக்*  : முஸ்லிம் இளைஞர்களின் ஈழப்போராட்டத்தில் முதல் பங்கு கொண்டவர், மட்டக்களப்பு அக்கரைப்பற்றைச் சேர்ந்த பாரூக் எனப்பட்ட ஹனீபா. இவர் யாழ் தொலைத்தொடர்பு நிலையத்தை 1987 ஜனவரி 7ம் திகதி, விடுதலைப் புலிகள் தாக்கிய போது, மரணமானார். இவரின் பின்னர்தான், ஹஸன், அனஸ், மிஹ்லார் போன்ற பிரபலமானவர்கள் உட்பட முஸ்லிம் இளைஞர்கள் பலர் ஈழப்போராட்டத்தில் பங்கு கொண்டார்கள். (சி. புஸ்பராஜா, ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்.)

***

நன்றி : ஹனிபாக்கா , ஹஸீன், விடியல் பதிப்பகம்